என் ஆயுள் நீயே 37

என் ஆயுள் நீயே 37

வாகனம் திருச்செந்தூர் வந்துவிட்டிருந்தது.

ஊரினை நெருங்கிய பின்னரே நனியிதழுக்கு உள்ளுக்குள் பெரும் யோசனை. மத்தள இடியாய்.

“பிரணவ்.” மெல்ல முணுமுணுத்தாள்.

“இப்போ நாங்க திருச்செந்தூர் தான் வந்திருக்கோம்.” நனியிதழ் பிரணவ்க்கு தகவல் அனுப்பிட,

“அப்போ வசதி தான். நீ சொல்லி அந்தப் பையன் முடியாது அப்படி இப்படின்னு சொன்னா ஒரு மெசேஜ் பண்ணு போதும். உடனே வந்துடுறேன். வீடு புகுந்து தூக்கிடுவோம் அவனை” என்று பிரணவ் பதில் அனுப்பியதில்,

“ஆத்தீ” என்று அலைபேசியை தவற விட்டவளாக வெளிப்படையாக அதிர்ந்தாள்.

“என்னாச்சு நனி?” தனு கேட்க, ஒன்றுமில்லையென்ற நனியிதழ், “ரவுடி” என்று அவனுக்கு அனுப்பிவிட்டு சாதாரணமாக இருந்துகொண்டாள்.

“வீடு எங்கிருக்கு தெரியுமா இன்பா?” இளங்கோ கேட்க, “தெரியாது பெரியப்பா. லொகேஷன் ஷார் பண்ண சொல்லணும்” என்றவன், அஷ்மிதாவுக்கு அழைத்து இருப்பிடம் பகிரக் கூறினான்.

இன்பாவுக்கு இருப்பிடம் பகிர்ந்த அஷ்மிதாவிடம் அதுவரை இல்லாத பதற்றம் அவளிடம் குடிக்கொண்டது.

எளிய அலங்காரத்தில் சாதாரணமாக எப்போதும் அலுவலகம் செல்லும் தோற்றத்தில் ஆயத்தமாகி இருந்தாள். அன்றைய நாளுக்கான கூடுதல் பொலிவு மட்டுமே அதிகப்படியாக இருந்தது.

அவளுடன் தான் ஆர்யன் இருந்தான்.

“படபடப்பா இருக்கு ஆரி. வந்துட்டாங்களாம். மேக்சிமம் டென் மினிட்ஸ்” என்றவள், விரல்களை கோர்த்து, இதழ் கடித்து தன் படபடப்பை தணிக்க முயன்றாள்.

“அக்கா… என்னதிது? நீங்களா இது?” என்ற ஆர்யன்.

“பீ கூல். மாமா உங்களுக்கு புதுசு இல்லை தானே. யூ ஆல்ரெடி க்னோவ் ஹிம் வெல்… ரைட்? அப்புறம் என்ன? கேஷுவெல் மீட்டப் நினைச்சிக்கோங்க” என்றான்.

“முடியலடா… நீ அண்ணாவை கூப்பிடு பிளீஸ்” என்றாள்.

ஆர்யன் சொல்லியதுப் போன்று உதயனைப் பற்றி எல்லாம் தெரிந்தாலும், அவனின் அருகாமை அவளுக்கு பழக்கமில்லையே. எட்ட நின்று மனதில் வடித்துக் கொண்ட காதல் அல்லவா அவளுடையது. அதனை ஆர்யனிடம் எப்படி விளக்கிடுவாள்?

“ஓகே… ஓகே… சில். நான் கூப்பிடுறேன்” என்ற ஆர்யன், சென்ற இரு நிமிடங்களில் பிரண்ணவ்வை அழைத்து வந்தான்.

“ஹேய் அஷ்மி” என்று உள்ளே வந்த பிரணவ், “என்னடா சாரி வியர் பண்ணலயா?” எனக் கேட்டான்.

கண்ணாடி முன்பு இருக்கையில் அமர்ந்திருந்தவள், தன்னிரு கரம் நீட்டி பிரணவ்வை வாவென்று பக்கம் அழைக்க, அருகில் சென்று நின்றவனை இடையோடு அணைத்துக் கொண்டாள்.

தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்த பிரணவ், “என்னடா… நெர்வஸா இருக்கா?” எனக் கேட்டான்.

“ம்ம்… சொல்லத் தெரியல” என்றாள்.

“மாம்ஸ் வரலடா. முக்கியமான வேலை வந்திடுச்சாம். வர ட்ரை பண்றேன் சொன்னாங்க. சோ, யூ ஃபீல் ஃப்ரீ” என்றான்.

“அவங்க வரலையா?” முகம் உயர்த்தி சோர்ந்துபோன குரலில் அவள் கேட்க, ஆர்யன் பக்கென்று சிரித்தான்.

“இப்போ நீங்க என்ன நினைக்கிறீங்க அக்கா… மாமா வரணுமா? வரக்கூடாதா?” என்றான்.

“பார்க்கணும்… ஆனால் பக்கத்துல… தெரியலடா” என்றாள்.

“அப்போ ஒன்னு பண்ணலாம்” என்ற பிரணவ், “மாமாவை வர சொல்றேன். நீ எப்பவும் போல தூர நின்னு பாரு” என்றான்.

“அண்ணா…” அஷ்மிதா சிணுங்கிட,

“இந்த நேரம் இப்படித்தான் இருக்கும் போலடா… அவங்க வந்து, பார்த்து பேசிட்டா எல்லாம் சரியாகிடும். அத்தோட, உன்னோட சீனியர் வராங்க” என்று பிரணவ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ரீமா “ஹாய்… ஹாய்…” என்றபடி உள்ளே வந்தாள்.

“ரீமா அக்கா வரது அப்படியென்ன ஸ்பெஷல்?” என்ற ஆர்யனுக்கு, அப்போது தான் அவனிடம் தன்னுடைய விஷயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதே பிரணவ்வுக்கு நினைவு வந்தது.

அஷ்மி விஷயம் சொல்லவில்லை என்றே அத்தனை வருத்தம் கொண்டான். இதில் தன்னுடையது இன்னும் சொல்லவில்லை என்றால்?

‘போச்சுடா!’ மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டான்.

“அண்ணா மாட்டினீங்க.” அஷ்மிதாவும் புரிந்தது போல சிரித்தாள்.

“ரீமா பார்த்துக்கோ” என்ற பிரணவ், “சாரி வியர் பண்ணுடா, அவங்க சைட் பாட்டிலாம் வராங்க” என்றவனாக தம்பியை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

“என்ன ப்ரோ… என்கிட்ட எதோ சொல்லாம விட்டீங்க போல” என்று கூடத்து இருக்கையில் அமர்ந்தான் ஆர்யன்.

“நேத்து நீயும் அஷ்மியும் பண்ண கலாட்டால மறந்துட்டேன் ஆரி… மாமாவோட சிஸ்டருக்கும் எனக்கும் பேசியிருக்காங்க” என்றான் பிரணவ்.

“வாட்?” என்று அதிர்ந்து எழுந்துவிட்ட ஆர்யன்… “அப்போ அண்ணி?” என்றான்.

“அண்ணியா? யாருடா?”

“உங்களை லவ் பண்ற அண்ணிக்கு எப்படி அண்ணா துரோகம் பண்ண மனசு வந்துச்சு உங்களுக்கு?” என்றான்.

“டேய்… டேய்… இருடா” என்ற பிரணவ், “உங்க அண்ணி நேம் என்ன?” எனக் கேட்டான்.

“நனியிதழ்.”

“மாமா தங்கச்சியும் அந்த நனியிதழ் தான்” என்று பிரணவ் ஒரே மூச்சில் அனைத்தும் சொல்லி முடிக்க…

“யாஹூ” என்று துள்ளி குதித்தான் ஆர்யன்.

சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த விஜயன்,

“இவன் எதுக்கு நடு வீட்டுல டான்ஸ் பண்ணிட்டு இருக்கான்?” எனக் கேட்டார்.

“நான் லவ் பண்ற பொண்ணோட அண்ணா, அக்கா, தான் என் அண்ணா, அக்காக்கு ஜோடி சேர்ந்திருக்காங்க” என்று கத்தி ஆர்ப்பரித்த ஆர்யன் தன்னுடைய ஆட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை.

“ஏதே… நீ லவ் பண்றியா?” பிரணவ் அதிர்ந்தான். நேற்று அஷ்மியிடம் சண்டை போடும்போது ஆர்யன் சொல்லியதை பிரணவ் அழுத்தமாக கவனித்திருக்கவில்லை.

“ஆமா… எங்ககிட்ட நாலு நாள் முன்ன சொன்னான்” என்ற விஜயன், “ஆக மொத்தம் மூணு பேரும் உங்களுக்கு ஜோடி தேடுற வேலையை மிச்சப்படுத்திட்டிங்க” என்றார்.

“அதெப்படிடா மூணு பேரும் ஒரே வீட்டுல ஆள பிடிச்சிங்க” என்று ராகவன் வர,

“குடும்பமா நீங்களாம். பசங்க லவ் பண்றதுக்கு சிரிச்சிக்கிட்டே கமென்ட் கேட்கிறீங்க” என்ற பிரணவ், “நீ பர்ஸ்ட் டான்ஸ் பண்றதை நிறுத்துடா” என்றான்.

“வை ஆங்ரி ப்ரோ. உங்க லவ் சக்சஸ். ஒரே குடும்பமாகிட்டோம். அடுத்து அப்படியே என் லவ்வையும் சேர்த்து வச்சிடுங்க” என்ற ஆர்யன், “அவகிட்ட என் லவ் சொன்னா… அண்ணா பெர்மிஷன் வேணும்ன்னு வெயிட் பண்ண வைக்கிறா” என்றான்.

அப்போதுதான் ஒன்று புரிந்தவனாக மீண்டும் “ஹேய்” என்று கத்தி ஆடினான்.

வருபவர்களுக்கு விருந்து தயார் செய்து கொண்டிருந்த விமலா, ஆர்யனின் கொட்டம் தாங்காது சமையலறையிலிருந்து கரண்டியோடு வந்தார். வந்த வேகத்திற்கு ஆர்யன் மீது தூக்கி எரிய, சடுதியில் தம்பியை தன்பக்கம் இழுத்து அடிபடாது காத்திருந்தான் பிரணவ்.

“கொஞ்சம் அடங்குடா. எவ்ளோ சத்தம் போடுற நீ” என்ற விமலா, “பர்ஸ்ட் பிரணவ், அஷ்மிதா கல்யாணம் நடக்கட்டும். அதுவரை உன் வாலை சுருட்டிக்கிட்டு இரு” என்று மிரட்டிவிட்டுச் சென்றார்.

“கொஞ்சம் சந்தோஷமா இருக்கவிடுறாங்களா இந்த வீட்டில். நான் ஹாஸ்டலுக்கே போறேன் போங்க” என்று ஆர்யன் சிணுங்க, “கேவலமா இருக்கு. ஒழுங்கா உட்காருடா வாலு” என்று இழுத்து அமர வைத்தான் பிரணவ்.

எவ்வளவு சேட்டை, ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஆர்யனின் குணம் தெரியும் என்பதால், பிரணவ் விமலா போல் எதுவும் சொல்லவில்லை.

அவனது ஆட்டமெல்லாம் தங்களிடம் மட்டுமே என்று தெரியும்.

அந்நேரம் ஆர்யனின் அலைபேசி சத்தமிட்டது.

எழில் தான் கல்லூரி வரவில்லை என்பதை அவனுக்கு தகவல் அனுப்பியிருந்தாள்.

“என் ஆளும் வரா அண்ணா” என்று ஆர்யன் குதூகலமாக சொல்லிட,

“அடங்குடா… ரொம்பத்தான் ஸ்பீட்” என்று தம்பியின் கழுத்தை சுற்றி கரமிட்டு அழுத்தினான் பிரணவ்.

“அய்யோ… அய்யோ… அண்ணா விடுங்க விடுங்க.” வலியே இன்றி ஆர்யன் வேண்டுமென கத்தினான்.

“எந்த நேரமும் விளையாட்டு தான். திரும்ப ஒரு கரண்டி பறந்து வரப்போகுது” என்று விஜயன் சொல்லிடவே அவ்விடம் அமைதியாகியது.

“எங்க வராங்க கேளு பிரணவ்” என்று ராகவன் கூறிட, வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

“வந்துட்டாங்க” என்று எழுந்த பிரணவ், “நீ அஷ்மியோட இரு ஆரி” என்று தம்பியை தங்கையின் அறைக்குள் அனுப்பி வைத்திட்டு, “அம்மா” என்றழைத்தான்.

செய்து கொண்டிருந்ததை பணியாளிடம் ஒப்படைத்த விமலா, கையை துடைத்தபடி வேகமாக வந்தார்.

நால்வரும் வாசல் நோக்கிச் சென்றனர்.

“வந்துட்டாங்க” என்று ஆர்யன் அறைக்குள் செல்ல, “என்னடா ஒரே ஆட்டம்” என்றாள் ரீமா.

ஆர்யன் விஷயத்தை சொல்ல…

“அடப்பாவிங்களா!” என்று வாயில் கை வைத்த ரீமாவின் தோற்றம் கண்டு அக்கா, தம்பி இருவரும் சத்தமின்றி சிரித்தனர்.

“அதெப்படி மூணு பேரும் ஒரே குடும்பத்துல தொபக்கட்டிருண்ணு விழுந்தீங்க… பேசி வச்சு பிளான் போட்டு பண்ண மாதிரி இருக்கு” என்றாள் ரீமா.

“உண்மையிலேயே கோ இன்சிடன்ட் ரீமாக்கா” என்ற ஆர்யன், “பில்லிவ் அஸ்” என்றான்.

“நம்புறேன்டா… நம்பனுமே” என்ற ரீமா, “அந்த குடும்பத்திலே வேற பீஸ் எதுவும் எனக்கு செட்டாகுமாடா?” எனக் கேட்டாள்.

“எதுக்கு?” இருவரும் ஒன்றாக வினவ,

“நீங்கலாம் ஒண்ணா இருப்பீங்க நான் மட்டும் தனியா இருக்கணுமா?” என்றாள் ரீமா.

“அஷ்மிக்கு பெரிய அண்ணா தானே… அப்போ அவங்க வீட்டில் இன்னொரு அண்ணா இருக்காங்க. என் ஆளுக்கு அவர் தான் ட்ரைவர் வேலை பார்ப்பார். காலேஜில் பார்த்திருக்கேன். நல்லா லுக்கா இருப்பார். வேணும்னா அவரை ட்ரை பண்ணுங்களேன்” என்று ஆர்யன் அத்தனை சீரியஸாகக் கூறினான்.

“ரீமாக்கா… இவன் இன்பாவை சொல்றான். தப்பிச்சிடுங்க” என்று அஷ்மி சிரிக்க, “ஆத்தி அவனா” என்று ரீமா நெஞ்சில் கை வைத்து மெத்தையில் சரிந்தாள்.

“என்னாச்சு? ஃபீல் பண்ணிங்களேன்னு சொன்னேன்” என்ற ஆர்யனிடம், “எதுக்கு எதுக்குங்கிறேன்… இப்போ வரை உங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன். கல்யாணம் பண்ணியும் நான் நிம்மதியா இருக்கக் கூடாது பார்க்குறீங்களா” என்ற ரீமா, “நனியையும் அவன் தான் காலேஜ் பிக்கப் ட்ராப். அவன் ஹீரோ மாதிரி இருக்கான்னு எங்க கிளாஸ் பொண்ணு லவ் லெட்டர் கொடுக்க, வாங்கக்கூட இல்லை அவன். அந்தப் பொண்ணுக்கு சப்புன்னு ஒரு அறை. என் தங்கச்சி உன் கிளாஸ் தானே! அப்போ உனக்கும் நான் அண்ணாதான்னு சொல்லிட்டான். அன்னைக்கு அவனை என் கிரஷ் லிஸ்டில் இருந்தே தூக்கிட்டேன்” என்று மூச்சு வாங்கியபடி சொல்லி முடித்தாள்.

“நல்ல ஃபிளாஷ் பேக்” என்ற ஆர்யன், “என் ஆளை காட்டுறேன் வாங்க” என்று ரீமாவை கை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.

தனிமை மீண்டும் பதற்றத்தைக் கொடுக்க… அலைபேசியை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள் அஷ்மிதா.

வெளியே பேச்சுக் குரல்கள் கேட்டது. கேட்ட சலசலப்பே மொத்த குடும்பமும் வந்துள்ளதென்று உணர்த்தியது.

கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திய அஷ்மிதா…

“நிஜமா நீங்க வரலையா?” எனக் கேட்டு உதயனுக்கு தகவல் அனுப்பினாள்.

error: Content is protected !!
Scroll to Top