தூரமே தூரமாய் 26
உசுரே! உசுரே!
அட நீதானடா!
கனவா? நினைவா?
இங்கு நின்னாயடா!
காயம் ஆறாதா?
நெஞ்சம் சேராதா?
காணும் நிழலிப்போ நெசமாகாதா?
வாழா வாழ்வே
அடி நீதானம்மா!
சாகா வரம்போல வந்தாயம்மா
பாவம் தீராதா?
சாபம் வீழாதா?
மூச்சு காத்தும் உன் பெயர் சொல்லாதா?
தூண்டில் மீனாய் நான் தினம் சாகுறேன்.
சாமி வேணாம் உன் நிழல் சாயுறேன்.
ஏழேழு ஜென்மம்…
இனி உன் உசுருல தினம் கலக்கணும்.
_________________________________
மகன் வெடித்து கதறும் கதறலை முதல் முறை காண்கின்றனர்.
தனது கடந்த காலத்தை சொல்லியபோது கூட ருது இப்படி அழவில்லை. தற்போது அழுகிறான். அவனது ஓலத்தில் வீடே கிடுகிடுத்தது.
தன் செயல் குறித்து அழுகிறான். தன்னவளை வதைப்பதற்கு அழுகிறான். முடியவில்லை. ஆனாலும் இச்சூழலை விட முடியாது. அவளாக வர வேண்டுமெனும் அவனது ஆசை, உண்மை தெரியாது நடந்திட வாய்ப்பில்லை. அதனால் வரவழைக்கத் துணிந்துவிட்டான். அந்த துணிதல் இந்தளவிற்கு செல்லுமென அவன் நினைக்கவில்லை.
“ருது.”
தரையில் மண்டியிட்டு, கீழே கைகளை குத்தியவனாக வெடித்து கதறும் மகனை இருபக்கமும் அரணாய் தாங்கினர் வேங்கடமும், அம்பிகாவும்.
“முடியலம்மா! அவளுக்கு விருப்பமில்லாமதான் என்கிட்ட வரணுமா?” அப்படியொரு வலி ருதுவின் முகத்தில்.
“அப்புறம் எதுக்கு தங்கம் இப்படி?” எனக்கேட்ட அம்பிகா தன் நெஞ்சில் அவனது தலையை அழுத்திக் கொண்டார்.
“வேற வழியே இல்லையேம்மா!”
ருதுவின் அழுகை, கதறல் அந்த நிசப்தத்தில் நன்கு எதிரொலித்திட, என்னவோ ஏதோவென உறக்கம் கலைந்து வந்து நின்ற ஷிவன்யாவை மூவரும் கவனிக்கவில்லை.
மாத்திரையின் உபயத்தால் ராதிகா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
ஷிவா அதிர்வில் சிலையாகியிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ருதுவின் கோபம், கடினம் எல்லாம் பார்த்திருக்கிறாள். ஒருபோதும் இப்படி குலைந்து அழுது பார்த்ததில்லை. நம்ப முடியா அதிர்வோடு அசையாது நின்றுவிட்டாள்.
“இவன் இப்படி அழுறதை பார்க்க முடியல அம்பிகா. இப்போவாவது என்னன்னு சொல்லுங்களேன்.” உண்மையை அறிந்து மகனின் கவலையை நொடியில் தீர்த்திட வேண்டுமென தந்தையாய் வேங்கடம் பரிதவித்தார்.
அம்பிகாவினுள்ளும் பாரத்தின் அழுத்தம் சுமையாகியதோ? ருதுவின் கண்ணீரை காண முடியாது, வலியில் ஒரே மூச்சாக அனைத்தையும் கொட்டிவிட்டார்.
வேங்கடத்தின் உடல் நடுக்கம் குறையாது, தரையில் சரிந்து அமர்ந்தார்.
கேட்டவருக்கே அத்தனை வேதனை.
ஷிவன்யா சுற்றம் மறந்து கன்னத்தில் வழியும் கண்ணீரை உணராது நின்றிருந்தாள்.
“ருது…” வேங்கடம் கையை விரித்திட, வேகமாக அவருள் புதைந்திருந்தான்.
“உன் அழுத்தத்துக்கு பின்னால் இப்படியொரு வலியை நான் நெனச்சு பார்க்கலப்பா” என்றவர், “உனக்கு நாங்க இருக்கோம் கண்ணா. இனி இதை நினைத்துக்கூட நீ அழக்கூடாது” என்று மகனின் முகத்தை துடைத்தவர், “உன்னை வருத்தி, அந்தப்பொண்ணுக்கும் வலி கொடுத்து இப்படியொரு கல்யாணம் வேண்டாம்ப்பா. சுரேந்தர் கிட்ட நான் பேசுறேன். உண்மையை சொல்லுவோம்” என்றார்.
அவன் செய்யும் செயலை அவனையும் சேர்த்து வதைக்கிறதே என வேங்கடம் யோசித்து பேசினார்.
ஆனால் ருது மறுப்பாக தலையசைத்தான்.
“எளிதா சரிசெய்யக்கூடியது ருது. ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிக்கிற நீ” என்றார் வேங்கடம்.
“ஆமாம் ருது. உண்மையை சொல்லிட்டால் வலியில்லாமல் உன்கிட்ட வருவாளே” என்றார் அம்பிகா.
“முடியாதும்மா” என்று எழுந்து நிமிர்ந்து நின்ற ருது, “நீங்க என்னை மட்டுமே பார்க்கிறீங்க… எனக்காக மட்டுமே யோசிக்கிறீங்க” என்றவன், “தேஷ்… தேஷ்ஷை விட்டுட்டிங்களே!” என்றான். அதீத கனத்தோடு.
“ருது!” இருவரும் அதிர்ந்துவிட்டனர். உண்மையில் ருதுவின் வாழ்வை சரிசெய்திட வேண்டுமென நினைத்தவர்கள் அக்கணம் தேஷ்ஷை மறந்துதான் போயினார்.
“தேஷ்… தேஷ் இன்னைக்கு அம்மா வேணும் கேட்கிறான். அவன் முன்னாடி இமையாளை அம்மாவா நிறுத்த சொல்றீங்களா? இல்லை அண்ணியா நிறுத்தட்டுமா? நீங்களே சொல்லுங்க?” எனக் கேட்டான்.
இதற்கு அவர்களால் என்ன பதில் சொல்லிட முடியும் அவர்களால்.
“அவனுக்கு ஒரு அம்மா வேணும்மா. அண்ணி இல்லை. உண்மை தெரிந்தாலும் என் லேஷஸ் அவனுக்கு அம்மாவாவே வருவாள். ஆனால்,” என்று இடை நிறுத்திய ருது, “உண்மை தெரிந்ததுக்கு பிறகு அவள் தேஷ்ஷை ஏத்துகிட்டா, அவன் மனசுல தேஷ் என் தம்பிங்கிற எண்ணம் தானே முதலில் இருக்கும்” என்றவன், “அவளுக்கு தேஷ் முதலில் மகனாகத்தான் மனதில் பதிய வேண்டும். அதுதான் எங்க காதலுக்கும் நியாயமா இருக்கும். எனக்கு மகன்னா, அவளுக்கும் மகனா மட்டும் தானே இருக்கணும். அது எங்க காதலால் மட்டும் தானே சாத்தியம்” என்றான்.
ருது சொல்ல வருவது இருவருக்குமே புரிந்தது.
“உன்னை விரும்புற பொண்ணு தேஷ்ஷை மகனா மட்டுமே பார்க்கணும் நினைக்கிற. தப்பில்லைப்பா. எங்களால் புரிஞ்சிக்க முடியுது” என்ற வேங்கடம், “ஆனால் கல்யாணம் செய்வதற்கு முன்பு சுரேந்தரிடம் எல்லாம் சொல்லிடுப்பா. இல்லைன்னா என் மகனுக்காக நான் பேசுறேன்” என்றார்.
“உன் பக்கம் நாங்க நிக்கிற மாதிரி கல்யாணம் பதிவு பண்ணும்போது அவளோட உறவும் பக்கம் இருக்கணும் ருது” என்றார் அம்பிகா.
“ம்ம்ம்” என்ற ருது, “இனியனால் வர முடியாது. அவன் பிரான்ஸ் போயிருக்கான். இப்போக்கூட டிராவலில் தான் இருக்கான். என் மெசேஜ் கூட இன்னும் அவன் பார்க்கல” என்று திரும்பிய ருது, அங்கு சிலையாக நின்றிருந்த ஷிவன்யாவை பார்த்து அதிரவெல்லாம் இல்லை. இனி ஒவ்வொருத்தருக்கா உண்மை தெரிவது தானே சரியாக இருக்கும் என்று மட்டுமே நினைத்தான்.
அவன் பார்வை விலகாத தன்மையில் மற்ற இருவரும் என்னவென்று பார்த்து
“ஷிவா” என்று மெல்ல விளித்தார் அம்பிகா.
சுயம் திரும்பிய ஷிவா,
“அண்ணா” என்று ஓடி வந்து ருதுவை இறுகக் கட்டிக்கொண்டாள்.
“உங்களுக்கு நான் இருக்கேன் டார்லிங். தேஷ் நான் பார்த்துப்பேன்” என்று அரற்றினாள். தேம்பலோடு.
“பார்த்துக்கணுமே. அப்பாவவிட அத்தை உறவு முக்கியமானதாயிற்றே” என்று சிரிக்க முடியாது இதழ் விரித்தான். அழும் தங்கையை தேற்றிட.
“அத்தை தேஷ்ஷை ரொம்பவே நல்லா பார்த்துப்பேன்” என்றாள்.
அவளின் உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தினான் ருது. அவனுக்கு எதிர்பார்ப்பற்ற இந்த மூவரின் அன்பும் மனதில் ஒருவித நிறைவை அளித்தது.
“நாளைக்கு உங்களுக்கு கல்யாணமா?”
“ம்.”
“என்கிட்ட சொல்லவே இல்லை.” கண்களை துடைத்துக்கொண்டு அவனிலிருந்து பிரிந்து கோபம் போல் வினவினாள்.
“எனக்கே இப்போ தான் தெரியும்” என்றான்.
“நான் ஓகே சொல்ல வேண்டாமா?”
நொடியில் சூழலின் இறுக்கத்தை தன் கேள்விகளால் மாற்றியிருந்தாள் ஷிவன்யா.
“அவன் கல்யாணம் பண்ணிக்க நீ ஏன் ஓகே சொல்லணும்?” அம்பிகா கேட்டார்.
“நாத்தனார் நான் சம்மதிக்காம உங்க மருமகள் வீட்டுக்குள் வந்திட முடியுமா?” என்று ஷிவன்யா கெத்தாகக் கேட்டிட,
“வாய் உனக்கு” என்று மகளின் கன்னத்தில் மெல்ல தட்டினார் வேங்கடம்.
அச்சமயம் வெங்கட்டிடமிருந்து அழைப்பு வர, பணியின் தீவிரம் புரிந்து, அழைப்பினை ஏற்றான்.
வெங்கட் என்ன கூறினானோ?
“இதோ வர்றேன்” என வேகமாக கிளம்பினான்.
“இந்நேரத்தில் எங்கப்பா?”
“கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் அப்பாவை விடுறேன்னு சொல்லியிருந்தாலும், உண்மை குற்றவாளியை பிடிக்காம அவரை விட முடியாதேப்பா. என் வேலைக்கு எப்பவும் என்னால் துரோகம் செய்திட முடியாது” என்றவன், “காலையில் சரியான நேரத்துக்கு கிளம்பி இருங்க. வந்திடுறேன்” என்று புறப்பட்டிருந்தான்.
வீட்டிற்கு வந்த இமையாளுக்கு இந்த ருதுவை ஜீரணிக்கவே முடியவில்லை.
எப்படியொரு சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் என்று ஆற்ற முடியாது அழுகையில் கரைந்தாள்.
“அப்பா எங்கே?” எனக் கேட்ட தீபாவை தேற்றி, “அப்பா காலையில் வந்திடுவார்” என சொல்லி உறங்க வைத்தவளுக்கு தூக்கம் தூரம் சென்றது.
‘காதலிக்கும் காலத்தில் இருந்த ருது இவனில்லை.’ குமுறினாள். நெஞ்சோடு தன் காதல் தூரம் சென்றுவிட்டதை உணர்ந்தாள்.
தற்போது அவளுக்கிருக்கும் ஆறுதல், யாரோ ஒருவரை திருமணம் செய்து கொண்டு கொள்ளும் வதைக்கு பிடிக்கவில்லை ஏற்க முடியவில்லை என்றாலும், காதலித்தவனையே திருமணம் செய்து வதை கொள்வது கொஞ்சம் ஏற்க முடிந்தது.
‘தன்னால் இன்னொருவரின் வாழ்வு கெடாது’ என்பதே அவளுள் சிறு நிம்மதி.
அப்போதும் ருதுவை அடைய, தன் மனதிலிருக்கும் அவன் மீதான காதல், அவன் கேட்ட சூழலை சாதகமாக்கிக் கொண்டதோ என்று தன்னை குறித்தே வெட்கினாள்.
ருது விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னது மனதில் நிம்மதியை கொடுத்ததோ? தன் காதலை அடைய வழி கிடைத்ததென்று மனம் எண்ணிவிட்டதோ?
‘நீ எப்படி சரி சொன்ன?’ தன்னையே அறைந்து கொண்டாள். சொல்லி அழ இனியன் கூட அருகில் இல்லாது மொத்தமாக வலி சுமந்தாள்.
“ருது.” அறை முழுக்க அவளின் கத்தல் நிரம்பியது.
‘நீ இப்படித்தான் எனக்கு கிடைக்கணுமா? நான் உன்னை இந்த சூழலில் தான் சேரணுமா? நம் காதல் ஒன்னுமே இல்லையா?’ அழுது அழுது தன்னை அறியாது உறங்கிப்போனாள்.
காலை விடிந்ததும், தீபா எழுப்பினார்.
“விடிஞ்சதும் அப்பாவை கூட்டி வரேன் சொன்னியே இமயா? விடிஞ்சிடுச்சே” என்றார் விழிகள் தேங்கி நின்ற கண்ணீரோடு.
“இதோ கிளம்புறேன் ம்மா” என்றவள் கஷ்டப்பட்டு கிளம்பித் தயாராகினாள்.
‘அவனுக்கு அழைக்க வேண்டுமா? அப்படியென்றால் எந்த எண்ணுக்கு அழைப்பது?’ தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
அப்போது அவளது வக்கீலிடமிருந்து அழைப்பு வர, இருந்த கடுப்பில் எடுக்காது விட்டாள். எடுத்திருந்தால் ருது செய்த காரியம் தெரிந்திருக்குமோ. அவனால் தன் தந்தை முழுதாக தன்மீது விழுந்த பழியிலிருந்து வெளிவந்து விட்டார் என்பது அறிந்திருக்குமோ? நடக்கவிருக்கும் பிடித்தமில்லா திருமணத்தை நிறுத்த ஒரு வாய்ப்பு கிட்டியிருக்குமோ? ஓரளவு ருதுவின் மனமும் புரிந்து கொண்டிருந்திருப்பாளோ?
அடுத்து புது எண்ணிலிருந்து அழைப்பு வர, அவன் தான் எனும் கணிப்பில் அசூசையாக ஏற்று காதில் வைத்தாள்.
“கிளம்பிட்டியா?”
கேட்ட குரலுக்கு சொந்தக்காரனை கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாமா என்று அக்கணம் எண்ணினாள்.
பதில் சொல்லாது அமைதியாக இருந்தாள்.
“வரும்போது அத்தையையும் கூட்டிட்டு வந்திடு” என்றான் ருது.
“முடியாது.”
“அப்போ உன் அப்பாவும் வெளியில் வர முடியாது.”
சுரேந்தரை வெளியில் கொண்டு வந்துவிட்டு அவளிடம் மிரட்டிக் கொண்டிருந்தான்.
“வந்து தொலைக்கிறேன்” என்றவள் கடுப்போடு அழைப்பைத் துண்டித்து,
“தனியா போக ஒரு மாதிரி இருக்கும்மா. நீங்களும் வாங்க” என்று அழைத்துச் சென்றாள்.
இருக்கும் மனநிலையில் தீபாவுக்கு செல்லும் பாதை… வந்து சேர்ந்த இடமெல்லாம் கருத்தில் பதியவில்லை.
இருவரும் வந்தபோது இருக்க வேண்டிய அனைவரும் இருந்தனர். தேஷ்ஷை தவிர்த்து. தேஷ்ஷின் முன்னால் இமையாளை தன் மனைவியாக, அவனுக்கு அன்னையாக நிறுத்தவே விருப்பம் கொண்டான்.
வேங்கடத்துடன் நின்று பேசிக்கொண்டிருந்த சுரேந்தரை ருதுவின் மீதான கோபத்தால் கவனிக்கத் தவறினாள் இமையாள்.
“வாம்மா…” என்று அம்பிகா இமையாளின் கரம் பற்ற, நேற்று பள்ளியில் தேஷ்ஷுடன் பார்த்திருந்ததால் சிரிக்க முடியாது சிரிப்பை உதிர்த்திருந்தாள்.
“ஹாய் அண்ணி” என்று முன் குதித்த ஷிவன்யாவை யாரென்று தெரியாது பார்த்தாள்.
“நான் டார்லிங்கோட தங்கச்சி” என்று ஷிவன்யா ருதுவை கைகாட்டினாள்.
‘தங்கச்சியா? அக்கா மட்டும் தானே?’ முதல் குழப்பம் ஆரம்பமாகியிருந்தது.
காதலிக்கும் காலத்தில் ருதுவின் சொந்தங்கள் தெரியுமே தவிர்த்து யாரையும் புகைப்படத்தில் கூட அவள் பார்த்தது இல்லை. அது தற்போது ருதுவுக்கு வசதியாகிவிட்டது. இல்லையென்றால் அவளுக்கு பல சந்தேகங்கள் எப்போதோ வந்திருக்குமே!
“வாம்மா” என்று அருகில் வந்த வேங்கடம், “நான் ருது அப்பா” என்று பெயர் சொல்லிட, அவளுக்கு தலைவலிக்கும் போலானாது.
பெயரும் வேறெதுவோ சொன்ன நினைவாகத் தோன்றியது.
சற்று தள்ளி நின்று மகளையேதான் பார்த்திருந்தார் சுரேந்தர்.
காலை ருது பரபரப்பாக… உண்மை குற்றவாளியையும், அவனுக்கு துணையாக நின்றது அவனது மாமா மாவட்ட ஆட்சியர் என்பதையும், எப்படி பணத்தை மோசடி செய்தனர் என்பதையும் தெளிவாய் கண்டறிந்து, மேஜிஸ்ட்ரேட்டர் இல்லத்திற்கே சென்று தெளிவான ஆதாரங்களோடு விளக்கி இருவரையும் அவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்த்து, சுரேந்தரின் மீது எவ்வித தவறுமில்லையென நிரூபித்து வெளியில் கொண்டு வந்திருந்தான்.
மாவட்ட ஆட்சியரின் உதவியின் மூலமாக தங்கள் நிறுவனம் தான் வங்கிக்கு மக்கள் செலுத்த வேண்டிய பணத்தை மோசடி செய்தோமென குற்றவாளியே நீதிபதி முன்பு ஒப்புக்கொள்ள சுரேந்தர் எளிதாக ருதுவால் வெளியில் வந்திருந்தார்.
சுரேந்தருக்கு ருதுவை பார்க்கும்போது, ஒருநாள் இரவில் தனக்காக அவன் மேற்கொண்ட முயற்சிகள் தான் கண்ணுக்குத் தெரிந்தது. அதற்கு இனியனின் நட்பு மட்டும் காரணமில்லையென வேங்கடம் வந்து சொல்லியதில் தெரிந்து கொண்டார்.
தன் மகளின் திருமணம் இப்படி நடப்பதில் அவருக்கும் உடன்பாடில்லை. இருப்பினும் ருதுவுக்காக, அவன் அனுபவித்த வேதனைகளுக்காக, தன் மகளும் ருதுவைத் தவிர வேறு யாருடனும் மகிழ்வாக வாழ்ந்திடமாட்டாள் என்பதற்காகவும் ஒப்புக்கொண்டு வந்திருந்தார்.
அடுத்து அனைவரும் உள்ளே செல்ல ருதுவுக்கு இனியன் அழைத்திருந்தான்.
காலை வரை இனியன் தகவலை பார்க்கவில்லை என்றதும், நண்பனிடம் சொல்லாது மணம் செய்ய மனம் இடகொடுக்கவில்லை என்பதால், மொத்தமாக சுரேந்தர் கைதானது தொடங்கி, இமையாளை தனக்கு பணிய வைத்தது வரை அனைத்தையும் குரல் பதிவு செய்து அனுப்பி வைத்திருந்தான் ருது. தற்போது அதனை கேட்டுவிட்டே படபடப்போடு இனியன் அழைத்தான்.
“டூ மினிட்ஸ்” என்று அவர்களை உள்ளே செல்ல சொல்லிய ருது அழைப்பை ஏற்று தள்ளி வந்தான்.
“கல்யாணம் முடிஞ்சிடுச்சா?” இனியன் அத்தனை இறுக்கமாகக் கேட்டிருந்தான்.
“இப்போ தான் ஸ்டார்ட் ஆகுது” என்றான் ருது.
“இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கலை ருது.” அத்தனை மனத்தாங்கல் இனியனிடம்.
“என் ஃபிரண்டுக்கு என்னை புரியும்.” அழுத்தமாக மொழிந்தான் ருது.
“நான் இமயாவுக்கு அண்ணனும் கூட டா” என்றான் இனியன்.
“சரி உனக்கு விருப்பமில்லைன்னா நான் நிறுத்திடுறேன்.” ருது பட்டென்று சொல்லியிருந்தான்.
“அப்பா?”
“வெளியில் கொண்டு வந்துட்டேன். அக்யூஸ்ட் அரேஸ்ட் பண்ணியாச்சு. பணத்தை கொடுத்திடுறேன் சொல்லியிருக்கான். இனி அது கவர்மெண்ட் பொறுப்பு” என்றான்.
ருது காப்பாற்றிடுவான் தெரியும். அவரை மீட்டுவிட்டான் என்றதை அவனது வாய் வார்த்தையாகக் கேட்டதும் ஒரு ஆசுவாசம் இனியனிடம். அவனும் நினைத்ததும் வரும் தொலைவில் இல்லையே.
“இமயாவுக்கு தெரியுமா?”
“இன்னும் தெரியாது.”
“எதுக்கு இந்த நாடகம்?”
“உனக்கே தெரியும்.”
“ஆமா தெரியும்” என்று முணுமுணுத்த இனியன், “இமயாவையும் இதைவிட்டால் வேறெப்பவும் சம்மதிக்க வைக்க முடியாது” என்றான்.
“இப்போ நான் என்ன தான் பண்ணட்டும்?”
“டிசி சாருக்கு கோபம் வருதோ?” என நக்கலாகக் கேட்ட இனியன், “உன்னை தப்பா ப்ரொஜெக்ட் பண்ணி பண்றது தான் ஒரு மாதிரி இருக்கு” என்றான்.
“வேற வழியில்லை.”
“நானில்லாம நடந்தா ஓகேவா உனக்கு?”
“உன்னை யாரு இப்போ அங்கப்போக சொன்னது. இமயா திரும்ப சரின்னு வருவாள் எனக்குத் தோணல” என்றான் ருது.
………. இனியன் அமைதியாக இருந்தான்.
“ஷிவாவை வீடியோ எடுத்து அனுப்பி வைக்க சொல்றேன்” என்ற ருதுவின் குரலில் இனியன் மெல்ல சிரித்துவிட்டான்.
இனியனின் அந்த சிரிப்பொலி ருதுவுக்கு போதுமானதாக இருந்தது.
“முடிச்சிட்டு கால் பன்றேன்” என ருது வைத்திட்டான்.
அங்கு இனியனுள்ளும் சொல்ல முடியாத ஒரு நிறைவு.
பதிவாளர் முன்பு தலை கவிழ்ந்து இமையாள் நின்றிருக்க… ருது அருகில் சென்று நின்றான்.
“புடவை கட்டி வந்திருக்கலாம்?”
ஓரவிழியாக அவனை முறைத்தவள், அவனது காக்கி உடையை சுட்டி,
“உங்க ட்ரெஸுக்கு என்னோடது பரவாயில்லை” என்று பற்களை கடித்திருந்தாள்.
காலை அவசர வழக்கென மேஜிஸ்திரேட் வீட்டிற்கு சென்று சுரேந்தரை அழைத்துக்கொண்டு நேராக இங்கு வந்திருந்தான் ருது. அது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!
அங்கு என்ன நடக்கிறதென்று அப்போது தான் நிகழ் புரிந்து தீபா புரியாது பார்க்க, மறைந்து நின்றிருந்த சுரேந்தர் தீபாவின் அருகில் வந்து கையை அழுத்தமாக பிடித்து நின்றார்.
“என்னங்க!”
சுரேந்தர் வாயில் விரல் வைத்து காண்பித்து நடப்பதை பாரென கண் காண்பித்தார்.
ஷிவாவை அருகில் அழைத்த ருது,
“வீடியோ கேப்ச்சர் பண்ணு. உன் ஆளுக்கு அனுப்பனுமாம்” என்றான். ஷிவா அவனை அதிர்ந்து பார்க்க, இரவே இனியனைப்பற்றி அவன் சொல்லியதில் ஒரு அனுமானம் அவளுக்கு இருந்திருக்க, தற்போது உண்மை என்பது புரிந்து மகிழ்வு கொண்டாள்.
தன் காதலைப்பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என நகர்ந்து நின்று ருது சொன்னதை செய்தாள்.
ருத்விக் ❤️ இமையாள். கையெழுத்திட்டு முடிய, ருதுவுக்கு சாட்சியாக வேங்கடமும், அம்பிகாவும் கையெழுதிட்டனர்.
“பொண்ணுக்கு யார் போடுறது?” பதிவாளர் கேட்டிட,
“வாங்க மாமா, அத்தை” என்று அழைத்தான் ருது.
யாரென அப்போதுதான் இமையாள் தலையை உயர்த்தி பார்த்தாள்.
“அப்பா” என்று அருகில் வந்துவிட்ட அவரின் கையை பிடித்து “என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்றாள்.
மகளின் கண்ணீரை துடைத்தவர் மேற்கொண்டு எதுவும் சொல்லாது பதிவேட்டில் மனைவியுடன் கையெழுத்திட்டார்.
‘அப்பா இதை ஏற்றுக்கொண்டாரா?’ இமையாளினுள் அதிர்வு. அவரின் கையெழுத்து அவரது சம்மதத்தை உணர்த்திட, அவளுக்கு அதுவே அப்போதைக்கு நிம்மதியை கொடுத்தது.
ருதுவிடம் சத்தமின்றி “தேன்க்ஸ்” என்றாள்.
“சொன்னதை செய்தேன்.” அவன் முடித்துக்கொண்டான். அவனது பதிலில் அவளுக்குத்தான் அவனை கடித்து வைக்க வேண்டுமெனத் தோன்றியது.
அடுத்து கோவிலுக்கு சென்று தாலி கட்டி அனைவரும் சுரேந்தரின் இல்லம் வந்திருந்தனர்.
நேசித்தவன். மனதில் வைத்து காதலித்தவன். உயிரில் சுமந்தவன். அவனுக்காக அவள் கொண்ட காத்திருப்பு, தவிப்பு, ஏக்கம் யாவும் இன்று கரை சேர்ந்தது. ஏனோ அவளிடம் நடந்த நிகழ்வில் பிடித்தமின்மை. ருதுவால் உணர முடிந்தது.
காதலித்த நாட்களில் பக்கம் நெருங்கி நின்ற தருணங்கள் கூட மிகக் குறைவு. அப்போது மனதால் இருந்த நெருக்கம் தற்போது கணவன் மனைவி ஆகிய பின்னரும் கொஞ்சமும் இல்லை.
பிடித்தவனாகவே இருந்தாலும் பிடிக்காமல் நடந்த இத்திருமணப் பந்தத்தில் ருதுவோடு அவனது அன்போடு பொருந்திப்போவாளா இமையாள்? இனி அனைத்தும் இருவரின் காதலின் கரங்களில்.