தூரமே தூரமாய் 34
இமையாள் கீழிறங்கி வர, ஷிவன்யா சமையலறையில் உருட்டிக் கொண்டிருந்தாள்.
இமையாள், “எக்ஸாம் எப்படி பண்ண ஷிவா?”
பின்னால் திரும்பிப் பார்த்த ஷிவா, வேகமாக இமையாளின் அருகில் வந்து, “ம்ம்ம் குட் அண்ணி” என்றதோடு “உங்களுக்கும் அண்ணாக்கும் ஏதும் பிரச்சினையா அண்ணி?” என பதற்றத்தோடு வினவினாள்.
“இல்லையே” என்ற இமையாளிடம், “ஃபர்ஸ்ட் நீங்க கோபமா வந்தீங்க, உங்க பின்னாலே டார்லிங் வேகமா உங்களை கூப்பிட்டுட்டே வந்தாங்க. அப்போ நான் ஹாலில் தான் டிவி பார்த்திட்டு இருந்தேன். ரொம்ப நேரமா ரெண்டு பேரையும் காணோம். அதான் ஏதும் பிரச்சினையோன்னு கேட்டேன் அண்ணி” என விளக்கம் அளித்தாள்.
அவளை கவனிக்காது சென்ற தன்னை மானசீகமாகத் தலையில் தட்டிக்கொண்ட இமையாள்,
“சும்மா டிசி சாரை பின்னால் அலைய விடலான்னு” என்று ஒற்றை கண்ணடிக்க…
“நீங்க நடத்துங்க” என்று சிரித்த ஷிவா, “தேஷ் எங்கே?” எனக் கேட்டாள்.
“அம்மாகிட்ட இருக்கான். அவங்க கூட்டிட்டு வர போறாங்க” என்று பதில் சொல்லிய இமையாள், “என்ன பன்ற, குக் பண்ணத் தெரியுமா?” என்று அவள் என்ன நறுக்கிக் கொண்டிருக்கிறாள் என பார்த்தாள்.
“சுடு தண்ணிக்கூட வைக்கத் தெரியாது. நீங்க வருவீங்கன்னு வெயிட் பண்ணேன். கோபமா வேற போனீங்க, எப்படி வந்து கூப்பிட. ஆர்டர் போடலாம் நினைச்சேன்… அப்புறம் பழம் சாப்பிட்டுக்கலான்னு விட்டேன். ஆப்பிள் தான் கட் பன்றேன். சாப்பிடுறீங்களா?” என்று ஒரு துண்டை இமையாளிடம் நீட்டினாள்.
“நீ இதை சாப்பிட்டுட்டே இரு. டென் மினிட்ஸ் நான் ரெடி பண்ணிடுறேன்” என்ற இமையாள், இடியாப்பத்திற்கு தயார் செய்யத் துவங்கினாள்.
“வாவ்… இடியாப்பம்மா? சூப்பர்!” என்ற ஷிவா, “உங்க அவங்களுக்கு ரொம்ப பிடிக்குமே!” என்று இமையாளின் தோளில் சீண்டலாக இடித்தாள்.
“எங்க அவங்களுக்காகத்தான் செய்யுறேன்” என்று இமையாளும் ஷிவாவைப் போலவே அவளின் தோளில் இடித்திட…
“ம்க்கும்” என்ற செருமளில் ஒருசேர திரும்பிப் பார்த்தனர்.
ருது தான் நின்றிருந்தான்.
முதல் கூடலுக்கு பின் அவனின் முகம் காண சிறு படபடப்பு. இதயத்தில் வெட்கப் பூக்கள். அதனை லாவகமாக அவள் மறைக்க முயன்றாலும், அவளின் சிறு அசைவையும் உள்வாங்குபவனுக்கு அவளின் கண்ணின் மாற்றம் தெரியாதா என்ன?
கண்டு கொண்டவனுள் விஷமப் புன்னகை. இதழ் கடித்து மறைத்தான்.
“நீங்க இன்னும் கிளம்பல?”, இமையாள்.
“ம்ம்ம்” என்ற ருது சென்றிட,
“டார்லிங்” என்று அவனை நிறுத்தினாள் ஷிவா.
ருது என்னவென்று கேட்டிட,
“நீங்க அண்ணிகிட்ட ஏதும் பேச வந்து நான் நடுவுல நந்தி மாதிரி நின்னதால சொல்லாம திரும்பிப் போகலையே?” என்றாள். கேலி நிறைந்த சிரிப்போடு.
“சிலதை எப்படி டா ஓப்பனா சொல்றது?” என்று ருதுவும் சிரித்திட,
“டார்…லிங்… யூ” என்று ஷிவா சிணுங்கிட, இமையாளிடமும் சத்தமான சிரிப்பு.
“இவ்வளவு நாளா இந்த சிரிப்பை எங்க வச்சிருந்தீங்களாம்?” ஷிவா ருதுவின் சிரிப்பில் நிறைவு கொண்டவளாக வினவினாள்.
“என் பொண்டாட்டிகிட்ட” என்று கண் சிமிட்டிய ருது, இமையாளை பார்த்து தலையசைத்தவனாக வெளியேறினான்.
ஷிவா ஓடிவந்து இமையாளை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.
“தேன்க் யூ சோ மச் அண்ணி” என்று அழுத்தமாக இமையாளின் கன்னத்தில் முத்தம் வைத்த ஷிவா, “கிட்டத்தட்ட ஃபோர் இயர்ஸ். ஒருநாள் கூட அண்ணா முகத்தில் இவ்வளவு சந்தோஷத்தை நான் பார்த்தது இல்லை” என்று கண்கள் கலங்கினாள்.
இமையாளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ருதுவின் மீதான ஷிவாவின் எதிர்பார்ப்பில்லா அன்பு தான் அவளுக்கு அக்கணம் தெரிந்தது.
ஷிவாவின் கன்னத்தில் ஆதுரமாய் தட்டிய இமையாள்,
“இனி சிரிச்சிட்டே இருப்பாங்க” என்றாள்.
“லவ் யூ அண்ணி” என்று ஷிவா சொல்லிட, இமையாளிடம் ஏற்கும் விதமானப் புன்னகை.
________________________________
ருது சுரேந்தரின் இல்லம் வந்தபோது வீட்டின் முன்னிருக்கும் தோட்டத்தில் தீபா அமர்ந்திருக்க, புல் தரையில் சுரேந்தர் முட்டிபோட்டு, அவர் மீது தேஷ் அமர்ந்து அம்பாரி விளையாடிக் கொண்டிருந்தனர்.
“ஆனை… ஆனை… ஆனை. ஆனை மேல அம்பாரி” என்று சொல்லியபடி சுரேந்தர் செல்ல, “வேகமா போங்க” என்று கைத்தட்டி சிரித்துக் கொண்டிருந்தான், அவர் மீது அமர்ந்திருந்த தேஷ்.
தேஷ்ஷின் முகத்தில் இதுவரை கண்டிடாத சிரிப்பு. அதீதமாய். ருதுவிற்குள் இதமாய்.
கேட் திறக்கும் சத்தத்தில் திரும்பிய தீபா,
“வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்திட,
“வாங்க… வாங்க” என்ற சுரேந்தரும், “இந்த ரவுண்ட் முடிச்சிட்டு வந்திடுறோம். உட்காருங்க” என்று இருக்கையை காண்பித்தார்.
“ஹாய் ப்பா” என்ற தேஷ், “அம்மா எங்க?” என்றபடி அவனுக்கு கை அசைத்து சுரேந்தரின் அசைவுக்கு அசைந்தாடினான்.
“உள்ள வாங்க மாப்பிள்ளை” என்று தீபா அழைக்க,
“இருக்கட்டும் அத்தை. தேஷ் கூட்டிட்டுப் போகலாம் வந்தேன். இமயாவும், ஷிவாவும் தனியா இருக்காங்க” என்று அங்கிருந்த இருக்கையிலே அமர்ந்தான்.
“குட்டி ரொம்ப சமத்து” என்றவர், “இப்போ தான் பால் சாதம் ஊட்டினேன். அவங்க தாத்தா வந்ததிலிருந்து ஒரே ஆட்டம் தான்” எனக்கூறி சிரித்தார்.
அவரின் பேச்சில் ருதுவுக்கு நெஞ்சம் நிறைந்தது. தேஷ்ஷை ஏற்கும் உறவுகள், காரணம் அவனவள். தேஷ்ஷின் பிறப்பு எப்படி பார்க்கப்படுமோ என்று அவன் பயந்த பயமெல்லாம் அவனது லேஷஸால் ஒன்றுமே இல்லையென ஆகியிருந்தது.
“காலையில் கூப்பிட்டு போகலாமே” என்றபடி தேஷ்ஷையும் தூக்கிக்கொண்டு வந்தார் சுரேந்தர்.
“இமயா தான் கூட்டிட்டு வர சொன்னாள் மாமா” என்ற ருதுவிடம் தாவிய தேஷ்…
“தாத்தா எனக்கு நிறைய டாய்ஸ் வாங்கிட்டு வந்தார் ப்பா. என்னோட ஜாலியா விளையாடினாங்க. டெய்லி வரலாம் ப்பா” என்றதோடு, “இனியா மாமாகிட்ட வீடியோ கால் பேசினேன். அவங்களும் டாய்ஸ் வாங்கிட்டு வரேன் சொன்னாங்க” என அன்றைய கதைகள் அனைத்தையும் ஒன்றுவிடாது சொல்லிட சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தான் ருது.
“சம்மந்தி எப்போ வர்றாங்க மாப்பிள்ளை?”, சுரேந்தர்.
“நாளைக்கு ஈவ்வினிங் வந்திடுவாங்க மாமா” என பதில் சொல்லிய ருது, “ஏதும் சொல்லணுமா மாமா?” எனக் கேட்டான்.
“மறுவீட்டுக்கு அழைக்கணுமே மாப்பிள்ளை” என்றார் சுரேந்தர்.
“நாளை மறுநாள் வர்றோம் மாமா. உங்களுக்கு ஓகேவா?” என்றான்.
“இனியனும் நாளை மறுநாள் வந்திடுவான். முறையா வந்து அழைக்கிறோம்” என்றார் அவர்.
“ஃபார்மாலிட்டிஸ்லாம் எதுக்கு மாமா?” என்று அவன் கேட்கும்போது, அவர்களின் பேச்சு துவங்கியபோதே உள்ளே சென்றிருந்த தீபா, தேஷ்ஷின் பொம்மைகள் எல்லாம் ஒரு பையில் போட்டு எடுத்து வந்தவராக தேஷ்ஷிடம் கொடுத்தார்.
“பாட்டி அம்மா ஃபோட்டோ?” தேஷ் கேட்டிட,
“அதையும் வச்சிருக்கேன் குட்டி” என்று குழந்தைக்கு பதில் சொல்லிய தீபா, “எங்க ரூமிலிருந்து இமயாவோட சின்ன வயசு ஃபோட்டோ பார்த்திட்டு, எனக்கு வேணும். போகும்போது கொடுங்கன்னு மதியமே சொல்லியிருந்தான்” என்றார் ருதுவிடம்.
“சரிங்கத்தை” என்ற ருது, “கிளம்புறேன். ரவுண்ட்ஸ் போகணும்” என்று எழுந்து கொண்டான்.
“நாளைக்கு வரேன் பாட்டி. தாத்தா விளையாடுவோம்” என்று இருவருக்கும் முத்தம் கொடுத்து ருதுவுடன் தேஷ் கிளம்பிட,
பெரியவர்கள் இருவரின் முகத்திலும் ஆழ்ந்த புன்னகை.
வீடு வரும்வரை தேஷ் சலசலத்துக்கொண்டே வந்தான்.
தேஷ் இந்தளவிற்கு உற்சாகமாகப் பேசியதே இல்லை. அம்மா என்ற வெற்றிடம் அவனையும் வெற்றாக்கியிருக்க, இன்று அவ்விடம் இமையாளால் நிரப்பப்பட்டிருக்க, அவனது இதயமும் அன்னையின் வரவால் உயிர்ப்பெற்றிருந்தது.
அதனை அவனது பேச்சிலும், துள்ளலிலும் ருதுவால் உணர முடிந்தது.
வீட்டிற்கு வந்ததும், ருது வண்டியை சரியாக நிறுத்துவதற்குள் துள்ளி குதித்து இறங்கிய தேஷ்…
“அம்மா” என்ற கூவலோடு உள்ளே ஓடிட, கூடத்திலே இவர்களின் வரவை எதிர்பார்த்திருந்த இமையாள் முன்வந்து கைகளை விரித்திட, அவளின் இடையே கட்டிக்கொண்டு அணைப்பில் அடங்கினான் தேஷ்.
பின்னால் வந்த ருதுவிற்கு அக்காட்சி கவிதையாய் மனதில் பதிந்தது.
“பேபி சாப்பிட்டாச்சா? பாட்டி என்ன கொடுத்தாங்க” என்றவாறு தேஷ்ஷை தூக்கிய இமையாள், அவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
“ம்க்கும்…” ருது தன்னிருப்பைக் காட்டிட,
“என்ன?” என்றாள். ஒன்றும் அறியாதவளாக.
“ஒண்ணுமில்லையே” என்ற ருது, “தேஷ் தூங்கட்டும். வட்டியோட வாங்கிக்கிறேன்” என்றான் அவளின் அருகில் வந்து காதில் கிசுகிசுப்பாய்.
“ச்சூ” என்று கண்களால் மிரட்டியவள், தேஷ் இருப்பதை சுட்டி, “சாப்பிட வாங்க” என்றாள்.
“பசியில்லை லேஷஸ். ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வரேன்” என்று கையிலிருந்த பையினை டீபாய் மீது வைத்தான்.
“என்ன பேக்?”, இமையாள்.
“பேபியோட டாய்ஸ்” என்ற தேஷ், இமையாளை இறக்கிவிட சொல்லி அவளிலிருந்து கீழ் இறங்கினான்.
“ப்பா வாப்பா…” என்று ருதுவின் கையினை பிடித்து ஒரு கையால் இழுத்தவனாக மற்றொரு கையில் பையினை பிடித்து இழுத்தான்.
“எங்கடா” என்ற ருது மகனின் இழுப்பிற்குச் சென்றான்.
“தேஷ் குட்டி அம்மா இல்லையா?” இமையாள் கேட்டிட, “அம்மாக்கு சர்ப்ரைஸ். தேஷ் கூப்பிடும்போது வாங்க” என்று ருதுவை கூட்டிக்கொண்டு மேலே அவர்களது அறைக்குச் சென்றான்.
பைக்குள்ளிருந்து இமையாளின் புகைப்படத்தை எடுத்தவன், ஒரு பக்க சுவர் முழுக்க நிரம்பியிருந்த தேஷ்ஷின் சிறு சிறு புகைப்படங்களுக்கு மத்தியில், காவல் உடையில் ருதுவின் புகைப்படமும், தேஷ்ஷின் இரண்டு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படமும் இருக்க, அதற்கு நடுவில் இமையாளின் படத்தினை மாட்டக் கூறினான்.
அது இமையாள் பள்ளியின் இறுதியில் சீருடையில் எடுக்கப்பட்டிருந்தது.
ருது மென்மையாய் படத்திலிருக்கும் தன்னவளின் நிழலுருவை வருடியவனாக, தேஷ் சொல்லியபடி சுவற்றில் மாட்டினான்.
“ஓகே வா பேபி?”
தேஷ் பதில் சொல்லாது அறைக்கு வெளியில் நின்று இமையாளை கத்தி அழைத்தான்.
இமையாள் வந்ததும் சுவற்றைக் காண்பித்தவன்,
“இப்போ தான் நல்லாயிருக்குலப்பா?” என ருதுவிடம் கேட்டு, “அப்பா, தேஷ், அம்மா” என்று விரலால் ஒவ்வொன்றாக சுட்டி காண்பித்தான்.
“சூப்பர் டா தங்கம்” என்று இமையாளும், “நல்லாயிருக்கு” என ருதுவும் ஒன்றாக அவன் உயரத்துக்கு முட்டி போட்டு, ஒருசேர தேஷ்ஷின் கன்னத்தில் முத்தம் வைத்திருந்தனர்.
அக்காட்சியை விவரிக்க வார்த்தைகளும் வேண்டுமோ?
கவிதைக்கு கவிதை புனைந்திடவோ?
“நான் அத்தையை கூட்டிட்டு வந்து காட்டுறேன்” என்று சடுதியில் தேஷ் விலகி ஓடிட, ருது, இமையாள் நெற்றி முட்டி உறைந்தனர்.
நிலை மாறாது இமையாளின் கன்னத்தை இரு கரங்களாலும் தாங்கிய ருது…
“தேன்க்ஸ் டி…” என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்து எழுந்தான். அவனது கண்கள் கலங்கியதோ?
“ம்ம்ம்… பொண்டாட்டிக்கு தேன்க்ஸ்லாம் சொல்றீங்க. இன்னும் நான் யாரோ தானோ?” என்று அவள் இழுக்க, அவளின் உதட்டை இரு விரலால் அழுத்தி பிடித்து இழுத்தவன், அதில் தன் உதடு உரசியும் உரசாது நெருங்கி, “இப்போலாம் ரொம்ப அதிகம் பேசுது இந்த வாய்” என்று தன் விரலில் அழுத்தம் கொடுக்க, அவன் பேசியதில் அவனது அதரம் அவளது மென்னிதழோடு உறவாடியது.
இதற்கு அவன் இதழில் முத்தமே கொடுத்திருக்கலாமெனத் தோன்றியது அவளுக்கு.
இமையாளின் இமைகள் படபடக்க, அவளின் இடையோடு கையிட்டு தன்னில் அழுந்த இழுத்தவன்,
“லேஷஸ் ருதுவோட வரம் டி” என்று அவளின் விழிகளில் முத்தம் வைத்து நகர்ந்தான். தேஷ்ஷின் சத்தத்தில்.
ருதுவின் வார்த்தைகளில் சட்டென்று நெஞ்சம் நெகிழ பனித்துவிட்ட கண்களை இமை தட்டி சரி செய்தாள்.
தேஷ்ஷும் ஷிவாவும் உள்ளே வர,
“ஸ்டேஷன் வரை போயிட்டு வரேன்” என தன்னவளை பார்வையால் தழுவிச் சென்றான்.
__________________________
ருது காவல் நிலையம் வரும்போது நேரம் பத்தை கடந்திருந்தது.
“என்ன சார் இந்நேரம்?” இரவு பணியிலிருந்த கிருஷ்ணன் கேட்டிட, “ரவுண்ட்ஸ் போகணுமே! அப்படியே இங்க எட்டிப்பார்த்தேன்” என இருக்கையில் சென்று அமர்ந்த ருது,
“வெங்கட் எங்கே?” எனக் கேட்டான்.
“இப்போ தான் சார் ட்யூட்டி முடிந்து கிளம்பினார்” என்றார் அவர்.
“ம்ம்ம்…” என்ற ருது, “அவனுங்களுக்கு சாப்பாடு கொடுத்திங்களாண்ணா?” எனக் கேட்டான்.
“அதெல்லாம் பிரியாணியும், வகை வகையா கறியும் சாப்பிட்டானுங்க சார்” என்றார் அவர்.
“வாட்… யார் அதெல்லாம் வாங்கிக்கொடுத்தா?” ருதுவிடம் சீற்றம்.
“ஒரு பொண்ணை ஃபன்னுங்கிற பேர்ல ஈவ்டீஸிங் செய்து கொன்னிருக்கானுங்க, அவனுங்களுக்கு ஸ்டேஷனில் விருந்து வச்சிங்களோ?” என்று கோபமாகக் கேட்டு செல்லினை நோக்கிச் சென்றான் ருது.
“அது வந்து சார்” என்று கிருஷ்ணன் தடுமாற,
“யார் அந்த பருப்பு?” என நின்று வினவினான்.
“இந்த ஏரியா கவுன்சிலர் சார்.”
“எனக்கு அப்போவே கால் பண்ண வேண்டியது தானே?”
“அது… வெங்கட் சார் தான் வேண்டாம் சொல்லிட்டார் சார்.”
வெங்கட் எதற்காக சொல்லியிருப்பானென புரிந்தது.
“அந்த கவுன்சிலர் இவனுங்களுக்கு என்ன வேணும்?”
“ஒருத்தன் அண்ணன் பையன், இன்னொருத்தன் தங்கச்சி பையனாம் சார்.”
“ம்ம்ம்ம்” என்ற ருது, “லாயர் கூட்டி வந்தானா?” எனக் கேட்டான்.
“இன்னைக்கு ஜாமின் எடுக்க முடியல, காலையில வர்றோம் சொன்னாங்க சார்.”
“நல்லா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றீங்க கிருஷ்ணன்” என்ற ருது, “அவனுங்க காலையில் இங்க வரதுக்கு முன்ன, நீங்க இவனுங்களை கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போயிருக்கணும்” என்றதோடு, “எப்படி வெளியில் வரானுங்கன்னு பார்க்கிறேன்” என செல்லுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த இருவரையும், அடித்து கதற விட்ட பின்னரே வெளியில் வந்தான்.
“ஒரு பொண்ணை கொன்னிருக்க குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லாமல் என்னவோ கல்யாணமாகி மறுவீட்டுக்கு வந்த மாதிரி சொகுசா தூங்கிட்டு இருக்கானுங்க. நீங்களும் வேடிக்கை பார்க்கிறீங்க” என்று அங்கிருந்த அனைவரையும் கடிந்துக்கொண்ட ருது, “இவனுங்க நைட் முழுக்க தூங்கவே கூடாது” என்றான்.
“கனகா அக்கா எங்கே?”
“அவங்களுக்கு டே ட்யூட்டி சார்”, கிருஷ்ணன்.
“ஹ்ம்ம்… அட்டாப்ஸி ரிப்போர்ட்?”
“நாளைக்கு மதியத்துக்கு மேல தான் கிடைக்கும் சொன்னாங்க சார்” என்ற கிருஷ்ணனை தீயாய் முறைத்த ருது,
“எதுக்கு அவனுங்க ஈஸியா ஜாமின் வாங்கிடவா?” எனக்கேட்டு, “யார் அந்த டாக்டர்?” என்றான்.
“ம்ம்ம்… வீடெங்கே?”
கிருஷ்ணன் சொல்லிய அடுத்த நொடி அவரையும் கூட்டிக்கொண்டு அந்த மருத்துவரின் இல்லம் சென்றான்.
“இன்னும் ஒரு மணி நேரத்தில் ரிப்போர்ட் வரணும்… இல்லைன்னா, விக்டிம்க்கு எதிரா, அக்யூஸ்ட்டுக்கு துணை போறாருன்னு கம்ப்லைன்ட் ரிஜிஸ்டர் செய்து அரேஸ்ட் பண்ணுவோம் சொல்லுங்க” என்று ருது சொல்லியதை, அப்படியே மருத்துவரிடம் கிருஷ்ணன் சொல்ல…
ருதுவை பற்றி அறிந்திருந்த மருத்துவரும் அந்நேரத்தில் அடித்து பிடித்து மருத்துவமனை ஓடி வந்திருந்தார்.
அடுத்து ருது சென்ற இடம் அரசு மருத்துவமனை.
ருது அங்கு வருவதற்கு முன்பே மருத்துவர் கையில் இறந்துபோன பெண்ணின் உடற்கூறு ஆய்வு அறிக்கையுடன் நின்றிருந்தார்.
“சாரி சார் இந்த கேஸ் நீங்க டீல் பன்றிங்க தெரியாது. கவுன்சிலர் மிரட்டவும் கொஞ்சம் பயந்துட்டேன்” என்றார் மருத்துவர்.
“அப்போ ஏற்கனவே முடிச்சு வச்சு கொடுக்காம இருந்திருக்கீங்க… ரைட்?” என்ற ருது, “பாடியை பேரண்ட்ஸ் கிட்ட கொடுத்திட்டிங்களா?” எனக் கேட்டவாறு, அறிக்கையை படித்து பார்த்தான்.
“இதோ இப்போவே கொடுக்க சொல்லிடுறேன் சார்” என்று மருத்துவர் அதற்குரிய நபரிடம் தகவல் கொடுக்க, வேலை சடுதியில் முடிந்தது.
“அந்த பொண்ணோட ஷாலை பின் பக்கமிருந்து இழுத்திருக்கானுங்க, கண்டிப்பா கழுத்தில் அழுத்தம் கொடுத்திருக்கும். அந்த பாயிண்ட் ரிப்போர்டில் வரலையே டாக்டர்” என்று ருது பார்வையை சுருக்கிட…
“இப்போ இப்போ சரி செய்திடுறேன் சார்” என்று ருதுவின் பார்வைக்கே நடுங்கினார் மருத்துவர்.
“உண்மையான ரிப்போர்ட்?” அழுத்தமாக கையை நீட்டினான்.
மருத்துவர் பயத்தோடு உண்மையான அறிக்கையைக் கொடுத்திட…
“வெல்… நாளை கோர்ட்டிலிருந்து உங்களோட சஸ்பென்ஷ்னல் ஆர்டர் வரும். ரெடியா இருங்க” என்ற ருது, “இது நீங்க ஈவ்வினிங் அந்த கவுன்சிலர் வீட்டுக்கு போனதுக்கான வீடியோ” என தன் அலைபேசியில் காணொளியை ஓட்டிக் காட்டினான்.
“சார்…” மருத்துவர் அரண்டு விட்டார்.
“செய்யும் வேலைக்கு உண்மையா இருக்க முடியலன்னா அந்த வேலையில் எதுக்கு இருக்கணும் டாக்டர்?” என்றவன், அவர் கெஞ்சலை பொருட்படுத்தாது அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.
பெண்ணின் பெற்றோர் ருதுவிற்காக வாயிலில் காத்திருக்க, அவர்களருகில் சென்றான்.
“ரொம்ப நன்றி சார்.” இருவரின் அழுகையோடு வெளிவந்த குரலில் நெஞ்சம் அடைத்த உணர்வை சடுதியில் மீட்டுக்கொண்டான்.
“கிருஷ்ணன்…” ருது கண்காட்டிட, அவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டிய காகிதங்களில் கிருஷ்ணன் கையெழுத்து வாங்கிட, இரவு நேர ரோந்துப் பணியை முடித்துக்கொண்டு இல்லம் வந்து சேர்ந்தான் ருது.
அவனுக்காக உறங்காது இமையாள் விழித்திருந்தாள். கையில் புத்தகத்தோடு, உறங்கிக்கொண்டிருக்கும் தேஷ்ஷை பார்க்கும் வகையில் நீள்விருக்கையில் அமர்ந்திருந்தாள்.
“தூங்கலையா நீ?” எனக் கேட்டபடி அவளருகில் வந்த ருது, அவளை எழ விடாது, அவளது மடியில் தலை வைத்து படுத்து கண்களை மூடிக்கொண்டான்.
ருதுவின் கரங்கள் இரண்டும் அவளை இடையோடு சுற்றி வளைத்திருந்தது.
“என்னாச்சுப்பா?” கேட்ட இமையாளின் கரம் ருதுவின் நெற்றியில் விழுந்திருந்த முன்னுச்சி கேசத்தை ஒதுக்கிக் கொண்டிருந்தது.
“ம்ப்ச்… வொர்க் மைண்டட்” என்றவன், “உன் பக்கம் வந்தாலே எல்லாம் மறந்து லேசாகிடுது” என்றான்.
“எதுக்கு அடி போடுறீங்க தெரியுது. குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று எழ முயற்சித்தவளை விடாது, தனக்கு அடியில் சரித்திருந்தான். அவள் உணரும் முன்பே!
“அச்சோ ருது என்ன பண்றீங்க? தேஷ் தூங்கிட்டு இருக்கான்.”
தடுப்பைத் தாண்டி பார்வையை ஓட்டி மகனை பார்த்த ருது, “எழ மாட்டான்” என்றவனாக அவளின் இதழில் மூழ்கினான்.