அத்தியாயம் : 11
அன்று நந்தனாவுக்குப் பிறந்தநாள். காலை நேரம் கல்லூரிக்குச் சென்றவள், மாலையில் வீட்டுக்கு வந்ததும், அவளை அழைத்துச் செல்லப் பரிதிவர்மன் வந்திருந்தான். அதேபோல சந்திரகுமாரும் அவளுக்குப் புத்தாடை வாங்கிக்கொண்டு, கேக்குடன் அவளது வரவை எதிர்பார்த்து வீட்டில் இருந்தான். அவளை வீட்டை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று சித்தி கூற, “நேரம் ஆகுது வா நந்தனா! அப்பா வெயிட் பண்ணுவாங்க” என்றான் பரிதிவர்மன்.
“வர முடியாதுன்னு சொல்லு! எங்களையும் மீறிப் போனால் இன்னைக்கு உன்னைத் தொலைச்சிடுவேன்” என்று சித்தி எச்சரிக்க, அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பரிதிவர்மனை ஏமாற்றவும் மனம் வரவில்லை; வீட்டில் உள்ளவர்களின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்கவும் முடியவில்லை. அதனால், தன்னால் இப்போது வர முடியாது என்று அவள் சொல்ல, அவளது பதிலைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் நகைத்தனர். பரிதிவர்மனுக்கோ, தான் வீடு தேடி வந்து அழைத்தும், இவர்கள் பேச்சைக் கேட்டு வர மறுக்கிறாளே என்று கோபம் தலைதூக்கியது!
“இப்ப வரப்போறியா இல்லையா?”
“எனக்கு இந்த நேரம் வெளியே போகக் கூடாது. ப்ளீஸ், வரல; விட்டுடுங்க!”
“என்ன, வர முடியாதா? ஏன், உடம்புக்கு முடியலையா?”
“ம்ம்… ஆமாம்.”
“அப்போ ஏன் மாமா எதுவும் என்கிட்ட சொல்லல? நீ பொய் சொல்றியா?” என்றவன், மறுவார்த்தை பேச அவகாசம் தருமுன் அவளைத் தூக்கி பைக்கில் அமரவைத்து அழைத்துச் சென்றிருந்தான். வீட்டில் உள்ளவர்கள் என்ன நடந்தது என்று உணரும் முன்பு, அவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர். சந்திரகுமார் போகும் அவனை உறுத்து விழிக்க, நீலாம்பரி அவனைத் திட்டித் தீர்த்தாள். பண்ணை வீட்டு முன்பகுதியில் வந்தவன், அவளை இறக்கிவிட்டுத் தன்னுடைய பைக்கைக் கொண்டு போய் நிறுத்திவிட்டு வந்தான்.
உள்ளேயோ சதாசிவமும் தாணுலிங்கமும் இவளது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இவள் தயங்கித் தயங்கி அங்கு செல்ல, “உங்க மருமகளுக்குப் பெரிய ஆளாயிட்டோம்னு நினைப்பு! வீடு தேடிப் போய் கூப்பிட்டும் வர மாட்டேன்னு சொல்லிட்டா” என்றான் பரிதிவர்மன் தன் அப்பாவிடம்.
அவர் புரியாமல் பார்க்க, இவன் நடந்தவற்றைக் கூறினான். அவரது கண்கள் அவளைப் பார்த்தன. “யார் என்ன சொன்னாலும் நான் கூப்பிட்டதும் வரணுமா இல்லையா? இனிமேல் எப்போதாவது இதுபோல் நடந்தா, பிறகு நான் பேச மாட்டேன்” என்றான் வீம்புடன்.
சதாசிவம் மகளை அழைத்து என்ன நடந்தது என்று விசாரிக்க, அவளும் தேம்பியபடி நடந்ததைச் சொன்னாள். அவரோ, “திருந்தாத ஜென்மங்கள் எத்தனை சொன்னாலும் கேட்காது. வீட்டுக்குப் போயிட்டு நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாம இரு!” என்று மகளை சமாதானப்படுத்தினார்.
அங்கு மருமகளைப் பார்த்துக் கொண்டிருந்த தாணுலிங்கத்தின் மனதில் ஏதோ சரியில்லாததுபோல் ஒரு இறுக்கம் சூழ்ந்தது; அதை வாய்திறந்து சொல்ல முடியாமல் தவித்தார்.
அங்கிருந்த ஒரு கவரை எடுத்து நந்தனாவின் கையில் கொடுத்த பரிதிவர்மன், “உள் அறையில் போய் இதை மாத்திட்டு வா” என்க, அவளும் தயங்கியபடி உள்ளே சென்றுவிட்டுப் பத்து நிமிடங்களுக்குப் பின்னர் வெளியே வந்தாள்.
மூவரும் கண்ணிமைக்காமல் பார்த்திருக்க, தாணுலிங்கத்தின் கண்களில் நீர் கசிந்தது. அத்தனை நாளாகச் சிறு பெண்ணாகத் தெரிந்த நந்தனா, இன்று பட்டுப்புடவையும் நகையும் அணிந்து பெரிய பெண்ணாகக் காட்சியளித்தாள். பரிதிவர்மன் பார்த்த பார்வையில் அவள் தலை நிமிர முடியாமல் நின்றாள். அவளது அப்பாவுக்கோ, தன் மகளா இது என்று அளவு கடந்த ஆச்சரியம்!
“மாமாகிட்ட போய் ஆசீர்வாதம் வாங்குமா!”
அவள் அதுபோலவே செய்ய, “உங்க அப்பாகிட்டயும் வாங்கிக்கோ” என்றார் அவர்.
நந்தனா அப்பாவிடம் ஆசி பெற்றுவிட்டுப் பின்னர் அத்தான் அருகில் சென்றும் வணங்கினாள். தோள் தொட்டுத் தூக்கிவிட்டவனின் கண்களுக்குள், இத்தனை வருடங்களாகச் சின்னப் பெண்ணாகத் தெரிந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக மறைவது தெரிந்தது. அவன் அருகில் இருக்கும்போது அவனது தோளுக்குள்ளேயே அடங்கிவிடுவது போலிருந்தாள் நந்தனா.
மகனின் பார்வையும் மருமகளின் வெட்கத்தையும் கண்ட தாணுலிங்கம், சதாசிவத்தைப் பார்த்துக் குறும்பாகப் புன்னகைக்க, அவரும் அதே புன்னகையை பதிலாகத் திருப்பிக் கொடுத்தார். பண்ணை வீடு பலூன்களாலும் வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேஜை மீதிருந்த அழகான கேக், நந்தனாவின் வரவுக்காகக் காத்திருந்தது.
அவளது விரலைப் பற்றிப் பரிதிவர்மன் அழைத்துச் செல்ல, மூவருக்கும் முன்பாக கேக் வெட்டி அவர்களுக்கு ஊட்டினாள் நந்தனா.
அவர்களும் அவளுக்கு ஊட்டிவிட்டுச் சற்று நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் சூடாக வாங்கி வைத்திருந்த பிரியாணியை எடுத்து உண்டனர். எட்டு மணி வரை அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“கடல் நண்டு இன்னைக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்குது; சமைச்சுச் சாப்பிடலாம் போல ஆசையாவும் வருதே!” என்று கிண்டலாகப் பரிதிவர்மன் சொல்ல, அவள் முறைத்து அழகு காட்டினாள்.
பின்னர் அவளிடம் வழக்கம் போல அவன் வாயடிக்கத் தொடங்க, நேரம் சென்றுகொண்டிருந்தது. தான் புடவையையும் நகைகளையும் கழற்றிவிட்டுச் சுடிதாரில் வீட்டுக்கு வருவதாகச் சொன்னாள் நந்தனா.
உடனே அவன், “ஏன், இதில் போனால் உன்னை யார் என்ன செய்துடப் போறாங்க?” என்று அவளிடம் கேட்டுப் பின்னர் “அப்பா! இவ இன்னும் ஒரு தடவை இப்படிச் செய்தா, அதுக்கப்புறம் இவளை நம்ம எங்கேயும் விடக் கூடாது; நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம்” என்றான் பரிதிவர்மன்.
“வயசுப் பெண்ணைச் சும்மா கூட்டிட்டுப் போக முடியாது” என்று தாணுலிங்கம் சொல்ல, “அப்போ ஒரு தடியான கயிற்றை எடுத்து வந்து இவ கழுத்துல கட்டி இழுத்துட்டுப் போனால், யாராலும் எதுவும் சொல்ல முடியாது இல்ல!” என்ற அவனது பதிலைக் கேட்டுப் பக்கெனச் சிரித்துவிட்டார் தாணுலிங்கம். சதாசிவமும் சிரித்துவிட, “இல்லை, நான் இந்த அத்தானைக் கட்டிக்கிட்டு வரமாட்டேன்” என்றாள் நந்தனா.
“ஏன், ஏன்? எனக்கு என்ன குறைச்சல்?” என அவன் எகிறிக்கொண்டு வர, “இப்படித்தான் சதா நேரமும் என்னை மிரட்டிக்கிட்டே இருக்குது” என்றாள் அவள் மனம் முழுவதும் அவனையே வைத்துக்கொண்டு.
“ஓஹோ, அப்படியா? அப்ப வேணாம் போ! நான் ரக்ஷனாவையே கட்டிக்கிறேன். அவள் நான் என்ன சொன்னாலும் கேட்பா, கூப்பிட்டதும் ஓடி வருவா… உன்னை மாதிரி எதுக்கும் அடம் பிடிக்க மாட்டா…” என்று விளையாட்டாகச் சொன்னதும், அவளது முகம் சுணங்கிப்போனது.
அவனது அப்பா எழுந்து வந்து மகனைக் கண்டித்தார். இந்தப் பேச்சு அவருக்கு நல்லதாகப் படவில்லை. அவன் சும்மா தமாசுக்குப் பேசியதாகச் சொன்னாலும், தாணுலிங்கத்தின் மனம் அதை ஏற்க மறுத்தது. நெஞ்சைப் பிசைந்துகொண்டு வந்தது; பின்னாளில் எதுவும் தவறாக நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் அவர் மனதில் அழுத்த தொடங்கியது.
அப்பாவின் கோபத்தையும் அமைதியையும் பார்த்த பரிதிவர்மன், தான் உச்சரித்த வார்த்தையின் வீரியத்தைப் புரிந்து கொண்டு மன்னிப்புக் கேட்டான். “எப்பவும் பேசுவதற்கு முன்பு ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துப் பேசணும். சும்மா விளையாட்டாப் பேசுவது கூட நாளைக்கு நிஜமாகலாம்” என்றார் தாணுலிங்கம்.
“இல்லைப்பா, நந்து என்னைக் கட்டிக்க மாட்டேன்னு சொன்ன வீம்புல அப்படிச் சொல்லிட்டேன். இனிமேல் கவனமா இருக்கேன். என்னாலும் தினமும் நந்துகிட்ட பேசாம, பார்க்காம இருக்க முடியாதுப்பா; ஒருவேளை நேரில் அவளைப் பார்க்க முடியாவிட்டாலும் ஃபோன்லயாவது பேசத்தான் செய்றேன்” என்று அவரைச் சமாதானப்படுத்த முயன்றான்.
“நான் சொல்ல வருவதை முதலில் புரிஞ்சுக்கோ பரிதி! அவள் சின்னப் பெண். விளையாட்டாகவோ; புரிதல் இல்லாமலோ; ஏதோ ஒரு கோபத்தில் கூட பேசலாம். ஆனால் அவளை விட பெரியவனாகிய நீதான் பொறுப்புடன் நடந்துக்கணும்” என்று சொன்னதும், அவன் “சரிங்க அப்பா! இனிமேல் இதுபோல தவறு நடக்காது. இந்த ஒரு முறையும் மன்னிச்சிடுங்க” என்றான்.
சதாசிவத்தால் எதுவும் சொல்ல முடியாமல் போக, தன்னால் தானே மாமா, அத்தானை இப்படி பேசும் விதமாகி விட்டது என்று நந்தனாவுக்கு சங்கடமாக போனது. நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு, “நாங்க கிளம்பட்டுமா மாமா? காலையில் காலேஜுக்குப் போறதுக்கு படிக்கணும்” என்றாள்.
அவர் மனமே இல்லாமல் தலையசைக்க, “சாரி மாமா! ஏதோ வழக்கமாப் பேசுற ஞாபகத்தில் பேசிட்டேன். அது உங்க மனசைக் காயப்படுத்தியிருந்தா மன்னிச்சிடுங்க. என் வாழ்க்கை எப்பவும் உங்க கையில்தான் மாமா; நீங்க யாரைப் பார்த்துக் கல்யாணம் செய்துக்கச் சொன்னாலும் நான் செய்துக்கிறேன். எனக்குன்னு தனிப்பட்டு எந்த ஆசையும் இல்லை” என்று அவள் கூறிய அந்தப் பதில், இறந்துபோன கலையரசியை அவரது கண்முன் நிறுத்தியது.
மனம் கலங்க, அவளது உச்சியில் கைவைத்தவர், “நல்லா படி! உன் படிப்பு முடிந்ததும் ஆண்டவனா பார்த்து நல்லதை நடத்தித் தருவார். நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்க எல்லாரும் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும்; அப்பதான் என் ஆத்மா சாந்தியடையும்” என்றவருக்கு ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை.
அன்று தங்கை பேசிய வார்த்தைகளும், அதன் பிறகு நடந்த சம்பவங்களும் அவர் மனதை உலுக்கின. வனிதா அக்காவின் தலைவிதியை மாற்றி எழுதினாள்; இப்போது ரக்ஷனாவும் வனிதாவும் சேர்ந்து நந்தனாவின் தலைவிதியை மாற்றிவிடக் கூடாது என்று அவரது உள்மனம் எச்சரித்தது.
அவளை விட்டுக் கண்களை அகற்றாமல் இருந்தவர், நேரமாவதை உணர்ந்து சதாசிவத்துடன் அனுப்பிவைத்தார். அவள் ஒரு புன்னகையை அவருக்குப் பதிலாகத் தந்துவிட்டுப் பரிதிவர்மனைப் பார்த்தாள்.
அவனது அசையாத விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அவளைக் கட்டிப்போட்டது. இரண்டு கன்னத்திலும் வலது கையால் தட்டிக் கொண்டு, காதைப் பற்றி மேலும் கீழுமாக எழுந்து அவள் தோப்புக்கரணம் போட, அவன் புன்னகையுடன் வந்து அவளது கையைப் பற்றி விலக்கி விட்டான். “சாரி அத்தான். என்னை தப்பா எடுத்துக்க வேணாம்” என்றாள் நந்தனா.
“உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? சந்தோஷமா போயிட்டு வா!”
அவள் மாமாவிடம் விடைபெற்று அப்பாவுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், தனது அறைக்குள் நுழைந்து புடவையை மாற்றினாள். பட்டுப்புடவை, தலையில் பூ, கழுத்தில் பெரிய சங்கிலி, நெக்லஸ், கையில் வளையல்களுடன் வருபவளைக் கண்ட நீலாம்பரிக்கு ஆத்திரம் பொங்கியது.
அவர்கள் கூப்பிட்டவுடன் இவரே அனுப்பி வைத்துவிடுவார் என்று கணவனைத் திட்டினாள். சதாசிவமோ, “அவள் அவர்களுக்குச் சொந்தமானவள்; இப்ப மட்டுமில்ல எப்ப கூப்பிட்டாலும் அனுப்பி வைக்கத் தயங்க மாட்டேன். நீ யாரைக் கேட்டு என் பிள்ளையை விட மாட்டேன்னு சொன்ன?” என்று சண்டைக்குச் சென்றார்.
“அவளைக் கட்டிக்கப் போறவன் புதிய துணிமணி, கேக், பரிசு எல்லாம் வாங்கிட்டு ஆசையோட வந்திருந்தான். பிறகு எப்படி கண்டவங்க வந்து கூப்பிட்டதும் அனுப்பி வைக்க முடியும்?” என்று அவள் எகிற, ஓங்கி ஒரு அறை விட்டார் சதாசிவம்.
“கண்ட நாயும் என் மகளை உரிமை கொண்டாடி வர, அவள் ஒண்ணும் யாரும் இல்லாம போயிடல… அவள் பரிதியைத்தான் கல்யாணம் செய்துப்பா; இனிமேல் அவனோட என் மகளை சேர்த்து வச்சுப் பேசினா பல்லை உடைச்சுடுவேன்!” என்று எச்சரித்தார்.
“சந்திரன், இவள் பள்ளிக்கூடத்துக்குப் போற நாளிலிருந்து பின்னாடியே சுத்துறான். இங்கு வரும் போதெல்லாம் அவளுக்குத் தேவையானதை வாங்கப் பணம் தர்றான்; எப்ப காலேஜுக்குப் போக ஆரம்பிச்சாளோ, அப்ப இருந்து ஃபீஸ் கட்டுவதற்கும் செலவுக்கும் தேவையான அத்தனையும் செய்துட்டு இருக்கான். நீங்க இப்ப அவனுக்குக் கல்யாணம் செய்து தர மாட்டேன்னு சொன்னா, அவள் உடம்பில் ஓடுவதும் தின்பதும் படிப்பதும் அவனது சம்பாத்தியத்தில் உள்ளது தானே!” என்றதும் சதாசிவம் முதலில் அதிர்ந்து விழித்தார்.
பின்னர், நந்தனா பிறந்த முதல் இத்தனை வருடங்களாக அவளுக்குத் தேவையான அத்தனையும் செய்வது தாணுலிங்கமும் அவரது மகனும்! இருந்தும், தனக்கு ஒன்றும் இல்லை என்று வீட்டில் பொய் சொல்லிப் பணம் வாங்குகிறாள் போலிருக்கிறது. அதை வைத்துக் கொண்டு மகளையும் பிணைய கைதியாக மாற்ற முயல்கிறாளோ! என்று நினைத்தவர், ஆத்திரம் தாளாமல் அடித்துப் பயங்கரமாகச் சண்டையிட்டார். அதில் நீலாம்பரியின் தலை சுவரில் மோதி, இரத்தம் எல்லாம் வந்துவிட்டது.
நந்தனாவுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இங்கு என்ன நடக்கிறது, இனி என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் உள்ளம் துடித்தது. ஒரு சாதாரணப் பேச்சைத் தாங்க முடியாமல் மாமா உள்ளம் வெம்பியதும், பரிதிவர்மன் தந்த பதிலும் அவளுக்குள் எதையோ உடைய செய்திருந்தது.
அவளும் சதாசிவமும் நிம்மதி இழந்து தவிக்க, வீட்டுக்கு வந்த நேரம் முதல் தாணுலிங்கமும் அதேபோலத்தான் உணர்ந்தார். இதை ஒரு சாதாரணமான பேச்சாகக் கடந்து வர அவரால் முடியவில்லை. சில நேரம் அப்படிப் பேசும் வார்த்தைகளுக்குப் பலம் உண்டு. மகனின் வாழ்க்கையில் நந்தனா மட்டும்தான் வரவேண்டும். மீண்டும் ஒருமுறை கலையரசிக்கு நிகழ்ந்தது, தன் மகனுக்கும் வந்துவிடக்கூடாது! இதே நினைவில் மூழ்கியிருந்தவருக்கு இரவு படுத்தும் உறக்கம் வர மறுத்தது.
அப்பாவும் மகனும் வெளியே சென்று வந்ததில் இருந்து பேசாமல் முகத்தை இறக்கி வைத்திருந்த நாகேஸ்வரி, தான் சொல்லச் சொல்லக் கேட்காமல் பிடிவாதமாக நடந்து கொள்கிறார்களோ! என்று கோபத்தில் இருந்தாள்.
கணவருடன் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தவள், அவர் கேட்டதற்கு மட்டும் சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு உறங்கிவிட்டாள். ஆனால், நள்ளிரவு தாண்டியும் உறக்கம் இல்லாமல் இருந்த தாணுலிங்கத்தின் கண்ணுக்குள் ஏதோ தப்பான சொப்பனம் வந்து மிரட்டியது. முகமெல்லாம் வேர்த்து உடம்பெல்லாம் அதிர்ந்தது; நந்தனாவை எப்படிக் காப்பாற்றுவது என்ற பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்தவர், தன் மகனை அழைத்து மனதில் இருப்பதைத் தெரிவிக்க நினைக்க, அவரால் அசையக்கூட முடியவில்லை.
இந்த வீட்டில் தனக்கு ஏதாவது நேர்ந்தால் நந்தனாவை மருமகளாகப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று அந்த நேரத்திலும் பதறியவர், அருகில் இருந்த மனைவியை அழைக்க முயன்றும் நாவை அசைக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் நெஞ்சுப் பகுதிக்குள் வந்த வலி பயங்கரமாக மாறி தாக்கியது. கண்கள் நிலை குத்திப் போக, அவரது உயிரும் உடலை விட்டுப் பிரிந்து சென்றது.
வழக்கமாக எழும் நேரத்திற்கு நாகேஸ்வரி எழுந்து சென்றுவிட, அவர் இறந்துபோய் உடல் சில்லிட்டுக் கிடப்பது கூட அவளுக்குத் தெரியவில்லை. பரிதிவர்மனும் காலை நேரம் எழுந்து தயாராகி வந்ததும், அப்பாவைக் காணாததால் அம்மாவிடம் கேட்டான். அவரோ மகனிடம் பேசாமல் சென்றுவிட, அவன் அதைப் பெரிதுபடுத்தாமல் அப்பாவைக் காண மேலே வந்தான். அப்போதுதான் அவர் தங்களை விட்டுப் பிரிந்து சென்றிருப்பது அவனுக்கும் தெரிந்தது.
“அப்பா!!” என்று அவன் போட்ட அலறல் சத்தம், வீட்டில் உள்ள அத்தனை பேரையும் மாடிக்கு ஓடி வர வைத்தது. நாகேஸ்வரியும் அப்போதுதான் விபரீதத்தைப் புரிந்து கொண்டு என்னவோ ஏதோ என்று பதறியடித்து ஓடி வந்தாள். நேற்றிரவு அவளிடம் எவ்வளவோ பேச வேண்டும் என்று அவர் நினைத்திருக்க, அவள் நந்தனாவின் பிறந்தநாளுக்கு வாங்கிச் சென்ற சாதனங்கள் மற்றும் மகனும் கணவரும் தன்னைக் கண்டு கொள்ளாமல் சென்ற கோபத்தில் பேச மறுத்துவிட்டாள். இன்றைக்கு, இனிமேல் பேச வேண்டும் என்று நினைத்தாலும், இந்த ஜென்மத்தில் நடக்க போவதில்லை. கணவர் தன்னை விட்டுப் போய்விட்டதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல், மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க, சதாசிவத்திற்கு முதலில் தகவல் தெரிவித்த பரிதிவர்மன் பின்னர், அமெரிக்காவில் இருக்கும் தாய்மாமனுக்கும் தகவல் கூறினான்.
உடனே அவரும் புறப்பட்டு வந்து விடுவதாக சொல்ல, விஷயம் அறிந்த சதாசிவம் கதறி அழுதார்; மகளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டார். நந்தனாவாலும் மாமா போய்விட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாமாவை உடனே போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், எப்படி அந்த வீட்டிற்குப் போவது என்று தயங்கினாள்.
ஊர்க்காரர்களும் உறவினர்களும் வந்து அவரது உடலுக்கு மரியாதை செய்து விட்டுச் சென்றனர். வீட்டின் முன்பகுதியில் நின்று மாமாவின் உடலைப் பார்த்து விம்மி அழுதுகொண்டிருந்தாள் நந்தனா. பரிதிவர்மனோ அழுது சிவந்து வீங்கிய முகத்துடன் காணப்பட்டான். சதாசிவத்தைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டவன், “நந்து! அப்பா நம்மளை விட்டுப் போயிட்டாங்க” என்று கதறினான்.
ஒருவரின் பிறப்பை எழுதும்போது ஆண்டவன் அவர்களின் இறப்பையும் சேர்த்துத்தான் எழுதிவிடுகிறான்; ஆனால், அதைத்தான் நம்மால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. வெளிநாட்டில் இருந்து வேல்முருகன் வருவதற்காகக் காத்திருந்தனர்.
வேல்முருகன் தான் மட்டும் இப்போது சென்று வருவதாக கூறியும் கேட்காமல் வனிதாவும் வந்துவிட, மகள் ரக்ஷனா அவர்களின் நண்பரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டாள். அவர்கள் வந்த சற்று நேரத்தில் பண்ணை வீட்டுக்கு தாணுலிங்கத்தின் உடல் எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. பரிதிவர்மன் மாமாவை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தான். நந்தனா அப்பாவின் அருகில் நின்று அழுது கொண்டிருந்தாள்.
காரியங்கள் யாவும் முடிந்ததும் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். பரிதிவர்மன் வெண்ணிற வேட்டி துண்டில் மழிக்கப்பட்ட தலையுடன் வீட்டுக்கு வந்தான். அவன் அம்மா அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள். உறவினர்கள் சென்ற பின்னர் நெருங்கிய பழக்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். வேல்முருகன், பரிதிவர்மனை ஆறுதல்படுத்தி விட்டு தங்கையிடம் பேசியவாறு இருந்தார். உள்ளூர் அயலூரில் உள்ள நபர்கள் வந்து தாணுமாலின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து விட்டு சென்றனர். மோட்ச விளக்கு முடிந்த மறுநாள் அமெரிக்காவிற்குச் செல்ல மனமில்லாமல் வேல்முருகன் இருக்க, வனிதா அவர்களுடன் சில நாள் இருந்து விட்டு வருவதாகக் கூறினாள்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? வயசு பெண்ணைத் தனியா விட்டுட்டு வந்திருப்பது ஞாபகம் இருக்கட்டும். கிளம்பு!” என்று அதட்டினார்.
அவளும் விருப்பமில்லாமல் எழுந்து கொண்டு, “ரக்ஷனாவுக்கும் ஊருக்கு வர ரொம்ப ஆசை! ஆனால் படிப்பு, பரிட்சை நிறைய இருப்பதால் அழைத்து வர முடியல. அவளுக்கு விடுமுறை கிடைத்ததும் கண்டிப்பா வருவோம்” என்று சொல்லி அமெரிக்காவுக்குப் புறப்பட்டாள். வீடே அமைதியின் பிடியில் ஆழ்ந்தது.
அப்பாவின் இறப்பில் இருந்து இன்னும் மீளாமல் இருந்த பரிதிவர்மன், சரியாக உண்ணாமல் உறங்காமல் சிரமப்பட்டான். பண்ணை வீட்டில் பாதி நேரமும் சுவரை வெறித்தபடி இருந்தான். அவனது நிலையை அப்பாவின் மூலமாக அறிந்த நந்தனா, தானே உணவு தயாரித்துப் பண்ணை வீட்டுக்கு எடுத்து வந்தாள். அவன் சோகத்துடன் இருப்பதைப் பார்த்துவிட்டு மெல்ல ஆறுதல் கூறித் தேற்றினாள். அவன் கண்ணீர் விடுவதைப் பார்க்க முடியாமல் தானும் அழுதாள். பின்னர் ஒருவாறு அவனைத் தேற்றி, கொண்டு வந்த உணவை உண்ணச் செய்தாள். ஆனாலும், அவன் இரண்டு வாய்க்கு மேல் சாப்பிட முடியாமல் எழுந்து விட, அவன் அருகில் அமர்ந்து அவன் உண்டு முடிக்கும் வரை ஊட்டி விட்டாள்.
அவனது கண்ணீரைத் துடைத்துவிட்டு, “மாமா எப்பவும் நம்ம கூடத்தான் இருக்காங்க. நீங்க இப்படி இருந்தா அவரால தாங்க முடியாது” என்று எடுத்துச் சொன்னாள்.
“மாமா விட்டுச்சென்ற பொறுப்புகள் இனி உங்கள் வசம். இனி நீங்க சாதாரண ஆளில்லை; இப்படி பலவீனமாக இருக்கக் கூடாது” என்று ஆறுதல் வார்த்தைகளை மொழிந்தாள்.
“இந்தக் கோழிப்பண்ணை, புதுசா அமைத்திருக்கும் அலுவலகம், வீடு… நாம் புழங்கும் அத்தனையிலும் மாமாவின் வாசம் நிறைஞ்சுருக்கும். உங்களுக்கு எப்போ அவரைப் பார்க்க ஆசையா இருந்தாலும், அவரது சமாதிக்கு வந்து பாருங்க. மனதில் இருப்பதைப் பேசுங்க; அப்போ அவர் உங்க கூடவே இருப்பதுபோல் உணர வைக்கும்”
அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். இத்தனை நாளும் அவன் பார்த்த சின்னப் பெண் அவள் அல்ல; அன்றைக்கு அவள் அணிந்திருந்த உடையில் மட்டுமல்லாமல், இப்போது அவளது பேச்சிலும் அத்தனை முதிர்ச்சி தெரிந்தது. அவளது அரவணைப்பும் இதமான வார்த்தைகளும், அவனது மனதிற்குள்ளும் மாற்றத்தை உருவாக்கின.
அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் அவனது நினைவடுக்கில் வந்து போயின. அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இனி அப்பாவுக்குப் பிறகு தனக்கு இருப்பதாக உறுதியாக நம்பினான்.
ஆனால், எத்தனை கவனமாக இருந்தும், அதன் பிறகு வரிசையாக நடந்த சம்பவங்கள், அவர்கள் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போட்டு விட்டன.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
