தூரமே தூரமாய் 33
இமையாளின் இமைகள் ஈரத்தில் மூழ்கியது. கண்ணீர் நிற்காது கன்னம் வழிந்தது. அவளால் கேட்ட நிகழ்வுகளிலிருந்து மீள முடியவில்லை.
பாதம் தரையில் இருக்க மெத்தையில் அமர்ந்திருந்தவள் முன் தரையில் அமர்ந்திருந்த ருதுவின் தலை அவளது மடியில் புதைந்திருந்தது.
வார்த்தைகளால் விவரிக்க முடியாது… சொல்லில் அடக்கிட முடியாத தாக்கம் இமையாளிடம்.
அவளின் கை ஒன்று, தன் மடியில் தலை வைத்து அழுகையில் குலுங்கிக் கொண்டிருக்கும் ருதுவின் முதுகை தட்டிக் கொடுத்திட, மற்றொரு கை அவனது முடிகளுக்குள் நுழைந்து வருடியது.
இமையாளுக்கு எப்படி எந்த வார்த்தைகளால் ஆறுதல் சொல்லிட முடியுமென்றே தெரியவில்லை. சொல்லும் வார்த்தைகள் யாவும் அவனைத் தேற்றிடத்தான் செய்யுமா?
அவளின் நெஞ்சம் நிலைகொள்ள முடியாது படபடத்தது. எத்தனை பெரும் இன்னலிலிருந்து மீண்டு வந்திருக்கிறான். நினைக்கவே அவளின் உடல் நடுக்கம் கண்டது.
இமையாளின் மௌனம் ருதுவிற்கு, அவள் தான் சொல்லியதை ஏற்கவில்லையோ எனும் அச்சத்தைக் கொடுக்க…
“உனக்கு இது அழுத்தமில்லாம, அத்தனை பெரும் வலியா இல்லாம இருக்கலாம்… ஏன்னா நான் சொல்லி நீ கேட்டிருக்க. வெறும் வார்த்தையால சொல்றது அதனோட தாக்கத்தை கம்மி பண்ணிடும். ஆனால் நான் அந்த சூழலை அனுபவித்தவன்…” அதற்கு மேல் வேறெப்படி சொல்வதென்று தெரியாது, “உனக்கு புரியுதா லேஷஸ்?” எனக் கேட்டிருந்தான்.
இமையாளின் கன்னம் தாண்டி கொட்டிய ஒற்றைத் துளி ருதுவின் உச்சியில் பட்டுத் தெறித்தது.
ருதுவின் தலையை பிடித்து முகம் உயர்த்தியவள் அவனது நெற்றியில் தன் இதழை அழுத்தமாக ஒற்றி எடுத்தாள்.
ருதுவின் தேகம் மட்டுமல்ல அவனது நிகழ் ஒரு கணம் அனைத்தும் மறந்து உறைந்து சீரானது.
“லேஷஸ்…”
“லவ் யூ ருது” என்ற இமையாள், “நீங்க பக்கமிருந்த போது விரும்பினதைவிட, விட்டுப்போன அப்புறம் தான் இன்னும் ஆழமா உங்களை நேசித்தேன். என்ன காரணம் தெரியலன்னாலும் இன்னும் கூடுதலாதான் என் இதயம் உங்களை விரும்பியது. நீங்களே சொல்லியிருந்தாலும், எனக்குள்ள இது உண்மையில்லைன்னு சொல்லிட்டே இருந்தது. இருந்தாலும் ஒரு வலி… எப்பவும். அந்த வலி உங்க வலிக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லைன்னு தெரியுது. ஆனால் உங்ககிட்ட என்ன பேசணும் இந்த நொடி வார்த்தையே தெரியல ருது” என மீண்டும் அவனின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.
“கேட்கும் போது தாக்கம் வேணுன்னா கம்மியா இருக்கலாம். ஆனால் வலி ஒண்ணு தானே!” என்றவள், “நடந்து முடிந்தது வருத்தம் தான். நிச்சயம் மறக்க முடியாது. ஆனாலும் எனக்கு என்ன பண்ணி உங்களை ஆறுதல் படுத்தணும் தெரியலையே ருது” என அவனின் நெற்றி முட்டி இமைகளை அழுத்தமாக மூடிட, அவளின் விழி நீர் அவனது வெண்படலம் தீண்டி வழிந்தது.
தனக்காக தன் வலி உணர்ந்து தன்னவள் அழுகிறாள். அதுவே அவனது பெரும் பாரத்தை கொஞ்சம் குறைத்திருந்தது.
ருதுவிற்கு நடந்த நிகழ்வை எப்போது நினைத்தாலும் கனம் கூடித்தான் போகும். வலி பல மடங்கு உயர்ந்து அவனை வதைத்திடும்.
ஆனால், இந்நொடி தன்னவளிடம் அனைத்தும் சொல்லிய பின்னர், மனம் லேசானது போல் உணர்ந்தான். தன் வலியை அவள் சுமக்கும் இந்த மணித்துளி, அவனது சுமை இறங்கிய உணர்வு அவனுள்.
ருதுவின் தலை கோதும் அவளது விரல்களின் வருடலில் அவன் இதயம் இதம் கொண்டது. தட்டிக் கொடுக்கும் அவளது சிறு பரிவில் அவன் தன் வதை தன்னிலிருந்து விலகும் மாயம் கண்டான்.
மொத்தத்தில் அவளருகில், அவன் தன் துக்கம் தொலைத்தான். வருத்தம் மறந்தான். வலி துறந்தான். வதை நீர்த்தான்.
எப்படி ஆறுதல் அளிப்பதென்றே தெரியவில்லை என்றவள், ஒற்றை நெற்றி முத்தத்தில் மொத்த ஆறுதலையும் அளித்திருந்தாள்.
அவனது இதயமாக அவள் இருந்திட… அவனருகில் அவளது வாசம் போதுமே! அவன் அவனாக மீண்டுவிட. மீட்டுவிட்டாள். எதுவுமே செய்யாது தன்னவனின் வலியை போக்கியிருந்தாள்.
அவனது நெற்றியிலிருந்து தன் நெற்றி விலக்கியவள், மிக அருகில் தன் மூச்சுக் காற்றோடு கலக்கும் அவனது மூச்சுக்காற்றை தன்னகத்தே நிரப்பியபடி, அவனது கழுத்தோடுக் கட்டிக்கொண்டாள்.
அவனது முகத்தை தன் மார்பில் அழுந்த புதைத்துக் கொண்டாள்.
“நடந்து முடிந்த எதற்கும் என்னால் ஆறுதல் சொல்லிட முடியாது ருது. சொன்னா அதெல்லாம் வெறும் வார்த்தையா மட்டும் தான் இருக்கும். அந்த வெற்று வார்த்தைகள் ஏதும் இல்லாம, இனி வரும் ஒவ்வொரு நொடியும் நீங்க அனுபவித்த வலியில்லாம உங்களை என்னால் பார்த்துக்க முடியும். என்னோட காதலால் உங்க ஆழ் மனசில் தேங்கிருக்கும் ரணத்துக்கு என்னால் மருந்திட முடியும். என் ருதுவை என்னால் சந்தோஷமா வைத்துக்க முடியும்” என்றாள். அவள் சொல்லியதில் அவன் உணர்ந்ததெல்லாம் அப்பட்டமான காதல்.
ருதுவின் கைகள் தன்னைப்போல் உயர்ந்து இமையாளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது.
இமையாள் ஆறுதல் என்கிற பெயரில் ஏதும் சொல்லியிருந்தால் கூட இத்தனை நிம்மதி அவனுள் விரவியிருக்காது. அவனை அவனது வலியோடு அணைத்து, அதனை தன் காதலை கொண்டு சரி செய்திடுவேன் என்ற °அவளின் கண்ணீரில் தொக்கி நின்றது அவனுக்கான அவளின் சொல்லாத ஆறுதல்கள்.°
“ருது…” அவளுக்கு அதைத்தவிர வேறொன்றும் வரவில்லை.
சேயாக சுமை இறக்கி வைத்தவனை தாயாக நெஞ்சம் சுமந்திட்டாள்.
அறை முழுக்க இருளாகியிருந்தது. அவனது வெளிச்சமாக அவனுள் அவள் நிறைந்திருந்தாள்.
சன்னல் வழி ஊடுருவிய நிலவின் ஒளியில், வெளிச்சம்… அவ்வறையில் மட்டுமல்ல அவர்களது வாழ்விலும்.
இருவருமே ஒருவரின் அணைப்பில் மற்றவர் கட்டுண்டு இருந்தனர். அதில் நேசம் மட்டுமே விரவிக் கிடந்தது.
“என்னை மன்னிச்சிட்டியா லேஷஸ்?”
அவனது கேள்வியில் பட்டென்று விலகியிருந்தாள்.
மென் வெளிச்சத்தில் அவனின் எதிர்பார்ப்பு நிறைந்த விழிகள் மட்டுமே அவளின் கண்களுக்கு புலப்பட்டது.
“உங்க மேல தவறுன்னு ஒன்னு இருந்தா தானே மன்னிக்கனும்” என்றாள் அவனின் கன்னங்களை தன் உள்ளங்கைகளில் நிரப்பியவளாக.
“உன்னை நான் ஏமாத்திட்டன்னு நீ எப்பவுமே நினைத்தது இல்லையா லேஷஸ்?”
“அப்படி நினைத்திருந்தால் அப்பவே என் காதல் தோத்துப் போயிருக்கும்” என்றவளை இம்முறை ருது தன் அணைப்பில் கொண்டு வந்திருந்தான். அவள் அவனது மடியோடு ஒன்றிருந்தாள்.
“இதெல்லாம் தெரியாமலே நான் உங்களை ஏத்துக்கணும் நினைச்சு தான் அப்படி கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணீங்களா ருது?”
“நீ அறிவாளின்னு அப்பப்போ ப்ரூவ் பண்றடி” என்று அவளின் கன்னம் கடித்திருந்தான்.
“ஷ்ஷ்…” என்று வலியில் சத்தமிட்டவள்,
“டிசி சார் நார்மலாகியாச்சுப்போல?” என்றாள்.
“நீ பக்கத்தில் இருக்கிறதாலன்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடிலாம் நடந்ததை நினைத்தால் எல்லாம் மறந்திடும். அதிலிருந்து வெளிவரவே ரொம்ப நேரமாகும். இரவில் தூங்காமலெல்லாம் இருந்திருக்கேன். ஆனால் இப்போ, நீ என் கையில இருக்கிறதே அத்தனை ஆறுதலா இருக்கு. மறக்கலன்னாலும் இந்த நொடி அந்த தாக்கம் எதுவும் மனசில் இல்லை. எனக்கு ஒரு வலின்னா அதுக்கு மருந்தா நீ இருக்கன்னு ஒரு எண்ணம். லேசா இருக்க மாதிரி இருக்கு” என்று அவளின் கன்னத்தில் கடித்த இடத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
“இன்னும் இதைப்பற்றி வேறெதுவும் சொல்லணுமா?”
ருதுவின் தலை இல்லையென அசைந்தது.
“அப்போ இனி இதைப்பற்றி எப்பவுமே நீங்க பேசவேக் கூடாது. பேசாமலிருந்தாலே நினைவிலிருந்து காணாமல் போயிடும்” என்றவள், “இது போகாது தெரியும்” என்று இழுத்திட…
“நான் பேச மாட்டேன். நினைக்காமல் இருக்கவும் ட்ரை பன்றேன். ஓகேவா?” என அவளின் கன்னம் பிடித்து ஆட்டினான்.
“நான் லாஸ்ட்டா ஒன்னு கேட்டுக்கவா?” தயக்கமாகக் கேட்டிருந்தாள். அவனை பேசக்கூடாதென சொல்லிவிட்டு தானே திரும்ப அதைப்பற்றி பேசுவதா என்ற தயக்கம்.
“என்ன கேட்கணும்?”
“அதெல்லம் உங்களுக்காகன்னு அவர்(கைலாஷ்) சொன்னதா சொன்னீங்க… அதனால் கேட்கிறேன். உங்களை எதுக்காக காரணப்படுத்தினார்?” என்றாள்.
“செய்யுற தப்புக்கு நமக்குன்னு ஒரு காரணம் வேணுமே” என்றவனின் உடலிலும், குரலிலும் சட்டென்று ஒரு இறுக்கம் வந்திருந்தது.
இமையாளுக்கு ஏன் கேட்டோமென்று இருந்தது. மனதால் தன்னையே நொந்தாள்.
கொஞ்சம் தெளிந்தவனை மீண்டும் அதனுள் இழுத்துவிட்டோமோ என சட்டென்று அவளின் விழிகள் கலங்கியது.
“அந்த ஆளு பாவம் பண்ணி சேர்த்த சொத்தெல்லாம் நான் நல்லாயிருக்கவாம்” என்றவனிடம் அப்படியொரு கோபம்.
ருதுவினுள் கைலாஷ்ஷை தன்னால் கொலை செய்திட முடியவில்லையே என மனதில் புதைந்திருக்கும் கோபம், அவளின் கேள்வியில் வெளிப்பட்டுவிட்டது. அன்னையின் இறுதி வார்த்தைக்காக அவனது பழிவெறி கைலாஷ்ஷிற்கு தண்டனை வாங்கிக்கொடுத்ததோடு முற்றுப்பெற்ற கோபம் அது.
இருளில் வரி வடிவமாக அவனது உருவம் தெரிந்தாலும், தன் கையை பிடித்திருக்கும் பிடியில் அவனது கோபமும், இறுக்கமும் அவளுக்கு விளங்கியது.
“சாரி… சாரிப்பா… சாரி ருது. பேசக்கூடாது, நினைக்கக்கூடாதுன்னு நானே சொல்லிட்டு… ம்ப்ச்… சாரி ருது” என்றவளின் அழுகை தோய்ந்த தன்னவளின் குரலில் தன்னை மீட்டிருந்த ருது, அவளின் கரகரப்பை தன்னுள் வாங்கியிருந்தான்.
அவளின் அழுகை அவனது தொண்டைக்குள் அடங்கியது.
ருது இப்படி சட்டென்று இதழ் முத்தம் அளிப்பானென்று நினையாதவள் முதலில் அதிர்ந்து, பின்னர் தெளிந்து, விழிகள் மூடி கிறங்கினாள்.
அவனது கோபமும் வலியும் அவளது இதழ் குளுமையில், நெஞ்சம் நனைத்து கரைவதை உணர்ந்தவனுக்கு மீண்டிட மனமின்றி உதட்டில் ஆழப் புதைந்தான்.
கிறங்கியவள் தானும் பதில் முத்தம் கொடுத்திட… அவனுள் இளமை பிரவாகம். அவனது கைகள் அவளது முதுகில் அழுத்தம் கொடுத்திட அவளுள் சிலிர்ப்பு. அவளது கரங்கள் தானாக அவனது சிகைக்குள் புகுந்து நெறித்தது.
களையப்பட்ட வருத்தங்கள், நீங்கியிருந்த தூரங்கள், விலகியிருந்த வலிகள், இணைந்திருக்கும் இதழ்கள், தழுவியிருக்கும் கரங்கள், சேர்ந்திருக்கும் மனங்கள், காதலின் அடுத்த நிலையில் பொங்கி ஆர்ப்பரித்திட, தடைகளை தகர்த்திட நினைத்துவிட்டனர்.
ருதுவின் கரம் தன்னவளை உணர்ந்திட தவித்திட… மெல்ல கீழிறங்கி அவளின் வெற்றிடையில் அழுத்தமாக பதிந்தது. அவனின் வெம்மை அவளுள் குளிர்ச்சியாய் இறங்கிட, அவளது அதரம் விரிந்து முத்தம் முடிவுக்கு வந்தது.
அவன் மீதே சரிந்து குலைந்தாள்.
தன் நெஞ்சம் முட்டி உணர்வுகளை தட்டுபவளின் செவியில் இதழ் தீண்டியவன்…
“இதுக்குமேல கண்ட்ரோல் பண்ண முடியும் தோணலடி” என்றான்.
விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் அவனை.
இருளின் பளபளப்பில் காதலோடு தாபமும் போட்டிப்போட்டது அவனது விழிகளில்.
“வேண்டாமா?” கரகரப்பில் தோய்ந்து வெளிவந்த அவனது அந்தக்குரலில், அவளது விழிகள் மயக்கத்தைக் காட்டிட, அவளது தலை மென்மையாய் அசைந்தது. சரியெனும் விதமாக.
தன்னை முத்தமிட்ட நொடி, அவன் தனது கோபம் மறந்து இறுக்கம் தளர்ந்ததை உணர்ந்தவள், அவனையே தனக்குள் மறக்கடிக்க சம்மதித்துவிட்டாள்.
அவன்மீது கோபமிருந்த தருணங்களிலே கொள்ளை காதலை கொண்டிருந்தவள், இப்போதா காதலை காட்டிட மறுத்திடுவாள்?
தானாக முன்வந்து அவனது இதழ் தீண்டினாள். பூவில் தேன் சுரந்திடும் தேனாக மாறியவன், தன்னவளை கைகளில் அள்ளி மஞ்சத்தில் சரித்து அவளை ஒட்டி தானும் சரிந்திருந்தான்.
முதல் தயக்கம் சூழ சட்டென்று அவனுக்கு முதுகுக்காட்டி திரும்பியிருந்தாள்.
அவனது சூடான மூச்சுக்காற்று அவளின் வெற்று முதுகை தீண்டிட தேகம் உணர்ந்த அனலில், வேகமாக அவன் புறம் திரும்பி அவனது மார்பிலே தன் முகத்தை ஒளித்துக் கொண்டாள்.
அவனது கைகள் அவளின் இடை வருட, அவளின் உடல் கூசி சிலிர்த்தது. அவளின் நெளிவு அவனது தேகம் உரசி தீப்பிடிக்க, இருவரும் ஒரே நேரத்தில் அணைப்புக்குள் கட்டுண்டனர்.
ருதுவின் விரல் அவளின் முதுகில் கோலமிட்டபடி ஆடையின் முடிச்சினை அவிழ்த்து விடுதலை அளித்திட, அவளது கைகள் அவனது காக்கி உடையின் பொத்தான்களை நீக்கியிருந்தது.
யாவும் துறந்து மறந்த நிலையில் ஒருவர் மற்றவரின் ஆலுங்கினையில் மூழ்கிட, விரல்கள் பயணித்த இடமெல்லாம் இதழ் ஊர்ந்து சிலிர்க்க வைத்து, துடிக்க வைத்து தன்னுள் அடங்க வைத்தான். உணர்வின் கொந்தளிப்பில் அவளின் விரல்கள் அவனது மேனியில் நகம் கொண்டு ஓவியம் வரைய, அவனது பற்கள் அவளில் மாயத்தை நிகழ்த்தியது.
“ருது” என்றவளின் மயக்கும் குரல் அவனது வேகத்தைக் கூட்டிட, அலையலையாய் தன்னை வாரிச்சுருட்டும் அவளின் காதல் கடலில் தன்னை மூழ்கடிக்கத் துணிந்தவன், அவளின் விழி பார்த்து மென்மையாய் காதல் அம்புகளை எய்திட… வலியின் துடிப்பில் இறுக்கி அணைத்தவளின் அழுத்தத்தில் இதழ்களால் இதமளித்து தன்னை மொத்தமாய் ஒப்பிவித்து விலகியவன், விலகாது தன் கை வளைவில் வைத்து அவளது இமை கற்றை மூடிய விழிகளில் அழுந்த முத்தம் பதித்து அணைத்துக் கொண்டான்.
அவனது மனதின் காயம் ஆற்றிட மருந்தாகியவள்… அவனில் தன் தடத்தை அழுத்தமாக பதித்திருந்தாள்.
சற்று முன்னர் இருந்த சூழலின் தாக்கம் கொஞ்சமும் அவனிடத்தில் இல்லை. மொத்தமாக அவளுள் மூழ்கியிருந்தான். அவளருகில் அவனாக மட்டுமே இருந்தான். அவனின் நினைவுகள் யாவும் இந்நொடி அவனவள் மட்டுமே நிறைந்திருந்தாள்.
கண்களை மூடி தன் அணைப்பைக் கூட்டியவன்,
“ஆர் யூ ஓகே?” எனக் கேட்டான்.
ருதுவின் மார்பில் முத்தம் வைத்து பதில் அளித்தாள்.
“இட்ஸ் ஹெவன்” என்ற ருது, “டிட் யூ ஃபீல் மீ?” என்றான்.
“ச்சூ” என்று அவனது மார்பிலே கடித்தவள், “இதெல்லாம் கேட்பீங்களா?” என சிணுங்கினாள்.
“என்னை மொத்தமா கொள்ளையடிச்சிட்டடி” என்று மீண்டும் அவளுள் மூழ்கி எழுந்தான்.
ஆர்பரிப்பாய் அரங்கேறிய ஆலாபனையில் மென்மையாய் இறுதி முத்தம் வைத்து அணைப்புக்குள் கட்டுண்டு இருந்தவர்கள், தங்களின் நேசத்தை மனதால் கடத்தியபடி மௌன மொழியில் ஆழ்ந்திருந்தனர்.
“என்னடி இவ்வளவு அழகா இருக்க?” அமைதியை உடைத்து ருது கேட்டு முடிக்கும் முன் அவனின் வாயிலே பட்டென்று அடிபோட்டவள் அவனிடமிருந்து பிரிந்து எழுந்தமர்ந்தாள்.
“வாரி சுருட்டிக்கிட்டடி… மொத்தமா!”
“ஆமா… ஆமா… யாரு சுருட்டிக்கிட்டாங்கன்னு நல்லாவே தெரியும்” என்றவள்,
“என்னை சொல்லிட்டு நீங்க தான் கொள்ளையடிக்கிறீங்க” என்றாள்.
“எதை கொள்ளையடிச்சேனாம்?” எனக் கேட்டு ருது சத்தமாக சிரித்திட, அவனது வாயில் கை வைத்து மூடினாள்.
“எல்லாமே தப்பு தப்பா பன்றது?” என்று தன் வாயிலிருந்த அவளின் கையினை பிரித்து எடுத்து இழுத்தவனாக, அவளின் இதழ் பற்றி விடுத்தான்.
இமையாள் பதிலின்றி இருக்க…
“என்னவாம்?” எனக் கேட்டு, அவளின் கன்னத்தில் விரலால் ஊர்ந்தான்.
“லவ் பண்ணும்போது நீங்க ஐ லவ் யூன்னு கூட சொன்னதில்லை. என் பக்கம் வரவே அவ்வளவு யோசிப்பீங்க. கை பிடிக்க… சுத்தம். ஆனால் இப்போ” என்று அவள் நிறுத்திட…
“இப்போ?” என்று இழுத்து விஷமமாகப் புன்னகைத்தவனின் முகம் காண வெட்கம் கொண்டவளாக
“என் ட்ரெஸ்” என அவனது முதுகுக்கு அடியில் சுருண்டிருந்த புடவையை உருவிக்கொண்டு குளியலறை புகுந்திருந்தாள்.
செவி நிறைத்த அவனது சிரிப்பு அவளுள் பெரும் ஆசுவாசமாய்.
சிரித்த சிரிப்பு கண்ணில் நீரை வரவழைத்திட, அவன் நெஞ்சம் அமைதி கொண்டிருந்தது. வெகு நாட்களுக்குப் பின்பாக.
தொலைந்து… தூரம் சென்ற ஒட்டு மொத்த மகிழ்வையும் அவனுக்கு மீட்டுக் கொடுத்திருந்தாள் அவனது லேஷஸ்.
“லவ் யூ டி.” தானாக அவனது அதரம் விரிந்து சொல்லியது.
“சரியா கேட்கலை” என்றபடி குளியலறையிலிருந்து வெளி வந்தவள் மின்விளக்கினை போட, ருது தன் கைகளை விரித்து அவளை அழைத்திருந்தான்.
“குளிச்சிட்டேன் ருது” என்றபோதும் அவனது அணைப்பில் பாந்தமாய் வந்து பொருந்தினாள்.
இமையாளின் உச்சியில் முத்தம் வைத்து, “தேன்க்ஸ் டி” என்றான்.
“எதுக்கு?” அவள் புரியாது வினவ,
“எல்லாத்துக்கும்… எல்லாத்துக்குமே!” என்றான்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் லேஷஸ்” என்று அவன் உளமார ஆழ்ந்து சொல்ல, அவளோ “அய்யய்யோ” என்று அவனிலிருந்து விலகினாள்.
“என்னாச்சு?” ருது பதற்றமாக வினவிட,
ருதுவின் தோளில் விரலினால் வருடியவள், “என்னோட டீத் மார்க்” என்றாள்.
“உனக்கும் தான் இருக்கும்” என்று எழுந்து நின்றான்.
“எனக்கு எப்படி என்னோடது?” என்று யோசித்தவள் அவனின் பார்வை மாற்றத்தில் புரிந்துகொண்டவளாக,
“தள்ளியே நில்லுங்க” என அவனின் நெஞ்சில் கை வைத்து நிறுத்தினாள்.
“இனி அதுக்கு வாய்ப்பேயில்லை” என்றவன், மெல்ல முன்னேற, அவனுக்கு பின்னால் மேசையிலிருந்த கடிகாரத்தில் மணியை பார்த்தவள் பின்னால் அடி வைத்து தள்ளிச்சென்றாள்.
“சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க. டைம் எயிட் தர்ட்டி. போய் தேஷ் கூட்டிட்டு வந்திடுங்க” என்று சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.
செல்லும் அவளின் முதுகைத் தீண்டியது ருதுவின் காதல் சுமந்த ஆத்மார்த்தமானப் பார்வை.
‘உன்னால் மட்டும் தாண்டி, நான் நானா இருக்க வைக்க முடியும்’ என மனதோடு சொல்லிக்கொண்டவனின் அகம் முழுக்க அவனது லேஷஸ் மட்டுமே!
விண்ணை முட்டும் மகிழ்வில் அவன். காரணம் அவனவளின் நேசம்.
அவளுக்காகவேணும் அவனது இன்னல்களை நினைக்கமால் இருந்திடுவான். மறக்க முடியாததை மறுத்திட முடியும். இனி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன்னவளுக்கு உரிமைப்பட்டது என்ற நிலையில் தன் வருத்தம் அவளையும் வதைக்கும் என… நினைவில் நீங்காததை மொத்தமாய் ஒதுக்கி வைத்திட்டான். அவனது லேஷஸ்க்காக.
‘தூரங்கள் நேசத்தை ஆழமாக்குகிறது.
நெருக்கங்கள் நேசத்தை அழகாக்குகிறது.’
தூரமே தூரமாய் இருந்தபோது இருவரின் நெஞ்சமும் நெருக்கத்திலும் நெருக்கமாய்.