தூரமே தூரமாய் 23
தங்களின் வலி, சோகம்…
பிரிவின் துயரை ஒற்றை அணைப்பில் ஈடு செய்திட நினைத்தனரோ?
ருத்விக் – இனியன்
பெரும் வருத்தத்திலிருந்து மீட்டெடுக்க சிறு அணைப்பு போதுமா? அவர்களுக்கு போதுமானதாகவே இருந்தது.
“மச்சான்…”
ருதுவின் தழுதழுப்பில் அணைப்பிலிருந்து விலகிய இனியன், நண்பனின் கன்னத்தில் பளாரென்று ஒன்று வைத்தான்.
கன்னம் வலித்த போதும் ருதுவின் இதழ்கள் நீண்டது. கண்களில் ஏக்கத்தின் சுவடு மினுமினுப்பாய்.
இனியனால் ருதுவின் அம்முகத்தை வருத்தத் தோன்றவில்லை. இருப்பினும் தன் கோபம் தீர மற்றொரு கன்னத்திலும் அடித்தவன், மீண்டும் இழுத்து அணைத்திருந்தான்.
“சாரி கேட்கணுமா?”
“கொன்னுடுவேன்.”
“கோபம் போயிடுச்சா?”
“இந்த முகத்தை பார்த்த அப்புறமும் இருக்குமா?”
“பேசலாமா?”
“பெர்மிஷனெல்லாம் கேட்குறீங்க டிசி சார்.”
இனியனுக்கு நிறைய கேட்க வேண்டும். ருதுவிற்கு நிறைய சொல்ல வேண்டும். இரண்டுமே அங்கு நிகழவில்லை. இருப்பினும் எவ்வித முன் நிகழ்வின் சுவடுமின்றி நட்பினை மட்டுமே பற்றாய் கொண்டு இயல்பாகியிருந்தனர்.
ஒரு உறவு போதும். பல வருடங்கள் சென்றும் மீண்டும் ஒருநாள் சந்தித்திடும்போது முன்கதை எதுவுமின்றி பற்றிக்கொள்ளும் ஓர் உறவு போதும். உன் வாழ்வை அழகாக்கிட. உன் தனிமையை அர்த்தமாக்கிட.
இங்கு ருதுவிற்கு அப்படியொரு உறவு இனியன்.
எதையுமே கேட்டிடாது தன் மீது இந்நொடியும் நம்பிக்கை வைத்துள்ள இனியனின் இந்த ஆத்மார்த்த நட்பு போதுமானதாக இருந்தது. இனி எதையும் இனியனிடம் மறைக்கக்கூடாது என ருது எண்ணுவதற்கு.
கைலாஷ் தண்டனையை ஏற்ற நொடி முதல் மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி வைத்திட நினைக்கிறான். அத்தனை எளிதாக ஏதோ ஓரிடத்தில் இறக்கிட முடியாதே! நண்பனிடம் கொட்டி கவிழ்த்திட முயன்றுவிட்டான்.
ருது திரும்பி தேஷ்ஷை பார்த்திட…
“நல்லா தூங்குவான். மார்னிங் தான் எழுவான்” என்று சொல்லிய இனியன், செவிலியை அழைத்து தேஷ்ஷுடன் இருக்க பணித்தான்.
“சாப்பிட்டியா?”
கேட்ட நண்பனின் அக்கறையில் ருதுவின் கண்கள் பனிக்கும் போலானாது. சிரித்து மறைத்தான். எத்தனை நாளாயிற்று இவ்வார்த்தையை அக்கறையாக, உரிமையாகக் கேட்டு.
“கேன்டின் போகலாம்” என்ற இனியன், தன்னறைக்குச் சென்று கோர்ட் மற்றும் ஸ்டெத்தை கழட்டி வைத்துவிட்டு வந்தான்.
“யூனிஃபார்ம் சேன்ஜ் பண்ணியிருக்கலாம்.” ருதுவின் காக்கி உடையை பார்த்து இனியன் சொல்ல…
“பழகிப்போச்சு” என்ற ருதுவிடம் மனதில் பல யோசனை. எங்கு ஆரம்பித்து எதில் தொடர்ந்து எங்கு முடிப்பதென.
கேன்டின் வந்ததோ, அமர்ந்ததோ, இனியன் சென்று இருவருக்கும் உணவு வாங்கி வந்து முன் வைத்ததோ ருதுவின் சிந்தையில் பதியவில்லை.
“என்ன தின்கிங் ருது? எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம். ஃபர்ஸ்ட் சாப்பிடு” என்றான் இனியன்.
ருது கை கழுவி வர எழும்பிட, இனியன் உணவடங்கிய தன் கரத்தை ருதுவின் முன்பு நீட்டியிருந்தான்.
“இனியா!” இம்முறை ருதுவின் கண்ணில் நீர் திரண்டு உருண்டது. துளியாய்.
“என்னடா? சாப்பிடு” என்ற இனியன், “நான் கொடுத்ததே இல்லையா என்ன?” எனக் கேட்டான்.
ருதுவும் நெகிழ்வாய் வாய் திறந்து வாங்கிக்கொண்டான். இனியன் முழு உணவையும் ஊட்டி முடித்தே விட்டான்.
இனியனால் ஓரளவுக்கு நண்பனின் மனதில் சுமக்க முடியா பாரம் உள்ளதென்று புரிந்துகொள்ள முடிந்தது. அது என்னவாக இருந்தாலும், அவன் சொல்லி முடிக்கும் தருணம் தான் பக்கபலமாக நிற்க வேண்டுமென நினைத்தான்.
என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், உனக்கு நான் இருக்கிறேன். எப்போதும் நான் உன் இனியன் தான் என்பதை உணர்த்துவதற்கே இனியன் எவ்வித தயக்கத்தையோ, தடுமாற்றத்தையோ இத்தனை வருடங்கள் பிரிந்து இருந்தோம் என்ற ஒதுக்கத்தையோ காண்பிக்காது முன்பு போல் இயல்பாய் நடந்து கொள்கிறான்.
சிறிய செயலில் உனக்கு நானிருக்கிறேன் என்பதை காட்டிவிட்டான்.
எவ்வித எதிர்பார்ப்புமின்றிய ஒற்றை அன்பு போதும்… இப்புவியில் உன்னை சுகவாசியாக ஜீவிக்க வைத்திடும்.
இருவரும் மருத்துவமனைக்கு முன் பகுதியிலிருக்கும் பூங்காவிற்குள் நுழைந்து அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர்.
ருது மௌனத்திருக்க… இனியனின் அலைபேசி அழைத்தது.
“சாப்பிட்டேன். வர லேட்டாகும் டா.”
இனியன் பதில் சொல்லியதிலே இமையாள் என கண்டுகொண்டான் ருது.
“ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?”
அலைபேசியை பாக்கெட்டில் வைத்த இனியன், ருது கேட்டதற்கு மெல்ல புன்னகைத்தான்.
“இல்லைன்னு சொல்லமாட்டேன்” என்றான்.
அடுத்து ருதுவிற்கு என்ன எப்படி பேசவென்று தெரியவில்லை. இனியனிடம் இத்தகைய புரிதலை ருது எதிர்பார்க்கவில்லை. திட்டுவான், கத்துவான், இனி பேசவே பேசாதே என்று விலகி செல்வானென்று தான் ருது நினைத்திருந்தான்.
நண்பனை நினைக்கையில் தான் கொண்ட நட்பில் கர்வமாக உணர்ந்தான் ருது.
“சொல்லணும் அவசியமில்லை ருது. உன்னை வருத்தி அதை தெரிஞ்சிக்கணும் இல்லை. இமையாள் விஷயத்தில் நீ துரோகம் செய்திருப்பன்னு நான் நம்பமாட்டேன். உன் காதலை பக்கமிருந்து பார்த்திருக்கேன். ஏதோ மீள முடியா சுழலில் மாட்டிக்கிட்ட… உன்னோடு சேர்ந்து இமயாவும் அதை சுமக்க வேண்டான்னு விலகி போயிட்ட… இதைக்கூட என்னால் புரிஞ்சிக்க முடியாதா? நீ கஷ்ட்டப்பட்டு எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்” என்ற இனியனின் கரத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் ருது.
“நான் சொல்லணும் இனியா! மூச்சு முட்டுது. இறக்கி வைக்க முடியாத பாரம். ஆனாலும் உன்கிட்ட கொட்டனும் தோணுதே” என்ற ருது,
முதல் வரியிலே இனியனுக்கு பெரும் அதிர்வை கொடுத்திருந்தான்.
“ருது!?”
“எஸ்… கைலாஷ் தான் என்னை பெத்தவர்.”
அப்போதும் அவரை அப்பா என்று சொல்ல ருதுவின் மனம் இடம் கொடுக்கவில்லை.
பிடித்த கரத்தை விடாது ருது அனைத்தும் சொல்லி முடித்தான். பல இடங்களில் இனியனின் நெஞ்சம் நண்பனுக்காக விம்மியது. முகம் கண்டிடாத அவனது தாய்க்காக துடித்து அடங்கினான். இதில் தவறிழைக்காத பிஞ்சுக்காக பரிதாபப்பட்டான்.
தற்போது இனியனின் பிடி அழுத்தத்தில் இறுகி இருந்தது.
இங்கு தாங்கள் ருது விட்டுச்சென்றதில் அவன் மீது கோபம் கொண்டு இருந்த தருணம், அவன் எத்தகைய பெரும் துயரை கடந்து வந்திருக்கிறான் என்று நினைக்கையிலே இனியனுக்கு அத்தனை வலியாக இருந்தது.
இதற்கு என்ன ஆறுதல் சொல்ல வேண்டுமென்று இனியனுக்குத் தெரியவில்லை.
ருதுவை ஆதுரமாக தன் அணைப்பிற்குள் பொத்திக் கொண்டான்.
ஏங்கிய அரவணைப்பு நண்பனிடம் கிட்டிட, அடக்கி வைத்திருக்கும் பாரத்தை கண்ணீரால் கரை சேர்த்தான் ருது.
“எல்லாத்தையும் நீயே முடிவுக்கு கொண்டு வந்துட்ட ருது. அப்புறமும் எதுக்கு இந்த தவிப்பு” என்ற இனியனின் கரம் தன் தோளில் அழுந்தியிருக்கும் நண்பனின் பின்னந்தலையை வருடிக் கொண்டிருந்தது.
“இதை நீ அப்பவே சொல்லியிருக்கலாம் ருது.” இனியனிடம் பெரும் ஆதங்கம்.
“அப்போ நானிருந்த மனநிலை…”
“புரியுது. கொஞ்சம் கோடிட்டு காட்டியிருந்தாலும் உன்னை தனியா விட்டிருக்கமாட்டேன்” என்ற இனியன், “ஷிவன்யா பேமிலிக்கு நிறையவே தேன்க்ஸ் சொல்லணும்” என்றான்.
“ம்ம்ம்… அம்பிகா அம்மா மட்டும் இல்லைன்னா இந்த தெளிவுக்கூட எனக்கு இருந்திருக்காது” என்றான் ருது.
இப்படி நடந்து முடிந்ததையே பேசி ருதுவை மேலும் கவலைக்கொள்ள வைத்திட விரும்பாத இனியன் லாவகமாக பேச்சை மாற்றி ருதுவையும் சில நிமிடங்களில் இயல்பாக்கியிருந்தான்.
“இமையாளிடம் எப்போ சொல்லப்போற?”
“அவகிட்ட சொல்ற மாதிரியே இல்லை” என்ற ருது, “இப்போ நீ வந்த மாதிரியே, எதுவுமே என்னைப்பற்றி தெரியாம என் காதல் மட்டுமே போதும்ன்னு அவ வரணும்” என்றான்.
இனியன் ருதுவை வெட்டவா குத்தவா என்கிற ரீதியில் பார்த்திட…
“பின்னாடி எங்க காதலில் இதுவொரு கருப்பு புள்ளியா இருந்திடக்கூடாதே மச்சான்” என்றான் ருது.
“திஸ் இஸ் டூ மச் டா. அவள் கோபத்தில் இருக்காள். எப்படி வருவாள். அதுவும் தேஷ் இருக்கும் போது?” இம்முறை தங்கைக்காக கோபம் கொண்டான் இனியன்.
“நீ வந்த தானே! எதுவும் தெரியாமல் ஏத்துக்கிட்ட தானே! நான் இப்போ சொல்லாமல் இருந்திருந்தாலும் என்கிட்ட நார்மலாகியிருப்பதானே!” என்ற ருதுவின் புஜத்தில் குத்திய இனியன்,
“ரொம்ப பண்றடா” என்றான்.
சிரித்த ருது, “சீக்கிரம் கல்யாணம் பண்ணி கூடவே வச்சிக்கணும் டா” என்றான்.
“அப்போ அவள் விருப்பமில்லாம தான் நீ தாலி கட்டணும்” என்றான்.
“ம்ம்ம்… பார்ப்போம். எப்படி நடக்குமோ அப்படித்தானே நடக்கும்” என்ற ருதுவை முறைத்துக்கொண்டே, “அவளை திரும்ப ஏதும் கஷ்டப்படுத்த நினைச்ச… நான் உன்கிட்ட அவளோட அண்ணனா மட்டும் தான் நடந்துப்பேன்” என்று இனியன் விரல் நீட்டி எச்சரித்தான்.
“உண்மையெல்லாம் தெரியாமல்… இன்னொருத்தரோட புருஷனை அவள் தேடிவர சான்ஸே இல்லை” என்ற இனியனிடம்,
“அதுக்கும் ஏதும் நடக்கும் டா” என்ற ருது, “சாதகமாக நடப்பதை யூஸ் பண்ணிப்பேன். என் பக்கமிருந்து என்னை என்ன வேணாலும் பண்ணிக்கட்டும்” என்றான்.
இனியன் ஆயாசமாக தலையை உலுக்கினான்.
“உன் லாஜிக்கே புரியல.”
“ஷிவாவே வந்து லவ் சொல்லணும் நினைக்கிறல நீ?” என்ற ருதுவின் கேள்வியில் இனியன் அப்பட்டமாக அதிர்வைக் காட்டினான்.
“இதுவும் அப்படித்தான். நம்மை விரும்புறவங்க, நாம எப்படியோ அப்படியே நம்மளை ஏத்துக்கணும்” என்றான்.
“இங்க நான் மட்டுமே அப்படின்னா, இமையாளை பார்த்த நொடி எல்லாம் சொல்லி என் பக்கம் வரவழைத்திருப்பேன். எங்க ரெண்டு பேரோட வாழ்வில் தான் தேஷ் வாழ்வு அடங்கியிருக்கு. இமையாளை பொறுத்தவரை தேஷ் அவளோட மகனா அவள் மனதில் பதியனும். அவள் ஏத்துக்கணும். அப்போ தான் என் பக்கம் அவளால் புரிஞ்சிக்க முடியும். எவ்வித வருத்தமோ கோபமோ இல்லாமல் என்னோட அவளால் வாழ முடியும்” என்று ருது விளக்கிட, அதிலுள்ள நியாயம் இனியனுக்கு புரிந்த போதிலும்,
“இமையாளாக வருவது சாத்தியமற்றது” என்றே கூறினான்.
ருதுவிடம் மென் முறுவல்.
இமையாளிடம் எதையும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டான்.
ருது இதனை சொல்லாமல் இருந்திருந்தாலும் கூட இனியன் தங்கையிடம் சொல்லிட மாட்டான். ருதுவாக அவனது பக்கங்களை விளக்குவது வேறு, பார்வையாளராக தான் சொல்வது வேறென்று இனியனுக்குத் தெரிந்ததால் ஒப்புக்கொண்டான்.
_________________________________
தினமும் காலை மாலையென முன்னால் வந்து நிற்கும் ருது மூன்று தினங்களாக வரவில்லை என்றதும் இமையாள் சோர்ந்து போனாள்.
அவளை பொறுத்தமட்டில் ருது வேறொரு பெண்ணின் கணவன். குழந்தை உள்ளது. இருப்பினும் இன்னொரு பெண்ணுடன் தொடர்புப்படுத்தி அவனை அவளால் பார்க்க முடியவில்லை.
முன்னால் வந்தால் கோபத்தைக் காட்டுபவள், அவனை மனதால் தேடவும் செய்கிறாள்.
‘இமயா என்னாச்சு உனக்கு? இது சரியில்லை’ என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவள் அவசரமாக பள்ளிக்கு கிளம்பிச் சென்றாள்.
“லீவெல்லாம் விட்டாச்சு சொன்னாள். இப்போ அரக்க பறக்க கிளம்பிப் போகிறாள்” என்று தீபா புலம்ப,
“அட்மிஷன் வொர்க் இருக்கும்மா. வன் வீக். அப்புறம் வீட்டில் இருப்பாள்” என்றான் இனியன்.
“அவளை ஒன்னும் சொல்லிடக் கூடாதே” என்ற தீபா, “கொஞ்ச நாளா ரொம்ப சந்தோஷமா இருக்கியே என்ன காரணம்?” எனக் கேட்டார்.
“கிடைக்க வேண்டியவங்க கிடைச்சிட்டாங்க. அதனாலவா இருக்கும்” என்றவனை தீபா குறுகுறுவென பார்த்து வைத்தார்.
“என்னம்மா?”
“பொண்ணு ஓகே சொல்லிட்டாளா டா?”
“அய்யோ அம்மா… அப்பா இருக்கார் வீட்டில்” என்று இனியன், சுரேந்தரின் அறையை பார்த்தவாறு சொல்ல, அவரே அலுவலகம் செல்ல கிளம்பித் தயாராகி வந்தார்.
“இமயா பையன் பார்க்க சொல்லியிருந்தாள். இதுல நாலு ஃபோட்டோ இருக்கு. என்னன்னு பாரு” என்று கவர் ஒன்றை வைத்தவர் மகனின் அதிர்வை பார்க்காது சென்றுவிட்டார்.
ருதுவை நேரில் பார்த்தது முதல் இமையாளால் நிலையாக இருக்க முடியவில்லை. அதுவும் ருது எதுவும் நடவாததைப்போல் முன்னால் வந்து சீண்டிட, மீண்டும் தன் மனம் அவன்பால் ஈர்க்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சியே சுரேந்தரிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள்.
இமையாளை பொறுத்தமட்டில் தன் காதலால் ருதுவின் வாழ்வை கெடுத்திடக் கூடாது என்கிற பயம். அதற்காக மட்டுமே இந்த சம்மதம்.
அவளாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று, குழந்தை இருக்கும்போதே ருது ஏன் தன்னைத் தேடி வர வேண்டும் என்பது தான்.
‘காதல் தான் இல்லை. நட்பாவது வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறானா?’ என நினைத்தாளே தவிர அப்போதும் ருதுவை அவள் தவறாக நினைக்கவில்லை.
ஆனால் அவள் முடிவெடுத்துவிட்டாள். இனி அவளது வாழ்வில் ருது இல்லை.
‘நட்புக்கு பின்னால் காதல் அமையலாம். ஆனால் காதலுக்கு பின்னால் நட்பு அமையாது.’
இதனை இமையாள் ஆணித்தரமாக நம்பினாள். தன் காதலால் ருதுவின் வாழ்வில் சிக்கல் வந்துவிடக் கூடாதென மனதின் காதலை புதைத்துவிட்டு வலியோடு மற்றொரு வாழ்வை ஏற்கும் முடிவுக்கு வந்துவிட்டாள்.
ருது அவளை யாரோபோல் கடந்து அவள் பக்கம் திரும்பாமலே இருந்திருந்தால் கூட இமையாள் தன் காதலோடு மட்டும் வாழ்ந்திருப்பாளோ? அவன் பக்கம் வர, தூரம் செல்வதே சரியென சொல்கிறது அவளது மனம்.
‘தூரமே தூரமாய்’ அவளது காதலை தள்ளி வைத்திட முடிவு செய்திட்டாள்.
இனியன், சுரேந்தர் வைத்துச்சென்ற உரையை கையால் கூட எடுக்கவில்லை.
“பார்க்கலையாடா?”
“டூ ஹவர்ஸில் பிளைட் ம்மா. அரேஞ் பண்ணனும். வந்து பார்த்துக்கிறேன்” என்று எழுந்து சென்ற இனியன், ருதுவிற்கு அழைத்து பொறிந்து தள்ளினான்.
“இப்போ சந்தோஷமா உனக்கு? நீயே ஆப்பு வச்சிக்க உனக்கு” என்று காட்டமாகியிருந்தான்.
“என்னன்னு சொல்லாம ஏன்டா கத்துற?” என்ற ருது, “நீ மெடிக்கல் கான்பிரன்ஸுக்கு பிரான்ஸ் போறன்னு சொன்ன. பிளைட் எப்போ?” எனக் கேட்டான்.
“இது ரொம்ப முக்கியம்” என்று கடிந்துகொண்ட இனியன், “இமையாளுக்கு அப்பா பையன் பார்த்திருக்கிறார் டா. இமையாள் என்கிட்ட கூட சொல்லல. அப்பாவிடமே சம்மதம் சொல்லியிருக்காள்” என்றான்.
“இண்ட்ரெஸ்டிங்” என்ற ருது, “நீ பார்த்து போயிட்டு வாடா. இதை பார்த்துக்கலாம்” என்று வைத்துவிட்டான்.
மனதில் ஓர் அலைப்புறுதல். மீண்டும் தன்னவளை இழந்திடுவோமோ என்கிற பயம் மனதை கவ்வியது.
‘பேசாமல் உண்மையை சொல்லிடலாம். அடுத்த நொடி அவளே என்கிட்ட வந்திடுவாள்.’ நினைத்த நொடி வேண்டாமென நினைத்தான்.
‘அப்படி வந்தால் அங்கு உன் காதல் காணமல் போயிடும். தேஷ்’க்கான உறவுமுறை கேள்விக்குறியாகிடும்’ என உழன்று கொண்டிருந்தவனின் சிந்தையை சில மணிகளுக்கு பின் கலைத்திருந்தான் வெங்கட்.
வெங்கட் சொல்லிய நிகழ்வு இமையாளே ருதுவை தேடி வரவழைத்திருந்தது. அந்த சந்தர்ப்பத்தை ருது தனக்கு சாதகமாக்கிக் கொண்டிருந்தான்.