3) மயிலாஞ்சி

மயிலாஞ்சி

 

அத்தியாயம்-3

 

தேஜஸ்வினி அந்த பூவை எடுத்துக் கொண்டு போய் அவளது பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு வெளியே வந்தாள். அதியன் உரலில் கேழ்வரகு இடித்துக் கொண்டிருந்தான். தேஜஸ்வினி அதைப் பார்த்துவிட்டு,

 

“நான் இடிக்கிறேன் நீங்க போங்க” என்றாள். தேஜஸ்வினிக்கு இதெல்லாம் சாதாரணமான வேலை, சலிக்காமல் செய்வாள். அதியனும் தேஜஸ்வினியிடம் உலக்கையை கொடுத்துவிட்டு போய்விட. அவள் ஏதோ பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி, அந்த கேழ்வரகை இடித்து, புடைத்து, சலித்து, சுத்தம் செய்து கொண்டு போய் செண்பகத்திடம் கொடுத்தால்.

 

 

“உன்னை யார் இதெல்லாம் செய்ய சொன்னாங்க. என்னை கேட்காம இங்க எதையும் தொட கூடாது புரிஞ்சிதா” என்று திட்டினார். செண்பகம் பேசியது அவளுக்கு புரியாவில்லை. அவள் அமைதியாக வந்துவிட்டாள்.

 

செண்பகம் அந்த கேழ்வரகை கையில் அள்ளி பார்த்தாள். தேஜஸ்வினி அதனை அத்தனை சுத்தமாகச் செய்து இருந்தாள். “பரவாயில்லை.. நல்லா தான் இடிச்சு சலிச்சு இருக்கா!” என அவராகவே சொல்லிக் கொண்டார்.

 

தேஜஸ்வினி அதியன் அறையில் நுழைந்துக் கொண்டாள். அவனது உடைகளைப் பார்த்தாள் அது அங்காங்கே கலைந்து கிடந்தது. அவன் வீட்டிற்கு வருது அரிது, அதிலும் சில நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பான். எப்போது வருவான் எப்போது போவான் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது. அவன் வந்தால் முதலில் வயலுக்குச் சென்று வேலைகள் செய்துவிட்டு காற்று வாங்கி அங்கேயே கூட உறங்கிவிடுவான். செண்பகமும் வயல் வீடு என்று இருப்பதால் பிள்ளைகள் அறையை கவனிக்கவும் முடியாது. ஆர்த்தியும் அப்படித் தான்.

 

தேஜஸ்வினி அந்த அறையை சுத்தம் செய்து. அவன் படிக்கும் புத்தகங்கள், அவனது உடைமைகள், எல்லாவற்றையும் அழகாக அடுக்கி நேர்த்தியாக சரி செய்து வைத்தாள். துணிகளை மடித்து அவனது பிரோவில் வைத்தாள் அப்போது ஒரு சிறிய புகைப்படம் கீழே விழுந்தது அதை எடுத்துப் பார்த்தாள். அதில் இருப்பது அவளது உறவினர்களில் ஒருவர். அதியனுடன் நட்புடன் நின்றுக் கொண்டிருந்தார்.

 

“மாமா..!” என்று முணுமுணுத்தாள் அவள் மொழியில். ஆனால் அவர் இப்போது உயிருடன் இல்லை என்பது தேஜஸ்வினிக்கு தெரியும். சில மாதங்களுக்கு முன் அவர் கூலிப்படையினர் கொலை செய்யப்பட்டு இறந்து விட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க உதவும் விதமாக தான் அதியன் ஒடிசா சென்றான். அங்கு தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையில், தேஜஸ்வினியை திருமணம் செய்துக் கொள்ளும்படியான சூழல் உருவாகிவிட்டது.

 

தேஜஸ்வினி புகைப்படத்தை கையில் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அதியன் அறையில் நுழைந்தான்‌‌‌. அவள் கையில் இருக்கும் புகைபடத்தை பார்த்துவிட்டு, வேகமாகப் பிடுங்கி பிரோவில் வைத்து பூட்டிவிட்டு.

 

“உன்னை யாரு இதெல்லாம் எடுக்க சொன்னது. எதுக்கு இதை எடுத்த?” என அதியன் கத்தியதில் தேஜஸ்வினி பயந்துவிட்டாள். அவன் கோபத்தில் தமிழில் பேசவும், அவளுக்கு அவன் சொல்வது புரியவில்லை. இருந்தும் அவன் முகத்தில் ஒடும் கோப ரேகை, அவன் கோபமாக இருப்பதை உணர்த்தியது.

 

“மன்னிச்சிடுங்க” என அவள் மொழியில் சொல்ல. அவளை என்ன சொல்வது என்று புரியாமல்.

 

“இனி இதெல்லாம் தொடாதே” என்று மட்டும் கூறிவிட்டு, எழிலனைப் பார்க்கச் சென்றான்.

 

எழிலன் ஆர்த்தியுடன் விளக்கு வாங்க புறப்பட தயாராகிக் கொண்டிருந்தான். அதியன் வரும் போது குழந்தைக்கு சாக்லேட் கொண்டு வந்தான். இத்தனை கலவரத்திலும் குழந்தை கேட்டதை மறக்காமல் செய்தான். குழந்தை அதியன் கொடுத்த சாக்லெட்டை வாங்கிக் கொண்டு. அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு விளையாட ஓடியது. ஆர்த்தி ஒரு கட்டைப்பையுடன் வந்தாள்.

 

“மாமா போலாமா!” என்று எழிலனை அழைத்தாள். அப்போது அதியன் உள்ளே வர,

 

“அதி நீயும் வாயேன்” என்றான் எழிலன்,

 

“இல்ல மாமா.. நான் அத்தையும் மாமாவையும் பார்க்க தான் வந்தேன்.” என்றான் அதியன். ரத்னா ஒரு புறம், அவள் அப்பா கணபதி ஒரு புறம், அவள் அம்மா ஒரு புறம் என்று கோபத்தில் இருந்தனர்.

 

“அவங்க கிட்ட இப்போ பேச முடியாது அதி. அவங்களும் கோவமா தான் இருக்காங்க” என்றான் எழிலன்.

 

“சூட்டோட சூடா பேசிறது நல்லது தானே” என அதியன் சொல்ல,

 

“சரி பேசு.. எப்படியாச்சும் அவளுக்கு கல்யாணம் பண்ணவாச்சும் பார்க்கட்டும். நீ பேசிட்டு இரு நாங்க போயிட்டு வந்துடுறோம்.” என்று கூறிவிட்டு. ஆர்த்தியை அழைத்துக் கொண்டு எழிலன் புறப்பட்டான்

 

அதியன் மங்களத்தை தேடினான். அவர் வீட்டின் பின் பக்கம், மாட்டு தொழுவத்தில் மாட்டுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டு.. புலம்பிக் கொண்டிருந்தார்.

 

“சிறுக்கி.. மவ என் மானத்த வாங்குறதுக்குனே பிறந்து இருக்காளே..! நாள பின்ன வெளிய தலை காட்ட முடியுமா.. அவன் தான் எவளையோ கல்யாணம் பண்ணிக்கிட்டானே.. அவன் போனா நாட்டுல ஆம்பளையே இல்லையா..! ஊரு உலகத்துல இல்லாத மாமனுக்கு உயிர விடுறேன்னு நாடகம் பண்ணிட்டு இருக்கா. நெசமாவே விஷத்தை குடிச்சி செத்து இருந்தா சனியன் ஒழிஞ்சிதுன்னு கெடந்து இருப்பேன். எழவெடுத்தவ எனக்குன்னு வந்து பொறந்து தொலைச்சு இருக்கு பாரு” என மங்களம், கோபத்திலும், ஆதங்கத்திலும், சத்தமாக பேசியபடி மாட்டுக்கு கழனிதண்ணீர் வைத்துக் கொண்டிருந்தார்.

 

“அத்தே..!” என அதியன் கூப்பிட அவனை ஏறெடுத்தும் பார்க்காமல், அவர் வேலையைத் தொடர்ந்தார்.

 

“அத்தே.. கோவமா இருக்கீங்க புரியுது ஆனா நான் இருந்த சூழ்நிலை அப்படி. அந்த பொண்ணு ரொம்ப பாவம் அதான். அந்த பொண்ண அந்த நிலைமையில விட்டுட்டு வர முடியல” என்றான் அதியன், ஆனால் மங்களம் அவன் பேசுவதை கேட்காதது போல இருந்தார்‌.

 

“ஏங்க.. பொழுது சாய போகுது.. போய் காளை மாட்ட ஓட்டியாங்க. என்னமோ ஊருல இல்லாத பொண்ண பெத்துட்ட மாதிரி.. தலையில கைய வச்சிட்டு உட்கார்ந்து இருக்கிய எந்திரிச்சு போங்க.” என மங்களம் கணவரை விரட்டிட. அவரும் எழுந்து சென்றுவிட, மங்களம் கையை கழுவி உதறிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.

 

“அத்தே நான் பேசுறத கேளுங்களேன்..!” என அதியனும் மங்களத்தின் பின்னால் நடந்தான். ஆனால் மங்களம் அவன் பேச்சை கேட்பது இல்லை என்ற முடிவோடு இருந்தார்.

 

“ஏய் ரத்னா எந்திரிடி.. என்னமோ நெசமா விஷத்தை குடிச்சவ மாதிரி படுத்து கெடக்குறவ.. எந்திரிச்சு போய் மூஞ்சிய கழுவிட்டு ஆக வேண்டியத பாரு. இல்ல இப்படியே தான் இருப்பேன்னா நெசத்துக்கும் விஷத்த குடிச்சிட்டு படுத்துக்கடி விடிஞ்சதும் தூக்கி போட்டு ரெண்டு நாள் அழுதுட்டு போறேன்.” என்றார். மங்களத்தின் பேச்சால், அதியன் மனமுடைந்து போனான்.

 

“ஏன் அத்தே இப்படி பேசுறீங்க! நான் எப்பவாது ரத்னாவ கட்டிகிறேன்னு சொன்னேனா.. அவ மனசுல ஆசையா வளர்த்துவிட்டது நீங்க, நான் தேஜூவ கல்யாணம் பண்ணலனாலும்… ரத்னாவ கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்.” என அதியன் சொல்ல, அழுகையும் கோபமும் வந்தது மங்களத்திற்கு.

 

“காதுல வாங்கினியாடி சொன்னதை. அதான் எப்பவும் அவுரு மனசுல நீ இல்லையாமே” என மங்களம் கோபத்தில் வெறுப்புடன் சொல்ல. அதியன் என்ன செய்வதென்று புரியாமல், ரத்னாவைப் பார்த்தான். அவள் முற்றத்தில் ஒரு தூணின் மீது சாய்ந்து கால்களை கட்டிக் கொண்டு, அதியன் கூறியதைக் கேட்டு சத்தமில்லாமல் அழுதுக் கொண்டிருந்தாள்.

 

அதியன் அவள் அருகில் அமர்ந்து, “ரத்னா..!” என அதியன் அழைக்க, அவள் கோபத்தில் அவனை அடித்தாள். அவள் கை வலிக்கும் வரை அடித்தாள். அதியன் அவள் அடித்து ஓயும் வரை அமைதியாக இருந்தான்.

 

“போ என் கிட்ட பேசாத.. போ.. உனக்கு அவ தானே முக்கியம்.” என்று கத்தி அவன் சட்டையை இழுத்து கிழித்து அடித்தாள். அவள் கூர்மையான நகங்கள் அவன் தோள்பட்டையை கீறிவிட்டு இருந்தது. அதை கூட அவன் பொட்படுத்தாமல்,

 

“இங்க பாரு ரத்னா.. ஒருத்தி, ஒருத்தன்னு ஒரு தடவை தான் மாலை போட முடியும். நம்ம கலாச்சாரம் நம்ம வழக்கம். அப்படி தான் அவங்களும். இப்போ உன் பிடிவாதத்துக்கு அவளை விட்டு, உன்னை இரண்டாம் தாரமாவா கல்யாணம் பண்ணிக்க முடியுமா. நீ பிறந்தப்போ நம்ம குடும்பத்துல நான் தான் உன்னை தூக்கினே. நீ தான்டி என் முதல் குழந்தை இதைவிட உனக்கு வேற என்ன வேணும் சொல்லு.” என்றான் அதியன் அப்போதும் அவள் மனம் மாறவில்லை,

 

“நீ.. எதுவும் சொல்ல வேண்டாம் போ இங்கிருந்து. என் மனச மாத்த பார்க்குறியா.. என்ன தான் நீ பேசுனாலும் என் மனசு மாறாது போ” என்று அவள் கத்தினாள்.

 

“சரி, சாயங்காலம் குலதெய்வம் கோவிலுக்கு போகணும் எல்லாரும் வாங்க” என்று கூறிவிட்டு அதியன் வீட்டிற்கு வந்தான். அவன் உடை கிழிந்த நிலையில் வந்தவனை பார்த்து ராஜன்,

 

“என்ன அதி மங்களத்தை பார்த்துட்டு வரியா” என்றார் ராஜன்.

 

“ஆமா ப்பா..!”

 

“சரி..ப்பா.. யாரு வந்தாலும், வரலனாலும், நடக்குறது நடக்கும் நீ போய் கோவிலுக்கு புறப்படு” என்றார் பரமசிவம் தாத்தா.

 

“சரி தாத்தா” என்றவன் உள்ளே சென்று உடையை மாற்றினான். தேஜஸ்வினி அவன் உடம்பில் உள்ள நக கீறல்களைப் பார்த்து அதிர்ந்தாள்.

 

“என்னாச்சு உங்களுக்கு!” என தொட வந்தவளை நிறுத்தினான்.

 

“ஒண்ணும் இல்ல விடு.” என்றான் அவள் மொழியில். அவள் தள்ளி நின்றுக் கொண்டாள்.

 

“கோவிலுக்கு போகணும் சீக்கிரம் ரெடி ஆகு” என்றான் அதியன். அவளும் அவள் பெட்டியில் இருந்து, அவளுக்கு ஒரு புடவையை எடுத்துக் கொண்டு அமைதியாக நின்றாள். அமைதியாக நிற்பதைப் பார்த்த அதியன்,

 

“என்ன பார்க்குற ட்ரஸ் மாத்திக்கோ” என்க, அவள் புடவையால் முகத்தை மறைத்துக் கொண்டு வெட்கத்தில்,

 

“நீங்க வெளிய போங்க!” என்றாள் வெட்கத்துடன். அதியன் ஏதும் பேசாமல் வெளியே வந்தான்.

 

தேஜஸ்வினி சேலை கட்டி கொண்டிருந்த நேரம்.. ஒரு செங் குளவி அவள் அருகே வந்து அவளைச் சுற்றி வட்டமிட, அதை துரத்த போய் அவளது வலது கையில் குளவி கொட்டியது. அவள் அழுது துடித்தாள். சத்தம் கேட்டு அதியன் அறையில் நுழைந்தான் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்‌‌‌.

 

“என்னாச்சு தேஜூ” என அதியன் கேட்க விம்மி வரும் அழுகையை விழுங்கி விட்டு, ‘ஒன்றுமில்லை’ என்று தலையை ஆட்டிவிட்டு. முடிந்தவரை புடவையை சரியாக கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

 

ஆர்த்தியும், எழிலனும் விளக்கு வாங்கிக் கொண்டு வந்தனர். நித்தியன் ஜீப் ஓட்ட தயாராக வண்டியில் அமர்ந்து இருந்தான்.

 

“நீ எதுக்குடா ட்ரைவர் சீட்ல உட்கார்ந்து இருக்க. இறங்கு நானே வண்டிய ஓட்டிட்டு வரேன்” என்றான் அதியன். நித்தியன் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு,

 

“என்ன ஆம்பளடா நீ .. உனக்கு கல்யாணம் ஆகி இருக்கு. அண்ணி கூட ஜாலியா பேசிட்டு வருவியா! எப்ப பாரு சண்டியரு மாதிரி முறுக்கிட்டு நிற்குற. போயி பின் சீட்ல அண்ணி கூட உட்காரு. நானே ஜீப் ஓட்டுறேன்” என்றான். அவன் பேச்சின் முதிர்ச்சியும் விளையாட்டும் அதியனுக்கு எரிச்சலை தான் உண்டாக்கயது

 

 

“அப்படியே போட்டேன்னு வை போடா தள்ளி உட்காரு, வாய் ஓவரா இருக்கு உனக்கு” என அதியன் அவனை அடிப்பது போல கை ஓங்கிட, நித்தியன் ஜீப்பில் இருந்து இறங்கிட. தேஜஸ்வினி பூஜை பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தளை பார்த்தான்.

 

“அண்ணி.. அண்ணி.. இங்க வாங்க முன்னாடி உட்காருங்க” என்றான். அவன்‌ பேசியது புரியவில்லை என்றாலும், சைகையைப் புரிந்துக் கொண்டு முன்னால் சென்று அதியன் அருகில் அமர்ந்தாள்.

 

அதியன், நித்தியனை முறைத்தான், நித்தியன் குறும்பாய் சிரித்துவிட்டு பின் சீட்டில் அமர்ந்துக் கொண்டு.

 

“போலாம் ரைட்.. ரைட்..!” என்றான். அனைவரும் வீர அய்யனார் கோவில் முன்பு வந்து நின்றனர். பூஜைக்காக கோவிலை அலங்கரிக்க முன்பே ராஜன் ஏற்பாடு செய்துவிட்டு இருந்ததார்.

 

பெரிய மதில் சுவரும், பெரிய பெரிய மண் குதிரைகள் அதன் மீது அமர்ந்து இருக்கும் காவல் தெய்வங்களும், கையில் பெரிய அரிவாள் பிடித்தபடி, பெரிய முறுக்கு மீசையும், பெரிய விழியும், மாலையில் மங்கிய ஒளியில் கம்பீரமாக வீற்றிருக்கும் வீர அய்யனார் சிலையைப் பார்த்து, தேஜஸ்வினி பயந்தாலும், மனதில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தாள். வீர அய்யனார் சிலையைப் பார்த்துவிட்டு அப்படியே அதியனைப் பார்த்தாள். அவளுக்கு சட்டென சிரிப்பு வந்தது.

 

“என்ன சிரிக்கிறே” என அதியன் கேட்க, வீர அய்யனார் முறுக்கு மீசையைக் காட்டி அவனது மீசையையும் காட்டினாள். அதியன் தலையை குனிந்து யாரும் பார்க்காதவாறு வெட்கத்துடன் சிரித்தான்.

 

“வாங்க.. வாங்க.. எல்லாம் தயாரா இருக்கு பொண்ண கூப்பிட்டு விளக்கு ஏத்த சொல்லிட்டு அர்ச்சனை பண்ணுங்க” என்றார் பூசாரி.

 

“அதியா.. பேத்திய இப்படி கூட்டிட்டு வா.. ஐயா பாதத்துல விளக்கு ஏத்த சொல்லு” என்றார் பரமசிவம் தாத்தா.

 

தேஜஸ்வினி குளவி கொட்டியதன் வலியைப் பொறுத்துக் கொண்டு விளக்கு ஏற்ற முழங்காலிட்டு அமர்ந்தாள். அவள் தீப்பெட்டியில் தீக்குச்சி உரிசி விளக்கு ஏற்றி, அந்தச் சுடர் ஒளியில் வீர அய்யனார் முகத்தைப் பார்த்து கை கூப்பி கும்பிட்டாள்.

 

அப்போது அங்கு கோவிலின் வாசலில் விலையுயர்ந்த கார் ஒன்று வந்து நின்றது.

 

தொடரும் மயிலாஞ்சி ✍️

 

கதையைப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பர்களே 🙏💐

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top