தூரமே தூரமாய் 21
திருமணத்திற்கு சம்மதமென்ற இமையாளை அழுத்தமாக பார்த்திருந்தான் இனியன்.
“ஒரு விஷயத்தை கடந்து வரனும் அப்படின்னா, இன்னொரு புது விஷயத்தில் நம்மளை புகுத்திக்கணும் நீங்க தானே சொன்னீங்க இனியாண்ணா” என்ற இமையாள்,
“எனக்கு இந்த ஸ்ட்ரெஸ், பெயின், பிரஷர் இதெல்லாம் வேணாம். முடியல” என்று மடங்கி தரையில் அமர்ந்தவள் வெடித்து கதறினாள்.
“இமயா” என்று தங்கையின் அருகில் அமர்ந்த இனியன் மெல்ல அவளின் கைகளில் தட்டிக் கொடுத்தான்.
“ஐ நீட் அ பிரேக் ஃபார் எவ்வரித்திங்க் ண்ணா” என்றவள், “அவங்களை பார்க்கும் போதெல்லாம் இதுவரை வரவே வராத கோபம் வருது அவங்க மேல. எங்க வெறுத்திடுவனோ பயமா இருக்கு” என்றாள்.
தங்கையின் மனதில் இருப்பதெல்லாம் வெளியில் வரட்டும் என்று இனியன் மௌனமாக இருந்தான்.
“அவங்க என்னை விட்டுப்போனது விட்டுட்டுபோனதாவே இருக்கட்டும். திரும்ப வேண்டாம். அவங்க சொன்னது உண்மையோ, பொய்யோ… திரும்ப வர அவங்க எனக்கு வேண்டாம். நாங்க ஒன்னு சேர்ந்து எங்களோட காதலுக்கு தண்டனை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. எந்தவொரு விளக்கமும் அவங்க கொடுக்க முன் வராதப்போ, நானா புரிஞ்சிக்கிறதுக்குள்ள எங்க காதல் செத்துப்போகும். நம்பிக்கை, புரிதல் எல்லாம் இதில் அப்பாற்பட்டது” என்றாள்.
“அப்போ ருது உனக்கு வேண்டாம் ரைட்?”
“வேண்டாம்.”
“அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு சொன்னதை நம்புற கரெக்ட்?”
“நேரில் பார்த்தாலும் நம்பமாட்டேன். அவங்க என் ருது” என்றாள் அழுத்தமாக.
“மனசளவில் நீ தெளிவா இல்லைன்னு உனக்கே புரியுதாடா?”
“எதுவும் புரிய வேண்டாம் ண்ணா எனக்கு. அவங்க வேண்டாம். அவ்வளவு தான். ஏதோ காரணத்துக்காக என்னை விட்டுப்போனவர் தானே! திரும்ப விட்டுபோகமாட்டாங்கன்னு எப்படி நம்புறது?” எனக் கேட்டாள்.
இமையாள் கேட்பதிலும் நியாயம் உள்ளதே!
“விட்டுப்போறதுக்கா உன் பின்னால் வரான்?”
“அப்போவும் வந்தவர் தானே! விட்டுப்போகலையா?”
“காதல் மன்னிக்கும், ஏற்கும்!”
“உலகத்தில் சிறந்த எல்லா காதலுமே கல்யாணத்தில் சேர்ந்தது இல்லைண்ணா. நாம் கதையா தெரிஞ்சிகிட்ட எல்லா காதலோட முடிவும் தோல்விதான்” என்ற இமையாள், “இவ்வளவு நாள் அவங்க சொன்னது பொய்யா, உண்மையா தெரியாமல் குழம்பி… ஏன் இப்படின்னு அவங்களுக்காக ஏங்கி, வந்திடமாட்டாங்களான்னு தவிச்சு காத்திருந்தது எல்லாம்… நேரில் பார்க்கும்போது கோபப்படத்தான்னு இன்னைக்குத்தான் எனக்கு தெரியுது. எனக்கு இப்போ அவங்க மேல கோபம் மட்டும் தான் இருக்கு. இந்த கோபம் என் காதலை அழிச்சிடும்” என்றதோடு முகத்தை அழுந்த துடைத்து நிமிர்ந்து அமர்ந்தாள்.
“சில காதல்… காதலாவே இருக்கிறது தான் நல்லது” என்றாள், விரக்தியாக.
இதற்கு இனியன் என்ன பதில் சொல்வதாம். என்னுடைய காதல் காதலாக இருப்பது மட்டுமே தனக்கு நல்லதென அவளே சொல்லும்போது அவனால் வற்புறுத்திட முடியுமா என்ன? வற்புறுத்தி காதலை ஜெயிக்க வைத்திட முடியுமா?
இங்கு இமையாளின் காதல் ஜெயித்ததா இல்லையா என்ற விவாதம் இல்லை. அவளை பொறுத்தமட்டில், அவளது காதல் அவளின் நீண்ட காத்திருப்பில் நின்று ஜெயித்துவிட்டது. இனி தன் காதலை ஜெயிக்க வைப்பது ருதுவின் கையில் தான் உள்ளது.
“அப்போ உனக்கு இன்னொருவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?”
“அடி எடுத்து வைத்தால் தானே பாதை எப்படின்னு தெரிஞ்சிக்க முடியும்?”
“ஒரு முடிவோட இருக்க நீ?” என்ற இனியன், “எனக்கு கல்யாணம் ஆகனும் அப்டிங்கிறதுக்காக நீ ஓகே சொல்லலையே?” எனக் கேட்டான். உண்மையில் இதை வைத்து தான் அவளை கார்னர் செய்திட இருந்தான் இனியன். தற்போது அவளே சம்மதம் சொல்லும்போது நண்பனை நினைத்து அவனது மனம் கவலைக்கொள்ளவே செய்தது.
இனியனுக்கு புரிகிறது… ‘ருதுவிடத்தில் நீயின்றியும் நான் நன்றாக இருக்கின்றேன் என்று காட்டிக்கொள்ள நினைக்கிறாள் என்று.’ காதலில் ஈகோ அழகு தான். சில நேரங்களில் காதலில் ஈகோ பெரும் நோய். இமையாளுக்கு புரிய வைத்திட வேண்டிய தேவையில்லை அவளே புரிந்துகொள்வாள்.
“ஓகே… அப்போ அப்பாவை பையன் பார்க்க சொல்றேன்” என்று இனியன் எழுந்து கொண்டான்.
இமையாளுக்குத்தான் இதயத்தில் மெல்லிய வலி பரவியது.
அவளது ருதுவை கடக்க முயல்கிறாள்… கரை சேர்ந்திடுவாளா? அத்தனை எளிதா காதலை கடப்பது?
நெஞ்சத்தில் பொத்தி வைத்த பிம்பம்
காற்றாய் நுரையீரலில் வாசம் பிடிக்கிறதே! அவனின்றி உடலின் அணுவும் அசைந்திடுமோ? மனம் கொண்ட வலிகளெல்லாம் மருந்தாய் கேட்பது அவனையே! ஏற்றிடத்தான் நெஞ்சம் மறுப்பதென்னவோ?
அறைக்குள் வந்தவள் கதவினை அடைத்துக்கொண்டு விம்மி வெடித்து கதறிய கதறலின் சத்தத்தில் தீபா படித்துக்கொண்டிருந்த நாவலை கீழே போட்டுவிட்டு பதறிக்கொண்டு ஓடிவர, இனியன் மென்மையாக புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
“அவள் அழுகை சத்தம் கேட்குது. நீ சிரிச்சிட்டு நிக்கிற? நீயும் நார்மல் அண்ணன் ஆகிட்டியாடா?” என்று கேட்ட அன்னையை பார்த்து கண் சிமிட்டியவன், “ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க இமயாவே நல்ல ஐடியா கொடுத்திருக்காள் ம்மா” என்றான்.
“யார் ரெண்டு பேரும்?”
“உன் மாப்பிள்ளையும், பொண்ணையும்.”
“புரியலடா?”
“போங்க… போய் உங்க ரைட்டர் கதை போட்டுடாங்களான்னு பார்த்து படிங்க” என்று அறைக்குள் வந்த இனியன், “நீங்களே அதிரடியா ஏதும் செய்து இமயாவை கட்டிக்க வைக்கிறேன். இன்னொருத்தனை உங்க லேஷஸ் கழுத்தில் தாலிகட்ட விட்டுடுவீங்களா டிசி சார்?” என்று தன் முன் இல்லாத ருதுவிடம் கேட்டு புன்னகைத்தான் இனியன்.
________________________________
இமையாளை சந்தித்து விட்டு வீட்டிற்கு வரும் வழியெங்கும் ருதுவினுள் இமையாள் சொல்லிச்சென்றதை நினைத்து அத்தனை கோபம்.
என்ன தான் அவள் திருமணம், குடும்பமென்று அமைந்து நன்றாக இருக்க வேண்டுமென நினைத்திருந்தாலும், அவளை நேரில் கண்ட பின்னர் அவனது லேஷஸ் வாழ்வில் அவன் மட்டுமே அனைத்துமாக இருந்திட வேண்டுமென அவன் காதல் மனம் தவிக்கிறது.
அவளை விட்டுக்கொடுத்திட முடியாதென அவனே உணர்கிறான். இந்த உணர்தல் அன்று இருந்திருந்தால் பொய் சொல்லி சென்றிருக்கமாட்டானோ? அன்றைய சூழ்நிலை வேறாயிற்றே! அன்று அவன் செல்ல வேண்டியதன் அவசியம் இருந்ததே!
மீண்டும் ருது இமையாளை கண்டபோது அவனின் எண்ணப்படி அவள் ஒரு குடும்பமாகியிருந்தால் எட்ட நின்று மகிழ்ந்திருப்பானோ என்னவோ? இன்று அந்த மனநிலை அவனுக்கு கொஞ்சமும் இல்லை. அவனது லேஷஸ் அவனுக்கு வேண்டும். அவனது அமிழ்ந்துப்போன காதலெல்லாம் வீறுகொண்டு ஆட்டி வைத்தது அவனது உள்ளத்தை.
இதில் இமையாள் தனக்கு அடுத்த மாதம் திருமணம் என்று சொல்லியது பொய் என்ற போதும் அவனால் ஏற்க முடியவில்லை.
அவள் திருமணம் என்று சொல்லிய பொய்யினையே ஏற்க முடியாதவனுக்கு, அன்று தான் தனக்கு திருமணமாகிவிட்டது என்று சொல்லியபோது அவளின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை வலிக்க புரிந்துகொண்டான்.
‘நல்லாவே பழிவாங்குறடி.’ சிரித்துக்கொண்டான்.
‘இந்த பழிவாங்கல் எல்லாம் என் பக்கம் வந்து பண்ணுடி… எவ்வளவு வேணாலும் தாங்கிக்கிறேன்’ என்றவன், தன் கையின் டாட்டூவை பார்த்து கண் சிமிட்டினான்.
எத்தனை பெரிய காரியம் செய்து வெற்றி கொண்டபோதும் தோன்றிடாத மகிழ்வு, அந்த ஒற்றை டாட்டூவில் அவனுக்கு கிடைத்திருந்தது.
அதே மகிழ்வோடு காவலர் குடியிருப்பினுள் நுழைந்திருந்தான்.
சற்று தொலைவிலே தன் வீட்டிற்கு முன் நிற்கும் வண்டியை கண்டவனின் மகிழ்வெல்லாம் எங்கோ காணாமல் சென்றிருக்க, வந்த வேகத்தில் அவ்வண்டியின் பின் இடித்து முன் தள்ளியிருந்தான்.
வண்டியிலிருந்து குதித்து இறங்கியவன், நான்கே தாவலில் வீட்டிற்குள் நுழைந்து,
“தேஷ்” என்று வீடே அதிர சிம்மமென ஓங்கி கர்ஜித்திருந்தான்.
தந்தையின் கோப குரலில் திடுக்கிட்ட குழந்தை, தான் அமர்ந்திருந்தவரின் மடியை விட்டு கீழிறங்கி தந்தையை நோக்கி ஓடி வந்தது.
“அப்பா…”
தன் மகனை அள்ளி அணைத்து தூக்கியவன், மார்போடு தலையை அழுத்தி தனக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.
“யாரைக் கேட்டு என்வீட்டிற்குள் வந்த?” எனக் கேட்டவன், அங்கு அமைதியாக நின்றிருந்த அம்பிகாவை அதே கோபத்தோடு ஏறிட்டான்.
“அவங்க நான் வந்ததும் போக சொல்லிட்டாங்க. நான் தான் என் பையனை பார்த்திட்டு போயிடுறேன்னு…” என்று அவர் முடிக்கும் முன்,
“யாருக்கு யார் மகன்?” என்று கேட்ட ருது, அங்கு ஃபோட்டோவில் அம்பிகாவுடன் இருந்த வேங்கடத்தைக் காண்பித்து,
“அவர் தான் என் அப்பா” என்றிருந்தான்.
“ருது ப்ளீஸ்…”
“திரும்பவும் உங்க போலிக் கண்ணீரில் ஏமாந்துப்போக, அதே இருபத்தைந்து வயது ருது கிடையாது நான்” என்றான்.
“நீ இல்லைன்னாலும் உண்மை அதுதானே கண்ணா!”
“ச்சீ… என்னை அப்படி சொல்லாத… உனக்கு உரிமை இல்லை. என் அம்மாவே இல்லைங்கிறப்போ, நீ எப்படி என் அப்பாவாக முடியும்?” என்ற ருது,
“அம்மா இந்த ஆளை வெளியில் போகச்சொல்லுங்க. இல்லை நான் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள வேண்டியதிருக்கும்” என்றான்.
என்ன தான் ருது கோபமாகவும், ருத்ர மூர்த்தியாகவும் நின்றிருந்தாலும், பழைய நிகழ்வுகளின் தாக்கத்தால் ருதுவின் உடலில் மெல்லிய நடுக்கம் ஓடிக்கொண்டிருந்தது.
“என் பையனை ஒருமுறை…”
“உங்க பையன்னு இங்க யாருமில்லை. வெளியில் போடா” என்றிருந்தான் ருது.
“பிளீஸ் ருது.” கிட்டத்தட்ட அவர் தன் மூத்த மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். வாழ்விலே முதல் முறையாக மன்றாடினார். கெஞ்சுதல் என்பதை அறிகிறார்.
“அவள் போன பிறகு தான் உறவுகளோடு அருமை… சொந்த ரத்தத்தோட பாசம் புரியுது. ஒரே ஒருமுறை ருது கண்ணா… அப்பா கிட்ட வாயேன். அவனை என்கிட்ட கொடுடா.”
“பாருடா… தி கிரேட் பிஸ்னெஸ் மேன், ரவுடிகளை கைக்குள் வச்சிக்கிட்டு நகரத்தையே, மாநில அரசியலையே ஆட்டி படைத்த கைலாஷ்ஷுக்கு கெஞ்சவும் வருதே!” என்ற ருதுவின் குரலில் அப்படியொரு நக்கல்.
“இதெல்லாம் என் தனிப்பட்ட ஆசைக்காக ருது கண்ணா. ஆனா நீயும், தேஷ்…”
“ஜஸ்ட் ஸ்டாப் இட்.” மீண்டும் ஒருமுறை ருதுவின் குரல் ஓங்கி ஒலித்தது.
“தேஷ் என் மகன். அவன் பெயர் கூட உன் வாயில் வரக்கூடாது” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
ருதுவின் உடல் நடுக்கத்தில் பயந்த தேஷ், தன் முகத்தை உயர்த்தி “அப்பா” என்று அழுதிட…
“ஒன்னுமில்லை… ஒன்னுமில்லை பேபி” என்று மீண்டும் தனக்குள் அடைக்காத்துக் கொண்டான் ருது.
“என்ன உன் சாம்ராஜ்ஜியம் அழிஞ்சிடுச்சுன்னு நல்லவன் வேஷம் போடுறியா நீ?” எனக்கேட்ட ருது, “உன்னையெல்லாம் பார்க்கவே அருவருப்பா இருக்கு. இங்கிருந்து போயிடு இல்லை சுட்டுத் தள்ளிடுவேன்” என்று பேண்ட்டின் பக்கவாட்டு உறையிலிருந்து துப்பாக்கியை எடுத்தவன் கைலாஷ் நோக்கி குறி வைத்திருந்தான்.
“ருது…” என்று அம்பிகா பதற, நிதானம் வரப்பெற்றவனாக துப்பாக்கியை கீழிறக்கியிருந்தான்.
“நான் இவ்வளவு இறங்கி வந்திருக்கேன். இப்பவும் நம்ப மாட்டியா கண்ணா?”
“உனக்கு நல்லாவே நடிக்க வருது” என்ற ருது, “பணம், ஆசைக்காக என் அம்மா உயிரோடு விளையாடிய உன்னை, திருந்திட்டேன்னு நான் மன்னிக்கணுமா?” எனக் கேட்டான்.
“தப்பு தான்… தப்பு தான். புத்தி கெட்டுப்போய் தெரியாமப் பண்ணிட்டேன்” என்று கைலாஷ் புலம்பிட…
“நீ புத்தியில்லமா பண்ண தவறா அது ? உன் ஆசைக்காக நாங்க கொடுத்த விலை ரொம்ப பெருசு. உன்னால் என் அம்மாவை திருப்பிக்கொடுக்க முடியுமா?” என்றவன், “ஒழுங்கா போயிடு” என்று வாசலை கைகாட்டினான்.
“அவனை ஒருமுறை கொடேன்?”
கைலாஷ் தேஷ்ஷினை கேட்டு கையினை நீட்டிட, தேஷ் மீதான ருதுவின் அணைப்பின் இறுக்கம் கூடியது.
“அம்மா இவனை போகச்சொல்லுங்க” என்று கத்திய ருது, “இவனை பார்க்க பார்க்க எங்கே என் அம்மா சொன்ன வார்த்தையை மீறி இந்த ஆளை கொன்னுடுவனோன்னு பயமா இருக்கு” என்றான்.
அம்பிகா ருதுவின் அருகில் வந்து அவனின் முதுகை மெல்ல தட்டிக் கொடுத்தார்.
“யாருக்காகவோ நீ உன்னை கஷ்டப்படுத்திக்காதே ருது” என்றார்.
“ஒரு தடவை தூக்கிக்கிறேன். கொடுக்க சொல்லுங்கம்மா” என்று அம்பிகாவிடம் முறையிட்டார் கைலாஷ்.
“நான் உங்களை அப்போவே போகச்சொன்னேன்” என்றார் அம்பிகாவும்.
“உன்னை தான் என் ஆளுங்க தேடிட்டு இருக்காங்க. நீ என் வீட்டிலே வந்து டிராமா பண்ணிட்டு பதுங்கிட்டு இருக்க. இப்போ தான் உன் நாடாகத்துக்கான காரணம் புரியுது” என்ற ருது, வெங்கட்டிற்கு அழைத்து கைலாஷ் தன் வீட்டில் இருப்பதாக சொல்லி, கைது செய்ய விரைந்து வருமாறு பணித்து வைத்தான்.
“ருது பிளீஸ்… நான் பண்ண பாவங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இப்போ ஜெயிலுக்கு போனால், சாகும்வரை அங்குதான்னு எனக்கு நன்றாகத் தெரியும். அதான் முதலும் கடைசியாவும் ஒரு தடவை என் மகன்களை பார்த்திட்டு போகலாம் வந்தேன்” என்று அவர் சொல்லி முடிக்க, அவரின் கழுத்தை ஒற்றை கையால் அழுத்திப் பிடித்திருந்தான் ருத்விக்.
“உனக்கு மகன்னு யாருமில்லை. அந்த நெனப்பை இந்த நொடியே அழிச்சிடு” என்று கைலாஷ்ஷை சுவற்றில் தூக்கி நிறுத்தியிருந்தான் ருது.
கைலாஷ் கண்கள் சொருகியது.
“ருது… என்னப்பா… விடு. அவனை கொன்னு உன் வாழ்க்கையை அழிச்சிக்காதே!” என்று அம்பிகா ருதுவை பிடித்து இழுக்க, தன் கையை தளர்த்தினான்.
தொப்பென்று தரையில் கீழே விழுந்தார் கைலாஷ்.
“அதான் என் வாழ்க்கையையே கொன்னுட்டானேம்மா இவன். இவன் உயிரோடிருந்து என்ன பிரயோஜனம்?” என்ற ருது, “இவனால் வயதான காலத்திலும் என் அம்மா பட்ட துன்பம் கொஞ்சமில்லை. அதெல்லாம் நினைக்கவே வெறுப்பா இருக்கு” என்றான்.
“என்னடா ரொம்பத்தான் துள்ளுற? நான் அப்பன் இல்லைன்னா… நீயெப்படிடா வந்த?” என அதுவரை இருந்த பொறுமை பறக்க தன் உண்மை முகத்தைக் காட்டியிருந்தான் கைலாஷ்.
“நீயில்லைன்னு சொன்னாலும் உனக்கும் சரி உன் கையிலிருக்கும் அவனுக்கும் சரி நான் தான்டா அப்…” என்று அவர் முடிக்கும் முன்பு அவரின் மார்பிலே பூட்ஸ் காலினை வைத்து தள்ளியிருந்தான் ருது.
ருது தள்ளிய வேகத்தில் வீட்டு வாயிலைத் தாண்டிக்கொண்டு கீழே விழுந்தார் கைலாஷ்.
“நான்தான் அப்பான்னு சொல்றதால ஒருத்தன் அப்பா ஆகிட முடியாது” என்ற ருது, “இந்த ருத்தேஷ்ஷுக்கு அப்பா இந்த ருத்விக் தான்” என்ற ருதுவை பார்த்து சிரித்துக்கொண்டே மெல்ல எழுந்த கைலாஷ்…
“அதே தான், சொல்றதலா தம்பிக்கு அண்ணன் அப்பாவாகிட முடியாது” என்று கைலாஷ் மிதப்பாய் பார்த்திட, அவரின் வாயிலே ருது ஓங்கி குத்தியிருந்தான்.
கைலாஷ்ஷின் வாயெல்லாம் ரத்தம்.
வெங்கட், கிருஷ்ணன் உடன் வந்து சேர்ந்தான்.
“நான் அடிச்சே சாவடிக்கிறதுக்குள் இவனை இங்கிருந்து கூட்டிட்டுப்போயிடுங்க” என்ற ருது,
“அவனுக்கு அப்பாவா மட்டுமில்லை… எல்லாமாவும் நானிருப்பேன். உன் மேல் பட்ட காத்துக்கூட என் மகன் மேல் பட விடமாட்டேன்” என்று தன் தம்பியாகிய மகனை மார்போடு புதைத்துக் கொண்டான். தாய் பறவை தனக்குள் தன் பிள்ளைகளை அடைக்காக்குமே அதற்கு இணையாய் ருதுவின் அச்செயல்.
அக்காட்சி உண்மையெல்லாம் அறிந்த அம்பிகாவுக்கு மனதை பாரமாய் அழுத்தியது.
உயிருக்குள் உறவை சுமந்து
அண்ணன் என்ற பந்தத்தில்
அனைத்துமாகி தாயுமானவனாய்!
‘ருத்(விக்)(தேஷ்).’
தாய்மை பெண்மைக்கு மட்டும் உரித்தானதன்றோ?