காரை அருண் தான் ஓட்டிக்கொண்டிருந்தான். பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த ஆதவனோ எந்தப் பேச்சும் மூச்சும் இல்லாமல், ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தபடி வந்தான். அவனது நினைவுகள் முழுவதும் அந்த நீல நிற கண்டாங்கி சேலையில், இடுப்பில் கூடையோடு நின்ற அந்தப் பெண்ணின் தோற்றமே ஆக்கிரமித்திருந்தது.
“அதே பின்னழகு… அதே கம்பீரம்… அதே கனவுத் தேவதை!” என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே வந்தான்.
அருண் எவ்வளவோ கேட்டும் ஆதவன் வாய் திறக்கவில்லை. இதோ வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகும் ஆதவன் அவனது அறைக்குள் சென்று அமைதியாகக் கட்டிலில் உட்கார்ந்து ஏதோ யோசனையிலேயே மூழ்கியிருப்பதைப் பார்த்த அருணுக்குப் பொறுமை இழந்தது.
கதவைச் சாத்தியவன், “அடேய் அறிவு கெட்ட பயலே! எதாவது வாயை திறக்குறியா?”என்று அருண் சத்தம்போட்டான்.
ஆதவனோ நிமிர்ந்து அவனைப் பார்க்க, அருண் ஆதங்கத்தோடு தொடர்ந்தான், “திருச்சியில இருந்து கிளம்புனதுல இருந்து பார்க்குறேன்… ஒரே யோசனை, அமைதி! காரை நிப்பாட்டச் சொல்லி ஓடுன… அங்க யாரைப் பார்த்தேன்னு கேட்டா வாயைத் திறக்க மாட்டேங்குற! கொஞ்ச நாளாச்சும் அந்த உருவம் இல்லாத கனவை மறந்து, தொழிலில் கவனம் செலுத்தி நல்லபடியா இருந்த… இப்போ திரும்பவும் உனக்கு அந்தப் பழைய நினைப்பும் பைத்தியமும் தலைக்கேறிடுச்சாடா? உனக்கு என்னதான்டா ஆச்சு?” என்று அருண் கோபமும் கவலையுமாக அவனது தோளைப் பிடித்து உலுக்கினான்.
அதைக் கேட்ட ஆதவனோ, அருணின் கைகளைப் பிடித்துக்கொண்டு “நீ சொன்ன போல அது சினிமா கனவு இல்லடா. என் கனவுல வந்துட்டு போன அந்தப் பொண்ணை… இன்னைக்கு என் கண்ணால நிஜமா பார்த்தேன்டா! திருச்சி டிராஃபிக்ல அந்த பஸ்ல ஏறுன அதே தோற்றம்… அதே சேலை… அவதான்டா என் கனவுத் தேவதை! அவளை நான் கண்டிப்பா தேடிப்பிடிச்சே ஆகணும்டா!” என்றவனின் கண்களில் அவ்வளவு உறுதி இருந்தது.
அத்தை மகனின் வார்த்தைகளைக் கேட்ட அருண், ஒரு கணம் திடுக்கிட்டுப் போய் அவனைப் பார்த்தான். ஆதவன் இவ்வளவு தீவிரமாக அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
அதுவும் ஒருமுறை கூட நேரில் பார்த்திராத, கனவில் மட்டுமே கண்ட ஒரு பெண்ணைத் தேடி அலைவதென்பது அவனுக்குச் சற்றும் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகத் தோன்றியது.
அவனது முகத்தில் தெரிந்த தயக்கத்தையும் குழப்பத்தையும் பார்த்த ஆதவனிடம், சற்றே நிதானமாகப் பேசத் தொடங்கினான்.
“இங்க பாரு ஆது… ஒரு ஊருக்குப் போய், அங்கே இருக்கிறவங்ககிட்ட விசாரிச்சு, ஊர் பேர் மட்டும் தெரிஞ்சிருந்தாகூட ஒருத்தரைத் தேடிக் கண்டுபிடிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?அதுவும் நீ தேடுறது யாருன்னு உனக்கே சரியா தெரியாது”
“கனவுல பார்த்திருக்க, அதுவும் அவளோட முகத்தைக்கூட பார்க்கல. பின்னாடி இருந்து பார்த்த உருவத்தை மட்டும் வச்சுக்கிட்டு ஒரு பொண்ணைத் தேடுறேன்னு சொல்றியே… இது எந்த அளவுக்கு சாத்தியமாகும்னு எனக்குப் புரியலடா. உண்மையைச் சொல்லணும்னா, நீ இப்படித் தேடி அலையறது எனக்குச் சரியா படலை!” என்றான் அருண்.
அருணின் வார்த்தைகளைக் கேட்ட ஆதவன், சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் ஆதவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனால், மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அந்தப் பெண்ணைத் தேடத் தூண்டிக்கொண்டே இருந்தது.
“நீ சொல்றது எனக்குப் புரியுதுடா அருண். நானும் இதைப் பத்தி யோசிக்காம இல்லை. முகத்தைக்கூட பார்க்காத ஒரு பெண்ணை, வெறும் கனவை மட்டும் வச்சுக்கிட்டு தேடுறது முட்டாள்தனமாத்தான் உனக்குத் தோணும்”
“ஆனா என்னால அந்தக் கனவை அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியலடா. அவளைப்பற்றி யோசித்துப் பார்க்கும்போது, ஏதோ பல வருடங்களாகப் பழகின ஒருத்தியைப் பார்க்கப் போறேனென்ற உணர்வு வருது”
“அவளைப் பார்த்தே ஆகணும்னு மனசுக்குள்ள ஒரு பிடிவாதம் உருவாகியிருக்கு. அவள் யாரு, எங்கே இருக்கா, உண்மையிலேயே இருக்கிறாளா… எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா ஒருமுறை முயற்சி செஞ்சு பார்க்கலாம்னு தோணுது”
“கிடைக்கிற வரைக்கும் தேடுவேன் என்று சொல்லவில்லை. குறைந்தபட்சம் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். அதற்குப் பிறகும் அவளைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றால், நானே இந்தத் தேடலை நிறுத்திக்கிறேன்” என்றான் ஆதவன்.
“நீ என்னதான் சொன்னாலும் சரி, எனக்கு மட்டும் இது கொஞ்சம்கூட சரியாகப் படலை. முகத்தைக்கூட பார்க்காத ஒரு பெண்ணை, வெறும் கனவை மட்டும் நம்பிக்கொண்டு தேடிக்கொண்டிருப்பது வீண் முயற்சிதான். உனக்கு எப்படியோ, என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!” என்று சற்றே அதிருப்தியுடன் கூறிய அருண், அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
அருண் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்த ஆதவன், பின்னர் பெருமூச்சுடன் தலையைக் கோதிக்கொண்டான்.
அவனுடைய பார்வையில் அருண் சொல்வது சரியாகத்தான் இருக்கலாம். ஆனால், தன்னுடைய மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் உணர்வுகளை அவனிடம் எப்படி எடுத்துச் சொல்வதென்றுதான் ஆதவனுக்குப் புரியவில்லை.
அவனது எண்ணங்கள் மீண்டும் அந்தப் பெண்ணைச் சுற்றியே சுழலத் தொடங்கின. இரண்டு வருடங்களுக்கு முன்பு கனவில் வந்த முகம் தெரியாதவளை நினைக்கும் ஒவ்வொரு முறையும் அவனுக்குள் ஏதோ ஒரு புதுவிதமான உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
“முத்தழகு” என்ற முகம் தெரியாத அந்தப் பெண்ணின் பின்புற தோற்றம் மட்டுமே அவனது நினைவில் பதிந்திருந்தது. அவளிடம் பேச வேண்டும், அவளது முகத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது தான். ஆனால் அருணிடம் அதை காட்டிக்கவில்லை.
அதிலும் இன்று மாலை அவன் பார்த்த அந்தத் தோற்றம்… கனவில் கண்ட அதே பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று அவனது மனம் ஆழமாக நம்பியது.
ஒரு சில நொடிகளே அவளைப் பார்க்க முடிந்திருந்தாலும், அந்தக் காட்சி அவனது மனதில் பதிந்து விட்டது.
‘அவள்தானா அது? இல்லை, என் மனம் உருவாக்கிய வெறும் பிரமையா? ஒருவேளை உண்மையிலேயே அவளாக இருந்தால்… மீண்டும் அவளைப் பார்க்க முடியுமா?’ என்றெல்லாம் தனக்குள்ளேயே பல கேள்விகளை எழுப்பிக்கொண்டான்.
அருண் சொன்னதைப் போல இது சாத்தியமற்ற தேடலாகக்கூட இருக்கலாம். ஆனால், முயற்சி செய்யாமலேயே அந்த எண்ணத்தைக் கைவிட அவனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
எத்தனையோ முகங்கள் அவனைக் கடந்து சென்றிருந்தாலும், அந்த முகம் தெரியாத பெண்ணின் உருவம் மட்டும் ஏனோ அவனுக்குள் இத்தனை ஆழமாகப் பதிந்துவிட்டது.
இன்றிரவு மீண்டும் அவள் கனவில் வருவாளா?, முகத்தை காட்டுவாளா என்ற எதிர்பார்ப்புடனேயே ஜன்னல் வழியாக இரவின் வானத்தை பார்த்தான் ஆதவன்.
“அப்பா…இன்னைக்குத் திருச்சியில பெரிய பெரிய காலேஜெல்லாம் கலந்துக்கிட்ட பிரம்மாண்டமான டான்ஸ் காம்படிஷன் நடந்துச்சுப்பா. அதுல நம்ம கடலோர மக்களின் வாழ்க்கையை வச்சு நான் ஆடுன சோலோ டான்ஸுக்கு எனக்குத் முதல் பரிசு கிடைச்சிருக்கு! எங்க காலேஜுக்கும் பெரிய கோப்பை கிடைச்சிருக்கு!” என்று மூச்சு வாங்கச் சொன்னாள்.
அதைக் கேட்டதும் சுதாகருக்கும் கலைக்கும் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை!
“எம் பொண்ணு ஜெயிச்சிட்டா சுதா!” என்று கலை ஆசையோடு கத்த, “என் கடலன்னையோட ஆசீர்வாதம் தாயி உனக்கு! நம்ம ஊரு பெருமையை, நம்ம உழைப்பை அங்க போய் கம்பீரமா காட்டிட்டு வந்திருக்க… அப்பாவுக்கு ரொம்ப பெருமையா இருக்குடா ஆத்தா!” என்று சுதாகரின் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுத்தது.
மேலும் சில நிமிடங்கள் மகளிடம் பேசி விட்டு போனை வைத்த சுதாகரும் கலையும் அந்தச் சந்தோஷத்தில் திளைத்திருக்க, சுதாகர் போனிற்கு மீண்டும் கால் வந்தது.
டிஸ்பிளேவில் ‘கதிர்’ என்று பெயர் தெரியவும், சுதாகர் உடனே போனை எடுத்து, “சொல்லுப்பா… நல்லா இருக்கியா?மருமகள் நல்லாருக்கா?” என்று நலம் விசாரித்தார்.
“நாங்க நல்லாருக்கோம். நீங்களும் அம்மாவும் எப்படி இருக்கீங்க?,அப்பா?ஒரு சந்தோஷமான செய்திப்பா… உங்க மருமகள் கர்ப்பமா இருக்கா! டாக்டர் கிட்ட போயிட்டு இப்பதான் வர்றோம். நீங்களும் அம்மாவும் தாத்தா, பாட்டி ஆயிட்டீங்கப்பா!” என்று உற்சாகத்தில் கத்தினான் கதிர்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுதாகருக்கு மெய் சிலிர்த்தது. “என்ன சொல்ற கதிர்… நிஜமாவா?” என்று ஆனந்த அதிர்ச்சியில் கேட்டவர், பக்கத்தில் நின்று கொண்டிருந்த கலையைப் பார்த்து, “கலை..நாம தாத்தா பாட்டி ஆகிட்டோமாம்டி!” என்றார்.
அதைக் கேட்டதும் கலையின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழியத் தொடங்கியது. “என் காளி ஆத்தா… என் குடும்பத்துக்கு வாரிசைக் கொடுத்து ஆசீர்வதிச்சிட்டியா!” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
குடும்பத்தின் அடுத்த தலைமுறை, முதல் பேரக்குழந்தை வரப்போகும் அந்தப் பேரானந்த செய்தியை நினைத்து இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.
மருமகளிடமும் நலம் விசாரித்து விட்டு, கவனமாக இருக்குமாறு சொல்லிக்கொண்டு போனை வைக்கும் வரை இருவரின் முகத்திலும் சிரிப்பு மாறவே இல்லை.
போனை வைத்த சுதாகர், “எல்லாம் நம்ம காளி ஆத்தா புண்ணியம் தான்டி கலை… நாளைக்குக் காலையிலேயே எழுந்து முதல்ல கோயிலுக்குப் போய் ஆத்தாவுக்கு ஒரு சூடத்தை ஏற்றி நன்றியைச் சொல்லிட்டு வந்திடணும்,” என்றார்.
“அதுக்கென்னங்க… அருமையா செஞ்சிடலாம்,” என்று புன்னகையோடு சொன்ன கலை, படுக்கையைச் சரிசெய்யத் தொடங்கினாள்.
சுதாகரின் கண்கள் குறும்போடு மனைவியை நோக்கியது. மெல்ல அவளருகே சென்று, “சரிடி… இப்போ தாத்தாவான அந்தச் சந்தோஷத்துல இந்தப் புருஷனைக் கொஞ்சம் கவனிக்கலாமே?” என்று ஆசையோடு கேட்டார்.
கலை வெட்கத்தில் முகம் சிவக்க, “யோவ்! பேரப்புள்ள எடுக்கப்போற வயசுல இன்னும் உனக்கு என்னயா கேக்குது?” என்று செல்லமாகக் கடிந்துகொண்டே, கணவனின் தோள்பட்டையில் செல்லமாக இடித்தாள்.
சுதாகர் சிரித்துக்கொண்டே மனைவியின் கைகளைப் பிடித்தவர், “வயது போயி, தாத்தாவா ஆனாலும்… நான் உனக்குப் புருஷண்டி, நீ எனக்குப் பொண்டாட்டிதானடி!” என்று சொல்லி மனைவியை அன்போடு தழுவி அணைத்துக் கொண்டார்.
கனவும் அதன் நினைவுகளும் ஒருபுறம் ஆதவனின் நெஞ்சை உலுக்கினாலும், அவன் தன் பிசினஸைச் சற்றும்கூடக் கோட்டை விடவில்லை. சிங்கப்பூர் பார்ட்னர்ஷிப், புதிய ஆர்டர்கள், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை எனத் தொழிலில் முழு தீவிரத்தோடு இறங்கி உழைத்தான்.
தன் கனவுப் பெண்ணை எப்போது சந்திக்கப் போகிறோம் என்ற தேடல் மனதின் ஒரு மூலையில் தகித்துக் கொண்டிருந்தாலும், அதைத் தன் உழைப்பிற்கு எரிபொருளாகவே மாற்றி நிறுவனத்தின் புகழை உயர்த்தினான்.
கமலியும் தன் மூன்றாம் ஆண்டு படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினாள். பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு என்பதால் இரவென்றும் பகலென்றும் பாராமல் படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
நாட்கள் தன் பாட்டில் இறக்கை கட்டிப் பறந்தன…
தேர்வுகள் அனைத்தும் முடிந்து, கல்லூரியின் கடைசி நாளும் வந்தது. மூன்றாம் ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட பெருமை ஒருபுறம் இருந்தாலும், இத்தனை வருடங்களாகத் தோழிகளோடு பகிர்ந்து கொண்ட நினைவுகளையும், ஹாஸ்டல் வாழ்க்கையையும் விட்டுப் பிரிய மனமே இல்லாமல் கமலி தவித்தாள்.
நந்தினி, ரூபஸ்ரீ, செல்வராணி என தோழிகள் அனைவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கண்ணீர் மல்கப் பிரியாவிடை பெற்றுக் கொண்டனர்.
“மூன்று பேரும் நம்ப வீட்டுக்கு கண்டிப்பாக வரணும் கண்ணுகளா என்றபடி, மகளை அழைத்துக்கொண்டு சுதாகரும் கலையும் பூம்பாறைக்குத் திரும்பினர்”
தேடல் தொடரும்…
