கொடைக்கானல் மலையிலுள்ள பூம்பொழில் கிராமமும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கோலாகலத்தைக் கட்டிக் கொண்டது.
அக்கிராமங்களின் சிறுதெய்வமான குறிஞ்சியம்மன் கோவில் திருவிழா களைகட்டி இருந்தது.
சங்க இலக்கியத் திணைவகைகளில் மலைப்பகுதியான இடங்களை ‘குறிஞ்சி’ என்று வகைப்படுத்தினார்கள். இந்தக் குறிஞ்சி நிலமானது பசுமையான சரிவுகளும், சோலைகளும், காடுகளும் நிறைந்தது. அதில் பொன்னென மின்னும் நீர்த்தேக்கங்களை நோக்கி நீர் பாய்ந்து வரும் அந்த இடத்தில், பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘குறிஞ்சி’ மலர் பூக்கிறது.
இந்த நீலக்குறிஞ்சி மலரானது ஒரு ‘செமெல்பாரிட்டி’ தாவரமாகும்; இது தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூத்து, விதைகளை உருவாக்கிய பிறகு இறந்துவிடுகிறது. புதிய தாவரங்கள், அடுத்த சுழற்சியின் (பன்னிரு ஆண்டுகளுக்குப் பிறகு) முளைப்புக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைச் சேமித்து வைத்துக்கொள்ள இந்த கால இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்த ஒற்றைப் பூக்கும் கட்டத்திற்குப் பிறகு உருவாகும் விதைகளிலிருந்தே அடுத்த தலைமுறைத் தாவரங்களின் வளர்ச்சி தொடங்குகிறது.
இந்த நீலக்குறிஞ்சி மலருக்கு இயற்கையிலேயே ஒரு தனித்துவமான தன்மையுண்டு. இந்தத் தாவரம் பல ஆண்டுகள் பூக்காமல் வளர்ந்து, பின்னர் ஒரே நேரத்தில் அதிக அளவில் பூக்கிறது. இதற்குப் பின்னே ஒரு வாழ்வியலைத் தக்கவைத்துக் கொள்ளும் யுக்தி ஒளிந்திருக்கிறது. இந்த மலரின் விதைகளை உண்ணும் உயிரினங்களிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டு, மகரந்தச் சேர்க்கை அதிகரித்து, அதிக விதைகளை உருவாக்கி, ஒரே நேரத்தில் அனைத்து மலர்களும் பூக்க இந்த யுக்தி பயன்படுகிறது. இயற்கை வகுத்த அனைத்தும் அற்புதங்கள் நிறைந்தவை.
மலைகளின் கடவுளான முருகன், குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த ‘முதுவன்’ பழங்குடியினப் பெண்ணான வள்ளியின் கழுத்தில் குறிஞ்சி மலர் மாலையை அணிவித்ததாக ஒரு தொன்மக் கதை கூறுகிறது. இன்றும் கூட, முதுவன் பழங்குடியினர் தங்கள் வயது, பிறந்த காலம் மற்றும் முக்கியமான நிகழ்வுகளைக் குறிஞ்சி மலர் பூக்கும் காலத்தைக் கொண்டே கணக்கிடுகின்றனர் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இயற்கையோடு இணைந்தது இம்மக்கள் வாழ்வு என்பதற்கு இதைவிடப் பெரிய சான்றுகள் தேவையில்லை.
இந்த வருடத் திருவிழாவில் ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், நீண்ட பசுமைப் பட்டாடை தரித்த அந்த மலைகளில் நீலக்குறிஞ்சி பூத்து, தன் நீல நிறக் கலவையை ஊற்றி பார்ப்பவர் மனத்தையும் கண்களையும் கவர்ந்து கொண்டிருந்தது.
ஆட்டமும் பாட்டமுமாக மலைமக்களின் பாரம்பரிய வாத்தியங்களான குழலிசைக் கருவிகள், தோலிசைக் கருவிகள், காஞ்சக் கருவிகள் என அனைத்து கருவிகளும் முழங்க, அந்தப் பேரிசையில் காட்டில் வாழும் மிருகங்களும் பறவைகளும் குதூகலித்தன.
இரவு நேரம் நடைபெறும் இந்தத் திருவிழாவின் நோக்கமானது, தீ விபத்துகள் மற்றும் பிற இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கவும், மழை பொழியவும், காடுகளில் வாழும் சிறு தெய்வங்களுக்கு எவ்விதத் தீங்கும் நேரிடக்கூடாது என்னும் காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. ஏனெனில், இம்மக்கள் நீர்வீழ்ச்சிகள், மரங்கள், பறவைகள் மற்றும் காட்டில் உள்ள இயற்கை அம்சங்களைத் தெய்வங்களால்
பாதுகாக்கப்படுபவையாகவே கருதி வாழ்ந்து வருகின்றனர்.
“ஏலப்பூ தெய்வராடி (திருவிழாவை நடத்தி வைக்கும் நபர்), படையலுக்கு எல்லாம் ஆச்சா?” என்றார் காடன்.
ரிஷி மற்றும் மதுரா இருவரும் தங்கள் குழந்தைகளோடு நிற்க, அனைத்து கிராம மக்களும் கோயிலைச் சுற்றி கூடி நின்றிருந்தனர்.
குயிலும் தனது மகனை இடுப்பில் சுமந்தவாறு ஓரமாக, தன் பெற்றோருடன் நின்றிருந்தாள்.
அம்மனுக்கு தீப ஆராதனைகள் காட்டப்பட, அனைவரும் மனமுருக வேண்டிக் கொண்டனர்.
ரிஷியின் அருகில் நின்றிருந்த மதுரா, விடுவிடுவென குயிலின் பெற்றோர் அருகில் சென்று, தனது புடவை முந்தானையை இரு கைகளிலும் ஏந்தியபடி, “நீலக்குறிஞ்சி பூத்து அம்மனுக்கு திருவிழா எடுத்தால், இந்த ஊர் மக்கள் யார் என்ன கேட்டாலும் கொடுக்கணும்னு ஐதீகம் இருக்கே, நான் மடிப்பிச்சை கேட்கிறேன், என் குயிலை எனக்கு வார்த்துக் கொடுங்க. அவள் முகத்தில் ஒரு ஆழ்ந்த சிரிப்பை நான் பார்த்ததே இல்லை. அதுவும் கணவனை இழந்து இந்த ஆறு மாதமாக அவள் கண்களில் அதீத கவலைதான் கொட்டிக் கிடக்கு. அவள் மிகப் பெரிய புத்திசாலி, அவள் இப்படி ஒடிஞ்சு நலிந்து போகப் பிறக்கல. அதுக்காக இந்த குறிஞ்சியம்மன் அவளைப் படைக்கல. அவள் படிக்கணும், ஜெயிக்கணும், இந்த ஊருக்கும், மக்களுக்கும் அவளால் ஆக வேண்டியது நிறைய இருக்கு. படிப்பால் உங்க பாரம்பரியம் எதுவும் கெட்டுப் போகாது, மாறா வலுப்படும், பாதுகாக்கப்படும். நம்ம நாட்டின் முதல் குடிமகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள், ஐஏஎஸ் ஐபிஸ் அதிகாரிகள், அப்படினு எத்தனை எத்தனை பழங்குடி இனப் பெண்கள் உயர் பதவிகளில் இருக்காங்க தெரியுமா? அவங்களை எந்த சாமி என்ன செய்தது? எனக்கு மடிப்பிச்சை போடுவீங்களா?” கண்களில் நீர் நிறையக் கேட்டாள் பெண்.
பார்த்துக் கொண்டிருந்த அனைத்து கண்களும் நீர் குளத்தால் தன்னை நனைத்துக் கொண்டன.
முள்ளை முள்ளால் எடுப்பது போல் நம்பிக்கையை நம்பிக்கையால் வெல்ல வேண்டும்.
குயிலு கணவன் இறந்த இந்த ஆறு மாத காலத்தில் மதுரா எத்தனையோ முறை குயிலின் பெற்றோரிடம் கல்வி கற்க அனுப்புவது பற்றி அன்பாகவும், ஆற்றாமையோடும் பேசிப் பார்த்தாள். ஆனால், பெண் கல்வியை ஏற்றுக்கொள்ள இயலாது. ஒரு குடும்பம் என்றால் சமாளிக்க இயலும்; ஆனால் ஒரு கிராமமே எதிர்த்தால் என்ன செய்வது? தோல்வியில்தான் முடிந்தது.
கல்வியே தேவையற்றது, அது எந்தப் பாலினமாக இருந்தாலும் சரி என்ற சிந்தனை கொண்டவர்களிடம் பேசிப் பேசியே ஆண் குழந்தைகள் சிலரை கல்வி கற்க வைத்தான் ரிஷி நந்தன்.
ஆனால் பெண் கல்வி என்பது தெய்வக் குத்தம் என்பதைத் தாண்டி சிந்திக்க இயலாத மக்களிடம் என்ன செய்ய இயலும்?
கிணற்றில் விழுந்த கல்லாக பயனற்றுப் போனது. நீலக்குறிஞ்சி பூத்து அம்மனுக்கு விழா எடுக்கும்போது பிச்சையை, அதுவும் மடிப்பிச்சையை மறுக்க மாட்டார்கள் என்று நன்கு அறிந்த மதுரா சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தாள். நீலக்குறிஞ்சி குயிலின் வாழ்க்கையிலும் பூத்து அதன் வண்ணங்களால் ஆசீர்வதித்தது.
கொடைக்கானலில் உள்ள ‘வட்டாரக் கல்வி அலுவலகத்தில் (Block Education Office)’ அமர்ந்திருந்தனர் ரிஷி நந்தன், மதுரா மற்றும் குயிலு.
“இந்தப் பெண்தான் நீங்கள் குறிப்பிட்டவர்களா சார்?” என்றார் வட்டார வள மைய மேற்பார்வையாளர்.
“ஆமா சார், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இவர் பேர் குயிலமுதி, நம்ம தொம்பர் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர். என் தங்கை மாதிரின்னு வைச்சுக்கோங்களேன். வயது பதினாறு ஆச்சு, இப்போ இவளைப் படிக்க வைக்கணும். உங்களுக்குத் தெரியாதது இல்லை, இந்த இனப் பெண்களுக்குப் பிறந்ததுமே இவன்தான் மாப்பிள்ளை என்று முடிவு செய்துவிடுவார்கள். அவன் வயது மூத்தவனாக, ஏற்கனவே திருமணம் ஆனவனாகக் கூட இருப்பான். இவளுக்கும் அதே நிலைதான். இவள் கணவன் இவளை விட இருபது வருடம் மூத்தவன், ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவியிடம் மூன்று குழந்தைகள் இருக்கு. இவளுக்கு ஒன்று. சமீபத்தில் வழுக்குப் பாறையின் மேல் தேனெடுக்கப் போகும்போது தவறி விழுந்து இறந்துபோய்விட்டான். இவளுக்குப் படிப்பைக் கொடுத்து வாழ்க்கையை உயர்த்தணும்னு என் சகதர்மினி அந்த மக்களிடம் ரொம்பப் போராடி இங்கே அழைச்சுட்டு வந்திருக்கா. நீங்கதான் ஒரு நல்ல வழியை அவளுக்குக் காட்டணும்” என கை கூப்பினான் ரிஷி.
“ரொம்ப சந்தோஷம் சார், அந்த மக்களுக்காக நீங்க நிறைய செய்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். இப்போ உங்க மனைவியும் அதே வழியில் பயணிப்பது மனம் நிறைவாக இருக்கு. நாம் என்பது நம்மைச் சார்ந்த சமூகமும்தான் என்பதை நீங்களும் உங்க மனைவியும் நிரூபிக்கிறீங்க. கண்டிப்பா குயிலமுதி படிக்கலாம் சார். இந்த உலகத்தில் எல்லாத்துக்கும் வழி இருக்கு. நம் மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த மலைமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் பெரும் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. பதினாறு வயது கொண்ட பெண்ணை தன்னை விட மிகவும் இளைய குழந்தைகளுடன் தொடக்கப்பள்ளி வகுப்பறையில் அமர்த்துவது அவருக்கு ஊக்கக்குறைவை ஏற்படுத்தலாம்.
இதையெல்லாம் நம் கல்வி வல்லுநர்கள் யோசித்து, தேசிய திறந்தநிலைக் கல்வி அதாவது National Institute of Open Schooling முறையை உருவாக்கியிருக்காங்க. தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனத்தின் திறந்தநிலை அடிப்படைக் கல்வி (OBE) திட்டத்தின் கீழ், வளரிளம் பருவத்தினர் முந்தைய பள்ளி ஆவணங்கள் ஏதுமின்றி கல்வியின் அடிப்படை நிலைகளை முடித்து, நேரடியாக 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுத முடியும்.
இங்குள்ள பிளாக் கல்வி அதிகாரி அல்லது வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTEs), இந்த மாணவியை ‘தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்’ (NIOS) வழங்கும் ‘திறந்தநிலை அடிப்படைக் கல்வி’ (OBE) திட்டத்தில் சேர வழிகாட்ட முடியும். இவர்களுக்கு அடிப்படையாகத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா தெரியாதா என்பதைப் பொறுத்து நாம் இவர்களைப் பயிற்றுவித்து எட்டாம் வகுப்புத் தேர்வோ அல்லது பத்தாம் வகுப்புத் தேர்வோ எழுத வைக்க முடியும். இவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?” என்றார் அதிகாரி.
“இல்ல.. தெரியாது சார்” என ரிஷி
மறுத்துக்கொண்டிருக்கும்போதே,
“அதெல்லாம் தெரியும் சார், நான் இவளைக் கடந்த எட்டு மாதமா தமிழில் எழுதப் படிக்கப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கேன், அடிப்படை கணிதமும், அடிப்படை ஆங்கிலமும் கூடத் தெரியும்” என்றாள் மதுரா ஒரு திடத்துடன்.
மனைவியைத் திரும்பிப் பார்த்த ரிஷியின் கண்களில் ‘திருடி, எனக்கே தெரியாமல் எல்லா வேலையும் பார்த்திருக்கிறாயா’ என்ற செய்தி இருந்ததென்றால், ‘பள்ளிக்கூடத்திற்குத்தானே படிக்க அனுப்ப மாட்டேன் என்று சொன்னாங்க, நான் கற்றுக்கொடுப்பதை யார் தடுக்க இயலும்? கல்வி கற்க நான்கு சுவர்கள் கொண்ட கூடம் தேவையில்லை, கற்றுத்தர அர்ப்பணிப்புள்ள ஒரு ஆசிரியரும், சிரத்தையோடு கற்றுக்கொள்ள மாணவர்களும் இருந்தால் போதும்’ என்ற செய்தி மதுரத்தின் கண்களில் இருந்தது.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
