நேரம் சரியாக 4.04 (2)

அத்தியாயம் 2., 

நால்வரும் விடியற்காலையில் எழுந்து புது வீட்டிற்கு பால் காய்ச்ச தேவையானவை எல்லாம் வங்கிக் கொண்டு, இப்போது இருக்கும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு புது வீட்டிற்கு சென்றனர்.

நேற்றைய பயம் இன்று இல்லை. நான்கு பேரும் சாதாரணமாகவே கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.

“நேத்து இருந்த மாதிரி அன்கம்போர்ட்  ஃபீலிங் இன்னைக்கு இல்லைல டா”, என ராகவ் கேட்க,

“எனக்கு இன்னும் உறுத்துலா தான் டா இருக்கு. ஆனால் நேத்து போல பயமா இல்ல”, என்றான் அர்ஜுன்.

அவனை முறைத்தான் திரு.

ராகவ் கதவைத் திறந்து உள்ளே செல்ல மற்ற மூவரும் தொடர்ந்தனர்.

“இந்த லைட்ட தான் போட்டு விட்டு வர வேண்டியது தானே. இருட்டுக்குள்ள குருட்டுப்பாடம் படிக்கிற மாதிரி, இப்போ சுவிட்சை தேடனும்”, என கடுப்பாகச் சொன்னான் விஷ்வா.

“போட்டு விட்டுத் தான் டா வந்தேன்”, என யோசித்துக்கொண்டே ராகவ் சொல்ல,

“அப்புறம் ஆஃப் ஆகி கிடக்கு. ஏன் டா மறதி மண்டையா படுத்துற”, என்றபடி சுவிட்சைப் போட்டான் அர்ஜுன்.

வீடு பளபளவென்று இருந்தது. 

“நான் போய் கிட்சன்ல எல்லாம் எடுத்து வைக்கிறேன். நீங்க இதை எல்லாம் ரூம்ல வச்சிட்டு வாங்க”, என திரு சொல்ல.

மற்ற மூவரும் ஆளுக்கொரு அறையில் அவர்களின் பொருட்களை வைத்து விட்டு, திருவின் அறையில் அவனது பொருட்களையும் வைத்து விட்டு கிச்சன் சென்றனர்.

அதற்குள் அவன் சாமி படங்களை அடுக்கி, விளக்கு போட்டு, பால் காய்ச்ச பாத்திரம், குடிக்க டம்ளர், சர்க்கரை பாட்டில் என ரெடியாக வைத்து, இன்டெக்ஷன் ஸ்டவையும்  சுவிட்ச் போர்டில் இணைத்து வைத்து விட்டான்.

“நல்ல நேரம் என்ன டா”, என அர்ஜுன் கேட்க,

“4 மணி டா”, என்றான் விஷ்வா.

“4 மணி ஆச்சு டா”,  என ராகவ் சொல்ல,

சுவிட்சை போட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கால் லிட்டர் பாலை ஊற்றினான் திரு.

சரியாக 4.04 லிற்கு பால் பொங்கி வந்துவிட, 

நான்கு பேரும் மனமார வேண்டிக் கொண்டு ஒரு டம்ளர் பாலை சாமி படத்தின் கீழ் வைத்து விட்டு, ஆளுக்கொரு கிளாஸை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றனர்.

பீம் பேக் ஒன்றில் அமர்ந்த அர்ஜுன், “நல்லா ராயலா தான் டா வீடு கிடைச்சு இருக்கு நமக்கு”, என வீட்டை புகழ்ந்தாலும், “ஆனா எனக்கு கொஞ்சம்”, என அவன் ஏதோ சொல்ல வர,

“எதாச்சும் சொன்ன, கொதிக்கிற பாலை மூஞ்சில ஊத்திடுவேன். நல்ல நாள் அதுமா பால் காய்ச்சி புது வீட்டுக்கு வந்தாச்சு. நெகடிவா பேசு அப்புறம் இருக்கு உனக்கு”, என ராகவ் திட்ட,

“ஊத்துவ டா ஊத்துவ… யார் யாரோ நண்பன் என்று”, என அவன் பாட,

“போதும் டா சாமிகளா. கொஞ்சம் நேரம்  தூங்கிட்டு, வேலைக்கு கிளம்பனும் டா”, என கொட்டாவி விட்டபடியே சொன்னான் திரு.

“ம்ம்”,  என மற்றவர்களும் வழிமொழிய அவரவர் அறைகளுக்குள் சென்று தூக்கத்தைத் தொடர்ந்தனர்.

இங்கு சாமி படத்தின் கீழ் வைத்த பால் டம்ளர் காலியாகி இருந்தது.

###

காலை எட்டு மணி, 

எந்த பரபரப்பும் இல்லாமல் அவரவர் அறைகளில் நிம்மதியாக குளித்து உடை மாற்றி வெளியில் வந்தனர் மூன்று பேரும்.

அப்போது, கிச்சன் பக்கம் இருந்த ஸ்டோர் ரூமில் இருந்து வந்தான் விஷ்வா.  

” டேய் நீ இன்னும் கிளம்பல”, என அர்ஜுன் கேட்க,

“கிளம்பனும் டா. இன்னைக்கு நான் தான சமைக்கனும் அதான்”, என அவன் சொல்ல,

“விடுடா இன்னைக்கு வெளிய வாங்கிக்கலாம்”, என அவர்கள் சோஃபாவில் அமர,

” அப்புறம் மச்சான்… இந்த கிளாக் அந்த ரூம்ல இருந்துச்சு. கண்ணாடி மட்டும் உடைஞ்சு கிடக்கு. பழைய கால பொருள் போல டா, செம்ம கிளாசியா இருக்கு”, என விஷ்வா அந்த அலார கடிகாரத்தைக் காட்ட,

“நல்லாருக்கு டா. இதை க்ளீன் பண்ணி கண்ணாடி மாத்தி ஷோகேஸ்ல வைக்கலாம்”, என்றான் அர்ஜுன் அதை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு.

“சரி நீ சீக்கிரம் கிளம்பு. நான் இதை கடைல குடுத்துட்டு அப்பிடியே ஆஃபீஸ் வந்துடுறேன்”, என ராகவ் கிளம்பி விட,

விஷ்வாவும் ரெடியாகி வந்து விட மூவருமாக அவரவர் பைக்கில் கிளம்பி விட்டனர்.

ஒரே அலுவலகம் என்றாலும் நான்கு புறமாக பிரிந்து கிடக்கும் அந்த பெரிய பில்டிங் சுற்றி வரவே அரை நாள் ஆகும். 

அதனாலே ஆளுக்கொரு டூ வீலர் வாங்கிக் கொண்டனர்.

அர்ஜுன் வீட்டை பூட்டி விட்டு வண்டியை எடுக்க, “டேய் நான் இன்னைக்கு லிசாவை பாத்துட்டு தான் வருவேன். என் செக்ஷன் ல யார்கிட்டயாச்சும்  சொல்லி அந்த டீம் லீடரை சமாளிக்க சொல்லிடு”, என விஷ்வா சொல்ல,

“இன்னுமடா டா, அவ உன்னை அலைய விடுறா. நான் கூட கழட்டி விட்டுட்டானு நினைச்சேன்”, என அர்ஜுன் சொல்ல,

“மூடு. எனக்கு சர்ப்ரைஸ் தரேன்னு சொல்லி இருக்கா டா. இன்னைக்கு எப்படியும் என் லவ்வை அச்செப்ட் பண்ணிப்பானு நினைக்கிறேன்”, என முகம் மலர 

சொன்னான் விஷ்வா.

“சரி போயிட்டு வா”, என்று அவன் கிளம்ப,

“ஆல் தி பெஸ்ட் டா”,  என திருவும் கிளம்பிவிட்டான்.

விஷ்வா லிசாவைப் பார்க்க, அருகில் இருக்கும் கஃபே சென்றான்.

“ஹாய் விஷ்வா”, என கஃபே வில் இருந்து கையை ஆட்டி அவனை அழைத்தாள் லிசா.

“ஹாய்”, என அவனும் அவளருகில் சென்று, அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

“விஷ்வா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னேனே. அது என்னனா”, என அவள் நிறுத்த, 

“அதுக்கு தானே வந்தேன்”, என ஆர்வமாக இருந்தான் விஷ்வா. 

“நம்ம ஆஃபீஸ் ல ஒர்க் பண்ற தினேஷை நான் லவ் பண்றேன். அவரை உனக்கு இன்ட்ரோ கொடுக்க தான் வர சொன்னேன்”, என அவள் சொல்ல, 

“ஹோ”, என முகம் மாறாமல் இயல்பாகக் கேட்டுக் கொண்டான் விஷ்வா. தன் மனதை வெளிப்படுத்தியும் இத்தனை நாள் காத்திருக்க வைத்து இறுதியில் இப்படி ஒரு செய்தியை சொல்லும் போது அவனின் மனநிலை, ” கிச்சானாலே இளிச்சவாயன் தான்” என்ற வரிகள் தான். 

“என்ன விஷ்வா எதும் பேச மாட்ற”, மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அவள் கேட்க, 

“வாழ்த்துக்கள்”, என சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட்டான் விஷ்வா. 

இனி வேலைக்கு போகும் எண்ணமும் இல்லை. வீட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்து வீட்டை நோக்கிச் செல்ல, 

“எப்பா விஷ்வா. ராகவ் காலைல இதை குடுத்துட்டு போனாப்ல. கண்ணாடி மாத்திட்டேன். ஆனா என்ன பண்ணியும் முள் நகரல”, என்றார் கடிகார கடைக்காரர். 

“பழைய கால பொருள்னா, எதையாச்சும் பண்ணி உடைஞ்சு போயிற போகுது. ஷோகேஸ்ல வைக்க தானே. முள் நகரலனா என்ன விடுங்க. எவ்ளோ ஆச்சு”, எனக் கேட்டு பணத்தையும் கொடுத்து விட்டு, அந்த கடிகாரத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். 

வீட்டின் கதவிற்கு ஆளுக்கொரு சாவி வைத்துக் கொண்டனர். 

அதை வைத்து வீட்டைத் திறந்து உள்ளே சென்றவன். கடிகாரத்தை டீப்பாய் மீது வைத்து விட்டு, தன் அறைக்குச் சென்று படுத்து விட்டான். அலுவலகத்திற்கு அழைத்து மெடிக்கல் லீவும் சொல்லிவிட்டான். 

மனபாரம் தான். ஆனால் லிசா இப்படி செய்ததில் கோவம் அதிகம். 

காத்திருக்க வைத்து ஏமாற்றிவிட்டாள் என்று.

படுத்தவன் அப்படியே தூங்கியும் விட்டான்.

“அவனுக்கு பசிக்கலனா… எனக்கும் பசிக்காதா?. பல நாள் கழிச்சு இந்த ரெண்டு நாள் தான் சாப்பிட கிடைச்சுது. இப்போ அதுவும் இல்ல”, என புலம்பியது அந்த கடிகாரம்.

சாப்பிடாத வரை தெரியவில்லை. உணவு சாப்பிட்டதும் மீண்டும் பசிக்க, அந்த அலாரம் டீப்பாயில் இருந்து இறங்கி கிச்சனுக்கு ஓடியது.

“கஞ்சத்துக்கு பொறந்தவனுக, கால் லிட்டர் பால் வாங்கி காய்ச்சிருக்குதுக. கொஞ்சம் சேர்த்து வாங்கினா தான் என்ன”, என நான்கு பேரையும் திட்டித் தீர்த்தது அலாரம்.

சாப்பிட ஒன்றும் இல்லாத எரிச்சலுடன் மீண்டும் டீபாய் வந்து ஏறிக்கொண்டு, ’இவனுகளை எப்படி நம்ம வழிக்குக் கொண்டு வரது’ என தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தது அந்த அக்யூஸ்ட் அலாரம்.

தூங்கி எழுந்த விஷ்வா, கொஞ்சம் தெளிவாகி இருந்தான். 

“விடு டா விஷ்வா… லிசா இல்லனா உஷா”, என அவனுக்கு அவனே ஆறுதல் சொல்லிக் கொள்ள,

அதைக் கேட்ட அலாரம், ” மானம் கெட்ட பய. உனக்கு பொண்ணே அமையாது டா”, என சாபம் விட்டது. 

“யார் பேசுனது”, என அவன் பார்க்க, அங்கு தான் யாருமில்லையே.

“காதல் தோல்வி நோய் தாக்கிருச்சு போல டா விஷ்வா உனக்கு”, என தனக்குத் தானே பேசியபடி கடிகாரத்தின் எதிரில் அமர்ந்தான். 

“இந்த அர்ஜுன்க்கு நான் அசிங்கப்பட்ட விஷயம் தெரிஞ்சா, ஓவரா ஆடுவானே”, என யோசிக்க. 

“வெரி குட் ஃப்ரெண்ட்ஷிப்”, என்றது அவனுக்கு கேட்காதபடி. 

அவன் மீண்டும் சோஃபாவில் படுத்து தூங்கத் தொடங்கிவிட்டான். 

மதியம் முடிந்து மாலை ஆகிவிட்டது. மற்ற மூவரும் வந்து விட்டனர். 

“என்ன மச்சான்… லிசா தினேஷ் கூட செட் ஆகிட்டாலாமா?” என அர்ஜுன், விஷ்வாவின் முதுகில் அடித்து எழுப்பியபடி கேட்க, 

“கடுப்பாக்காம போடா”, என்றான் சோர்ந்த குரலில். 

’க்கும். இவனுக்கு அட்வைஸ் ஒண்ணு தான் கேடு. லிசா இல்லனா உஷாங்கிறான் பிராட்’, எனப் பேசிக் கொண்டது அலாரம். 

“சாப்பிட எதும் செஞ்சியா. இல்ல காதல் தோல்வில தூங்கிட்டியா”, என ராகவ் கேட்க, 

“தூங்கிட்டேன் டா”, என்றான் அசடு வழிந்தபடி. 

“எத்தனை லவ் பெய்லியர் டா உனக்கு. திரும்பவும் சளைக்காம சேம் மெத்தேட் ஃபாலோ பண்ற பாரு. அங்க நிக்கிற டா நீ”, என திரு சொல்ல, 

’இதே வேலையாத் தான் திரியிரானா இவன்’ என அவனை முறைத்தது அலாரம். 

“ஹேய்… கண்ணாடி மாத்தினதும் நல்லாருக்கு டா”, என ராகவ் கடிகாரத்தை கையில் எடுத்து பார்த்துச் சொல்ல, 

“ம்ம்… ஆனா முள் நகரலையாம், ரொம்ப ரொம்ப பழசு போல”, என விஷ்வா சொல்ல. 

’என்னை பாத்து பழசுங்குறான்… பூமரு’ என மீண்டும் விஷ்வாவிற்கு அர்ச்சனை அலாரத்திடம்.

“ஏன்”, என்றவாறு கடிகாரத்தின் பின் பக்கத்தை திறந்து பார்க்க, அதிலொரு 20 நிறத்தில் பட்டன்கள் இருந்தது. 

“என்னடா இது. இத்தனை சுவிட்ச், எதுக்கு இது” என பார்த்துக் கொண்டே, லேசாக ஒட்டி இருந்த தூசியைத் துடைத்தான் ராகவ். 

அதில் கடிகாரத்திற்கு கூச்சம் வர, “ஹாஹாஹா… “, என குறுகுறுப்பு தாங்காமல் சத்தமாக சிரித்தது அலாரம்.

error: Content is protected !!
Scroll to Top