என் ஆயுள் நீயே 46
இறால் பண்ணைக்கு வந்த உதயன், அன்றைய ஏற்றுமதிக்கு தயாராக இருக்கும் பெட்டிகளை சரிபார்த்துக் கொண்டிருக்க… ஆடிட்டர் சுகவனத்திடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க சார்.”
“இன்பாவை 11 மணிக்கு வர சொல்லியிருந்தேன். ஸ்டோரேஜ் போயிட்டு வந்திடுறேன் சொன்னாங்க, இன்னும் வரல. போன் போட்டாலும், எடுக்கலையே உதயன். எனக்கு பனிரெண்டு மணிக்கு ஒரு அப்பயின்ட்மெண்ட் இருக்கு” என்றார்.
“எதும் வேலையா மாட்டியிருப்பான் சார். நான் வரட்டுமா?” எனக் கேட்டான்.
“வாங்க உதயன். ஒரு கையெழுத்து வேணும்” என்றார் சுகவனம்.
ஆடிட்டர் அலுவலகம் நோக்கிச் சென்ற உதயன், பாதி வழியிலேயே மனமெல்லாம் என்னவோ போலிருக்க, அவன் இன்பாக்கு அழைத்த நேரம் கூட ஸ்டோரேஜ் ஆபீஸில் இருப்பதாகவும், ஆடிட்டர் ஆபிஸ் கிளம்பப் போவதாகவும் இன்பா சொல்லியிருந்தான்.
எதோ பாரம் அழுத்துவது போலிருக்க… வண்டியை சாலை ஓரம் நிறுத்திவிட்டான்.
அலைபேசியை எடுத்து இரண்டு முறை இன்பாவுக்கு அழைக்க, முழு அழைப்பும் சென்று நின்றது.
அங்கிருக்கும் மேலாளருக்கு அழைத்தான்.
“இன்பா இருக்காங்களா?” என்று உதயன் கேட்க,
“இன்பா சார் ஆடிட்டர் ஆபிஸ் போறேன்னு கிளம்பினார் சார்” என்று சொல்லிக் கொண்டே இருந்தவர், “சார் மொபைல் இங்கவே விட்டு போயிருக்காருங்க. அவரோட டேபிலில் இருக்கு” என்று அப்போதுதான் பார்த்தவராகக் கூறினார்.
“ம்ம்… ஸ்டோரேஜ் டைம் க்ளோஸ் பண்ணிட்டிங்களா?” என அடுத்தக் கேள்வி கேட்ட உதயன்,
“இன்னைக்கு ஷிப்பிங் முடிஞ்சதும் இன்பா சார் லாக் பண்ணிட்டார் சார்” என்ற மேலாளரிடம், “வன்ஸ் இன்பா இருக்காங்களா செக் பண்ணுங்க. பண்ணிட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்ற உதயன், கிடங்கு இருக்கும் பக்கம் வண்டியை திருப்பியிருந்தான்.
சில நிமிடங்களில் உதயனுக்கு அழைத்த மேலாளர்…
“இன்பா சார் வண்டி இங்கதான் நிக்கிதுங்க. ஆனால் அவரை காணோம்” என்றார்.
“நான் அங்கதான் வந்திட்டு இருக்கேன்” என்ற உதயன் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.
ஆடிட்டர் அலுவலகம் செல்ல கிளம்பும் நேரத்தில், அங்கு பதப்படுத்த வைக்கப்பட்டிருக்கும் தங்களுடைய பொருட்களின் அளவீட்டை கேட்டு ஒரு நிறுவனம் அழைத்திட, ஏற்கனவே கடுப்பிலிருந்த இன்பா எரிச்சலோடு அதனை சரிப்பார்க்க, பதப்படுத்தப்படும் அறைக்குள் செல்ல, நினைவின்றி கதவினை நிலை நிறுத்தாது உள்ளே சென்றிட, கதவு தானாக மூடிக்கொண்டது.
வேலை முடித்து வந்து பார்த்த போதுதான், தான் செய்த மடமை புரிய, அலைபேசியும் இல்லாது அப்படியே அமர்ந்துவிட்டான்.
யாரேனும் தானாக வந்து திறக்க வேண்டும். உள்ளிருந்து எவ்வளவு கத்தினாலும் வெளியிலிருப்போருக்கு சின்ன சத்தம் கூட கேட்காது.
கத்தியும் பிரயோஜனமில்லை என்ற நிலை. என்ன நடந்தாலும் சூழலை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
முடிந்தளவு ஆழ்ந்து சுவாசித்து நேரத்தைக் கடத்தியவனால் ஒரு கட்டத்திற்கு மேல் உடலை ஊசியாய் துளைக்கும் குளிரை தாங்க முடியாது உடலை குறுக்கி கைகள் மற்றும் கால்களைக் கட்டிக்கொண்டு படுத்துவிட்டான்.
உடல் முழுக்க மரத்துவிட்டிருந்தது.
உதடுகளின் நடுக்கம் அவனின் நிலையை பறை சாற்றியது. ஒரு நிலையில் மூச்சும் தடைபட, கண்கள் சொருக ஆழ்ந்த மயக்கதிற்கு சென்ற தருணம், “இன்பா” என்று தன் தம்பியை இழுத்து மடியில் கிடத்தி மார்போடு அணைத்திருந்தான் உதயன்.
உதயன் புயல் போல் அவ்விடம் வந்து சேர்ந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அலுவலகத்தின் உள்ளே வரும்போதே அவ்விடத்தை உதயனின் பார்வை அலசியது.
இன்பாவின் அறைக்குச் சென்று தானும் ஒரு முறை பார்த்து திரும்பியவன் கண்களில் அங்கு ஸ்டோரேஜ் பகுதியின் சாவி மாட்டும் இடத்தில் சாவி இல்லை என்றதும், நெற்றிச் சுருக்கியவன், வேகமாக ஸ்டோரேஜ் பகுதியை நோக்கி ஓடினான்.
கதவின் வெளியில் சாவி தொங்கிக் கொண்டிருக்க, கதவு மூடி இருந்தது.
விபரீதத்தை உணர்ந்த உதயன் சடுதியில், கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல தன் தம்பியின் நிலையில் வெளிப்படையாக பதற்றம் சுமந்தான்.
உதயன் வேகமாக வரவும், என்னவோ ஏதோவென்று அவனின் பின்னால் ஓடிவந்த மேலாளர்,
“இன்பா சார் எப்போ உள்ள வந்தாரு தெரியலைங்க சார்” என்றார்.
உதயன் முகத்தில் தெரிந்த கடுமையில் தன்னை எதுவும் சொல்லிவிடுவானோ அஞ்சியவர், படபடத்தார்.
“இங்க நிக்க வேண்டிய செக்யூரிட்டி எங்க?” என்று கத்திய உதயன், குழந்தையென தன் தம்பியை மார்போடு அணைத்து பிடித்தவனாக, தன்னுடைய உடல் சூட்டை அவனது உடலுக்குள் கடத்த முயன்றான்.
இன்பாவை தூக்கிக்கொண்டு அங்கிருக்கும் ஓய்வறைக்குள் சென்று மெத்தையில் கிடத்தினான்.
இன்பாவின் உறைநிலை கண்டு உதயனின் கண்கள் பனித்தன.
இன்பாவின் கைகள், மற்றும் கால்களை சூடு பரக்கத் தேய்த்த உதயன், “ஹீட்டர் ஆன் பண்ணுங்க” என்றான்.
காவலாளி வேகமாக ஓடி வந்து மன்னிப்பு வேண்ட…
“மெயினில் செக்யூரிட்டி இருந்தாலும், இதோட விபரீதம் தெரிஞ்சுதான், அதுக்குன்னு தனி செக்யூரிட்டி போட்டிருக்கு. இவ்ளோ கேர்லஸ்ஸா விட்டு போயிருக்கீங்க. எதும் எமர்ஜென்சி அப்படின்னா, ஆள் மாத்திவிட்டு போகணும் தெரியாதா?” என்று கடிந்து கொண்ட உதயன், “வெளியில் போங்க” என்றிருந்தான்.
என்றுமே பணி செய்பவர்களை உதயன் ஒரு சொல் கடிந்து பேசியதில்லை. இன்றைய சூழல் புரிய காவலாளி அமைதியாக அறையை விட்டு வெளியில் சென்றார்.
“அப்பப்போ காமிரா செக் பண்ண மாட்டிங்களா ரமேஷ்” என்று மேலாளரிடம் கேட்ட உதயனின் கைகள் மட்டும் தன் பணியை நிறுத்தவில்லை.
“இன்பா” என்று அவனின் கன்னம் மாற்றி மாற்றி தட்டி, பாதம், விரல்கள் எல்லாம் நன்கு தேய்த்துக் கொண்டே இருந்தான்.
உடலின் சில்லிப்பு குறைந்தும், இன்பா கண்கள் திறக்காது இருக்க,
“இன்பா” என்ற உதயன் குரல் தழுதழுப்பாய்.
“சார்…” ரமேஷ் பதறிப்போனார். உதயன் என்பவன் தொழிலிடத்தில் அத்தனை கம்பீரமானவன். அவன் உடைந்து முதல் முறை காண்கிறார். அதுவும் அவனது அடக்கும் கேவல். அவருக்கே என்னவோப் போலிருந்தது.
“இன்பா” என்று உதயன் மீண்டும் அவனின் கன்னம் தட்டம், இன்பாவின் புருவம் சுருங்கியது.
“இன்பா… டேய் பன்னு” என்ற உதயனின் தவிப்பான குரலில் இன்பாவின் தலை மெல்ல அசைந்து, இமைகள் திறந்து மூடின.
“வண்டியை ஸ்டார்ட் பண்ண சொல்லுங்க ரமேஷ். ஹாஸ்பிடல் போகலாம்” என்று உதயன் எழ, அவனின் கையை பிடித்திருந்தான் இன்பா.
“இன்பா” என்று தம்பியின் அருகில் அமர்ந்த உதயன், முழுதாக கண்கள் திறந்திருந்த இன்பாவின் கன்னத்தில் மெல்ல அடித்து, “கொஞ்ச நேரத்தில் உயிரை உருவிட்டியேடா பன்னு” என்றான்.
இன்பா எழுந்து அமர்ந்தவாக்கிலே உதயனை தாவி கட்டிக்கொண்டான்.
“ரொம்ப வருஷமாச்சுல. நீங்க மறந்தே போயிட்டிங்க நினைச்சேன்” என்றான் இன்பா.
“என்னது?” என்று உதயன் புரியாது கேட்க,
“பன்னு” என்று கண்கள் சிமிட்டினான் இன்பா.
உதயன் முகம் சிரிப்பைக்காட்ட, இன்பாவுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
உணர்வின்றி இருந்தாலும் உதயனின் தவிப்புகளும், அவன் பணியாட்களை கடிந்து கொண்டதும் இன்பாவால் கேட்க முடிந்தது. அதிலும் அவனது ததும்பிய அழைப்பு, கண்கள் திறக்க முடியாதவனை வெகு சிரமப்பட்டு திறக்க வைத்தது.
சிறு வயதில் இன்பாவின் கன்னம் இரண்டும், கொழு கொழுவென குண்டாக அத்தனை மென்மையாக இருக்கும். அப்போதெல்லாம் உதயன் அவனின் கன்னத்தை கிள்ளி பன்னு என்று தான் அழைப்பான். வளர வளர மரியாதை நிமித்தமாக விளையாட்டுக்கள் குறைய, அன்றைய அழைப்பு மறைந்தும் போயிருந்தது.
மறைந்து போனாலும் அன்பின் வழி வந்தவை என்றும் மறக்காது என்பதைப்போல அவ்வழைப்பு இன்று தன்னைப்போல் வந்திருக்க, இன்பாவிடம் ஒருவித நிறைவு.
“நீ திரும்ப சப்பி ச்சீக்ஸ் வர மாதிரி குண்டாகு. நான் அடிக்கடி கூப்பிடுறேன்” என்ற உதயன், “இப்போ ஓகேவா நீ. ஹாஸ்பிடல் போவோமா?” எனக் கேட்டான்.
“ஓகே தான் அண்ணா” என்று இன்பா சொல்லவும், “கவனமா இருக்க வேண்டாமா” என்று கடிந்து கொண்டான்.
இருவரும் சகஜமாக பேசிடவே ரமேஷ் வெளியில் சென்றிருந்தார்.
“எதோ நினைப்புல” என்ற இன்பா, “அதை விடுங்க” என்றான்.
தம்பியை ஆழ்ந்துப் பார்த்த உதயன்,
“ம்ம்” என்றான்.
“ஃப்ரீஸ் அகிட்ட. எழுந்து நட. நார்மலா முடியுதா பார்ப்போம்” என்ற உதயன் இன்பா எழ உதவி செய்ய,
“ஓகே தான் அண்ணா” என்ற இன்பா, பாதத்தில் இரத்தம் பாய, சர்ரென்று வலி பரவ, தடுமாறி உட்கார்ந்திட்டான்.
“மரத்து இருக்கும். பிளட் ஃப்லோ நார்மல் ஆனா சரியாகிடும்” என்ற உதயன், “சூடா குடிக்க கொண்டு வரேன்” என்று வெளியில் சென்றான்.
எதிரில் கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்த காவலாளி அருகில் சென்ற உதயன்,
“கொஞ்சம் அசால்ட்டா விட்டாலும் ஆபத்துல முடிஞ்சிடும் ண்ணா. கவனமா இருங்க. இன்பாவோட கேர்லஸ் புரியுது. பட் அந்த நேர படபடப்புல சத்தமா பேசிட்டேன். சாரிண்ணா” என்றிருந்தான். எவ்வித தயக்கமுமின்றி.
“அச்சோ தம்பி… நீங்க” என்ற காவலாளி, “நான் இன்னும் கூடுதல் கவனமா இருக்கேன்” என்றார்.
உதயன் சிறு முறுவலோடு நகர்ந்தான்.
ஆடிட்டருக்கு அழைத்து வர முடியாதென்று, சூழலை மேலோட்டமாகப் பகிர்ந்தான்.
உதயன் திரும்பி வருகையில் இன்பா நன்றாக அறையின் குறுக்கே நடந்து கொண்டிருந்தான்.
“நல்ல சூடா சூப் இருக்கு. குடி இன்பா” என்ற உதயன் எடுத்து அவனது கையில் கொடுக்க…
“வீட்டில் சொல்லிட்டிங்களா?” எனக் கேட்டான்.
“என்னன்னு சொல்ல. வீட்டுக்கு போய் சொல்லிக்கலாம்” என்று தானே ஸ்பூனால் எடுத்து ஊட்டி விட்டான் உதயன்.
“ரொம்ப பயந்துட்டிங்களா?” இன்பா கேட்க, “அப்படித்தான் வச்சுக்கோ” என்ற உதயன் தன் பயத்தை மறுக்கவில்லை.
“நம்மைப்போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை… அப்படின்னு பிஜிஎம் கேட்குதுண்ணா” என்று இன்பா சிரிக்க…
“ராஸ்கல்… எல்லாம் விளையாட்டு” என்று அவனின் முதுகில் வலிக்காது அடித்தான் உதயன்.
“வலிக்கல” என்ற இன்பா, “அத்தை தனுவுக்கு வெளிய பையன் பாக்குறாங்க” என்றான் சுரத்தே இல்லாது.
“பார்க்கட்டும்” என்ற உதயன், ஸ்பூனை அவனின் வாயருகில் கொண்டு சென்று, “திறடா” என்றான்.
“காலையில் தனு கால் பண்ணி… அங்க வரக்கூட விடலன்னு சொல்லி அழ. அந்த தாட்லே… இப்படி மாட்டிகிட்டேன்” என்றான்.
“அத்தை செய்றதை செய்யட்டும். நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன். நீ சரின்னு மண்டையை ஆட்டினா போதும்” என்றான் உதயன்.
“என்னது?”
“அவங்களுக்கு மட்டும் தான் வீம்புக்கு வேற பையன் பார்க்கத் தெரியுமா? நம்மளால வேற பொண்ணு பார்க்க முடியாதா?” என்று உதயன் சொல்ல…
“எதே… வேற பொண்ணா… அண்ணா!” என்று இன்பா அதிர்ந்து கத்தியே விட்டான்.
உதயன் சிரிப்பு சத்தம் அவ்வறை எங்கும் நிரம்பியது.