தூரமே தூரமாய் 27
ருத்விக்…
பல வருடங்களுக்குப் பின்னர் நிதானமாக மூச்சு விடுகிறான். மனதில் இதம் உணர்கிறான். உடல் லேசாக மிதப்பதை தன் இதயத்தின் துள்ளலில் அறிகிறான்.
இனி எதுவும் வேண்டாம். தனது கைகளில் தனது உலகம் வந்துவிட்டதாக ஆர்ப்பரிக்கிறான். ருதுவின் மகிழ்வு அவனது கண்களில் ஒளிர்ந்தது. முகம் ஒளி கூடி தெரிந்தது.
அவனுக்கு எதிர்பதமாய் அவனருகில் கடுகடுப்போடு அமர்ந்திருந்தாள் இமையாள்.
‘சார்பதிவாளர் அலுவலகம் வருவதற்கு முன்பே உண்மை குற்றவாளியை கண்டறிந்திருக்கிறான். தந்தையை வெளியில் கொண்டு வந்திருக்கிறான். பின்னரும் கூட தன்னை மிரட்டி எதற்கு திருமணம்?’ தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவே நினைத்து மனதில் குமைந்தாள்.
பல வருடங்களுக்கு முன்பு அவன் விட்டுச்சென்ற போதுகூட தன்னை ஏமாற்றிவிட்டான் என அவள் நினைக்கவில்லை. ஆனால் இக்கணம், இச்சூழல், அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னை பணிய வைத்து ஏமாற்றிவிட்டதாகவே கருதினாள்.
“எதுக்கு உர்ருன்னு இருக்க?” அவள் பக்கம் சரிந்து மெல்லொலியில் வினவினான்.
அவனை முறைக்க மட்டுமே செய்தாள்.
“முறைச்சிக்கிட்டே இருக்கப்போறியா?”
“எதுக்கு உங்களை நீங்களே தப்பா காட்டிக்க ட்ரை பண்றீங்க?” என்ற அவளின் புரிதலான கேள்வியில் உள்ளுக்குள் தோன்றிய அதிர்வை வெளிக்காட்டாது அழகாய் மறைத்தான்.
“நான் இதுதான்” என்றான்.
“இப்பவும் உங்களை எனக்கு புரியும்” என்ற அவளின் காதலில் தற்போது வெளிப்படையாகவே முகத்தில் மலைப்பின் உணர்வை பிரதிபலித்தான்.
“உங்களுக்கு கல்யாணமாகிடுச்சு. பையன் இருக்கான். டிவோர்ஸ் ஆகிடுச்சு. எல்லாம் ஓகே. பட், இப்படி கார்னர் செய்து என்னை கல்யாணம் பண்ணிக்கணும் என்ன இருக்கு?” எனக் கேட்டாள்.
“என்னையே நினைச்சு எனக்காகக் காத்திருந்தியே. வாழ்க்கை கொடுப்போமேன்னு தான்” என்றவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.
“லேஷஸ் விரியும் போது இன்னும் அழகா இருக்கே என்னோட லேஷஸ்” என்றான் கண்களில் மின்னலைக் காட்டி. இமையாள் சடுதியில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.
“ம்க்கும் ரொம்பத்தான்” என்றவன், வேங்கடம் கண்காட்டிட, சுரேந்தரிடம் தனியாகப் பேச எழுந்து சென்றான்.
இருவரும் தோட்டத்திற்கு வந்திருந்தனர்.
“சாரி மாமா.” எடுத்ததும் தன் மன்னிப்பை ருது கேட்டிட, அவனின் கரங்களை அழுத்தமாகப் பற்றி தட்டிக் கொடுத்தார் சுரேந்தர்.
“உங்களோட சூழல் எனக்கு புரியுது மாப்பிள்ளை. உங்க மேல எனக்கு கொஞ்சமும் வருத்தமில்லை. திரு எல்லாம் சொல்லும்போது உங்களுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாமேன்னு வருத்தமாத்தான் இருந்தது. காதலில் உங்களோட எண்ணமும் புரியுது. உங்க காதலும்” என்றவர், “எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. இமையாளும் நீங்களும் சந்தோஷமா வாழ்ந்தால் அதுவே போதும்” என்று ருதுவின் தோளில் தட்டிக் கொடுத்தார்.
தன்னை முழுதாய் புரிந்துகொள்ளும் உறவுகள் அமைவது எத்தனை பெரும் பாக்கியம். ருது மனதால் நெகிழ்ந்தான்.
“தேன்க்ஸ் மாமா” என்றவனை எதிர்பாராத வகையில் அணைத்து, “நாங்க இருக்கோம் மாப்பிள்ளை. இனியாவது சந்தோஷமா இருங்க” எனச்சொல்லி விடுத்தார்.
இதனை சற்று தொலைவிலிருந்து பார்த்த இமையாள் ஆச்சரியம் கொண்டாள்.
‘என்னைத்தவிர எல்லாருக்கும் நல்லவன் தான்’ என்று முணுமுணுத்தாள்.
பேசி முடித்து சுரேந்தருடன் புன்னகை முகமாக ருது உள்ளே வர உதட்டை சுளித்து பார்வையால் வெட்டியவளாக தனதறைக்குள் புகுந்து கொண்டாள் இமையாள்.
‘ம்ம்ம்… இனி தான் பெரிய பெரிய டாஸ்க் இருக்குடா உனக்கு.’ மனதில் புலம்பியவனாக, இருக்கையில் அமர்ந்தான்.
தீபாவிற்கு மகளின் திருமணம் இப்படியொரு நிலையில் ஏன் என்று குழப்பம் இருந்தாலும், கணவரின் பார்வைக்கு கட்டுப்பட்டு முழுமனதாக ருதுவை மருமகனாக ஏற்றிருந்தார்.
சுரேந்தரும், வேங்கடமும் பேசிக்கொண்டிருக்க… அம்பிகா தீபாவைத்தேடி சமயலறைக்குச் சென்றார்.
“என்ன டார்லிங் தனியா உட்கார்ந்திருக்கீங்க. உங்க ஆளோட போய் ரொமான்ஸ் பண்ணலாமே” என்று ருதுவுக்கு சற்று தள்ளி நின்று சொல்லிய ஷிவா, ருது அடிக்க வருவதைப்போல் காட்டிய பாவனையில் அம்பிகாவிடம் ஓடிவிட்டாள்.
அம்பிகா நடந்த திருமணத்திற்கான காரணத்தை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார். தீபாவின் முகம் கனத்து விட்டது.
“அண்ணனே உங்ககிட்ட சொல்லியிருப்பார். இருந்தாலும் நாங்களே சொல்றது தானே சரியா இருக்கும்” என்ற அம்பிகா, “இன்னைக்குத்தான் அவன் முகத்தில் உண்மையான சந்தோஷத்தை பார்க்கிறேன்” என்றார்.
பனித்த கண்களை தீபா சேலை தலைப்பால் ஒற்றிக்கொண்டவாறே,
“அவங்க ரொம்பவே நல்லாயிருப்பாங்க சம்மந்தி” என்றார் தீபா.
“இன்னைக்கு அண்ணா, அண்ணி கல்யாணம் நடந்திருக்கு. இப்படி ஆளாளுக்கு சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கீங்களே” என்று அவர்களிடம் கேட்டபடி வந்த ஷிவா, “விருந்து செய்யலையா அத்தை?” எனக்கேட்டாள் தீபாவிடம்.
“எப்பவும் சாப்பிடுறதுலே இரு” என்று அம்பிகா மகளை கடிய, “சோறு ரொம்பவே முக்கியம் மம்மி. சோறு தானே எல்லாம்” என்று ஷிவா சொல்லிய பாவனையில் தீபா சத்தமாக சிரித்துவிட்டார்.
அவர்களின் சிரிப்பின் ஒலி கேட்ட ருது, ‘சகஜமாக்கிட்டாள்’ என்று தங்கையை மெச்சிக்கொண்டான்.
ருது வீட்டை பார்வையால் அளந்து கொண்டிருக்க…
“ஒரு நிமிஷம் டா” என்று வேங்கடத்திடம் சொல்லிவிட்டு இமையாளின் அறைக்குச் சென்றார் சுரேந்தர்.
மெத்தையில் அமர்ந்தபடி நகத்தினை கடித்துக் கொண்டிருந்தாள் இமையாள்.
கதவினை தட்டிவிட்டு உள்ளே சென்றவர்,
“வாங்கப்பா” என்றவளின் அருகில் அமர்ந்து தலையை வருடினார்.
“நீங்க இந்த மேரேஜ்ஜை ஏத்துக்கிட்டிங்களாப்பா?” எதிர்பார்ப்பாய் கேட்டிருந்தாள்.
“நீ அவரோட மட்டும் தான் சந்தோஷமா இருப்ப இமயா” என்றவர், “நீங்க ரெண்டு பேரும் கையெழுத்து போடுறதுக்கு முன்னாடியே ருதுவை என் பொண்ணோட கணவனா, என்னோட மருமகனா நான் ஏத்துக்கிட்டேன்” என்றார்.
‘தன்னைப்போல் தன் தந்தையையும் ஒப்புக்கொள்ள வைத்திட ஏதும் கார்னர் செய்திருப்பானோ?’ என எண்ணியவள்,
“உங்களை காப்பாத்தினாருன்னு ஏத்துக்கிட்டிங்களாப்பா?” எனக் கேட்டிருந்தாள். முகத்திலும் வார்த்தையிலும் அத்தனை சூடு.
மெல்ல சிரித்த சுரேந்தர்,
“எந்தவொரு சூழலிலும் வார்த்தையை மட்டும் விட்டுடாதே இமயா. ருதுவோட வாழ்வில் உனக்குத் தெரியாத பக்கங்கள் நிறைய இருக்கு…” என்று இடைவிட்டவர், “இருக்கலாம்… இப்போ கோபத்தில் இருந்தாலும், ஒருநாள் நீங்க நார்மலாகி சந்தோஷமா வாழும் போது பேசிய வார்த்தைகள் இடைவெளியை உண்டாக்கும்” என்றார்.
இமையாள் புரியாது பார்த்தாள்.
“உனக்கு விருப்பமிருந்து பண்ணிக்கிட்டியோ, இல்லை பிடிக்காமல் பண்ணிக்கிட்டியோ? ஆனால், அவர் மீது வெறுப்பில்லைன்னு மட்டும் தெரியுது. அதுக்காக கல்யாணமாகிடுச்சேன்னு அவரோட சந்தோஷமா வாழுன்னு நான் சொல்லலை. உனக்கே அவர் இல்லைன்னா நீயில்லைன்னு தெரிஞ்சிருக்கு. அதான் அவர் எதையோ காரணம் காட்டி கேட்கவும் நீயும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்ட. எம் பொண்ணை விருப்பமில்லாம எதையும் செய்ய வைக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். உன்னோட பழைய ருதுவா மட்டும் பாரு. உனக்கே எல்லாம் தெரியவரும். அவருக்கு எந்தவொரு கஷ்டத்தையும் நீ கொடுத்துடாதே” என்றார்.
“எப்படிப்பா? அவருக்கு இது செகண்ட் மேரேஜ். இந்த கல்யாணம் நடக்காமல் இருந்திருந்தால், அவரோட காதலாவது என் மனசில் நிலைத்து நின்னிருக்கும். இப்போ… எனக்கு ஏத்துக்கவே முடியலப்பா” என்ற மகளை வாஞ்சையாகப் பார்த்த சுரேந்தர்,
“உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்லடா! அந்த நம்பிக்கையோடு வாழு. டிவோர்ஸ் ஆகிருச்சு சொன்னாரா? அவருக்கு நீ வாழ்க்கை கொடுத்திருக்கிறதா நினைச்சிக்கோ” என்றதோடு, “அவர் உன்கிட்ட என்னை வைத்து டிமாண்ட் பண்ணாம, இப்படியொரு சூழலே உருவாகாம, அவருக்கு டிவோர்ஸ் ஆனது உனக்குத் தெரிந்திருந்தால் என்ன பண்ணியிருப்ப?” எனக் கேட்டார்.
“ப்பா…” தடுமாறினாள்.
“நிச்சயம் அவரையும், அவர் குழந்தையையும் நீயா சென்று ஏத்துக்கிட்டிருந்திருப்ப. உன்னால் ருது கஷ்டப்படுவதை பார்த்துக்கிட்டு சும்மா இருந்திருக்க முடியாது… ரைட்?” என்றார்.
இமையாள் எந்த சூழலிலும் ருதுவின் மீதான காதலை மட்டும் விடவில்லையே! அப்படியிருக்கும்போது, அவனை தனித்து தவித்து நிற்க விட்டிருப்பாளா என்ன? ருதுவே மறுத்திருந்தாலும் அவனை ஏற்றுக்கொண்டிருப்பாளே! அவளின் அத்தகைய காதலையே சுரேந்தர் தற்போது மகளுக்கு உணர்த்திட முயன்றார். அவளும் உணர்ந்து கொண்டாளோ?
மெல்ல ஆமென்பதைப்போல் தலையசைத்தாள்.
“குட்” என்று கன்னம் தட்டியவர், “ருது உன்னை கல்யாணம் செய்துகிட்டது அவரோட காதலுக்காகத்தான். உன்னை சம்மதிக்க வைக்க அவருக்கும் வேறுவழி தெரியல” எனக்கூறி, “கோபத்தில் சந்தோஷத்தை தொலைச்சிடாதடா” என்றார்.
“இப்போ நான் என்ன பண்ணனும் ப்பா?”
“எப்படி வேணாலும் நடந்திருக்கலாம். ஆனால் என் பொண்ணு நீ ரொம்பவே சந்தோஷமா வாழனும் டா” என்றார்.
சுரேந்தரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
சில நிமிடங்கள் மகளின் தோளினைத் தட்டிக்கொடுத்தவர்,
“உனக்கு தேவையான தின்க்ஸ் பேக் பண்ணிக்கோடா! அதுக்கு முன்ன, ருதுவை உன் அறைக்கு கூப்பிடு” என எழுந்து சென்றார்.
சுரேந்தர் சொல்லியதில் என்ன புரிந்ததோ அவளுக்கு, “உன் காதலை மட்டும் பார்” என்று சொல்ல வருகிறார் என்பது மட்டும் நன்கு விளங்கியது.
ருதுவை அவளது ருதுவாக மட்டும் பார்க்க வேண்டுமென முடிவெடுத்தாள். கடந்து சென்றவை என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நிகழ் மற்றும் வரும் காலத்தை மட்டும் பார்ப்போம் என மனதில் தீர்மானித்தவளாக, எழுந்து வந்து ருதுவின் அருகில் நின்றாள்.
அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் அரவம் உணர்ந்து ஏறிட,
“வாங்க” என்று சென்றாள்.
‘மாமா அட்வைஸ் பண்ணியிருப்பார் போல’ என நினைத்தவன், அவள் பின்னால் சென்றான்.
“இது தான் லேஷஸ் ரூமா?” எனக் கேட்டுக்கொண்டே உள் நுழைந்தவன் பார்வையால் சுற்றி அலசினான்.
“நாட் பேட்” என மெத்தையில் அமர்ந்தவன், “ரூம் நல்ல நீட் அண்ட் க்ளீனாவே வச்சிருக்க” என்றான்.
“சும்மா என்னை சீண்ட வேண்டாம். நானே நார்மலா இருக்கலாம் நினைக்கிறேன்” என்று வேகமாக சொல்லியவள், “அதுக்காக உங்களை இன்னும் லவ் பண்றன்னு நினைச்சிக்காதீங்க. இனி எப்பவும் ஹேட் யூ” தான் என்று திரும்பி வார்ட்ரோபினை குடைய ஆரம்பித்தாள்.
“ஆஹான்…” என்றவன், “பட், நான் எப்பவும் லவ் யூ தான்” என்றான் படு கூலாக.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று முணுமுணுத்தாள். ருது சத்தமின்றி சிரித்துக் கொண்டான்
அந்நேரம் இமையாளுக்கு இனியனிடமிருந்து காணொளி அழைப்பு வந்தது. கட்டிலில் ருதுவுக்கு அருகிலிருந்த அலைபேசி சைலன்டில் இருந்திடவே ஒளிர மட்டுமே செய்திட, ருது ஏற்றிருந்தான்.
“ஹாய் டா மச்சான்!” உற்சாகமாகக் கூவினான்.
“என்னடா ரொம்ப சந்தோஷமா இருக்கபோல. அதுக்குள்ள இமயா மலை இறங்கிட்டாளா? அவள் மொபைல் நீ அட்டெண்ட் பன்ற?” என கேட்டு தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டான் இனியன்.
ருது மச்சான் என்று கத்தியதிலே திரும்பிப் பார்த்திருந்த இமையாள் இனியனின் வார்த்தைகளில் ருது பதில் சொல்லும் முன்பு, அலைபேசியை வேகமாக பறித்திருந்தாள்.
“பாப்பா…” இனியன் திருதிருத்தான்.
“நீங்களும் என்கிட்ட மறைக்க ஆரம்பிச்சிட்டிங்களா? எப்போலேர்ந்து உங்க ஃபிரண்ட்கிட்ட பேச ஆரம்பிச்சிங்க. எல்லாம் திருட்டுக்கோட்டு” என்றவள், “நேரில் பார்த்தால் அறையனும் சொன்னீங்களே! அறைஞ்சீங்களா?” என இனியனிடம் கேட்டாள். ருதுவை பார்த்துக்கொண்டே!
‘அய்யோ இவள் அவன்கிட்ட கோர்த்துவிட்டு எனக்கு அறை வாங்கி கொடுத்திடுவாள் போலவே’ என்று இனியன் முழிக்க…
“அப்போ உங்களுக்கும் நடந்த மேரேஜ்ஜில் கூட்டிருக்குல?” என மெல்லிய விசும்பலோடு இமையாள் கேட்டிட…
“டேய் இமயா… அது” என்ன சொல்வதென்று இனியன் தடுமாறினான்.
“ஃபோனை வைடா” என்று இனியனிடம் கத்திவிட்டு, அவளிடமிருந்து பிடுங்கி அலைபேசியை அணைத்தான் ருது.
“இப்போ என்ன இனியன் என்கிட்ட பேசியதில் உனக்கு ஏதும் பிரச்சினையா?” எனக் கேட்ட ருது, “கல்யாணத்தை பொறுத்தவரை அவனுக்கு எதுவும் தெரியாது. உன் கோபத்தை அவன்கிட்ட காட்டாதே! உன்னை கார்னர் பண்ணிட்டேன்னு பழிவாங்கனும் தோணுதா? என்ன தோணுதோ என்கிட்ட மட்டும் காட்டு” என்றிருந்தான்.
‘இந்த முகத்தைப் பார்த்து நாங்க பழிவாங்கிட்டாலும்’ என்று முனகிய இமையாள், “நல்லா பழிவாங்குறேன் இருங்க” என்றவளாக தனக்குத் தேவையான உடைகளையும், பெட்டியையும் எடுத்து அவன் முன் வைத்தாள்.
அவளது முனகளில் அவன் இதயம் சில்லென்று குளிர்ந்தது. அதனை அவளுக்கு மறைத்தவனாக நின்றிருந்தவன், அவள் எடுத்து வைத்ததை பார்த்து என்னவென்று புருவம் உயர்த்தினான்.
“பழிவாங்குறேன்” என்ற இமையாள், “உங்க வீட்டுக்கு கொண்டுப்போகனும்… ஒழுங்கா மடித்து அடுக்கி வையுங்க” என மெத்தையில் கால்நீட்டி பின்னால் சாய்ந்து அமர்ந்தாள்.
“எதே” என்றவன், “யூனிபார்மில் இருக்கேன் டி” என்றான்.
“அதுக்கு… பொண்டாட்டி சொல்ற வேலை செய்யக்கூடாதுன்னு ஏதும் ரூல் இருக்கா?” என்று வினவினாள் காலினை ஆட்டிக்கொண்டு.
இமையாள் பொண்டாட்டி என்பதை தன்னைப்போல் சொல்லியிருக்க, ருதுவிற்கு நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்டது.
அவ்வார்த்தை இயல்பாய் வருகிறதென்றால் இன்னமும் அவன் மீதான காதல் அவளிடத்தில் குறையவில்லை என்று தானே அர்த்தம்.
உல்லாச மனதோடு உடைகளை அடுக்க ஆரம்பித்தான்.
ருதுவை முறைத்துக் கொண்டிருந்தவளின் பார்வை எப்போது ரசனையை தத்தெடுத்ததோ, அவனின் முகத்தை அணு அணுவாய் உள்வாங்கினாள்.
“மீசை கொஞ்சம் ஷார்ப் பண்ணலாம்” என்றாள்.
“பண்ணிடலாம்” என்றவன் அவளை பார்த்து ஒற்றை கண்ணடிக்க, அவளிடம் மாற்றமில்லை.
அவள் நிகழ் உலகில் இல்லை என்பது புரிந்தவன்,
“லவ் யூ டி” என்றிட, அவளும் “லவ் யூ ருது” என்றிருந்தாள்.
அடுத்த நொடியே ஒரு திடுக்கிடலுடன் நிமிர்ந்து அமர்ந்தவள்,
“என்ன சொன்னீங்க?” எனக் கேட்டாள்.
“நான் எதுவும் சொல்லலையே” என்று தோள்களை உயர்த்தி இறக்கியவன், “நீ சொன்ன வேலையை எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திட்டு இருக்கேன். வேணுன்னே சண்டைக்கு வர” என்று பொய்யாய் ஆதங்கப்பட்டான்.
“ஆமா… ஆமா… இது ரொம்ப கஷ்டமான வேலை தான்” என்றவள், “நீங்க ஏதோ சொன்னீங்க” என்றாள்.
“நான் சொல்லியிருந்தா உனக்கு கேட்டிருக்கணுமே. பக்கத்தில் தானே இருக்கேன்” என்றவனுள் அவளின் குழம்பிய முகம் கண்டு அவ்வளவு சிரிப்பு. இதழ் கடித்து அடக்கினான்.
“ஸ்டேஷன் போகலையா?”
“உன்னை நம்ம வீட்டில் விட்டுட்டு அவசரம்ன்னா போகணும்” என்றவன், “நான் உன் பக்கத்தில் இருக்கிறது கஷ்டமா இருக்கா?” எனக் கேட்டிருந்தான் சோகம் போல்.
நொடியில் அவளின் முகம் சுருங்கி விட்டது.
“நான் ஏதோ சும்மா…” என்று அவள் முடிப்பதற்குள்,
“உனக்கு பிடிக்காத கல்யாணம். சோ, என்னோட உனக்கு கஷ்டமாவே இருந்தாலும் நான் உன் முன்னாடியே தான் இருப்பேன்” என்று குறும்பாய் சிரித்தான்.
இமையாள் பற்களைக் கடித்து, அவனின் கழுத்தை நெறிப்பதுபோல் கைகளை கொண்டு செல்ல…
“இமயா” என்று அழைத்திருந்தார் தீபா.
“உங்களை அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என்று அவள் எழுந்து செல்ல…
“நல்லா கவனிச்சிக்கோ” என்று அவளின் முறைப்பை பரிசாக பெற்றிருந்தான்.
தீபா மறுக்க மறுக்க அம்பிகாவும், ஷிவாவும் உதவி செய்திருக்க, குறுகிய நேரத்தில் விருந்தே ஏற்பாடாகியிருந்தது.
அனைவரும் ஒன்றாக உண்டு முடிக்க, நல்ல நேரத்தில் மகளை ருதுவுடன் அழைத்துச் சென்றனர் திருவேங்கடம் மற்றும் அம்பிகா.
வீட்டிற்கு வந்ததும் தான் இமையாள் தேஷ்ஷின் நினைவு வந்தவளாக,
“உங்க பையன் எங்கே?” என வேண்டுமென்றே கேட்டாள். அவனை வெறுப்பேற்றுவதற்காக மட்டுமே உங்க பையன் எனக் குறிப்பிட்டாள்.
அப்போதுதான் அவளை தங்களின் அறைக்கு அழைத்து வந்திருந்தான். அவள் அவ்வாறு கேட்டதும் ஒரு கணம் சினம் கொண்டு அவளை அழுத்தமாக ஏறிட்டவன்,
“நம்ம பையன்” என்றான். பார்வையில் அத்தனை கூர்மையைத் தேக்கி, வார்த்தையில் அடர்த்தியைக் கூட்டி.
இமையாள் வாய் திறந்து அவனுக்கு பதில் கொடுக்கவில்லை.
ஆனால் மனதில்,
‘நீங்க அப்பான்னா… நான் தானே அம்மா’ என சொல்லியிருந்தாள்.