ஆயுள் நீயே 40

என் ஆயுள் நீயே 40

“எங்க ஈசனுக்கு ஏத்த பார்வதி மாதிரி அம்சமா இருக்க” என்று லட்சுமி பாட்டி அஷ்மியின் கன்னம் வழித்து ஒற்றிக்கொள்ள,

குமரி வெளிப்படையாக தன் சடைப்பைக் காட்டினார். ஆனால் அவரை கண்டுகொள்வார் யாருமில்லை. ஜெயந்தன் வந்த இடத்தில் மனைவியை கண்டிக்க முடியாது தன் மச்சான்கள் இருவரையும் கவலை பொதிந்து பார்க்க, அவரின் அருகருகே அமர்ந்திருந்த இருவரும் ஒருசேர அவரின் கையில் அழுத்தம் கொடுத்தனர்.

“ராசாத்தி என் கண்ணே பட்டுடும்” என்று முகம் சுற்றிய காமாட்சி, “பூவை வைங்கக்கா” என்று தட்டில் வைத்திருந்த மல்லிகைச் சரத்தை பந்தாய் எடுத்துக் கொடுத்தார்.

அதில் அளவாய் கத்தரித்து தன் மகனின் மனதை ஆட்சி செய்யவிருக்கும் மருமகளின் தலையில் அத்தனை அன்போடு பூவினைச் சூடினார் கங்கா.

மூன்று பெரிய பெண்களுக்கும் நடுவில் அமர்ந்திருந்த அஷ்மிதாவுக்கு பாதத்தில் குறுகுறுக்கும் உணர்வு. மனமெல்லாம் ஈரத்தின் குளுமை படரும் சில்லிப்பு பரவி விரவியது.

அதற்கு நேர்மாறாக, முதுகில் கூடும் அனலின் தகிப்பு, பார்வையின் வெம்மையை பாய்ச்சிட, அவளுள் ஓர் அனுமானம். ஆனால் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்திட முடியாத உந்துதல்.

“வாங்க. அப்படியே நின்னுட்டிங்க.” இளங்கோவன் தான் வாசலில் நின்றுவிட்ட மகனை கண்டு உள்ளே அழைத்தார்.

பிரணவ் குடும்பத்தில் அஷ்மிதாவை தவிர்த்து யாரும் உதயனை கண்டதில்லை.

அதனால் யாரென்று பார்த்தாலும், அவனின் ஆளுமையான கம்பீரத் தோற்றத்தில் அவன் தான் உதயன் என்று கண்டுகொண்டனர்.

“உதயச்செல்வன்.” பெண் வீட்டாருக்கு பொதுவாய் கஜேந்திரன் குறிப்பிட, “வாங்க மாப்பிள்ளை” என்றனர், ராகவன், விஜயன், விமலா. ஒரு சேர ஒன்றாக.

“வாங்க மாமா” என்று பிரணவ் உரிமையாய் உறவு சொல்லியே அழைத்திட, பிரணவ் எளிதில் தங்களுடன் ஒட்டிக்கொண்டதில் உதயனின் குடும்பத்தாருக்கு அளவில்லா மகிழ்வு. சட்டென்று ஏற்படும் நெருக்கத்தில் தானே உறவுகளின் அஸ்திவாரம் பலப்படும்.

அனைவருக்கும் பொதுவாக வருகிறேன் எனும் விதமாக மெல்ல தலையசைத்து உள்ளே வந்த உதயன் பார்வை முழுக்க பிறர் அறியாதென்று சொல்ல முடியாதளவுக்கு அவனவள் மீதுதான். அதுவும் தன் அம்மாக்கள் பாட்டியின் மத்தியில் அத்தனை பாந்தமாய் பொருந்தி அமர்ந்திருப்பவளின் எழில் மொத்தமாய் அவனை களவாடியது.

அஷ்மியை அழைத்து வரும்போதே உதயன் வாயிலில் கால் வைத்திட்டான். தன்னுடைய தாரை கேட்டிற்கு வெளியிலேயே அவன் நிறுத்தியிருக்க வண்டி வந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

வந்துவிட்ட உதயனை இன்பா கண்டுவிட்டபோதும்… உள்ளே வரும் போதே உதயனின் பார்வை அஷ்மியை ஸ்பரிசிக்க, இன்பா அமைதியாக இருந்து கொண்டான்.

“ஹாய் மாமா” என்று ஆர்யன், உதயனை அணைத்து விடுக்க, அதே சமயம் உதயனின் கரம் பிரணவ்வின் கரம் பற்றி குலுக்கியது.

“எப்படிப்பா வீட்டை சரியா கண்டுபிடிச்ச?” கஜேந்திரன் வினவ, “மச்சான் அனுப்பிட்டாருங்க சித்தப்பா” என்று பிரணவ்வை காண்பித்தான் உதயன்.

“அதுக்குள்ள ஒண்ணு கூடிட்டாங்கக்கா.” எழில் முணுமுணுக்க, “நல்லது தானே” என்றாள் ரீமா.

தற்போது தான் முதல்முறை நேரில் அறிமுகம் கொண்டாலும், முன்பே சிறு பேச்சில் இயல்பாகியிருக்க தானாக ஒட்டுதல். இடைவெளியின்றி நெருங்கி நிற்க வைத்திருந்தது.

இவர்களின் சகஜமான நிலையை அதிசயத்துப் பார்த்தது மூன்று இளம் பெண்களும் தான்.

“ஏப்புட்ரா” என்று நனியிதழ் பார்க்க, அஷ்மிதாவுக்கு, தன்னவன் அவனுக்கு சிறியவர்களான தன் சகோதரர்களிடம் காட்டிய ஆதுரமான வரவேற்பில் ஆச்சரியம் குடிகொள்ள அத்தனை பூரிப்பு. எழில் மட்டுமே பயம் கலந்த அதிர்வில் விழி அகற்றாது தேங்கினாள். அவளுக்கு ஆர்யன் எந்நேரம் எதையாவது பேசி வம்பு செய்வானோ என்கிற பதற்றம் பயத்தை கொடுத்திருந்தது.

“நெருக்கத்தை பார்த்தாக்கா ஏற்கனவே எல்லாம் பேசி பழகின மாதிரி தெரியுது. இது தெரியாம நாங்க பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கோம்” என்று சூழலை இறுக்கமாக்கினார் குமரி.

“இவ வாய் அடங்கவே அடங்காது” என்று ஜெயந்தன் பற்களைக் கடிக்க, “வீட்டில் போய் என்ன வேணாலும் கண்டிங்க மாப்பிள்ளை” என்று இளங்கோ அவரின் கையை பிடித்து கட்டுப்படுத்தினர்.

“நம்ம பொண்ணு அவங்க வீட்டுல வாழப்போறாங்க, அவங்க பொண்ணு நம்ம வீட்டுக்கு வாழ வரப்போறாங்க… அப்போ நெருக்கம் தானா வரது இயல்பு தானே அத்தை” என்று அழகாய் உதயன் அவருக்கு பேச்சால் கொட்டு வைக்க, விமலா அவனின் சாதுர்யத்தில் மெச்சுதலாக தன் கணவரிடம் கண் காட்டினார்.

“நீங்க வாங்க. உட்காருங்க மாமா” என்று பிரணவ் அஷ்மிக்கு நேரெதிர் இருக்கையை காண்பிக்க, மின்னல் வெட்டும் பார்வையை அவளின் முகத்தில் பாய்ச்சியவனாக அமர்ந்தான் உதயன்.

“மாமா செமயா இருக்கீங்க.” ஆர்யன் வெளிப்படையாக சொல்ல, அதே எண்ணம் தான் பிரணவ்வுக்கும். மாநிற முகத்தில் அத்தனை மிடுக்கும், கலையும். கண்கள் மட்டுமே போதும் அதனின் கூர்மையில் வசீகரித்து விடும்.

ஆர்யன் உண்மையில் உதயனின் தோற்றத்தில் கவரப்பட்டு சொல்லியிருக்க, ‘நல்லா ஐஸ் வைக்கிறான். ஆனால் இவன் ஐஸ்கெல்லாம் அண்ணா உருக மாட்டாங்க’ என உள்ளே கவுண்டர் கொடுத்திருந்தாள் எழில்.

உதயன் இரு குடும்பத்தினரும் இருக்கின்றனர் என்றெல்லாம் கருத்தில் கொள்ளவில்லை. அஷ்மிதாவை நேர்கொண்டு அத்தனை வெளிப்படையாக பார்த்திருந்தான். முகத்தில் பல ஜாலம். அவை யாவற்றையும் அவளுக்காக மட்டுமே விழிகளில் பொதிந்து மறைத்தான்.

அஷ்மிதாவை பலமுறை பார்த்திருந்தாலும், ஒருமுறை மட்டுமே பக்கமிருந்து பார்த்திருக்கிறான். மற்ற பொழுதுகளில் எல்லாம் அவள் அவனுக்கு எட்டிய தூரம் நின்று அடையாளம் காணும் வகையில் மட்டுமே!

சொல்லப்போனால் இன்று தன்னவள் என்கிற உரிமையில் அதீதத்தில் அதீதமாய் பார்த்தான். ரசித்தான்.

அளவான அலங்காரம். மொத்தமாய் சுருண்டு போனான். ஒற்றை பொட்டோடு அவள் வந்து நின்றிருந்தாலும் அவனின் ரசனை சற்றும் குறைந்திருக்காது. உதயனுக்கு அஷ்மிதாவின் அகம் பார்த்து வந்த காதல் இது. அவள் அவளது அண்ணன் மீதும், தன் தங்கையின் மீதும், அவளது உறவுகளின் மீதும் கொண்ட பிணைப்பினால் உண்டான காதல். சிறு அழகில் மொத்த அழகியலையும் அடக்கிடும் காதல்.

தன் பார்வையில் அவள் கொள்ளும் அவஸ்தையில் இவனுள் பேரவஸ்தை.

உதயனின் இருப்பு, அவனின் கவனித்தல், பார்வை மொழி, மனதின் தழுவல்கள், யாவும் உணர்ந்தாலும் விழிகள் உயர்த்தி அவனின் முகம் காண வெகுவாக தயங்கினாள்.

“பார்க்க சொல்லட்டுமா மாமா?” ஆர்யன் உதயனின் காதில் கிசுகிசுக்க…

“வேண்டாம். அவளே பார்ப்பாள்” என்றான் உதயன்.

“அது நடக்காது போலயே அண்ணா” என்று இன்பா சொல்ல, “ஆமா. வாய்ப்பில்லை போல மாமா. அனேகமா கேர்ள்ஸ் டாக் நினைக்கிறேன். எப்படி எல்லா லேடிசும் ஒண்ணு சேர்ந்து பேசிட்டு இருக்காங்க பாருங்க” என்றான் பிரணவ்.

“அவளே பார்ப்பாள்” என்ற உதயன், “என்னை பார்க்கணும் அஷ்மிதா” என்று ஓசையின்றி மொழிய, சடுதியில் மின்னலாய் ஒரு பார்வை. இமைகள் படபடக்க தழுவி மீண்டிருந்தாள்.

“நோப்… காட்.” உதயன் தலை கோதினான்.

அஷ்மி சரியாக உதயனை பார்த்து விலகிட,

“ஹேய்” என்று இளையவர்கள் மூவரிடம் ஆர்ப்பரிப்பாய் கத்தல்.

அடுத்தடுத்து பெரியவர்கள் திருமணம் பற்றி கலந்து பேசிக் கொண்டிருக்க, இவர்களின் சத்தத்தில் என்னவென்று பார்த்தனர்.

“சும்மா பேசிட்டு இருந்தோம்.” என்று மூவரும் ஒன்று போல சொல்லிட, உதயனிடம் சத்தமான சிரிப்பு.

அவனின் சிரிப்பின் ஓசையில் இதயத்தில் சிருங்காரம் இசைக்க, அவனில் நிலைத்துவிட்டது அஷ்மிதாவின் உயிர் கரைக்கும் பார்வை.

உதயனின் கண்கள் மட்டும் வந்ததிலிருந்து தன் கவனத்தை மாற்றவே இல்லை.

அவளின் பார்வையை அவன் சுருட்டிக்கொள்ள, அவள் தொலைந்து போனாள். நெஞ்சம் படபடக்க திரும்பிக் கொண்டாள்.

‘என்ன இப்படி பாக்குறாங்க.’ அவளின் மனதில் தலும்பல் அவனுக்கு கேட்டதோ இளமுறுவல் அவனது இதழில்.

மகனின் சிரிப்பில் மலர்ந்த கங்கா,

“கண்ணுப்படும் தம்பி” என்க, “பாருடா. விட்டா சுத்திப் போடுவாங்க போல” என்று தங்களுக்குள் கேலி செய்தான் பிரணவ்.

“எப்படி மாப்பிள்ளை நேரில் பார்த்த மாதிரி சொல்றீங்க… அண்ணா லவ் வந்த அப்புறம்… இப்போலாம் அடிக்கடி சிரிக்கிறாங்க” என்றான் இன்பா.

“அப்போ மாமா சிரிக்கவே மாட்டாரா?” ஆர்யன் வியப்பாக இன்பாவிடம் கேட்டான்.

“அவர் வீட்டோட தல’டா. எப்படி வெறப்பா சுத்துவார் தெரியுமா?” என்று இன்பா சொல்ல, “தெரிஞ்சுது. பெரிய மாமாவே(இளங்கோ) வாங்கன்னு மரியாதையா கூப்பிடும்போதே” என்றான் பிரணவ்.

“அப்போ நீங்க டெரரா மாமா?” ஆர்யன் கேட்க, “அடேய்” என்று தோன்றிய சிரிப்பை அவனின் கழுத்தில் கைபோட்டு கட்டுப்படுத்தினான் உதயன்.

உதயன் வந்தது முதல் நனியின் பார்வை அவன் மீது தான். அவனின் முகம் பார்த்து அவனது விருப்பத்தை அறிய முற்பட்டாள். பிரணவ் தோட்டத்தில் வைத்து உதயன் அஷ்மிதா காதலை சொல்ல,

‘தன்னுடைய காதலை சேர்த்து வைக்க இப்படியொரு புது வழியை யோசித்து இருக்கிறானோ?’ என்று தான் நினைத்தாள். அடுத்தடுத்து பிரணவ் நடந்ததை சொல்லிய போது உதயனின் மனதை கண்டுகொண்டிருந்தாலும், தற்போது அவளாக அறிந்துகொள்ளும் அவனின் காதலில், அவன் முகம் காட்டும் பாவனைகளில் பேருவகை கொண்டாள். தன் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கும் அண்ணனின் மகிழ்வில் தானே அடங்கியிருக்கிறது அவள் தங்கையாக கொண்டிருக்கும் அன்பின் அளவு.

“மாமா முகமே சொல்லுதுல. அவங்களுக்கு அஷ்மியை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் தனு. அதனை நனியும் ஆமோதிக்கும் வகையில் தனுவை பார்க்க இருவரும் மென்மையாய் புன்னகைத்துக் கொண்டனர்.

“உங்க பயம் குழப்பமெல்லாம் இப்போ போயிடுச்சா அக்கா” என்று எழில் கேட்க, ஆமென்று மௌனமாய் தலையசைத்தாள் நனியிதழ்.

அடுத்து நனியும் ரீமாவும் பேசிக் கொண்டிருக்க, நனிக்கு அஷ்மிதாவுடன் பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. தங்களின் மகனை மணக்க இருக்கிறாள் என்பதே உதயன் வீட்டு மூத்த பெண்மணிகள் மூவருக்கும் அஷ்மிதாவுடன் பேச ஆயிரம் கதைகளை உருவாக்கியிருந்தன.

இப்போதே அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்டும் அன்பில், உரிமையில் விமலாவுக்கு பேரானந்தம்.

ராகவன், விஜயன் கூட அத்தனை இசைந்திருந்தனர். உதயன் வீட்டு ஆண்களிடம்.

பேச்சு வார்த்தைக்கே இரு குடும்பங்களும் ஒன்றாய் ஒரு குடும்பமாக இணைந்திருக்க, உறவுகள் பலப்பட வேறென்ன அதீதம் வேண்டுமாய் இருந்திடப் போகிறது.

விமலாவுக்கு அஷ்மியின் மலர்ந்த முகமும், அவள் சிரித்தபடி அவர்களுக்கு பதில் பேசிக் கொண்டிருந்த விதமும், நெஞ்சம் நிறைத்தது. அவர் அவளை பெறாத தாயாக இருந்தாலும், அவள் மீது தற்போது படிந்திருக்கும் விமலாவின் பார்வையில் அத்தனை தாய்மை. மகளை அணைத்துக்கொள்ள அவரின் கைகள் பரபரத்தது.

அன்னையின் மனம் அறிந்தவளாக, அவர் புறம் திரும்பிய அஷ்மிதா, “கூப்பிட்டிங்களா மாம்?” என்க, “இல்லடா” என்றார்.

இளம் ஆண்கள் மூவருடன் பேசிக் கொண்டிருந்தாலும், தங்கையின் பார்வையை கண்டு கொண்டவனாக உதயன், என்னவென்று பார்வையால் கேட்டிட… ஒன்றுமில்லையென கண்கள் சிமிட்டி, பெருவிரல் சுட்டு விரல் இணைத்து சிறிய இதயம் காண்பித்தாள்.

அவளின் செய்கை, ‘லவ் யூ செல்வா’ என்று தங்கையின் குரலாக உதயனின் செவிகள் நிறைத்தது.

தங்கையின் இந்த முகத்திற்காக அல்லவா அவன் காத்திருந்தது.

“ஹேப்பியா இருக்கு பிரணவ். தேங்க்ஸ்” என்று பிரணவ்விடம் வெளிப்படையாக சொல்லிய உதயன், அவனின் கையை அழுத்தி விடுத்தான்.

“நான் தான் தேங்க்ஸ் சொல்லனும் மாமா. என்னோட லவ். உங்களால் தான்” என்ற பிரணவ், இறுக்கமாக அணைத்து விடுத்தான்.

அன்பினால் உருவாகும் பிணைப்பு… அழகிய உறவுகளின் சங்கமாய்.

error: Content is protected !!
Scroll to Top