என் ஆயுள் நீயே 44

என் ஆயுள் நீயே 44

அஷ்மிதாவின் பரிதவிப்புகள் நிறைந்த பார்வை… கண்ட கணம் உதயனின் இதயத்தை கசக்கிப் பார்த்தது.

எத்தனை பேர் சுற்றியிருந்தாலும், உறவுகளாக அரவணைத்துக் கொண்டாலும், பெற்றோர் இல்லாத சோகம் ஏக்கங்கள் நிறைந்தவையாயிற்றே!

“எனக்கு இரண்டு மகன். இரண்டாவது பையன் இப்போ உயிரோடில்லை. மருமகளும் அவன்கூடவே” என்று ராகவன், அன்றைய சோகம் இன்றும் கொஞ்சமும் குறையாது சொல்லிட, அருகிலிருந்த கஜமுகன் அவரின் கரத்தை அழுந்த பற்றிக் கொண்டார்.

உதயன் அஷ்மியின் முகம் பார்த்தே நின்றிருக்க…

ராகவன் சொல்லாது நிறுத்திய ஒன்று அவனுக்கு விளங்கியது.

அக்கணம், “உனக்கு எல்லாமாவும் நானிருக்கிறேன்” என்று சொல்லி, அவளை இழுத்து தன் மார்புக்குள் அடைகாத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணம் எழ, முடியாத சூழலை வெறுத்தான் என்று தான் சொல்லவேண்டும்.

“என் தம்பி பொண்ணு தான் அஷ்மி” என்று விஜயன் கூற, விமலா துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, “அவள் என் பொண்ணு” என்றார் தழுதழுப்பாக.

“அண்ணா…” ஒற்றை கண்ணிலிருந்து நீர் உருள தவிப்புடன் கரம் நீட்டி பிரணவ்வை அஷ்மி அழைத்திட…

அவளின் இரு புறமும் ஓடி வந்து தாங்கி நின்றனர் பிரணவ், ஆர்யன்.

இந்த விஷயம் நனியிதழுக்கே இப்போதுதான் தெரியுமென்பது அவளது உறைந்த பார்வையிலேயே தெரிந்தது.

ரீமாவும் அஷ்மியின் அருகில் சென்று தோளோடு அழுத்திக் கொடுக்க…

“அஷ்மி என்னோட முதல் குழந்தை. அவள் கல்யாணத்தில் அப்பா ஸ்தானத்தில் நான் நிற்க இப்போ யாரும் தடை சொல்லமாட்டிங்களே?” என்று கலங்கிவிட்ட குரலில் குமரியை பார்த்துக்கொண்டே பிரணவ் கேட்டிட…

“இஷ்டம் போல செய்யுங்க மாப்பிள்ளை. யாரென்ன சொல்றா நான் பார்த்துக்கிறேன்” என்று லட்சுமி பாட்டி சொல்ல… பெண்கள் ஆறுதலாக அஷ்மியை தங்களோடு நிறுத்தி அளவளாவிட, உதயனுக்கு அஷ்மியிடம் பேசிட வாய்ப்பு கிட்டவில்லை.

நனியிதழ், ரீமா, எழில், தன்யா என நால்வரும் அஷ்மியை சிரிக்க வைத்திட என்னென்னவோ பேசிட, இங்கு பெரியவர்கள் அனைவரும் கலந்துப்பேசி, முதலில் பிரணவ் மற்றும் நனியிதழின் திருமணத்திற்கு நாள் பார்த்திருந்தனர்.

வரும் தைப்பூசத்தன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைத்து இரு ஜோடிகளுக்கும் ஒன்றாக நிச்சயம் செய்ய முடிவெடுத்திட உதயன் குடும்பம் அங்கிருந்து கிளம்பியது.

கிளம்பும் போது அனைவரின் முன்னிலையிலும் உதயனால் அஷ்மியிடம் பேசிட முடியாது போனது.

ஏக்கம் சிந்தும் அவளின் பார்வையை கடந்திட முடியாது, கண்களால் அரவணைத்து, சுவாசத்தால் ஆறுதல் அளித்து சிறு தலையசைப்பில் விடைபெற்றிருந்தான்.

அப்போது அவள் பார்த்த பார்வை உதயனின் உயிரையும் சுருட்டியிருக்க… எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்றே தெரியாத வேகத்தில் வந்து சேர்ந்திருந்தான்.

வரும் வழியிலேயே அவளுக்கு அழைத்து பேசிட நினைத்தாலும், அவளுடன் பேசிவிட்டு கனத்த மனதோடு வீடு வந்து சேர முடியாதென்று நினைத்து வீடு வந்தவன். வந்ததும் அஷ்மிதாவுக்கு அழைப்பு விடுக்க முயன்ற நேரம் தான் குமரி பேசி வைத்தது எல்லாம்.

மொத்தமாக உருக்குலைந்து போனான்.

உதயன் வாடுவது பொருக்காது அனைவரும் அவனை மடித்தாங்கிட, அவனென்றால் அவனில் பாதியாகப்போகும் அஷ்மிதாவும் தானே, இனி அவளின்றி அவ்வீட்டில் எதுவுமில்லையே! உடனே அஷ்மிதாவை காணொளி அழைப்பில் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

அனைவரும் அலைபேசி திரையில் பதிந்திட முடியாதென்று, தொலைக்காட்சியில் இணைத்திருந்தான்.

மொத்த குடும்பமும் ஒரே திரையில். பார்க்க பார்க்க அஷ்மியின் கண்கள் பனிக்கும் போலானது.

“ராசாத்தி இப்படி சுணங்கி முகம் வச்சிருக்கலாமா?” என்று லட்சுமி பாட்டி ஆரம்பிக்க, ஒவ்வொருவராய் ஆதுரமாக, அன்பாய், கனிவாய், கலாட்டாவாகப் பேசிட நேரம் நீண்டது.

உதயன் வீட்டினர் சென்றதும் அறைக்குள் வந்து சுருண்டு படுத்தவள் தான். பிரணவ், ஆர்யன், மற்றவர்கள் என அனைவரும் ஒவ்வொருவராய் வந்து பார்க்கும்போதும் உறங்குவதைப் போல கண்களை மூடிக்கொண்டாள்.

என்னதான் சிறு வயதில் நேர்ந்த பெரும் இழப்பாக இருந்தாலும், இல்லை எனும் நிஜம் வதை தானே! இழக்க வேண்டிய உறவுகளா அவர்கள். அவர்களுடனான பொழுதுகள் நினைவில் இல்லையென்றாலும், பெற்றோர் எனும் தாக்கம் போதுமே! மொத்தமாக உடைந்திருந்தாள்.

நேரம் பல சென்று அசையாது படுத்திருக்க, உதயனிடமிருந்து அழைப்பு.

தான் தவித்து நின்ற கணம் தனக்கு இணையாக தன் சோகம் கடத்தி பார்த்தவனின் முகம் நினைவுக்கு வர, அவனுக்காகவே அழைப்பை ஏற்றிருந்தாள்.

ஆனால் மற்ற யாவரும் தன் கவலைப்போக்க இத்தனை மெனக்கெடல் செய்து உரையாடுவர் என்று எதிர்பார்க்கவில்லை.

கவலைகள் நிரம்பியிருந்த முகம் சில நிமிடங்களில் ஒளி கூடி புன்னகையில் நிரம்பிட, உதயன் அழைப்பை ஏற்றது முதல் அவளின் முகத்தை, அதில் பந்தாடும் விழிகளை மட்டுமே அவதானித்துக் கொண்டிருந்தான். ஒரு வார்த்தை பேசவில்லை.

பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் மாற்றி மாற்றி பேச, பேசுவதில் உள்ள சுகம் அன்று தான் உணர்ந்தாள்.

திடீரென அஷ்மியின் அறையிலிருந்து பேச்சுக்குரலும், சிரிப்பு சத்தமும் கேட்க, பிரணவ், ஆர்யன், விஜயன், விமலா, ராகவன் என ஒவ்வொருவராக அவளுடன் வந்து இணைய, பேச்சுக்களின் இனிமை கூடியது.

“புள்ள முகம் வாடி கிடந்துச்சே. செத்த பேசி சிரிக்க வைப்போம்முன்னு போனு போட்டோம் விமலா. ராசாத்திக்கிட்ட பேசுனதுல நேரம் ஓடிப்போச்சு” என்று லட்சுமி பாட்டி விமலாவிடம் விவரம் சொல்லி, பேச்சை முடித்துக்கொண்டு கஜமுகனுடன் எழுந்து செல்ல…

“சாப்பாட்டு நேரம் வந்ததே தெரியலங்க அண்ணி. அத்தை, மாமாவுக்கு சாப்பாடு கொடுக்கணும்” என்று கங்காவும், கமாட்சியும் விடைபெற்றனர்.

பெரியவர்கள் ஒவ்வொருவராக எழுந்து சென்றிட, அந்தப்பக்கம் விஜயன் கூட நெகிழ்ந்திருந்தார்.

தங்கள் மகளின் சிறு வாட்டம் கூட பொறுக்காது அரவணைத்தவர்களை பார்க்கையில் அத்தனை நிறைவு அவருள்.

“ரொம்ப சாந்தோஷம் மாப்பிள்ளை” என்று விஜயன் சென்றிட, விமலாவும் கண்களை துடைத்துக் கொண்டு வெளியேறியிருந்தார்.

“நம்ம பக்கம் சொந்தம் சொல்லிக்க யாருமில்லை மாப்பிள்ளை. இப்போ மொத்த சொந்தமும் ஒரே நேரத்தில் கிடைக்கவும் சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போறாங்க” என்ற ராகவன், “உங்க காலத்துக்கு பின்னவும் ஒத்துமையா இருக்கணும்” என்றுகூறி எழுந்து சென்றார்.

“தேங்க்ஸ் மாமா” என்ற பிரணவ் தங்கையை கழுத்தோடு கையிட்டு நெருக்கியிருந்தான்.

“அண்ணி செம கேடி நீங்க.” திடீரென எழில் அப்படி சொல்லவும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

“என்ன எழில்?” என்று நனியிதழ் கேட்க, திரையில் எழில் விரல் சுட்டி காண்பிக்க, அஷ்மியின் அறையிலிருக்கும் உதயனின் புகைப்படம் அது.

“இன்பாண்ணா லாஸ்ட் இயர் உதயாண்ணா பர்த்டேக்கு வாங்கிக் கொடுத்த சர்ட். இன்னும் எங்களுக்கு தெரியாதது நிறைய இருக்கும் போலவே” என்று எழில் கிண்டல் செய்ய, “நீ நோட் பண்ண வரை போதும்” என்று அவளின் காதில் வலிக்காது திருகிய உதயன், “கிளம்பு நீ” என்றிருந்தான்.

“டேய் மச்சி… அங்க நீங்களும் வெளியில் போங்க. இல்லைன்னா நம்ம தல எழிலை சொன்ன மாதிரி நம்மளையும் சொல்லிடுவாங்க” என்று இன்பா உதயனை பார்த்தபடி பிரணவ்விடம் சொல்ல, அட்டகாசமான சிரிப்பு அவ்விடம் சூழ்ந்தது.

“போதும்டா டேய்…” என்று உதயன் இன்பாவின் முதுகில் அடி வைக்க…

“இதோ போயிட்டேன்” என்று எழில் பின்னாடியே அவனும் ஓடிவிட்டான்.

“நீங்க ஓகே தான?” நனியிதழ் நின்று கேட்க, அவளின் உச்சியில் கை வைத்து அழுத்தம் கொடுத்த உதயன், கண்கள் மூடி திறந்தான்.

“இன்னைக்கு நாங்க பார்த்த செல்வா ரொம்ப புதுசு” என்ற நனியிதழ், “நந்தி மாதிரி இன்னும் எதுக்கு உட்கார்ந்து இருக்கீங்க. எங்க அண்ணா உங்க தங்கச்சியை ஒன்னும் செய்யமாட்டாங்க… எழுந்து போங்க” என்று பிரணவ் மற்றும் ஆர்யனை நன்கு வாரிச் சென்றாள்.

“அப்புறம் மாம்ஸ்… என்னவாம்? ரொம்ப சைலண்ட்டா இருக்கீங்க?” பிரணவ் கேட்க, “அதானே” என்று ஆர்யன் ஒத்து ஊதினான்.

“அவங்க எப்பவும் சைலண்ட் தான்டா” என்று அஷ்மிதா சொல்ல,

“நாங்க பார்த்த உதயன் ரொம்பவே நாட்டி ஆச்சேம்மா” என்று பிரணவ் கண்ணடிக்க, ஆர்யன் அவனுடன் இணைந்து ஒற்றை கை அடித்தான்.

“நான் போங்க சொல்லணுமா மச்சான்ஸ்?” உதயன் கூற,

“க்ளீன் போல்ட்” என்றான் ஆர்யன்.

“சங்கீத ஸ்வரங்கள்…” என்று பிரணவ் பாட, “அடேய்… போடா” என்று உதயன் வாய்விட்டு சிரித்தான்.

“குட்நைட் மாம்ஸ்.” இருவரும் வெளியேறிடும் முன்பு, “இன்னும் சந்தனம் போகலையா மாமா?” எனக் கேட்டு ஓடியிருந்தான்.

ஆர்யன் சொல்லியது அஷ்மிதாவுக்கும் புரியவில்லை. உதயனுக்கும் என்னவென்று தெரியவில்லை.

மீண்டும் அறைக்குள் எட்டிப்பார்த்த ஆர்யன், “உங்க நெத்தியிலிருந்த சந்தனம், மாமா ஷர்ட் கையில். நீங்க பேசிட்டு வெளிய வரும்போதே நோட் பண்ணிட்டேன். மாமாவே பார்த்து துடைச்சிடுவார் நினைச்சேன்” என்று சொல்லிவிட்டு மறைந்தான்.

அப்போதுதான் உதயனுமே அதனை கவனித்தான். இருவரும் அறையில் தனித்து பேசிக் கொண்டிருந்தபோது, அவனது கரம் பற்றி, புஜத்தில் நெற்றி முட்டி அவள் நின்ற தருணம் ஒட்டியிருக்க வேண்டுமென்று புரிந்தது.

அந்நேர இதம் மனதில் எழும்ப உதயனின் பார்வை மாற்றம் கொண்டது.

அந்த தொலைக்காட்சியின் பெரிய திரை நிறைத்த அஷ்மிதாவின் உருவத்தை முழுதாய் உள் வாங்கினான்.

அவளுக்கும் என்ன பேசுவதென்று தெரியாது, இமைகள் படபடக்க அவனை பார்த்திருந்தாள்.

அவனின் பார்வையில் அவள் மெல்ல தொலைந்து கரைந்து கொண்டிருக்க… ஒரு நிலையில் மனதின் குறுகுறுப்பு ஆழம் கொள்ள…

“உதய்… பிளீஸ்” என்று முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள்.

“சாரி மாத்தலையா அஷ்மிதா?”

“ஹான்…” கையை விலக்கியவள்,

“அது… நீங்க போனதும் தூங்கிட்டேன். கால் பண்ணவும் தான் எழுந்தேன்” என்றாள்.

“ம்ம்… அஷ்மிதா என்கிட்ட எதுவும் மறைக்கக் கூடாதே!” என்றான்.

“நான் எதுவும்…”

“நிஜமா?” உதயன் புருவம் உயர்ந்து தாழ்ந்தது.

“இப்போ நான் ஓகே தான்.”

“ம்ம்… அப்புறம் அஷ்மிதா?” அவனது குரலே அவனின் தவிப்புகளைக் கூட்டிக் காட்டியது.

“அப்பப்போ எனக்கு இது பழகிப்போச்சு. நினைவு வரும்போதெல்லாம்… அந்த நேரம் மட்டும் தான். அப்புறம் நார்மல் ஆகிடுவேன்” என்று அஷ்மிதா சொல்ல,

“இனி பழக வேண்டாம். அழனுமா அழலாம். ஆனால் என் பக்கம் வந்துட்டு அழு. துடைச்சிவிட நானிருக்கேன். தவிச்சு நின்னுயே… சத்தியமா முடியலடி” என்று எழுந்துவிட்டவன், முகத்தை அழுந்த தேய்த்து, பின்னங்கழுத்து வருடியவனாக அறையில் இங்குமங்கும் நடந்தான்.

அவனுக்கே புரியவில்லை. அவள் மீது இப்படி நேசம் கொண்டது எப்போதென்று.

அவனின் நிலை அவளுக்கு விரிந்த புன்னகையை கொடுத்தது. அவளுக்காக அவன் மருகி கரைகிறான். இதைவிட காதலில் வேறென்ன வேண்டுமாம்?

“பிடிச்சிருக்கு…”

அஷ்மிதா சொல்லவும், நின்று இடையில் கைக்குற்றி அவளை பார்வையால் துளைத்தான்.

“இந்த உதய்… இப்போ நான் மட்டும் பார்க்குற உதய்… ரொம்ப பிடிக்குது” என்றாள்.

“ஆஹான்…” என்று மீண்டும் அமர்ந்தான்.

“எங்கேஜ்மெண்ட் அன்னைக்கே தாலி கட்டி கூட்டிட்டு வந்திடவா?”

அவனின் அமார்த்தலான கேள்வியில் அவளுக்கு உதறல் எடுத்தது.

ஆமென்று தலையை அசைத்துவிட்டால், செய்தாலும் செய்துவிடுவான்.

“இப்போவே கூட்டிட்டு வந்திடனும் தோணுது.”

அவனது பேச்சில் அப்படியொரு திகைப்பு அவளிடம்.

தன்னையறியாது அவளுக்கான, அவளின் கசங்கிய முகம் கண்டதால் உண்டான தவிப்புகளை அவளிடம் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறான்.

அவள் தான் அவனது அன்பில் திண்டாடினாள். திண்டாடுகிறாள், திணறிப்போகிறாள் எனத் தெரிந்தும் மேலும் மேலும் தன் தவிப்புகளை வார்த்தைகளால் சிந்தாமல் சிதறாமல் அவளிடம் சேர்பித்துக் கொண்டிருந்தான்.

“சொன்னனே அஷ்மிதா… உதயன் அஷ்மிதாகிட்ட தான் உதயனா இருக்கணும்.” அவன் இவ்வாறு சொல்லியதற்காகவே, அவனுள் முழுதாய் தொலைந்து கொண்டிருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top