என் ஆயுள் நீயே 47

என் ஆயுள் நீயே 47

மாலை அலுவலகப் பணி முடித்து நனியிதழ் வெளியில் வர, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து, அவளின் வருகையை எதிர்பார்த்து, கால் மேல் காலிட்டு சாய்ந்து நின்றிருந்தான் பிரணவ்.

பிரணவ்வை பார்த்ததும் சட்டென்று ஒரு துள்ளல் நனியிதழிடம்.

ஒரு அடி துள்ளி குதித்து அவனருகில் வந்தவள்,

“என்னடா சர்ப்ரைஸ் விசிட்” என்று அவன் கட்டியிருந்த கைகளுக்கு நடுவில் பிடித்துக் கொண்டு மகிழ்வோடு வினவினாள்.

“பார்க்கணும் தோணுச்சு” என்ற பிரணவ், அவளின் கழுத்திலிருந்த அடையாள அட்டையை பிடித்து இழுத்தவனாக, அவளின் முகம் தன் முகம் அருகே வரச் செய்தவன், “விட்டதுக்கும் சேர்த்து லவ் பண்ணனும் இதழ்” என்றான்.

பிரணவ்வின் பார்வை அவளின் கருவிழிகளோடு உருண்டு, அவளின் நாசி இறங்கி, செவ்விதழில் நிலைத்தது.

அவனின் மூச்சுக் காற்று அவளின் முகம் மோத, அவனது நெருக்கத்தில் செம்மை பூசிக்கொண்ட கன்னங்களை மறைக்க முடியாது திண்டாடினாள்.

“என்னடி அப்படி பாக்குற” என்ற நனியின் காதல் பார்வையில், தன் காதல் பிரவாகம் எடுக்க, அவளின் நெருக்கத்தை மேலும் ரசித்தான்.

“தெரியல. பட்டர்பிளை மொமெண்ட்” என்றவள்,

“ஹேய் நனி… ஆர் யூ கமிட்டெட்?” என்ற குரலில் சடுதியில் அவனிலிருந்து விலகி யாரென்று பார்த்தாள்.

“ஆத்தி… இவனா?” என்றவள், அவனைப் பார்த்து சிரிக்க, அவர்களின் அருகில் வந்தான் அவன்.

“இவன் ஆபிஸ் மைக் செட். சின்ன விஷியத்தையும் ஈசியா ஸ்பிரட் பண்ணிடுவான்” என்று பிரணவ்விடம் கிசுகிசுத்தாள் நனியிதழ்.

அவன் பக்கம் வந்ததும், “சொல்லவே இல்லை” என்றான் அவன்.

நனியிதழ் சிரித்து வைக்க…

“ஹாய் ஆம் சந்த்ரு” என்று பிரணவ்வுடன் கரம் குலுக்கினான்.

“பிரணவ்…” என்றான். சிறு புன்னகையோடு.

“இந்த விஷயம் ஆபீஸில் மட்டும் தெரிஞ்சுது. பலபேர் இதயம் வெடிச்சிடும்” என்ற சந்த்ரு, காமெடி சொல்லியதுபோல சத்தமாக சிரித்தான்.

இருவரும் அமைதியாக இருக்க…

“ஓகே காய்ஸ். யூ காரியான்” என்று சென்றுவிட்டான்.

“முதல்ல வண்டியை எடுங்க போலாம்” என்று நனியிதழ் சொல்ல, “பயங்கர ஃபேன் பேஸ் இருக்கும் போலவே” என்றான் பிரணவ். தன் தாடையை நீவியபடி.

“என்ன ஜெலஸ்ஸா…” நனியிதழ், கண்களில் சிரிப்பை தேக்கி வினவ,

“அப்படியும் வச்சுக்கலாம்” என்றவன் வண்டியில் அமர,

“எங்கப்போறோம்?” என்றாள்.

“சும்மா… ஒரு லாங் ட்ரைவ்.”

நேரத்தைப் பார்த்த நனியிதழ், “இப்போவா. திரும்பிவர நைட் ஆகிடும். நான் வரல” என்றாள்.

“ஓகே” என்று தோள்களை உயர்த்தி இறக்கியவன், அவள் கண்களில் தெரியும் எதிர்பார்ப்பில் மனதில் சிரித்தவனாக, “பார்த்துட்டேன். கிளம்பட்டுமா?” எனக் கேட்டான்.

“அதுக்குள்ளவா?”

“ஆமா…”

“அப்போ லாங் டிரைவ்?”

“இருட்டிடுமே!”

“அண்ணாகிட்ட சொல்லிட்டு வரவா?”

“மாம்ஸ் கிட்ட நான் சொல்லிட்டேன்டி.” அவளின் கைப்பற்றி பக்கம் இழுத்தான்.

“வேணாமா…?” பிரணவ்வின் அந்த குரலுக்கு அவளின் தலை தானாக சரியென அசைந்தது.

“சிட்” என்று தன் பின்னால் கண் காட்டினான்.

வண்டியின் இரு பக்கமும் காலிட்டு அமர்ந்தவள்,

“நானும் அண்ணாகிட்ட வன்ஸ் சொல்லிடுறேன்” என்று அலைபேசியை எடுத்து உதயனுக்கு அழைத்தாள்.

“அண்ணா அவங்க வந்திருக்காங்க.”

அவள் அவங்க என்று சொல்லியதில் பிரணவ்வுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. சத்தம் வராது கட்டுப்படுத்தினான்.

“என்கிட்ட சொல்லிட்டு தான் பார்க்கவே வந்தாங்க பட்டு. போயிட்டு வாங்க” என்றான் உதயன்.

“ம்ம் போலாம்” என்று நனியிதழ், அவனின் தோளில் தட்ட, திரும்பி இருவருக்கும் இடையேயான இடைவெளியை பார்த்தான்.

“பின்னாடி விழுந்திடாதடி” என்று தன்னுடைய கைகள் இரண்டையும் பின் கொண்டு சென்றவன், அவள் உணரும் முன்பு, அவளது இடைப்பற்றி தன்னை ஒட்டி இழுத்திருந்தான்.

பிரணவ் இழுத்த வேகத்திற்கு, அவனது முதுகோடு மோதி விலகியிருந்தாள்.

அவளுள் மின்சாரம் பாய்ந்த உணர்வு. அதிர்ந்து உறைந்து போனாள்.

“இதுக்கேவா” என்று முறுவலித்த பிரணவ், வண்டியை உயர் வேகத்தில் செலுத்த, பயத்தில் தடுமாறி தானாக அவனது இடையூடு கையிட்டு கட்டிக் கொண்டிருந்தாள்.

“மெதுவா போங்க.” அவள் கத்தலை எல்லாம் பிரணவ் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவனது பலநாள் ஏக்கம் இது.

கடலை ஒட்டிய சாலையில் அவளுடன் ஓர் நீண்ட பயணம்.

படிக்கும் காலத்திலிருந்தே. இன்று தான் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. அதுவும் உரிமை உள்ளவர்களாக.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சென்ற பின்னரே, நிதானம் கொண்டு சீரான வேகத்தில் வண்டியை செலுத்தினான்.

“இப்போ தான் மூச்சே வருது” என்ற நனியிதழ், “எதுக்கு இவ்வளவு ஸ்பீட்?” என்று அவனின் முதுகிலே அடித்தாள்.

“எவ்ளோ நாள் ஆசை தெரியுமா இது?” என்றவனின் குரலிலே, அவளால் அவனது ஆசையின் அளவை உணர முடிந்தது.

அப்படியே பிரணவ்வின் முதுகோடு மேலும் ஒண்டியவள், அவனின் முதுகில் தன் கன்னத்தை அழுந்த பதித்து, கைகளின் பிடியில் அழுத்தம் கூட்டி,

“ஐ லவ் யூ பிரணவ்” என்றிருந்தாள்.

அவளின் ஸ்பரிசம் சூடேற்ற, வார்த்தைகள் குளிரை பரப்பின.

“நான் தாங்குவேனா?” என்ற பிரணவ், “ஒழுங்கா வீடு போய் சேரணும்” என்றான். குறும்பாய்.

“ரொம்ப தூரம் வந்தாச்சு. திரும்ப போக லேட் ஆகும். இதோட ஸ்டாப் பண்ணிக்கலாம்” என்றாள் நனியிதழ்.

சுற்றி ஆள் அரவமற்ற கடற்கரை பகுதி. ஆங்காங்கே பாறைகளும், அலை உரசும் தென்னை மரங்கள் மட்டுமே. கடலுக்கும், சாலைக்குமே சில அடிகள் தான் இடைவெளி.

“இந்த இடம் நினைவிருக்கா இதழ்?”

இருவரும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, கைகள் கோர்த்து மணலில் பாதம் புதைய தண்ணீர் நோக்கி நடந்த வேளை பிரணவ் கேட்டிருந்தான்.

படிக்கும் காலத்தில் ஒரு நாள் சுற்றுலா என்று அவர்களது குழு இங்கு தான் வந்திருந்தது. பொருட்கள் வாங்கி வந்து, அங்கேயே சமைத்து கடல்நீரில் ஆட்டம் போட்டு, பாட்டு, நடனமென கொட்டமடித்து இரவுக்கு மேல் தான் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.

அப்போதும் இது போல் இருசக்கர வாகனப் பயணம் தான். அன்றைய எதிர்பார்ப்புகள் இருவரின் நினைவிலும்.

பிரணவ் வண்டியில் அமர, நனியிதழ் மனம் விரும்ப, அவனுக்கும் அவள் தன்னுடன் வர வேண்டுமென்கிற விருப்பம்.

தோழியின் மனம் புரிந்து ரீமா பிரணவ்வின் வண்டியில் அமராது, வேறொரு நண்பன் வண்டியில் அமர்ந்துகொள்ள, நனியிதழ் மிகுந்த சந்தோஷத்தோடு அவனது வண்டியை நோக்கி செல்வதற்குள் வேறொரு பெண் சென்று அமர்ந்திருந்தாள். அவளும் அவர்களது நட்பு வட்டத்தில் ஒருத்தி. இறங்கு என்று சொல்ல முடியாது போக. இருவரிடமும் ஏமாற்றம். அன்றைய ஏமாற்றமும், விருப்பமும் இன்று சரி செய்த நிறைவு.

கடல் அலை பாதம் நனைக்க சிறு பாறையில் சென்று அமர்ந்தனர்.

“என்ன பேசணும்?”

பிரணவ்வை அறிந்தவளாக வினவினாள்.

“நமக்குள்ள லவ் இருக்களவுக்கு அண்டர்ஸ்டெண்டிங் இல்லைன்னு தோணுது…” என்றான்.

“புரியல.”

“ஒருமுறை ஒரே முறை, நம்ம ரெண்டு பேரில் யாரோ ஒருத்தர் வெளிப்படையா சொல்லியிருந்தா இந்த இடைவெளி இருந்திருக்காது இல்லையா?” என்றான்.

“ம்ம்… நான் தான் தப்பா புரிஞ்சி…”

“நானும் தான்.” அவள் முடிக்கும் முன் இடையிட்டவன், “புரிதல் இருந்திருந்தா அந்த தவறான பார்வைக்கு அவசியமே இருந்திருக்காது” என்றான்.

“லாஸ்ட் டே என்கிட்ட நீ லவ் சொல்ல வந்த… ரைட்? ஏன் சொல்லல. நான் கிளம்பும் போது கூட நீ வரல” என்றான்.

அன்றைய நாளில் நடந்ததை இருவரும் பகிர்ந்துகொள்ள நினைத்து, முதலில் பிரணவ் தன் பக்கத்தைக் கூறினான்.
__________________________

இன்பா சரியாகிவிட்டாலும் உடலில் சோர்வு தென்பட்டது. அன்று இன்பா முடிக்க வேண்டிய வேலைகளையும் உதயனே முடித்து, மாலை தன்னுடனே தம்பியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். வரும் வழியில் எழிலையும் கல்லூரியிலிருந்து அழைத்து வந்திருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் உதயன் பெரியவர்களிடம் சொல்ல, அனைவரும் இன்பாவை சூழ்ந்து கொண்டனர்.

“பார்த்து சூதானமா இருக்க வேணாமா கண்ணு” என்ற லட்சுமி பாட்டியைத் தொடர்ந்து அனைவரும் அவனின் நலன் குறித்து விசாரித்து, பேசியென நேரம் கழிய, தனு அழுது கொண்டே ஓடி வந்தாள்.

வந்தவள் நேராக உதயன் முன் நின்று,

“நான் இனி அங்க போகமாட்டேன். இங்கவே இருந்துக்கிறேன். உரிமை இருக்கு தானே மாமா?” எனக் கேட்டாள்.

உதயன் மூத்தவரை பார்த்தான்.

“என்னாச்சு தனு. ஏன் முகமெல்லாம் வீங்கியிருக்கு.” கஜமுகன் கேட்க,

“உங்க பொண்ணு அவசர அவசரமா எனக்கு கல்யாணம் பண்ண பாக்குறாங்க. உங்களுக்குள்ள மனத்தாங்கல் அப்படின்னா… நடுவில் நான் என்ன பண்ண? இன்பா மாமாவை தவிர வேற யாரையும் நான் கட்டிக்க மாட்டேன்” என்றவளின் அழுகை கூடியது.

“என்ன நினைச்சிட்டு இருக்கா அவள். திமிரு கூடிப்போச்சு… எவ்வளவு ஏத்தமிருந்தா என் பேரனுக்கு பேசி வச்சு, வேற இடம் போவாள். அவளை இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்” என்று லட்சுமி பாட்டி எழுந்து குமரியின் வீடு நோக்கிச் செல்ல, உள்ளே வந்தார் ஜெயந்தன்.

“என்ன மாப்பிள்ளை இதெல்லாம். உங்க பொண்டாட்டி என்ன பண்ணாலும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என்று லட்சுமி கேட்க,

“உள்ள போய் பேசுவோம் அத்தை. வாங்க” என்று அவரை உள்ளே அழைத்து வந்தார் ஜெயந்தன்.

லட்சுமி பாட்டி சென்று கேட்டு குமரி என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்துகொள்ளவே யாரும் அவரைத் தடுக்காது இருந்தனர்.

ஆனால் அதற்குள் ஜெயந்தனே வர, அமைதியாக பார்த்திருந்தனர்.

“அவளுக்கு எந்த பித்து பிடிச்சு ஆட்டுது தெரியலங்க மாமா” என்று ஜெயந்தன் ஆரம்பிக்கவும், “இப்போ நீங்க வெளியில் வரல… நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்ற குமரியின் சத்தம் வெளியில் அத்தனை கத்தலாக ஒலித்தது.

“யாரு? இவளா கத்துறது?” என்ற லட்சுமியைத் தொடர்ந்து அனைவரும் வெளியில் வர, பிரதான வாயிலுக்கு உள்ளே கூட வாராது, வெளியில் தெருவிலே நின்று கத்திக் கொண்டிருந்தார் குமரி.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் உதயனின் பார்வைக்கு அங்கிருந்து சென்றிருக்க, தெருவில் போவோர் வருவோர் குமரியை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

“இதென்ன பழக்கம் குமரி. வீட்டு விசயம் நாலு பேர் பார்க்க தெருவில் நின்னு பேசுறது” என்று கஜமுகன் அதட்டிட,

“எதுவாயிருந்தாலும் உள்ள வந்து பேசு குமரி” என்றார் இளங்கோ.

“அதான் போன்னு துரத்தியாச்சே. அம்புட்டுக்கு மானம் கெட்டு போயி இல்லை நானு. இப்போ எனக்கு என் புருஷனும், மகளும் என் வீட்டுக்கு வந்தாகனும்” என்ற குமரி, “உங்களுக்கு வெட்கமா இல்லை. குடும்பமே சேர்ந்து உங்க பொண்டாட்டியை வீட்டை விட்டு துரத்தியிருக்கு. அங்க போய் உட்கார்ந்திருக்க?” என்று ஜெயந்தனையும் பேச,

“எனக்காக போயிடுங்க மாமா” என்று ஜெயந்தனின் முகம் கூட பாராது சொல்லிவிட்டு விடுவிடுவென வீட்டிற்குள் சென்றுவிட்டான் உதயன்.

error: Content is protected !!
Scroll to Top