தூரமே தூரமாய் 25
‘நம் வலிகளுக்கு பின்னால் நாம் நேசிப்பவர்களின் சந்தோஷம் இருக்குமாயின், சுகமாய் ஏற்போம் வலிகளையும்.’
‘தூரமே தூரமாய்.’
___________________________________
கலங்கிய விழிகளோடு திரும்பி திரும்பிப் பார்த்துச் செல்லும் இமையாளையே இமைத்திடாது பார்த்து நின்றான் ருது.
அவளை முதல் முறை கடிந்து கொண்டிருந்தான். என்னவோ போலிருந்தது.
தான் பொறுமையாக சொல்லியிருந்தால் சிலிர்த்துக்கொண்டு அடமாக நின்றிருப்பாள் என்று அறிவான். அதற்காகவும், அவளின் அழுகையை நிறுத்தவுமே கத்தி உறுமலாய் சீறியிருந்தான்.
நேரத்தைப் பார்த்தவன் அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து உணவு வாங்கிவர செய்தான்.
சுரேந்தருக்கு தன்மீது தவறில்லை என்கிற நிமிர்வால் திடமாகவே அமர்ந்திருந்தார். என்ன மக்கள் கை வைத்ததில் தான் கொஞ்சம் வாட்டமாகிப்போனார்.
சுரேந்தர் முன்பு உணவையும் தண்ணியையும் வைத்த ருது, “சாப்பிடுங்க சார்” என்றான்.
அவர் தயங்கிட…
“உங்க மேல தப்பில்லைன்னு நான் ப்ரூவ் பன்றேன் சார். பட் அதுவரை நீங்க இங்கிருப்பது தான் பாதுகாப்பு” என்றான்.
ருது தன்னை கைது செய்தது முதல் அவரும் அவன் தன்னிடம் நடந்துகொள்ளும் முறையை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். அவன் தன்னை காக்க காட்டும் முனைப்பு அவருக்கு புரிகிறது. ஏனென்கிற காரணம் தான் தெரியவில்லை.
அவரின் பார்வையின் யோசனை வைத்தே அவர் தன்னிடம் கேட்க தயங்குவதை புரிந்துகொண்ட ருது,
“இனியன் என் ஃபிரண்ட். அவனுக்காகன்னு வச்சிக்கோங்களேன்” என்றிருந்தான்.
“சரிப்பா” என்றவர் அடுத்து எதுவும் பேசாது உணவினை உண்டு முடிக்க…
“டேய் சுரேந்தரா” என்ற அழைப்போடு அங்கு வந்தார் வேங்கடம்.
“பல வருஷம் கழித்து உன்னை இப்படியாடா பார்க்கணும்” என்று அவர் சுரேந்தரின் அருகில் வர, “திரு” என்று தன்னுடைய இளமை கால நெருங்கிய நண்பனை ஆரத் தழுவியிருந்தார் சுரேந்தர்.
பார்த்ததும் இருவரும் நண்பர்கள் போல என யூகித்திருந்தான் ருது.
திருவேங்கடம் பீகாருக்கு செல்லும் முன்வரை இருவரும் நட்பாக ஒன்றாகத்தான் இருந்தனர். அன்றைய காலம் தொலைதொடர்பு வசதியின்மையால் பேசாமல், தொடர்பின்றி இருந்தாலும் அவர்களுக்கான பழைய நட்பு மனதில் இன்னமும் அப்படியே இருந்தது.
பார்த்ததும் யாரென்று யோசித்திடாது இயல்பாய் அணைத்துக் கொண்டதிலே அது நன்றாகத் தெரிந்தது.
செய்தியில் நண்பனை பார்த்துவிட்டே விஷயமறிந்து வேகமாக வந்திருந்தார் வேங்கடம்.
“எப்படிடா இருக்க?” சுரேந்தர் வேங்கடத்தின் கன்னத்தை வருடியவராக வினவினார்.
“நான் நல்லாயிருக்கேன்” என்ற வேங்கடம், “உன்னை இப்படியா பார்க்கணும்” என்று வருத்தமாகக் கூறினார்.
“அவர் மேல் தப்பில்லைப்பா. வெளியில் வந்திடலாம்” என்ற ருது, “நீங்க இங்கிருக்கக் கூடாது வீட்டுக்கு கிளம்புங்க” என்றான்.
“முடியாது போடா” என்ற வேங்கடம் சுரேந்தருடன் அமர்ந்து என்ன நடந்ததென்று கேட்டிட…
“அப்பா” என்று அழுத்தமாக விளித்தான் ருது.
‘இதற்குமேல் இங்கிருந்தால் சாமி ஆடிடுவான்’ என்று நினைத்தவர், “என் பையன் தான். ரொம்பவே மரியாதை எம்மேல” என்று சுரேந்தரிடம் சொல்லி சிரித்து வைத்தார்.
“உன் மகனா?” என்று கேட்ட சுரேந்தரிடம், “எல்லாம் அவன் பார்த்துப்பான். நீ தைரியமா இரு. நான் காலையில் வரேன்” என்று மகனிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.
“ரொம்ப சந்தோஷம் ப்பா” என்று ருதுவின் கையை பற்றி விடுவித்தார் சுரேந்தர்.
அவரின் மகிழ்வுக்கான காரணம் தான் அவரது நண்பனின் மகன் என்று புரிந்தது.
அந்நேரம் வெங்கட் அழைத்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி குறித்த தகவல்களை சொல்லிட…
“அவனுக்கும், கலெக்டருக்கும் என்ன லிங்க் விசாரி வெங்கட். நைட்டுக்குள்ள இதுக்கு ஒரு தீர்வு வந்திருக்கணும்” என்றான் ருது.
மேலும் சிறிது நேரம் அங்கிருந்தவன் இரவு பணியாளர்களிடம் சுரேந்தரை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.
ருது நேராக வந்தது வெங்கட்டின் வீட்டிற்கு. வெளியில் நின்றே ராதிகாவை அழைத்தான்.
“வாங்க சார்” என்றவளை,
“சாப்பிட்டிங்களா?” எனக் கேட்டவன், அவள் பதில் சொல்லியதும், “வெங்கட்க்கு முக்கியமான வொர்க். நைட் வரமாட்டான். நீங்க இங்க தனியா இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்கு வாங்க” என்று அழைத்தான்.
ராதிகா இருக்கட்டுமென மறுக்க…
“இந்த மாதிரி நேரத்தில் தனியா” என்று அதற்கு மேல் எப்படி சொல்ல என தெரியாது, அவளின் வயிற்றில் பார்வை பதித்து தடுமாறினான்.
ராதிகா உணர்ந்தவளாக,
“போகலாம் சார்” என உள்ளே சென்று தன்னுடைய அலைபேசியை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி அவனுடன் சென்றாள்.
ருதுவிற்காகக் காத்திருந்த அம்பிகாவிடம் ராதிகாவை ருது அறிமுகம் செய்து வைக்க…
“நாங்க ரெண்டு நாளுக்கு முன்னவே பார்க்கில் ஃபிரண்ட் ஆகிட்டோம் ருது” என்றார் அம்பிகா.
“அப்போ ஓகே” என்ற ருது, “அவங்க பிரெக்னென்ட் ம்மா” என்றான்.
சட்டென்று அம்பிகாவின் கண்கள் கலங்கி விட்டது.
“புரியுதுப்பா” என்றவர், மகனின் கன்னம் வருடியவராக, “சாப்பிட வாப்பா” என்றார்.
“குளிச்சிட்டு வரேன் ம்மா. அவங்களுக்கு ரூம் காட்டுங்க” என்றவனாக படியேறியவன், திரும்பி வந்து, “டேப்லெட் எல்லாம் போட்டிங்களா ராதிகா?” எனக் கேட்டான்.
அம்பிகாவின் கலங்கி நொடியில் சீரான முகத்தை கவனித்த ராதிகாவிற்கு, அவனது இந்த அக்கறைக்கான பின்னான வலியின் அளவு ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது.
“போட்டேன் சார்” என்று ராதிகா சொல்லவும், “பால் கொடுங்கம்மா. குடிச்சிட்டு படுக்கட்டும்” என்று மேலேறிச் சென்றான்.
ராதிகா மறுத்த போதும், அம்பிகா அவளை பால் குடிக்க வைத்தே விட்டார்.
“சாரோட வைஃப் பிரெக்னென்சி ரொம்பவே ஹார்ட்டா இருந்ததுங்களாம்மா? அவங்க எங்கே?” என ராதிகா கேட்டேவிட்டாள். அதற்குமேல் அவளாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“அவனோட வைஃப் அவங்க அப்பா வீட்டில் இருக்காம்மா.” அத்தோடு அம்பிகா முடித்துக்கொண்டார்.
ராதிகா மேலும் ஏதோ கேட்க வர,
“டைம் ஆச்சு நீ வந்து படும்மா. ருது வந்தால் அப்புறம் கடிவான்” என்று அவளை தடுத்தவராக அழைத்துச்சென்று அறையை காண்பித்தார்.
“நீ படும்மா. எதுவாயிருந்தாலும் கூப்பிடு. வேணுன்னாலும் நான் இங்கவே படுத்துக்கிறேன்” என்றார்.
“பரவாயில்லம்மா” என்று ராதிகா படுத்ததும், கதவினை சாற்றியவராக அம்பிகா வர, ருதுவும் வந்து சேர்ந்தான்.
ருதுவிற்கு சாப்பாடு எடுத்து வைத்தவர், அவன் உண்ணும் வரை அமைதியாக இருந்து பேசினார்.
“நடந்து முடிந்ததை மாற்ற முடியாது ருது. இன்னமும் இந்த ஒரு விஷயத்தில் நீ எமோஷனல் ஆகுறது அவ்வளவு நல்லது இல்லைப்பா” என்றார்.
“புரியுதும்மா. ஆனால், என்ன பண்ணட்டும். எல்லாரும் கன்சீவ் ஆகுறாங்க… நீ மட்டும் என்ன ஸ்பெஷல்ன்னு ஆண்கள் எவ்வளவு ஈஸியா அதை கடந்து வர்றாங்க. ஆனால் அது ஒரு பொண்ணுக்கு எத்தனை பெரிய இடரான சூழல். தெரிந்தே உயிரை பணயம் வைக்கும் செயல்ன்னு ஏன் புரியமாட்டேங்குது. பக்கத்திலிருந்து ஒவ்வொன்னையும் பார்த்திருக்கேன் ம்மா. கடைசியில் இந்த கையில்” என்று தன்னுடைய உள்ளங்கையை பார்த்த ருது, அருகில் நின்றிருந்த அம்பிகாவின் வயிற்றில் முகம் சாய்த்தவனாக கண்ணீர் விட்டான்.
“இன்னைக்கு தேஷ் அம்மா வேணும் கேட்கிறான். அப்போ என் உயிரை யாரோ உருவுற வலி. லேஷஸை தூக்கிட்டு வந்திடுவோமான்னு தோணுது” என்றான்.
“ருது…”
“முடியலம்மா. தேஷ்க்கு மட்டுமில்ல எனக்குமே அவள் வேணும்மா” என்றான் சிறுவனாக.
“நான் பேசட்டுமாப்பா?”
“வேணாம்” என்று நிமிர்ந்தவன், “அவளே சரின்னு வரணும்” என்றான்.
“அப்போ மிரட்டி தான் கட்டிக்கணும்” என்றவர் “உண்மையை சொல்லாம கஷ்டம் ருது” என்றார்.
அம்பிகா சொன்ன முதல் வரியில் அவனிடம் மின்னல்.
‘பார்ப்போம் சாதகமா அமையுதான்னு.’ மனதோடு நினைத்தான்.
“ஓகேம்மா நீங்க தூங்குங்க” என்று எழுந்தவன், ஷிவன்யாவின் அறைக்கு சென்று பாதி திறந்திருந்த கதவினை தட்டிட சத்தமில்லை. அறையிலும் விடிவிளக்கு ஒளிர்ந்திட மெல்ல உள்ளே சென்றவன் ஷிவாவின் கை அணைவில் உறங்கிக்கொண்டிருந்த தேஷ்ஷின் முன்னுச்சி கேசத்தை வருடியவனாக வெளியில் வந்தான்.
சுரேந்தர் கைதாகிய சமயமே இனியனுக்கு, “ரீச் ஆனதும் கால் பண்ணு” என தகவல் அனுப்பியிருந்தான். (இந்தியாவிலிருந்து விமான வழி பிரான்ஸ் செல்ல பதிமூன்று மணி நேரத்திற்கும் மேலாகும்.)
தற்போது தகவலை பார்த்துவிட்டானா என அலைபேசியை எடுத்து பார்த்தவன், பார்க்கவில்லை என்றதும் வெங்கட்டுக்கு அழைத்து என்ன நிலவரமென அறிந்துகொண்டு வெளிக்கதவு அடைத்திருக்கிறதா என பார்க்க வர, வாயிலை கடந்து இருளில் ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது.
கதவினை நன்கு திறந்து வெளியில் வந்த ருது, “யாரு?” எனக் கேட்டு மின்விளக்கை போட்டிட, அழுது வீங்கிய முகத்தோடு இமையாள் நின்றிருந்தாள்.
“தனியா வந்தியா?” என கோபமாகக் கேட்டவன், அவளை கடந்து எட்டிப்பார்த்தான்.
கேட்டின் முன் அவளது வண்டி நின்றிருந்தது.
“யூ இடியட்” என்று கடிந்தவன், “அறிவிருக்காடி… இந்நேரத்தில் தனியா வந்திருக்க” என்று கேட்டான்.
“அப்பாவை வெளிய விடுங்க.” கண்கள் கொட்டிய கண்ணீரை புறங்கையால் துடைத்தவளாக அவனது முகம் பார்க்காது கூறினாள்.
“வக்கீல் சொன்னார் நீங்க மனசு வைத்தால் விட முடியும்ன்னு. அம்மா சாப்பிடமா அழுதுகிட்டே இருக்காங்க. அப்பா அப்படி பண்ணியிருக்கமாட்டார். வெளிய விடுங்க” என்றாள். தேம்பலோடு.
நிச்சயம் இப்போது அவளை பார்த்தால் யாரும் பத்தாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை என்று சொல்லமாட்டார்கள். மிட்டாய் கொடுத்தே ஆகவேண்டுமென அடம் பிடிக்கும் சிறுமியாய் அப்பாவை விட வேண்டும் என்பதையே அடமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
“வீட்டுக்குப் போ! அவர் மேல் தப்பில்லைன்னா ரெண்டு நாளில் வந்திடுவார்” என்றான்.
“இல்லை இப்போவே விடுங்க. அப்பா ஸ்டேஷனில் இருக்கவேக் கூடாது. அவர் ஒன்னும் அக்யூஸ்ட் இல்லை” என்றாள்.
“நானும் தான் தினம் ஸ்டேஷனில் இருக்கேன்” என்றவனை தற்போது நிமிர்ந்துப் பார்த்து முறைத்தாள். அவன் கேலி செய்வதாகத்தான் அக்கணம் அவளுக்குத் தோன்றியது.
“நீங்களும் அவரும் ஒன்னா?” எனக் கேட்டவள், “அப்பாவை இப்போவே விட முடியுமா முடியாதா?” என்றாள்.
“உன் அப்பா மாட்டியிருக்கிறது சின்ன விஷயம் இல்லை. வெளியில் விட. உண்மையான ஆள் கிடைக்கலன்னா உன் அப்பா ஜெயிலுக்குப்போறது உறுதி” என்று அவளை பயம் கொள்ளச் செய்தான்.
நடக்கும் சூழலுக்கு தன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள ஏற்ற வகையில் காய் நகர்த்தினான். மனதில் செய்வது தவறென புரிந்தாலும், சந்தர்ப்பத்தை நழுவவிட அவன் தயாராக இல்லை. இன்னமும் தேஷ் அம்மா வேணுமெனக் கேட்ட அழுகை குரல் அவனது செவியில் எதிரொலித்து இதயத்தில் மத்தளம் கொட்டிக்கொண்டே இருந்தது.
“நீங்க வேணுன்னே அப்பாவை ஜெயிலில் போட பிளான் பண்றீங்க.” அவனையே குற்றம் சாட்டினாள்.
“மாட்டியிருக்கிறது அப்படிபட்ட கேஸ்” என்றான். மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, கால்களை அகட்டி நிமிர்ந்து நின்றவனாக.
“எனக்காக விடுங்க ப்ளீஸ்!” கிட்டத்தட்ட இறைஞ்சினாள். அவனுக்கு அவள் அவ்வாறு மன்றாடுவது பிடிக்கவில்லை. உள்ளுக்குள் வலி கொடுத்தது. இருந்தபோதும் மனதை இழுத்துப்பிடித்தான். பதறினால் எல்லாம் சிதறிப்போகுமே. இதுபோல் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதே!
“உனக்காக நான் ஏன் விடனும்?” அவளுக்காக என்னவும் செய்வான். தற்போது மனதை கல்லாக்கிக் கொண்டு வினவினான்.
அவனது கேள்வியில் அவள் நொறுங்கிப்போனாள். இனியன் இருந்திருந்தால் இந்த சூழல் வேறு மாதிரி இருந்திருக்குமோ? தற்போது தந்தையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் அவள். ருதுவிற்கு அது சாதகமாக.
ருதுவிடம் மன்றாடுவதில் அவளுக்கு ஒன்றும் இறக்கமில்லை. ஆனால் அவனுக்கும் அவளுக்குமான தூரம் அவளை தனது நிலை குறித்து வருந்த வைத்தது.
“அப்பாவை எப்படியாவது கூட்டிட்டு வந்திடு இமயா!” தீபா கணவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ? சிறைக்குச் சென்றிடுவாரோ என்கிற பயத்தில் மகளின் கையை பிடித்துக்கொண்டு அப்படியொரு அழுகை. தந்தையில்லாது வீட்டுக்குச் சென்றால் மீண்டும் அவரை அந்நிலையில் பார்க்க நேரிடுமோ என்று கவலை கொண்டவளாக ருதுவிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கிறாள்.
“ப்ளீஸ் ருது…” என்றவள், கன்னம் இறங்கிய கண்ணீரை துடைத்தவளாக, “நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்” என்றாள்.
ருது மனதால் அவளது வார்த்தையால் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ந்தான்.
அம்பிகா சொல்லிய மிரட்டலை விட பணிதல் சரியானதாகத் தோன்றியது அவனுக்கு.
“அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கோ!” பட்டென்று மின்னலாய் சொல்லியிருந்தான்.
அவன் கேட்டதை நம்ப முடியாது அதிர்வை உள்வாங்கியிருந்தாள் இமையாள்.
“இல்லை முடியாது.” அவளும் வேகமாக மறுத்திருந்தாள். அவன் காதலாக ஐந்து வருடங்களுக்கு முன்பு இதை கேட்டிருந்தாள் அத்தனை மகிழ்வு கொண்டிருப்பாள். தற்போது ஒரு பிடித்தமின்மை அவன் கேட்டதில்.
“அப்போ கண்டிப்பா உன் அப்பா ஜெயிலுக்குப் போவார்” என்றான்.
“அப்பா மேல் தப்பில்லை. கண்டிப்பா வெளியில் வந்திடுவார். இதுக்காக நீங்க சொல்றதைக் கேட்க முடியாது” என்றவள், “உங்களுக்கு கல்யாணமாகி பையன் இருக்கான்ல. இப்படி கேட்க வெட்கமா இல்லையா?” எனக் கேட்டிருந்தாள்.
இரண்டு தினங்களுக்கு முன்னால் ருதுவுடன் தேஷ்ஷை வெளியில் பார்த்திருந்தாள். அப்போதும் அது அவனது பையனாக இருக்குமென்று அவள் நினைக்கவில்லை. இருக்குமோ என்கிற சந்தேகம் தான்.
இன்று பள்ளியில் தேஷ்ஷை கண்டதும் கூட தன்னவனுடன் உறவு கொண்ட பையன் என்கிற முறையிலே பார்த்ததும் சிரித்தாள். ருது அவனுக்கு யாரெனத் தெரிந்துகொள்ளவே, தந்தையின் பெயரை வினவியிருந்தாள்.
குழந்தை “ருத்விக்” என்று சொல்லியதில் இதயத்தில் எழுந்த வலியை வெளியே மறைத்திட அவள் பட்ட வதை… சொல்லில் அடங்கிடாது.
‘அப்போ அவங்க சொன்னது நிஜமா?’ கேட்டுக்கொண்டவளுக்கு கண் முன்னே இருக்கும் தேஷ் ஆமென்ற உண்மையாகத் தெரிந்தான்.
அதனை கொண்டே தற்போது ருதுவிடம் அவ்வாறு கேட்டாள்.
“இதிலென்ன வெட்கம்?” என்ற ருது, “நீ சரின்னு சொன்னா… நம்ம கல்யாணம் நடந்த அடுத்த செக் உன் அப்பா வெளியில் இருப்பார்” என்றான்.
“நீங்க என்ன பிளாக்மெயில் பன்றிங்க. உங்களுக்கு பணிய வைக்க பார்க்கிறீங்க” என்ற இமையாள், “உங்க வைஃப் இருக்கும்போதே இப்படி கேட்க அசிங்கமாயில்லையா?” எனக் கேட்டாள்.
“என் வைஃப் என்னோட இருக்கத்தான் கேட்கிறேன்” என்றவன், “ஓகேன்னா அடுத்து பேசு. இல்லை கிளம்பு” என்றான்.
அவன் முதலில் சொன்னது அவளுக்கு விளங்கவில்லை. ஆராய்ந்து பார்க்கும் மனநிலையும் அவளுக்கு இல்லை.
“ஏற்கனவே கல்யாணம் ஆனவருக்கு நானெப்படி சம்மதம் சொல்வேன் நினைச்சீங்க?”
“டிவோர்ஸ் ஆகிருச்சு.” அசராது பொய் உரைத்தான்.
“என்ன?”
“ஆமா. நான் ஏற்கனவே லவ் பண்ணவன்னு தெரிந்து விட்டுப்போயிட்டாள்” என்றான்.
“நிஜமாவே டிவோர்ஸ் ஆகிருச்சா?” கண்களை விரித்துக் கேட்டாள்.
“எஸ்.” உள்ளுக்குள் அவனுக்கு அப்படியொரு சிரிப்பு வந்தது. அதே கணம் தான் என்ன சொன்னாலும் நம்பும் அவளின் மீது பரிதாபமும் எழுந்தது. அவள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை இன்னமும் அப்படியே இருக்கிறது என்கிற கர்வமும் தோன்றியது.
“அதனால் தான் என் பின்னால் வந்தீங்களா?”
“அப்படியும் வச்சிக்கலாம்.” சாதாரணமாக தோள் குலுக்கினான்.
“டிவோர்ஸ் ஆகலன்னா உங்களுக்கு என் நினைப்பே வந்திருக்காதுல?”
“தெரியல” என்றவன், “என் பையனுக்கு அம்மா வேணும். அதுவே என்னை லவ் பண்ற பொண்ணா இருந்தா பெட்டர் தோணுச்சு. நீயும் எனக்காக காத்திருந்தியா? சோ, திரும்பவும் வந்தேன்” என்றான்.
அவனை கொல்லும் ஆத்திரம் அவளிடம்.
‘அப்போது அவனுக்கு நான் என் காதல் காத்திருப்பு எதுவும் பொருட்டில்லையா?’ மனதால் மரித்து உயிர் துறந்தாள்.
“பணம் கொடுத்தால் விட்டுடுவாங்களா?”
“ம்ம்ம்… ஆனால் அது நீயே உன் அப்பா குற்றவாளிங்கிற மாதிரி இருக்கும்” என்ற ருது, “மொத்தம் நாலரை கோடி. பேங்கில் ஒப்படைத்து உன் அப்பாவை வெளியில் கூப்பிட்டுக்கோ” என்றான்.
“நாலரை கோடியா?” தள்ளாடி நிலை கொண்டாள்.
அப்போது இமையாளுக்கு தீபா கால் செய்தார்.
“அப்பாவை கூட்டிட்டு வந்திடு இமயா. அவரை ஸ்டேஷனில் அப்படி பார்த்தது இன்னும் பதற வைக்குது. இந்த ஜனங்க அப்பாவை எப்படி அடிச்சிருக்காங்க” என்று அழுதவர், “அப்பாவை கூட்டிட்டு வந்திடுடா” என்று அழுகையோடு வைத்திருந்தார்.
அவளால் யோசிக்கவே முடியவில்லை.
“எவ்வளவு நேரம் நின்னுட்டு இருக்கிறது? எனக்கு தூக்கம் வருது. சீக்கிரம் பதில் சொல்லு” என்று அவளை யோசிக்கவிடக் கூடாதென கிட்டத்தட்ட அவசரப்படுத்தினான்.
“இதில் பெரிய ஆளுங்க சம்மந்தப்பட்டிருக்காங்க. உன் அப்பா மீது தப்பே இல்லைன்னாலும், அவங்களை மீறி அவரை வெளியில் கொண்டுவரது நிச்சயம் முடியாத காரியம். அவங்க தப்பிக்க உன் அப்பாவை மாட்டவிட்டிருக்காங்க. கண்டிப்பா ஜெயில் தான்” என்றான்.
நிலையில்லா நிலையில் மொத்தமாக தன் சுயம் தொலைத்து, அடுத்து என்னவென்று பாதை தெரியாது பயந்து நின்றாள்.
தற்போது ருது சொல்லியதைத்தானே அவளது வக்கீலும் சொல்லியிருந்தார். அதனால் தான் ஜாமீன் கூட வழங்கவில்லை எனவும் சொல்லியிருந்தார்.
‘அப்போ இவங்க சொல்வது உண்மையா? அப்பா ஜெயிலுக்கு போயிடுவாரா?’ மனதில் ஊமையாய் கதறினாள்.
அப்பாவா? தன் வாழ்வா? மனதோடு போராடினாள்.
“நீங்க நினைச்சா அப்பாவை வெளியில்விட முடியும் வக்கீல் சொன்னார்!”
“ஆதாயம் இல்லாமல் நான் ஏன் உன் அப்பாக்காக ரிஸ்க் எடுக்கணும்?” மனதை கடினமாக்கி வெளியில் இலகுவாகக் காட்டிக்கொண்டு கேட்டிருந்தான்.
“ப்ளீஸ்…” கையெடுத்துக் கும்பிட்டாள்.
இரக்கமின்றிய பாவனையில் நின்றிருந்தான். நெஞ்ச குமுறலை மறைத்தவனாக.
‘அவளை இப்படி வருத்தி தன்னிடம் வரவழைக்க வேண்டுமா?’ அக்கணம் தன்னையே வெறுத்தான். மனதால் அறைந்து கொண்டான்.
அதற்கு மேல் அவனிடம் கெஞ்சிட மனதால் தெம்பில்லாது கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவள்,
“சரி” என்றாள்.
“எதுக்கு இந்த சரி?”
அந்நொடி அவளுக்கு ருது ‘மனிதனா நீ?’ என்று தான் கேட்கத் தோன்றியது.
“கல்யாணம் பண்ணிக்க சம்மதம்.”
“யாரை?”
அவனை பார்த்து பற்களைக் கடித்துக்கொண்டு,
“உங்களை” என்றாள்.
“வெல்” என்றவன், “நாளைக்கு சரியா பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்திடு. இப்போ கிளம்பு” என்றான்.
அவளிடம் அவன் மீது புள்ளியளவு பிடித்தமும் சுத்தமாக காணமல் போயிருந்தது.
“அப்பா?”
“ரிஜிஸ்டர் ஆபீஸ் பத்து மணிக்குத்தான் திறப்பாங்க. இப்போ நீ சரி சொல்லிட்டன்னு உன் அப்பாவை நான் வெளியில் விட்டதும், நீ முடியாது சொல்லிட்டன்னா. சோ, நீ கையெழுத்துப்போட்ட அடுத்த நொடி உன் அப்பா வெளியில் இருப்பார்” என்றான்.
காதலித்தவனை உயிரில் சுமந்தவனை பிடித்தமே இல்லாது மணக்க சம்மதித்தாள். தன்னை குறித்தே வெட்கினாள். எல்லாம் தந்தைக்காக என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
முகத்தை துடைத்தவளாக திரும்பி செல்பவளை இழுத்து அணைக்க துடித்த கைகளை மடக்கி சுவற்றில் ஓங்கி குத்தியிருந்தான்.
‘உன் லேஷஸ் டா அவள்.’ உள்ளே ஓலமிட்டான்.
அவனுக்கும் வேறு வழியில்லை.
வேகமாக தன் வண்டியை உயிர்ப்பித்து அவள் வீடு வரை துணையாக சென்று வந்தான்.
இமையாளுக்கு மனமெல்லாம் மரத்து விட்டது. தன்னுடைய ருதுவா இப்படி என தனக்குள் கேட்டு கேட்டே மாய்ந்து போனாள்.
ருது துணையாக வந்ததையே அவள் உணரவில்லை.
வீட்டிற்கு திரும்பி வந்த ருது உள்ளே செல்ல,
“இது ரொம்பவே தப்பு ருது” என்றார் அம்பிகா. கண்டனப் பார்வையோடு வேங்கடமும் நின்றிருந்தார்.
வேங்கடம் தண்ணீர் கேட்டாரென எடுக்க வந்த அம்பிகா, வெளியில் பேச்சுக்குரல் கேட்டு கவனித்து நிற்க, சென்ற மனைவி இன்னும் வரவில்லையென வந்த வேங்கடமும் அனைத்தும் கேட்டிருந்தார்.
“எனக்கு வேற ஆப்ஷனே இல்லைம்மா” என்ற ருது, அப்படியே அங்கேயே தரையில் மண்டியிட்டு ஆவென கத்தினான்.
‘காத்திருத்தல்
கடந்து போதல்
இரண்டுக்கும் நடுவிலான
வலிகளே காதல்.’