தூரமே தூரமாய் 37
நன்கு புலர்ந்த பின் அதிகாலை…
இமையாள் மாடியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
சத்தமில்லாது வந்த ருது, அவளின் முதுகை தீண்டியும் தீண்டிடாத நெருக்கத்தில் சென்று நிற்க…
“வந்துட்டிங்களா?” எனக் கேட்டு திரும்பிய இமையாள், “உங்களுக்குதான் வெயிட் பண்ணேன்” என்றாள்.
“என்ன அதிசயம் லேஷஸ் ருதுவை தேடியிருக்காங்க” என்று அவளை மேலும் ருது நெருங்கிட, அவனது மார்பில் ஒரு விரல் வைத்து நிறுத்தியிருந்தாள்.
“ச்சூ… மொட்டை மாடியில் இருக்கோம்” என்று இமையாள் பார்வையை சுழற்றிக் காட்டிட,
“அதுக்கென்ன… நீ என் பொண்டாட்டிடி, என்னவோ வேற யாரையோ பிடிச்சு இழுக்குற மாதிரி சொல்ற” என்றவனின் வாய் மீதே அடித்தவள், “வாய்… வாய்” என்றவள், “வாங்க” என செடிகளுக்கு மற்றைய பக்கமிருந்த துணி துவைக்கும் கல்லின் அருகில் அழைத்துச் சென்றாள்.
அங்கு வாலி நிறைய துணிகள் ஊறிக் கொண்டிருந்தது.
“ஹேய்… இவ்வளவு துணி இப்போ வாஷ் பண்ணப்போறியா என்ன?” எனக் கேட்ட ருது, “அல்ரெடி இனியா கால் பண்ணிட்டான். எப்போ கிளம்புறீங்கன்னு கேட்டு. அதுக்குதான் உன்னைத்தேடி வந்தேன்” என்றான்.
“வொர்க் அவுட் முடிச்சிட்டிங்களா?”
“இனிதான்.”
“அதுக்கு தான் இது” என்று துணிகளை காண்பித்த இமையாள், “துவைச்சு காய வச்சிட்டு வாங்க. வொர்க் அவுட்டே தேவைப்படாது” என்றாள்.
அவள் சொல்ல சொல்ல ருதுவின் முகம் காட்டிய பாவனையில் பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்தினாள்.
“ஆர் யூ சீரியஸ்?” என்ற ருது, “வாஷிங் மெஷினில் போடலாமே!” என்றான்.
“எல்லாம் என்னோட சாரீஸ். மெஷின் வாஷ் ஒத்து வராது” என்று அவள் முடிக்கும் முன்பு, ஊறிக்கொண்டிருந்த புடவை ஒன்றை கையில் எடுத்து தேய்க்க ஆரம்பித்திருந்தான் ருத்விக்.
“ச்சோ… ச்சுவீட்” என்று காற்றில் அவனது கன்னம் கிள்ளியவள், அருகில் சென்று அவனது முதுகில் கை வைத்து குனிந்தவளாக, மறு கையால் அவனது கன்னத்தை பிடித்து திருப்பி அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
“லேஷஸ்” என்றவனின் கண்கள் அகல விரிந்தது. அவளாகக் கொடுக்கிறாள். தேகம் எல்லாம் சில்லென்று தீ மூண்டது.
மீண்டும் அவள் முத்தம் கொடுத்திட…
“டெம்ப்ட் பண்ணாதடி” என்றவன் அவளை இடையோடு தூக்கி அருகிலிருந்த துணி வைக்கும் மேடையில் அமர வைத்தான்.
“டெம்ப்ட் ஆகலையா?”
“எங்க வச்சு கேட்கிற நீ?” என்றவன் அவளின் கன்னத்தை கொத்தாக பிடித்து எடுத்து தன் உதட்டில் கையை ஒற்றிக்கொண்டான்.
“சார்…”
திடிரென ஒலித்த குரலில் ருது சுற்றிலும் திரும்பி யாரென்று பார்க்க, அவர்களது வீட்டுக்கு பின்னாலிருக்கும் மாடியிலிருந்து குரல் வந்தது.
கிருஷ்ணன் தான் நின்றிருந்தார்.
“நல்லவேளை வெங்கட் கண்ணுல படல” என்று ஈ என சிரித்தபடி ருது சொல்லிட, இமையாளிடம் சத்தமான சிரிப்பு.
“என்ன சார் நீங்க?” என்று கிருஷ்ணன் அவனது கையிலிருந்த புடவையை பார்த்து கேட்டிட,
“ஊருக்கே கேஷூவா இருந்தாலும் பொண்டாட்டிக்கு…”
“புரியுது சார்.”
ருது முடிக்கும் முன் அவர் சொல்லியிருந்தார்.
“நீங்க பண்ணது இல்லையா கிருஷ்ணன்?”
“கீழ கூப்பிடுறாங்க சார். நான் போயிட்டேன்” என்று கிருஷ்ணன் வேகமாக நகர்ந்ததில்,
“அவருக்கு நிறைய அனுபவம் போல” என்று சிரித்த ருதுவின் முகத்தையே இமைக்காது ரசித்து பார்த்தாள் இமையாள்.
“என்னவாம் என் பொண்டாட்டிக்கு?” என்றவனின் கைகள் துணியை துவைத்துக் கொண்டிருந்தது.
“என் புருஷன். நான் பார்ப்பேன்” என்று பக்கம் வந்தவள், “இப்படி கிஸ் பண்ணவும் செய்வேன்” என்று அழுத்தமாக இதழொற்றினாள்.
“ரூமுக்கு போயிடலாமா?” ருது சுற்றுப்புறத்தைக் காட்டி ஹஸ்கி குரலில் கேட்டிட, “முதலில் வேலையைப் பாருங்க” என்றாள்.
“ம்க்கும்… அதானே! என் பொண்டாட்டிக்கு ரொமான்ஸ் வந்துட்டாலும்” என்று முனகி வேலையில் கவனமானான்.
“நீங்க அலசி கொடுங்க நான் கொடியில் போடுறேன்” என்றவளை நோக்கி சோப்பின் நுரையை ஊதினான். அது அவளின் கன்னத்தில் சென்று ஒட்டியது.
அவள் அதனை எடுத்து காற்றில் ஊதிட அலை அலையாய் மிதந்தது. அவர்களின் சந்தோஷமும் விண்ணை முட்டுமளவு, காதலில் நேச விதையாய் விருச்சம் கொண்டதும்.
“டார்லிங்…” என அப்போது வந்த ஷிவா, “டிசி சாரா இது?” எனக் கேட்டாள்.
“நானே தான்” என்ற ருது, “குவார்ட்டர்ஸில் வேற யாரும் பார்க்கணுமான்னு மைக் வச்சு கேளு” என்றான்.
“ம்ப்ச்… நான் இதை கேட்கலண்ணா” என்று அவன் துணி துவைப்பதை சொல்லியவள், “இதை சொன்னேன்” என தன் அலைபேசியை ஆட்டி காண்பித்தாள்.
“போட்டோ எடுத்தியா?”
“ம்ம்ம்… உங்களுக்குள்ள இப்படியொரு காதல் மன்னனை நினைத்து பார்த்ததே இல்லை. எப்பவும் விறைப்பா பார்த்தே பழகிப்போச்சு. இன்னைக்கு தான் கண்ணுக்கு குளிர்ச்சியா” என்று ஷிவா சொல்ல,
“ஹேய் நீ அப்படி என்ன எடுத்த?” என்று அவளின் கையிலிருந்த அலைபேசியை எட்டி பறித்தான்.
இருவரும் சோப்பு நுரை வைத்து விளையாடிய காட்சி திரையில் அழகோவியமாய்.
ருதுவின் இதழ் நீண்டு விரிந்தது.
“டேய் ருது…” வேங்கடத்தின் குரல்.
“இப்போ என்ன? பொண்டாட்டிக்கு துணி துவைச்சு கொடுக்கக்கூடாதா?” என்று நிமிர்ந்தவன், வேங்கடத்துடன், சுரேந்தரும் நின்றிருக்க…
“வாங்க மாமா” என்றான். எவ்வித அசட்டு பாவனையும் அவனிடமில்லை. என் மனைவிக்கு நான் செய்கிறேன். யார் பார்த்தால் என்ன என்று இயல்பு பொருந்திய தன்மை அவனிடம்.
“அச்சோ ருது எழுந்திரிங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று இமையாள் அவனை எழுப்பிட முயல,
“லேஷஸ்” என்ற அவனின் அந்த குரலில் அவள் யாரையும் பார்த்திட முடியாது கணவனின் பின்னால் ஒளிந்தாள்.
“இனியன் போன் பண்ணப்பவே அரை மணியில் கிளம்பிடுவோம் சொன்னீங்களாம். ரெண்டு மணி நேரமாச்சு. போன் பண்ணோம். எடுக்கல. சரி நேரில் வந்தே கூட்டிட்டு போயிடலான்னு வந்துட்டேன்” என்று சுரேந்தர் விளக்கம் கொடுத்தார்.
மகள் ருதுவை நேசித்திருந்தாலும், அவர்கள் திருமணம் நடந்த முறையால், மகள் வாழ்வு எப்படி செல்லுமோ என்று மனதின் ஓரம் சிறு அச்சத்தோடு இருந்த சுரேந்தருக்கு கண்ட காட்சியில் நெஞ்சம் நிறைந்து போனது. தேவையில்லாது உள்ளுக்குள்ளிருந்த பயமும் விலகியிருந்தது.
“சரிங்க மாமா” என்ற ருது, “கீழ கூட்டிட்டு போங்கப்பா. வந்திடுறோம்” என்றான் வேங்கடத்திடம்.
சுரேந்தர் இமையாளின் சிவந்த முகத்தில் நிறைந்திருந்த புன்னகையை பார்த்தவாறு படிகளில் இறங்கிட,
“பக்கா ஹஸ்பெண்ட் மெட்டிரியலா மாறிட்டடா” என்று மகனை கேலி செய்த வேங்கடம்,
“அடிங்க…” என்று ருது எழுந்ததில் வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்.
“உனக்கு தனியா சொல்லணுமா?”
இன்னமும் தங்களை பார்த்தபடி நின்றிருந்த ஷிவாவை, அலசிய துணிகளை கொடிகளில் போட்டவனாக ருது கேட்டிட,
“அண்ணி வீட்டுக்கு நானுமாண்ணா?” எனக் கேட்டிருந்தாள் ஷிவா.
“ஏன் வரலையா நீ?”, ருது.
“அப்பா, அம்மா எதுவும் சொல்லலையே?”
“அவங்க என்ன சொல்றது. நான் சொன்னா போதாதா? அத்தை, மாமாகிட்ட பேசிட்டு நாள் குறிச்சிட்டே வந்திடலாம். ஓடு… கிளம்பு” என விரட்டினான்.
“தேன்க் யூ டார்லிங்” என துள்ளலோடு ஷிவா ஓடிட,
“போட்டோ சென்ட் பண்ணிடு ஷிவா” என்றான் ருது.
“அல்ரெடி பண்ணிட்டேன்” என்றவள் பார்வையிலிருந்து மறைந்திருந்தாள்.
“லவ் யூ ருது.”
திருமணம் ஆகிய கணம் முதல் என் மனைவி என எவ்வித ஈகோவும் பாராது, அவன் நடந்து கொள்வதில் இமையாளுக்கு அவன் மீது நாளுக்கு நாள் காதல் ஊற்று கூடியது.
“சரியா கேட்கல லேஷஸ். பக்கம் வந்து சொல்லு” என்றான்.
“உங்களுக்கு கேட்டுச்சு.”
“திரும்ப சொல்லக்கூடாதா?” என்றவன், “மேடம்க்கு இன்னைக்கு தான் பழைய காதலை காட்டவே மனசு வந்திருக்கு. அதிலென்ன உனக்கு வஞ்சனை. நல்லாவே காட்டலாமே” என்று, தனக்கும், தான் உலர்த்தும் புடவைக்கும் எதிரில் நின்றவளை பிடித்து இழுத்தான்.
இருவருக்கும் இடையில் ஈரம் படர்ந்த புடவை.
சுற்றி வளைத்து இடையோடு அணைத்தவன், உதட்டில் இதழ் பதித்து சடுதியில் விலகியிருந்தான்.
“யூ…” என்று இமையாள் தன் முகம் சுற்றிய புடவையை விலக்க, அவளின் கன்னம் தாங்கி நெற்றி முட்டியவன்,
“சாரி அண்ட் தேன்க்ஸ் லேஷஸ்” என்றிருந்தான். குரலில் தழுதழுப்பு. அவனது விழிகள் கலங்கியிருந்தது.
“ருது.” அவளது வாய் மீது தன்னுடைய நான்கு விரல்களை அழுத்தமாக வைத்து எதுவும் பேசாதே எனும் விதமாக தலையசைத்தவன்…
“என்னோட நீ… இந்த சந்தோஷம், மனசு முழுக்க” என்று தன்னுடைய நெஞ்சத்தை அழுத்தி நீவியவன், “மூச்சு முட்டுதுடி. ரீசன் நீதான். என் பக்கம் நிறைய தப்பு இருக்கு. உனக்கு எந்த இடத்திலும் நான் நியாயம் செய்யவே இல்லை. உனக்கு என் மேல இருந்த நம்பிக்கையை உன் மேல தேஷ் விஷயத்தில் நான் வைக்க தவறிட்டேன். அந்த தவறால நான் உன்னை இழக்க இருந்தேன். எவ்ளோ பெரிய முட்டாள் தனம்” என்றவன், “என்னோட சின்ன சின்ன சந்தோஷமும் நீ தான்டி” என்றான்.
“ருது…”
“என்னை ஏன் டி இவ்ளோ லவ் பன்ற?” எனக் கேட்டவன், “சாரிடி எல்லாத்துக்கும்… அண்ட் தேன்க்ஸ் எதையுமே எதிர்பார்க்காம என்னை எனக்காகவே ஏத்துக்கிட்டதுக்கு. எல்லாம் தெரிஞ்சும் என் தப்பை பத்தி எதையுமே இந்த நொடி வரை கேட்காம இருப்பதுக்கு” என்றான்.
“டிசி சாருக்கு கண்ணுலாம் வேர்க்குது” என்று அவனின் மனதை மாற்றும் வகையில் பேச்சை ஆரம்பித்தவள், ருதுவின் விழிகளை துடைத்து, “நான் இவ்ளோ லவ் பண்றன்னா… என் ருது என்னை எவ்ளோ லவ் பண்ணியிருக்கணும், இப்பவும் பண்ணனும்” என்றாள் அவனின் கன்னத்தில் தனது உள்ளங்கை வைத்து.
“போடி…” என்று கட்டிக்கொண்டவன், “நமக்காக எல்லாரும் வெயிட்டிங்” என்று கீழ் வந்தனர்.
இருவரும் கிளம்பித் தயாராகி கூடத்திற்கு வர,
“என்ன டார்லிங் ரொமான்ஸ் பலமோ?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி கேட்டாள் ஷிவா.
“அடங்கமாட்டியா நீ?” என்று அவளின் தலையில் கொட்டியவன், “கிளம்பலாமா?” என அம்பிகாவிடம் கேட்டான்.
“ஷிவா வேண்டாம்” என்று எழுந்த அம்பிகா, “நாம மட்டும் போய் வருவோம்” என்றார்.
“இப்போ என்ன உங்களுக்கு?” ருது சற்று உரக்கக் கேட்டிட, “என்னங்க!” என்று அவனது கையினை பிடித்திருந்தாள் இமையாள்.
“என்னடா சவுண்ட். கல்யாணம் பேசும்போது பொண்ணையும் கூட்டிட்டு போவாங்களா?” என அம்பிகாவும் சத்தமாகக் கேட்டார்.
“என்ன சொல்றீங்க?”, ருது.
“மட்டன்ல மல்லி இல்லைன்னு சொல்றாங்க” என்ற அம்பிகா, “எங்களுக்கு சம்மதம். நைட்டே உன் அப்பா, இமையாள் அப்பாகிட்ட பேசிட்டார். இப்போ கலந்து பேசி கல்யாணத்துக்கு தேதி குறிப்போம்” என்றார் அம்பிகா. மகனை முறைத்துக் கொண்டே.
“அம்மா…” ஷிவா ஓடிவந்து அன்னையைக் கட்டிக்கொள்ள…
“சொல்லவே இல்லை” என அவரின் கன்னத்தில் இடித்தான் ருது.
“அதான் இப்போ சொல்லியாச்சே! கிளம்பலாமே! அங்க செய்து வச்சதெல்லாம உயிரோட எழுந்து வந்திடப்போகுது” என்றார் வேங்கடம்.
“உங்க அண்ணா?” வண்டியில் செல்லும்போது ருது கேட்டிட,
“அவரும் சொன்னதும் புரிஞ்சிக்கிட்டார் ருது. என் தங்கையோட உறவு கிடைச்சதே போதும் சொல்லிட்டார்” என்றார் அம்பிகா. மன நிறைவோடு.
“வாவ்… நைஸ்.”
சுரேந்தர் வீடு வந்ததும், அன்றைய பொழுது அத்தனை சந்தோஷமாக கழிந்தது.
தேஷ் அனைவரையும் அவ்வளவு கலகலப்பாக வைத்திருந்தான்.
அவனை கொண்டு தான் ருதுவின் வாழ்வு இயங்கியது. தற்போது அவனவள் இயக்கிக் கொண்டிருக்கிறாள்.
கிளம்பும் நேரம் தான் திருமணப் பேச்சினைத் துவங்கினர்.
“அடுத்த மாதம் நிச்சயம் வச்சுக்கிட்டு, அடுத்து வர முகூர்த்தத்தில் கல்யாணம் வச்சிக்கலாம்” என வேங்கடம் சொல்லிட, “எங்களுக்கும் சம்மதம் சம்மந்தி” என்றார் சுரேந்தர்.
தீபாவும், அம்பிகாவும் மிக நெருக்கமாகியிருந்தனர்.
“அப்போ தேதி பார்க்கலாம்” என அம்பிகா சொல்ல…
“குறுக்க பேசறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்” என்று இடையிட்டான் இனியன்.
“என்னடா… கல்யாணத்தை நாளைக்கே வைக்கணுமா?” எனக் கேட்டு கிண்டல் செய்தான் ருது.
“நீங்க சும்மாவே இருக்கமாட்டிங்களா?” என்ற இமையாள், “அண்ணா ஏதோ சொல்ல நினைக்கிறாங்க” என்றாள்.
“என்னப்பா?” என்று சுரேந்தர் கேட்டிட,
“ஷிவா படிப்பு முடியட்டும். மேரேஜ் அப்போ வச்சிக்கலாம்” என்றான். எவ்வித பூசலுமின்றி, நேரடியாக.
“ஷிவா இவனை கொல்லப்போறாள்” என்று இமையாளிடம் முணுமுணுத்தான் ருது.
“ஏன் மாப்பிள்ளை?” என்ற அம்பிகா, “பொண்ணுக்கு கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சால் சூட்டோடு முடிக்கணும் சொல்லுவாங்க. ரெண்டு குடும்பத்துக்கும் சம்மதம். ஏன் தடையா தள்ளி வைக்கணும்?” எனக் கேட்டார்.
“அச்சோ அத்தை நான் தடையா சொல்லல… படிக்கிறாள். மேரேஜ் பிரஷர் இல்லாமல் ஃப்ரியா படிக்கட்டுமே! அவள் படிப்புக்காகத்தான் காதலை கூட சொல்லாமல் இருந்தேன். யாருமே பண்ணிக்கலையா கேட்கலாம் நீங்க? எனக்கு ஏனோ ஒப்பல. அதுவும் இப்போ தானே அவளுக்கு ட்வென்டி. படிப்பு முடிய ட்வென்டி டூ முடியும். டூ இயர்ஸ் தானே!” என்றான்.
“மச்சான் பாயிண்ட் வேலிட்.”
அனைவரும் ருதுவின் முகத்தை தான் பார்த்தனர்.
ஏற்கனவே இனியன் இதுகுறித்து ருதுவிடம் பேசியிருந்தான். ருது இதனை சொல்வதைவிட, இனியன் சொல்வதே சரியாக இருக்குமென “நீயே சொல்லு” என்றிருந்தான். இப்போது சொல்லியும் விட்டான்.
“உங்களுக்கு அண்ணா இதைத்தான் பேசப்போறாங்கன்னு முன்னவே தெரியுமா?” எனக் கேட்டாள் இமையாள், ருதுவிடம்.
“ஹ்ம்ம்… லன்ச் முடிச்சதும் சொன்னான்.”
“அப்போ தெரிஞ்சிகிட்டே கிண்டல் பண்ணியிருக்கீங்க?”
“ஜஸ்ட் ஃபன்.” ருது கண் சிமிட்டிட, அவனின் இடையிலே கை முட்டியால் இடித்திருந்தாள் இமையாள்.
“என்ன ஆளாளுக்கு சைலண்ட்டா இருக்கீங்க” என்ற ருது, “இனியனோட கருத்து தான் எனக்கும். அதுவரை அவங்க லவ் பண்ணிக்கட்டும், நானும் தேஷ் குட்டிக்கு தம்பி, பாப்பா ரெடி பண்ணிடுறேன்” என ருது இமையாளை பார்க்க, அவளோ அனைவரின் புன்னகையில் அவனை முறைத்து வைத்தாள்.
“சரி என் பொண்டாட்டி வெட்கப்படுறாள். அதை அப்புறம் பேசுவோம்” என்றவன், “இப்போ தான் பரபரப்பு அடங்கி லைஃப் ஸ்மூத் ஆகியிருக்கு. ஷிவா ஸ்டடிஸ் முடிக்கட்டும், டூ இயர்ஸ் அப்புறம், ஃபிரியா ஜாலியா மேரேஜ் பண்ணுவோம்” என்றான்.
“வைய் சைலண்ட்… பதில் சொல்லுங்கப்பா?”
“அடங்குடா நீ” என்று அவனின் தோளில் கைப்போட்ட இனியன், “எல்லாருக்கும் ஓகே தானே?” என்றான்.
“பெரியவங்களை விட இந்தகாலத்து பசங்க எல்லாத்திலும் தெளிவா முடிவெடுக்குறிங்க. இதில் நாங்க சொல்ல என்ன இருக்கு. அவள் படிப்பு முடிய, நிதானமாவே செய்வோம்” என பெரியவர்களும் இனியனின் கூற்றை ஒப்புக்கொண்டனர்.
அகம் கூடிய மகிழ்வோடு அங்கிருந்து கிளம்பினர்.
கிளம்புவதற்கு முன்பு வழியனுப்ப வாயில்வரை உடன் வந்த இனியனிடம், “ஷிவா அடிச்சாலும் வாங்கிக்கோ மச்சான்” என்றிருந்தான் ருது. அவனது முகத்தில் விரிந்திருந்த புன்னகையை ஆதுரமாக ரசித்து பார்த்தான் இனியன்.
“சைட் அடிச்சது போதும்டா” என்ற ருது, வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் அமர,
“என்னண்ணா அப்படி பாக்குற?” என்று இனியனின் தோளில் கை வைத்தாள் இமையாள்.
“அவன் முகத்துல இந்த சிரிப்பு எப்பவும் இருக்கணும் இமயா. நிறைய அனுபவிச்சிட்டான். பார்த்துக்கோடா” என்று தங்கைக்கு
விடை கொடுத்தான்.
ருது பாதி வழி வந்து கொண்டிருக்கும்போதே, காவல் நிலையத்திலிருந்து அழைப்பு என, அப்படியே சென்றுவிட்டான்.
இமையாள், பெரியவர்கள் மற்றும் தேஷ்ஷுடன் வீடு வந்த போது, கூடத்தில் அமர்ந்திருந்த பெண் யாரென்று ஷிவாவை யோசனையாகப் பார்த்து நின்றனர்.