பச்சைப் பசேல் என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையைப் போர்த்திக் கொண்ட அகன்று செழித்த காட்டில், வெள்ளி நீரோடையாக சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது தலையாறு அருவி.
இயற்கையின் மடி பரந்து அந்தக் காட்டினைத் தூளி ஆட்டிக் கொண்டு கிடந்தது.
வனவிலங்குகளும், இயற்கை அன்னை வழங்கும் எண்ணற்ற வளங்களும் நிறைந்திருந்தன அக்காட்டில்.
எங்கும் பறவைகளின் கீச்சொலி மட்டுமே ரம்மியமாக காற்றில் கலந்து நிறைந்திருக்க, குண்டுக் கற்கள் மற்றும் மரங்கள் கொண்டு கட்டப்பட்டிருந்த அந்த சிறிய ஓர் அறை கொண்ட வீட்டின் வாசலில் சுற்றுப்பட்டு நான்கு மலைக்கிராம ஆண்களும் கூடி தரையில் அமர்ந்திருந்தனர்.
வீட்டினுள்ளே அந்த மலைவாழ் பெண்களின் ஒப்பாரி கேட்டவண்ணமிருந்தது.
“ஏலப்பூ முட்டுக்காணி, சாமியவுகளுக்கு சேதி சொல்லியாச்சா?” ஒரு முதியவர் அந்த பூம்பொழில் கிராமத்தின் முட்டுக்காணி அதாவது தலைவர் போன்ற பதவி வகிக்கும் காடனிடம் கேட்க,
“ஆச்சு ஆச்சு, வந்துடுவாக. குருவா நீயும் சப்பரத்தடி கட்டுதீயளோ” என்று காடன் அந்த ஊரின் குருவனைக் கேட்டார்,
“அரை மணிக்குள்ள ஆகிடுமய்யா” என்றான் குருவன்.
இவர்களின் சம்பாஷணை நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு கருப்பு நிற ஜீப் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினான் ஆறடிக்கும் சற்று உயர்ந்த உருவத்திலிருந்த ஒருவனும், அவனின் மனைவியும்.
கூடியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று, தங்கள் துண்டைத் தோளிலிருந்து இடுப்பில் கட்டிக் கொண்டவர்கள், வரவேற்பாய் தலையை ஆட்டினார்கள்.
அனைவரையும் பார்த்து சற்றே தலையசைத்தவன், அருகே கவலை அப்பிய முகத்தோடு நின்ற தன் மனைவி மதுரயாழியைப் பார்த்து, உள்ளே போ என்று கையைக் காட்டினான். அவன் ரிஷி நந்தன்.
கொடைக்கானல் மலைகளில் வாழும் பழங்குடி இன மக்களின் கிராமங்கள் உள்ள இடம்தான் இந்தக் காடு.
தொம்பர், தொடுகர், அரணி, மற்றும் குளியான் என்ற நான்கு இனத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள் இக்காட்டிலுள்ள கிராமங்களில் இனத்திற்கொன்றாக கிராமங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
தொம்பர் இன மக்கள் வாழும் இந்த பூம்பொழில் கிராமத்தில் வாழ்ந்த ஓர் ஆணின் இழவுக்குத்தான் அனைத்து இன மக்களும் கூடி ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்.
இம்மக்களால் சாமி என்று அழைக்கப்படுகின்ற ரிஷி நந்தன் என்பவன் அம்மக்களுக்கு மிகவும் இன்றியமையாதவன். காரணம், அடிப்படை வசதிகளற்று, வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இம்மக்களுக்கு, அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து, அவர்களுக்கு தன் தேயிலைத் தோட்டம் மற்றும் தொழிற்சாலையில் வேலையும் கொடுத்து இன்று வரை அவர்களைத் தன் சொந்த மக்களாகவே காத்து வருகிறான் இந்த ரிஷி நந்தன்.
ரிஷி இல்லாது இக்கிராமங்களில் எந்த நல்லதும் சரி கெட்டதும் சரி நடந்ததாக சரித்திரமில்லை. இந்தக் காட்டோடும் இம்மக்களோடும் இரண்டறக் கலந்தவன் ரிஷி. அவனைப் போலவே அவனது மனைவியான மதுரயாழியும் இம்மக்கள் மீது அளவுகடந்த அன்பும் பரிவும் கொண்டிருந்தாள். ரிஷி இம்மக்களுக்குச் சாமி என்றால், மதுராவோ தாயி ஆகிப் போனாள்.
“ஏற்பாடு எல்லாம் முடிஞ்சுதா காடன்” என்று ரிஷி வினவ,
“ஆச்சுங்க சாமி, குருவேன் சப்பரத்தடியைக் கட்டி முடிக்க சீர் செய்ய ஆரம்பிச்சுடலாங்க” என்றார் காடன் பவ்யமாக.
நான் துஷ்டி கேட்டுட்டு வாரேன் என்று கூறிக் கொண்டு இந்தக் குறுகிய கதவு கொண்ட வீட்டில் நுழைந்த ரிஷியின் மனதில் சொல்லொண்ணா வேதனை வந்து சூழ்ந்து கொண்டது.
வீட்டின் வாசலுக்கு நேர் முன்னே இறந்து போன கும்பனை நீண்ட இலையில் வெள்ளைத் துணியை விரித்து கிடத்தி இருந்தார்கள்.
ரிஷி தன் பார்வையைச் சுழற்றித் தேட, அந்த அறையின் ஓரம் தன் ஒரு வயதுக் குழந்தையை மடியில் வைத்தபடி இறுக்கிப் போய் அமர்ந்திருந்தாள் குயிலு என்று அழைக்கப்படும் குயிலமுதி.
குயிலுக்கு அருகே அவளை ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்த மதுரா, குயிலின் ஒரு கையை எடுத்து தன் மடியில் வைத்து ஆறுதல் தரும் பொருட்டு மெதுவாக அழுத்திக் கொண்டிருந்தாள்.
பதினாறு வயது நிரம்பிய குயிலுக்கு ஒரு வயதில் குழந்தை என்பதே ரிஷிக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்க, தற்பொழுது அவள் கணவன் கும்பன் இறந்து போனது மிகுந்த வேதனை தந்தது. கணவன் இறந்த பிறகு குயிலின் நிலை என்னவாகும் என்பதை அறிந்திருந்த ரிஷிக்கு, மனம் கனத்துப் போனது.
நிச்சலமான முகத்தோடு நிமிர்ந்து ரிஷியைப் பார்த்த குயிலு அமர்ந்திருந்தபடியே கைகள் கோர்த்து கும்பிட்டாள்.
தலையை லேசாக ஆட்டிய ரிஷி, உடலைப் பார்த்து கைகூப்பியவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியில் வந்து மற்ற ஆண்களோடு அமர்ந்து கொண்டான்.
“குருவன் குருவதி வந்து ஆக வேண்டியதை செய்யுங்க” என்றார் வயது மூத்த கிழம்.
ஒவ்வொரு குலத்திற்குமான இறுதிச் சடங்குகள், ‘குருவன்’ மற்றும் ‘குருவதி’ (ஆண் மற்றும் பெண் சடங்கு நடத்துபவர்கள்) ஆகியோரின் தலைமையில் நடைபெறும். இவர்களே சடங்குகள் முழுவதையும் வழிநடத்தி வைக்கக் கூடியவர்கள். இச்சடங்குகள் முடியும் வரை இவர்கள் முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். தண்ணீர் அருந்த வேண்டியிருந்தால் கூட, அது துக்கம் நிகழ்ந்த வீட்டிலிருந்தே பெறப்பட வேண்டும். இவர்களது முதல் பணி ‘சப்பாரத்தடி’ (இறந்த உடலை வைப்பதற்காக ‘சப்பரம்’ எனப்படும் சிறிய வீடு போன்ற அமைப்பை உருவாக்கத் தேவையான மரத்துண்டுகளை வெட்டுதல்) ஆகும். புங்கமரம், முன்கா (மூங்கில்) மற்றும் புச்சரே ஆகிய மரங்கள் சப்பரம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கையோடு வாழும் இம்மக்கள், இறந்தவர்களின் வாழ்க்கை முடிந்து போவதில்லை என்னும் நம்பிக்கை கொண்டிருந்தனர். இறந்த ஆன்மா முன்னோர்களின் உலகிற்குப் பாதுகாப்பாக செல்வதாகவும், அதனால் மறுமையில் அவர்களின் நல்வாழ்வு சிறக்கவே அனைத்து இறுதிச் சடங்குகளும் செய்தார்கள். சப்பரம் தயார் ஆனதும் இறந்தவரின் உடலை அதில் வைத்து, அவரது கால்களை மடித்து, தியான நிலையில் அமர்ந்திருப்பது போல வைத்து, வலது காலின் பெருவிரலைச் சுற்றி ஒரு பிணைப்பு ஏற்படுத்தப்படுகிறது; இதற்கு ‘சம்பலம் கொத்துக்கத்து’ என்று பெயர். பிறகு குடும்ப அங்கத்தினர்களும், ஊர் மக்களும் ‘சப்பரா-கணிக்கை’ (பணக் காணிக்கை) வழங்கிய பிறகு, குருவன் ‘குரு சொல்லு’ என்று ஒரு வகை மந்திரம் ஓதி, ‘சப்பரம்’ அமைப்பதற்கான குழியைத் தோண்டத் தொடங்கினார்.
அதன் பின், குருவதி குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லி ஒப்பாரி வைக்கத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் ஒப்பாரி வைத்தனர்.
‘கோஹல்’ (புல்லாங்குழல் போன்ற கருவி), ‘தவில்’ (வட்ட வடிவிலான மேளம்), ‘போரே’ (பெரிய மேளம்) மற்றும் ‘ஜால்ரா’ (தாளக் கருவி) ஆகிய பாரம்பரிய இசைக்கருவிகளின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடினர். இது இறந்தவரின் ஆன்மாவை அமைதிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் ஒரு சடங்காகும்.
இதனையடுத்து, பல்வேறு ஆட்டம் ஆடப்பட்டு, இறுதியில் ‘வெய் கோஹல்’ என்னும் இறந்தவருக்குச் செய்யப்படும் இறுதி விடைபெறும் சடங்கு நடத்தப்பட்டது.
இறந்தவரின் மனைவிகளான வனமல்லி மற்றும் குயிலு ஆகிய இருவரும், தங்கள் தலைகளின் மீது ஒரு மண் பானையைச் சுமந்துகொண்டு, சப்பரத்தை மூன்று முறை சுற்றி வந்தார்கள். மூன்றாவது சுற்றின் முடிவில், இறந்தவரின் பாதங்களைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் மஞ்சளை அரைக்கும் கல்லின் மீது அந்தப் பானையை மோதி உடைத்தார்கள். அதன் பிறகு, அவர்களது தாலி, வளையல்கள், காதணிகள் மற்றும் கால் விரல் மோதிரம் ஆகியவை அகற்றப்படுகின்றன, பிறகு அவர்களின் தலைமுடியை வெட்டி, அதை இறந்தவரின் உடலோடு சேர்த்துக்கட்டினார்கள். இச்சடங்குகளின் மூலம் இறந்தவருக்கும் மனைவியுடனான திருமண ஒப்பந்தம் முறிக்கப்பட்டு, அந்தப் பெண் திருமணக் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டவராகக் இந்த இன மக்களிடையே கருதப்படுகிறார்.
பார்த்துக் கொண்டிருந்த மதுராவிற்கு கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டு வந்தது, அவளின் மிகப் பிரியமான சினேகியான குயிலின் நிலைகண்டு மனதில் அழுத்தம் வந்து அமர்ந்து கொண்டது. மனைவியின் அருகே நின்று அவளின் அசைவுகளைக் கவனித்த ரிஷி, அவள் கையோடு தன் கையைப் பிணைத்துக் கொண்டான் ஆறுதலாக.
இறந்த கும்பனின் மனைவிகள் இருவரும் திரும்பிப் பார்க்காது தங்கள் வீடு நோக்கிச் செல்ல மற்ற பெண்களும் உடன் சென்றனர்.
அங்கிருந்த மற்ற ஆண்கள் அனைவரும் சேர்ந்து சப்பரத்தை குழிக்குள் இறக்கி ஏனைய இறுதிக் காரியங்களை நிறைவு செய்தார்கள்.
படிப்பறிவற்ற குயிலமுதி தன் பதினாறாவது வயதில் கணவனை இழந்து, கையில் ஒரு வயதுக் குழந்தையைத் தாங்கிக் கொண்டு பஞ்சம் தலைவிரித்தாடும் தன் பிறந்த வீட்டோடு அடைக்கலம் ஆனாள்.
விதி என்னும் வீதியில் இந்தக் குயிலுக்கான வழி என்ன? முட்கள் நிறைந்த பாதையில் பாதத்தில் இரத்தச் சுவடுகளோடு பயணிப்பாளா அல்லது பூக்கள் பூக்கும் பாதையொன்று இவள் பாதம் தழுவக் காத்திருக்கிறதா?
———————————
பத்து வருடங்களுக்குப் பிறகு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பைத் தாங்கிக் கொண்டு கம்பீரமாக நின்றது.
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு வனத்துறை அமைச்சருமான ஆதித்யன் சுந்தரபாண்டியனின் கார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளே நுழைந்து நின்றது.
காரிலிருந்து ஆறடி மூன்று அங்குல உயரமும், திண்ணிய உடற்கட்டும், தீர்க்கம் நிறைந்த முகமும், தீட்சண்யம் நிறைந்த பார்வையும் கொண்ட ஆதித்யன் இறங்கிக் கொள்ள, கூடவே அவனுக்குப் பின்னால் அவனது உதவியாளன் நவநீதனும் இறங்கிக் கொண்டான்.
இவனது காரை அடுத்து மற்றும் சில கார்கள் வந்து நிற்க, சில வெள்ளை வேட்டி மனிதர்கள் அதிலிருந்து இறங்கினார்கள்.
தன் வலது கையில் போட்டிருந்த செப்புக் காப்பைத் திருகி மேலே சற்று ஏற்றிவிட்டுக் கொண்ட ஆதித்யன் வேக எட்டுக்களுடன் கட்டிடத்தின் உள்ளே செல்ல அனைவரும் கூடவே நடந்தனர்.
அந்த நீண்ட நெடிய காரிடோரில் நடந்து வந்த ஆதித்யன் ஒரு அறைக்கு முன் நின்றான். அந்த அறையின் வலது பக்கச் சுவரில் ‘குயிலமுதி ஐஏஎஸ்’ என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது இவன் பார்வை வட்டத்தில் விழுந்தது.
கண்டவன் கண்களில் ஒரு கனிவும் நேசமும் வந்து அமர்ந்து கொள்ள, மெதுவே தன் விரல்களால் அந்த எழுத்துக்களை வருடினான். ஒரு மென்னகை இவனில் தாலாட்ட, கீழுதட்டைக் கடித்து அதை அடக்கியவன் அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
கருப்பும் இளம் பிங்க் நிறமும் கலந்த சில்க் காட்டன் புடவையை மிக நேர்த்தியாக உடுத்திக் கொண்டு, வலது கையில் வாட்சும், இடது கையில் ஒரு பளிங்கு வளையலும், கழுத்தில் பழங்குடி இன மக்களுக்கே உரித்தான ஒரு வகை பாசியும் அணிந்து, படிப்பு தந்த நிமிர்வும் கம்பீரமும் சேர மாநிறத்திற்குச் சற்று மேலான நிறத்தில் இருந்த குயிலமுதி அமர்த்தலாக அமர்ந்திருந்தாள்.
உள்ளே நுழைந்த ஆதித்யனைக் கண்டுவிட்டவள், மனமும் உடலும் சிலிர்க்க மெதுவாக தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள்.
“திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு வணக்கம்” என்றான் ஆதித்யன் கம்பீரமும் அன்பும் ஒருங்கே கலந்த குரலில்.
“வணக்கம்” என்றவள் நீங்கள் மாவட்ட ஆட்சியர் என்ற இவனின் குறிப்பில் சட்டென அமர்ந்து கொண்டாள்.
ஆதித்யனோடு வந்த அனைவரும் அமர்ந்து கொள்ள, “மேடம், உங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்ததுக்கு மிக்க நன்றிங்க. இவங்க எல்லாம் எங்க ஊரு பெரியவர்கள், விவசாயம் செய்பவர்கள். பத்து வருஷத்துக்கும் மேலாக எங்க ஊரைச் சுற்றி உள்ள சுற்றுப்பட்டு கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் எல்லாவற்றிலும் குப்பையையும் கழிவுகளையும் கொட்டி நீர் ஆதாரங்களைக் கெடுத்துக் கொண்டிருக்காங்க. இதனால் குளம் குட்டையில் தண்ணீர் இல்லாமல் விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கு. கிராமப்புற நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும், ஊராட்சி அதிகாரிகள் மூலம் கழிவுகளை முறையாகப் பிரித்தெடுக்கும் நடைமுறையைச் செயல்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் நீங்கள் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்னு விவசாயிகள் எல்லாரும் வலியுறுத்தி மனுக் கொடுக்க வந்திருக்கோம்” என்றான் அமைச்சன்.
மனுவை ஒரு பெரியவர் கொடுக்க, வாங்கித் தாள்களைப் பெண் புரட்டிக் கொண்டிருக்க, அவளையே குறுகுறுத்துக் கொண்டிருந்த ஆதித்யனுக்குள், ‘ஆதி சார்.. இது எல்லாத்தையும் மாற்றணும் அப்படின்னா என்ன வேண்டும் நம்மிடம்’ என்ற ஒரு குரலும் அதற்கு “ம்ம் அதிகாரம் கையில் வேண்டும்’ என்று பதில் குரலும் நினைவில் வந்து ஆடியது. மனம் மகிழ்ந்து போக, ஒரு பெருமிதப் புன்னகையை உதடுகளில் தவழவிட்டான்.
ஆராய்ந்து முடித்த குயிலு, சில விபரங்களைக் கேட்டுக் கொண்டாள், பிறகு அதற்கு உடனே நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் என்ற உறுதிமொழியையும் வழங்கினாள்.
அரைமணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பு நிறைவடைய நன்றி சொல்லி ஆதித்யனோடு அனைவரும் வெளியே வந்து நடந்தனர்.
“ஹாங்… என் கார் கீயைவிட்டுட்டேன், நீங்க போங்க இதோ வரேன்” என்றவன் திரும்பி நடக்க
“தலைவரே.. உங்களுக்கு எதுக்குச் சிரமம். நீங்க போங்க, இந்த சில்லறை வேலையெல்லாம் நான் செய்ய மாட்டேனா?” என்று நவநீதன் சொல்ல, திரும்பி அவனை முறைத்த முறையில், ‘அடங்குடா அதிகப்பிரசங்கி’ என்ற செய்தி இருந்தது.
“ம்ம்.. சரி வாங்க நாம் போகலாம், நோ டைம் நோ குட் திங்க்ஸ் (நல்லதுக்கு காலமில்லை)” என்று நவநீதன் தன் அரைகுறை ஆங்கிலத்தில் முணுமுணுக்க
“இங்கிலிஷ் பேசினே வாயை உடைப்பேன்டா இடியட்” என்று திட்டிக் கொண்ட அமைச்சன் ஆட்சியர் அறைக்குள் நுழைந்தான்.
மறுபடியும் ஆதித்யனைக் கண்ட குயிலமுதி எழுந்து நின்றாள்.
அவள் முன்னே வந்து கைகளைத் தன் கால்சராய்க்குள் விட்டுக்கொண்டவன், “குயிலம்மா எப்படி இருக்காங்க” என்றான் குறு புன்னகையொன்றைச் சிந்தியவாறு.
அவள் கண்களில் ஒரு திடுக்கிடல் திரள அவனை ஏறிட்டவள், “மறந்துட்டீங்கன்னு நினைச்சேன்” என்றாள் மெல்லிய குரலில்.
இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லத்தான் வேண்டுமா என்று அவளையே ஆழ்ந்து பார்த்தவன், தனது டிரேட் மார்க் புன்னகை ஒன்றைப் பதிலாகத் தந்தான்.
“எப்படி இருக்கார் தி கிரேட் லிட்டில் சேம்ப்” என்றான்.
“இப்போ லிட்டில் சேம்ப் இல்ல, பெரிய மனுஷன் ஆகிட்டார்” என்று முறுவலோடு சொன்னவள்,
“உங்க மனைவி எப்படி இருக்காங்க?… உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்” என்றவளது குரலில் இருந்தது ஆர்வமா? வருத்தமா? தயக்கமா? கலக்கமா? ஏதோவொன்று ஆதித்யன் மனதில் வெண் சாமரம் கொண்டு விசிறியது.
“க்கும்.. க்கும்…” என்று செருமிக் கொண்டவன், “ம்ம்.. ரொம்ப நல்லா இருக்கா. ஒருத்தன் மட்டும் தான்” என்றான்.
“ஓஓ…. நைஸ்” என்றாள் கலங்கும் கண்களைச் சிமிட்டியவாறு.
ஆதித்யனின் பார்வைகள் இவளின் இதயத்தைத் தொட்டு அசைத்தது, “குயிலம்மாவை இப்படிப் பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நிதானித்தவன்,
“அதுவும் திண்டுக்கல் ஜில்லாவுக்கே வந்ததில் எங்களுக்கு ஏகப் பெருமை. உங்க ஊர் மக்கள்… உங்க சாமி.. சாமியோட மாமி எல்லாரும் நலமா?” என்றான் சிரிப்போடு.
அவன் கூறிய விதத்தில் சிரித்தவள், “ம்ம் எல்லாரும் நல்லா இருக்காங்க, மதுக்காட்ட சொல்றேன் நீங்க கேட்டதாக” என்றாள் கேலி இழையோட குயிலமுதி.
“ஹாஹாஹா…. வம்பில் மாட்டிவிடணும் உங்களுக்கு. சிறப்பு செய்யுங்க” என்றவன், பிறகு விடைபெறுவது போல் தலையை அசைத்துவிட்டுக் கிளம்பினான்.
ஆதித்யன் சென்ற பிறகும் அவனின் ஆளுமையும், பேச்சும் அந்த அறையில் அலையாடுவதாகவே உணர்ந்தாள் குயிலமுதி.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
