இருள் நிழலாய் நானே 1
(கதையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கற்பனையே! காட்டப்படும் காட்சிகள், வசனங்கள் யாவும்… கற்பனையே!)
அது காடுகள் சூழ்ந்த மலை அடிவாரத்தில் இருக்கும் அழகிய கிராமம்.
நூற்றி ஐம்பது வீடுகளைக் கொண்டது.
அவர்களுக்கு உலகம் யாவும் அக்கிராமமும், மலையும் அதனைச் சுற்றியுள்ள காடுகளும் மட்டுமே. அவர்களின் தேவைகளுக்கு இயற்கையை மட்டுமே சார்ந்து வாழ்கின்றனர்.
அவர்கள் நகரப்பகுதிக்கு வருவதற்கு குறைந்தது இரண்டரை மணி நேரம் பயண செய்ய வேண்டும். நாகரிக உலகிலிருந்து ரொம்பவே தள்ளி இருந்தனர்.
“மணி ஏழாச்சு இன்னும் வாசலில் உட்கார்ந்திருக்கீங்க?”
வீட்டின் வாயில் படியிலில் அமர்ந்திருந்த மனைவியையும், மகளையும் கடிந்து கொண்டவராக, அப்போதுதான் வேலை முடித்து வந்தவர் தன்னுடைய இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கினார்.
“இன்னும் பெரியவள் வரலையேங்க.”
கேட்டினை இழுத்து சாற்றியவரின் கையில் மெல்லிய நடுக்கம்.
……..
தூரத்தில் குதிரை கணைப்பின் ஒலி.
அடுத்த நொடி கையிலிருந்த பையினை கீழே போட்டவராக, மனைவியையும், மகளையும் வீட்டிற்குள் தள்ளி கதவடைத்தார்.
அமைதியாய் வீசிய வாடைக்காற்று மெல்ல தன் வேகத்தைக் கூட்டியது. மரங்களின் உச்சிக் கிளைகள் யாவும் முறிந்து விழுமளவிற்கு ஆடின. தெருவிளக்குகள் விட்டு விட்டு ஒளிர்ந்தது.
நாய்கள் குரைக்கும் சத்தத்தை மிஞ்சி தூரத்தில் ஓநாய்களின் ஊளை திசை எங்கும் எதிரொலித்தது.
“ஏங்க… பெரியவள்?”
பதறியவராக தன்னுடைய பெரிய மகளுக்கு அழைப்பு விடுத்தார்.
“மூனு பனைமரம் தாண்டிட்டேன் ப்பா” என்றவளின் குரல் முடியும் முன் இணைப்பு முறிந்திருந்தது.
மனிதருக்கு மகளைக் குறித்து பயம் எழும்பிட,
வீட்டின் கதவினை திறக்க கையை கொண்டு சென்ற கணம், வாயிலில் குதிரையின் கணைப்பின் ஒலி.
வீட்டிலிருந்த மூவருக்கும் மூச்சே நின்றது.
“அய்யோ… எம் பொண்ணு” என்று பெண்மணி தலையில் அடித்துக்கொண்டு அழ, சிறியவள் மயங்கி விழுந்திருந்தாள்.
“இல்லை ஒன்னுமில்லை… ஒன்னுமாகியிருக்காது. நான்… நான்… பார்த்துட்டுவரேன்” என்ற ஆண், கதவினை திறந்து பார்வையை நேர்கொண்டு வைத்தவராக நடக்கத் தொடங்கினார்.
ஊரே இருளில் மூழ்கியிருந்தது.
இரவில் வெளிச்சம் கொடுத்து பவனி வரும் சந்திரனும், அவ்வூர் தொடங்குமிடம் மேகக் கூட்டத்தில் புகுந்து தன்னை ஒளித்துக் கொண்டானோ? அவ்வூரை கடந்த பின்னரே தன் கதிர்களை வெளிக்காட்டினான்.
பலவிதமான கூக்குரல்களும், ஓலங்களும் காதை நிறைத்தது. எதையும் பொருட்படுத்தாது, அக்கம் பக்கம் திரும்பாது நேரே நடந்து கொண்டே இருந்தவர், மகள் சொல்லிய மூன்று பனைமரம் கண்ணுக்குத் தெரிந்ததும் மூச்சை இழுத்துவிட… தன்னிலிருந்து சில அடிகளில் இருக்கும் ஒற்றை புளியமரத்தைக் கண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு அதனருகே ஓடினார்.
அவரின் மகள் புளியமரத்தின் கிளையில் உயிரற்று தொங்கிக் கொண்டிருந்தாள்.
“எதுக்குப்பா வந்தீங்க?”
தொங்கிய உடல் திடும்பென அவரின் முன்னே குதித்து பற்களைக்காட்டி விகாரமாக சிரித்தது.
“அய்யோ!” அவர் தலையில் அடித்துக்கொண்டு அழ… கண்ணீரை துடைத்துக்கொண்டு நிமிர, மீண்டும் கிளையில் உடல் ஆடிக் கொண்டிருந்தது.
உடல் சட்டென்று தீப்பிடித்து எரிந்தது. அதனிடமிருந்து விகாரமான கோர சிரிப்பு.
அதனருகே அவர் செல்ல… மெல்ல காற்றில் பறப்பது போல் கீழிறிங்கிய உடல்…
“அம்மா, தங்கச்சியை தனியா விட்டுட்டு வந்தீங்களாப்பா?” என்று கேட்டு முடிக்கும் முன்னர், அவர் வந்த வழியே திரும்பி ஓடிட…
அவர் வந்த பாதை சடுதியில் சதுப்பு நிலமாக மாற்றம் கொண்டு, அவரை தனக்குள் இழுத்துக்கொண்டது.
“அய்யோ அம்மா” என்ற அலறல்…
நிகழ்,
படுக்கையில் பதறி துடித்து எழுந்தமர்ந்தான் சமர் அத்வத்.
‘என்ன கனவுடா இது… நாப்பது வருஷத்துக்கு முன்ன டைம் டிராவல் பண்ண மாதிரி. நைட் பார்த்த பேய் படத்தோட எஃபெக்ட் போல’ என்று முகத்தை உள்ளங்கையால் தேய்த்தவனாக கண்களை திறந்தவன், அறையில் சூழ்ந்திருந்த இருளில் சடுதியில் இமைகளை மூடியிருந்தான்.
அதே கணம்,
“லட்டு” என்று அவ்வீடே அதிர கத்தினான். அவனிடம் பெரும் நடுக்கம் மற்றும் பதட்டம்.
சமயலறையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவளின் உடல் சமரின் கத்தலில் தூக்கிப்போட, கை நழுவி தம்ளர் தரையில் விழுந்து உருண்டது.
இருளின் நிசப்தத்தில் தம்ளர் உருளும் சத்தம், பெரும் ஒலியாய் காதை அடைக்க…
“லட்டு… பயமா இருக்குடி” என்று மீண்டும் சமரின் கத்தல் அடங்கும் முன்பு, மூச்சிரைக்க அவன் முன் நின்றிருந்தாள் மகிழா.
“சாரி… சாரிடா…” என்று காற்றாய் ஒலித்த குரலை இழுத்து, “நீ நல்லா தூங்கிட்டு இருந்தன்னு தண்ணி குடிக்கப்போனேன்” என்றவள், மின்விளக்கை உயிர்பித்தாள்.
மகிழாவின் குரல் தனக்கு மிக அருகில் கேட்டதுமே, சமரின் படபடப்பு நீங்கி, நடுக்கம் குறைந்து உடலும் மனமும் சீரானது.
அவளை இழுத்து தனக்கு அருகில் அமர்த்திக்கொண்டவன், அவளின் புஜத்தில் தன்னிரு கைகளையும் கோர்த்து நெருங்கி அமர்ந்தவனாக,
“நான் தான் சாரி கேட்கணும். நான் உனக்கு தொல்லையா இருக்கேன்ல?” எனக் கேட்டான். வருத்தமாக.
“அப்புறம்… வேறெதுவும் டயலாக் வச்சிருக்கியா?” எனக் கேட்டவள், “இப்படியெல்லாம் பேசாதன்னு நிறைய தடவை சொல்லிட்டேன்” என்று அவனை முறைத்தாள்.
சமர் தன்னிரு செவிகளையும் பிடித்துக்கொண்டு மன்னிப்பு வேண்டும் பாவனையில் முகத்தை சுருக்கிட… மகிழாவின் முறைப்பு காணமல் போனது.
“ம்ம்ம்… படு. எனக்கு தூக்கம் வருது. மார்னிங் சீக்கிரம் போகணும் டா” என்று அவனின் மடியிலே தலை வைத்து சாய்ந்தாள்.
“என்ன படுக்க சொல்லிட்டு நீ படுத்துட்ட?” சமர் சிரித்திட… “இப்படி சிரிக்காதடா. அப்புறம் நானே உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பேன். உனக்கு தான் கஷ்டம்” என்றாள். அவனின் கன்னத்தை பிடித்து ஆட்டியவளாக.
“ம்க்கும்… உன் ஆளு உன்னை ஓடவிட்டு அடிப்பான்” என்ற சமர், அப்படியே அவளை கைகளில் ஏந்தி பக்கத்து மெத்தையில் கிடத்தி, தன் படுக்கையில் விழுந்தான்.
“நான் தூங்கினதும் லைட் ஆஃப் பண்ணிக்கோ லட்டு” என்றவன் அவளுக்கு முதுகுக்காட்டி திரும்பி படுத்திட, அவனது நெஞ்சமெல்லாம் அதீத கனம்.
கொள்ளை காதல் அவள் மீது. ஆனால் அவளுக்கு அவன் வரையறைக்குள் அடங்கிடாத தூய உறவு.
இருவரது கட்டிலுக்கும் அதிகபட்ச இடைவெளி நான்கடி. ஆனால் நாலாயிரம் கிலோமீட்டர் தொலைவில் அவள் இருப்பதாய் அவனுள் வலி.
சிறுவயது முதல் ஒன்றாக இருக்கின்றனர். அவன் இருக்கும் எல்லா இடத்திலும் அவளும் இருப்பாள். கட்டாயம் இருக்க வேண்டிய நிலை. அவளின்றி அவனின் அணுவும் அசையாது. அவளின்றி அவ்வீட்டிற்குள் தனித்து அவன் இருந்ததே இல்லை. வீடென்றில்லை… அவன் செல்லும் எங்கும் அவள் உடனிருத்தல் இன்றியமையாதது.
அவனே அவளை மறுத்த கணங்களிலும், அவள் விடாது அவனை பற்றி அரவணைக்கின்றாள்.
சிறு வயது முதல் அன்னைக்கு நிகராய் அன்பு, அக்கறை காட்டுபவளின் மீது அவனுக்கு காதல் வராமல் இருந்திருந்தால் தான் அதிசயம்.
சமருக்கு மகிழா அன்னைக்கும் மேலானவள். அவளது குடும்பம் தான் அவனதும்.
ஆனாலும் காதலை சொல்லிட முடியாது அவனால். தனக்காக உடன் வைத்துக்கொள்ளவே காதல் என சொல்வதாக சொல்லிவிட்டால், அங்கேயே அவனது உண்மை நேசம் மரித்து விடும். அதற்காகவே இதயம் முழுக்க அதீத கனத்தில் கனக்கும் காதலை வெளிப்படுத்தாது இருக்கிறான். இனி அது முடியவும் முடியாது.
“தூங்கிட்டியாடா?”, மகிழா.
“ம்ப்ச்… சொல்லுடா!” அவளை பார்த்தவாறு திரும்பிப் படுத்தான்.
“கல்யாணம் வேணாம் தோணுதுடா!”
மகிழா அவ்வாறு சொல்லியதும், சமர் வேகமாக எழுந்து அமர்ந்தான்.
“என்ன சொல்ற நீ?” என்ற சமர், “இன்னும் பத்து நாளில் கல்யாணம் உனக்கு. இப்போ இப்படி சொல்ற?” என்றான்.
……… மகிழாவிடம் ஆழ்ந்த மௌனம்.
“எனக்காக யோசிக்கிறியா?”
அவள் பதில் சொல்லவில்லை என்றாலும், அவனுக்கா தெரியாது.
“அதான் கவுன்சிலிங் போயிட்டு இருக்கனே! சீக்கிரம் சரியாகிடுவேன்” என்று சொன்னவனிடம் சரியாகும் நம்பிக்கையில்லை.
பல வருடமாக மருத்துவமனை சென்றும் தீராத ஒன்று இந்த பத்து நாட்களில் தீர்ந்துவிடுமா என்ன?
நீண்ட அமைதி. இருவரிடமும் தூக்கம் தூரம் சென்றது.
“அத்து…” என அழைத்தவள், அடுத்து என்ன சொல்வதென தெரியாது, “லவ் யூ டா” என்று கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் சொல்லும் ‘லவ் யூ’ எந்த வகையென சமர் அத்வத் (அத்து) நன்கு அறிவானே. மகள் தந்தையிடமும், அண்ணன் தங்கையிடமும், மகன் அம்மாவிடமும் சொல்லும் நேசம் அது. அன்பின் வெளிப்பாடு. மெல்லிய முறுவல் அவனிடத்தில். தன்னை குறித்து சிறு வருத்தம். இரண்டும் ஒருங்கே. ஆயாசமாக கண்களை மூடித் தூங்கிட முயற்சித்தான்.
மகிழாவின் விழிகள் அவளது அத்துவின் மீதே! அவனுக்கு சகலமும் அவள் தான். அவளுக்கும் எதுவொன்றிற்கும் அவன் வேண்டும்.
சமரின் பார்வையில் அவள் மீது கனிவு, அக்கறை, பாசம், கோபம் என பலவற்றை பார்த்திருக்கிறாள். காதல் என்ற ஒன்றை தவிர்த்து.
அவனது கண்கள், சிறு செயல் என ஏதோவொன்று அவள் மீதான நேசத்தை காட்டிக்கொடுத்திருந்தால், அனைத்துமாக இருப்பவன் மீது அவளுக்கும் காதல் மலர்ந்திருக்குமோ? அல்லது அவன் மீதான அவளே உணராத நேசம் அவளுக்குத் தெரிய வந்திருக்குமோ?
ஏதோவொன்று இருவருக்குமான காதலில் சதி செய்துவிட்டது.
‘உனக்கு என் மேல காதல் வந்திருக்கலாமே அத்து’ என மனதில் வலியோடு எண்ணியவள், ‘உன்னை விட்டு இருந்திடுவேனா?’ என தனக்கு விடை தெரியாதென தெரிந்தும் தன்னிடமே கேட்டுக்கொண்டாள்.
என்று திருமணம் என அத்தை வீட்டிலிருந்து பார்க்க வருவதாக தந்தை கூறினாரோ… அந்த நொடி முதல் அவள் தவிப்பதெல்லாம் அவளின் அத்துவுக்காக மட்டுமே.
அவன் நாள் தொடங்கி முடியும் வரை மட்டுமல்ல ஒவ்வொரு மணித்துளியும் நிழல் போல் உடனிருப்பவள், இருபத்தைந்து ஆண்டுகளாய். சட்டென்று அவனின்றி அவள் எப்படி இருந்திடுவாள்.
இந்த யோசனையே அவளின் ஆழ் மனதில் புதையுண்டுள்ள அவன் மீதான காதல் தான் என அவளுக்கு ஏனோ விளங்கவில்லை.
தங்கை மகன் தன்னுடைய மகளுக்கு கணவனாக இருக்கிறான் என்பதில் அத்தனை சந்தோஷம் அவளின் தந்தைக்கு. அதற்காகவே அவரின் முகத்தில் தென்பட்ட மகிழ்விற்காகவே அவள் சரியென்றிருந்தால்.
மகிழா சரி சொல்லியதில் சமருக்கு பெரும் பங்குண்டு.
சமருக்காக யோசித்தே, மூன்று ஆண்டுகளாக வீட்டில் திருமணப்பேச்சினை எடுக்க விடாது தடுத்துக் கொண்டிருந்தாள் மகிழா.
“அவளை எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைடா. இவளைத்தான் கட்டிப்பேன்னு, அவன் ஏழெட்டு வருஷமா காத்திட்டு இருக்கான்” என்று சுந்தர் சமரிடமே சொல்லி வருத்தப்பட, சமருக்கு அக்கணம் அதீத வலி.
இருப்பினும் யாருமற்ற தன்னை அவர்களின் குடும்பத்தில் ஒருவராக பார்க்கும் உறவிற்காக தன் மனதை கல்லாக்கிக்கொண்டு தன்னவளை வேறொருவனை திருமணம் செய்துகொள்ளும்படி தானே கூறினான்.
“அவங்க வெயிட் பண்ணா நான் பண்ணிக்கணுமா அத்து? அவங்களை யார் வெயிட் பண்ண சொன்னது?” என்று கோபப்பட்டவளை சமர் சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைக்க படாதுபாடு பட்டான்.
“எனக்காக பார்க்கிறன்னா… இனி உன் லைஃப்பில் நான் இல்லை லட்டு.”
சமர் சொல்லிய நொடி மகிழாவுக்கு இமை தாண்டி வழிந்திருந்தது கண்ணீர்.
“நான் இல்லாம ஒவ்வொண்ணுக்கும் நீ நடுங்குவடா. இந்த வீட்டுக்குள் நான் இல்லாம நீ எப்படி இருந்திடுறேன் பார்க்கிறேன்” என்று அவனிடம் கோபமாக சொல்லியவள், அதே கோபத்தோடு தந்தையிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்க, இன்னும் பத்து நாளில் திருமணம் என்று வந்து நிற்கிறது.
சொந்த அத்தை மகன் ரூபேஷ். ஏனோ அவனிடம் அவளுக்கு எவ்வித உணர்வும் இல்லை. பார்த்தால் பேசுவாள். அவ்வளவு தான் அவர்களது உறவின் நெருக்கம்.
பள்ளி இறுதியில்… ரூபேஷ், “சமரிடம் பேசக்கூடாது, அவனோட உன்னை பார்த்தாலே எரிச்சலா இருக்கு” என அவளுக்கு கட்டளை இட, அன்றோடு அவனிடம் பேசும் கொஞ்ச பேச்சினையும் குறைத்துக் கொண்டாள்.
தற்போது அவனுடனே திருமணம்.
அவனுடன் வாழ்வது குறித்தான கவலையில்லை அவளுக்கு.
அவன் தங்களின் (சமர், மகிழா) உறவை எப்படி எடுத்துக்கொள்வான் என்பதே அவளின் பெரும் கவலை. அதோடு சமரிடத்தில் யாரையோ நிறுத்தி பார்ப்பதாக அவளுள்ளே சிறு தடுமாற்றம்.
தெளிவாக முடிவெடுக்க வேண்டிய தருணம். ஏனோ அவளால் முடியவில்லை.
பல யோசனைகளின் விளைவால், மகிழாவுக்கு தூக்கம் வராது போக்குக்காட்டியது.
எழுந்து அமர்ந்தவள் நேரத்தை பார்த்தாள். இன்னும் சில நிமிடங்களில் விடிந்து விடும்.
சமர் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க,
‘அவன் எழுவதற்குள் கிளம்பி வந்துவிடலாம்’ என தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, அவனது செவியில் சத்தம் மெல்ல கேட்கும்படி வைத்தவள், வேகமாக கீழிறங்கி எதிரே இருக்கும் தன் வீட்டிற்கு ஓடி வந்தாள்.
சுந்தரும், சமரின் தந்தை விஷ்வநாதனும் பால்ய நண்பர்கள்.
“சமர் எழுந்தாச்சா?”
“இல்லப்பா” என்ற மகிழாவிடம் எல்லாம் மின்னல் வேகம் தான், அத்தனை சுருக்காக கிளம்பித் தயாராகியிருந்தாள்.
தன்னுடைய பையினை எடுத்து தோளில் மாட்டியவள்,
“அம்மா டிபன்” என்றாள்.
“இந்த அவசரம் எல்லாம் இன்னும் பத்து நாளைக்குத்தான். அதுக்கு அப்புறம் நீ எல்லாமே நிதானமா செய்யலாம்” என்ற ரேவதி அவளின் கையில் உணவடங்கிய கூடையை கொடுத்திட, நிதர்சனம் மகிழாவின் தலையில் ஓங்கிக் கொட்டியது.
இரவு முழுக்க இதை நினைத்து தானே குழம்பிக் கொண்டிருந்தாள்.
அவள் அசையாது நின்றிருக்க…
“ஏதும் முன்னேற்றம் இருக்கா மகி?” எனக் கேட்டார் சுந்தர்.
“அது இவள் அவனை விட்டுப்போனாதான் தெரியும். இவ தான் அவனோட ஒட்டிட்டே இருக்காளே!” என்ற ரேவதியிடம் கோபமென்று எதுவுமில்லை.
“அவனை கொஞ்சம் கொஞ்சம் தனியா விடு மகி. நீ போன பின்னாடி அவன் தனியா இருக்க வேண்டாமா?” என்றார். ரேவதியிடமும் சமர் மீதான அக்கறையின் வெளிப்பாடே அது.
“உன் கல்யாணம் முடிஞ்சதும் அவனை எப்படியாவது சம்மதிக்க வச்சு, கல்யாணத்தை பண்ணிடுவோம். வர பொண்ணு கூடவே இருப்பாளே” என்றார் சுந்தர்.
சுந்தரின் அப்பேச்சு இதயத்தில் மெல்லிய வலியை கொடுத்தது மகிழாவுக்கு.
அந்த வலி சொல்லியது இதுநாள் வரை அவள் உணர்ந்து கொள்ளாத காதலை.
‘அத்து…’ மனதில் பெரும் ஓலம்.
“இவள் போயிட்டாள் அவன் என்ன பண்ணுவான்னு யோசிச்சு, இவளுக்கு முன்னாடியே அவனுக்கு முடிக்க பேசினோம் தானே? அவன் ஒத்துக்கிட்டா தானே கல்யாணம் பண்ண முடியும். அவன்கிட்ட கல்யாணத்தைப்பத்தி பேசிக்கிட்டே இருங்க” என்ற ரேவதி, “நீ என்ன நின்னுட்ட, சமர் கத்தப்போறான் போ” என்று மகளின் தோளினை தட்டி அனுப்பி வைத்தார்.
“உங்க தங்கச்சி மகன் குறுக்க வராமலிருந்திருந்தால், இவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். இப்போ ரெண்டும் எப்படி இருக்க போறோம்ன்னு மருகுதுங்க” என்று கணவனிடம் புலம்பியவராக ரேவதி நகர, வாயிலைத் தாண்டிக் கொண்டிருந்த மகிழாவுக்கு அப்பேச்சு நன்கு கேட்டிருந்தது.
“நானும் அந்த நினைப்பில் தானே இருந்தேன்” என்று முணுமுணுத்தவராக எழுந்து சென்றார் சுந்தர்.
ஏதோ பிரம்மை பிடித்ததுப்போல் சமர் வீட்டிற்குள் நுழைந்தவள், தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
இந்நிலையில் தான் மகிழா தன் காதலை உணர வேண்டுமென இருந்ததோ.
“லட்டு…” சமர் தானாக விழித்து எழுந்து வந்து அவள் முன் நின்று, தோளில் கை வைத்து அழைத்திட…
“அத்து” என்று அவனது இடையைச் சுற்றிக் கட்டிக்கொண்டாள்.
“என்னடா? எதுக்கு அழற?” அவளின் தலையை வருடினான்.
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா அத்து?”
அவளது கேள்வியில் சமர் உறைந்து நின்றான்.