அத்தியாயம் : 17
பரிதிவர்மனிடம் பேச முயன்றாள் ரக்ஷனா. அவன் பதில் கூற மறுத்து, “நீ இங்கே இருந்து எப்ப கிளம்புறே? எத்தனை நாள் விடுமுறையில் வந்திருக்கே? உனக்குப் படிப்பு முடிய இன்னும் எத்தனை வருஷம் இருக்கு?” என்றான்.
அவள் அதிர்ச்சியுடன் நோக்கினாள்.
“உன் படிப்பு முடிய இன்னும் நிறைய நாள் இருப்பதால், அதுவரை வேறு எதையும் நினைக்க வேண்டாம்! நீ இதுக்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே யாருக்காகவும் மாறாமல் இரு” என்றான்.
அவள், “இந்தக் கல்யாணத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்று கேட்க, “என் விருப்பத்தைக் கேட்கவோ அதன்படி நடக்கவோ இங்கு யார் இருக்கறாங்க? எல்லாருக்கும் அவங்க நினைக்கிறது தானே நடக்கணும்!” என்றான் விரக்தியுடன்.
அம்மாவின் செயலை இன்னும் கூட அவனால் ஏற்க முடியவில்லை. அதற்காக நடந்து முடிந்த கல்யாணத்தையும் உதறித் தள்ளிவிட்டுப் போக விரும்பவில்லை. அவள் போய் தனது பணிகளைப் பார்க்கட்டும், தன்னால் எந்த இடையூறும் வர வேண்டாம் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.
“அப்ப நான் மறுபடியும் வெளிநாட்டுக்குப் போயிடலாமா? நீங்கள் என்னை எதுக்கும் கம்பல் பண்ண மாட்டீர்களா?” என்று வினவினாள் ரக்ஷனா.
வானத்தைப் பார்த்தபடி “இல்லை” என்று சொல்ல, “அப்ப எதுக்கு இந்தக் கல்யாணம்?” என்றாள்.
அவன் பதில் சொல்லாமல் நின்றான்.
“நீங்க நந்தனாவை விரும்புறீங்களா?”
அவன் ஊமையாக நிற்க, “வாய் திறந்து சொல்லுங்க” என்று ஊக்கியதும், “அவள்… அவளுக்குப் படிப்பு மேல அதிக ஆர்வம். இன்னும் ரெண்டு வருசப் படிப்பு இருக்கு. அதைப் பாழாக்க என்னால் முடியல” என்றான் பரிதிவர்மன்.
“அப்போ நான்?”
அவன் திரும்பிப் பார்த்தான். “உன்னையும் படிக்கத்தான் சொல்றேன். போய் படி! இதுக்கு முன்னாடி இருந்த மாதிரி மனசுல எதையும் வச்சுக்காம சந்தோஷமா இரு. என்னால் உனக்கு எந்தத் தொந்தரவும் வராது.”
அவள் அடுத்த வார்த்தை பேச அவகாசம் தராமல் சென்றுவிட்டான். சற்று நேரத்தில் உடை மாற்றி வந்தவனைக் கண்ட நாகேஸ்வரி விரைந்து வர, அவன் வேகமாக வெளியேறி பைக்கில் அமர்ந்தான்.
“நில்லு பரிதி! என்ன செய்றே? உனக்குக் கல்யாணமாகி ரெண்டு நாள்தான் ஆகுது.”
அவன் திரும்பிப் பார்த்து, “அதுக்காக அவள் கூட நான் குடித்தனம் செய்யணுமா? உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீங்க கேட்டீங்க, நான் செஞ்சுட்டேன். அவ்வளவுதான்” என்று விட்டேற்றியாகச் சொல்லி சென்று விட்டான். அவர் விக்கித்துப் போயிருக்க, இரவு நேரம் தாமதமாக வந்ததும் பிடித்துக் கொண்டார்.
“எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. ரெண்டு வருஷம் கழிச்சுச் செய்வதா சொல்லியும் கேட்காம நீங்கதான் அடம்பிடிச்சீங்க! உங்களுக்காக, உங்க விருப்பத்துக்காகத்தான் இந்தக் கல்யாணம் நடந்தது. தனியா இருக்கேன்னு அழுதீர்களே, இப்ப நாத்தனார் மருமகளுடன் திருப்தியா இருக்கறீங்களா?” என்று அவன் கேட்க, அவர் திகைத்து விழித்தார்.
“உங்க சந்தோஷம் மட்டும் போதும் தானே! நீங்க மட்டும் மகிழ்ச்சியாக இருந்தா போதும் இல்லையா? நான் எப்படிப் போனால் உங்களுக்கு என்ன? நான் சாப்பிடுவது, வருவது பற்றி நீங்க ஏன் பார்க்கணும்? என் நிம்மதியைப் பறித்து நடைபிணமாக மாத்திட்டீங்களே! அப்படியே அவர்கள் ரெண்டு பேரும் போகுறப்ப நீங்களும் சேர்ந்து போயிடுங்க. உங்க பல நாள் ஆசை நிறைவேறும். நானும் நிம்மதியா இருப்பேன்” என்று கூறி மாடியில் உள்ள தனது அறைக்கு வந்து விட்டான்.
மகன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் தாயவளை உலுக்கியது. செய்வதறியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றார் நாகேஸ்வரி. ஆனால் அவன் சொன்ன அத்தனையும் கேட்டு நின்ற ரக்ஷனாவின் உள்ளத்தில் பல விதமான கேள்விகள் எழுந்தன!
“அத்தை! அவருக்கு இந்தக் கல்யாணத்தில் முழு சம்மதம், என்மேல உயிரை வச்சிருப்பதா சொன்னீர்களே! அது நிஜம்தானா? பிறகும் ஏன் அவர் அப்படி சொல்லிப் போனார்?” என்று அவள் கேட்க, அவர் ஸ்தம்பித்துப் போனார்.
“அப்படின்னா அத்தானுக்கு பிடிக்காம தான் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தீர்களா?” என்று மறுபடியும் வினவ, நாகேஸ்வரி அவசரமாக மறுத்தார். “அப்படி எல்லாம் இல்லம்மா, அவன் ஏதோ டென்ஷனில் இருக்கறான். நீ கொஞ்சம் அமைதியாக இரு” என மருமகளை அடக்கி அழைத்துச் சென்றார்.
இரவு உணவு நேரம் அவனை அழைக்க வர, விழிகளை கணினியில் இருந்து விலக்காமல் அதிலேயே மூழ்கியவன், “எனக்கு எதுவும் வேண்டாம்! கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. நீ போய் சாப்பிட்டு தூங்கு!” எனவும், அவளுக்குத் துறுதுறுவென வந்தது.
‘பிடிக்கவில்லை என்றால் எதற்காக இந்தத் திருமணத்தை செய்ய வேண்டும்? பெற்ற தாயை அடக்கி வைக்க முடியாதா?’ என்று முணுமுணுத்தபடி கீழே வந்து, தொலைக்காட்சியில் மூழ்கினாள்.
மறுநாள் இருவரும் ரக்ஷனாவின் வீட்டிற்கு விருந்திற்கு செல்ல தயாராகினர்.
அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பாதி வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வந்தான். எதிலும் ஒட்டுதல் வர மறுத்தது. நந்தனாவை பார்த்தும் நாளாக, கோழிப்பண்ணையில் அவளிடம் வம்பிழுத்த ஞாபகம் வந்து போனது. எந்த இடத்திலும் அவள் இல்லாமல் சூன்யமாக தோன்றியது. இத்தனை நாளும் இல்லாத எண்ணங்கள் இப்போது எழுந்து வதைத்தது.
தான் பேசியது பிடிக்காமல் தான் விடுதிக்குப் போய்விட்டாளோ என்ற கவலை வேறு மனதை அரிக்கத் தொடங்கியது.
வேல்முருகன் வீட்டிற்கு வந்ததும், இருவரையும் வரவேற்று அழைத்துச் சென்றார். அங்கு கண்ட உணவையும் சமைத்து வைத்திருக்க, அதைப் பார்த்ததும் வயிறு நிரம்பி போனது. கடமைக்குக் கொஞ்சமாக உள்ளே தள்ளியவன் மாடிக்கு வந்து ஓய்வெடுத்தான். ரக்ஷனா அணிந்திருந்த உடை அவன் முகத்தைத் திருப்பச் செய்தது. அவன் ஏறிட்டு நோக்காமல் சோபாவில் சென்று தஞ்சம் புக, “நான் உங்க கிட்ட பேசணும்” என்றபடி அவள் வந்தாள்.
“சொல்லு!”
“என்னை உங்க மாமாவின் மகளா பார்த்தப்ப நல்லா பேசுனீங்க. இப்ப பொண்டாட்டியா வந்த பிறகு பிடிக்கலையா? உண்மையிலேயே நீங்க நந்தனாவை விரும்பலையா? அவளைக் கல்யாணம் செய்யாத விரக்தியில்தான் இப்படி நடந்துக்கிறீங்களா?” என்று கேட்க, “அப்படி எதுவுமில்லை! அவள் என் அத்தைப் பொண்ணு என்பது தாண்டி நான் தப்பாகப் பழகல, அவளும் என்னை விரும்பல” என்றான் பரிதிவர்மன்.
“நீங்க ஏன் சின்ன வயசு முதல் அத்தனை அக்கறையா இருந்துட்டு அவளைக் கட்டிக்கல?”
அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். மறுபடியும் அவள் கேட்க, “தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாம விடு! எனக்கு கொஞ்ச நாள் அவகாசம் வேணும். நீயும் உன் படிப்பை முடிச்சுட்டு வா” என்பது தாண்டி அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. அவளாலும் முழு விசயங்களையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பிடிக்கிறதோ இல்லையோ நான்கு நாட்கள் அங்கே நின்றான். ரக்ஷனாவின் நடவடிக்கையில் நிறையவே மாற்றம் தெரிந்தது. உடலை இறுகக் கவ்வியபடியான ஆடையில் அவன் முன்பு வந்து கூசச் செய்தாள். நண்பர்களிடம் போனில் நிறைய நேரம் செலவிட்டாள்; யாரிடமோ பேசிச் சிரித்தாள்; விரைவில் வந்துவிடுவதாகச் சொல்லிக் குதூகலித்தாள்.
சின்ன வயதில் வந்தபோது தன்னைக் கண்டுகொள்ளாமல் இருந்தவனைத் திருமணம் செய்து, நந்தனாவை விட்டு விலக்கிவிட்டதாகக் கூறி மகிழ்ந்தாள். தான் ஆசைப்பட்டது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று மமதையுடன் கூறினாள். அவனது மொத்த சொத்துக்களையும் விற்பனை செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகப் போவதாகக் கூறினாள். அதிலும் அந்தக் கோழிப்பண்ணைக்குச் சென்றுவிட்டு வரும்போது எழும் நாற்றம் தாங்காமல், அருகில் போகவே பிடிக்கவில்லை என்று சொன்னாள்.
தான் இங்கிருந்து செல்லும் முன் அதை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று பொருமலாக உரைத்தாள். அவனால் அதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. அம்மாவை விட மகள்தான் மோசமாக இருக்கிறாள்; இல்லை, அப்படிப்பட்ட அம்மாவின் வயிற்றில் பிறந்தால் வேறு எப்படி இருக்கும்? என்று கருவினான்.
அம்மாவும் மகளும் சண்டை போடுவதைக் கண்டு முகத்தைத் திருப்பினான். தாயை அவள் எதிர்த்துப் பேசுவது, அப்பாவிடம் கொஞ்சி பேசி காரியம் சாதிப்பது என்று அனைத்தையும் பார்த்தான். பின்னர், தனது வீட்டிற்கு வந்ததும் அவளை அங்கே விட்டு விட்டு வேலைக்குச் சென்றுவிட்டான்.
மருமகளும் மகனும் நன்றாக இருப்பதாக நாகேஸ்வரி நினைத்திருக்க, அவளோ கணவன் வீட்டிற்கு வந்த பிறகு, குனிந்து நிமிர்ந்து ஒரு வேலை கூட செய்யவில்லை. இருக்கும் இடத்தில் இருந்து வேலைக்காரர்களை ஏவினாள்; எதிலும் திருப்தி இல்லாமல் குறை கண்டாள். மருமகளின் நடவடிக்கை பிடிக்கா விட்டாலும், மகன் கண்டால் விபரீதமாகி விடும் என்று அவளைப் பேசி சரிப்படுத்தி மருமகளை வெளியே எங்கேயாவது அழைத்துச் சென்று வருமாறு கோரிக்கை விடுத்தார் நாகேஸ்வரி. அவனும் ஒரு கணம் நின்றுவிட்டுப் பின்னர் வெளியே அழைத்து வந்தான். அதிகமாகப் பேசவில்லை என்றாலும் கேட்டதற்குப் பதில் கூறாமலும் இல்லை. அப்பொழுதுதான் அவளுக்குப் பிடித்தமான சாதனம் வாங்கிக் கொண்டிருக்கும்போது, தூரத்தில் நந்தனா செல்வதை பார்த்துவிட, பல நாளுக்குப் பிறகு கண்டதும் விரைந்து சென்று, “நந்து!” என அழைத்தபடி அவளது கையைப் பற்றினான். கண்கள் கலங்கி விட்டன.
அவள் உதறியும் விடாமல் அழுந்தப் பற்றியதும், அவனை அங்கு எதிர்பாராமலும், அவனுடைய செய்கையிலும் அதிர்ந்துதான் போய்விட்டாள் நந்தனா.
“என்ன நந்து இது? அப்படி நான் என்ன செய்துட்டேன்னு பார்க்காம பேசாம இருக்கே? உன்னை நான் அந்த ஊரை விட்டு எங்கேயும் வரக் கூடாது, நித்தமும் என் கண் பார்வையில் இருக்கணும் என்றேனே! ஒரு வார்த்தை கேட்டதுக்கு இப்படியாடி செய்வது? இவ்வளவு தானா என் மீது பாசம்? மாமாவும் உன்னைக் காணாம எவ்வளவு கவலையில் இருக்கறார் தெரியுமா?” என்றான்.
அவள் பதில் சொல்ல முடியாமல் திணற, “சின்ன பிள்ளையிலிருந்து கண்முன் வளர்ந்தவ, இப்ப பெரிய ஆளாகியதும் யாரும் தேவையில்லாம போயிடுச்சு இல்லையா? நான்தான் நடந்ததை மறக்க முடியாம இருக்கேனா?” என விரக்தியுடன் சொல்ல, அவள் கண்ணீரை அடக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள்.
“நான் உன்னை இப்படி எதிர்பார்க்கல, என் நந்துவால் இந்த மாதிரி நடக்க முடியுமான்னு அதிர்ச்சியா இருக்கு” என்றவன் மேலும் பிதற்றியபடி இருக்க, அங்கு நடக்கும் அத்தனையும் ரக்ஷனா பார்த்தபடி இருந்தாள்.
நந்தனா முகத்தைக் காட்டாமல் திரும்பி நிற்க, கண்ணிலிருந்து வடிந்த கண்ணீரும் அவன் பேசிய வார்த்தையும் எதையோ புரிய வைத்தது. இத்தனை நாளைய அவனது விலகல் மற்றும் எதன் மீதும் பற்றில்லாத தன்மைக்குக் காரணமும் மெல்ல மெல்லத் தெரிந்தது.
‘அப்படியானால் அவளை விரும்பி கல்யாணம் செய்ய கேட்டு மறுத்த பின் தன்னை மணந்திருக்கிறான்! அப்போ அவன் மனதில் அவள்தான் இப்பவும் இருக்கறாளா?’ என்று நினைத்தவாறு நின்றாள் ரக்ஷனா.
நந்தனா கண்ணீரைத் துடைக்க முடியாமல் இதழ்களைக் கடித்துத் தன்னை அடக்க முயல, அவள் பதில் தராமல் நின்ற விதத்தில் அவனது மனம் புண்பட்டுப் போனது. அருகில் இருந்த உணவகத்துக்கு அழைத்தும், அவள் வர மறுத்துவிட்டாள். சரி ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்றால் அதற்கும் மறுப்புத் தெரிவித்தாள். செலவுக்குப் பணம் தரலாம் என்று சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தும், அவள் வாங்க மறுத்துவிட்டாள்.
அவனால் தாங்க முடியவில்லை. கோபமாகப் பேசிச் சத்தமிட்டான். ‘அவள் அடியோடு மாறிவிட்டதாகவும், எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டதாகவும், தன்னுடன் பழகிய நாட்கள் பேசியவை எல்லாமே பொய்! அப்பா இருந்தவரை மட்டுமே அவருக்காக வந்ததாகவும், இப்போது இருப்பது பழைய நந்தனா இல்லை’ என்று கத்திக்கொண்டு வேகமாகச் சென்றுவிட்டான்.
அவள் அசையக் கூடச் செய்யாமல் நின்றாள். அவளது கண்ணீரும் மௌன நிலையும், அவனது கோப முகமும் ரக்ஷனாவுக்குள் ‘சுற்றி இருக்கும் அனைவரும் தன்னை ஏமாற்றிவிட்டார்கள்’ என்ற கழிவிரக்கத்தை தோற்றுவித்தது. காரில் அமர்ந்து வெளியே வெறித்தபடி இருக்க, அவன் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய்விட்டான். மாமாவிடம் நடந்த அனைத்தையும் சொல்லி குமுறியவன், “பெரிய தப்பு பண்ணிட்டேன் மாமா. தப்பு பண்ணிட்டேன்! என்ன ஆனாலும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க கூடாது. இப்ப என்னால நிம்மதியா இருக்க முடியல, மன வேதனை தாங்காம நெஞ்சம் எல்லாம் அழுத்துது” என்று கண் கலங்கினான்.
அவர் மருமகனை தோளில் சாய்த்து தட்டிக் கொடுக்க, “நந்து இன்னைக்கு என்னைப் பார்த்தும் ஒரு வார்த்தை பேசல மாமா! நான் எவ்வளவோ சொல்லியும் யாரோ ஒருவரை மாதிரி என்னை விலக்கி நிறுத்திட்டா, என்னால அதைத் தாங்க முடியல மாமா!” என்று கதறி விட்டான். அப்பாவின் சமாதியின் முன்பு சென்று கண்ணீர் மல்க அமர்ந்திருந்தான். “எனக்குன்னு யாருமே இல்லப்பா, நான் அத்தனை பேர் இருந்தும் அநாதை ஆகிட்டேன். உங்க மருமகள் நீங்க உயிர் பாசத்தைக் கொட்டிப் பார்த்துக்கிட்டவ என்னை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டா, என்னால நிம்மதியா இருக்க முடியலப்பா” என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.
அவனது நிலை சங்கடப்படுத்தியது. அவருக்கும் மருமகனைப் பற்றி தெரிந்ததால் எதுவும் சொல்லமுடியவில்லை. மகள் இல்லாமல் வீட்டிற்குச் செல்ல பிடிக்கவில்லை, மகள் முகத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனுக்கும் அப்படி தான் இருக்கிறது என்றால், நந்தனாவை நேசிப்பதை உணராமல் இருந்து விட்டான் போலிருக்கிறது. ஆனால் மகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? அந்த அளவுக்கு என்ன ஆகிவிட்டது? என்று புரியாமல் இருந்தார் சதாசிவம்.
இரவு நேரம் விருப்பம் இல்லாமல் வீட்டிற்கு வந்தவன் யாரிடமும் பேசவில்லை. முகம் இறுகிப் போய் இருந்தது.
ரக்ஷனா அவன் அறைக்குள் வந்ததும், “நீங்க நந்தனாவை காதலித்து கல்யாணம் செய்யும் ஆசையில் இருந்தீர்களா?” என்று நேரடியாக கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் கடந்து செல்ல, அவனை நிறுத்தியவள் மறுபடியும் வினவினாள்.
“காதலிக்கல, அவள் பின்னாடி கல்யாணம் பண்ணும் ஆசையில் சுத்தவும் இல்லை, போதுமா?” என்று வெடித்தான் பரிதிவர்மன்.
“பிறகும் ஏன் அவள் அப்படி நடந்துக்கிட்டா? நீங்க ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க?”
“இங்கே பார்! நான் உன்கிட்ட அப்பவே சொல்லிட்டேன், எங்க அப்பா மேல நான் உயிரையே வச்சிருந்தேன். அப்படிப்பட்டவர் இறந்ததை என்னால ஏத்துக்க முடியல, அதோடு ஒரு வருடம் கூட முடியாம கல்யாணம் செய்ய வேண்டாம்னு சொல்லியும் அம்மா கேட்கல, அப்பாவும் இல்லாம நல்லா பேசிய நந்தனாவும் படிப்பை காரணமாக்கிப் போயிட, என்னால சாதாரணமா இருக்க முடியல, வேலைப்பளு தலையை அழுத்துது. நீயாவது புரிஞ்சுக்கோ! என் கோபத்தை உன்கிட்ட காட்டிடக் கூடாதுன்னுதான் இவ்வளவு பொறுமையா பேசுறேன்” என்றான்.
அவள் மறுபடியும் அதே கேள்விக்கு வர, அவன் முறைத்துப் பார்த்தாள்.
“அவள் உன் அக்கா! உன்னை விட சில மாதங்கள்தான் மூத்தவள், அவளுக்குப் படிப்பு எதிர்காலம் மீதிருக்கும் அக்கறை உனக்கும் இருந்தா போய் படிப்பை முடி. என்னால இங்குள்ளதை யாருக்காகவும் விட்டுத் தர முடியாது. வேலை, தொழில் அத்தனையும் எனக்கு இருக்கு” என்று அழுத்தமாகச் சொன்னான்.
“அப்ப அவள் மறுக்காம இருந்தா அவளையே கட்டியிருப்பீங்க, அப்படித்தானே!” என்றதும், சலிப்பாக உணர்ந்தான் பரிதிவர்மன்.
“ஒரு விசயத்தை திரும்பத் திரும்ப பேசுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. நீயும் இப்ப வயசு அதிகமாகிப் படிப்பை முடிச்சிருந்தா என் மனசுல உன்னைச் சின்னவளா நினைக்கத் தோணாம இருக்குமோ என்னவோ? இப்ப வேறு எதையும் என்னால நினைக்க முடியல, ஒரு ரெண்டு வருஷம் போகட்டும், அதுவரை அமைதியா இரு!.” என்றான்.
தான் கேட்ட கேள்விக்குப் பதில் தராமல் அவன் மாற்றிப் பேசும் விதத்திலேயே தெரிந்தது. அவளிடம் சண்டையிடவோ தனது கோபத்தை வெளிப்படுத்தவோ விரும்பாமல் அவன் நடந்து கொள்வது… அதற்கு மேலும் தர்க்கம் செய்யாமல் அவன் உடையை மாற்றி விட்டுப் படுத்து விட, அவள்தான் கோபத்தால் கொதித்தாள். அம்மாவிடம் இது விசயமாகப் பேசி சண்டையிட்டாள்; அத்தையின் வார்த்தைக்கு மதிப்பு தராமல் வாதிட்டாள்; யார் என்ன சொன்னாலும் கேட்காமல் இருந்தாள். வெளிநாட்டில் இருப்பது போலவே நடந்து அவர்கள் முகத்தைச் சுளிக்க வைத்தாள்.
நாகேஸ்வரி மகனிடம் நல்ல விதமாக எடுத்துச் சொல்ல, “அவள் கூட இப்ப என்னால வாழ முடியாது! நான் எல்லாம் தெளிவா சொல்லிட்டேன், சும்மா தொணதொணக்காம இருங்க. உங்க அண்ணன் மகள், உங்க தோழி பெத்த ரத்தினம், அவளைத்தானே உங்களுக்குப் பிடிக்கும். ஒருத்தி அழகா அமைதியா ஏழை வீட்டில் வசித்து வந்தா பிடிக்காது இல்லையா? அப்ப நல்லா அனுபவிங்க” என்றுவிட்டுப் போனான்.
அது அவரைப் பதம் பார்த்தது. வனிதா கிளம்புவதற்கு நாளாவதால் கணவருடன் மகள் வீட்டில் வந்து நின்றாள். அப்போது அங்கு நடப்பது எல்லாமே தெரிந்தது. மகளின் வார்த்தையில் இருந்த கோபமும், மருமகனின் விலகலும் புரிந்தது. அதனால் அவர்களை ஒன்று சேர்ப்பதற்காக, யாரும் அறியாமல் அந்தத் தப்பைச் செய்தாள்.
இரவு நேரம் கழித்து வந்த பரிதிவர்மன், தாய் எடுத்து வந்த பாலைக் குடிக்காமல் வைத்துவிட்டு உறங்கிவிட, மறுநாள் தனது மகளிடம் கேட்டு அவர்களுக்கு இடையில் எதுவுமே நடக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு, நாகேஸ்வரி கூட அறிந்து விடாமல் மதுவை ஜூஸில் கலந்து வைத்துவிட்டாள்.
ஏனெனில் இங்கிருந்து சென்றால் திரும்பி வர இரண்டு வருடம் ஆகிவிடும். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயத்தில், பரிதிவர்மனை விட்டுவிடக் கூடாது என அந்தத் தவறை செய்தாள். அவனும் அதில் இருப்பது லேசான போதையைத் தூண்டிவிடும் வெளிநாட்டு மது என்று அறியாமல் குடித்துவிட்டுச் சென்றுவிட்டான்.
என்றும் வழக்கமாக தனது அறைக்குள் சென்றதும் உடையை மாற்றிவிட்டு சோஃபாவில் உறங்குபவன், அன்று ரக்ஷனாவும் இல்லாமல் தனியாக இருப்பதால் தனது படுக்கையில் உறங்கிவிட, காலையில் அவள் உடை மாற்றிக்கொண்டிருப்பதை கண்டான். இரவு என்ன நடந்தது அவனுக்குத் தெரியவில்லை. தலை வேறு வலித்தது. யாரிடம் சென்று கேட்பது என்று தயங்கினான்.
அதன் பிறகு இரவு நேரத்தில் ஜூஸ் மட்டுமல்ல எதையுமே அருந்துவதை தவிர்த்தான். அன்றைய இரவு சம்பவம் அவனைத் தவிக்க வைத்தது. தன்னிலை இல்லாத நேரத்தில் தப்பாக எதுவும் நடந்து விட்டோமோ! என்று பயந்தான். அவளிடம் அதைக் கேட்க தைரியம் வரவில்லை. அவளும் ஒரு வார்த்தை கூட அது விசயமாகப் பேசவில்லை. மறுநாள் முதல் இன்னும் விலகினாலும் அடிமனதில் கேள்விகள் எழுந்து அவனைப் பலவீனப்படுத்தியது.
அவள் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு வந்து வெளியே அழைத்துச் செல்லுமாறு சொல்ல, அது ஒரு குடும்பநல வழக்கறிஞரின் அலுவலகமாக இருந்தது.
அவன் என்னவென்று கேட்டும் பதில் தராமல் உள்ளே சென்றவள், பரஸ்பர விவாகரத்து வழங்க கோரிக்கை வைத்தாள். அவன் மறுத்தும் கேட்க மறுத்ததால், தாலியைக் கழற்றி எடுத்து விட்டு வெள்ளைக் காகிதத்தில் எழுதி கையெழுத்திட்டு அவரிடம் சமர்ப்பித்தாள்.
அவன் அதிர்ந்து போய் நின்றதும், ‘அவனுடன் வாழ விருப்பமில்லை, யாரையோ மனதில் வைத்துத் தன்னுடன் மது போதையில் நெருங்குபவனுடன் வாழ முடியாது. இனிமேல் அவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை, இந்தக் கல்யாண பந்தம் வேண்டாம். அவரை விட்டுப் பிரிகிறேன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விவாகரத்து பெற்று தந்து விடுங்கள்’ என்று சொன்னாள்.
அவன் பேச வார்த்தைகள் வராமல் நின்றான்..
பரிதிவர்மனின் அருகில் வந்தவள், “நமக்கு இடையில் நடந்த இந்தப் போலி திருமணம் வேண்டாம். நீங்க முன்பு போல இருங்க! நான் உங்க வாழ்க்கையில் தலையிட மாட்டேன்” என்று சொல்லி, அவனையும் கையெழுத்திட வைத்தாள்.
அவன் நடப்பதை நம்ப முடியாமல் திகைத்து போய் நின்றான்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
