என் ஆயுள் நீயே 43
மாலை துவங்கும் முன் கிளம்பி, இரவு கவிழும் முன்னர் அனைவரும் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
வரும் வழியெல்லாம் குமரி வருத்தம் கொள்வதைப்போல அத்தனை பேசியிருந்தார். இருக்கும் மன நிலையில் யாருக்கும் அவரை கடிந்துகொள்ள முடியாது போனது. அதுவே குமரிக்கு சாதகமாகிவிட, எதையெதையோ பேசி அனைவரின் மனதையும் கலைக்க முயன்றார்.
“கொஞ்சம் சும்மா வாயேன் ம்மா.” தன்யாவே பொறுமை இழந்து கத்திவிட,
“என் வாயை மூட வச்சிடலாம். அதுக்காக உண்மை மறைஞ்சுப் போவுமா என்ன? நீ மொத அடங்கி இருடி” என்று மகளை அடக்கினார்.
உதயன் உடன் வந்திருந்தால் நிச்சயம் வாய் திறந்திருக்கவே மாட்டார். அவன் வந்ததைப்போல இப்போதும் தன்னுடைய தாரில் தனித்துவர, குமரிக்கு பேச சந்தர்ப்பம் அமைந்துவிட்டது.
வீடு வந்தும் அவரது பேச்சு நின்றபாடில்லை.
“இப்போ என்னங்கிற குமரி. எதுக்கு அதையே பேசிட்டு இருக்க?” கங்கா கூட பொறுமையை இழந்துவிட்டார்.
“இப்படியா தாய் தகப்பன் இல்லாத அனாதை பிள்ளையை நம்ம பிள்ளைக்கு பார்ப்பீங்க?”
“அத்தை…”
இவர்கள் வருவதற்கு முன்பு உதயன் வீடு வந்து சேர்ந்திருக்க… அவனின் இருப்பை உணராது குமரி ஆதங்கம் கொள்வது போன்று நாவில் நரம்பில்லாது வார்த்தைகளை விட, வீடே அதிர கர்ஜித்திருந்தான் உதயன்.
உதயன் எப்போதும் மிடுக்காய் வலம் வருபவன் தான். ஒருபோதும் குடும்பத்தினரிடம் கடுமையை காட்டியதில்லை. இன்று அதனை செய்ய வைத்திருந்தார் குமரி.
உதயன் பேசினால் குடும்பத்திற்குள் விரிசல் வந்துவிடுமே என்று பதறிய ஜெயந்தன்,
“அதுதான் அப்பா அம்மாவுக்கு ஈடா பெரியப்பா பெரியம்மா இருக்காங்களே குமரி. தேவையில்லாம வார்த்தையை விடாதே” என்று கண்டித்தார்.
“யார் இருந்தாலும் பெத்தவங்க மாதிரி வராதே! பெரியப்பன் குடும்பம் கடைசி வரை தாங்கி நிற்குமா? நம்ம பிள்ளைக்கு மாமனார் வீடுன்னு செய்யுற முறையெல்லாம் சரியா நடக்குமா என்ன?” என்றார்.
என்ன தான் தன்னுடைய இன்னொரு அண்ணன் மகனையே தன் மகளுக்கு பேசியிருந்தாலும், குமரிக்கு உண்டான ஆதாங்கம், ஏமாற்றம் தீரவில்லை. அந்த ஆதங்கம் தன் மகள் இருக்க வேண்டிய இடத்தில் வேறொரு பெண்ணா என்று அஷ்மிதாவை பார்த்தது முதல் அவளை குறைத்துக் காட்ட பல காரணங்கள் தேடிட, கிடைத்ததை கொத்தாகப் பற்றிக் கொண்டார். ஒருவித வன்மம் அவரே அறியாது அவரின் மனதை சூழ்ந்து கொண்டது.
“அதிகம் பேசாத குமரி.” அதட்டினார் ஜெயந்தன்.
“என்ன அதிகம் பேசுறாங்க? நம்ம வீட்டு சாமின்னு சொல்லுற பிள்ளைக்கு அனாதை பொண்ணை கட்டி வைக்கிறதா?”
அருகிலிருந்த அலங்கார பூச்சாடி தரையில் விழுந்து சுக்கு நூறாக சிதறியதில் தெரிந்தது உதயனின் கோபம்.
கோபத்தை வெளிப்படையாகக் காட்டிடாதவன். மௌனத்தினாலும் அழுத்தத்தினாலும் மட்டுமே காட்டிடுவான். இன்று குமரி பேசும் வார்த்தைகள் கொடுக்கும் கோபத்தை அழுத்தி வைத்திட முடியாது வெளிக்காட்டியிருந்தான்.
“தாலி கட்டியது முதல் அவள் என் மனைவி. அவளுக்கு வேற யார் செய்யணும்? எல்லாம் நான் செய்வேன். என் சொந்தமெல்லாம் அவள் சொந்தம். இனி அவளை பற்றி ஒரு வார்த்தை பேசினீங்கனாலும் என்னை பேசினதுக்கு சமம்” என்ற உதயன், கஜமுகனை அழுத்தமாகப் பார்த்தான்.
அவங்க இவ்வளவு பேசியும் அமைதியாக இருப்பதை குற்றம்சாட்டும் பார்வை அது.
“இன்னொரு முறை அந்த வார்த்தை சொன்னீங்க” என்ற உதயன், “கணவன் இருக்கும் பெண்ணை பெத்தவங்க இல்லாததுக்காக யாரும் அனாதைன்னு சொல்லமாட்டாங்க” என்று குமரியை மொத்தமாக அதிர வைத்துச் சென்றிருந்தான்.
இனி இதை சொல்லி குமரி ஒரு வார்த்தை பேசிட முடியுமா என்ன?
கஜமுகனுக்கு அஷ்மிதா மீதான உதயனின் அளவில்லாத நேசமும் புரிந்தது, எப்பொதுமில்லாது குமரி இப்போது இப்படி நடந்துக் கொள்வதற்கான காரணமும் விளங்கியது.
வரும் வழியிலேயே குமரியை அடக்கியிருக்க வேண்டுமென்று தற்போது வருந்தினார்.
என்ன என்று கிரகிக்கும் முன்னர் குமரி இத்தனை பேசி விடுவாரென்று அவர் மட்டுமில்லை, யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஏன் வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுத்துவிடும் காமாட்சி கூட, அஷ்மிதாவுக்கு பெற்றோரில்லை என்ற செய்தி தெரிந்தது முதல் ஒருவிதமான கனத்த மனதுடன் இருக்க, சுற்றம் உரைக்கவே இல்லை. உதயனின் கத்தலில் தான் அனைவரும் நடப்பு மீண்டனர் என்றே சொல்லலாம். ஆனால் அதற்குள் குமரி வார்த்தைகளைக் கொட்டியிருந்தார். அஷ்மிதா மீதான வெறுப்பைக் காட்டியிருந்தார்.
“எப்படி பேசிட்டுப் போறாங்க பாருங்க. இன்னும் வீட்டுக்குள்ள அடியே வைக்கல… அதுக்குள்ள முடிஞ்சிக்கிட்டா…” குமரி வராத கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
இவர் திருந்தப்போவதில்லை என்று மானசீகமாக நெற்றியில் தட்டிக்கொண்டு இன்பா அங்கிருந்து நகர்ந்திட, எழில், நனியும் கூட சென்றுவிட்டனர்.
மாறுபவராக இருந்திருந்தால் உதயன் பேசிய பேச்சிற்கே அவர் மாறியிருக்க வேண்டுமென்கிற எண்ணம் அவர்களுக்கு.
“வேண்டாம் குமரி என்னை கை நீட்ட வச்சிடாதே” என்ற ஜெயந்தன், “உன் வாயை மூடிட்டு இரு” என்றார்.
“நான் எதுக்கு என் வாயை மூடனும். நான் தூக்கி வளர்த்த பிள்ளை. என்கிட்ட கோபமா கூட முகத்தைக் காட்டாதவங்க, இன்னைக்கு அவ்ளோ பேசிட்டுப் போறாங்க, பார்த்துக்கிட்டு நிக்கிறிங்க. எவளோ ஒருத்திக்காக என்னை திட்டிட்டுப் போறாங்க… அமைதியா எனக்கென்னான்னு நின்னா என்ன அர்த்தம்?” என்ற குமரி, “வரதுக்குள்ளவே குடும்பத்தை பிரிச்சிடுவாள்” என்றார்.
“உன் வாய் தான் பிரிக்கப்போவுது பாரு” என்ற இளங்கோ, “கூட்டிட்டு கிளம்புங்க மச்சான்” என்றார்.
“என்னண்ணா வீட்டை விட்டு போன்னு சொல்லாம சொல்றியா?” அதற்கும் அர்த்தம் கண்டார் குமரி.
இளங்கோ நெற்றியில் தட்டிக்கொண்டு நகர்ந்துவிட,
“அப்படியும் சொன்னா தப்பிலைங்கிறேன்” என்றார் கஜேந்திரன்.
“ஓஹோ அந்தளவுக்கு ஆகிப்போச்சா… இன்னும் கல்யாணமே ஆகல. அதுக்குள்ள அவளை தாங்க ஆரம்பிச்சாச்சு” என்ற குமரி, “பார்த்து அண்ணி, வந்ததும் கொத்து சாவியை பிடுங்கி அவள் இடுப்புல சொருகிடப் போறாங்க” என்றார் கங்காவிடம்.
“தேவையில்லாம பேசாதீங்க” என்ற கங்கா, “உதயனை கட்டிக்கப் போற பொண்ணு. நாளைக்கு இந்த வீட்டோட மொத்தம் அவள் தான். அவளை பேசுறது நம்ம குடும்பத்தை அசிங்கபடுத்திக்கிறதுக்கு சமம் அண்ணி” என்றார்.
“மொத்தமா கவுந்தாச்சா?” குமரி கேலியாகக் கேட்க,
“வாயை மூடு குமரி. நானும் பேசக் கூடாதுன்னு அமைதியா இருந்தா வாய்க்கு வந்தபடி பேசிட்டே இருக்க. உனக்குள்ள இவ்ளோ வன்மம் இருக்கும் நினைக்கல. அந்தப் பிள்ளையை உனக்கு பிடிக்கலன்னா விடு. எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. இந்த வீட்டோட மருமகள். நனி, எழில் மாதிரிதான் அவளும். இனி ஒத்த சொல்லு நீ அதிகம் பேசினாலும் உனக்கும் எனக்கும் உறவு முறிஞ்சிப் போவும் சொல்றேன் பார்த்துக்கோ” என்று ஒரே மூச்சாக பேசி முடித்தார் லட்சுமி.
“இப்போ உங்க எல்லாருக்கும் நான் யாரோ ஆகிட்டேன்ல… இனி இந்த வீட்டுக்குள்ள அடி வச்சா ஏன்னு கேளுங்க” என்ற குமரி கஜமுகனை பார்க்க, அவரோ வெறுப்பாக முகத்தை திருப்பிக் கொண்டார்.
“என்னப்பா உங்களுக்கும் ஆவாதவளாகிட்டேனா?” குமரி அழுவதைப்போல கேட்டிட,
“உதயனை கட்டிக்கப்போற பொண்ணு உனக்கு மகள் ஸ்தானம்ன்னு புரியலையா?” என்று கேட்டவர், “இது நல்லதுக்கில்லை. யாருன்னு தெரியாதவங்களா இருந்தாலும், அப்பா அம்மா இல்லைன்னு தெரிஞ்சா மனசு தானா வேதனைப்படும். ஆனால் நீ… எங்க வளர்ப்புக்கே அர்த்தமில்லாம பண்ணிட்டியே” என்றார்.
“உங்களுக்கெல்லாம் என்னாச்சு? யாரோ ஒருத்திக்காக என்னை குறை சொல்லிட்டு இருக்கீங்க? இல்லாததையா நான் சொன்னேன். என்ன தான் சொந்தமா நினைச்சு வளர்த்தாலும், சொந்த பொண்ணாகிடமாட்டாள்” என்று குமரி சொல்ல, கஜமுகன் பார்த்த பார்வையில் ஜெயந்தன் குமரியின் கையை பிடித்து இழுத்துச் சென்றார்.
________________________
அறைக்குள் வந்துவிட்டிருந்தாலும் உதயனுக்கு கீழே நடந்த அத்தனை பேச்சும் நன்றாகவே கேட்க செய்தது.
‘தான் பேசியதற்கு மேலவா கடிந்துகொள்ள முடியும்?’ இதற்கு மேல் பேசினால் அது அவனது தரத்திற்கு அழகல்லவே. அமைதியாக முடியாது மனதை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“உதயா?” வாயிலில் கங்காவின் குரல் கேட்கவே, தன்னை சாதாரணமாகக் காட்டிக்கொண்டு அவரை உள்ளே அழைத்தான்.
“வாங்கம்மா.”
கங்காவின் பின்னாலே காமாட்சியும் வந்தார்.
“வருத்தப்படுறியா கண்ணு?”
கங்கா மகனின் தாடை பற்றி வினவ,
“அத்தை ஏன் ம்மா இப்படியெல்லாம் பேசுறாங்க” என்று கலங்கிப் பார்த்தான் உதயன். சிறு வயதில் கூட இப்படி அவனை பார்த்த நினைவில்லை பெண்கள் இருவருக்கும்.
“யாத்தே!” என்று பதறிய கங்கா, மகனின் முகத்தை தன் மார்போடு அணைத்துக் கொண்டவராக, “என் வீட்டு ராசாவை கண் கலங்க பார்க்க வச்சிட்டாளே” என்று அவரும் கண்ணீர் சிந்திட…
“இந்தா அக்கா அங்க நகருங்க. பிள்ளை எதோ வேதனைப்பட்டா… தேத்தாம, கூட சேர்ந்து நீங்களும் கலங்குவீங்களோ” என்று கங்காவை தள்ளி நிறுத்தினார் காமாட்சி.
குமரியின் அனாதை என்கிற வார்த்தை அவனை அதிகம் வருத்தியிருக்கிறது என்பது புரிந்தது.
“உங்க அத்தை கிடக்கிறா தம்பி. அவ பேச்செல்லாம் மனசுல வச்சுக்கிட்டா நமக்குத்தான் வலி. இப்போ என்ன, அஷ்மி இந்த வீட்டு மருமகள் இல்லை… அவளை மகளா தாங்க நான் அக்கா, மாமா எல்லாம் இருக்கோம். உங்க வருத்தம் மொத்த குடும்பத்தையும் சாய்ச்சிப்புடுமே! இப்படி சொணங்கி எல்லாரையும் தவிக்க வச்சிடாதீங்க தம்பி” என்று உதயன் முகத்தை தன் புடவை முனை கொண்டு அழுந்தத் துடைத்து விட்டார் காமாட்சி.
“நீங்கலாம் இருந்தும் பேச வச்சிட்டிங்க தானே?” அன்னையரிடம் வலியில் சிறுவனாய் மாறிப்போயிருந்தான்.
“அஷ்மிக்கு பெத்தவங்க இல்லைங்கிறதை ஜீரணிச்சு வெளிய வரதுக்குள்ள குமரி இவ்ளோ பேசிட்டா தம்பி” என்ற காமாட்சி, “நல்லவேளை அங்க வச்சி இந்த மாதிரி எதுவும் பேசாம இருந்தாங்களே. அந்த குடும்பமே வாடிப் போயிருக்கும்” என்றார்.
“அது ஒன்னு தான் நிம்மதி” என்ற கங்கா, “குமரி இனி இப்படி பேசாம பார்த்துக்கிறோம் உதயா” என்றார்.
குமரி இதற்கு மேல் தான் பல ஆட்டம் ஆடுவார் என்பது அறியாது ஆறுதல் பட்டுக் கொண்டிருந்தனர்.
“புள்ளைகிட்ட பேசுனீங்களா தம்பி?”
“பேசணும் சித்தி.”
“பேசு கண்ணு. இந்த விஷயம் சொல்லும்போது புள்ளை முகமே கசங்கிப் போயிருந்துச்சு. அவ்ளோ கலையா சிரிச்சிக்கிட்டே இருந்த முகம் சட்டுன்னு கூம்பிப் போச்சு” என்ற கங்கா, “அஷ்மி நெம்பர் எனக்கு அனுப்பிவிடு கண்ணு, நானும் உன் சித்தியும் அப்பப்போ பேசிப்போம்” என்றார்.
“சரிம்மா” என்ற உதயன் வாயிலில் நிழலாட யாரென்று பார்க்க, கஜமுகன் நின்றிருந்தார்.
“வாங்க தாத்தா” என்று உதயன் அழைக்க, அவரைத் தொடர்ந்து இளங்கோ, கஜேந்திரன், லட்சுமி பாட்டியென அனைவரும் வந்தனர். நனியிதழ், இன்பா, எழிலும் கூட வந்து உதயன் கைகளைப்பற்றி அமர்ந்துகொள்ள, அனைவரின் வருகைக்கான காரணம் புரிந்து…
“இப்போ நான் ஓகே தான். எந்த வருத்தமும் இல்லை” என்றான்.
“எப்பவும் உங்களை இப்படி பார்த்தது இல்லையா?” என்று அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாது கஜமுகன் இழுக்க, “அதான் சரியாகிட்டேன் சொல்றாங்கல்ல, அப்புறமும் என்ன நடந்ததையே பேசிட்டு” என்று கணவரை அதட்டினார் லட்சுமி.
அதில் அனைவரிடமும் லேசான சிரிப்பு பரவியது.
“அங்க அஷ்மி என்ன கவலைப்பட்டுட்டு இருக்கோ. வீடியோ கால் பண்ணுங்க. நாம எல்லாரும் ஒண்ணா பேசினா ஆறுதலா இருக்குமே” என்று இளங்கோ சொல்ல, “நல்ல ஐடியாப்பா” என்றாள் நனியிதழ்.
“பெரியப்பா உங்களுக்கும் சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகுது” என்று எழில் சொல்ல, “வாலு” என்று கஜேந்திரன் மகளின் தலையில் வலிக்காது கொட்டினார்.
உதயன் என்பவன் ஒருவனுக்காக மொத்த குடும்பமும் புதிய உறவை தங்கள் கூட்டிற்குள் பாசமாய் பிணைத்துக்கொண்டனர்.
உதயன் காணொளி அழைப்பு விடுக்க, திரை நிறைத்த மொத்த குடும்பத்தையும் கண்டு வார்த்தையில் வடிக்க முடியா உணர்வின் பிடியில் நெகிழ்ந்து பார்த்தாள் அஷ்மிதா.