என் ஆயுள் நீயே 41
அடுத்தடுத்து பேச்சுக்கள் சுவாரஸ்யமாக செல்ல நேரம் விரைந்தோடியது.
“இனி ரெண்டு குடும்பமும் ஒண்ணு தானே! பேச நாளா இல்லை. முதலில் தோதுப்படும் தேதியை குறிப்போம்” என்ற கஜமுகன், “என்ன ராகவா நான் சொல்றது சரிதானே?” என்று பொறுப்பான சம்மந்தியாக அவரிடமும் சம்மதம் கேட்டார்.
“சாப்பிட்டு பொறுமையா பார்ப்போம் மாமா. நேரமாச்சே” என்று விமலா சொல்லியதும், ராகவன் கஜமுகனை பார்க்க, “சரி முதலில் சாப்பிடுவோம்” என்றார் பெரியவர்.
“பெருசு ரெண்டும் செமயா சிங்க் ஆகிடுச்சு” என்று ஆர்யன் பழக்க தோஷத்தில் கிண்டலாக மொழிந்திட, உதயன் பார்வையாலே அதட்டியிருந்தான்.
“சாரி மாமா. பெரியவங்க. இனி இந்த மாதிரி சொல்லமாட்டேன்” என்று உடனடியாக பணிந்து வந்திருந்தான் ஆர்யன்.
“ப்பா… உன்னை அடக்கவும் ஆள் வந்தாச்சு ஆரி. சொல்ற விதத்தில் சொன்னா தான் சேட்டை செய்யாம இருப்ப போல” என்று சிரித்த பிரணவ், “இவன் வாலு தனத்துக்கு நீங்க தான் கரெக்ட் மாமா” என்றான்.
உதயன் இன்பாவைப் போலத்தான் தங்களை பார்க்கிறான் என்று பிரணவ் மற்றும் ஆர்யனுக்கு உதயனின் சிறு செயல் காட்டிக் கொடுத்திட்டது.
சிறியவர்கள்… பெரியவனுக்கு விரும்பியே கட்டுப்படத் தொடங்கினர்.
இருக்கையை விட்டு அனைவரும் எழ, இரண்டு மணி நேர பயணம், இங்கு வந்தும் வெகு நேரமாகியிருந்தது. விமலா மற்றும் விஜயன் அவர்கள் பிரஷப் செய்ய அறைகள் காண்பிக்க…
“அஷ்மிதா கிட்ட பேசணும்” என்று எழுந்து நின்றுவிட்டான் உதயன்.
லட்சுமி பாட்டி எதோ கதை பேசிக் கொண்டிருக்க, கவனமாக தலையாட்டியபடி கேட்டுக்கொண்டிருந்த அஷ்மிதா விலுக்கென உதயனை ஏறிட்டாள்.
உதயன் விழிகள் சுருங்க என்னவென்று கேட்க, ஒண்ணுமில்லை என வேகமாக தலையசைத்து குனிந்து கொண்டாள் அஷ்மிதா.
“எல்லாமே ஸ்ட்ரெயிட் டீலிங் தான் போல” என்று பிரணவ் கேட்க, “எதுக்கும் தயங்க வேண்டாமே” என்றிருந்தான் உதயன்.
தன்னுடைய காதலில் தானும் இப்படி நேர்கொண்டு இருந்திருக்க வேண்டுமென்று பிரணவ் நினைத்திருந்தாலும், ‘எவ்வெரி லவ் ஸ்டோரி இஸ் ஆன் யூனிக்’ என அகம் உணர்ந்து சொல்லிக்கொண்டான்.
உதயன் இப்படி கேட்பானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. உதயன் இந்த மாதிரி முன்பு இருந்ததுமில்லை. பெண்களிடம் அவனின் பேச்சும் அத்தனை கவனமாக இருக்கும். அதுகொண்டே அவனை பார்த்திருக்க, அஷ்மிதாவிடம் உதயன் என்பவன் தாங்கள் பார்க்கும் கோணத்தில் இல்லை, முற்றிலும் வேறுபட்டவன் என்பதை வந்ததிலிருந்து தன் குடும்பத்திற்கு சிறு சிறு பார்வையிலும் காட்டிக் கொண்டிருக்கிறான் உதயன்.
பிள்ளையின் சந்தோஷத்தில் தானே பெரியவர்களின் மனம் நிறையும்.
“அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு வரட்டும். நாம எடுத்து வைப்போம். எல்லாரும் வாங்க” என்று விமலா உதயன் கேட்டதற்கு சம்மதம் அளித்தவராக மற்றவர்களை அழைக்க, அனைவரும் நகர்ந்து சென்றனர்.
தற்போது தான் அஷ்மியை சரியாக பார்க்கவே நேரம் அமைய, நனியிதழ் ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டாள்.
“ஹாய் ஜூனியர்.”
“சீனியர்…”
“எனக்கு நீ… சாரி சாரி… நீங்க அண்ணியா” என்ற நனியிதழ், “ரொம்பவே சந்தோஷம்” என்றாள்.
“எனக்கும்” என்று அஷ்மி பிரணவ்வை பார்க்க, “உன் அண்ணாவை நான் பத்திரமா பார்த்துப்பேன். நீ என் அண்ணாவை ரொம்ப பத்திரமா பார்த்துக்கணும். டீலா?” என்றாள்.
“சீனியர்” என்று அஷ்மிதா நெகிழ, “ச்சூ… அழுதா செல்வாவுக்கு பிடிக்காது. அதுவும் இனி நீங்க அழுதா அண்ணா ஃபீல் பண்ணுவாங்க. அண்ணாவை சேர்த்து வருத்தும்” என்று அவளை மீண்டும் அணைத்து விடுத்தாள் நனி.
“நீங்களே பேசிட்டு இருந்தா எப்படி? அங்க மாமா வெயிட்டிங்” என்று ஆர்யன் வர, “வந்ததிலிருந்து நானே பேசல. நாலு வருஷம் கண்டுக்காம இருந்த உனக்கென்ன அவசரம்” என்று இன்பாவும் வந்தான்.
இன்பா சொல்லிய பின்னரே அஷ்மிதாவுக்கு நனியிதழ் இத்தனை ஆண்டுகள் தன்னையும் ஒதுக்கி வைத்திருந்தது நினைவு வர, “அச்சோ… நினைவு இல்லாம பேசிட்டனே” என்று நெற்றி தட்டினாள். முகம் சுருக்கி.
அவர்களை கண்டும் காணாது கவனித்திருந்த உதயனுக்கு அஷ்மியின் சிறு பிள்ளை முகம் அள்ளிக்கொள்ள சுண்டி இழுத்தது.
“நானும் மறந்து பேசிட்டேன்” என்று ரீமாவும் சொல்ல, “பேசிட்டிங்க தானே. அவ்ளோதான். எல்லாம் ஓவர். முடிஞ்சதை யாரும் பேசக் கூடாது. அம் யுவர் பெஸ்ட் ஃபிரண்ட்” என்று ரீமாவிடமும், “அம் யுவர் பெஸ்ட் சீனியர்” என்று அஷ்மிதாவிடமும் சமாதான கொடியை பறக்க விட்டிருந்தாள் நனியிதழ்.
“ஓகே… ஓகே…” ரீமா மற்றும் அஷ்மி ஒன்றாகக் கூற,
“வந்து சாப்பிடுங்க. அப்புறம் அரட்டையை வச்சிக்கோங்க. அவங்களுக்கு ரூம் காட்டுடா ஆரி” என்று விமலா குரல் கொடுக்க, எல்லோரும் நகர்ந்தனர். உடன் அஷ்மிதா.
சட்டென்று அனைவரும் ஒன்றாக நின்று அஷ்மியை பார்க்க, அவள் என்னவென்று கேட்க,
“நீ எங்க வர. அங்க உங்க ஆளு வெயிட்டிங். போயி கதைச்சிட்டு வா” என்று நால்வரும் சேர்ந்து கூற அவர்கள் அருகில் பிரணவ் வந்துவிட்டான்.
“கிண்டல் பண்ணது போதும். நீங்கலாம் போங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.
“என்னடா…?” அஷ்மியின் பதற்றம் உணர்ந்தவனாக தலையில் பரிவாய் கை வைத்து கேட்டான்.
“தூரத்திலிருந்து பார்த்திருக்கேன். இப்போ ரெண்டு மூணு நாளா போனில் பேசியிருக்கேன். ஆனால் பக்கத்தில்… என்னவோ வயிறெல்லாம் பிசையுது பிரணவ். கை பாரு எவ்ளோ வெட்” என்று அவனிடம் உள்ளங்கை விரித்து காண்பித்தாள்.
“மாமா கண்ணை பாரு அஷ்மி. மெஸ்மரைசிங். உன்னை அவ்ளோ பிடிச்சிருக்கு. அப்பட்டமா காண்பிக்கிறார். நீ போ. மாமாவே பேசுவார். அப்புறம் தானா உனக்கும் பேச வரும்” என்று அனுப்பி வைத்தான்.
அஷ்மிதா உதயனின் அருகில் செல்ல,
“என்கிட்ட என்ன பயம் உனக்கு?” எனக் கேட்டிருந்தான். உண்மையில் அதட்டல் தான். உதயனின் முகத்தை மிரண்டு பார்த்தாள்.
“அஷ்மிதா என்ன பன்ற நீ?” எனக் கேட்டவன், அவளின் விழிகள் விரிந்தப் பார்வையில் தொலையும் மனதை இழுத்துப் பிடித்தான்.
“ஹான்…”
“இங்க நின்னே பேசணுமா?”
அஷ்மிதா, பிரணவ் எங்கென்று திரும்பிப்பார்க்க… தங்கையின் பார்வை உணர்ந்தவனாக பக்கம் வந்திருந்தான்.
“என்னாச்சு…” இருவரும் அங்கேயே நின்றிருக்க என்னவென்று கேட்டான்.
“அஷ்மிதா ரூம்?” உதயன் சட்டென்று கேட்க, அஷ்மிதா நெஞ்சில் கை வைத்திட்டாள்.
“ரூமுக்கு எதுக்கு? நாம… நாம கார்டன் போகலாமே!” என்றாள்.
“வரும்போது பார்த்தேன்… கார்டனில் ரூஃப் டாப் எதுவுமில்லையே… ட்ரீஸ்க்கு கீழ கூட சிட்டர்ஸ் எதுவுமில்லை. ஸ்டோன் பெஞ்ச் அடிக்கிற வெயிலுக்கு ஹாட்டா இருக்கும்.”
உதயன் சொல்லியதில் அஷ்மிதா விழிக்க, பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாது தவித்து நின்றான் பிரணவ்.
“என்னப்பா இன்னும் இங்கவே நின்னுட்டு இருக்கீங்க” என்று அவர்களை பார்த்துவிட்டு அருகில் வந்த விஜயன், “இங்க நாங்க எல்லாரும் இருக்கோம் பேச தயக்கமா இருக்கும். கார்டனிலும் வெயிலில் நின்னு பேச முடியாது” என்று அவராகவே காரணங்கள் அடுக்கி சொல்லியவராக, “மாப்பிள்ளையை உன் ரூம் கூப்பிட்டு போடா அஷ்மி. பால்கனியில் நின்னு பேசுங்க. நல்லாயிருக்குமே” என்றார்.
“டாட்…” அஷ்மிதா சத்தமின்றி பற்களைக் கடிக்க… உதயன் பிரணவ்வை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்.
“சாரி மாமா. இதுக்கு மேல என்னால சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியல” என்று பிரணவ் நகர்ந்துவிட்டான்.
“என்னடா அஷ்மி… அப்பா எதுவும் தப்பா சொல்லிட்டனா?” விஜயன் அப்பாவியாகக் கேட்க, “இல்லையே” என்று இழுத்து சொல்லியவள், “அப்புறம் என்னடா? போய் பேசிட்டு வாங்க. சாப்பிடணும்ல?” என்று சென்றார்.
அஷ்மிதா விரல்களை பிசைந்து கொண்டே நின்றிருக்க…
“போலாமா?” என்றான் உதயன்.
“ஆங்… போலாம்” என்று அஷ்மிதா அவனைத் தாண்டி வேகமாக அடி வைக்க, பழக்கமில்லாத புடவை தடுக்கி விழப்போனவளை நொடியில் தோள் பற்றி நிறுத்தியிருந்தான் உதயன். பின் சரிந்தவளாக உதயன் மார்பு சாய்ந்திருந்தாள்.
“அஷ்மிதா பார்த்து…”
சட்டென்று தானாக ஏற்பட்டிருந்த நெருக்கம்… இருவரின் விழிகளும் முட்டி மோதின.
“ஓ” என்று இக்காட்சியை கண்டுவிட்ட இளையவர்களின் பல குரல்கள் ஒன்றாக அவ்விடம் நிறைக்கவே, அஷ்மிதா வேகமாக விலக முயற்சித்தாள் என்றால், உதயன் நிதானமாக அவளை தள்ளி நிறுத்தினான்.
பிள்ளைகளின் கேலியில் தயங்கி நின்ற மகளை பார்த்த விமலா தான், அவர்களை அதட்டிவிட்டு, “நீங்க போங்க” என்று இருவரையும் அனுப்பி வைத்தார்.
அஷ்மிதா விட்டால் போதுமென்று ஓடிச்செல்ல…
“என்ன அவசரம் உனக்கு” என்று இரண்டே எட்டில் அவளுடன் இணைந்திருந்தான்.
“சேர்ந்து நட… இப்போவே பழகிக்கோ” என்றான்.
அவனின் வார்த்தைகளின் பொருளில் அவளிடம் ஆழியாய் ஆர்ப்பரிப்பு. இப்போதே அவனது கைகளுக்குள் பொதிந்துவிடும் வேகம்.
நின்றுவிட்டாள். அவளின் அறையும் வந்திருந்தது.
“என்ன?”
“ரூம்.” சுட்டு விரல் காண்பித்தாள்.
“எல்லாரையும் பார்க்க வரும்போது கீழ ஒரு ரூமிலிருந்து வந்தியே?”
“அது தாத்தா ரூம். பார்க்கணும் சொல்லும் போது, அங்கிருந்து வர ஈசியா இருக்கும் மாம் சொன்னதால அங்கிருந்து…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள், ஒன்று புரிந்தவளாக, “அப்போவே வந்துட்டிங்களா நீங்க?” என்றாள்.
“கண்டுப்பிடிச்சிட்ட” என்ற உதயன், “இதுதான் மிஸஸ்.அஷ்மிதா உதயச்செல்வன் அறையா?” எனக் கேட்டு நின்ற இடத்திலிருந்து பார்வையால் வட்டமிட்டிருந்தான்.
அவளிடம் கேள்வி கேட்டு பதில் சொல்ல வைத்தவாறே, அவளறியாது அறைக்குள் அழைத்து வந்திருந்தான். அதனை அவன் கேட்ட பின்னரே உணர்ந்தவள், அவன் கேட்ட விதத்தில் தேகம் சிலிர்த்து பாத விரல்களை தரை தாழ்த்தினாள்.
“வரல சொன்னீங்க?”
“அதான் வந்துட்டனே. தூரத்திலிருந்து பார்த்தது போதும். பக்கமிருந்து பார்ப்போம்ன்னு தோணுச்சு.”
அவனது பார்வை, பேச்செல்லாம் அவளுள் புதுவித உணர்வை அளிக்க, உதடு மடித்து தன்னை நிலைகொள்ளச் செய்தாள்.
அறை சுழன்ற அவனது பார்வை மெத்தைக்கு அருகிலிருந்த மேசையில் நிலைத்து நின்றது.
அஷ்மிதா அவனருகில் தவித்து தடுமாறி நிற்க, அவளின் கருத்தில் எதுவும் பதியும் நிலையில் அவளில்லை.
“எதுக்கு ஷிவர் ஆகுற?” என்ற உதயன், “என்னை எட்ட நின்னு பார்த்தாதான் தைரியம் வருமா?” எனக் கேட்டிருந்தான்.
“அது… அது வந்து” என்றவள், “அச்சோ உதய்” என்று அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள். தளர்வாக.
“சத்தியமா முடியல. உங்க முன்னாடி… இப்படி… ம்ப்ச்” என்று உதயன் முகம் பார்த்தவள், “உங்க கண்ணு…” இமைகள் படபடத்து “ஃபேஸ் பண்ண முடியல. என்னவோ பண்ணுது. போங்க நீங்க” என்றாள்.
அவள் எதிரில் கால்களை அகட்டி, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த உதயனிடம் அவளின் பேச்சில், சிணுங்களில் குறுஞ்சிரிப்பு.
“ரெஸ்ட் ரூம் எங்க?”
‘நான் என்ன சொல்றேன். இவங்க என்ன கேட்கிறாங்க.’ என பார்த்தாலும் அவனுக்கு கை காண்பித்தாள்.
சென்று வந்தவன்… “போலாமா?” என்றான்.
“எங்க?” அவள் புரியாது வினவினாள்.
“வந்த வேலை முடிஞ்சுது” என்ற உதயன், “பிடிச்சிருக்கு… ரொம்ப” என்றான். அவள் அமர்ந்திருந்த இருக்கையின் கையில் தன் கரம் ஊன்றியவனாக அவள் புறம் குனிந்து அவளின் முகத்திற்கு அருகே தன் முகம் வைத்துக் கூறினான்.
சதிராடும் அவளின் கண்களில் ஊரும் அவனது விழியின் நர்த்தனத்தில் சிக்கிக்க விரும்பியவள், தன் முகம் மோதிய அவனின் சூடான மூச்சுக் காற்றில் நிகழ் மீண்டு தவித்துப் பார்த்தாள்.