இருள் நிழலாய் நானே 17

இருள் நிழலாய் நானே 17

அதிகாலை ரம்மியமாகக் காட்சியளித்தது. மலை முகடு, கரும் பாறைகள், கண்ணுக்கு இதமாய் எங்கும் பச்சை வர்ணம். நாசி தீண்டும் இயற்கை வாசம். மேனி வருடும் இளம் காற்று என அந்த சூழல் மனதிற்கு விருந்தாய் இருந்தது.

“பிளசன்ட் ஃபீல் சமர்.” சீனு சோம்பல் முறித்தவாறு சொல்லிட…

“கண்ணு கிளம்புங்க” என்று வந்து நின்றார் பருத்தி.

“ஏன்?” சமர் கேள்வியாக வினவினான்.

“இங்க வேணாம் ப்பா. காட்டைத் தாண்டி வந்து விட்டுட்டு வரேன். கிளம்புங்க” என்று அவசரப் படுத்தினார்.

“எனக்கு காரணம் சொல்லுங்க” என்ற சமரிடம், “இந்த ஊர் பொல்லாதது. மர்மமா பல சம்பவம் நடக்குது. நான் சொல்றதை கேளு சாமி. புறப்படு” என்றார்.

அவரிடம் உண்மையை சொன்னால் மட்டுமே தன்னால் இங்கு தங்க முடியும் என நினைத்த சமர், தும்பையை தவிர்த்து தன் பெற்றோர் பல வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தது, இறந்தது, மகியின் நண்பர்கள், அவர்களைத் தொடர்ந்து மகி மற்றும் தினேஷ் வந்தது, தினேஷ் குற்றுயிராகக் கிடைத்தது என எல்லாம் சொல்லியவன் மகி இறந்துவிட்டாள் என்பதை சொல்லாது, தன் மனைவியை தேடி வந்திருப்பதாகவும், இங்கு வரும் போது தான் மகியின் தந்தையின் மூலமாக பருத்தி தன்னுடைய அன்னையின் தங்கை என்று அறிந்தது எனக் கூறினான்.

பருத்திக்கு நெஞ்சம் வெடித்தது.

“அந்தப்பொண்ணு உன் பொண்டாட்டியா சாமி?” என்ற பருத்தி, “அய்யோ எல்லாம் தெரிஞ்சும் நான் தான் அந்த ராத்திரி நேரத்தில் இங்கிருந்து கிளம்புங்கன்னு அனுப்பி வச்சேன். அப்போ என்னால தான் செத்துப் போயிட்டாங்களா?” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

சமர் மகியின் ஆன்மாவை ஏறிட… இல்லையென தலை அசைத்தது.

“உங்களை காரணம் காட்டிக்காதீங்க” என்ற சமர், “என்ன நடந்தாலும் நான் இங்கிருந்து போகமாட்டேன் சித்தி. எனக்கு என் மகி வேணும்” என்று உள் சென்றுவிட்டான்.

“வேணாம் கண்ணு அவனை கூட்டிட்டு போயிடு” என்று சீனுவிடம் மன்றாடினார் பருத்தி.

“அவனுக்கு மகி தான் உயிர் ஆன்ட்டி. அவளுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்காம அவன் இங்கிருந்து போகமாட்டான். வேணும்னா சமருக்கு எதுவும் ஆகக் கூடாது வேண்டிக்கோங்க” என்றான்.

“இந்த ஊர் பத்தி செய்தி எழுதுறேன்னு வந்த புள்ள… ஒரு நாள் ராத்திரி அந்த மலை பக்கம் போயி வந்ததைப் பார்த்தேன். என்னன்னு கேட்டதுக்கு, இந்த ஊருல நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க வந்தேன்னு சொல்லுச்சு. இப்படி சொல்லித்தான் என் மவளும் இல்லாமலே போயிட்டாள். அந்தப் பொண்ணுக்கும் அப்படி எதுவும் நடந்திடக் கூடாதுன்னு தான் அப்போவே இங்கிருந்து கிளம்ப வச்சேன். அது அவ உயிருக்கு உலை வைக்கும் நினைக்கலையே” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.

“சித்தி பிளீஸ். அழாதீங்க. சீக்கிரமே எல்லாம் கண்டு பிடிக்கிறேன்” என்ற சமர் அப்போதே சீனுவை அழைத்துக்கொண்டு அவ்வூரை சுற்றி வந்தான்.

மிகவும் சிறிய கிராமம். மலை அடிவாரத்தில் அழகாக பொருந்தியிருந்தது.

“இந்த சின்ன கிராமத்தில் அப்படியென்ன ஆதாயம் கிடைக்குது அவனுங்களுக்கு?” சீனு ஆச்சரியமாகக் கேட்டான்.

“இந்த மலைக்கு அந்தப்பக்கம் என்ன இருக்கு?” வழியில் சென்ற ஒருவரிடம் சமர் கேட்டான்.

“அருவி தம்பி. ஆனால் அங்க போக முடியாது. நடுவுல பல அடி உயர பள்ளத்தாக்கு இருக்கு” என்றார் அவர்.

“அப்போ இந்த மலையில் என்னடா நடக்குது?”

“போய் பார்த்தால் தான் தெரியும்” என்ற சமர், “நீ அங்கு போனது இல்லையா?” என தும்பையிடம் வினவினான்.

“இல்லை. என்னால் மகி கீழே விழுந்த இடம் வரை தான் போக முடியுது. அதுக்கு உள்ள போக முடியல. ஒருமுறை இங்க பனை மரத்துகிட்ட குதிரை மனிதனை தொடர்ந்து என்னன்னு கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். யாரோ என்னை மந்திர சக்தியால் கட்டிப் போட்டுட்டாங்க” என்றது.

“அப்போ மகிக்கு இங்க என்ன நடக்குது ஓரளவுக்கு தெரியும்ல?” என சீனு கேட்டான்.

“அவளுக்கும் எனக்குத் தெரிந்தவரை தான் தெரியும்” என்று அலட்சியமாக சொல்லியது தும்பையின் ஆன்மா.

“இல்லை… எனக்கு வேறொன்னு தெரியும். ஆனால் அது எந்தளவுக்கு உண்மைன்னு நம்புறது தெரியல” என்று அவர்களின் முன் தோன்றியது மகியின் ஆவி.

“என்னது?” சமர் கேட்டிட…

“இன்விசுபெல் மென்ஸ்!” என்றது மகி.

“வாட்… கண்ணுக்குத் தெரியாம… இதெப்படி சாத்தியம்?” என்றான் சீனு.

“மனித சக்தி எல்லாவற்றையும் மிஞ்சியது சீனுண்ணா. அதான் அறிவியலை வைத்து இயற்கையை வளைக்க பார்க்கிறாங்க” என்ற மகி, “ஓரளவுக்கு இங்கு நடப்பது எதுவும் உண்மை அல்ல. மக்களை பயம் கொள்ள செய்து, அந்த மலைக்கு செல்வதை தடுப்பதற்காக சித்தரிக்கப்பட்ட ஏமாற்று வேலைன்னு நானும் தினேஷும் கண்டு பிடிச்சிட்டோம். அடுத்து மலையில் தான் வேலைன்னு ஒரு நாள் நைட் ஊர் அமைதியானதும் அங்கு போனோம்” என்று அன்று நடந்ததை மகி விவரித்தாள்.

ஆலமரத்தில் எரியும் பிணம். கண்ணுக்கு முன் திடீரெனத் தோன்றும் மாயம். குதிரை சத்தம். அதில் தலை இல்லாமல் அமர்ந்திருக்கும் கருப்பு மனிதன். கண்கள் மட்டுமே காற்றில் அவனுக்கு மிதக்கும். செந்நிறத்தில். காக்கைகள் இரையும் பேரிரைச்சல்.

இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாது மகி மற்றும் தினேஷ் மலையின் மேல் செல்ல முன்னோக்கி அடி வைத்தனர். சில நிமிட நடைக்குப் பின்னர், கோர சிரிப்பு சத்தம். வேகமான சுழல் காற்று. பற்றி எரியும் மரங்கள் என அதற்கு மேல் செல்லாது திரும்பி வந்தனர்.

அப்போது தான் பருத்தி பார்த்துவிட்டு இருவரையும் கிளம்புமாறு அனுப்பி வைத்திட்டார்.

அவர் எதற்காக பயந்து அனுப்புகிறார் என்பது மகிக்கு புரிந்தது. அவரை இதற்கு மேல் தொந்தரவு செய்யக் கூடாது என மகி தினேஷை கூட்டிக்கொண்டு அந்த இரவு நேரத்தில் கிளம்பிவிட்டாள்.

தன்னுடைய மகள் தும்பைக்கு நேர்ந்தது போல் இவர்களுக்கும் எதும் ஆகிவிடுமோ என்று பயந்த பருத்தி இரவு நேரத்தில் அவர்களை அனுப்பி வைக்கிறோம் என்பதை கருத்தில் உணரவே இல்லை.

இருவரும் உயிருடன் இங்கிருந்து சென்றால் போதுமென நினைத்தார்.

“இங்க வந்து இத்தனை நாள் தங்கி ஒன்னும் கண்டுபிடிக்க முடியலையே தினேஷ். அட்லீஸ்ட் வர்ஷா, ராகுல் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு கூட தெரிஞ்சிக்கல” என்று மகி சொல்ல, “அப்போ மலைக்கு மேல போங்க. தகவல் கிடைக்கலாம்” என்றது அனல்.

இங்கு வந்த பின்னர் மகியின் மூலமாக தினேஷும் தும்பையின் ஆன்மாவை அறிந்திருந்தான்.

“வேண்டாம் மகி… இவள் பேச்சைக் கேட்டு போக வேண்டாம். இங்க என்ன நடக்குதுன்னு நேரில் பார்த்தும் ஒன்னும் புரியல. உயிரோடு ஊர் போய் சேர்வோம்” என்று தினேஷ் சொல்ல… தும்பை தன் சக்தியால் மகியின் மனதை கட்டுப்படுத்தி மலை பக்கம் நடக்க வைத்திருந்தது.

“மகி எங்கப்போற? இந்த ஆன்மா சொல்றதை கேட்காத” என்ற தினேஷ் வேறு வழியில்லாது மகியின் பின்னால் சென்றான்.

“கூட ஒரு பேய் இருக்கும் போது வராத பயம், இந்த மலையை நினைச்சா வருது” என்ற தினேஷ் “நீ எப்படி செத்துப்போன சொல்லு கேட்போம். நடக்குறது தெரியாது” என்றான்.

தும்பை தன் இறப்பைக் கூறியது.

அன்று தனக்கு முன்னால் சிவந்த விழிகள் காற்றில் மிதக்க, தலையில்லாது குதிரையில் ஒருவன் அமர்ந்திருக்க, பின்னால் எரியும் பிணம் நின்றிருந்தது. தலைக்கு மேல் நூறு காக்கைகளுக்கு மேல் பறந்து கொண்டிருந்தது. சட்டென்று தன்னிடம் பேசிய குரல், அதைத் தொடர்ந்து தன் மீது எதோ மோதிய உணர்வு. சட்டென்று தன் தேகம் தீப்பிடித்து தான் அலறிய அலறலில் தன் காது தீண்டிய சிரிப்பின் சத்தம். தன் துடிப்பை மனித உருவில் மிருகம் ஒன்று பார்த்து ரசிக்கிறது என்பது வரை தெரிந்து கொண்ட தும்பை, தன் உடல் எரியும் வதையை கூட தனக்குள் விழுங்கிக் கொண்டு, திடமாக நின்றிருந்தாள். எரிந்து சாம்பலாகும் நொடி வரை சிறு அசைவு என்பதும் அவளிடம் இல்லை.

‘இறந்து வந்தாவது தன் கிராமத்தை மீட்பேன்.’ அந்த நரக வேதனையிலும் அவள் கொண்ட வைராக்கியம் அவளது ஆன்மாவை மண்ணில் ஆவியாக உலவ விட்டது.

“பேய்க்கு கூட சபதமா?” என்று தினேஷ் சிரித்திட…

“வாழவே பயந்து ஒரு வாழ்க்கை நீங்க வாழ்ந்து இருக்கீங்களா? இங்கிருந்து போகவும் முடியாது… ஒவ்வொரு நொடியும் உயிர் பயத்தை உணர்ந்து இருக்கீங்களா?” என தும்பை கேட்டதில் தன் கிண்டல் புரிந்து தினேஷ் மன்னிப்பு வேண்டினான்.

“எங்க சூழல் உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லையே விடுங்க சார்” என்ற தும்பை, “இந்த மலையில் என்ன நடந்தாலும் என்னால் உதவ முடியாது மகி. இங்கு நான் வெறும் காற்று தான். என்னை யாரோ இங்கு அடக்கி வச்சிருக்காங்க. கவனம்” என தும்பை காற்றில் கலந்திருந்தாள்.

என்ன தான் தும்பை மகியை கட்டுப்படுத்தி, சமர் வைத்து மிரட்டி இங்கு அழைத்து வந்திருந்தாலும், சொன்னதைப் போன்று பல தருணங்களில் அவளுக்கு அரணாக இருந்திருந்தாள்.

குதிரை மனிதன், காகம், எரியும் பிணம் இப்படி இவர்களை சந்திக்க நேர்ந்த தருணங்களில் ஒன்றும் நிகழாது காத்தது மகியின் ஆன்மா தான்.

இனி இந்த மலையில் தன்னால் உதவிட முடியாது என மகி காற்றாய் வேடிக்கைப் பார்க்க… அதாவது மகியால் அவிழ இருக்கும் மர்ம முடுச்சுக்களை காண தயாராகியிருந்தாள்.

மகிக்கு ஒன்றும் ஆகாது என்கிற தும்பையின் திடம், மகியின் உடல் பள்ளத்தாக்கில் விழுந்த கணம் காணாமல் போனது.

சற்று நேரத்திற்கு முன்பு தாங்கள் வந்து பயந்து திரும்பி சென்ற இடம் வரை மகியும் தினேஷும் வந்திருந்தனர்.

இப்போது அந்த இடத்தில் சமரும், சீனுவும் நின்றிருந்தனர்.

“மகி சொன்ன மாதிரி எதும் வித்தியாசமா தெரியலையே சமர்.” சீனு நின்ற இடத்திலிருந்து அப்பகுதியை சுற்றி ஆராய்ந்தான்.

“நாமும் இரவில் வந்திருக்கணுமோ?”

சீனு கேட்க இல்லையென்ற சமர், உயரமான மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த சிறு பறவையை காண்பித்தான்.

“என்ன பறவை அது வித்தியாசமா இருக்கு?” சீனு கூர்ந்து கவனிக்க, சமர் வேகமாக மரத்தில் ஏறி பறவை அமர்ந்திருந்த கிளையில் உட்கார்ந்தான்.

பறவையிடம் சிறு அசைவும் இல்லை.

“என்ன பறவை பறக்கவே இல்லை.” சீனு ஆச்சரியமாக வினவினான்.

பறவையை கையில் எடுத்துக் கொண்டு, கீழிறங்கி வந்த சமர்,

“இது பறவையே இல்லைடா” என்றான்.

“என்ன சொல்ற?” என்று சீனு வாங்கி பார்த்திட… அது பார்க்க நிஜம் போலிருக்கும் பொம்மை.

தற்போது சுற்றி இருவரும் பார்வையை சுழல விட, பல மரங்களின் இலை மறைவில் இது போன்று நிறைய பறவை பொம்மைகள் இருந்தன.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top