ஆதவனின் மனதிற்குள் பெரும் தவிப்பு ஏற்பட்டது. கமிலியை பற்றி அவனுக்குத் தெரியும்; இரண்டு வருடங்களுக்கு முன் கடற்கரையில் அவளைத் தற்செயலாகப் பார்த்ததுதான். ஆனால், அவளது முகம் அவனது நினைவில் இப்போது தெளிவாக இல்லை.
அன்றைய தினத்தில் முதல் முறையாக அவளை பார்த்த போது வந்த உணர்வு அதன் பின்னர் தொழிலில் தீவிர சிந்தனையில் இருந்ததாலும், அத்துடன் பிறகு திருச்சியில் கண்ட அந்த ‘கனவுத் தேவதையின்’ பின்புற தோற்றமே அவனது மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததாலும், கமலியின் முகம் அவனுக்கு அடியோடு மறந்துபோயிருந்தது.
என்னடா எதாவதா லவ்வு கிவ்வுனு இருக்கா?, அப்படி ஒரு எண்ணம் இருந்தது நல்லாருக்காது. இந்த வீட்டுக்கு மருமவள்னா அது சுதாகர் மவ தான் இதை மனசுல வச்சிக்கனு பரமுவும் மகனிடம் உறுதியாக சொல்ல, ‘அப்பா-அம்மா இவ்வளவு ஆசையாச் சொல்றாங்க… மாமாவும் நல்லவரு. ஆனா என் மனசுல இருக்குற அந்தப் பொண்ணை விட்டுட்டு இன்னொரு பொண்ணைப் பொண்ணு பார்க்கப் போறோமே…’ என்ற தயக்கத்துடனேயே, பெற்றோரின் மனதை நோகடிக்க முடியாமல் அறை மனதோடு சம்மதித்தான்.
சரி வாங்க நாம புள்ளைகிட்ட பேசுவோம்னு கலை சொல்லவும், வா என்ற சுதாகரும் கலையும் மகளின் அறைக்குள் வந்தனர்.
கமலிக்கு எம்பிராய்டரியில் ஆர்வம் அதிகம் என்பதால் அந்த வேலையில் இருந்தவள் அப்பா அம்மா இருவரும் வந்திருப்பதை பார்த்து என்னவாம் என்றாள்.
“கண்ணு. உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை வந்திருக்குடா,” சுதாகர் அன்போடு சொல்ல, கமலியோ “என்னப்பா…?” என்று திடுக்கிட்டு அதிர்ந்துபோய் நிமிர்ந்தாள்.
கலை மகளின் தோளைத் தொட்டு, “பயப்படாதடி… ரொம்ப நல்ல சம்பந்தம். பொண்ணு கேட்டு வந்திருக்கவங்க வேற யாரும் இல்லை, நம்ம ஆதவன் தம்பியோட குடும்பம்தான்! உனக்குப் பிடிச்சிருந்தா மட்டும்தான் இந்தத் திருமணம். யாருடைய கட்டாயமும் இல்லை. உன்னைப் பொண்ணு பார்க்க வர்ற புதன்கிழமை வீட்டுக்கு வர்றதா சொல்லியிருக்காங்க,” என்று மென்மையாகச் சொல்லிவிட்டு இருவரும் வந்த வேலை முடிந்தது போல வெளியே போய் விட்டனர்.
பெற்றோர் சொல்லிவிட்டுச் சென்ற பிறகும் கமலியால் அந்தச் செய்தியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. திருமணம் என்பதை பற்றி அவள் இதுவரை யோசித்ததே இல்லை. அதுவும் ஆதவன் தான் மாப்பிள்ளையா வருவானென கனவிலும் நினைத்ததில்லை.
இரவு சாப்பிடும் போது மகள் முகத்தை பார்த்து அதிலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி விஷயத்தை காதில் போட்டாச்சு. பிடித்திருந்தால் தானே அதைப்பற்றி பேசணுமென்று அமைதியாக இருந்தனர்.
அன்று இரவு… கட்டிலில் படுத்திருந்த கமலியின் மனதிற்குள் பலவித எண்ணங்கள் அலைமோதின. திருமணத்தைப் பற்றிய யோசனைகளும், கல்லூரி நினைவுகளும் மாறி மாறி வந்து அவளது தூக்கத்தைக் கெடுத்தன.
அப்போது… மெல்லக் கண்கள் அசதியில சொருக, திடீரென அந்தப் பழைய பயங்கரம் அவளை மீண்டும் சூழ்ந்தது!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவளை உலுக்கியெடுத்த அதே அமானுஷ்யமான கனவு!
அடர் இருள் சூழ்ந்த கடற்கரை… புயல் காற்றில் சீறிப்பாயும் அலைகள்… அந்த இருளுக்குள் கம்பீரமாக, அக்னி பிழம்பாக நிழலாடும் ஒரு உருவம்!
அந்த உருவம் அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, சுற்றிலும் பூமி அதிர்வது போலிருந்தது. கமலி பயந்து பின்வாங்கி ஓட முயல, அந்த வலிமையான நீண்ட கைகள் அவளது வழியை மறித்து, “எங்கு போனாலும் உன்னை விடமாட்டேண்டி… இந்த ருத்ரன்!”
அந்த அறையே அதிரும் கம்பீரத்துடனும் அதிகாரத்துடனும் ஒலித்த அந்த வீரியமிக்கக் கர்ஜனையில், கமலி உடலெல்லாம் நடுங்க, வியர்த்து விறுவிறுக்கப் ‘பதறியடித்து’ எழுந்து உட்கார்ந்தாள்!
நெஞ்சில் கைவைத்து வேகமாக மூச்சு வாங்கியவளுக்கு உடல் பூராவும் நடுக்கம் அடங்கவில்லை. “ருத்ரன்… யாரு அந்த ருத்ரன்? ஏன் திரும்ப இந்த கனவு வந்தது?” என்று பயத்தில் அவளது கண்கள் கலங்கின.
வெகுநேரம் யோசித்தவள் ஆத்தா காளி…நீ தான் துணையா இருக்கணும் என்று வேண்டிக்கொண்டு படுத்து விட்டாள். அடுத்து வந்த நாட்களும் வேகமாக ஓட, பரமு வீட்டினர் பொண்ணு பார்க்க வரும் நாளும் வந்தது.
பரமு, சீதா, ஆனந்த் அவர் மனைவி முத்து, அருண் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் தட்டுகளில் பழங்கள், பூக்கள், இனிப்புகளுடன் சுதாகரின் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சுதாகரின் இல்லம் அழகாக அலங்கரிக்கப்பட்டுத் திருவிழா போலக் காட்சியளித்தது. சுதாகரும் கலையும் வாசலிலேயே நின்று அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்றனர்.
அப்போது, “பொண்ணை அழைச்சுட்டு வாங்கப்பா,” என்று பெரியவர்கள் சொல்ல…
அறைக்குள்ளிருந்த தோழி பவானி கமலியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
நீல நிறப் பட்டுப்புடவையில், மிதமான ஒப்பனையோடு, குனிந்த தலை நிமிராமல் தட்டில் காபி டம்ளர்களோடு மெல்ல அடிமேல் அடிவைத்து வந்து ஆதவனுக்கு முன்னால் நின்றாள் கமலி.
ஆதவனோ சாதாரணமாக நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அவளது நெற்றிக் குங்குமமும், ஒற்றைக் கல் மூக்குத்தியும், கண்ணில் பட, அந்த நொடியில், அவனுக்குள் ஒரு பெருமூச்சு கிளம்பியது.
‘கடவுளே… என் கனவில் வந்து என்னை உலுக்கும் அந்தப் பெண்ணுக்கும், இதோ என் முன்னால் இவ்வளவு சாதுவாக, அமைதியாகத் தலைகுனிந்து நிற்கும் இந்த கமலிக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லையே!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
அவனது கனவில் வந்தவள் அடங்காத அலைகளைப் போன்றவள்; ஆனால் இந்த கமலியோ சலனமே இல்லாத அமைதியான நதியைப் போல நின்றிருந்தாள்.
தான் இத்தனை நாட்களாகத் தேடிய தேவதை இவள் இல்லை என்பதை உணர்ந்த ஆதவனுக்கு, ஏமாற்றத்தால் மனதுக்குள் ஒரு வலி எழுந்தது. ‘சரி, எல்லாம் விதி… பெற்றவங்களுக்காக இந்தத் தேடலை இதோடு முடிச்சுக்க வேண்டியதுதான்’ என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு, முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்து கமலியிடமிருந்து காபியை வாங்கிக் கொண்டான்.
அதேநேரத்தில், கமலியின் நிலையும் தத்தளிப்பாகத்தான் இருந்தது.
தனது கனவில் வந்து மிரட்டிய அந்த ‘ருத்ரன்’ யார் என்ற பயம் இன்னும் அவளை விட்டு விலகவில்லை. அதனால் ஏற்பட்ட நடுக்கத்திலேயே, ஆதவனுக்குக் காபி கொடுக்கும்போது அவளது கைகள் லேசாக நடுங்கின.
பயந்துபோய் மெல்ல நிமிர்ந்து ஆதவனைப் பார்த்தாள். கம்பீரமான தோற்றத்தோடு, அமைதியாகக் காபியை வாங்கிக்கொண்ட அவனைப் பார்த்ததும் அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ‘பார்க்க நல்லவராவும், அமைதியானவராவும் தான் தெரியுறாரு…’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
இருவரும் தங்களின் கனவுகளையும் ரகசியங்களையும் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டு, ஒன்றும் அறியாதவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு அடுத்தகட்டப் பேச்சை ஆரம்பிக்கலாம்ங்க,” என்று வேலு புன்னகையோடு சொல்ல, பரமு உடனே தலை அசைத்தார்.
“ஆமா… வேலு சொல்றதுதான் சரி. எங்களுக்குப் பொண்ணை பிடிச்சிருக்கு!” என்று பரமு, பிறகு தன் அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்த மகனின் தோளைத் தொட்டு, “நீ என்னப்பா சொல்ற? பொண்ணைப் பிடிச்சிருக்கா? நாங்க எல்லாரும் பூரண சம்மதத்தோடதான் இருக்கோம்…” என்று ஆசையோடு கேட்டார்.
சீதாவும், “சொல்லு கண்ணா.. உனக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்காடா?” என்று மகனின் முகத்தையே ஏக்கமாகப் பார்த்தாள்.
ஆதவனுக்குள் இன்னும் அந்த மனப்போராட்டம் ஓடிக்கொண்டுதான் இருந்தது. கனவில் வந்து தன் உயிரை உலுக்கிய அந்தத் தேவதையும், திருச்சியில் கண்டவளும் தன் நினைவை விட்டு நீங்காவிட்டாலும்… பெற்றோர் தன்மீது வைத்திருக்கும் பாசத்தையும், சுதாகரின் குடும்பத்துக் கண்ணியத்தையும் அவனால் தட்ட முடியவில்லை.
தன் கனவுப் பெண்ணை இனிக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டவன், பெற்றோர் மற்றும் பெரியவர்களின் மகிழ்ச்சிக்காக ஒரு முடிவுக்கு வந்தான்.
அவன் மெல்ல நிமிர்ந்து, முகத்தில் எந்தக் குழப்பத்தையும் காட்டாமல், “உங்கள் விருப்பம் தான்ப்பா… நீங்க என்ன சொல்றீங்களோ அதுவே எனக்குச் சம்மதம்!” என்று அமைதியான குரலில் சொல்லிவிட்டான்.
ஆதவன் ‘சம்மதம்’ என்று சொன்ன அந்த நொடியில், அந்த வரவேற்பறையே மகிழ்ச்சியில் திளைத்தது!
சீதாவின் முகத்தில் கோடி சூரிய வெளிச்சம் பிரகாசித்தது. பரமு சிரித்துக்கொண்டே சுதாகரின் கைகளைப் பற்றிக்கொள்ள, “என் பொண்ணுக்கு ஏற்ற தங்கமான மாப்பிள்ளை அமைஞ்சுட்டாருப்பா!” என்று சுதாகரின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின.
பக்கத்திலேயே நின்றிருந்த அருண், நண்பனின் தோளைப் பிடித்து அமுக்கி, “சூப்பர்டா மச்சி…உடனே கல்யாண மேளம்தான்!” என்று காதோடு கிசுகிசுக்க, ஆதவன் மெல்லிய புன்னகையோடு அவனைப் பார்த்தான்.
கமலியின் மனதிலும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. கம்பீரமாகவும் அமைதியாகவும் இருக்கும் இந்த ஆதவன், தன் வாழ்க்கைத் துணையாக வருவது நல்லதுதான் என்று அவள் மனதுக்குள் நினைக்கத் தொடங்கினாள்.
பெரியவர்கள் அனைவரும் ஆதவனின் பதிலைக் கேட்டுச் சந்தோஷப்பட்டாலும், சுதாகர் தன் மகளின் மனதையும் அறிந்துகொள்ள விரும்பினார்.
மகளின் பக்கம் திரும்பிய சுதாகர், “ஆத்தா… தம்பி தன் சம்மதத்தைச் சொல்லிட்டாரு. உனக்கு என்னடா தோணுது? மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்காடா? உன் மனசுல ஏதாவது தயக்கம் இருந்தா தயங்காமச் சொல்லுப்பா… உனக்குப் பிடிச்சிருந்தா மட்டுமே மேற்கொண்டு பேசுவோம்,” என்று பாசத்தோடு கேட்டார்.
அதேபோல பரமுவும் சீதாவும் கூட, “ஆமாம்மா கமலி… உன்னோட சம்மதம் தான் முதல்ல முக்கியம். யோசிச்சுச் சொல்லும்மா,” என்றனர் ஒருவிதமான எதிர்பார்ப்போடு..
சுற்றிலும் இருக்கும் அனைவரின் பார்வையும் தன் மீது நிலைத்திருப்பதை உணர்ந்த கமலி, கனவில் வந்து மிரட்டும் அந்தப் பயங்கரம் ஒருபுறம் இருந்தாலும், தன் முன்னே நற்குணத்தோடு நின்றிருக்கும் இந்த ஆதவன் தன் வாழ்க்கைத் துணையாக வருவது நல்லதுதான் என்ற நிறைவு அவள் மனதை அடைந்தது.
பின்னர் மெல்லத் தன் அம்மாவின் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, பிறகுத் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்குச் சம்மதம் தான்ப்பா…” என்று மெல்லிய குரலில், வெட்கத்தோடு சொன்னாள்.
அவ்வளவுதான்!
கமலி ‘சம்மதம்’ என்று சொன்ன அந்த நொடியில், சுதாகரின் வீட்டில் சந்தோஷம் பொங்கி வழிந்தது!
“காளி ஆத்தாவுக்குக் கோடி நன்றிடா!” என்று கலை தன் மகளின் தலையை ஆசையோடு கோதிவிட, சீதா ஓடிவந்து கமலியை அன்போடு அணைத்துக்கொண்டு, அவளது நெற்றியில் முத்தமிட்டாள்.
“சுதாகர்! பொண்ணும் மாப்பிள்ளையும் சம்மதம் சொல்லிட்டாங்க. இனி நாம தயங்கவே வேண்டியதில்லை… வர்ற வாரம் சுபமுகூர்த்த நாளைப் பார்த்து நிச்சயதார்த்தத்தை வச்சுப்போமா?” என்று பரமு பேரானந்தத்துடன் கேட்க, சுதாகரும் “அப்படியே செஞ்சிடலாம் பரமு!” என்று மகிழ்ச்சியோடு சம்மதித்தார்.
அங்கிருந்த அருண் வேந்தனைப் பார்த்து கண்ணடித்துச் சிரிக்க, ஆதவனும் கமலியை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். இருவரின் விழிகளும் சந்தித்துக்கொண்ட அந்த நொடியில், ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கம் மெல்ல உருவானது!
அதே நேரத்தில், மானுடப் பரபரப்புகளுக்கு அப்பாற்பட்டு, அடர்ந்த மரங்களும் மூலிகைக் காற்றும் நிறைந்த கொல்லிமலையின் அந்தப் புனிதமான குகைக்குள் சாந்தமான சூழல் நிலவியது.
குகையின் ஆழத்தில், ஒரு புலித்தோல் மீது நிமிர்ந்த நேர்கோட்டுடன் தியானத்தில் அமர்ந்திருந்தார் அந்தச் சித்தர். உலகியல் சலனங்கள் எதுவும் தீண்டாத அந்த அமைதியான குகைக்குள், சித்தரின் முகத்தில் திடீரென லேசான புன்னகை ஒன்று அரும்பியது.
அவர் அகக்கண்ணில் எல்லாமே தெளிவாகத் தெரிந்தது…
தன் கனவில் வந்தவன் யாரென்று தெரியாமல் பயந்து தவிக்கும் கமலி, தன் கனவுத் தேவதை எங்கே என்று தெரியாமல் ஏங்கித் தவிக்கும் ஆதவன்… இருவரும் விதி வழியே ஒன்றிணையும் அந்தப் பேரதிசயம் அவரது ஞானக் கண்ணில் விரிந்தது!
தேடல் தொடரும்…
