தூரமே தூரமாய் 36

தூரமே தூரமாய் 36

வேங்கடம் மற்றும் தீபா ஊரிலிருந்து வந்த நேரம் இனியனும் அங்கு தான் இருந்தான்.

“வாங்க அத்தை, மாமா. கோவில் பூஜை நல்லபடியா முடிஞ்சுதா?” என வரவேற்று விசாரித்த இமையாள் இருவரும் பருக நீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“கோவில் பூஜைக்குன்னு போனோம். நல்ல விஷயம் தானா அமைஞ்சு வந்திருக்கு” என்ற அம்பிகா, “வாப்பா. நல்லாயிருக்கீங்களா?” என இனியனை விசாரித்தார்.

இனியன் சிறு சிரிப்பில் தலையசைத்திட,

“தேஷ் குட்டி எங்கே?” எனக் கேட்டார் வேங்கடம்.

“ஒரே ஆட்டம். தூங்கிட்டான் மாமா. ஷிவா ரூமில் தான் படுக்க வச்சிருக்கேன்” என்ற இமையாள், இரவு உணவினை எடுத்து மேசையில் அடுக்கினாள்.

“ரெஃபிரஷ் பண்ணிட்டு வர்றோம்மா” என்று பெரியவர்கள் நகர்ந்திட, இமையாளும் சமையலறைக்குள் வேலையாக சென்று மறைந்தாள்.

இனியனும், ஷிவாவும் கூடத்தில் தனித்து விடப்பட்டனர்.

ஷிவா கல்லூரி முடித்து வந்தது முதல் தன்னுடைய அறைக்கு கூட செல்லாது அங்கேயே தான் இருக்கிறாள். அவளுக்கு ஏனோ இனியனை விடுத்து சிறு நொடியும் நகர்ந்திட முடியவில்லை.

இனியன், அழைப்பு வந்திருக்க… அதனை ஏற்று பேசிக்கொண்டிருந்தான். ஷிவாவின் பார்வை முழுக்க வஞ்சனையேயின்றி அவனை உள்வாங்கியது.

கண்டும் காணாது ரசித்திட்டான் இனியன்.

இனியன் பேசி முடித்திட…

“டாக்டர்” என்று மெல்லொலியில் விளித்த ஷிவா, அவன் நிமிர்ந்து பார்த்ததும், “உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்!” என்றாள். சிறு தடுமாற்றமாய்.

“ஹ்ம்ம்… சொல்லலாமே! கேட்போம்!” என்றான். அவளின் தயக்கமும் தடுமாற்றமுமே என்ன சொல்லப்போகிறாள் என்பதை காட்டிக்கொடுத்திட, அவனிடம் உல்லாசம்.

“அது…” என்று ஷிவா ஆரம்பிக்குமுன்,

“வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்திருந்தாள் இமையாள்.

“ருது வந்திடட்டும் இமயா!”, இனியன்.

“அவங்க வர லேட்டாகும் இனியாண்ணா!”

“இட்ஸ் ஓகே. வரட்டும். மறுவீட்டுக்கு இன்வைட் பண்ணனும். அவன் வர வரை வெயிட் பன்றேன்” என்ற இனியன், “நீங்க சாப்பிடுங்க” என்றான். ஷிவாவிடம்.

“வா ஷிவா! எக்ஸாம் எல்லாம் முடிச்சிட்டு நல்லா தூங்கணும் சொன்ன. ஆனால் வந்ததிலிருந்து ட்ரெஸ் கூட மாத்தாம எங்களோட அரட்டை அடிச்சிட்டு இருக்க” என்று இமையாள் சொல்லிய பிறகே தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என புரிந்து நெற்றியில் தட்டிக்கொண்டவளாக,

“டூ மினிட்ஸ் அண்ணி வந்துடுறேன்” என தனது அறைக்குச் சென்று சில நிமிடங்களில் வெளிவந்தாள்.

இனியன் தவிர்த்து மற்ற மூவரும் உண்டு முடிக்க ருது வீடு வந்தான்.

“மச்சான்.” ருதுவின் அழைப்பில் அப்படியொரு உற்சாகக் கூவல்.

“ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் யுவர் பிரஸன்ஸ் ஹியர்” என்று அருகில் வந்த ருதுவை, இனியன் அணைத்திட வர, அவனின் மார்பில் கை வைத்து தடுத்தவனாக…

“என் ஃபிரண்டா வந்தியா? இல்லை உங்க தங்கச்சிக்கு அண்ணனா வந்தீங்களா?” எனக் கேட்டு சீண்டினான்.

“அவங்க எப்பவும் உங்க ஃபிரண்ட் தான். தங்கச்சிலாம் ரெண்டாம்பட்சம் தான்.”

இனியனுக்கு முன் இமையாள் பதில் சொல்லியிருந்தாள். அவர்கள் இருவரும் முன்பே இணைந்திருந்ததை மனதில் வைத்து. அவளின் முகத்தில் சிறிதும் பொறாமை இன்றி புன்னகையே நிரம்பியிருந்தது.

ருதுவிடம் அட்டகாசமானப் புன்னகை.

முன் எப்போதும் இப்படியொரு ஆர்ப்பரிப்பான ருதுவை மூத்த தம்பதியினர் கண்டதில்லை. இருவரின் நெஞ்சமும் நிறைந்துபோனது.

“அப்புறம் மச்சான். பிளைட் தரையிறங்கியதும் தங்கச்சியை பார்க்க ஓடி வாந்தாச்சுப்போல?” என்று இனியனை தோளோடு அணைத்து விடுத்த ருது, “என்ன கம்பிளைண்ட் கொடுத்தாலும் எல்லாம் டிஸ்மிஸ் தான்” என்றான். இமையாளை பார்த்து கண்ணடித்தவனாக.

“அடேய் அடங்குடா” என்ற இனியன், “அம்மா நாளைக்கு வீட்டுக்கு வர சொன்னாங்கடா. அதை சொல்லத்தான் வெயிட் பண்ணேன். மாமா, அத்தை எல்லாரும் வரணும்” என்று அவனின் பார்வை இறுதியாக அவனவளில் நிலைத்தது.

“அப்போ என்னை பார்க்க வரலையா?” என்று பொய்யாகக் கோபித்துக்கொண்ட இந்த ருது புதிதாய் தெரிந்தான்.

“மனசே நிறைஞ்சுப்போச்சுங்க.” அம்பிகா, வேங்கடத்திடம் சொல்ல… அவரும் நெகிழ்ந்திருந்தார்.

“சரிடா பேசிட்டே நிக்காம யூனிபார்ம் மாத்திட்டு வா. நீ வரட்டும்ன்னு தம்பி எவ்வளவோ சொல்லியும் சாப்பிடல” என்றார் வேங்கடம்.

“ஜஸ்ட் ஃப்யூ செக்” என்று தாவி படியேறி சென்ற ருது, அடுத்த நொடி “இமயா” என அழைத்திருந்தான்.

“என்னங்க?” இமையாள் அவனின் அழைப்பிற்கான நோக்கமறிந்து கீழே இருந்தபடியே கேட்டிட… ருதுவிடம் பதிலில்லை.

“போய் என்னன்னு கேளும்மா” என்றார் அம்பிகா.

“இதெல்லாம் எடுத்து வைக்கணும் அத்தை” என்று இமையாள் சாப்பிட்ட பாத்திரங்களைக் காட்டிட, “நான் எடுத்து வைக்கிறேன் அண்ணி” என்றாள் ஷிவா.

இமையாள் வேறு வழியின்றி மேலே அவர்களது அறைக்குச் செல்ல, வாயிலில் நின்றபடியே… “ருது” என்று அவள் அழைத்து இழுக்க, கதவின் பின்னிருந்து உள்ளே இழுத்திருந்தான்.

இழுத்த வேகத்தில் அவளின் முதுகு தன் மார்பில் படிய தனக்குள் சிறை வைத்தவன், காலால் உதைத்து கதவினை சாற்றி அதன் மீதே சாய்ந்து நின்றான்.

“அச்சோ ருது என்ன பண்றீங்க? எல்லாரும் இருக்காங்க. அண்ணா வேற” என்றாள். அவனின் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தவளாக.

சற்றும் அசைக்க முடியவில்லை.

“ப்பா… என்னா பிடி. உடும்பு மாதிரி” என்று அவனது கையிலே அடி வைத்தாள்.

“கூப்பிட்டதும் வரணும்டி பொண்டாட்டி” என்றவன் குனிந்து அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

“ம்ப்ச்… விடுங்க. கீழ போகனும்.”

“கிஸ் பண்ணிட்டு போ” என்றவனை அப்பட்டமாக முறைத்தாள்.

“இப்படி பாக்காதடி. அப்படியே சுருட்டிக்கிற” என்று அவளின் இமை விரிந்த விழிகளில் முத்தம் பதித்தான்.

“இப்போ இது நேரமா?”

“வேறெப்போ பொண்டாட்டி” என்றவன், “என்னை என்ன பண்ணி வச்சிருக்க லேஷஸ்” என அவளின் நெற்றி முட்டினான்.

“என்ன பண்ணாங்களாம்?” இப்போது அவளிடம் மந்தகாசம்.

“என்ன பண்ணல நீ?” என்று அவளின் கன்னத்தில் பற்கள் படாது கடித்தவன், “அக்யூஸ்ட்டை கோர்ட்டில் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு இருக்கேன்… உன் நியாபகம். மேஜிஸ்ட்ரேட் ஜட்ஜ்மெண்ட் வாசிக்கிறார் மைண்ட்ல நீ நிக்குற. அவஸ்தைடி உன்னோட” என்றதோடு, “மொத்தமா சுருட்டி வச்சிக்கிட்ட” என்றான்.

“ம்க்கும்… சுருண்டுட்டாலும்…”

“இல்லைங்கிறியா நீ?”

“நம்பிட்டேன்.”

“நம்பனுமே! என்ன பண்ணலாம்” என்றவன், அவளின் வெற்றிடையில் விரலால் கோலமிட்டவாறு, அவளின் காதில் இரவின் ரகசியம் பேசிட…

“அச்சோவ்” என அவனை அணைத்துக்கொண்டவளாக அவனின் மார்பில் முகம் மூடினாள்.

“பாருடா… வெட்கமெல்லாம் வருதே என்னோட லேஷஸ்க்கு” என்றவன், “உன்னை இப்படி கட்டிக்கணும்… எப்போடா வந்து உன்னை பார்ப்போன்னு உள்ள ஒரே இம்சைடி நீ” என்றான்.

“பாருடா டிசி சார் பொண்டாட்டியை தேடலாம் செய்றார்.” அவனின் மார்பில் அழுத்தமாகக் கடித்து வைத்தாள்.

அப்போதுதான் கவனித்தாள், காக்கிச் சட்டையின் பொத்தானை கழட்டியபடி அவளை அழைத்திருப்பான் போலும். இன்னும் முழுதாய் கழட்டிடாது சட்டை திறந்திருந்தது.

“எவ்ளோ தேடுறேன்னு தூங்குறதுக்கு முன்ன காட்டுறேன்” என்றவன், அவள் விலக முற்பட மேலும் தன்னில் அழுத்தினான்.

“ம்ப்ச்… யூனிஃபார்மில் என்ன வேலை பாக்குறீங்க நீங்க?” என்றாள். கடிதலாக.

“அப்போ வேணாங்கிறியா?”

“ஆமா…” சொல்லிய பின்பே அவன் கேட்டதன் பொருள் விளங்கிட, “உங்களை” என்று வேகமாக நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டவள், “அண்ணா உங்களுக்காகத்தான் வெயிட் பன்றாங்க. சீக்கிரம் வாங்க” என்று அவனது பிடியில் மீண்டும் சிக்காது நழுவி வெளியில் வந்தாள்.

“டைம் ஆச்சே தூங்கப்போகலையா நீங்க?” குளித்து ஆடைமாற்றி வந்த ருது வேங்கடம் மற்றும் அம்பிகாவிடம் கேட்டவாறு, “வாடா சாப்பிடலாம்” என நண்பனை அழைத்துக்கொண்டு உணவு மேசை பக்கம் சென்றான்.

“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் ருது” என்று வேங்கடமும் உணவு மேசையின் ஒரு இருக்கையில் சென்று அமர, அம்பிகா இமையாள் பக்கம் வந்து நின்றார்.

“நீயும் உட்காரு இமையாள். நான் வைக்கிறேன்” என்ற அம்பிகா, உணவினை வைக்க, “நானும்” என்று வந்த ஷிவா, இனியனுக்கு எடுத்து வைத்தாள்.

ஷிவாவின் ஆர்வத்தை கண்டு ருது உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

இனியன் சாப்பிட சாப்பிட, ஷிவா வைத்துக்கொண்டே இருக்க…

“அட போதுங்க. சாப்பிட வச்சே படுக்க வச்சிடுவீங்க போல” என்ற இனியனின் சிரிப்பு நிறைந்த முகம் வேங்கடம் சொல்லியதில் சட்டென்று மாறியது.

“எதிர்பார்க்கவே இல்லை ருது. இவளோட அண்ணனே வந்து பேசினாங்க” என்று மனைவியை காட்டி சொல்லிய வேங்கடம், “அவங்க பையனுக்கு பொண்ணு பார்க்குறாங்க போல. ஷிவாவை கேட்கிறாங்க” என்றார்.

இனியனின் கை வாயருகே சட்டென்று நின்றது.

“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணலாம் விருப்பமில்லை.” இனியனை பார்த்துக்கொண்டே ஷிவா பட்டென்று மொழிந்திருந்தாள்.

திருமணம் என்றதும் ஏற்பட்ட பயத்தில் சொல்கிறாள் என அதனை பெற்றோர் ஏற்கவில்லை.

வேங்கடம், அம்பிகா குடும்பத்தை எதிர்த்து விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களின் திருமணம் முடிந்த போது, அம்பிகாவின் அண்ணன் ஆடிய ஆட்டம் விவரிக்க முடியாதது. வேங்கடத்தை வெட்டுவதற்கு அரிவாள் தூக்கிக்கொண்டு வந்தவர். மேலும் பிரச்சினை, உறவுக்குள் சண்டை எதற்கு என்பதற்காகவே இத்தனை வருடம் சொந்த கிராமம் செல்லாது வெளி மாநிலத்திலே இருந்து கொண்டனர்.

வேங்கடத்திற்கு குடும்பம் இல்லை. இத்தனை வருடத்தில் கொஞ்சமாவது மாறியிருப்பார்கள்… அம்பிகாவாவது அவளது குடும்பத்தை பார்க்கட்டுமென நினைத்தே குல தெய்வ வழிப்பாட்டினை காரணம்காட்டி வேங்கடம் மனைவியை அங்கு அழைத்துச் சென்றார்.

இவர்கள் வந்திருப்பது தெரிந்து அம்பிகாவின் அண்ணன் நேரடியாகவே பார்க்க வந்துவிட்டார். முன்பிருந்த கோபம் துளியும் அவரிடமில்லை. அவரும் தங்கையை பல வருடங்கள் கழித்து பார்த்திட, கோபம் மறந்து பாசத்தைக் காட்டிட, இவர்களும் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டனர்.

பல கதைகள் பேசிட, எத்தனை பிள்ளைகள் என்ற பேச்சின் போது, “ஒரு பையன், ஒரு பொண்ணு” என்று ருதுவையும் சேர்த்து தான் சொல்லியிருந்தனர்.

பெற்றெடுக்காவிட்டாலும் மனதால் நினைத்துவிட்ட உறவை மாற்றிட முடியாதே!

“பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நாலு வயசில் பையன் இருக்கான்” என்று வேங்கடம் சொல்லிட,

“இப்போதான் ஆறு மாசமா இவனுக்கு பொண்ணு பாக்குறோம். எதுவும் அமைய மாட்டேங்குது” என்று அம்பிகாவின் அண்ணன் மூர்த்தி தன் மகனை காண்பித்து வருத்தமாக சொல்லிட…

“என் பொண்ணு இருக்காண்ணே!” என்று அண்ணன் தன்னிடம் பேசிவிட்ட மகிழ்வில் அம்பிகா கூறிவிட்டார்.

“நானும் நீ சொன்னதும் கேட்கலாம் நினைச்சேன்” என்று மூர்த்தியும் சொல்ல, அவர்களின் சந்தோஷத்திற்கு நடுவில் தானென்ன சொல்வதென வேங்கடமும் சம்மதம் தெரிவித்தார்.

“அடுத்த வாரம் வரன்னு சொல்லியிருக்காங்க ருது.” அம்பிகா அத்தனை சந்தோஷமாகக் கூறினார்.

அதிர்வில் ஒருவரையொருவர் பார்த்திருந்த இனியன் மற்றும் ஷிவாவை ஒருங்கே பார்த்த ருது, தன் தட்டில் உணவு வைக்க முயன்ற இமையாளை தடுத்து…

“வேணுன்னா கேட்டிருப்பனே இமயா” என்றவனாக கை கழுவ எழுந்திட்டான்.

ருது சொல்லிச்சென்ற பொருள் இருவருக்கும் விளங்கவே செய்தது.

“என்னடா ஒண்ணுமே சொல்லல?” திரும்பி வந்த ருதுவிடம் வேங்கடம் கேட்டிட…

“லவ் மேரேஜ் பண்ண உங்களுக்கே ஷிவாவோட விருப்பத்தைக் கேட்கணும் தோணலையே! நான் என்ன சொல்றது?” எனக் கேட்டிருந்தான்.

“டேய்…”

“கேட்கலை தானே நீங்க? அவளோட கல்யாணம். அவகிட்ட கேட்காமல் முடிவு சொல்வீங்களா நீங்க?”

வேங்கடம் மற்றும் அம்பிகா பதில் சொல்லிட முடியாது கேள்வி கேட்டிருந்தான்.

“இப்போகூட அவள் வேண்டாம் சொன்னதை நீங்க கண்டுக்கவே இல்லையே?” என்றான். குறையாக.

“ஏதோ பயத்தில் சொல்லியிருப்பாள்”, அம்பிகா.

“அதெல்லாம் இல்லை. என் மச்சான் மாப்பிள்ளைன்னு சொல்லிப் பாருங்க… உடனே மண்டையை சரின்னு ஆட்டுவாள்” என்று பேச்சுவாக்கில் ருது ஷிவாவின் காதலை போட்டுடைக்க, ஷிவாவை தவிர்த்து அனைவரும் அவனை அதிர்வாய் எறிட்டனர்.

மெல்ல ருதுவின் பக்கம் சரிந்த இமையாள்…

“ஷிவா இனியாண்ணாவை லவ் பன்றாளா?” எனக் கேட்டாள்.

“ம்ம்ம்…”

“அச்சோ… அண்ணா வேற பொண்ணை லவ் பன்றார்” என்றாள் இமையாள். கூடிய அதிர்வில்.

“அவன் சொன்னானா?”

“ஆமாங்க… அவங்க ஜூனியர்” என்று இழுத்த இமையாள் ஏதோ புரிவதாய், “ஆமாவா?” என்றிட ருது இமை மூடி திறந்தான்.

“என்ன ஷிவா இது?” அம்பிகா கோபமாகக் கேட்டிட,

“அத்தை ப்ளீஸ்” என்ற இனியன், “எனக்கு ஷிவாவை பிடிச்சிருக்கு. அவளுக்கும் என்னை பிடிக்கும் தெரியும். ஸ்டடிஸ் முடியட்டும் வெயிட் பண்ணேன். இப்படியொரு சிட்டுவேஷன் எதிர்பார்க்கல. மிஸ் பண்ணக்கூடாது நினைக்கிறேன். ஆனால் உங்க விருப்பத்தோடு தான் அவள் எனக்கு வேணும்” என்றிட, ருதுவிடம் விசில் சத்தம்.

“அடங்கமாட்டிங்களா நீங்க?” இமையாள் ருதுவின் தொடையில் தட்டிட, “ஷிவா இப்போ நீதான் சொல்லணும்” என்றான் ருது.

“எப்போ எப்படின்னு தெரியலப்பா. அவங்க தான் எனக்குன்னு மனசுல ஆசையை வளத்துக்கிட்டேன். விட முடியாதுப்பா” என்றாள் ஷிவா. ருது பார்வையால் கொடுத்த தைரியத்தில்.

வேங்கடம் மற்றும் அம்பிகாவிடம் அமைதி.

இனியனின் அலைபேசி ஒலித்தது.

“இதோ வரே(ன்)ம்மா. இப்போ கிளம்பிடுவேன்” என்று தாமதமாகிவிட்டதென அழைத்த தீபாவிற்கு பதில் சொல்லி வைத்திட்ட இனியன்,

“நான் கிளம்புறேன் மாமா. நாளைக்கு வீட்டுக்கு கட்டாயம் வந்திடணும்” என்றவன், “இது வேற, அது வேற. உங்க விருப்பம் தான். போயிட்டுவர்றேன்” என தங்கையிடம் தலையசைத்தவன், ஷிவாவிடம் பார்வையால் விடைபெற்றான்.

வெளி கேட் வரை இனியனுடன் வந்த ருது…

“அப்புறம் மச்சான். லவ்வெல்லாம் பண்றீங்க… ட்ரீட் கிடையாதா?” எனக் கேட்டு வம்பு செய்தான்.

“இப்படியாடா போட்டு உடைப்ப. நான் அப்பாவை வைத்து பேசியிருப்பேன். இப்போ இவங்க என்னை என்ன நினைச்சாங்களோ போ!” என்ற இனியன் ருதுவின் முதுகிலே குத்தினான்.

“உன் சுருங்கிப்போன மூஞ்சியை எம்புட்டு நேரம் பாக்குறது. எப்படியும் சொல்லித்தானே ஆகணும்” என்று கண்சிமிட்டிய ருதுவை அணைத்து விடுத்த இனியன் கிளம்பிய பின்னர், ருது உள்ளே வரும் வரை மாற்றமில்லாது இருந்தனர்.

ஷிவா, இமையாள் இருவரையும் பார்வையால் தத்தம் அறைக்கு செல்லுமாறு அனுப்பியவன், தாய், தந்தை முன்பு வந்து அமர்ந்தான்.

“என்ன ஓடுது?” எனக் கேட்டான். அவர்களின் அமைதியில்.

“வெல், நானே கேட்கிறேன். என் தங்கச்சியை என் பொண்டாட்டியோட அண்ணனுக்கு கட்டி கொடுக்க சம்மதமா?” என்றவன், “என் மச்சானுக்கு நான் கியாரண்டி” என்றான்.

அவர்களுக்கும் இனியனை நன்கு தெரியுமே. மறுக்க ஒன்றுமிருந்திருக்காது. வெட்டிச்சென்ற உறவு இணையாமல் இருந்திருந்தால்.

“இருபது வருஷமாச்சு கண்ணா. இப்போ தான் சேரணும் இருந்திருக்கு. ஷிவாவால திரும்ப பிரிவு வருமோன்னு தோணுது” என்றார் அம்பிகா. பெற்ற வீட்டின் உறவை மீண்டும் இழந்திடக் கூடாது என்கிற தவிப்பு அம்பிகாவிடம்.

“வேற?”

“என்னடா? அங்கப்போன எங்களை அவங்க முறைச்சிட்டே இருந்திருந்தாலும் பரவாயில்லை. சம்மந்தம் வரை பேசிட்டு இப்போ எப்படிடா?” என்றார் வேங்கடம்.

“ஓகே வெல். வேலிட் பாயிண்ட்” என்ற ருது, “அம்மா வீட்டுல உங்க லவ் அக்செப்ட் பண்ணாதப்போ, அம்மா உங்க வாழ்க்கையில இல்லைன்னு ஒரு நொடி நினைச்சிருப்பீங்க தானே? அந்த வலி தெரியும்ல உங்களுக்கு?” என்றவன், ‘அதே வலியை உங்கபொண்ணுக்கும் தரப்போறீங்களா?’ எனக் கேட்காமலே புரிய வைத்திருந்தான்.

“உறவுங்கிறது எதிர்பார்ப்போடு வரக்கூடாது. அவங்களா எல்லாம் மறந்து வந்து பேசுனதா சொன்னீங்களே! அப்போ ஷிவாவோட விருப்பத்தையும் சொல்லுங்க… புரிஞ்சிப்பாங்க. நீங்க அவங்க வேணும் நினைக்கிற மாதிரி அவங்களும் நினைத்தால் கண்டிப்பா அக்செப்ட் பண்ணிப்பாங்க” என்றவன், “உங்க பொண்ணுக்கு உங்களவு தைரியம் கிடையாதும்மா” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தான்.

செல்லும் ருதுவை இருவரும் குழம்பிய மனநிலையில் பார்த்திருந்தனர்.

error: Content is protected !!
Scroll to Top