தூரமே தூரமாய் 22 (ருத்விக் 🫂இனியன் சந்திப்பு.)
நட்பு…
விவரித்திட வார்த்தைகள் நீளும்.
புனைந்திட கவிதைகள் மலரும்.
வடித்திட காவியங்கள் உருவாகிடும்.
_____________________________
முற்றும் முழுதாய் ஓய்ந்தவனாக தளர்ந்து அமர்ந்திருந்தான் ருது. தளர்வு மனதிலும் உடலிலும் தான். தன் மார்போடு அணைத்திருக்கும் தன் மகவின் பிடியில் அப்படியொரு அழுத்தம், இறுக்கம், இறுகப்பற்றுதல், உறவுகளின் ஆழத்தை உனக்குள் ஆழ விதைத்திடும். நீயே உணர்வாய் தான் கொண்டுள்ள பந்தத்தின் பற்றுதலை.
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ, அம்பிகா தன் சோகம் மறைத்து முகத்தை துடைத்துக்கொண்டு ருதுவின் அருகில் சென்று அவனின் தோளில் கை வைத்தார்.
அதுவரை தந்தையாய் தன் சேயினை மடி தாங்கியவன், மகவாய் தன் அன்னையிடம் அடைக்கலம் தேடினான்.
“வலிக்குதும்மா…” மொத்தமாய் உடைந்திருந்தான்.
“எல்லாம் முடிஞ்சுது ருது. அவ்வளவுதான். இனி நீ அடக்கி வைக்க ஒண்ணுமில்லை. உனக்குள் புகைந்துக் கொண்டிருந்த நெருப்பை இன்னைக்கு நீயே அணைச்சிட்ட. அடுத்து என்னன்னு பாரு” என்று தேற்றினார்.
அந்நேரம் வேலை முடித்து வீட்டுக்கு வந்த வேங்கடம் ருதுவை பாராட்டி மகிழ்ந்தார். தான் பெரும் உயரம் சென்ற போது கொண்ட மகிழ்வைக் காட்டிலும், மகனின் செயலில் பெரும் மகிழ்வு கொண்டார்.
வேங்கடம் வந்ததுமே ருது தன்னை மீட்டிருந்தான். தன் கை வளைவில் இருந்தபடியே உறங்கியிருந்த தேஷ்ஷை அம்பிகாவின் கையில் கொடுத்தவன்,
“படுக்க வைங்கம்மா” என்றான்.
அம்பிகா தேஷ்ஷை தூக்கிக்கொண்டு உள்ளே நகர்ந்ததும்,
“கைலாஷ் அமைதியா போகும் ஆளில்லைன்னு முதல்வர் சொன்னார் ருது. நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று அவனின் நலன் குறித்து அக்கறையாகக் கூறினார்.
“இனி அவனால் ஒண்ணுமே பண்ண முடியாதுப்பா. மொத்தமா அடக்கியாச்சு” என்ற ருதுவுக்கே, அத்தனை செல்வாக்கு உள்ள ஆள், தான் வெளியில் வர எவ்வித முயற்சியும் செய்யாது தண்டனையை ஏற்கும் விதமாக ஜெயிலில் சென்று உட்கார்ந்தது ஆச்சரியம் தான்.
இருப்பினும் செய்த குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்கிறான் என்று காவல்துறை அதிகாரியாகக் எண்ணிக்கொண்ட ருதுவுக்கும் கைலாஷ்ஷின் திருந்திய மனதின் பக்கம் தெரிந்திருக்கவில்லை.
ஆசை, பதவி, பணம், உயரம், புகழ் இவை எம்மனிதனையும் அத்தனை எளிதாக விட்டு வைக்காது. அவற்றை தாம் அடக்கி ஆளும் வரைதான் நாம் மனிதர்கள். அவை நம்மை அடக்கி ஆளா ஆரம்பித்துவிட்டால் மிருகத்திலும் நம்மை சேர்த்திட முடியாது. நம்மில் முதலில் அடிவாங்குவது நமது குணம். குணம் இல்லையென்றால் அவை எல்லாம் இருந்தும் பயனில்லை. அதைத்தான் தன் செயல்களுக்குப் பின்னால், மனைவியின் உயிர் பிரிய தானே காரணமாக இருந்த தருணத்தில், பெற்ற மகனே துச்சமாக நினைத்து வெறுத்து ஒதுக்கி தனியாக வாழ்ந்த நாட்களில் கைலாஷ் உணர்ந்து கொண்டது.
கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பதைப்போல், அனைத்து ரவுடிசமும் செய்த கைலாஷ் அனைத்தையும் விட்டொழிந்தால் அவரை போடவும் ஒரு கூட்டம் காத்திருக்கும். அதற்காகவே எடுத்த ஆயுதத்தை கீழே போடாது, தான் என்கிற உயரத்தில் நின்று கொண்டிருந்தார்.
மனைவியின் மரணத்திற்கு பிறகும் ஒருவன் திருந்தவில்லை என்றால் அவனெல்லாம் மிருக இனத்திலும் சேராதவன். உண்மையில் வெளித்தோற்றத்தில் கைலாஷ் அப்படித்தான் இருந்தார்.
ருதுவையும், பிறந்த மூன்று நாட்களே ஆகிய தன் இளைய மகனையும் கைலாஷ் தேடாத இடமில்லை. ருது தான் அனைத்திலிருந்தும் தன்னை மறைத்துக் கொண்டிருந்தானே! அவரின் கண்ணில் படாது தன்னை மட்டுமல்ல தேஷ்ஷையும் தற்காத்துக் கொண்டான். எல்லாம் இந்த ஒரு நாளுக்காகத்தான்.
என்று பணம், பதவிக்காக தன் மனைவியை இழந்து மகனின் கண்ணீரை கண்டாரோ அன்றே தன் குடும்பம் எனுமளவில் மனதில் மாற்றம் கொண்டிருந்தார் கைலாஷ். அந்த மாற்றமே அவரை தற்போது அதீத பலமிருந்தும் அடங்கிப்போக வைத்திருக்கிறது. இதுவே ருது இடத்தில் வேறொரு காவல்துறை அதிகாரி இருந்திருந்தால், நிச்சயம் அவனை கொன்று அடுத்த நிமிடம் கெத்தாக வெளியில் வந்து கை ஆட்டியிருப்பார் கைலாஷ்.
கொலைகாரனோ, திருடனோ வெளியில் எப்படிப்பட்டவனாக இருப்பினும் தன் குடும்பம் என்று வருகையில் நல்லவனாக இருந்திடவே முயல்கின்றனர். அதில் கைலாஷ்ஷும் பொருந்துவார்.
இதனை ருது உணர்ந்தே இருந்தான். அவனிடம் விரக்திப் புன்னகை மட்டுமே! இழக்க வேண்டியவற்றையெல்லாம் இழந்த பின்னர் திருந்தி என்ன பயன் என்பதன் பொருள் பொதிந்த புன்னகை அது.
அத்தோடு கைலாஷ் வெளியில்வர சிறு புள்ளி அளவு வாய்ப்பைக் கூட ருது விட்டு வைக்கவில்லை. அவர் சாகும்வரை நிச்சயம் சிறை வாழ்வு தான்.
தமிழக அரசியலையே ஆட்டி வைத்தவரை மொத்தமாக அழிக்கக் காத்திருந்த அரசியல்வாதிகள் இச்சமயத்தை பயன்படுத்தி கைலாஷ்ஷுக்கு எதிராக ருதுவிற்கு உதவும் வகையில் காய்களை நகர்த்தியிருக்க… கைலாஷ் என்பவரின் அத்தியாயம் முற்று பெற்றிருந்தது.
இந்த முடிவுக்காக அவர் ஆடிய ஆட்டம் கொஞ்சமில்லை. இழந்ததன் மதிப்பீடு… இழந்த பின்னரே உணர்ந்து கொண்டார். வருந்தி பயனில்லை. மகனாக அவரை மன்னித்திட ருது தயாராக இல்லை. ருது கொஞ்சம் இறங்கி வந்திருந்தால், கைலாஷ்ஷின் பாவம் கொஞ்சம் நீங்கியிருக்குமோ?
இறுதியில் இருள் உலகில் தான் செய்த அனைத்தின் நகல்களையும் தானாகவே முதல்வரிடம் ஒப்படைத்திருந்தார் கைலாஷ்.
‘எதற்கு இந்த ஆட்டம்?’
‘எல்லாம் அடங்குவதற்குத்தான்.’
முதல்வர் வாய் திறந்து கேட்கவில்லை. கைலாஷ்ஷும் வாய் திறந்து பதில் சொல்லவில்லை.
கைலாஷ் ஒப்படைத்தவை வெளியில் வந்தால், தமிழகத்தின் அரசியலே ஸ்தம்பிக்க வாய்ப்பிருப்பதால், முதல்வர் அவற்றை என்ன செய்ய வேண்டுமோ செய்திருந்தார்.
தனிப்பட்ட முறையில் ருதுவை பாராட்டிட…
“தன் கடமை” என்ற சொல்லோடு முடித்துக் கொண்டான்.
கைலாஷ்ஷின் அத்தியாயத்தை தங்களின் வாழ்நாளிலிருந்து ருது அழித்திடவே முனைப்பாக செயல்பட்டான். முனைப்பில் வெற்றியும் பெற்றுவிட்டான். ஆனால் அந்த வெற்றியை மனதால் ஏனோ ஏற்க முடியவில்லை. தன் கைகளால் கொன்றிருந்தால் நிறைவு கொண்டிருப்பானோ?
பிறரின் அழிவிலும், வருத்தத்திலும் நிறைவு கொள்பவன் மனிதனல்ல. ருது மனிதனாக இருந்திடவே காலமும் நினைத்ததோ அவனுக்கு அந்நிறைவை தராது ருதுவை மனிதனாகக் காட்டிவிட்டது காலம்.
ருதுவிடம் ஆழ்ந்த மூச்சு ஒன்று வெளியேறியது.
“அவ்வளவு தான்’ப்பா. எல்லாம் முடிந்தது.” அறைக்குள் புகுந்துகொண்டான்.
வேங்கடத்திற்கு எதுவும் புரியவில்லை என்றாலும், மகனால் நகரத்துக்கு நல்லது நடந்திருக்கிறது. அதுவே போதுமெனும் எண்ணம்.
___________________________________
அடுத்தடுத்த நாட்களில் கைலாஷ்ஷின் பரபரப்பு நீங்கி, கைலாஷ் என்பவனையே மக்கள் மறந்திருந்தனர். கைலாஷ் என்பவனின் மாற்றம், பல சிறு சிறு ரவுடிகளின் ஆட்டத்தை அதிகரித்திருக்க… மொத்தமாக தூக்கி உள் வைத்திருந்தான் ருது.
“நமக்குன்னே எங்கிருந்து தான் வருவானுங்களோ?” வழக்கம்போல் வெங்கட் புலம்பிட,
அவனிடம் முடிக்காத வழக்கு ஒன்றை கொடுத்து திசை திருப்பியிருந்தான் ருது.
“இப்போ தான் திருட்டு, கொலை, கொள்ளைன்னு இல்லாம கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்க முடியுது.” மல்லிகா கிருஷ்ணனிடம் சொல்லிட…
“எல்லாம் கைலாஷ் இல்லாம போனதால் தான். மொத்த குற்றங்களையும் அவன் ஒருத்தன் மட்டுமே குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தானே” என்றார் கிருஷ்ணன்.
“கைலாஷ் இல்லைன்னா… வேற கேஸ் இல்லையா என்ன?” என்ற ருது, “அந்த கேர்ள்ஸ் ஹாஸ்டல் பஸ் ஸ்டாப்பில் பசங்க கலாட்டா பன்றாங்க தகவல் வந்ததே! அதை போய் என்னன்னு பாருங்க” என்று அனுப்பி வைத்தான்.
ராதிகாவும் உடன் செல்ல முயல…
“ஃபீல்ட் வொர்க் உங்களுக்கு இல்லைன்னு சொல்லியிருக்கனே” என்று உட்கார வைத்திட்டான்.
“பெண்டிங் கேஸ் ரிப்போர்ட்ஸ் தனியா எடுத்து வைய்ங்க” என்ற ருது, தன்னுடைய அலைபேசி சத்தத்தில் தள்ளிச் சென்றான்.
அம்பிகா தான் அழைத்திருந்தார்.
“சொல்லுங்கம்மா?”
“தேஷ்’க்கு காய்ச்சலா இருக்கு ருது. சூடு அதிகமா இருக்கும்போல. ரொம்பவே சோர்ந்து போயிட்டான்” என்றவர், “ஷிவன்யாவுக்கு கால் பண்ணேன், பீடியாட்ரிஷன் அப்பாயின்ட்மெண்ட் வாங்கி வைக்கிறேன் சொன்னாள். ஹாஸ்பிடல் கிளம்பிட்டேன்” என்றார்.
“நானும் கிளம்பிட்டேன் ம்மா. வரேன்” என்று அலைபேசியை வைத்தவன், குறுக்கும் நெடுக்கும் இரண்டு முறை நடந்தான். இடையில் கைகளை குற்றி இதழ் குவித்து காற்றினை வெளியேற்றினான்.
ஷிவன்யா மருத்துவரிடம் அனுமதி பெற்றிருப்பதாக சொல்லியதும் ருது யூகித்துவிட்டான். அது இனியனாகத்தான் இருக்க முடியுமென்று. இன்று இந்த சந்திப்பு கட்டாயம் நடந்தே ஆகும். தவிர்க்க முடியாது. கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தான்.
இமையாளை கூட அசாராது நேருக்கு நேர் ஒன்றுமே இல்லையெனும் பாவனையில் கடந்துவிட்டான்.
இனியனை… நண்பனை அப்படி முடியாதென்றே தோன்றியது.
‘நிச்சயம் இனியன் விலகளை காண்பிப்பான். பொறுத்துக்கோ!’ என தனக்குத்தானே வலியுறுத்திக் கொண்டவனாக, தன்னுடைய வாகனத்தில் ஏறி உயிர்பித்தான்.
இனியன் தன்னை யாரோப்போல் பார்க்கவும் வாய்ப்பு உள்ளதென்பதற்கு ருதுவின் எண்ணத்திற்கு காரணம் உள்ளது. இனியன் நிறுத்திய மின்னஞ்சல்கள். வழமைப்போல் இனியன் அனுப்பிக் கொண்டிருந்திருந்தால், ருது இனியனை முன்னரே தானாகச் சென்றும் சந்தித்திருப்பான். இனியன் மின்னஞ்சல்களை நிறுத்தியிருக்க, நண்பனின் கோபத்தை புரிந்துகொண்டான் ருது.
காதலியிடம் தோன்றாத நடுக்கம் நண்பனிடத்தில்.
‘பேசலனா இருக்கு. முகத்திலே ஒரே குத்து. தங்கச்சி மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டு மட்டும் போகட்டும்? நான் யாருன்னு காட்டுறேன். எப்படி பேசாமல் இருப்பான்னு பார்க்கிறேன்’ என்று மனதில் நண்பனை நினைத்தவாறு மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
வரவேற்பு பகுதியில் விசாரித்து குழந்தைகள் பிரிவிற்குள் வந்தவன், இனியனின் அறை எண் சரிபார்த்து செல்ல அங்கு இனியன் உட்பட யாருமில்லை.
அடுத்த கணம் ஷிவன்யாவிற்கு அழைத்து விசாரித்தான்.
“பீவர் ரொம்பவே ஹைப் ஆகியிருக்கு அண்ணா. அட்மிட் பண்ணியிருக்காங்க” என்று அனுமதிக்கப்பட்டிருக்கும் சிகிச்சை அறையின் எண்ணை கூறி வைத்திட்டாள்.
சாதாரண காய்ச்சல் என்று நினைத்து வந்திருக்க… இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றதும் அதுவரை தேஷ் குறித்து வந்திடாத பதற்றம் ருதுவினுள்.
நீண்ட எட்டுக்கள் வைத்து ஷிவன்யா சொல்லிய அறைக்கு முன்பு ருது வர, வெளியில் யாருமில்லை என கதவினைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
“வாப்பா.”
“வாங்கண்ணா!”
தேஷ்ஷின் குறிப்பேட்டில் முதுகுக்காட்டி நின்றபடி எழுதிக் கொண்டிருந்த இனியனின் கை அவர்கள் இருவரின் அழைப்பிலும் யாரென்ற கணிப்பில் நின்று தொடர்ந்தது.
எழுதும் நேரம் இனியனுக்கு போதுமானதாக இருந்தது. தன்னை சடுதியில் நிலைப்படுத்திக் கொண்டான்.
குறிப்பேட்டை மேசை மீது வைத்தவன்,
“குட்டி நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தீங்கன்னா பீவர் குறைஞ்சிடும். அப்புறம் ஐஸ்க்ரீம், சாக்லெட் எல்லாம் நிறைய சாப்பிடலாம் ஓகேவா?” எனக் கேட்டு குழந்தையின் கன்னம் தட்டி நிமிர்ந்தான்.
“பீவர் குறையும் வரை ட்ரிப்ஸ் போடுங்க. சிக்ஸ் ஹவர்ஸ் ஒன்ஸ் சிரப் கொடுங்க. நடுவில் அப்பப்போ வெட் பாத் பண்ணுங்க” என அருகிலிருந்த செவிலியிடம் உரைத்தவன், “டூ ஹவர்ஸ் ஒன்ஸ் டெம்பரேச்சர் செக் பண்ணி நோட் பண்ணுங்க” என்று திரும்பினான்.
சுவற்றில் ஒரு கால் ஊன்றி மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனையே தான் பார்த்திருந்தான் ருத்விக்.
சாதாரணமாக நிற்பவரை பார்க்கும் பார்வையில் கடந்துவிட்டான் இனியன். உள்ளுக்குள் கண் முன்னே நிற்கும் நண்பனை ஆரத் தழுவிட பரபரத்த கைகளை கோர்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டான்.
“பயப்பட ஒன்னுமில்லைங்கம்மா! குழந்தை ரொம்பவே பயந்ததினால் காய்ச்சல் வந்திருக்கு. டெம்பரேச்சர் அதிகமாக இருக்கவே, பிட்ஸ் வர சான்ஸ் இருப்பதால் அட்மிட் பண்ண வேண்டியதாகிருச்சு. மார்னிங் கம்மியாகிட்டால் கூட வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்” என்று அம்பிகாவிடம் தெரிவித்த இனியன்,
“இந்த மெடிசன்ஸ் எல்லாம் சிஸ்டரிடம் வாங்கிக்கொடுங்க” என்று ஷிவன்யாவிடம் மருத்துவ காகிதத்தைக் கொடுத்தவனாக வெளியேறினான்.
கதவினை திறந்து மூடிய ஒரு வினாடி இனியனின் பார்வை அழுத்தமாக ருதுவின் மீது படிந்து மீண்டது.
“அப்பா…”
நண்பன் சென்ற திசையிலே பார்த்திருந்த ருது மகனின் காற்றாகிய குரலில் கலைந்து அருகில் சென்றான்.
“தேஷ் குட்டி ஸ்ட்ராங் பாய் தானே! அப்புறம் என்னதிது? ஹாஸ்பிடல் பெட்டில் வந்து படுத்துட்டாங்க. பாட்டி பயந்துட்டாங்க பாரு” என்று தேஷ்ஷின் அருகில் அமர்ந்த ருது, குழந்தையின் நெற்றியில் கை வைத்து ஆதுரமாக வருடிக் கொடுத்தான்.
“சாரிப்பா…” என்று தேஷ் மொழிய, விட்டுச்சென்ற தன்னுடைய ஸ்டெத்தை எடுக்க கதவினைத் தட்டிவிட்டு உள்ளே வந்த இனியனுள் மெல்லிய வலி. லாவகமாக மறைத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.
ருது கண்களை இறுக மூடி திறந்தான்.
ஷிவன்யா தனது அண்ணனின் மகன் என்று சொல்லியதுமே தேஷ் தனது ருதுவின் மகன் என்று இனியன் புரிந்து கொண்டான்.
இருப்பினும் அவனால் சிலதை ஏற்று கடக்க முடியவில்லை. தனது அறைக்கு வந்தவன் இருக்கையில் அமர்ந்து மேசையில் தலை கவிழ்ந்து படுத்துவிட்டான்.
ஏதோ ஒரு புள்ளியில் தனது தங்கையின் நம்பிக்கை உண்மையென்று இருந்திடாதா என்கிற இனியனின் எண்ணம் பொய்த்துப்போனது.
கண் முன்னே காணும் காட்சியை நம்பிட மனம் அழுத்திய போதும், இனியனால் ஏனோ நண்பனை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
‘இமயா…’ தங்கை குறித்து அவனது கவலை அதிகமாகியது.
‘ருதுவின் மனைவி எங்கே?’ தோன்றிய கணமே, ‘அவனே வேணாங்கிற போது அந்தப்பொண்ணை பற்றி தனக்கெதற்கு?’ என ஒதுக்கி வைத்தான்.
ஷிவன்யா மருந்துகள் வாங்கிட செல்ல… தேஷ்ஷும் தந்தையின் கரத்தை அழுத்தமாகப் பற்றியவனாக உறங்கிப்போனான்.
“இந்த தம்பி தான் இனியனா?” அம்பிகா கேட்டிட, எப்படிம்மா எனும் கேள்வி பொதிந்த பார்வை மட்டுமே ருதுவிடம்.
“நீ அவரை பார்த்திட்டே இருந்த பார்வையில் ஒரு யூகம்” என்ற அம்பிகா, “போய் பேசலாமே ருது” என்றார்.
“செம கோபத்தில் இருக்கான் போலம்மா!”
“அப்படியே நீ பயந்தவன் தான் போ” என்ற அம்பிகா, “இறங்கிப்போகும் இடத்தில் நீதான் இருக்க ருது. உண்மை தெரியும் வரை தான் அவங்க கோபமெல்லாம். நீ முன்ன ஒரு அடி வைப்பதில் தப்பில்லை” என்றார்.
விடயமறிந்து வேங்கடமும் வந்துவிட்டார். அவர்களது பேச்சு நின்றுபோனது.
“குழந்தைக்கு இப்படின்னா உடனே சொல்லமாட்டிங்களா?” என்று கடிந்தவர், “எழுந்திருடா” என்று ருதுவை கிளப்பிவிட்டு தேஷ் அருகில் தான் அமர்ந்துகொண்டார்.
வேங்கடத்திற்கு தேஷ் என்றால் கொள்ளைப்பிரியம். அதனை சின்ன சின்ன செயலிலும் தன்னைப்போல் காண்பித்திடுவார்.
மருந்துகள் வாங்கிக்கொண்டு சிவன்யாவும் வர, நால்வரும் தேஷ்ஷின் உடல் சூடு குறைவதற்காகக் காத்திருந்தனர்.
இரவு யாராவது ஒருவர் தான் உடனிருக்க வேண்டுமென செவிலி சொல்ல, ருது தானிருப்பதாக சொல்லி மற்ற மூவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்திட்டான்.
மதியம் அங்கு வந்தது முதல் காக்கி உடையிலே தான் இருக்கின்றான்.
இரவு ஒன்பது மணியளவில் பார்வையிடலுக்கு இனியன் வர, தேஷ்ஷிடமிருந்து தள்ளி நின்றுகொண்டான் ருது.
குழந்தையை பரிசோதித்த இனியன்,
“என்ன சாப்பிட்டான்?” எனக் கேட்டான்.
ருது தன்னையா என்பதைப்போல் அவ்வறையை சுற்றிப் பார்த்திட, அதுவரை அங்கிருந்த செவிலியும் அப்போதுதான் வெளியில் சென்றிருப்பார் போலும்,
“என்கிட்டவா கேட்கிறீங்க?” என இதழுக்குள் மறைத்த புன்னகையோடு ருது கேட்டிருந்தான்.
“இங்க நீங்க தானே இருக்கீங்க?” என்று கடுப்போடு கேட்ட இனியன், “பேபி ஓகே. டெம்பரேச்சர் குறைய ஆரம்பிக்குது” என்று குறிப்பேட்டை பார்வையிட்டுக்கொண்டே சொல்லியவன், “பாதி நேரத்துக்கு பீவர் இருந்தால் சிரப் கொடுங்க. மார்னிங் வந்து பார்க்கிறேன்” என்று வெளியேற முயல ருது இனியனின் கையினை பற்றி பிடித்திருந்தான்.
“இனியா!”
“வேணாம்… சப்புன்னு அறைஞ்சிடுவேன்” என்ற இனியன், “வேணாம் போனவங்க அப்படியே இருங்க” என்று ருதுவின் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொண்டான்.
“நீ சொல்லிட்டுப்போனது பொய்யாதான் இருக்கும்ன்னு இத்தனை வருடம் நம்பிட்டு இருந்த எங்களை மொத்தமா முட்டாளாக்கிட்டல?” என வலியோடுக் கேட்டிருந்தான் இனியன்.
“இல்லைடா” என்று பேச முனைந்த ருதுவை வாயில் விரல் வைத்து பேசாதே என்று தலையாட்டிய இனியன்,
“ஏதோவொரு விளக்கம்… கடந்து போன வாழ்வை திருப்பிக் கொடுத்திடுமா? நீ சொன்னதை நம்பாமல் பைத்தியக்காரி மாதிரி உன்னை மட்டுமே நினைச்சு வாழ்ந்திட்டு இருக்கவளோட வலி தான் ஒன்னுமே இல்லைன்னு ஆகிடுமா?” எனக் கேட்டிருந்தான்.
சொல்வதற்கு ஆயிரமாயிரம் பதில்கள் இருந்தும் மௌனமாக நின்றிருந்தான் ருத்விக்.
“இப்படியே யாரோ மாதிரியே கடந்திடுவோம். இனியாவது நான் என் தங்கச்சி வாழ்க்கையை பார்க்கணும்” என்று நண்பனுக்கு வார்த்தையால் வலிக்க வலி கொடுத்து நகர்ந்த இனியன்,
“முடியலடா” என்று தழுதழுப்பாக மொழிந்து ருதுவை தாவி அணைத்திருந்தான். ருதுவின் அணைப்பும் கண்ணீரோடு இறுகியது.
நட்பு…
விந்தையான பந்தம்.
சொல்லில் அடங்கிடாத சொந்தம்.
மூன்றெழுத்தில் உலகத்தை நிரப்பிடும்.
பல உறவுகளை மிக எளிதாக தன்னகத்தில் அடக்கிவிடும்.