என் ஆயுள் நீயே 39
“நிஜமாவே நீங்க வரலையா?” அஷ்மிதா புலனம் வழி தகவல் அனுப்பியதும் உதயன் பார்த்ததற்கு அடையாளமாக நீலக்குறி ஒளிர்ந்தது.
சில நொடிகளில் அவனிடமிருந்து பதில் வர வேகமாக எடுத்துப் பார்த்ததாள்.
கடற்கரை துறைமுகத்தில் பணியாட்களுடன் அவன் நின்றிருக்கும் சுயமியை அனுப்பி வைத்திருந்தான். பார்த்ததும் அவளுள் சிறு ஏமாற்றம்.
‘உண்மையிலேயே அவங்க வரலையா?’ வெகுவாக எதிர்பார்த்திருந்த அவளின் மனம் சுணங்கியது அந்நொடி.
“போங்க பேசாதீங்க…” என்று வருத்தமான பொம்மைகளின் முகம் காட்டி அனுப்பியவள், “அஷ்மிதாக்கு உதய்யை பார்க்கணும்” என்று அடுத்ததாக அனுப்பியிருந்தாள்.
அவனிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் பார்த்திருந்தான். சில நிமிடங்கள் காத்திருந்தாள். இனியும் பதில் வரப்போவதில்லை என்று அலைபேசியை ஓரமாக வைத்தவள், சன்னல் பக்கம் சென்று நின்றாள்.
தோட்டத்தில் நனியிதழும் பிரணவ்வும் பேசிக் கொண்டிருப்பது தெரிய, சிறு புன்னகையோடு உள்ளே நகர்ந்திட்டாள்.
‘தனக்காக பேசியிருக்கும் பையனிடம் பேச வேண்டும், தன்னுடைய காதலை எடுத்து சொல்லி, தான் மறுப்பு தெரிவிப்பதால் உதயன் விருப்பத்திற்கு எந்த தடையும் வந்திடக் கூடாது.’ நினைத்து வந்தவளால், பேசிட முடியுமென்று தெரியவில்லை. அவள் பேசுவதில் அவளது செல்வாவின் ஆசை அடங்கியுள்ளதே! எப்படி பேசிடுவாள். தன்னால் தன் காதலால் உதயனின் திருமணம் தடைபட்டு விடுமோ என்று அச்சம் கொண்டாள்.
அந்த அச்சம் பிரணவ்விடம் முடிவுக்கு வர… “உன்னையும் விட்டுக்கொடுக்க முடியாது பிரணவ்” என்று முணுமுணுத்தாள். கண்ணீர் கன்னம் வழிய துடைத்துக் கொண்டாள்.
‘அண்ணாக்கு தெரிஞ்சா அண்ணாவே எதுவும் செய்வார். அண்ணா என்ன முடிவெடுக்கிறாங்க பார்ப்போம் அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு நனி. பிரணவ் சொன்னா புரிஞ்சிப்பான்.’ மூச்சினை நன்கு சுவாசித்து கண்கள் மூடி நிமிர்ந்து அமர அவளின் அருகில் பிரணவ் வந்து அமர்ந்தான்.
அரவம் உணர்ந்தவளுக்கு யாரென்று பார்க்கும் திடமில்லை.
“அப்புறம் பேசலாம் தோணுதா?”
பிரணவ் குரலில் வேகமாக கண்கள் திறந்து அவனை பார்த்த நனி, “ஹேய் நீ எங்கடா இங்க” என்று அதிர்ந்து எழுந்திருந்தாள்.
“நீ இப்படித்தான் உட்கார்ந்திருப்ப நினைச்சேன். அதான் நானே நேரில் பேசிட்டு போலாம் வந்துட்டேன்” என்றான்.
“பிரணவ்…”
“என்னடி? நான் வேணாமா?”
“வேணும். ஆனால் இப்போ, அண்ணாக்கு இன்னும் தெரியாதுபோல. அவங்களுக்கு தெரிஞ்சா அண்ணாவே எனக்காக மறுத்திடுவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணலாம் பிரணவ்.”
“இல்லை இதழ். நான் சொல்லப்போறேன். உன்னை இன்னொருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறதை என்னால் ஏற்கவே முடியாது. இப்போவே பேசுறன்” என்று வேகமாக எழுந்தவனை செல்ல விடாது தடுக்க, அவனின் இடையோடு கையிட்டு அணைத்திருந்தாள்.
கரம் பிடிக்கவே யோசிப்பவள், மொத்தமாக அவனை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“பிளீஸ்… பிளீஸ்… பிரணவ். நீங்க போங்க. நானே பேசுறேன்” என்றவள் அவனின் மார்பில் தன் கன்னம் பதித்து கண்கள் மூடியிருந்தாள். அவளின் பிடியில் அத்தனை இறுக்கம். எங்கே சென்றிடுவானோ எனும் பயம்.
“ஓய்…” பிரணவ் விளிக்க, முகம் மட்டும் உயர்த்தி அவனை பார்த்தாள்.
அவளின் நெற்றி முட்டியவன்,
“கல்யாணம் பண்ணிக்கலாமாடி” எனக் கேட்டிருந்தான். அவனது விழிகளில் காதல் பெருக்கு.
பார்வையில் கட்டுண்டவளின் தானாக சரியெனும் விதமாக அசைந்தது.
“அப்போ வா பேசலாம்” என்று அவளையும் சேர்த்து அடி வைத்தான்.
சட்டென்று அவனது மார்புச் சட்டையை இறுக்கமாக பிடித்து அவனோடு அடி வைத்தவள் மறுத்து நிற்க, என்னவென்று பார்த்தான்.
“அண்ணா விருப்பம் இதிலிருக்கு பிரணவ்” என்றாள்.
“ஹோ…” என்ற பிரணவ், “இப்போ இந்த இடத்தில் உன் அண்ணாவா நானான்னு கேட்கணுமா இதழ்?” என்றான்.
அவள் பரிதவித்து பார்த்தாள்.
“எப்பவும் அப்படி கேட்க மாட்டேன். உனக்கு உதயே எல்லாமாவும் முதலில் இருக்கிறதுல எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை. உன்கிட்ட எனக்கான பிளேஸ் என்னன்னு நல்லாத் தெரியும். நான் வேற உதயன் வேற. எங்க உறவுகளுக்கான வேறுபாடும் தெரியும். உன்னையும் புரியும்” என்ற பிரணவ், வீட்டைக் கை காண்பித்து…
“நம்ம வீடு” என்றான்.
நனியிதழ் புரியாது பார்க்க…
“இதழ் பிரணவ்வோட மனைவியா வாழப்போற வீடு” என்றான்.
அதில் எல்லாம் எங்கோ ஓர் புள்ளியில் தொடர்ந்து முடிச்சிடுவதைப் போலிருக்க, உணர்ந்து கொண்ட உண்மையில் நனியின் இமைகள் அகண்டு விரிந்தது.
“விழுந்திடுவேன் போல” என்ற பிரணவ், மேலும் விரிந்த அவளின் விழிகளில் தொலைந்து மீண்டவனாக, “புரிஞ்சிடுச்சா?” எனக் கேட்டான்.
“அண்ணா… அஷ்மியையா?” நனிக்கு நம்ப முடியவில்லை. ஆனால் அதை கடந்து ஆர்பரிப்பான மகிழ்வு.
“எஸ்.”
“நிஜமாவா?”
“ஆமா” என்ற பிரணவ், “இப்படி நின்னுட்டு கேட்கும் போது என்னென்னவோ தோணுது இதழ்” என்றான்.
அப்போதுதான் இருவரின் நெருக்கத்தை உணர்ந்த நனியிதழ், இருக்கும் சூழல் உணர்ந்து வேகமாக விலகி நின்றாள்.
“அச்சோ… நான்தான்” என்று நெற்றியில் தட்டிக்கொண்டு, “நீயாவது தள்ளி நின்னுருக்கலாம்ல” என்றாள்.
“பாருடா… நீயா வந்து பிடிப்ப. நாங்க கண்ட்ரோல் பண்ணனுமா” என்ற பிரணவ், “பிடிச்சிருக்கே. எப்படி தள்ளுறதாம்?” என்றான்.
அவன் சொல்லாத பொருளும் அவளுள் விளங்கிட,
“பிரணவ்” என்று அவன் மார்பில் புகுந்திருந்தாள். நாணம் மறைக்க.
“அச்சோ இதழ்” என்று பின்னந்தலை கோதிய பிரணவ், மலர்ந்து சிரித்தான்.
அவனது சிரிப்பில் தள்ளி நின்ற நனி,
“எப்படி இதெல்லாம்?” என்றாள்.
பிரணவ் எல்லாம் சொல்ல… நனிக்கு அத்தனை நெகிழ்வு. எல்லா இடத்திலும் தங்கைக்கென்று பார்க்கும் உதயன், தனக்கான பிரத்யேக நிகழ்விலும் தன்னைக் கொண்டு பார்த்து அனைத்தும் செய்திருக்கிறான் என்பதில், அவனின் தங்கை நானென்ற கர்வம் கொண்டாள்.
“ஆல் க்ளியர்?” பிரணவ் தன் முகம் தாழ்த்தி அவள் முகம் பார்த்து வினவ,
“ம்ம்” என்றாள்.
“எல்லாரும் நமக்காக வெயிட்டிங்.” பிரணவ் வீட்டை நோக்கி கைகாட்டிட,
“ஏன் இவ்வளவு நாள் லவ் சொல்லலை?” எனக் கேட்டிருந்தாள்.
தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளை அழுத்தமாகப் பார்த்தான்.
“என்ன?” அவனின் கூர் பார்வைக்கு அவளிடம் தடுமாற்றம்.
எல்லாம் சரியாயிற்று. இருவரும் உணர வேண்டிய காதல் வார்த்தைகளற்று அகம் சேர்ந்தாச்சு. ஆனால் இத்தனை வருடங்கள் நேசித்த காதலை சொல்ல தடையாக இருந்த காரணம் அறிந்திட வேண்டுமே! கேட்டுவிட்டாள். அவன் காரணம் சொல்லிட, இவளும் தன்பக்க காரணம் வழங்க வேண்டும்.
“சின்ன மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்” என்று தோள்களை குலுக்கிய பிரணவ், “இப்போ டைம் இல்லை. எல்லாரும் நாம இன்னும் வரலன்னு என்னவோ ஏதோன்னு அதிகம் யோசிக்கிறதுக்குள்ள நாம போகணும்” என்றான்.
நனி அடி வைக்க…
“சொல்லணும். சொல்லித்தான் ஆகணும். இப்போ இல்லை” என்றான்.
“நானும்” என்றவள் அவனுடன் இணைந்து நடந்தாள்.
இருவரும் அகம் நிறைந்த மகிழ்வை முகம் காண்பித்து உள் வர, அனைவரின் நெஞ்சமும் குளிர்ந்தது.
எல்லோரும் தங்களையே பார்க்க, வேகமாக ஓடி வந்து எழிலுக்கும் தனுவுக்கும் நடுவில் அமர்ந்த நனி தங்கையின் தோளில் முகம் மறைத்துக் கொண்டாள்.
“அக்கா வெட்கமெல்லாம் வருது.” எழில் கேலி செய்ய, அங்கே சிரிப்பின் ஆட்சி.
“என்கிட்ட சொல்லவே இல்லை.” தனு வருத்தமாக சொல்லிய போதும், நனியை அணைத்து விடுத்தாள்.
மேற்கொண்டு நனி, பிரணவ் விஷயம் பேசி, நேரம் செல்ல அங்கு ஒட்டாது அமர்ந்திருந்தது குமரி மட்டுமே!
“எல்லாம் சுபமா முடிஞ்சுது.” ராகவன் சொல்லிட, “ஆமா ஆமா முதல் முறையே பொண்ணே மாப்பிள்ளை வீடு பார்க்க வரதை இங்க தான் பார்க்கிறேன். நல்ல விஷயம்ல” என்றார் குமரி.
அதுவரை கலகலத்து இருந்த இடம் அமைதியாகியது.
பெரியவர்கள் ஒருவரின் முகம் ஒருவர் சங்கடமாகப் பார்க்க…
“இன்னும் எங்க அண்ணியை கண்ணில் காட்டலையே” என்று சூழலை சகஜாமாக்கியிருந்தாள் எழில்.
“எஸ் நானும் என் பிரண்டை பார்த்து பல மாசமாகுது” என்றான் இன்பா.
“ரீமா கூட்டிட்டு வாம்மா” என்று விமலா சொல்ல, பிரணவ் “நான் போறேன்” என்றிருந்தான்.
“நாங்க கூட்டிவரோம்” என்று ஆர்யனும் உடன் ஓடினான்.
“அக்கா வாங்க” என்று ஆர்யன் அழைக்க,
“அண்ணா ஓகேவா?” என பிரண்வ்விடம் கேட்டாள் அஷ்மிதா.
“உன் சீனியருக்கு பல்ப் எரிஞ்சிடுச்சு” என்ற பிரணவ், “ஏன் பதட்டமா இருக்க?” என்று அங்கிருந்த டிஷ்ஷூவை எடுத்து அவளின் நெற்றியில் பூத்திருந்த வியர்வையை துடைத்து, முன் கேசம் சரி செய்தான்.
“அக்கா பொட்டு கொஞ்சம் பெருசா வைங்க” என்ற ஆர்யன், அவள் வைத்திருந்த புள்ளி அளவிலான பொட்டை எடுத்துவிட்டு, சற்று பெரிதாக வைத்தான்.
“அழகா இருக்கீங்க” என்று ஆர்யன் சொல்ல, “பயந்து வருதுடா. நிறைய பேர் வந்திருக்காங்களா?” எனக் கேட்டாள். அமர்ந்திருந்தவள் விழிகள் உயர்த்தி.
“அஷ்மி குட்டிக்கு பயமா?” என்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த பிரணவ், “கல்யாணம் ஆன பின்னாடி அவங்க உன் குடும்பமில்லை. உதய் மாமாவை விரும்ப ஆரம்பிச்ச அப்போவே அவங்க உன் குடும்பமாகிட்டாங்க. இப்போ உன்னை பார்க்க வந்திருக்காங்க. உன் பேமிலி அப்படிங்கிற எண்ணத்தோடு வா. ஜஸ்ட் ஸ்மைல்” என்றான்.
“ம்ம்…” அஷ்மிதா விழிகளை உருட்ட,
“பூ வச்சி விடுடா” என்று கண்ணாடி முன்னிருந்த மேசை மீதிருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து தம்பியின் கையில் கொடுத்தான் பிரணவ்.
தங்கையின் காலுக்கு கீழ் அமர்ந்திருந்த பிரணவ், அவளின் புடவை மடிப்பை ஒன்று போல் வைத்து நீவி விட, “சரியா கட்டியிருக்கியாடா. உனக்கு கம்ஃபோர்டபிள் தானே?” என்றான்.
“ஓகே தான் அண்ணா. ரீமா அக்கா ஹெல்ப் பண்ணாங்க” என்றாள்.
“அவ்ளோதான். வச்சாச்சு” என்ற ஆர்யன், “கண்ணாடி பாருங்க” என்று அஷ்மியின் முகம் திருப்பி, “நிஜமா பொண்ணு மாதிரியே தெரியுரீங்க அக்கா” என்று கேலி செய்ய, பிரணவ் சத்தமாக சிரித்திருந்தான்.
இருவருக்கும் அடி கொடுத்தவள்,
“நான் இப்போ ஓகே தான். வாங்க போகலாம்” என்று எழுந்தாள்.
சகோதரர்கள் இருவரும் அரணாய் உடன் வர, நடுவில் நிமிர்ந்த பார்வையோடு வந்தாள் அஷ்மிதா.
அவளின் நேர்கொண்ட நிமிர்ந்த பார்வையே உதயன் குடும்பத்தின் ஒட்டு மொத்த பேருக்கும், உதயனுக்கு ஏற்ற ஜோடியென்று நினைக்க போதுமானதாக இருந்தது.
இன்பா எழுந்து அவளுடன் நிற்க,
அனைவருக்கும் வணக்கம் வைத்த அஷ்மிதா, இன்பா ஒவ்வொருவராக உறவுமுறை சொல்லி அறிமுகம் செய்ய, தனக்கு சொந்தமாகப் போகும் ஒவ்வொருவரையும் மெதுவாக நிதானித்துப் பார்த்தாள்.
நனியிடம் பார்வை நிலைக்க, அஷ்மியிடம் நீண்ட புன்னகை. நனியிதழ் எழுந்து வந்து அவளின் கரம் பற்றி உடன் நின்று கொண்டாள்.
குமரியின் முகத்தில் மட்டும் அத்தனை சூடு. அஷ்மிதாவை பார்த்ததும், அவரின் மனம் அஷ்மிக்கும், தனுவுக்குமான பொருத்தங்களை, வேறுபாடுகளை ஒப்பீடு செய்தது.
“பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ அஷ்மி” என்று விமலா சொல்ல…
“இருக்கட்டும் கண்ணு. இப்படி வந்து என் பக்கத்தில் உட்காரு” என்றார் ஜெயலட்சுமி.
அஷ்மிதா அவர் அருகில் அமர, கங்கா அவளின் தலையில் சிறிதளவு பூ வைத்தார். சம்பிரதாயமாக.
“எங்க ஈசனுக்கு ஏத்த பார்வதி” என்று லட்சுமி பாட்டி அவளின் கன்னம் வழித்து ஒற்றிக் கொள்ள, அவள் முகம் பூசிய செம்மையை வாசலின் நிலை சாய்ந்து கண்ணுக்குள் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தான் உதயச்செல்வன்.