வேள்வி : 12

அத்தியாயம் : 12

பழைய சம்பவங்களிலிருந்து மீள முடியாமல் இருந்த நந்தனா, பெருமூச்சுவிட்டபடி அருகில் உறங்கிக்கொண்டிருந்த மகள் நிவேதாவின் முகத்தில் வந்து விழுந்த முடிகளை மெல்ல ஒதுக்கிவிட்டாள். அவள் பார்த்தவரை ரக்ஷனா மிகவும் நல்லவளாகத்தான் தெரிந்தாள். அப்படிப்பட்டவளுக்குள் எப்படி அந்த மாதிரியான ஒரு குணம் குடியேறியது என்று இப்போது வரை அவளுக்குப் புரியவில்லை.

‘பிடிக்காத திருமணமாக இருந்தால் அதை எதற்காகச் செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி எழுந்தாலும், அன்றைய சூழ்நிலை குத்துமதிப்பாக எதையும் சொல்ல விடாமல் தடுத்தது. அவள் தன் வாயால் உண்மையைச் சொன்னால் மட்டுமே நிலவரம் என்னவென்று தெரியவரும்.

விளையாட்டுத்தனமாக அவளை உயர்வாகப் பேசி நந்தனாவை கிண்டலடித்தவன், பின்னர் அவனது அம்மா மற்றும் அத்தையின் பிடிவாதத்தாலும், நந்தனா வேண்டாம் என்று உறுதியாக மறுத்துவிட்ட காரணத்தாலும் ரக்ஷனாவைத் திருமணம் செய்துகொண்டான். அதன் பிறகு அவன் வாழ்க்கையில் இருந்த நிம்மதியும் பறிபோனது. அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்த நொடியே நந்தனாவின் நிம்மதியும் போயிற்று. மொத்தத்தில் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் நிம்மதியையும் குலைத்த இந்தத் திருமணம் நடக்காமலேயே இருந்திருக்கலாம். ஆனால், விதி யாரைத்தான் விட்டது?

மாலை நேரமானதும் மகள் எழுவதற்கு முன்பு குளியலறைக்குள் சென்றவள், குளியலை முடித்துவிட்டு வெளியே வந்தாள். பிங்க் நிற காட்டன் புடவையை அணிந்துகொண்டவள், நிவேதா தூங்கி விழித்ததும் அவளையும் சுத்தப்படுத்தி வேறு உடைக்கு மாற்றினாள்.

அவளுக்குப் பசிக்கும் என்பதால் சமையலறைக்குச் சென்று உணவு எடுத்து வந்து ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தவள், தன் முன்பு வந்து நின்ற வேலைக்காரப் பெண்மணியைக் கண்டதும் என்னவென்று ஏறிட்டு நோக்கினாள். அவளது கையில் இருந்த அடுக்கித் தொடுக்கப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரம் கொஞ்சம் நேரத்தில் நந்தனாவின் கூந்தலில் தன் வாசனையால் அழகு சேர்த்தது.

புன்னகையுடன் அவளுக்கு நன்றி தெரிவித்தவள், மகளுக்கு உணவை ஊட்டி முடித்துவிட்டு கணவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவனோ பைக்கை வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு, சோகமே உருவாகக் காட்சியளிக்கும் அம்மா நாகேஸ்வரியை ஏறெடுத்தும் பார்க்காமல் வீட்டிற்குள் வந்தான். 

அது நாகேஸ்வரியைக் கொல்லாமல் கொன்றது. தான் செய்த தவறுகளின் வீரியம் அவரது நிம்மதியைப் பூண்டோடு பறித்திருந்தது. குழந்தையின் பேச்சுக் குரல் கேட்டும் இத்தனை நேரம் வெளியே வராமல் உள்ளேயே முடங்கியிருந்தவர், வேலைக்காரியிடம் அதட்டலாகச் சொல்லிக் குழந்தையை வரவழைக்கவும் முடியாமல் தவித்தார்.

கணவருக்கு நந்தனாவை எவ்வளவு பிடிக்கும் என்று நன்கு அறிந்திருந்தும், வனிதாவின் நச்சுப் பேச்சுக்களை நம்பி தனது வாழ்க்கையை அழித்து விட்டார். ஏற்கனவே விசப்பாம்பு எனும்போது, அவளைத் தடுத்து  நிறுத்த காரணமாகிய தாணுலிங்கம் இல்லாததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் தலை எழுத்தை மாற்றி அமைத்து விட்டாள் வனிதா. இப்போது அவள் குடும்பத்துடன் குதூகலமாக இருக்க, பாதிப்பு முழுவதும் நாகேஸ்வரிக்கு! 

அன்று கணவரைப் பறி கொடுத்தவர், இன்று தனது மகனையும் இழந்து விடுவோமோ என்று அஞ்சினார். தன்னைக் கண்டும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் உள்ளே சென்ற மகனை நினைத்து மருகினார்.

ஆனால் அவனோ அம்மாவும் மகளும் ஓடி விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே வந்து, மகளை அப்படியே தன் கைகளில் வாரிக் தூக்கிக்கொண்டு, மனைவியை இறுக அணைத்து முத்தமிட்டான்.

“அப்பா, நிவி சாப்பிட்டாச்சு…”

மகளின் நெற்றியில் முட்டியவன், “அப்படியா! என் செல்லப் பொண்ணு என்ன சாப்பிட்டாங்க?” என்று கேட்டான்.

“பருப்பு சாதம்.”

“ஓ! உங்க அம்மா வந்ததும் மகளுக்குக் கவனிப்பு எல்லாம் பலமா இருக்கே?” என்று அவன் கிண்டலாகக் கேட்க, நிவேதா தலையை ஆட்டினாள். தொடர்ந்து மகளிடம், “உங்க அப்பாவும் ரொம்பப் பசியோடுதான் வந்திருக்கான். உங்க அம்மாவைக் கொஞ்சம் கவனிக்கச் சொல்லு!” என்றவாறே மனைவியைப் பார்த்தான்.

அவள் புரிந்துகொண்டவளாக நாணப் புன்னகையைப் பதிலாகத் தர, “அச்சச்சோ நிவி கண்ணு! கொஞ்ச நேரம் வெளியே போய் விளையாடிட்டு வாடா, அப்பாவுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று மகளிடம் கெஞ்சினான்.

அவள் ‘மாட்டேன்’ என்று தலையாட்ட, “நேரம் காலம் தெரியாம நீயும் விளையாடுறியேடா? அப்பா குளிச்சிட்டு பிரெஷ்ஷா வரேன். நீ போய் விளையாடிட்டு வா!” என்றதும், அவள் ‘சரி’ என்று அம்மாவிடம் தாவினாள்.

“போச்சு, போச்சு! என் திட்டம் எல்லாம் போச்சு. அப்பாவுக்குக் கை, கால் வலிக்குது; அம்மாக்கிட்ட கொஞ்சம் எண்ணெய் தடவி விடச் சொல்லணும். நீ போய் விளையாடிட்டு வாடா வெளியே…” என்று சொன்னபடியே மகளைத் தூக்கிச் சென்று, அங்கிருந்த வேலைக்காரப் பெண்மணியிடம் கொடுத்தான்.

அடுத்த நிமிடம், அதற்காகவே காத்திருந்தது போல விரைந்து வந்த நாகேஸ்வரி, நிவேதாவைத் தன் இரு கைகளிலும் வாங்கி முகம் முழுவதும் முத்தமிட்டார். அவரைப் பொறுத்தவரை நந்தனாவின் மீது மட்டுமே கோபமே தவிர, மற்றபடி யாரையும் அப்படி நினைத்ததில்லை.

கணவரிடம் கடைசி நேரத்தில் பேச முடியாமல் போய் கோபப்படக் காரணமும் இவள்தான், இன்று மகனை விட்டு விலகி இருக்கக் காரணமும் இவள்தான், ரக்ஷனாவின் வாழ்க்கை நாசமாகப் போகக் காரணமும் இவளேதான்! அப்படி எல்லா வகையிலும் நந்தனா காரணமாக இருப்பதுதான் அவரது வெறுப்புக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், இப்போது மகனின் கோபமும் தான் பேசிய வார்த்தையின் அர்த்தமும் அவருக்குப் புரிந்ததால், எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேச முடியாமல் வாய் அடைத்துப் போனது.

தன் அம்மா மகளைத் தூக்கிச் செல்வதைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்த பரிதிவர்மன், அறைக்குள் நுழைந்து மனைவியை இறுகத் தழுவினான். அவளோ நெளிந்துகொண்டே, “இதையெல்லாம் எப்போ படிச்சீங்க? முன்னே ரொம்பவும் சைவமா இருப்பீங்களே!” என்று கேட்டாள்.

அவளது கழுத்தில் தன் மீசையை வைத்து உரசியவன், அவள் கேட்ட கேள்விக்குப் பதில் தராமல், “உன் பொண்ணை மட்டும்தான் குளிப்பாட்டிச் சாப்பாடு எல்லாம் ஊட்டி விடுவியா? எனக்குச் செய்ய மாட்டியா? எப்ப அப்பா இறந்த நேரத்தில் தேடி வந்து ஊட்டி விட்டியோ! அதுக்குப் பிறகு நான் இதுவரை வயிறாரச் சாப்பிட்டது இல்லைடா…” என்றான் பரிதிவர்மன்.

அவளது கண்கள் கலங்கிவிட, “என்மேல உயிரை வச்சிருந்த அப்பாவும் இல்லாம, உண்மையா பாசத்தைக் கொட்டிய நீயும் விலகிப் போயிட, மனசுல இருப்பதை வெளிப்படுத்த இருந்த ஒரே ஆதரவான உங்க அப்பாவும், என்னை விட்டுப் போயிட்டார். எனக்குன்னு யாருமே இல்லாம நான் அநாதையா போயிட்டேன்… நீ உனக்குன்னு யாருமே இல்லாம அப்படி ஆகிட்டே! நான் இருந்தும் அப்படிதான் இருக்கேன்” என்றான்.

அவன் மனம் எந்த அளவுக்கு வேதனைப்பட்டு உள்ளது என்பதைப் புரிந்து கொண்ட நந்தனா, “ஏற்கனவே மாமா நம்மை விட்டுப் போயிட்டாங்க; உங்களுக்கும் எதுவும் ஆகிடக் கூடாதுங்கிற பயத்தில்தான் அப்படிச் கடுமையா பேசிட்டேன். மத்தபடி என் மனசு பூராவும் நீங்கதான் இருக்கீங்க” என்றாள் மன்னிப்புக் கோரும் விதமாக.

“நந்து! நீ ரொம்ப சுலபமா மன்னிப்புக் கேட்டுட்ட; ஆனா, அன்னைக்கு மட்டும் அப்படிச் சொல்லாம இருந்தா, நம்ம மாமாவையாவது காப்பாற்றியிருக்கலாம். இனி பேசி ஆகப்போவதில்லை” என்றவனுக்கு, தனக்கு வேண்டப்பட்ட அத்தனை பேரும் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றது தாங்க முடியாத வலியைத் தந்தது.

அவளும் அவன் மனநிலையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருக்க, “இனிமேல் என்னை விட்டு எங்கேயும் போகக் கூடாது; மீறிப் போனால் அப்பாகிட்ட சொல்லிடுவேன்” என்று முன்புபோல மிரட்டினான்.

அந்த வார்த்தையில் அவள் சிரித்துவிட, “குளிப்பாட்டி விடச் சொன்னேன்…” என்று இழுத்தான்.

அவள் எப்படி மறுப்பது என்று தயங்க, “இத்தனை நாளாக எனக்குள்ளதை நானே செய்துக்கிட்டேன். இனி நீதான் செய்து தரணும். நான் அசையக் கூட மாட்டேன்” என்று பாசக் கட்டளை பிறப்பித்தான்.

அவள் அதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும், ரக்ஷனா விஷயம் ஒரு முடிவுக்கு வராமல் எப்படி அவனுடன் தனது வாழ்க்கையைத் தொடங்குவது எனத் தயங்கினாள்.

அவன் என்ன என்று கேட்டதும், இவளும் மெல்லத் தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்தினாள்; அடுத்த நிமிடம் அவனது முகம் மாறியது.

“ஏனாம், என்ன இருந்தாலும் அவள்தான் இந்த வீட்டு மூத்த மருமகள்! அவள் மட்டும் எனக்கு விட்டுத் தராம இருந்தா, கடைசி வரை நாம ஒண்ணு சேர்ந்திருக்க முடியாது”

அவன் அந்த வார்த்தை பிடிக்காததுபோல் முகத்தைத் திருப்ப, “அன்னைக்கு நீங்க சொன்ன வார்த்தையை நினைச்சு மாமாவைப் போல நானும் ரொம்பவும் பயந்தேன். கடைசியில் அப்படியே ஆகிடுச்சு…” என்றவள் முகத்தில் வேதனையின் சாயல் படர்ந்தது.

அவனுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனாலும், நடந்ததை மாற்ற முடியாது; எந்த ரக்ஷனாவை நல்லவள் என்று நம்பி ஏமாந்தானோ, அவள்தான் இன்று அவனது நிம்மதியைப் பறித்துவிட்டுப் போனாள். அவளைப் பற்றி நினைக்கவே அவன் விரும்பவில்லை. மனதில் இருந்த பழைய நினைவுகளைத் தள்ளியவன், அவளது இடையோடு கையை வைத்துப் பின்புறமாக அணைத்தான்.

அவள் ‘ம்ஹூம்…’ என்று சிணுங்க, “வா, நிவி வருமுன் உன் அத்தானைக் குளிப்பாட்டி விடு” என அவளை விடாமல் இருக்க, அவளும் வேறு வழியின்றி அவனது சட்டைப் பொத்தான்களில் கை வைத்தாள். கண்கள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கூசின. இதழ்கள் நெளிந்து வளைந்து சிரித்து மனதில் இருப்பதை வெளிப்படுத்தின. அவன் எதுவும் பேசாமல் நந்தனாவின் முகத்தில் ஓடும் உணர்வுகளைப் படித்தபடியே இருந்தான்.

அவளுடன் குளியலறைக்குள் சென்று இன்பக் குளியல் உல்லாசமாகப் போட்டான். யார் யாரைக் குளிப்பாட்டப் போனார்கள் என்ற நிலை மாறி, நந்தனாவிடம் சேட்டையில் மூழ்கி அவளது வெட்கத்தைத் துரத்தியடிக்கும் முயற்சியில் இறங்கினான் பரிதிவர்மன். அவளால் வெகுநேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியே ஓடி வந்து விட, “நீங்க ரொம்ப மோசம்! எங்க மாமாகிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்” என்று எச்சரித்தாள் நந்தனா.

முதுகைத் துடைத்துக்கொண்டே வெளியே வந்தவன், “நானும் ‘உங்க மருமக என்னைக் கவனிக்க மாட்டேன்றா’ன்னு சொல்லிக் கொடுப்பேன்” என்று சரிக்குச் சமமாக வம்புக்கு நின்றான்.

அவள் இடுப்பில் கை வைத்து அழகு காட்ட, அவனும் அதுபோல முகத்தை வைத்துக் காட்டினான். முந்தைய ஞாபகத்தில் இருவரும் சிரித்தனர். அவன் தன் மனைவியை அணைத்து முத்தமிட, அத்தானின் மார்பில் சாய்ந்துகொண்டாள் நந்தனா. பின்னர் நேரமாவதை உணர்ந்து, இருவருக்கும் இரவு உணவை எடுக்கச் சென்றாள். அப்போதுதான், ‘அத்தை நாகேஸ்வரி சாப்பிட்டிருப்பாரா?’ என்று நினைத்தபடி இருந்தாள். அவன் மனைவியின் மனதைப் படித்தவன்போல், “உன்னை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு! ஆனாலும், இந்த அளவுக்குத் தாழ்ந்து போவது நல்லதில்லை. இன்னும் விவாதமும் விபரீதமும் நிறைய வரும். அந்த நேரம் உன் அத்தை பெத்த மகனுக்காக நிற்கிறாரா? தனது பாசக்கார அண்ணிக்காகப் பேசப் போகிறாரா பார்க்கணும். அதுவரை எது நடந்தாலும் பொறுத்துத்தான் போகணும்!” என்று அவளிடம் எச்சரிக்கும் விதமாகச் சொன்னான்.

அவளும் சித்தி மற்றும் அவளது மகளைப்பற்றித்தான் சூசகமாகத் தன் கணவன் அறிவுறுத்துவதாக நினைத்துக்கொண்டாள். உண்மைதானே, அவன் கூறுவதும்!

இருவரும் உணவை முடித்துவிட்டு எழுந்து வெளியே வந்து, காற்றாட கொஞ்சம் நேரம் உலாவினர். குழந்தையின் ஞாபகம் வந்தாலும், அவள் பெரும்பாலான நாட்கள் அம்மா நாகேஸ்வரியின் அருகில்தான் உறங்குவாள் என்பதால் அவன் அதைப் பெரிதுபடுத்தவில்லை.

நேரம் கரைந்து சென்றது. அவளது தோளில் கை வைத்து மென்மையாக வருடியவனின் கண்கள் வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. அவள் ‘வேண்டாம்’ என்று மறுத்தபடி பின்னோக்கிச் செல்ல, “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருந்த என்னைச் கொஞ்சம் சம்சாரியா மாத்தி விடு” என்று கிறக்கத்துடன் சொன்னான் பரிதிவர்மன்.

அந்த வார்த்தையில் அவள் முகம் சிவந்துவிட, “ம்ம்…” என்று அவளது உத்தரவுக்காகக் காத்திருந்தான்.

“நான் வேண்டாம்னு சொன்னா விட்டுடுவீங்களா?”

“ம்ஹூம்…”

“அப்ப ஓகே சொன்னா…”

“எப்படிச் சொன்னாலும் ம்கூம்… ம்கூம்… ம்கூம்…” என்று கண் சிமிட்ட, “மாமா, இவங்க தப்பு தப்பா பேசுறாங்க மாமா. அந்தக் கம்பை எடுத்துட்டு வந்து அடியுங்க” என்று மேலே பார்த்துக் கூறினாள் நந்தனா.

அவன் சத்தமாகச் சிரித்தபடி, “கன்னிப்பையன் சாபம் உன்னை சும்மா விடாதுடி… பிறகு முதல் பகல், முதல் மதியம், முதல் மாலை, முதல் இரவு எல்லாம் வரிசையா பார்க்க வேண்டியது வரும்” என்று கிண்டலடித்தான்.

அவள் நாணத்தில் செந்தூரம் பூசியது போல மாறினாலும், “முதலிரவு கேட்டிருக்கேன். அதென்ன மீதியுள்ளது?” என்று கேள்வி எழுப்ப, “அதுதான் டியூப்லைட்! உனக்கு விவரம் பத்தாதுன்னு சொல்றேன். மச்சானைத் தொடர்ந்து வந்து தெரிஞ்சுக்கோ” என்று கண்ணடித்தான் பரிதிவர்மன்.

“ஓவர் பெர்ஃபார்மென்ஸ் உடம்புக்கு நல்லதில்லை” என்றபடி அவள் வீட்டுக்குள் ஓட, “பெர்ஃபார்மென்ஸ் இல்லாம இருந்தா லைஃப் போரடிக்கும்” என்றவன் கதவைப் பூட்டிவிட்டு வந்து, தன் மனைவியைத் தூக்கிச் சுழற்றி விட்டு, படுக்கைக்கு கொண்டு சென்றான்.

பரிதிவர்மன் அன்றே தன் வாழ்க்கையைத் தொடங்கிவிட, அவள் மறுக்க மறுக்க இவனது பிடிவாதம் அதிகரித்தது. அவளது கொலுசு ஒலியும், சிணுங்கல் சத்தமும் சிங்கார நாதமாய் அவன் செவியில் ஒலிக்க, முழுவதுமாய் தன்னைத் தொலைத்து அவளுக்குள் மூழ்கிப் போனான்.

ஆனால் பேத்தியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு உறங்க வைத்திருந்த நாகேஸ்வரியின் செவிகளில், மகனின் பேச்சுக்கள் அத்தனையும் அட்சரம் பிசகாமல் விழுந்தது. அவரது உடல் நடுங்கி விதிர்விதிர்த்துப் போனது. மகன் என்ன சொன்னான்? என்பதைக் கண்டுபிடிக்க அவர் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துப் போனவர், வீட்டுக்குள் வந்து கணவரின் புகைப்படத்திற்கு முன்பு நின்று மௌனமாய் கண்ணீர் விட்டார்.

தனது மகன் திருமணமாகி இதே வீட்டில் தன் மனைவியுடன் இருந்தபோது, ஒரு நாள் கூட இத்தனை சந்தோஷமாக இருந்து பார்த்ததில்லை. இதோ நந்தனா அவனிடம் பேசிச் சிரிப்பது போல ரக்ஷனாவும் இருந்ததில்லை. இருவரும் எப்படி ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள்? அவர்களுக்குள் என்ன நடந்தது? ஏன் அந்தப் பிரிவு? எதுவுமே தெரியவில்லை. எத்தனையோ முறை மருகளை அழைக்க சொல்லியும், அவள் வராமல் இருந்ததற்கும் வேறு ஏதோ காரணம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

இத்தனை நாளும் தன்னைச் சுற்றி நடப்பது தெரியாமல் இருந்தவருக்குத் தலை கிறுகிறுத்துக்கொண்டு வந்தது. தள்ளாடித் தடுமாறித் தனது அறைக்குள் வந்தவர், பேத்தியைக் கட்டிலில் படுக்கவைத்துவிட்டுத் தானும் விழுந்துவிட்டார். கண்ணிலிருந்து சாரை சாரையாகக் கண்ணீர் வடிந்தது.

கணவர் தாணுலிங்கம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பெருந்தவறு இழைத்துவிட்டது போல் குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுத்தது. நந்தனாவின் மீது கொண்ட வெறுப்பு அவரது சுய நினைவுகளை இல்லாமல் செய்திருக்க, இப்போது காரணமறியாமல் உள்ளம் பதறியது. உறக்கம் வராமல் கட்டிலில் வெகுநேரம் புரண்டு கொண்டிருந்தவர், மறுநாள் அதிகாலையில் எழுந்து, பண்ணை வீட்டின் வலதுபுறம் அமைக்கப்பட்டிருந்த சமாதியின் அருகில் சென்று ஒப்பாரி வைத்தார். தான் செய்த தவறுகளை மன்னித்து விடுமாறு கணவரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், தாணுலிங்கம் இருக்கும் இடத்தில் சிறு அசைவு கூட தென்படவில்லை.

அவருக்கு அதைவிட்டு அகலவே மனம் வரவில்லை. ஆனாலும் குழந்தை நிவேதா தூக்கம் கலைந்து எழுந்தால், தன்னைத் தேடுவாள் என்று அவர் வீட்டுக்குத் திரும்ப, மகனின் படுக்கையறைக் கதவு இன்னும் திறக்கப்படாமல் இருந்தது.

 

காலை ஏழு மணிக்குப் பிறகு நந்தனா, கணவனைத் தள்ளிவிட்டு எழ முயல, அவன் எங்கே விட்டானாம்?

“இதைத்தான் ‘காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்வது’ என்பதா?” என்று அவள் முறைக்க, “கொலைப் பசியில போட்டுட்டு அக்காவும் தங்கையும் போயிட்டுப் பேச்சாடி பேசிட்டிருக்கே?” என்றான் பரிதிவர்மன்.

அவள் முறைத்துப் பார்க்க, அவன் அசடு வழிந்தபடி, “வெரி சாரி டார்லிங்!! டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு” என்று அவசரமாகக் கூறினான்.

“நான் உங்களை நம்ப மாட்டேன். நீங்க எனக்குத் துரோகம் பண்ணிட்டீங்க” என்று அவள் கண்ணைக் கசக்க, “ஆஹா… இப்படி எல்லாம் நடிச்சு ஏமாத்த முடியாது. என்னைப் பார்த்தா உனக்கு அப்படியா கீது?” என்று நடித்தான் பரிதிவர்மன்.

“கீதுவும் இல்ல ராதுவும் இல்ல ரக்ஷனா அன்ட் நந்தனா?” என்று அவள் கிண்டலாக சொல்ல, “அது… அது ரெண்டு பொண்டாட்டி காவல்காரன் கேள்விப்பட்டது இல்ல அப்படிதான்” என்று கண்ணை சிமிட்டினான். அவள் அருகில் கம்பு ஏதாவது கிடக்கிறதா என்று பார்க்க, அவன் சத்தமாக சிரித்தான்.

 

பின்னர், கணவன் வேலைக்குச் செல்வதற்கு முன்பு தானும் தயாராக வேண்டும் என்று நினைத்தவள், மொத்தக் கூந்தலையும் வாரிக் கொண்டையிட்டு, கணவனின் பார்வையில் நாணி, அருகில் இருந்த குளியலறைக்குள் நுழைந்தாள்.

“வேலைக்குப் போக நேரமாவதை மறந்துட வேண்டாம்” என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்.

“ம்கும்… கொஞ்ச நேரம் மனுஷனை நிம்மதியா இருக்க விடுறது இல்ல. அதுக்குள்ளே வேலையாம்…” என்று முணுமுணுத்தவன், “இதுக்காகத்தான் கல்யாணமாகிப் பதினைந்து நாள் ஓய்வு கொடுத்து. விருந்து சாப்பாடு எல்லாம் போட்டு அசத்துறாங்க போலிருக்கு. நமக்கு அந்த வாய்ப்பு இல்லையே!” என்று தன்னந் தனிமையில் புலம்பினான்.

 

காலை உணவாக ஆட்டுக்குடல் குழம்பும் இட்லியும் தயாராக இருந்தது. நந்தனா புரியாமல் சமையல்காரப் பெண்மணியைப் பார்க்க, “பெரியம்மாதான் எடுத்துச் சமைக்கச் சொன்னாங்க. அப்படியே சூடாக ஆட்டுக்கால் சூப்பும் தயாராக இருக்கு. பரிதி தம்பிக்கும் கொடுத்து நீங்களும் சாப்பிட்டுப் பாருங்க” என்று விட்டுச் சென்றாள்.

இது என்ன விந்தையாக உள்ளது என்று அவள் அதிர, மனைவியின் முகத்தைப் பார்த்தவன் என்னவென்று கேட்டு விஷயத்தைப் புரிந்துகொண்டான். ஆனாலும், தெரியாதது போல, “என்ன இருந்தாலும் மகன், மருமகள் மேல பாசம் இல்லாம இருக்குமா? ராத்திரி பூராவும் கஷ்டப்பட்டு உழைச்சதுக்கு கிடைக்கும் பரிசு இது” என்று கண்ணடித்தான்.

மாமியார் கண்டுவிட்டாரோ என்று அவள் சங்கோசமாக உணர, குழந்தை நிவேதா உறக்கம் கலைந்ததும் எழுந்து ஓடிவந்து அவர்கள் மீது சாடினாள். 

காலை உணவை முடித்த பரிதிவர்மன், இன்று ஒரு நாளாவது கூடவே இருப்பதாகச் சொல்லியும் நந்தனா மறுத்ததால், முகத்தை இறக்கி வைத்துக்கொண்டு புறப்பட்டு வெளியே வந்தான்.

 

மகள் அப்பாவின் கன்னத்தில் முத்தமிட, அடுத்த கன்னத்தை மனைவிக்குக் காட்டினான். அவளும் அதுபோலச் செய்ய, “எனக்கு எப்போ தோணினாலும் உடனே வந்துடுவேன். தயாரா இரு! இல்லன்னா பண்ணை வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடுவேன்” என்று மிரட்டி, அவளது துரத்தலில் இருந்து தப்பி ஓடிப் போய் பைக்கில் அமர்ந்தான்.

மகள் சத்தமாகச் சிரிக்க, அவன் பறக்கும் முத்தத்தை இருவருக்கும் வாரி இறைத்தான். மகன் தன்னிடம் பேசாமல், மனைவி மற்றும் மகளிடம் பேசிக்கொண்டு செல்வதைக் கண்டு வருந்தினாலும், அவன் முகத்தில் இருந்த புன்னகை இப்போது போல எப்போதும் இருக்க வேண்டும் என்று எண்ணினார் நாகேஸ்வரி!

நந்தனா கணவன் அங்கிருந்து சென்ற பின்னர் மகளுடன் திரும்பி வர, தன்னையே பார்த்திருக்கும் மாமியாரின் பார்வையில் தேங்கி நின்றாள்.

அந்த நேரம், அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய ரக்ஷனா, அப்பாவுடன் பேசிக்கொண்டே ஜீன்ஸ் பேண்ட், நீளமான டாப்ஸ் அணிந்து, விரித்து விடப்பட்டு இருந்த கூந்தலை காற்றின் வீச்சுக்கு ஏற்ப நடனமாட விட்டு, டொக் டொக் என்று ஓசை எழுப்பியபடி, ஹை ஹீல்ஸ் அணிந்த பாதங்களை தூக்கி வைத்து, கண்களில் அணிந்திருந்த கண்ணாடியைச் சரிசெய்தபடியே நடந்தாள்.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top