என் ஆயுள் நீயே 42
“என்ன வந்த வேலை?”
உதயனின் நெருக்கம் தவிர்க்க, அவள் கேள்வி கேட்டாள்.
உதயன் குளியலறை பக்கம் தன் பார்வையை தொட்டு அவளில் பதிக்க, “ஹான் புரிஞ்சுது” என்றாள் வேகமாக.
“கெஸ்ட் ரூமில் பிரஷப் பண்ண நான் கெஸ்ட்டா அஷ்மிதா?”
அவனது குரலும், பார்வையும் அவனது உரிமையின் அதீதத்தை உணர்த்திட, ஈரம் படர்ந்த முகத்தின் குளுமை அவளுள் சில்லிட வைக்க, “படுத்துறீங்க” என்றாள்.
அதில் நிமிர்ந்து சத்தமாக சிரித்தவனாக விலகி நின்றான். அவனது சிரித்த முகத்தில் லயித்துப் போனாள்.
“டவ்… டவள் வேணுமா?” அவன் முகம் துடைத்திருந்தபோதும், என்ன பேசுவதென தெரியாது திணறலோடு அவளின் குரலோடு கருவிழிகளும் தடுமாற கேட்டிருந்தாள்.
“உள்ளிருந்ததே” என்றவனின் பதிலில் அவளின் மூச்சு சூடாகியது.
“அது… என்…என்னோடது!”
“உதய்க்கு பெர்மிஷன் இல்லையா?” அவன் கேட்ட விதத்தில் அவளின் சகலமும் அவனில் உறைந்து நின்றது.
“அப்புறம் அஷ்மிதா?”
“போலாம் சொன்னீங்க.”
“போகணுமா?”
“எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க.”
“உதயனுக்கு அஷ்மிதா கூட இருக்க பிடிச்சிருக்கே! அஷ்மிதாக்கு இல்லையா?” என்றான்.
“என்னது?”
“அஷ்மிதா சொல்லணுமே” என்று அவளது மூக்கின் நுனி நிலைத்தான்.
“பிடிக்கும்.”
“என்னது பிடிக்கும் அஷ்மிதா?” அவனது குரலே அவளை அவனிடம் புரட்டிப்போட போதுமானதாக இருந்தது.
“உங்களை பிடிக்கும்.” மெல்லிய குரலில் மொழிந்தாள்.
“தெரியுமே!” என்றான்.
‘அப்புறம் ஏன்டா இம்சை பன்ற.’ அவளின் பார்வைக்கான பொருள் விளங்கியதோ? கீழ் உதடு கடித்தவனாக சத்தமின்றி தோள்கள் குலுங்க சிரித்தான்.
“அஷ்மிதாவோட பிடித்தம் தான் உதயனுக்குள் பிடித்தத்தை உருவாக்கியது… உண்டாக்கியது… அப்போ அஷ்மிதா சொல்லி உதயன் கேட்கணுமே” என்று அவளை வார்த்தைகளால் உருக வைத்தான்.
“மூக்குத்தி போடலையா அஷ்மிதா?” அவளது கூரிய மூக்கிலிருந்து பார்வையை அகற்றாதுக் கேட்டிருந்தான்.
“மூக்குத்தி…” அவள் மூக்கினை தொட்டுப் பார்த்தவளாக இழுக்க…
“வாட்ஸ்அப் டிபியில் இருந்ததே” என்றான்.
“என்னை நீங்க கவனிக்கிறீங்களா?” புகைப்படத்தில் மூக்குத்தியை அறியுமளவிற்கு அத்தனை கவனித்திருக்கின்றானே எனும் படபடப்பு அவளிடம்.
“கவனிக்கணுமே” என்ற உதயன், “கேள்வி கேட்டா பதில் சொல்லணும் அஷ்மிதா” என்றான்.
“அது நோஸ் பின். அப்படியே இன்ஸ்டன்ட்டா மாட்டிக்கிறது. நான் நோஸ் பியர்ஸ் பண்ணல” என்றாள்.
“ஹோ…” என்ற உதயன், “உன் ரூமுக்கு யாரும் வரமாட்டாங்களா?” எனக் கேட்டுக்கொண்டே அறைக்குள் வந்ததும் தான் கவனித்த ஒன்றை பார்க்க, தற்போது அது அங்கில்லை.
ரெஸ்ட் ரூம் சென்று வந்த நேரத்தில் எடுத்து மறைத்து வைத்திருக்கிறாள் என்பதை கண்டுகொண்டான்.
“வருவாங்க. மோஸ்ட்லி ஆரி வீட்டில் இருந்தான்னா… இங்கே தான் இருப்பான்” என்றாள்.
“அப்போ என் பிக் எப்படி தைரியமா?” என புருவம் உயர்த்தினான்.
“உங்கக்கிட்டேர்ந்து எதுவும் தப்பாதா?” எனக் கேட்டவள், எழுந்து சென்று கப்போர்டில் எடுத்து வைத்த உதயனின் புகைப்படத்தை மீண்டும் எடுத்து மேசையில் இருந்த இடத்தில் வைத்தாள்.
உதயனிடம் இளமுறுவல்.
உதயன் அவனது தாரிலிருந்து கதவினை திறந்து கொண்டு இறங்கும் காட்சி. கருநீல சட்டையும், பேகிபேஜ் நிற ஜீன்சும் அணிந்திருந்தான். முதன் முதலில் அவனை அதிகம் ரசித்து எட்ட நின்று அவள் எடுத்திருந்த புகைப்படம். அத்தனை பிடித்தம் அதில் அவளுக்கு.
உதயன், தான் கேட்டதற்கு பதில் எனும் விதமாக பார்க்க…
“எப்பவும் கப்போர்டில் தான் வச்சிருப்பேன். நேத்து நைட் தான், இனி யாரும் எதும் சொல்ல முடியாதே! அங்க எடுத்து வச்சேன்” என்றாள்.
“ரொம்ப பிடிக்குமா அஷ்மிதா?”
“நான் போறேன் போங்க.”
“நானும் வரேன்.”
திரும்பிவிட்டவளின் இணையாக வந்து நின்றான்.
“என்னை நீ உட்காரவே சொல்லல அஷ்மிதா.”
“அச்சோ… சாரி, சாரி” என்றவள், “உட்காருங்க பிளீஸ்” என்றாள்.
“உங்க பக்கத்தில் நான் நானவே இருக்கல போங்க. என்ன பண்ணி வச்சிருக்கேன் நான்” என்று நெற்றி தட்டியவள், “உட்காருங்க உதய்” என்றாள்.
“என்ன வச்சிக்கோயேன் அஷ்மிதா” என்றான்.
அவன் சொல்லியதில் சுற்றம் மறந்து அவனது முகத்தில் தேங்கிவிட்டாள் பெண்ணவள்.
“உன் கைக்குள்ள”, உதயன்.
மொத்தமாக உருக்குலைய வைக்கின்றான். அவனுள் சிறைப்பிடிக்கின்றான்.
“அவ்வா…” வாயில் கை வைத்த அஷ்மிதா, “நீங்களா இது?” என்றாள்.
“நான் சொன்னனே அஷ்மிதா… அஷ்மிதாகிட்ட தான் உதயன் உதயனா இருக்கணும்.”
தன்னிடம் மட்டும் அவனுக்குள் மறைந்திருக்கும் அவனாக மட்டுமே இருக்க விழைகிறான். புரிந்து கொண்டவளுக்கு அவனின் காதலின் கனம் கூடுதலாய். கண்கள் பனிக்க…
“உங்க கை பிடிச்சிக்கவா?” எனக் கேட்டாள்.
“ம்ம்” என்று உதயன் தன்னுடைய வலது கரம் நீட்ட… அருகில் வந்து அவனது புஜத்தை இரு கரங்களினால் கோர்த்து பிடித்தவளாக, அவனின் தோளில் தன் நெற்றி முட்டி நின்றாள்.
“நிறைய பிடிச்சிருக்கு. இப்படியே இருக்க பிடிச்சிருக்கு. யாரும் பார்த்திடாத இந்த உதய்… அதிகத்துக்கும் பிடிச்சிருக்கு” என்றாள். அவளின் குரல் அத்தனை கரகரப்பாய். பெரும் நெகிழ்வாய்.
“அஷ்மிதா.”
“பிளீஸ்…” என்றவள், “அஷ்மி சொல்லுங்க…” என்றாள்.
அவளை மொத்தமாக செயலிழக்க அவனது அஷ்மிதா எனும் அழைப்பு போதுமானதாக இருந்தது. அவன் உச்சரிக்கும் அஷ்மிதாவில் முழுதாக மூழ்கி தத்தளிக்கிறோம் எனும் உணர்வே அவளை அவன் பக்கம் முற்றிலும் சாய்த்திட, அவனது அவளின் பெயர் விளிப்பிற்கே உருக்குலைந்தாள் உதயனின் அஷ்மிதா.
“போலாம் அஷ்மிதா.”
விலகி, தவித்து திண்டாடிப் பார்த்தாள்.
அவன் ஒவ்வொரு முறை அஷ்மிதா என்று அழுத்தி உச்சரிக்கும் போதும், அவளின் பெயர் என்பதற்கே அதில் அவன் கொண்ட பிடித்தத்தின் அளவை அவளால் உணர்ந்துகொள்ள முடிய, அவனுக்கான காதலின் ஏக்கங்கள் அவளிடம் கூடிப்போனது.
உதயன் புன்னகைக்க…
“மயக்கப்பாக்குறீங்க” என்றாள்.
அவனின் புன்னகை நீண்டு விரிந்தது. முகம் விகசிக்க.
“இனி அஷ்மிதா உதயனிடம் தனியா பேச ஷிவர் ஆகமாட்டா… ரைட்?” என்றான்.
அவள் புரியாது உதயனை பார்க்க…
“உன் பார்வை தெரியும் அஷ்மிதா. நீ எங்க தள்ளி நின்னு என்னைப் பார்த்தாலும், என்னால் உன்னை உணர முடியும். உன் பார்வையாலே என்னை பார்க்க வச்சிட்டு, நான் வந்ததுலேர்ந்து நானா நினைக்கிற வர நீயா என்னை பார்க்கல. அதான் தனியா பேச கூட்டிட்டு வந்து பணிஷ் பண்ணேன். பணிஷ்மென்ட் எப்படி அஷ்மிதா” என்று அவன் சொல்லியதும் அடப்பாவி லுக்கில் நின்றிருந்தவளின் காதில் கிசுகிசுப்பாக அவன் வினவ,
“இது ஆகறதுக்கில்லை. நான் போறேன்” என்றவள் இரண்டடி எடுத்து வைத்து, அவனை திரும்பி பார்க்க, அவளுடன் இணைந்து நடந்தான்.
இருவரிடமும் மனதில் இதம் வீச தானாக நெருக்கம் சூழ்ந்திருந்தது.
இருவரும் ஒன்றாக நடந்துவர,
அவனிடம் தனித்து பேசவே பயந்த தங்கையின் முகத்தில் தற்போதிருக்கும் மாற்றம் பிரணவ்வுக்கு மகிழ்வைக் கொடுத்தது.
“ஜோடிப் பொருத்தம் அம்சமா இருக்குதுக்கா.” காமாட்சி சொல்ல…
“என் கண்ணே படும்” என்றார் லட்சுமி.
எல்லாரும் உணவு முடித்து பேசியபடி அமர்ந்திருந்தனர்.
“நீங்க வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம். அஷ்மி வா” என்று இருவரையும் விமலா அழைக்க, “எல்லாரும் சாப்பிட்டாச்சா அத்தை?” எனக் கேட்டுக்கொண்டே உணவு மேசை இருக்கையில் அமர்ந்தான் உதயன்.
“ஆச்சுங்க” என்ற விமலா நின்றுகொண்டே இருந்த மகளிடம், “உட்காரு அஷ்மி” என்றார்.
அவள் உதயன் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு ஒரு இருக்கை தள்ளி அமர முற்பட, உதயன் தனக்கு அருகிலிருந்த இருக்கையை நகர்த்தி கண் காட்டினான்.
“அம்மா இருக்காங்க” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னாலும் அவனருகில் அமர்ந்தாள்.
விமலா இருவருக்கும் வாழை இலை வைத்திட, “என்ன மெனு அஷ்மிதா?” எனக் கேட்டான். அவள் பக்கம் மெல்ல சரிந்து.
“எனக்குத் தெரியாது” என்று அஷ்மிதா சொல்ல…
“அப்போ எனக்கு தேங்காப்பால் சாதம் பிடிக்கும்ன்னு செய்ய சொன்னது நீயில்லையா” என்று உதயன் சிரியாது வினவ,
“அடேய் அண்ணா” என்று பற்களைக் கடித்தாள் அஷ்மிதா.
“கூப்பிட்டியாடா?” என்று பிரணவ் வர, அவனைத் தொடர்ந்து இளையவர்கள் அனைவரும் வந்து இருவரையும் சூழ்ந்து கொண்டனர்.
“நாங்க பார்த்துக்கிறோம் மாம். டேட் ஃபிக்ஸ் பண்றாங்க நீங்க போங்க” என்று பிரணவ் விமலாவை அனுப்பியதும்,
“சொன்னது என் சின்ன மச்சான்” என்றான் உதயன்.
“தம்பி… யூ டூ…” என்று அஷ்மிதா இழுக்க, “சாப்பிடுங்கக்கா” என்று ஆர்யன் உணவினை அள்ளி அவளின் வாயில் திணிக்க…
“ஒரே நாளில் எல்லாரையும் கவுத்திட்டிங்க” என்று அஷ்மி சொல்ல… “உன்னை கவுத்த மாதிரியா அஷ்மிதா?” என்று உதயன் கேட்டதில்…
“அண்ணா நீங்களா இது?” என்ற இன்பா, நனி, எழில் குரல்கள் தொடர்ந்து அனைவரின் சிரிப்பு சத்தமும் கேட்க, கலாட்டாவாக அவர்களின் உணவு நேரம் முடிந்தது.
சிறியவர்கள் அனைவரும் பெரியவர்களிடம் வந்தமர…
“ரெண்டு தேதி பார்த்திருக்குங்க… எது சரி வரும் பாருங்க” என்று தேதிகளைக் கூறினார் ராகவன்.
உதயன் முகம் யோசனையை காட்டிட,
“ரெண்டு கல்யாணமும் ஒரே நாளில் பண்ணலாம் முடிவெடுத்திருக்கோம் உதயா” என்றார் கஜேந்திரன்.
மகனின் யோசனை படிந்த முகம் கண்ட இளங்கோ…
“நீங்க என்ன நினைக்கிறீங்க தம்பி?” எனக் கேட்டார்.
“ரெண்டு கல்யாணம் ஒண்ணா வேணாங்கப்பா” என்ற உதயன், “முதலில் பட்டு, பிரணவ் கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் ஒரு ஃபோர் மந்த்ஸ் கேப்ல எனக்கு அஷ்மிதாக்கு பண்ணுவோம்” என்றான்.
உதயன் ஏன் அவ்வாறு கூறுகின்றான் என்று யாருக்கும் புரியவில்லை. அது அவர்களின் முகத்திலே தெரிந்தது.
“தொடர்ந்து அலைச்சல் அதிகமாகும் உதயா.” ஜெயந்தன் சொல்ல பெரியவர்கள் ஆமோதிக்கும் விதமாக பார்த்தனர்.
“கூடுதல் வேலையாகும் சாமி. அடுத்தடுத்து சொந்த பந்தமெல்லாம் வர சிரமம் பார்ப்பாங்க” என்றார் லட்சுமி.
“ஒரே நாளில் ரெண்டு கல்யாணம்… நீங்க சொல்றது புரியுது” என்ற உதயன், “எனக்கு என் தங்கச்சி கல்யாணத்தில் எல்லா வேலையும் நான் தான் பார்க்கணும் ஆசை இருக்குமே! அது மாதிரி தான் பிரணவ்வுக்கும், அவங்க தங்கச்சி கல்யாணத்தில் எல்லாம் எடுத்து செய்யணும் ஆசை இருக்குமே! இப்போ நாங்க ரெண்டு பேருமே மாப்பிள்ளைன்னு ஆகிட்டா, யாரும் எதுவும் செய்ய விடமாட்டிங்க… அதுக்காகத்தான் சொல்றேன்” என்றான்.
“எனக்கும் மாமா சொல்றது தான் சரின்னு படுது,” பிரணவ்.
“அதோட அஷ்மிதாவுக்கு தார வார்த்துக் கொடுக்கிற இடத்தில் பிரணவ் நிக்கனும் விருப்பம். அதுக்கு பிரணவ்வுக்கு கல்யாணம் ஆகியிருக்கணும். ஒரே நேரத்தில் ரெண்டு கல்யாணம் அப்படிங்கும்போது இது சாத்தியமில்லையே” என்று எடுத்துக் கூறினான் உதயன்.
மகளின் விருப்பத்திற்கு இப்போதே முக்கியத்துவம் அளிக்கும் உதயனை அக்கணம் நிரம்பவே பிடித்தது பிரணவ் குடும்பத்தினருக்கு.
“பெத்தவங்க இருக்கும்போது அதெப்படி அண்ணன் தாரவார்த்துக் கொடுக்க முடியும். ஊர் கண்டதை பேசும்” என்று குமரி சொல்ல, “ஊர் சொல்லும்முன்ன நீங்க சொல்லிடுவீங்க சொல்லுங்க” என்று வேகமாக திருப்பிக் கொடுத்தார் காமாட்சி.
“நல்லதா எதுவும் பேச மாட்டியா நீ?” பொறுத்து பொறுத்து பார்த்த ஜெயந்தன் பொறுமையிழந்து கடிந்து கொண்டார்.
“இப்போ நான் என்ன இல்லாததை சொல்லிட்டேன். அம்மா அப்பா இருக்கும்போது, அண்ணங்காரன் செய்ய என்ன அவசியம்?” குமரியின் கேள்வியில் தான் அஷ்மிதா பற்றி சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்றை சொல்லாதுவிட்டதே பிரணவ் வீட்டாருக்கு நினைவு வந்தது.
ஒருவரையொருவர் கலங்கிப் பார்த்தனர்.
அஷ்மிதாவின் முகத்திலிருந்த புன்னகை முழுதாய் துடைக்கப்பட்டிருக்க… உதயன் மனம் என்னவோ என்று தவித்துப் போனது.