என் ஆயுள் நீயே 45
விடியல் அத்தனை இதமாக இருந்தது.
காதலினால் உருவாகும் புதிதான உணர்வுகள் மனதை மயிலிறகால் வருடும் மென் இன்பம் கொடுக்க, உதயனின் முகத்தில் நிலையாக நிலைத்துவிட்டது இளம் முறுவல்.
காலை அவன் எழும் போதே… அஷ்மிதாவிடமிருந்து தகவல் வந்திருந்தது.
“குட் மார்னிங் உதய். ஹேவ் அ பிலசண்ட் டே!” குறுஞ்சிரிப்புடன் வாசித்தவன், மென் சிரிப்புடன் தன் அன்றாட பணிக்கான தயாராகினான்.
உதயன் வெளியில் செல்ல ஏதுவாகக் கிளம்பி கீழே வர…
“நிச்சயம் ரொம்ப பக்கமே வச்சாச்சு. நாளில்லை உதயா. நிச்சயப் புடவை எடுக்கணும். நாள் பார்க்கட்டுமாப்பா?” எனக் கேட்டார் கங்கா.
“பாட்டிக்கிட்ட கேட்டீங்களாம்மா?”
“அத்தை ரெண்டு நாளுல நல்ல நாள் ஒன்னு இருக்கு. அன்னைக்கு எடுக்கலாம் சொன்னாங்க தம்பி” என்று பதில் கொடுத்தார் காமாட்சி.
“அப்போ ஓகே சித்தி. பிரணவ் வீட்டுல அத்தைகிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு முடிவு பண்ணிக்கோங்க. அவங்களும் பட்டுவுக்கு எடுக்கணுமே” என்றான் உதயன்.
“அப்போ நாம அங்கையோ, இல்லை அவங்களை இங்கையோ வரவச்சு சேர்ந்து ஒண்ணா எடுத்திடலாமா?” என்றார் கங்கா.
“அவங்களுக்கு வசதிப்படுமா கேட்டுக்க கங்கா” என்று வந்து மகனின் அருகில் அமர்ந்தார் இளங்கோ.
“ம்ம் இப்போவே பேசிடுறேங்க” என்ற கங்கா, விமலாவுக்கு அழைத்தவராக தள்ளிச்செல்ல… உடன் காமாட்சியும் சென்றார்.
“எங்க உதயா, இறால் பண்ணைக்கா?”
“ஆமாம்ப்பா… உப்பளம் போகணும். அதுக்கு முன்ன அங்க கொஞ்சம் வேலையிருக்கு” என்ற உதயன், “அத்தை வரலையா பாட்டி?” எனக் கேட்டான். அங்கு கூடத்தில் சற்று தள்ளி அமர்ந்திருந்தவரிடம்.
“இந்நேரம் என்ன செய்தீங்க? எனக்கு இறால் தொக்கு பண்ணிக் கொடுங்க, மீன் கறி ஆக்கலையான்னு பத்து தரம் இதுக்கும் அதுக்கும் நடந்திருப்பா… இன்னைக்கு ஆளே காணோம்” என்று மகள் வராததற்கு வருத்தமாகக் கூறினாலும், “கொஞ்ச நாளுக்கு அவ தொட்டுக்கோ பட்டுக்கோண்ணு தள்ளியே இருக்கட்டும் சாமி” என்றார்.
“அது சரி வராதுங்க பாட்டி” என்ற உதயன், “நான் அத்தை வீட்டுக்கு போயிட்டு வரேங்க… நேத்து எதோ பேசத் தெரியாம பேசிட்டாங்க. அதுக்கு விட முடியுமா?” என்று எழுந்து கொண்டான்.
“அதெல்லாம் அங்க ஒன்னும் போக வேண்டாம்” என்று மிதமிஞ்சிய கோபத்தில், உதயனின் முகம் காணாது இன்பா சொல்ல…
“உனக்கு என்னடா ஆச்சு?” என்று வந்தார் கஜேந்திரன்.
“காலையில இங்க வரேன்னு ஓடி வந்த தனுவை போகக்கூடாதுன்னு தடுத்திருக்காங்க. மீறிப்போனா அம்மா இல்லைன்னு நினைச்சிக்கோ சொல்லியிருக்காங்க. அவ அழுதுகிட்டே போன் போட்டு சொல்றா” என்றான். முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு.
“நேத்து நடந்ததில் எதும் கோபமா இருக்கும் தம்பி. அதுக்காக நாமலும் முறுக்கிக்கணுமா?” என்று இளங்கோ இன்பாவின் முதுகில் மெதுவாகத் தட்ட,
“நேத்து யாரு அதிகம் பேசினது பெரியப்பா? பேசுறது எல்லாம் அவங்க பேசிட்டு… இப்போ கோபமா வேற இருப்பாங்களாமா?” என்றவன், “நீங்க போகக் கூடாதுண்ணா” என்றான் அடமாக.
உதயன் தன் தம்பியை அழுத்தமாகப் பார்த்து நின்றான்.
இன்னும் வேறெதுவோ இருக்கு. அதையும் மறைக்காது சொல் எனும் பார்வை.
“ம்ப்ச்… விடுங்கண்ணா” என்று முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்த இன்பா, “டாக்ஸ் க்ளியர் பண்ணனும். ஆடிட்டர் வர சொன்னார். போயிட்டு வரேன்” என்று நகர்ந்தான்.
“என்னன்னு முழுசா சொல்லாம நீபாட்டுக்குப் போனா என்னடா அர்த்தம்?” கஜேந்திரன் செல்லும் மகனை தடுத்தார்.
“சொல்ல எதுவுமில்லைன்னு அர்த்தம் ப்பா” என்ற இன்பா, தன் அண்ணனை அழுத்தமாகப் பார்த்துச் சென்றான்.
நின்றிருந்த உதயன் இருக்கையில் அமர்ந்திட, “குமரி வீட்டுக்குப் போகலையா?” எனக் கேட்டார் இளங்கோ.
“போகக்கூடாதுன்னு சொல்லிட்டுப் போறானே… எங்க போறது” என்ற உதயன், தம்பியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்ததில் தெரிந்தது அவர்களின் அளவிட முடியா ஒற்றுமை.
“சின்னபையன். அவன் கிடக்குறான். அவன் பேச்செல்லாம் ஒரு பேச்சா?” என்று கஜேந்திரன் சொல்ல, “நான் சொன்னா எல்லாரும் கேட்கிறீங்களே! உங்களுக்கு நான் சின்னவன் இல்லையா?” என்ற உதயன், “எதோ காரணமிருக்கு. வந்து சொல்லுவான். ரொம்ப நேரம் அவனால் மறைக்கவும் முடியாது” என்றான்.
“நான் வேணும்னா மாச்சானுக்கு போனை போட்டு வர சொல்லட்டுமா?” கஜேந்திரன் கேட்க, “வேண்டாம்” என்று மறுத்துவிட்டான் உதயன்.
“என்னவோ நடந்திருக்கு. சொல்லணும்னா இந்நேரம் மாமாவே வந்திருப்பார்” என்ற உதயன், “வேலையிருக்கே… பார்ப்போம்” என்று எழுந்து கொண்டான்.
அந்நேரம் கல்லூரி செல்ல எழில் கிளம்பி வர,
“நானே ட்ராப் பண்றேன் வா” என்றான் உதயன்.
“இன்பாண்ணா இல்லையா?” என்ற எழில், அனைவரின் முகத்தையும் பார்த்துவிட்டு, “என்ன எல்லாரும் சீரியஸ் மோடில் இருக்காங்க?” என்று உதயனிடம் மெதுவாக வினவினாள்.
“நத்திங்” என்ற உதயன், “போவோமா?” என்றான்.
“ம்ம்” என்ற எழில், “அக்கா வரல” என்றாள்.
கங்காவும், காமாட்சியும் விமலாவிடம் பேசிவிட்டு வர,
“நீ நனி கிளம்பியாச்சா பாரு?” என்று எழிலை அனுப்பி வைத்தான்.
“அந்த தேதி ஓகேவாம் தம்பி” என்ற காமாட்சி, “அவங்களே இங்க வரேன்னு சொல்லிட்டாங்க. ஒரே இடத்தில் ரெண்டு பேரும் பிடிச்ச மாதிரி எடுத்துக்கட்டுமாம்” என்றார்.
“ம்ம்” என்ற உதயன், “வாக்கிங் போன தாத்தா இன்னும் வரலையா?” எனக் கேட்டான்.
“வந்துட்டார் உதயா. அசதியா இருக்குன்னு சொன்னார். பயறு கஞ்சி கொடுத்தேன். குடிச்சிட்டு செத்த படுத்து எழுந்து வரேன்னு ரூமுக்குள்ள போயிட்டார்” என்றார் கங்கா.
அடுத்து உதயன் சென்று கஜமுகனை பார்த்து வரச்செல்ல, அவரோ உறங்கிக் கொண்டிருந்தார். அமைதியாக வந்துவிட்டான். நேற்றைய பயணத்தின் உடல் அலைச்சல் மற்றும், குமரியினால் உண்டான மன உளைச்சல் இரண்டாலும் சோர்ந்திருப்பார் என்று எண்ணிக் கொண்டான்.
அனைத்தும் சரியாக சென்று சொண்டிருந்தாலும், ஆங்காங்கே சிறு தடைகள் இருக்கத்தான் செய்தது. போறப்போக்கில் எதிர் கொண்டுவிடுவான். எளிதில் தீர்வும் கண்டுவிடுவான். ஆனால் நடக்கும் நேரம், கடப்பது என்று ஒன்றுள்ளதே!
குமரி என்னை நினைக்கின்றார், அடுத்து என்ன செய்யவிருக்கின்றார் என்பது தெரியவில்லை. ஆனால் இன்பாவின் மூலம் அவர் ஏதோ செய்ய இருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.
நனியிதழும் எழிலும் வர இருவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தான்.
செல்லும் வழியில் எழிலும் நனியும் பேசிக்கொண்டே வர, உதயன் அமைதியில் இருந்தான்.
அவன் வீட்டை விட்டு வெளியில் வரும்போது, குமரியின் வீட்டிற்குள் தரகர் சென்று கொண்டிருந்தார். அவனால் ஓரளவு விஷயத்தை யூகிக்க முடிந்தது.
ஆனால் நேற்றைய விஷயத்திற்காக குமரி அதற்குள் இப்படியொரு முடிவை எடுத்திருப்பாரா? குழப்பமாகவும் வந்தது.
இடையில் இன்பாவின் கோபம் விரவிய முகமும்.
உடனே இன்பாவுக்கு அழைத்து எங்கிருக்கிறான் எனத் தெரிந்து கொண்டு அழைப்பை வைத்திட,
அப்போதுதான் எழில் நனியிடம் “வந்தனாவை பெரியப்பா அடித்தாரே அது எதுக்கா இருக்கும்? காரணம் யாருமே சொல்லவே இல்லையே! அண்ணா நீங்க கேட்டீங்களா பெரியப்பாகிட்ட” என்று கேட்க, அவனும் அதனை மறந்து விட்டிருந்ததால் நினைவில் சுத்தமாக இல்லை.
வந்தனா எனும் நினைவு புள்ளி அளவாவது இருந்திருந்தாலும் அவனுக்கு அதைக் கேட்க வேண்டும் என்று தோன்றியிருக்குமோ என்னவோ? அவனது சிந்தையிலேயே அவள் இல்லை.
“தெரியல” என மட்டும் சொல்லிக் கொண்டான்.
“ஏதோ பெருசா சொல்லியிருக்காள். அதான் அப்பாவுக்கே அவ்வளவு கோபம் வந்திருக்கு” என்ற நனியிதழ், “நம்மளை வழி மறித்து என்னலாம் பேசினாள்” என்றாள்.
“லீவ் இட்” என்ற உதயன்,
நனியிதழின் அலுவலகம் வரவும் அவளை இறக்கிவிட்டு, “ஈவ்வினிங் எனக்கே கால் பண்ணுடா” என்று சொல்லி வண்டியை இயக்கியிருந்தான்.
“அண்ணா உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள் எழில்.
“ஆரி விஷயம் தானே?” என்று நேரடியாக அவள் சொல்ல நினைப்பதை கணித்துக் கேட்க, அவளின் விழிகள் அதிர்வில் விரிந்து கொண்டது.
“அண்ணா…”
“அவனே சொல்லிட்டான். அப்புறம் பார்ப்போம். எக்ஸாமில் கான்சன்ட்ரேட் பண்ணு. அவனும் உன்னை இதைப்பற்றி பேசி டிஸ்டர்ப் பண்ணமாட்டான்” என்றான்.
“அப்போ உங்களுக்கு ஓகேவா?” அவளிடம் எதிர்பார்ப்பு. அவனுக்கு தங்கையின் மனம் புரியாதா?
உதயன் அழுத்தமாகப் பார்க்க…
“சாரிண்ணா” என்று தலை கவிழ்ந்தாள்.
கல்லூரியில் வந்து இறக்கிவிடும் வரை இருவரிடமும் எவ்வித பேச்சுமில்லை.
“பை’ண்ணா.” எழில் வண்டியிலிருந்து இறங்கி நின்று சொல்ல…
“எனக்கு என்ன சொல்லணும் தெரியல எழில். ஆனால் எப்பவும் உங்க விருப்பத்துக்கு தடையா இருக்கமாட்டேன்” என்றான் உதயன்.
“புரியுது அண்ணா. உங்க பதில் தெரிஞ்சிட்டா கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம் நினைச்சேன்” என்றாள்.
“இன்னும் காலம் இருக்கேடா. உன் விருப்பத்தை தாண்டி என்ன செய்திடுவேன் நான்” என்ற உதயன் தங்கையின் கன்னம் தட்டி, கண் சிமிட்டினான்.
அதிலே அவளுக்கு உதயன் எண்ணம் புரிந்துவிட்டது.
“முன்னவே ரொம்ப பண்ணுவான். இனி ஆட்டம் ஓவரா இருக்குமே அண்ணா” என்றாள் எழில்.
“ஆரி எவ்வளவுக்கு சேட்டையோ, அவ்ளோக்கு பக்குவமானவனும். சூழலுக்கு ஏத்த மாதிரி நடந்துப்பான்” என்ற உதயன், புறப்பட்டிருந்தான்.
உதயன் தார் செல்ல…
“அவனைப்பற்றி முழுசா தெரியாம பேசுறீங்களே” என்று நின்ற இடத்திலிருந்தே எழில் புலம்ப…
“இங்கு நின்னு யாரை பார்த்திட்டு இருக்க?” என்று வந்தான் ஆர்யன்.
‘பேயை நினைச்சா பிசாசு வருமாம். அது எத்தனை உண்மை.’ அருகில் வந்தவனை பார்த்து ஈ என்று சிரித்து வைத்தாள்.
“எதோ உள்ள திட்டுறன்னு தெரியுது” என்ற ஆர்யன், “கிளாஸ் போகலையா?” எனக் கேட்டான்.
“நீயென்ன இப்போ தான் வர?” எழில் அவனுடன் இணைந்து நடந்தான்.
“வீட்டிலிருந்து இப்போ தான் வரேன். ஹாஸ்டல் போயிட்டு வரேன். நீ கிளாஸ் போ” என்றான்.
“சாப்பிட்டியா?” என்றவளுக்கு உதயனிடம் என்ன பேசினான் என தெரிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது.
எப்படி கேட்பதென்று அவள் தயங்கி நிற்க,
“ஓய்… கிளாஸ் போடி” என்று அவளின் தலையில் தட்டிச் சென்றான்.
அவளால் உதயன் பேச்சை மீறி இதுப்பற்றி ஆர்யனிடம் கேட்கவும் முடியவில்லை. ஆர்யன் தூரம் செல்லும் வரை பார்த்திருந்தவளுக்கு, அப்போதுதான் ஒன்று புரிந்தது. கடந்த சில தினங்களாகவே தன்னுடைய அருகில் வந்தாலே காதலென்று பிதற்றுபவன் இன்று அது குறித்து சிறு பார்வை கூட காட்டாது சென்றது.
“அண்ணா அட்வைஸ் பண்ணியிருப்பாரோ?”
மென்மையாய் சிரித்துக் கொண்டாள்.
வேலையிடம் வந்த பின்னரும் இன்பாவால் சாதரணமாக இருக்க முடியவில்லை.
தனு அழுதது, குமரி செய்யவிருக்கும் செயல் என அதிலே உழன்றவன், ஸ்டோரேஜிற்குள் கவனமில்லாது சென்றிட கதவு தானாக மூடிக் கொண்டது.
வெளியிலிருந்து மட்டும் திறக்கும் தானியியங்கி அமைப்புக் கொண்ட கதவு என்பதால், இன்பா அதனுள் மாட்டிக் கொண்டான். சில நிமிடங்கள் மட்டுமே அதனுள் சாதாரணமாக தாக்குப் பிடிக்க முடியும். நேரம் செல்ல செல்ல பொருட்கள் பதப்படுத்துவதற்காக செயற்கை குளிரூட்டிகள் மூலம் அங்கு உருவாக்கப்படும் அதிக குளுமையில் சுவாசிக்கவே சிரமம் ஏற்படும்.
ஒரு நிலையில் சுயம் உணர்ந்து, தன்னுடைய முட்டாள் தனம் புரிய, அலைபேசியை ஆராய்ந்தவனுக்கு அது அவனது கையில் இல்லை. அலுவலக அறை மேசை மீது வைத்தது நினைவு வந்தது.
நேரம் செல்ல மயங்கி சரிந்திருந்தான்.