“ஏன்டா இதெல்லாம் ஒரு தொந்தரவா?” என்றபடி திரும்பி தனது அத்தையை பார்த்தவன், “ஏன் சீதா! வீட்டுக்கு ஒரு மருமகன் வந்திருக்கேனே… ஒரு வாய் டீ தண்ணி கொடுக்கணும்னு உன் புருஷனுக்கு சொல்லி வளர்க்கிறது இல்லையா? இந்த ஆளு ஒரு மனுஷன்னு உன்ன போய் அந்த காலத்துல என் தாத்தா கட்டி வச்சிருக்காரே… அவரைச் சொல்லணும்!” என்றான் அருண்.
இதைப் கேட்டதும் கடுப்பான பரமு, “எலே மானங்கெட்ட பயலே! வந்தியா… உன் அத்தைகாரி கிட்ட பேசுறியான்னு இருக்கணும்! எதுக்குடா என்ன நடுவில் இழுத்து குறுக்குசால் ஓட்டுற?” என்று எகிறினார்.
அருண் அசராமல், “இங்க பாரு சீதா… நான் உன்கிட்ட தான் பேசுறேன், அந்த மீசைகிட்ட எல்லாம் பேசல!” என்றான் கெத்தாக.
“என்னது… மீசையா?” என்று பரமு முறைக்க…
‘ஐயயோ! மனசுக்குள்ள நினைக்கிறதை வெளியில உளறிட்டேனோ?’ என்று பதறிய அருண், நிலைமையைச் சமாளிக்க உடனே ரூட்டை மாற்றினான்.
“அது… அது ஒன்னும் இல்ல மாமா! கட்டபொம்மன் போல அடர்த்தியா கம்பீரமா மீசை வச்சிருக்கீங்களே… அதான்! உங்களைப் பார்த்த பிறகுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் படமே எடுத்திருப்பாங்க போல!” என்று ஐஸ் வைத்தான்.
பரமுவுக்குத் தன் மீசையைப் பற்றி யார் பெருமையாகப் பேசினாலும் சந்தோஷம் தாங்காது; அப்படி ஒரு பெருமை!
மாமனின் அந்தப் பலவீனத்தை அருண் மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்தான். இத்தனை காலமாக அந்த மீசைப் புகழ்ச்சியை வைத்தே பரமுவிடம் மாட்டிக்கொள்ளாமல் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறான்!
அது இப்போதும் சரியாக வேலை செய்ய, அருணின் அந்தத் திடீர் ஐஸ் மழையைக் கேட்டதும், பரமுவின் கோபம் பனி போல விலகி, மீசையை முறுக்கியபடி பெருமிதப் புன்னகை பூத்தார்.
“இதோ உக்காருயா… டீ எடுத்துட்டு வர்றேன்,” என்று சீதா சமையலறைக்குள் போக, ஆதவனும் அருணும் அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்துகொண்டனர்.
பரமு தன் மீசையைத் தடவியபடியே, “ஏய்யா… கடல் சீற்றம் இப்பதான் குறைஞ்சிருக்கு. நாலு நாளா மீன் லோடு வேற அனுப்ப முடியல…” என்று தொழிலைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தார்.
அதற்கு அருண், “ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா. மழை இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு வராதுன்னு வானிலை அறிக்கையில சொல்லிருக்காங்க… சரக்கை தாராளமா அனுப்பிவிடலாம்,” என்று தொழில்ரீதியாகப் பேசினான்.
“சரி சரி… அந்த கண்ணனுக்குப் பணம் அனுப்பணுமே?” என்று பரமு கேட்க, “அங்க பணம் அனுப்பிட்டேன் மாமா,” என்றான் அருண் கச்சிதமாக.
“ம்ம்ம்…” என்று தலையாட்டிய பரமு, வழக்கம் போல் தனது மைத்துனன் மகனின் சுறுசுறுப்பையும் பொறுப்பையும் மனதிற்குள் மெச்சிக் கொண்டார். ஆனால், அதை எப்போதும் போல வெளியே காட்டிக் கொள்ளாமல், “சரி, நான் போயி சமைக்கிறதுக்கு ஏதாச்சும் கறி எடுத்துட்டு வர்றேன்,” என்று கிளம்பினார்.
பின்னாடியே வந்த அருண், “நல்லா தொடை எலும்பா பார்த்து எடுத்துட்டு வா மாமா!” என்று கத்தினான்.
“எடுத்துட்டு வர்றேன்டா… எடுத்துட்டு வர்றேன்,” என்று பல்லைக் கடித்தபடி வெளியே போன பரமுவுக்கு அருணின் குறும்புத்தனத்தை நினைத்து சிரிப்புதான் வந்தது.
அவர் போனதும், அருண் ஆதவனின் பக்கம் திரும்பி, “டேய்… என்னமோ சொல்லணும் சொல்லணும்னு காதலி கிட்ட ரகசியமா பேசுற மாதிரி என் உயிரை வாங்கித் தொலைஞ்சியே… சொல்லுடா, என்ன விஷயம்?” என்று கேட்டான்.
அதைக்கேட்ட ஆதவன், “ஆமாடா… ஒரு முக்கியமான விஷயம் பேசணும்,” என்றான் அழுத்தமான குரலில்.
“செருப்பு பிஞ்சுரும் சொல்லிட்டேன்! மூணு மாசமா இதையே சொல்லி என் உயிரை வாங்கித் தொலையுற… போன்ல சொல்ல முடியாது, நேர்லதான் சொல்வேன்னு சொல்லிக்கிட்டே இருக்க. ஏன்டா, நீயும் நானும் என்ன லவ்வர்ஸா, நேர்ல காதலைச் சொல்றதுக்கு?” என்று அருண் கடுப்பாகக் கேட்க…
“டேய், அது இல்லடா… இது வேற விஷயம்,” என்றான் ஆதவன்.
அத்தை மகனை குறும்பாக பார்த்த அருண், “ஏன்டா எந்தப் புள்ளை கூடயாவது பெங்களூரில் குடும்பம் பண்ணிட்டு இருக்கியா?” என்று கண்ணடித்தான்.
“என்னடா சொன்ன?” என்று ஆதவன் தன் மாமன் மகனை முறைத்தான்.
ஆதவன் முறைப்பதைப் பார்த்த அருண், “அதானே… நீ அதுக்குமே சரிப்பட்டு வரமாட்ட! அப்போ வேற என்ன விஷயமா இருக்கும்?” என்று தன் நெற்றியில் தட்டி தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான்.
“வேணாம்டா… எனக்கு கடுப்பைக் கிளப்பாத! முதல்ல டீயைக் குடிச்சிட்டு வா, நாம கடற்கரை வரைக்கும் போயிட்டு வரலாம்,” என்றான் ஆதவன்.
சற்று நேரத்தில் சீதா இரண்டு டம்ளரில் ஆவி பறக்கும் டீயைக் கொண்டு வந்து மகனுக்கும் மருமகனுக்கும் கொடுத்தார். இருவரும் அதை வாங்கிக் குடித்தனர்.
“அப்பாடா… உன் கையால டீ குடிச்சாதான் அன்னைக்கு பொழுதே நல்லா இருக்கும் சீதா!” என்றான் அருண் அத்தையைக் கொஞ்சியபடி.
பின்னர் தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்தவன், “இந்தா… இத அம்மா கொடுத்துச்சு. அந்த சாவித்திரி அத்தை வீட்டுல மீன் வாங்கியிருந்தாங்கள்ல, அந்தப் பணம்,” என்று நீட்ட, சீதாவும் “சரிப்பா,” என்று வாங்கிக் கொண்டார்.
பூம்பாறையின் சில்லென்ற காலை வேளையில், கமலினி குளித்துவிட்டுத் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
மகள் வருவதைப் பார்த்த கலை, ஆவி பறக்கும் சூடான இட்லிகளையும், அதற்குத் தொட்டுக் கொள்ளக் காரசாரமான மிளகாய் சட்னியையும் தட்டில் எடுத்து வைத்தார். அந்த மணமே அவளது பசியைத் தூண்ட, ரசித்து ருசித்துச் சாப்பிடத் தொடங்கினாள்.
சாப்பிட்டுக்கொண்டே, “இன்னும் ரெண்டு வாரம் வரைக்கும் தான்மா இப்படி விதவிதமா, ருசியா சாப்பிட முடியும். அதுக்கப்புறம் ஹாஸ்டல் சாப்பாட்டைச் சாப்பிட்டு என் நாக்கே செத்துப்போயிடும்!” என்று செல்லமாகக் குறைப்பட்டுக் கொண்டாள்.
மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார் கலை. ஆனால், மனதிற்குள் மகளை அவ்வளவு தூரம் பிரித்து வைப்பது நினைத்து அவருக்குப் பெரிய கவலையாகத்தான் இருந்தது.
இருந்தாலும், “பொம்பளப் பிள்ளைக்கு வெளிப்புற உலக அனுபவம் ரொம்ப முக்கியம்டி” என்ற சுதாகரின் வார்த்தையை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால் தான், மகளை திருச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வைப்பதற்கு மனதிற்குள் கஷ்டப்பட்டுச் சம்மதித்திருந்தார்.
“அதுக்கென்னடி. நீ லீவுக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் உனக்குப் பிடிச்சதை விதவிதமா சமைச்சு வைக்கிறேன். நல்லா வயிறு முட்டச் சாப்பிடு,” என்று தாய்மையின் அன்போடு கலை ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கலையின் போனிற்கு கால் வந்தது.
போனை எடுத்துப் பார்க்க, ‘கதிர்’ என்று பெயர் மின்னியது.
கலையின் மூத்த மகன் கதிர் வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்று மூன்று வருடங்கள் ஆகின்றன. மகனின் அழைப்பைக் கண்டதும் சந்தோஷத்தோடே அட்டென் பண்ணினார்.
பின்னர் தாயும் மகனும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். சரிமா, “கமலியோட காலேஜ் விஷயம் எல்லாம் என்ன ஆச்சு? அட்மிஷன் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று அக்கறையோடு விசாரித்தான்.
இந்தானு மகளிடம் நீட்ட, போனை வாங்கிய கமலினி அண்ணா என்க…நல்லாருக்கியா என்றவனிடம் ரொம்ப சூப்பர் என்றவள், “அட்மிஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சுண்ணா…ஹாஸ்டலும் காலேஜ் உள்ள தான் இருக்கிறது”
“பொண்ணுங்களை வெளியேவே விட மாட்டாங்களாம், ஹாஸ்டலுக்குள்ளயே தான் இருக்கணுமாம்! அங்க இருக்குற வாட்ச்மேன் கூட அந்தப் பெரிய கேட்டுக்குள்ள தான் உட்கார்ந்திருப்பாரு போல! என்ன ஏதோ ஜெயில்ல அடைச்சு வைக்கிற மாதிரி பிளான் பண்ணி பிடிச்சு போடுறீங்க போங்கண்ணா!” என்று அண்ணனிடம் தன் பாணியில் பொய்க்கோபத்துடன் புலம்பினாள்.
தங்கையின் புலம்பலைக் கேட்டு மறுமுனையில் கதிர் சத்தமாக சிரிக்க, வீட்டில் இருந்த கலைக்கும் சிரிப்பு தொற்றிக்கொண்டது.
அண்ணாஆஆ என்று கமலினி இழுக்க, தங்கையின் சலிப்பைக் கேட்ட கதிர் சிரித்துக்கொண்டே, “நல்லதுதான்டா! குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக்கிட்டு இருந்தா எப்படி? வெளி இடத்துக்குப் போனாதான் நாலு பேரோட பழக்கம் கிடைக்கும், உலகத்தைப் பத்தித் தெரிஞ்சுக்க முடியும்”
“என்னையே பாரு… நான் மட்டும் அங்கேயே இருந்திருந்தா எனக்கு இவ்வளவு விஷயங்கள் தெரியவந்திருக்குமா, சொல்லு?” என்று அண்ணனுக்கே உரிய கம்பீரத்தோடு கேட்டான்.
அதற்கு கமலி தன் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, “அதுக்குன்னு… நீ படிச்சு முடிச்சுட்டுத்தானே போனே? என்னை பாரு, ஸ்கூல் முடிச்ச உடனே ஊரை விட்டே துரத்தி விடுறாங்க!” என்று செல்லமாகச் சிணுங்கினாள்.
“ஹஹ்ஹா… இதெல்லாம் வாழ்க்கையில ஒரு நல்ல அனுபவம்தான்டா,” என்றவன், உடனே குரலைத் தாழ்த்தி, “சரி அதை விடு… உன் பிறந்தநாளுக்காக அண்ணன் ஒரு சூப்பர் ‘சர்ப்ரைஸ் கிஃப்ட்’ அனுப்பி வச்சிருக்கேன்,” என்றான் உற்சாகமாக.
அவ்வளவுதான்! கமலியின் முகத்தில் இருந்த சோகம் எல்லாம் பறந்தோடிப் போக, கண்கள் அகல விரிய, “அப்படியாண்ணா! நான் கேட்டதெல்லாம் வாங்கி அனுப்பி இருக்கியா?” என்று ஆவலுடன் கேட்டாள்.
“ஏண்டி… நீ கேட்டதை எல்லாம் பார்த்து பார்த்து வாங்கிக் கொடுக்கிறதுக்குப் பேரு எந்த ஊர்ல சர்ப்ரைஸ் கிஃப்ட்?” என்று கதிர் தங்கையைக் கலாய்த்தான்.
“போடா அண்ணே! உனக்கு இருக்கிறது ஒரே ஒரு செல்லத் தங்கச்சி நான் மட்டும்தான், ஞாபகம் இருக்கட்டும்!” என்று கெத்தாகச் சொன்னவள், “நாளைக்கு உனக்குக் கல்யாணம் நடக்கும்போது உன் பொண்டாட்டி கழுத்துல மூணாவது முடிச்சை நான்தான் போடணும்! நான் மட்டும் முடிச்சுப் போடலனா கல்யாணமே செல்லாது பாத்துக்கோ… என்னை மட்டும் பகைச்சுக்காதே!” என்று மிரட்டும் தொனியில் உரிமையோடு உரக்கச் சொன்னாள்.
தங்கையின் இந்த அதட்டலைக் கேட்டு கதிரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “சரிங்க மேடம்… சரிங்க மேடம்! உங்க தயவு எனக்கு எப்போதும் வேணும்,” என்று சிரித்துக்கொண்டே சரணடைந்தான்.
அதன்பின், போனை அம்மாவிடம் கொடுக்கச் சொல்லி, கலையிடம் சிறிது நேரம் பேசினான். அவனது அப்பா சுதாகர் கடலுக்குச் சென்றிருப்பது தெரிந்து, அவரது நலம் விசாரித்துவிட்டு, பிறகு நேரம் கிடைக்கும் போது கால் பண்ணுறேன் என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.
அண்ணனுடன் பேசியதில் கமலியின் மனம் லேசாகி, புது உற்சாகத்துடன் தன் பிறந்தநாள் பரிசுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
கடலுக்குள் தூரச் சென்று கொண்டிருந்த படகின் இரைச்சலுக்கு இடையே, சுதாகர் தன் நண்பர்களைப் பார்த்து, “எப்பா… பசி வயித்தைக் கிள்ளுது, காலையிலேயே சோத்த ஆக்கிரலாமா?” என்றார்.
“சரிடா மாப்பிள்ளை, நீங்க வேலையைப் பாருங்க. இன்ஜின் கிட்ட நான் நிக்கிறேன்!” என்று வேலு படகின் தலைப்பகுதியைப் பார்த்து நகர்ந்து கொள்ள, சுதாகரும் மற்ற மூன்று நண்பர்களும் சமையல் வேலையில் இறங்கினர். ஆளுக்கு ஒரு வேலையாக அரிசி களைவது, காய்கறி நறுக்குவது என ஒத்தாசை செய்ய, கடலின் ஆட்டத்திற்கு இடையே சமையல் விறுவிறுப்பாகத் தயாரானது.
கடல் காற்றில் கமழ்ந்த உணவின் வாசனை அனைவரையும் சுண்டி இழுக்க, சமைத்த உணவை ஐவரும் ஒன்றாக அமர்ந்து கலகலப்பாகப் பேசிச் சாப்பிட்டு முடித்தனர்.
சாப்பிட்டு முடித்ததும், அடுத்து வலையை வீச வேண்டிய சரியான தருணத்திற்காகக் காத்துக்கொண்டே படகை மேலும் ஆழ்கடலை நோக்கி முன்னோக்கிச் செலுத்தினார்கள். அடுத்த சில நிமிடங்களில் மீன்கள் அதிகம் கிடைக்கும் அந்தச் சரியான எல்லைக் பகுதி வந்தடைந்தது.
உடனே வேலு படகின் வேகத்தைக் குறைக்க, சுதாகரும் மற்ற மூவரும் படகில் தயாராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான வலையை எடுத்து, சுழன்றடிக்கும் அலைகளுக்கு நடுவே ஒரே மூச்சாகக் கடலுக்குள் வீசி எறிந்தனர்.
அதிகாலையில் வலையை இழுக்கும் வரைக்கும் ஐவருக்கும் பெரிய வேலை எதுவும் இல்லை என்பதால், அதுவரை அவர்களுக்கு ஓய்வு நேரம்தான்.
படகை ‘ஆட்டோமேட்டிக்’ முறையில் போட்டுவிட்டு, அங்கே அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடை போன்ற பரப்பில் ஐவரும் சாய்ந்து படுத்துக்கொண்டனர்.
தேடல் தொடரும்…
