என் ஆயுள் நீயே 38
பெரிய கேட்டின் முன்பு வண்டி நின்றதும், சன்னல் வழி வீட்டினை பார்த்த குமரி,
“நல்ல பெரிய வீடாதான் இருக்கு” என்று இழுத்தார்.
“இங்க பாரு குமரி… அங்க வந்து உன் வாயை மூடிட்டு இருக்கணும். எதும் எகத்தாளம் பேசுன… அம்மான்னு ஒருத்தி இருக்காங்கிறதை மறந்திடு” என்று மகளின் வாயினை மூடச் செய்தார் ஜெயலட்சுமி.
அப்போதும் வாய் முணுமுணுக்க பொருமியபடிதான் குமரி பார்த்திருந்தார்.
“அக்கா வாங்க இறங்கலாம்!” எழில் கை பிடித்துக்கூற, மலங்க விழித்தபடி தங்கையை ஏறிட்டாள் நனியிதழ்.
“ஹேய் நனி என்னாச்சு? கிளம்பினதுலேர்ந்தே நீ ஒரு மாதிரி இருக்க” என்று தனுவும் சொல்லிட..
“ஒண்ணுமில்லை” என்றாள்.
அன்று ஆர்யன் “என் அண்ணாவும் உன் அக்காவும் லவ் பண்றாங்க” என்று சொல்லியது எழிலுக்கு நனியின் தற்போதைய நிலைக்கான காரணத்தைக் கூறியது.
வரும் வழியில் பெரியவர்களின் பேச்சினை வைத்துதான் உதயனுக்கு பார்க்கும் பெண்ணின் அண்ணனை நனிக்கும் பேசியிருக்கிறார்கள் எனும் விவரம் எழிலுக்குத் தெரிந்தது.
உதயன் மீதிருந்த நம்பிக்கையில் நனி குறித்த கவலையின்றி வந்தாலும், அக்காவின் முகம் பார்க்க பார்க்க எழிலுக்கு வருத்தமாக இருந்தது.
இந்த வருத்தம் அங்கு சென்றால் சரியாகிவிடுமென்று தெரியாது தன்னை இயல்பாகக் காட்டிக் கொண்டாள்.
“பேசி முடிக்கிற வரை அப்படித்தான் இருக்கும். இப்போ வீட்டுக்குள் போயிட்டு பையனை பார்த்ததும் சரியாகிடும். சாதாரணமா முகத்தை வச்சுக்கோ” என்று திடம் கொடுக்கும் வகையில் பேசினாள் தன்யா.
‘அச்சோ என் கவலையே வேற. நிலைமை தெரியாம அட்வைஸ் பண்றாங்க.’ மனதில் புலம்பினாள் நனியிதழ்.
கேட்டிற்கு வெளியில் கேட்ட ஹாரன் ஒலியிலேயே பிரணவ், விஜயன், ராகவன், விமலா நால்வரும் வெளியில் வந்தனர்.
கஜேந்திரன் வாயில் காவலாளியிடம் யாரென்று சொல்லிக் கொண்டிருக்க,
“கேட் திறந்து விடுங்க அண்ணா” என்றான் பிரணவ்.
இன்பா வண்டியை உள்ளே செலுத்த, பிரணவ் நிறுத்துவதற்கு இடம் காண்பித்தான்.
ஒவ்வொருவராக வண்டியிலிருந்து இறங்க, நால்வரும் இன்முகமாக வரவேற்றனர்.
இறுதியாக எழிலுடன் நனியிதழ் இறங்க, அவள் தலையை உயர்த்தவே இல்லை. முடிந்தளவு தரையை பார்த்துக்கொண்டே, தங்கையின் அடிக்கு ஏற்ப பாதம் வைத்து உள் சென்றாள்.
“இங்க நிக்கிறவங்கதான் அண்ணியோட அண்ணா போலக்கா.” சொல்லிய எழிலுக்கு, இவர்கள் தான் பெண் பார்க்க வந்த குடும்பமென்று தெரிந்திருக்கவில்லை. அன்று தான் அவள் கல்லூரி சென்றிருந்தாளே!.
“உங்களுக்கு செம பொருத்தம். ஹீரோ மாதிரி இருக்காங்க. எனக்கு பிடிச்சிருக்கு. நிமிர்ந்துப் பாருங்க” என்று பிரண்வ்வை பார்த்துக்கொண்டே எழில் சொல்ல, அவளின் கையிலே கிள்ளிய நனியிதழ், “நேரா போடி” என்றாள்.
அவளின் செயலில் பிரணவ் இதழ்கள் மடித்து சிரித்துக் கொண்டான்.
பிரணவ்வை மட்டுமல்ல யாரின் முகத்தையுமே நனியிதழ் பார்க்கவில்லை. கொஞ்சம் முகத்தை உயர்த்தி யாரேனும் ஒருவரை பார்த்திருந்தாலும் எல்லாம் விளங்கியிருக்கும். அவள் அறிந்துகொள்ள நேரம் இன்னும் வரவில்லை போலும்.
எல்லோரும் உள்ளே செல்ல பெரியவர்கள் மூவரும் அவர்களுடன் சென்றிருந்தனர்.
“வேன் இங்கவே நிக்கட்டுமா?” ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்காது இன்பா கேட்க, “கொஞ்சம் முன்ன தள்ளி நிறுத்துங்க. தார் வந்து நிக்க இடம் வேணுமே” என்றான் பிரணவ்.
தார் என்றதிலேயே, அவன் தன் அண்ணனின் வண்டியை குறிப்பிடுகிறான் என்று இன்பாவுக்கு புரிந்துவிட்டது.
இருவருக்கும் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது என்பதை சரியாக யூகித்துக் கொண்டான் இன்பா.
இன்பாவுக்கு பிரணவ் மீது சிறு வருத்தம் இருக்கிறது. அன்று பெண் பார்க்க வந்தபோது, பிரணவ் மட்டும் அமைதியாக இருந்திருந்தால் நடுவில் நிகழ்ந்த சில கவலை நிறைந்த நிகழ்வுகளை தடுத்திருக்கலாம் என்கின்ற வருத்தம்.
அவனின் வருத்தம் தன்னை பார்க்கும் அவனது பார்வையில் பிரணவ் உணர்ந்து கொண்டான்.
இன்பா வண்டியை நிறுத்திவிட்டு வர,
“அட வாங்க இன்பா. சும்மா முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு” என்று கையை பிடித்து இழுத்து தோளில் கைபோட்டு, “சாரி கேட்கணுமா?” எனக் கேட்டான்.
“அச்சோ இல்லை.” இன்பா பதறி சொல்ல…
“அப்போ சிரிங்க மச்சான்” என்ற பிரணவ், “நானும் மாம்ஸ்சும் கூட க்ளோஸ் ஆகிட்டோம். நீங்க என்னை மாப்பிளை சொல்லுங்க பார்ப்போம்” என்றான்.
“எதே மாம்ஸா…!” இன்பா அதிர்ந்தான். ஒரு நாளுக்குள் எப்பிடிடா எனும் எண்ணத்தில்.
“ஹான்…” என்ற பிரணவ், “உங்களுக்கு என்னை பிடிக்கலையோ” என்று வெளிப்படையாகக் கேட்க, “ஹேய்… அப்படிலாம் இல்லை. உங்களால் அன்னைக்கு நனி அழுத வருத்தம். வேற ஒண்ணுமில்லை” என்ற இன்பாவும் பிரணவ்வுடன் சகஜமாகியிருந்தான்.
“உள்ள வாங்க. உங்க தங்கச்சிக்கு ஷாக் கொடுப்போம்” என்றான் பிரணவ்.
“அப்போ சர்ப்ரைஸ் இல்லையா? ஷாக் தான் ஆவான்னு சொல்றீங்களா?” என்று இன்பா கேட்க…
“ஷாக்கிங் சர்ப்ரைஸ்” என்று கண்ணடித்தான் பிரணவ்.
அனைவரும் இருக்கையில் அமர, அதுவரையிலுமே யாரையும் நனி நிமிர்ந்து பார்க்கவில்லை.
“அக்கா என்னாச்சு?” நனிக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டிருந்தது. கையெல்லாம் சில்லிட, அவளின் கரம் பிடித்திருந்த எழில் பதறிப்போனாள்.
“நத்திங்… நத்திங்…” என்ற நனி, “நீட் சம் ஃப்ரெஷ் ஏர்…” என்றவள், “எக்ஸ்க்யூஸ் மீ… சாரி” என அனைவருக்கும் பொதுவாக சொல்லியவளாக வேகமாக வெளியில் சென்றாள்.
அனைவருக்கும் அவள் நிலை புரியத்தான் செய்தது.
“கொஞ்சம் நிமிர்ந்து பார்த்திருந்தாலும், எல்லாம் க்ளியர் ஆகியிருக்கும்.” விஜயன் சொல்ல…
“நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என்றார் இளங்கோ.
“எங்களுக்கு புரியுது சம்மந்தி” என்ற விஜயன், “நாம மேற்கொண்டு பேசலாம்” என்றார்.
நனியிதழ் வெளியில் செல்ல, பிரணவ்வும், இன்பாவும் உள்ளே வந்தனர். எதிர்ப்பட்ட இருவரையும் கவனிக்கும் நிலையில் அவளில்லை.
வெளியில் வந்தவளுக்கு எங்கு செல்வதென்று தெரியாது சுற்றி பார்க்க, வலது புறம் தோட்டத்தில் கல்மேடை தென்பட்டது. சென்று அமர்ந்துகொண்டாள்.
தனக்கும் இன்னொருவனுக்குமான பேச்சு அவளுக்கு படப்படப்பை கொடுத்தது. மனதில் வீற்றிருப்பவன் அன்றி வேறொருவனுடன் இணைத்து பேசும் பேச்சு அவளுக்கு அத்தனை உவப்பானதாக இல்லை.
ஒருவனுக்காக அவள் ஏங்கி தவித்திருக்க… எளிதாக இன்னொருவன் முன் அமர்ந்திருக்கிறோம் எனும் எண்ணமே அவளை நிலையில்லாது தவிக்கச் செய்தது.
வாய் திறந்து மூச்சினை ஆழ்ந்து சுவாசித்தாள். அமர்ந்திருந்த மேடையை இறுக பிடித்து கண் மூடியவளின் மெல்லிய பதற்றம் அவளின் பாத நடுக்கத்தில் தெரிந்தது.
“பிரணவ்…” அவளின் மென்னிதழ்கள் உச்சரிக்க, அருகே யாரோ அமரும் அரவம்.
தன்னைத் தாண்டிக் கொண்டு வேகமாக சென்ற நனியின் நிலையை அவதானித்தவனாக பிரணவ் நின்றிட,
“இந்த சிட்டுவேஷன் அடாப்ட் பண்ணிக்க முடியல நினைக்கிறேன். நீங்க பேசினா சரியாகிடும்” என்று பிரணவ்வின் தோள் தட்டினான் இன்பா. தங்கையின் மனம் புரிந்தவனாக.
பிரணவ் மென்மையாக சிரிக்க…
எதற்கு இந்த சிரிப்பென்று பார்த்தான் இன்பா.
நனியிதழின் பல வருட தவிப்புகள், ஏக்கங்கள் யாவும் அறிந்திருந்தாலும், அவை யாவும் செவி வழி கேட்டவை. ஆனால் இக்கணம், கண் பார்க்க அகம் உணர்கிறான். தன்னவளின் காதலை. தனக்கான அவளின் தேடலை. காத்திருப்பின் அவஸ்தையை. அவன் வேண்டி காத்து நின்ற காதலாயிற்றே! இதயம் நிறைந்தான்.
“நீ போய் பேசு பிரணவ்” என்று விமலா சொல்லிட, அனைவருக்கும் முன் வந்து நின்றான் பிரணவ்.
“எல்லாருக்கும் பெரிய சாரி. சரியா தப்பா எதும் யோசிக்காம, அவளோட சந்தோஷம் தான் முக்கியம் நினைச்சு அன்னைக்கு நான் அப்படி செய்திருந்தாலும், அந்த நேரம் எவ்வளவு வருத்தமா இருந்திருக்கும் தெரியுது. பட் எனக்கும் இதழுக்கும் நடுவில் மறைந்திருக்க அன்பை புரிஞ்சிக்க எங்களுக்கு இவ்வளவு நாள் தேவைபட்டிருக்கு. நடுவில் தேவையில்லா குழப்பங்கள். எல்லாத்துக்கும் சாரி” என்றான்.
மொத்தமாக அனைவரையும் கவிழ்த்திட்டான்.
“உங்க சூழல் புரியுது மாப்பிள்ளை. ரெண்டு பேரும் வாழப்போற வாழ்க்கை சந்தோஷமா வாழ்ந்தால் போதும்” என்று கஜமுகன் தன் குடும்பத்தாரின் மனம் புரிந்தவராக அனைவருக்கும் பொதுவாக பேசிட,
“பிளஸ்(bless) மீ தாத்தா” என்று ஆசீர்வாதம் பெற்று நிமிர்ந்தான்.
“மொத்தமா ஸ்கோர் பண்ணிட்டிங்க மாமா.” எழில் சிரிப்போடு சொல்ல, “தேங்க் யூ” என்றான்.
அப்போது தான் அனைவரும் வெளிப்படையாக பேசியிருக்க, பிரணவ், நனியிதழ் காதல் தெரியாதோருக்கு எல்லாம் விளங்கியது. எழிலுக்கும் நிம்மதி உண்டாயிற்று. நேர்ந்த இனிய அதிர்வில் ஆர்யன் பிரணவ்வின் தம்பி என்பதை மறந்தாள்.
குமரிக்கு உள்ளுக்குள் பொடுபொடுவென வந்தது. இவர்களின் காதலில் தன் மகளின் திருமணம் தூரம் சென்றதே என்று தவறாக நினைத்து உள்ளுக்குள் பொறுமினார்.
“அண்ணா நீங்க குடும்பத்தை கவர் பன்றன்னு ஹீரோயினை மிஸ் பண்ணிடாதீங்க. உங்க ஆளு அங்க என்ன நிலையில் இருக்காளோ” என்று தனு கேலி செய்ய, அனைவரிடமும் புன்னகை.
“பேசிட்டு வாங்க மாப்பிள்ளை” என்று இளங்கோ சொல்ல, சிறு தலையசைப்புடன் நனியிருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.
பேச்சு சத்தம் கலகலப்பாகக் கேட்க…
“நீங்க கூப்பிட்டாதான வரணும். நாங்க போறோம். என் ஆளுக்கு ஷாக் கொடுத்திட்டு வரேன்” என்று அஷ்மிதாவிடம் சொல்லிய ஆர்யன் ரீமாவை இழுத்துக் கொண்டு அறையிலிருந்து கூடம் வந்தான்.
“ஹாய்…” நீண்டு விரிந்த சிரிப்போடு அனைவருக்கும் பொதுவாய் ஆர்யன் சொல்லிட,
அவனது குரலில் விலுக்கென சத்தம் வந்த திசையில் எழில் வேகமாக திரும்பிட, ஆர்யன் அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்.
“இவன் எங்க இங்க?” என்று அவள் நெஞ்சில் கை வைத்து முணுமுணுக்க,
அருகிலிருந்த தனு, “யாரு?” என்றாள்.
எழிலின் அதிர்வு புரிய, தனக்கு பக்கவாட்டில் சுவற்றில் மாட்டியிருந்த குடும்பப் புகைப்படத்தை கண் காட்டினான் ஆர்யன்.
“பயந்துட்டாள் போல ஆரி.” ரீமா அவனிடம் கூற,
“வாவ் சூப்பர்… நான் சொல்லாமலே என் ஆளை கண்டுபிடிச்சிட்டிங்க” என்றான் பாராட்டாய்.
“ம்க்கும் அவ முகமே உங்களுக்குள்ள என்னவோன்னு காட்டிக் கொடுத்திடும்” என்றாள் ரீமா.
ஆர்யன் கண் காட்டிய இடம் பார்த்த எழில் மேலும் அதிர்வுக்குள்ளானாள்.
“இவன் வீடா இது. அப்போ எனக்கு அண்ணி, மாமா… ரெண்டு பேரும் இவனோட சிபிலிங்ஸ்சா? கடவுளே காப்பாத்துங்க” என்று முகத்தை அழுவதைப்போல் வைத்து மேல் நோக்கி புலம்ப…
“என் அண்ணாவும் உன் அக்காவும் லவ் பண்றாங்க.” அன்று அவன் சொல்லியது அவள் செவி மோதியது.
“என்ன எழிலு முனகிட்டே இருக்க” என்று அவளின் இடையில் இடித்தாள் தனு.
“புலம்பக் கூட கூடாதா? உங்க ஆளு தனியா உட்கார்ந்திருக்காங்க பாருங்க. லவ் பண்றீங்கன்னு தான் பேரு. இதுவரைக்கும் ரெண்டு பேரும் நம்ம கதை ரைட்டருக்கு லவ் சீனுக்கு கண்ட்டென்ட் குடுத்து இருக்கீங்களா. போங்க போய் உங்க ஆளு பக்கத்துல உட்கார்ந்து சரியா லவ் பண்ணுங்க” என்ற எழிலை, “என்ன பேச்சு பேசுற” என அவளுக்கு மற்றைய பக்கம் அமர்ந்திருந்த காமாட்சி யாரும் அறியாது கையில் கிள்ளி வைத்தார்.
“இவன் எங்க கடைசி பையன் ஆர்யன். கன்னியாகுமாரியில் தான் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். பிரணவ் படிச்ச அதே காலேஜ் தான்” விமலா அவனை அறிமுகம் செய்து வைத்தார்.
“அப்படியா? எழிலும் அங்க தான் படிக்கிறாள்” என்றார் கங்கா.
“என் கிளாஸ்மெட் தான் அத்தை” என்று ஆர்யன் சொல்லிட, “ஆமாவா எழிலு?” எனக் கேட்டார் லட்சுமி பாட்டி.
“ஆமா பாட்டி” என்ற எழில் அன்று, கல்லூரியில் நனியிடம் விளையாடிய மாதிரி இங்கு தன் பெரியப்பா, அப்பா முன்னாடி எதும் செய்து வைத்துவிடுவானோ என்று ஒருவித பயத்திலேயே அமர்ந்திருந்தாள்.
அவளின் இந்த பயம் அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்திட,
“ஹாய் மாமா” என்று இன்பாவின் அருகில் சென்று அமர்ந்து, அவளை படபடக்க வைத்தான்.
“இது ரீமா. பிரணவ் ஃபிரண்ட். நம்ம வீட்டு பொண்ணு மாதிரி” என்று ரீமாவையும் அறிமுகம் செய்து வைத்தார்.
சிறிது நேரத்தில் நனியிதழ் மற்றும் பிரணவ் சிரித்த முகமாக வர, அண்ணனும் தம்பியும் சேர்ந்து சென்று அஷ்மியை அழைத்து வந்தனர்.
அனைவரும் எதிர்பார்த்த நபரின் வருகை… அஷ்மிதாவின் பார்வையை மொத்தமாக களவாடிக் கொண்டது.