வேள்வி : 2

அத்தியாயம் : 2

தனது மருமகள் வாழ வேண்டிய இடத்தில் இன்னொருத்தியை அழைத்து வந்ததுடன், சிறு குழந்தையின் மனதிலும் விசத்தைக் கக்க முயல்கிறானே எனும் கோபத்தில்,

“உன்னை நான் நிவேதாவின் அம்மாவைக் கூப்பிட்டு வந்து குடும்பம் நடத்தச் சொன்னா, நீ என்ன செய்து வச்சிருக்க பரிதி? உனக்குக் கல்யாணமாகி அப்படி எத்தனை நாள் ஆகிடுச்சு? ஏதோ ஒரு கோபத்தில் அவள் விட்டுப் போனால், கூப்பிட்டு வந்து குடும்பம் நடத்துவதை விட்டு இப்படித்தான் எடுத்தோம் கவிழ்த்தோம்னு இருப்பதா? ஒழுங்கு மரியாதையா இவளை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டு, உன் பொண்டாட்டியை போய் கூப்பிட்டு வா! இல்லை, நடக்கிறதே வேறு” என்று எகிறிக் கொண்டு வந்தார் நாகேஸ்வரி.

அவனோ அங்கே ஒருவர் நிற்கிறார் என்பதையே பொருட்படுத்தியது போலத் தெரியவில்லை. அதுவே அவரது கோபத்தை மேலும் அதிகப்படுத்த, “அம்மாவாம் அம்மா! பெத்த தாயைப் பார்க்க விடாம துரத்தி விட்டுட்டு, அதுக்கு காரணமானவள் கழுத்துல தாலி கட்டி கூப்பிட்டு வந்திருக்கான் அறிவு கெட்டவன். பொம்பளை சகவாசம் கடைசியில் அவங்க உயிருக்கே உலை வைக்கும்னு சும்மாவா சொன்னாங்க…” என்று மூக்கை உறிஞ்சினார்.

அவன் திரும்பித் தாயைப் பார்த்து முறைக்க, அவரோ மகனுக்கு அருகில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் நிற்கும் நந்தனாவை நோக்கி வந்தார்.

“ஏண்டி புத்தி கெட்டவளே! அவன் தான் அறிவு இல்லாம இப்படி ஒரு காரியத்தைச் செய்தா, உனக்கு எங்கேடி போச்சு? எப்ப இந்த வீட்டு மருமக போவா, புற வாசல் வழியா புகுந்து வந்துடலாம்னு கங்கணம் கட்டிக் காத்திருந்தியா? உனக்குத்தான் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் ஏற்பாடு பண்ணினார்களே, அவனைக் கட்டிக்கிட்டு அப்படியே போகாம எதுக்குடி எங்க உயிரை வாங்க வந்திருக்க?” என்று சீறினார்.

“பிறந்த உடனே பெத்த தாயை முழுங்கிட்டா… வளர்ந்து வந்ததும் தகப்பனும் போயிட்டான். நல்லா இருந்த நம்ம குடும்பத்தையும் நாசமாக்கிட்டு இப்ப, இதே வீட்டுக்கு மருமகளா வந்திருக்கா. ஐயோ ஆண்டவா! ‘ஆமை புகுந்த இடமும் பாம்பு புகுந்த வீடும் உறுப்படாது’ன்னு சொல்லுவார்களே… இவள் வந்த நேரம் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ தெரியலயே…” என்று தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தார்.

நந்தனா இதழ்களை கடித்து தன்னை அடக்கிக் கொள்ள முயல, இயலாமையால் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அதைப் பார்த்த பரிதிவர்மனின் முகம் சடுதியில் மாறி விட்டது.

அவளது கைப்பற்றி அழுத்தியவன், விழிகளைப் பார்த்து வேண்டாம் என்றான். அவள் கண்ணீருடன் அவனைப் பார்த்துப் புன்னகைக்க, அவனால் தாள முடியவில்லை. அவன் அம்மாவிடம் பேசி நிறைய நாட்கள் ஆகிறது. அதோடு கல்யாணமாகி வந்த அன்றே விவகாரம் வேண்டாம் என்று தான் பார்க்கிறான். அவனது பொறுமையின் அளவை சோதித்துப் பார்க்கிறார் நாகேஸ்வரி.

அதற்கு மேலும் அங்கு நிற்காமல் அவளை அழைத்துக்கொண்டு மாடியில் உள்ள தன்னுடைய அறையை நோக்கி நடக்க, அதைக் கண்ட நாகேஸ்வரி, “ஐயோ! ஐயோ! ஒத்தை பிள்ளைன்னு பாசத்தைக் கொட்டி வளர்த்தது தப்பா போயிடுச்சே… ‘வளர்த்த கிடா மார்பில் பாய்வது போல’ இத்தனை நாள் காட்டிய பாசத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு எவளையோ கூட்டிட்டுப் போறானே… ஏய் பரிதி நில்லுடா! இது என் புருஷன் கட்டுன வீடு. இதுல உன் மனைவியா வந்தவளுக்கும், உங்க பிள்ளைக்கும் தான் உரிமை. வேறு எந்தக் கழிசடைகளுக்கும் இடமில்லை. அவளை வெளியே போகச் சொல்லு…” என்று கத்தினார். 

அவன் நின்று நிதானமாகப் பார்த்தான். பின்னர், மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு வெளியேறிச் செல்ல, “அடக் கடவுளே! இங்கே என்னென்ன அநியாயம் நடக்குது பார்த்தியா? இதை எல்லாம் பார்க்கவா இந்த உசுரை இத்தனை நாளும் வச்சிருக்கே? என் நாத்தனார் பொண்ணை என் பொண்ணா நினைச்சுத்தானே இத்தனை நாளும் நடத்தினேன். அவளுக்குத் துரோகம் செய்ய இவனால் எப்படி முடிஞ்சது?

இவன் ஆரம்பத்திலேயே அந்தக் கோழி பண்ணையை நடத்துவதா சொல்லி இவளோடு சுத்துனதோடு இல்லாம, இப்ப கல்யாணம் பண்ணி வீட்டுக்கும் கூப்பிட்டு வந்துட்டானே… ஒத்த வார்த்தை சொல்லும் முன் பெத்த தாய்னு பார்க்காம வீட்டை விட்டு அவளையும் என் பேத்தியும் கூப்பிட்டுப் போறானே…

 ஏய் பரிதி! நான் அவளைத்தான் இந்த வீட்டை விட்டுப் போக சொன்னேன்; உன்னை இல்ல! என் பேத்தி பிறந்த முதலே என்கிட்டயே வளர்ந்தவ, அவளைப் பார்க்காம என்னால இருக்க முடியாது. அவளைக் கொண்டு போயிடாதடா…” என்று மார்பில் அடித்துக்கொண்டு கதறினார்.

அவனுக்கும் தாயின் நிலை தெரியும்; அதோடு, சதா நந்தனாவைத் தாக்கிப் பேசி அவமதித்து, வீட்டை விட்டும் வெளியேற சொன்னதால் அவனும் கூடவே வந்தான். இப்போது அம்மாவின் கதறல் அவனைத் தேங்கி நிற்க வைக்கிறது.

ஓடி வந்து அவர் தன் பேத்தியைத் தூக்கி வைத்துக் கொண்டு,  “பரிதி, அம்மா சொல்றதைக் கேளுடா! இவ உனக்கு வேண்டாம். ஏற்கனவே இவ கூட பேசினது, சுத்துனதாலதான் உன் கல்யாண வாழ்க்கை அப்படி ஆகிடுச்சு… உன் பொண்டாட்டி சந்தேகப்பட்டுப் போகவும் இவதானே காரணம்? மறுபடியும் இவளையே கூப்பிட்டு வந்து குடித்தனம் நடத்துவது தெரிஞ்சா, அம்மு வர மாட்டா… உன் அத்தையும் மாமாவும் அறிஞ்சா விஷயம்  பெருசாகிடும்டா” என்று பயந்து போய் சொன்னார். 

அவன் தனது தாயை அழுத்தமாகப் பார்த்துவிட்டு, “உங்க மனசுல அப்படி இருந்தா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. திரும்ப திரும்ப சொல்லுவதால் பொய்யை உண்மையாக மாத்தவும் முடியாது. ஒருவேளை நீங்க சொன்னது போல, நான் நந்தனாவுடன் தொடர்பில் இருந்திருந்தா மூணு வருஷத்துக்கு முன்னமே அவளைக் கல்யாணம் பண்ணிக் கூப்பிட்டு வந்திருப்பேனே, தவிர உங்க விருப்பத்துக்கு நடந்திருக்க மாட்டேன்!” என்று விரக்தியுடன் கூறினான். 

அவர் ஒரு கணம் ஸ்தம்பித்து விழிக்க, தொண்டையை செருமியவன் தன்னை இயல்பான நிலைக்கு கொண்டு வந்தான்.

“நந்தனா என் மனைவி! அவள் இருக்கும் இடத்துல தான் நானும் இருப்பேன். அவளைப்  போகச் சொன்னா, நானும் போயிடுவேன். இந்த உலகத்தில் அவளையும் என் மகளையும் தவிர வேறு எதுவும் எனக்குப் பெருசில்ல…” என்று சொல்ல, “அந்த அளவுக்கு அவள் உன்னை மயக்கி வச்சிருக்காளா? நான் சொல்வது உன் புத்தியில் ஏறலியா? நீ வேணா பாரு, இன்னும் ஒரு வாரத்துல இந்த வீட்டுல இருக்கற எல்லாத்தையும் திருடிட்டு ஓடுவா… அப்ப தெரியும்” என்றவரின் பேச்சை அலட்சியப்படுத்தினான் பரிதிவர்மன்.

“ஒண்ணு நான் வரணும்னா நந்தனாவும் உள்ளே வரணும்; இல்ல, நாங்க இங்கிருந்து கிளம்புறோம்.” அவன் அதிலேயே உறுதியாக இருக்கவும், வீட்டை விட்டுப் போகச் சொன்னால் பிறகு மகன் வராமல் இருந்து விடுவான்.

நாளைக்கு ஒரு நாள் நாத்தனார் வந்து நின்றால் பதில் சொல்ல முடியாது. குழந்தையும் அப்பாவைக் காணாமல் நோய்வாய்ப்பட்டுப் போய்விடும்; இல்லையானால் தன்னை விட்டுப் பிரித்துக்கொண்டு சென்று விடுவான். என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தடுமாற, பதில் கூறாமல் மகளைக் கையில் ஏந்தியவன், மனைவியையும் அழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்றுவிட்டான்.

அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மூளை மரத்துப் போனது போலிருந்தது.

 

அமெரிக்காவில் இருக்கும் நாத்தனாருக்கு தொடர்பு கொண்டு சொல்லா விட்டால், நாளைக்குத் தன்னையும் காண விடமாட்டார் என்பதால் உடனே அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அழைப்பு ஏற்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து முயற்சித்தும் முடியாமல் போக,  “ஐயோ, நான் இப்ப என்ன செய்வேன்? நாளைக்கு வந்து ஏன் என்கிட்ட விஷயத்தைச் சொல்லலைன்னு கேட்டா என்ன செய்றது? ஆண்டவா! வயசான காலத்துல போட்டு என்னைத் கஷ்டப்படுத்துறியே?” என்று மறுபடியும் மறுபடியும் விடாமல் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.

நந்தனாவுடன் தனது அறைக்குள் நுழைந்த பரிதிவர்மன், கதவைப் பூட்டிவிட்டு, படுக்கையில் மகளை அமர வைத்தான்.

அவள் அப்பாவைப் பார்த்துக்கொண்டே சாய்ந்ததும், தனது உடையை மாற்றியவன் மனைவி நந்தனாவின் முகத்தைப் பார்த்தான். அவளது முகம் பொலிவிழந்து காணப்பட்டது.

“நந்தனா!” என்று அழைத்து அவளது கவனத்தைத் திசை திருப்பியவன், “இதெல்லாம் நடக்கும்னு ஏற்கனவே எதிர்பார்த்தது தானே! நீ ஆசைப்பட்டது சாதாரண வாழ்க்கையில்லை. நித்தமும் வேள்வித் தீயில் மூழ்கி எழுந்து வருவது போலான ஆபத்தான வாழ்க்கையை… என் மேல் உனக்கு இருக்கும் நேசத்தையும், உன் தூய மனதையும் வெளிப்படுத்தும் நேரம் இது!  யார் என்ன சொன்னாலும் கண்டுக்காம இருந்து பழகு. உனக்கு நான் இருக்கேன்” என்று தீர்க்கமாக கூறினான்.

அவள் கண் கலங்க தலையசைக்க, “வாழ்க்கையில் எல்லாமே சுலபமா கிடைச்சுட்டா அதுக்கு அர்த்தம் இல்லாம போயிடும். போராடி கிடைப்பதுக்கு எப்பவும் மவுசு அதிகம். நீயும் உன் வாழ்க்கையில் வென்று உனக்குப் பிடிச்ச மாதிரி வாழணும்!” என்றான்.

தன் மீது அவனுக்கு இருக்கும் அக்கறையில் தொண்டை அடைத்தது. வாய் திறக்க முடியாமல் மௌனமாக இருந்தாள் நந்தனா. அவளது நிலை அவனையும் சங்கடப்படுத்த, “இந்தப் புடவையை மாத்திட்டு வேறு உடுத்திட்டு வா! கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம்” என்றான்.

அப்போதும் அவள் தலையசைப்பை மட்டுமே பதிலாக தந்தாள்.

அவளது உடைகள் நிரம்பிய ப்ரீஃப்கேஷ் அவனது அறையில்தான் இருந்தது. இது எப்படி இங்கு வந்தது என்று நினைத்தபடி, அதிலிருந்த தனது உடையை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த குளியலறைக்குள் நுழைந்தாள்.

மகள் ஓடி வந்து படுக்கையில் சாய்ந்திருக்கும் அப்பாவின் வயிற்றின் மீது ஏறி அமர்ந்து குதித்தாள். அவன், “அப்போ யாராவது வந்து இவகிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்கடா… என் வயித்தை ஒரு வழி பண்ணுறாளே!” என்றதும் அவள் கலகலவென நகைத்தாள்.

“அப்பா, அப்பா…” என்று அவன் இரு கன்னங்களையும் பற்றியவள், “அம்மா எங்க?” என்று கேட்டாள்.

அவன் புன்முறுவல் பூத்தபடி, “அம்மா டிரஸ் மாத்த போயிருக்காங்க, இப்ப வந்துடுவாங்க. நீ அம்மாவைக் கஷ்டப்படுத்தாம சமத்தா இருக்கணும், சரியா?” என்றதும், அவள் தலையை ஆட்டினாள்.

சற்று நேரத்தில் உடையை மாற்றிவிட்டு வந்த நந்தனா, படுக்கையில் எப்படி அமர்வது என்று தயங்கியபடி நிற்க, அவளது தயக்கத்தை உணர்ந்து, “உட்கார்!” என்று விலகிப் படுத்தவன் அவளது வாடிய முகத்தைக் கண்டதும் சுவரில் சாய்ந்து அமர்ந்தான். குழந்தை அவன் வயிற்றுப் பகுதியில் படுத்துக்கொள்ள, கீழே ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும் தனது அம்மாவின் பேச்சைக் கேட்டவன் முகம் இறுகியபடி இருந்தது.

 

நிவேதாவுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாததால், “பாட்டி ஆஆ… ஓ” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். 

அவன் நந்தனாவைப் பார்த்தான். “இதெல்லாம் நீயாவே வர வச்சது! அனுபவிச்சுதான் ஆகணும். அதுக்காக நான் இல்லாத நேரம் யாராவது உன்னை ஏதாவது சொன்னா பார்த்துட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லத் தயங்காதே!” என்றான்.

அவள் புரிந்தது போலத் தலையசைத்ததும், “நாளையிலிருந்து நான் வேலைக்குப் போகணும். காலையில போனா மதியம் வருவேன்; சில நேரம் வராமலும் இருப்பேன். நீ அந்த நேரம் குழந்தையைப் பத்திரமா பாத்துக்கோ! கீழே போக வேண்டாம்… உனக்குத் தேவையானதை சமையல்கார பெண்ணிடம் சொன்னா, அவங்களே கொண்டு வந்து தருவாங்க…” என்றதும் அவள் தலையை அசைத்தாள்.

அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. மகள் விளையாடுவதை பார்த்தபடி இருந்தான். அவனுக்கும் நடக்கும் அனைத்தையும் ஜீரணிக்க அவகாசம் தேவைப்பட்டது. ஏற்கனவே எல்லா விஷயமும் தெரிந்திருந்தாலும், முக்கியமான ஒருசில விஷயங்களை இப்போதுதான் அறிய நேர்ந்தது. அதில் அவள் மீது சிறு கோபம் எழுந்தாலும், இப்போது காட்டுவதற்கான நேரம் அல்ல என்றுதான் அவன் அமைதி காக்கிறான். அதே நேரம், தன்னைச் சுற்றியுள்ள கார் இருளைத் துரத்தியடிக்காமல் தனது வாழ்க்கையை ஆரம்பித்துக்கொள்ளவும் அவனுக்கு விருப்பமில்லை. ஏற்கனவே காலையில் உள்ள பதற்றம், அம்மாவின் பேச்சைக் கேட்டு வருத்தத்தில் இருப்பாள்; தானும் எதையும் சொல்லிக் காயப்படுத்த வேண்டாம் என்பதால் அவன் பொறுமையைக் கையாண்டான். அவளது நிலையும் அப்படித்தான் இருந்தது.

அவன் சொன்ன அந்த மூன்று வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவங்கள், அவள் மனதையும் நிலை கொள்ளாமல் ஆக்கியது. அதை சட்டென்று தூசு தட்டி விட்டார் போல துடைத்து எறிந்து விட அவளாலும் முடியவில்லை.  அவன் அவளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த ஒவ்வொன்றும் கண்களுக்குள்ளேயே இப்போதும் வந்து நிற்கிறது. மேலும், அவள் அப்பாவிடம் கடைசியாகப் பேசிய வார்த்தைகளும், நடந்த சம்பவங்களும் வேறு யாரையுமே திருமணம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தை வர வைத்திருந்தது. ஆனால், அவளே எதிர்பாராத விதமாகத் தம்பியால் அவளுக்குப் பிடித்தமான வாழ்க்கை அமைந்துவிட்டது.

 அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத அகிலன், எப்படி இதையெல்லாம் செய்தான் என்று இப்போது கூட அவளால் நம்ப முடியவில்லை. அப்படியானால், அவனும் எல்லாவற்றையும் அறிந்து வைத்துவிட்டு, எதுவுமே தெரியாதது போல இவ்வளவு நாளும் இருந்திருக்கிறான். இத்தகைய பக்குவம் தம்பியிடம் எப்படி வந்தது என்று வியந்தவள், அப்பாவின் மார்பில் நிம்மதியாக படுத்திருக்கும் குழந்தையைப் பார்த்தபடியே இருந்தாள்.

மதிய நேரம் பசி எடுத்ததும் குழந்தை அழுதது. உடனே அவன் கவரில் வாங்கி வந்த உணவை எடுத்துக்கொடுக்குமாறு சொன்னான். அவளும் அதுபோலவே செய்ய, இத்தனை நாளும் உணவு உண்ணும் நேரம் ஒரு போர்க்களத்தையே உண்டுபண்ணும் நிவேதா அத்தனை சமத்தாக உண்பதை கண்டு அவனுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

மகள் உண்டு முடித்ததும் அவளை வாங்கி முத்தமிட்டவன், தனக்கும் நந்தனாவுக்கும் உரிய உணவை எடுத்துவைக்கச் சொன்னான். வீட்டில் அம்மா எப்படியும் இன்று ஒரு வழி பண்ணி விடுவார் என்று அவனுக்கும் தெரிந்திருந்ததால், வரும் வழியில் நண்பரிடம் சொல்லி சூடான பிரியாணியை வாங்கி வந்திருந்தான்.

இருவரும் உணவை முடித்ததும் தரையில் அவள் ஒரு போர்வையை விரித்துக்கொண்டு படுத்துவிட, “குழந்தைக்கு அந்தப் பக்கம் வந்து கட்டிலில் படு” என்ற சொல்லைக் கூட அவள் செவியில் ஏற்கவில்லை.

நந்தனா கீழே படுத்திருப்பதை கண்டதும் குழந்தையும் அவளுடன் போகும் ஆசையில் சாடிச் சென்றது. அவள், குழந்தையை அணைத்தபடி தட்டிக் கொடுக்க, பிறந்த முதல் பாட்டி மற்றும் வேலைக்கார பெண்மணியை தவிர அம்மா என்ற பாசத்தை உணர்ந்திராத குழந்தை இன்று அவளைக் கட்டிக் கொண்டு உறங்கியது. அதை அவன் கண்ணிமைக்காமல் பார்த்திருக்க, நந்தனாவின் இதழ்களில் படிந்திருந்த புன்னகை அவனையும் அதே மனநிலைக்கு கொண்டு வந்தது.

 

மாலை நேரம் கண் விழித்தவன், கோழி பண்ணையை பார்த்து விட்டு வருவதாக சொல்லி விட்டுக் கீழே இறங்கி வந்தான்.

 அவனது அம்மாவைக் காணவில்லை. எங்கயாவது சென்றிருப்பார் என்று நினைத்தபடி அவன் சென்று விட,  மகன் வெளியே சென்றது தெரியாமலும், பேத்தியை சென்று அவர்களிடம் கேட்கவும் முடியாமல் தனது அறையில் முடங்கிக் கிடந்தார் நாகேஸ்வரி.

அவர் உள்ளம் வேதனையில் துடித்தது. நாத்தனார் பேசிய வார்த்தைகள் மனதிற்குள் விச அம்புகளை பாய்ச்சியது. அதையே அசை போட்டுக் கொண்டிருந்தவர், மகன் இல்லாத நேரத்தில் அவளைத் துன்புறுத்தி இந்த வீட்டை விட்டுத் துரத்தி அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி, நாளைக்கு மகன் வேலைக்குப் போன பிறகு தனது ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்று நினைத்தபடி இருந்தார்.

அத்தனை நாளாக கைக்குள் இருந்து பொத்தி பொத்தி வளர்த்த குழந்தை, இன்று கையருகில் இல்லாமல் ஏக்கம் சூழ்ந்தது. மேலே சென்று அவர்களிடம் கேட்கும் மனநிலையும் அவரிடம் இல்லை. வேலைக்காரப் பெண்ணிடம் சொல்லி மாடியில் இருந்து பேத்தியை எடுத்துவரக் கூறினார். 

நிவேதாவைக் கண்டதும் அவளைத் தூக்கி அணைத்து முத்தமிட்டவர், சாப்பாடு ஊட்டிவிடச் செல்ல, அவள் வயிற்றைத் தட்டித்தட்டி காண்பித்து, “சாப்பிட்டாச்சு” என்றாள்.

 

“என்ன சாப்பிட்டே?” என்று கேட்டவருக்கு அதன் பிறகே புரிந்தது. அப்படியானால் தான் ஒருத்தி இங்கு தனியாகக் கிடந்து புலம்பித் தவிக்க, தன்னை ஒரு பொருட்டாகக் கருதாமல் தனியாக உண்டு இருக்கிறார்களே! இதில் வீட்டை விட்டுச் சென்றுவிட்டால் தனது நிலை என்ன ஆவது?’ என்று அதிர்ந்தவர், என்ன ஆனாலும் மகனை இந்த வீட்டை விட்டுப் போக விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

இரவு நேரம் கையில் பையுடன் வந்த பரிதி, மகள் அம்மாவின் மடியில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருப்பதை கண்டான். நிவேதா ஓடிச்சென்று அவன் காலைப் பற்றியபடி “அம்மா வரல…” என்று இரு கைகளையும் ஆட்டினாள்.

 

அவன் “அம்மா மேல உள்ள அறையில் இருப்பாங்க, வா” என்று மகளைத் தூக்கிச் செல்ல, “ஆமாம்! பெரிய மகராணி கீழே இறங்கி வந்துட்டா கால் வலிச்சிடும்” என்று நாகேஸ்வரி முணுமுணுத்தார்.

அவன் செவியில் விழுந்தும் எதுவும் சொல்லாமல் நடந்தான்.

“வயிறு பசிக்குது. வயசான காலத்துல ஒருத்தி கிடந்து தனியா புலம்புறாளே, அவள் சாப்பிட்டாளா இல்லையான்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? யார் யாரோ வாராங்க போறாங்க, எனக்குன்னு யார் இருக்கா?” என்று மூக்கால் அழுதார். 

‘வயசாகுதுன்னு தெரியுதுல்ல, அப்ப வாயை வச்சுட்டு சும்மா இருக்கணும். அதை விட்டு நான் தான் இந்த உலகத்தை ஆட்டிப் படைக்க பிறந்தவ மாதிரி பேசினா அப்படித்தான்’ என்பதாய் அவன் சென்றுவிட, ‘ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தி விட்ட மாதிரி, இந்த வீட்டுல சந்தோஷமா வாழவேண்டிய என் மருமகளைத் துரத்தி விட்டுவிட்டு, எப்படி அவனோடு கொஞ்சம் கூட கூச்சமில்லாம இருக்கறா பாரு! நாளைக்கு அவன் வெளியே போகட்டும், உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று மனதிற்குள் கருவினார் நாகேஸ்வரி.

error: Content is protected !!
Scroll to Top