மயிலாஞ்சி
அத்தியாயம்-7

மாலை ஆனது இருவரும் வீட்டிற்கு வந்தனர். அவள் எண்ணமெல்லாம் திடீர் முத்தத்தின் நினைப்பில் இருந்தது. அதியன் அவள் பின்னால் நடந்து வந்தான் அவன் முகத்தில் ஒரு அமைதி. தேஜஸ்வினி மீது புதியதாய் ஒரு ஈர்ப்பு உருவாகி இருந்தது.
செண்பகம் கொல்லைப்புறம் தொழுவத்தில் பால் கறந்துக் கொண்டிருந்தார். தேஜஸ்வினி கிணத்தடிக்கு வந்தாள் முகம் கழுவ முகத்தில் தண்ணீரை அறைந்தாள். சில்லென்ற நீர் முகத்தில் பட்டதும், முதல் முத்தத்தினை நினைத்தவளுக்கு சிலிர்ப்பை உண்டாக்கியது. இதழைக் கடித்து சிரித்துக் கொண்டே உள்ளே ஓடி வந்தாள். எதிரில் அதியன் வந்தான் அவன் மீது மோதினாள். அவன் அவளைப் பிடித்து நிறுத்தி அவள் விழியை பார்த்தான். அவளும் அவன் விழியில் விழுந்து உறைந்து போனாள்.
அந்த காட்சியை செண்பகமும் பார்த்துவிட்டு, “ஆத்தி.. மாயக்காரி என்னெல்லாம் பண்றா..! கருமம் இதெல்லாம் பார்க்கணும்னு என் தலையெழுத்து” என்று முணுமுணுத்தபடி பால் கறந்து முடித்துவிட்டு கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்டார். கன்றுக்குட்டி தாய் பசுவின் மடியில் முட்டி பால் குடித்தது.
அதியன் அவளின் அந்த நிலையைப் பார்த்து சிரித்துவிட்டு கன்னத்தை தட்டி, “என்னாச்சு” என்றான் கண்களால், அவள் வெட்கத்தில் ஓடி வந்து மெத்தையில் அமர்ந்து கொண்டு, அவன் விழி அசைவில் அவள் விழந்ததை நினைத்துச் சிரித்தாள்.
“தேஜூ டவல் கொண்டு வரியா..!” என்றான் சத்தமாக. அவள் காதல் மயக்கத்திலும் முத்தத்தின் கிரக்கத்திலும் அமர்ந்து இருந்தவளுக்கு, அவன் குரல் கேட்கவில்லை.
அதியன் கூப்பிடுவது அவளைத் தான் என்று தெரிந்த செண்பகம், தேஜஸ்வினியைப் பார்த்தார். அவள் காரணமே இல்லாமல் சிரிப்பதைப் பார்த்து, கன்னத்தில் கை வைத்து, “என்ன பொண்ணு இவ புருஷன் கூப்பிடுறது கூட காதுல வாங்காம.. பித்துபிடிச்சவளாட்டம் உட்கார்ந்து சிரிச்சிட்டு இருக்குறா..!” என்று புலம்பினார்.
“தேஜூ..!” என மறுபடியும் அதியன் குரல் கொடுக்க, செண்பகம் தேஜஸ்வினி முதுகில் இடித்து.
“புருஷன் கூப்பிடறது கூட கேக்காம உட்கார்ந்து சிரிச்சிட்டு இருக்க போடி” என்றார் செண்பகம், தேஜஸ்வினி அதிர்ந்து எழுந்தாள்.
“தேஜூ.. டவல் கொண்டு வா..!” என அதியன் மீண்டும் குரல் கொடுக்க, தேஜஸ்வினி டவலை எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு, மீண்டும் அறைக்கு வந்தாள் தலை சீவி, நெற்றி வகுடில் பொட்டு வைத்துவிட்டு, கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். அதியன் திருமணத்தன்று பொட்டு வைத்ததை நினைத்து வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
செண்பகம் கறந்த பாலில் கொஞ்சம் வீட்டுக்கு எடுத்து வைத்துவிட்டு, மீதியை ஒரு பெரிய தூக்குப் பானையில் ஊற்றி வைத்துவிட்டு, நித்தியனை அழைத்தார்.
“டேய் நித்தி.. பால் எடுத்துட்டு போய் டிப்போவுல ஊத்திட்டு வாடா”
“காஃபி போட்டு வைமா போயிட்டு வரேன்” என்றவன், தூக்குப் பானையை எடுத்துக் கொண்டு சென்றான்.
தேஜஸ்வினி பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு சமையலறைக்குள் சென்றாள். அங்கு காஃபி போட பால் கொதித்துக் கொண்டிருந்தது. சர்க்கரையும் காஃபித்தூளையும் சேர்த்து காஃபி தாயார் செய்து வைத்தாள். அதியன் அப்போது தான் குளித்துவிட்டு இடுப்பில் டவல் கட்டிக் கொண்டு அறையில் நுழைந்தான்.
தேஜஸ்வினி காஃபியை எடுத்துக் கொண்டு அறையில் நுழைய, அதியன் நீர் முத்துக்கள் வழியும் முதுகைக் காட்டிக் கொண்டு நின்று இருந்தான். தேஜஸ்வினி காஃபி கப்பை பிடித்தபடி அப்படியே நின்றாள். அதியன் தலையை கையால் துவட்டிக் கொண்டு திரும்பினான்.. தேஜஸ்வினி தலையைக் கவிழ்த்துக் கொண்டு தரையைப் பார்த்தாள். அப்போது நீர் துளிகள் அவள் முகத்தில் பட்டு சிலிர்க்க வைத்தது.
அதியன் சிரித்தபடி அவள் கையில் இருந்த காஃபியை வாங்கிக் குடித்தான். அதியன் குளித்துவிட்டு எங்கோ கிளம்புவது போல் தெரிய, “ஜி.. வெளிய போறீங்களா” என்றாள் தேஜஸ்வினி.
“ஏன் தேஜூ.. நீயும் வர போறீயா..!” என அதியன் காஃபியைக் குடித்தபடி கேட்க, அவளுக்கு ஆசை தான் அவனோடு கை கோர்த்துக் கொண்டு செல்ல,
“அது.. வந்து… இல்ல நான் வீட்டுலயே இருக்கேன்” என்றாள்.
“சரி.. நைட்டுக்கு ஏதாவது ஸ்பெஷலா பண்றியா?” என்றான், வீட்டிற்கு வைத்த வேலைக்காரி போல, அவனும் அவளை சின்ன சின்ன வேலைகள் செய்ய சொல்கிறான். அவளும் அதைப் பற்றி கவலை இல்லாமல், பார்த்து பார்த்து எல்லா வேலையும் செய்கிறாள்.
“ம்ம் சரி..!” என்றவள் வேகமாக சமையலறைக்குள் நுழைந்தாள். கோதுமை மாவு தேடி எடுத்தாள், சமைப்பதற்கு முன் மாவை பிசைந்து வைத்தாள்.
“ம்மா.. நான் வெளிய போறேன் ஏதாவது வேணுமா?” என்று கேட்டவனை முறைத்துவிட்டு,
“எதுவும் வேணா.. உன் பொண்டாட்டி கிட்ட போய் கேளு.. அவ தானே இங்க ராஜ்ஜியம் பண்றா!” என்று சலித்துக் கொண்டார்.
“ஏன்மா.. தேஜூ உங்களுக்கு எவ்வளவு வேலைய குறைச்சு இருக்கா.. அதுக்கும் இப்படியா பேசுவீங்க! அவ உங்களுக்கு உதவியா இருக்கால்ல அதை நினைச்சு சந்தோஷப்படுங்க!” என்றான் அதியன்.
“ம்க்கும்.. சரி வரும் போது மூட்டுவலிக்கு தைலம் வாங்கிட்டு வாடா..!” என்றார்.
“சரிம்மா… தேஜூ போயிட்டு வர்றேன்” என அவள் மொழியில் சொல்ல.
“அதி அவ கிட்ட ஒழுங்கா தமிழ் பேச கத்துக்க சொல்லு.. நீங்க ரெண்டு பேரும் மட்டும் புரியாத பாஷையில பேசிக்கிட்டா எனக்கு என்ன தெரியும்.”என்க
“சொல்றேன் மா” என்றவன், “அவ தமிழ் பேசுனா மட்டும்.. மாமியார் மருமக ராசி ஆகிடுற மாதிரி தான்.” என்று புலம்பிக் கொண்டு போனான்.
செண்பகம் போறவனையும், சமையல் அறையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த தேஜஸ்வினியைப் பார்த்து,
‘இவனுக்கு எப்படி தான் இவள கட்டிக்க மனசு வந்துச்சோ..!’ என நினைத்தபடி சமையலறைக்குள் நுழைந்தார். அங்கு ஏற்கனவே தேஜூ சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு,
‘சப்பாத்தி செய்யிறாள..! வெளங்குன மாதிரி தான். இந்த வீட்டு பெருசுங்க ரெண்டும் சாப்பிடாதே எப்படி இவ கிட்ட சொல்ல! எனக்குன்னு வந்து சேரந்து இருக்கு..!’ என மனதில் புலம்பியபடி,
“ஏய் இந்தாடி.. என்னவோ பேர் சொன்னானே..! தேஜவா! தேஜூவா? நாய்குட்டி பேரு மாதிரி இருக்கு. வாயில நுழைய மாட்டுதே..!” என்று முணுமுணுத்தபடி அவள் அருகில் நின்று இருந்தார் செண்பகம். தேஜஸ்வினி சின்ன சிரிப்போடு வேலையை செய்து கொண்டிருந்தாள்.
“என்னம்மா மணக்குது என்ன சமையல்!” என்றபடி ஆர்த்தி குழந்தையோடு வந்தாள். அவள் குரல் கேட்டு செண்பகம் வெளியே வந்தார்.
“நீ… என்ன இந்த நேரத்துல புள்ளைய தூக்கிட்டு வந்திருக்க” என்றார் செண்பகம்.
“மாமா வேலையா ஒரு வாரம் வெளிய தங்குறாரு.. அதான் நான் இங்க வந்தேன்” என்றாள் ஆர்த்தி,
“சரி.. சரி போ போய் உன் தம்பி பொண்டாட்டி, என்னமோ சமைக்கிறேன்னு உருட்டிக்கிட்டு இருக்கா..! போய் என்னனு பாரு” என்க,
“அதெல்லாம் தேஜூ.. நல்லா சமைப்பா ம்மா மதியம் கூட அவ தானே சமைச்சா” என ஆர்த்தியும் விட்டுகொடுக்காமல் சொல்ல,
“அதுக்குன்னு.. ராவுக்கு.. சப்பாத்திய உருட்டிக்கிட்டு இருக்கா.. உன் தாத்தாவும் பாட்டியும் சாப்பிடுவாங்களா?.” என்றார் செண்பகம்.
“அதுக்கு என்ன இப்போ… ஒரு மாவு பாக்கெட் வாங்கி வந்து இட்லி ஊத்தி கொடுத்தா போச்சி.” என்க, பரமசிவம் தாத்தா சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
“என்ன ஆர்த்தி கூடத்துல நின்னு ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. அப்படி என்ன முக்கியமான விஷயமா!” எனக் கேட்டார்.
“இல்ல தாத்தா..! தேஜூ சப்பாத்தி செய்யிறாளாம்.. உங்களுக்கு வேற சமைக்க சொல்லவா!” என ஆர்த்தி கேட்க,
“எதுக்கு ரெண்டு வேலையா செஞ்சுக்கிட்டு.. சப்பாத்தியே சாப்பிட்டுக்குறேன்.” எனத் தாத்தா சொல்ல,
“பாத்தியாடி.. நான் உங்கப்பன கட்டிக்கிட்டு வந்ததுல இருந்து.. இப்ப வரைக்கும்.. ஒத்த ஆளா.. இந்த வீட்டுக்கு மாடா உழைச்சு.. ஓடா தேயிறேன். பேரன் பொண்டாட்டி கை வலிக்க கூடாதுன்னு எவ்வளவு அக்கறையா பேசுது பாருடி.” என ஆர்த்தியிடம் காதில் சொல்ல,
“சரி.. விடுமா உனக்கு வேலை மிச்சம் தானே” என்றாள் ஆர்த்தி.
“என்னடி.. ஆள் ஆளுக்கு எனக்கு வேலை மிச்சம்.. வேலை மிச்சம்னு.. சொல்லிட்டு இருக்கீங்க. நான் என்ன கூனு விழுந்தா கெடக்குறேன்.” என்று செண்பகம் சொல்ல,
“உனக்கு சும்மா உட்கார முடியலனா. இவ கூட ஓடி புடிச்சு விளையாடிட்டு இரு,” என ஆர்த்தி குழந்தையை செண்பகத்திடம் கொடுக்க,
“ஐய்யோ என்னால முடியாது நானே மூட்டு வலியோட இருக்கேன்.. போ போய் எதையாவது பண்ணி வைங்க” என்றவர், காலைப் பிடித்துக்கொண்டு, போய் படுத்துக் கொண்டார்.
திண்ணையில் அமர்ந்திருந்த பூங்கோதை பாட்டியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு ஆர்த்தி, தேஜஸ்வினிக்கு உதவி செய்யப் போனாள். தேஜஸ்வினி பாதி வேலை முடித்திருந்தாள். ஒரு பக்கம் சாதமும் ரசம் பருப்பு மசித்து வைத்திருந்தாள்.
“பார்ரா.. சாப்பாடும் செஞ்சிட்டாயா” என்றவளை, ஏக்கமாகப் பார்த்தாள் தேஜஸ்வினி.
“திதி..!”
“என்னமா..?”
“எனக்கு தமில்… பேச கத்து தரீங்களா?” என கொஞ்சம் அவளுக்கு புரியும்படி சைகையில் கேட்டாள்.
“கண்டிப்பா கத்து தரேன்.” என அவள் கன்னம் கிள்ளி சொன்னாள் ஆர்த்தி.
“எம்மா காஃபி..!”என நித்தியன் பால் எடுத்துச் பாத்திரத்தை தூக்கிப் போட்டு, விளையாடிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான். தேஜஸ்வினி சுடச்சுட சப்பாத்தி போட்டு எடுத்துக் கொண்டிருந்தாள். நீண்ட நாள் கழித்து சப்பாத்தியைப் பார்த்தவன் ஆர்வத்துடன் எடுத்துவிட்டான்.
“சுடுது.. சுடுது.. சுடுது..!” என்று கையில் பிடிக்க முடியாமல் பந்தாடிக் கொண்டிருந்தான். அவன் செயலைப் பார்த்து ஆர்த்தியும், தேஜஸ்வினியும் சிரித்தனர்.
நித்தியன் கையில் இருந்த சப்பாத்தியை, தேஜஸ்வினி வாங்கி ஒரு தட்டில் வைத்து குருமாவுடன் பரிமாறி கொடுத்தாள். நித்தியன் ரசித்து ருசித்து சாப்பிட்டான். தேஜஸ்வினி சூடாக செய்து கொடுக்கவும் கணக்கில்லாமல் சாப்பிட்டான்.
“அப்பாடா.. இன்னைக்கு தான் வயிறு நிரம்ப சாப்பிடேன்” என்றவன் வயிற்றை தடவிக்கொண்டு ஏப்பம் விட்டான்.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணி..!” என்றவன் கையில் பாயசமும் கொடுத்தாள்.
“அட பார்ரா இது என்ன..!” என்றவன் கரண்டியில் எடுத்து சாப்பிட்டு ருசித்தான்.
“பருப்பு பாயசம்… அள்ளுதே..! ஏய் அக்கா இத உன் கல்யாணத்தப்போ சாப்பிட்டேன் மறுபடியும் இப்போ தான் சாப்பிடுறேன்.”
“பாத்துடா.. ரொம்ப திண்ணு உடம்பு போட்டுட போற. அப்புறம் உனக்கு பொண்ணு கிடைக்காம போயிட போகுது!” என்றாள் ஆர்த்தி.
“அதெல்லாம்.. நிலத்துல இறங்கி அண்ட கழிச்ச உடம்பு குறைஞ்சிடும்.. அண்ணி இனி நீங்களே சமையல் பண்ணுங்க..” என்றவன் பாயசத்தை ருசித்து சாப்பிட்டபடி வெளியே வர செண்பகம் முறைத்தார்.
“ம்ம்ம்.. அட..அட..!” என்று வேண்டுமென்றே தன் அம்மாவையே வெறுப்பேற்றுவது போல் சொல்ல,
“முதுகு ஊறுதாடா கழுத.. சீவக்கட்டை எடுத்தேன்னா.. வெளுத்துபுடுவேன் போடா” என செண்பகம் மிரட்ட, அவன் பல் இளித்துக் காட்டிவிட்டு, மொட்டை மாடியில் சென்று சுவரின் மீது அமர்ந்துக் கொண்டு, பாயாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துக் குடித்தான்.
தேஜஸ்வினி பருப்பு சாதம் கலந்து ஆர்த்தியிடம் கொடுத்து, குழந்தைக்கு ஊட்டும்படி சைகையில் சொன்னாள். ஆர்த்தியும் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டாள்.
வெளியே சென்ற அதியன். கையில் ஒரு சிறிய பையுடன் வந்தான். அவன் அம்மா கேட்ட மூட்டுவலி தைலத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, அவன் அறைக்குச் சென்றான். கணவன் வந்ததை பார்த்ததும் தேஜஸ்வினி அறைக்கு ஓடினாள். அதியன் வாங்கி வந்த பையை பத்திரப்படுத்திவிட்டு, சட்டையை அவிழ்த்தான். அவள் தலையை குனிந்துக் கொண்டாள். பனியன் வேட்டியுடன் கிணத்தடிக்கு சென்று முகத்தை கழுவி விட்டு திரும்பினான். அவள் கையில் டவலுடன் நின்றாள்.
அதியன் லேசாகச் சிரித்துவிட்டு, டவலை வாங்கி முகத்தை துடைத்துக் கொண்டு, அவளிடமே டவலைக் கொடுத்துவிட்டு வந்தான். அவளும் பின்னாலேயே வந்தாள். அவளின் கவனிப்பும் அவன் மீது கொண்டிருக்கும் அக்கறையும் காதலும், அவனைப் பார்த்த நாளில் இருந்தே நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டிருந்தது அவளுக்கு.
“இந்தாடி… ஏய் ஆர்த்தி… வெளிய போனவனே திரும்பி வீட்டுக்கு வந்துட்டான்.. இன்னும் சமைச்சு முடியல?” என செண்பகம் கத்தினார்.
“முடிஞ்சிடுச்சி ம்மா.. வாங்க..” என்றாள் ஆர்த்தி.
யார் யாருக்கு எது வேண்டுமென்று கேட்டு கேட்டு ஆர்த்தியும் தேஜஸ்வினியும் பரிமாறினார்கள். உணவு ருசியாக இருந்தாலும் பாட்டிக்கும், செண்பகத்துக்கும் வெறுப்பாக இருந்தது. அது தேஜஸ்வினி மீது இருக்கும் வெறுப்பு. அவளிடம் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. ஒரே நாளில் அவள் அவ்வளவு வேலையும் செய்து, பொறுப்பும் அவள் கையில் எடுத்துக் கொண்டாள். என்பது அவர்களுக்கு ஆச்சர்யமும் பொறாமையுமாக இருந்தது.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், அவரவர்கள் படுக்கைக்குச் சென்றனர்.
அதியன் அவன் வாங்கி வந்த பையை எடுத்து, அதில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான். “இது உனக்கு தான்” என்க, தேஜஸ்வினி அந்த பெட்டியைப் பார்த்து மகிழ்ச்சியுடன்,
“ரொம்ப நன்றி ஜி.. காலையில உங்க தம்பிய தொந்தரவு பண்ணிட்டேன்னு மனசு கஷ்டமா இருந்துச்சு. அம்மா கிட்ட!” என்றவள் வார்த்தை அப்படியே நின்றது.
‘இனி உனக்கு பிறந்தவீடுன்னு ஒண்ணு இல்ல.. இனி எந்தகாலத்திலும் என் வீட்டு வாசலை மிதிக்காதே.. நீ என் பொண்ணே இல்ல..’ என அவள் அம்மா கூறியது நினைவில் வந்தது. அவள் கண்கள் கலங்கியது.
“என்னாச்சு தேஜூ..? ஏன் அழுறே”
“ஒண்ணும் இல்ல”
“சரி.. இனி உனக்கு எது வேணும்னாலும் என் கிட்ட கேளு சரியா” என்றான். தேஜஸ்வினி அந்த ஃபோனை பிரித்துப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதியன் ஃபோனை அவள் விரல் பிடித்து உயிர்ப்பித்தான். அவன் பெயரைப் பதிவு செய்து அவளிடம் கொடுத்தான்.
“இது என்னோட நம்பர்.. நான் இன்னும் ரெண்டு நாள்ல டியூட்டில ஜாயின் பண்ணிடுவேன். நீ எனக்கு மெசேஜ் இல்ல கால் பண்ணு சரியா” என்றான்.
“சரிங்க ஜி..”
“சரி தூங்கலாமா..!” என அதியன் சொல்ல,
திருமணம் ஆகி முழுதாக ஒரு வாரம் கடந்து இருந்தது. அவளுக்கு அதியனை பிடித்து இருந்தாலும், அவன் எதிர்பாராத சூழ்நிலையில் தானே தாலி கட்டினான். அதுவும் இல்லாது இன்று அந்த எதிர்பாராத முத்தத்தினை கூட அவன் எந்த உணர்வும் காட்டவில்லை என்பதால் அவளுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதை கேட்க அத்தனை தயக்கம் காட்டினாள்.
“ஜி… நான்.. உங்க..கிட்ட ஒண்ணு..” என திக்கி திணறினாள்.
“என்ன ஏதாவது கேக்கணுமா?”
“ஆமா.. ஆனா அதை எப்படி கேக்குறது”
“ஏன்? இந்த வாய் எதுக்கு இருக்கு கேளு..!” என அவள் தாடையைப் பிடித்து சொல்ல,
“என்னை உங்களுக்கு பிடிக்குமா?” என அவள் கேட்ட கேள்விக்கு, அவளை ஒரு பார்வை பார்த்தான். அதில் அவள் சப்தநாடியும் பயத்தில் இருந்தது.
“இப்போ இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணுமா!”
“இல்…ல..!” என வார்த்தையை இழுத்தாள்.
“சரி தூங்கு ரொம்ப டயர்டா இருப்ப!” என்று கூறிவிட்டு அவன் படுத்துக் கொண்டான். பதில் கிடைக்காத ஏமாற்றத்தில் தேஜஸ்வினி கவலையோடு விழித்துக் கொண்டிருந்தாள். இருவரும் முதுகை காட்டி படுத்துக் கொண்டானர்.
இப்படியே நாட்கள் எப்போதும் போல நகர்ந்து கொண்டிருந்தது. அதியனும் காவல்துறை பணியில் சேர்ந்து அவனது பணியைத் தொடர்ந்தான். தேஜஸ்வினிக்கு இப்போது கொஞ்சம் தமிழ் பேச கற்றுக் கொண்டாள். செண்பகம் திட்டினாலும் அவர்களை அனுசரித்து பொறுமையுடனும் அக்கறையுடனும் வீட்டு வேலைகளைச் செய்து, செண்பகம் பாட்டியின் மனதிலும் இடம் பிடித்திருந்தாள்.
வெண்மையான நிறத்தில் ஒரு கருப்பு புள்ளி விழுந்தது போல.. ரத்னா தன் ஆட்டத்தை ஆரம்பிக்க நினைத்து, நித்தியன் வயலுக்கு வந்தால் அவனுக்கு சாப்பாடு கொண்டு வருவதும், வீட்டிற்கு வந்து அவனுடன் பேசுவதும், நித்தியனுக்கு சந்தேகம் எழுந்தது.
“ரத்னா நீ நடந்துக்குறது புதுசா இருக்கு..!”
“ஏன் நித்தி நம்ம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது” என்று கேட்டுவிட்டாள். சுற்றிலும் பார்த்தான் யாரும் இல்லை,
“உடம்புக்கு ஏதும் பிரச்சனையா ரத்னா ஹாஸ்பிடல் போலாமா!” என நித்தியன் கேட்க, அவன் கேள்வி புரிந்து,
“ஏன் என்னை உனக்கு பிடிக்கலையா..?” என ரத்னா கேட்க,
“பிடிக்கும்டி ஆனா நீ..!”
“என்ன உன் அண்ணனுக்கு பயப்படுறியா?”
“ஆமா… அவன் சம்மதிச்சா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்”
“அப்போ மாமா சம்மதிச்சா என்னை கல்யாணம் பண்ணிப்ப அப்படி தானே..!” என அவள் ஒரு விதமாய் சொல்ல, அவனும் ஒரு விதமாய் தலையை ஆட்டிவைக்க, அவள் நேராக பரமசிவம் தாத்தாவிடம் சென்றாள்.
மயிலாஞ்சி தொடரும் ✍️
