வேள்வி : 18

அத்தியாயம் : 18

தாணுலிங்கத்தின் சமாதியின் முன்பு இடிந்து போய் நின்றார் வேல்முருகன். சதாசிவம் மருமகன் நிலை குறித்து வேதனை தாளாமல் காணப்பட்டார். அவர் கண்ணீருடன் மாமாவின் காலில் விழுந்து நடந்ததை ஒப்புவித்தான். அவரால் இன்னும் கூட நடந்ததை நம்பவே முடியவில்லை. தனது மகளா இப்படி ஒரு காரியத்தை செய்தாள் என்ற அதிர்ச்சி அவர் மனதை தாக்கியது.

“நான் எவ்வளவு சொல்லியும் கேட்கல மாமா. கல்யாணமாகி வந்ததுல இருந்து சதா நந்தனாவுடன் என்னை இணைத்துப் பேசிட்டு இருந்தா, அன்னைக்கு வெளியே போன இடத்தில் …” என்றவன் அதைக் கூறி விட்டு அழுதான். “நான் இதுவரை மது அருந்தியதில்லை, ஒரு சிகரெட் பீடி கூட தொட்டதில்லை, முதல் முறையா நான் தொட்டதும் பழகியதும் நம்ம நந்தனா கூட மட்டும் தான்! அவளையே கட்டிக்கலாம்னு ஆசைப்பட்டு சொன்னப்போ அவள் மறுத்துட்டா, அம்மாவும் என் மனசைப் புரிஞ்சுக்காம நடந்து ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டாங்க.

உடம்புக்கு முடியாம ஆஸ்பிட்டலில் இருந்து வந்த பிறகும் கூட, சரியா மருந்து மாத்திரை சாப்பிடாமலும் பேசாமலும் கஷ்டப்படுத்தினாங்க. நான் சொல்ல சொல்ல கேட்கல! எங்க அப்பா தான் என்னை விட்டுப் போயிட்டாங்க, அம்மாவுக்கும் ஏதாவது ஆகினா நான் என்ன மாமா செய்வேன்?” என்று விம்மி அழுதான்.

அவர் மருமகனைத் தூக்கி அணைத்துக் கொள்ள, “வேறு வழியில்லாம தான் மாமா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனாலும் அப்பா பேசியதை மறக்க முடியல, ரக்ஷனாவை என் மனைவியாகவும் பார்த்து நடக்க முடியல” என்றவன் தனது தலையில் அடித்துக் கொள்ள, சதாசிவம் வந்து அவனைத் தன் மார்பில் தாங்கினார். “எல்லாரும் சேர்ந்து என் வாழ்க்கையை அழிச்சுட்டாங்க மாமா!” என்று வேதனை தாளாமல் துடித்தான். அவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. தன் மகள் மீது கோபமாக வந்தது. அவள் மட்டும் அன்று சரி என்று சொல்லி இருந்தால், இன்று அவன் கதறும் நிலை வருமா? எப்பேர்பட்ட மகராசனுக்கு பிறந்தவன் அவனை இப்படி கொண்டு வந்து நிறுத்தி விட்டார்களே! என்று மனம் புழுங்கினார்.

வேல்முருகன் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்து, நடந்தவற்றை கேட்டு அறிய அவனும் எதையுமே மறைக்கவில்லை. அப்போது அவருக்கு எங்கேயோ இடறியது. ஆரம்பத்தில் இருந்து இந்தத் திருமணத்தை நடத்த ஆர்வம் காட்டியது வனிதா, அந்தத் திருமணம் வேண்டாம் என்று மணமேடை வரும் வரை கூறி, திடீரென மயங்கி விழுந்தது ரக்ஷனா, அவரும் கூட எவ்வளவு சொல்லியும் வனிதா கேட்கவில்லை. அப்படியானால் அம்மா மகளிடம் தான் ஏதோ உள்ளது. அது மட்டுமல்லாமல் வெறும் ஜுஸை அருந்துவதால்,  யாரும் தனது சுய உணர்வுகளைத் தொலைத்து விடுவதில்லை? மருமகனிடம் அந்த ஜுஸை யார், எப்போது தந்தார்கள்? என்று விசாரித்து தெரிந்து கொண்டவர், அவர்களுக்குப் பின்னால் இருந்து இதை செய்திருப்பது வனிதாவாக தான் இருக்கும்; இவள் தான் ஏதோ தில்லுமுல்லு செய்து விட்டாள் என்று நம்பினார். வீட்டிற்கு வந்து அந்த நபரை அழைத்து விசாரிக்க, அவன் தனக்கு எதுவும் தெரியாது வனிதா அம்மா சொல்லி தான் அதைக் கொண்டு பரிதிவர்மன் தம்பியிடம் கொடுத்து விட்டு வந்ததாக கூறினான்.

வேல்முருகன் ஆத்திரம் தாளாமல் இருந்தார். மகளும் இந்த அளவுக்கு செய்திருக்கிறாள் என்றால் காரணம் இல்லாமல் இருக்காது என்பதையும் புரிந்து கொண்டார்.

“உன் அம்மாவும் அவள் அம்மாவும் சேர்ந்து உன் தலையெழுத்தை மாற்றி அமைக்க, என் மகள் அதிலிருந்து உனக்கு விடுதலை தான் தந்து இருக்கறா… இனி நீயும் நடந்ததை மறந்துட்டு, நந்தனாவின் படிப்பு முடிஞ்சதும் அவளைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு!” என்று சொன்னார்.

அவன் தலையை மட்டும் அசைக்க, “என் மகள் இனி என் பொறுப்பு தான். அவள் வாழ்க்கையை அவளது விருப்பப்படி அமைத்துக் கொடுப்பேன். எந்த காரணத்தைக் கொண்டும் யாரும் சொன்னார்கள்னு நீ அமெரிக்காவுக்கு வர வேண்டாம்! அதுபோல உன் அம்மாவுக்கும் வனிதாவுக்கும் இந்த விஷயம் தெரியவும் வேண்டாம்” என்றார். அவனும் சரி என்றிட, மறுநாள் அவர்கள் அமெரிக்காவிற்குச் சென்று விட்டனர். இவன் தன் வாழ்க்கையில் புயல் அடித்து ஓய்ந்தது போல உணர்ந்தான்.

எதற்காக இந்தத் திருமணம் நடக்க வேண்டும்? ஏன் இப்படி ஒரு நிலையை ஆண்டவர் உருவாக்க வேண்டும்? இதை விட சும்மாவே இருந்து இருக்கலாமே! என்று நினைத்தவன் ரொம்ப நாட்களுக்குப் பிறகு, கொஞ்சமாக நிம்மதியை உணர்ந்தான். ஆனால் அது ஆண்டவனுக்குப் பொறுக்கவில்லை. அடுத்த சில நாளில் ரக்ஷனா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வந்தது. அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இது என்ன விபரீதம்? அப்படியானால் அன்று நிஜமாகத்தான் அவளிடம் தவறாக நடந்து விட்டோமா? பிறகும் ஏன் அவள் அப்படி நடக்க வேண்டும்? என்று குழம்பினான். இதே கேள்வி அவள் அப்பாவிற்கும் எழ, மகளிடம் எப்படி கேட்பது என்று தயங்கினார்.

ஆனால், இரு வீட்டு அம்மாக்களும் மட்டும் குதூகலத்துடன் காணப்பட்டனர். அதிலும் நாகேஸ்வரியை கையிலேயே பிடிக்க முடியவில்லை. அனைவரிடமும் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தார். உடனே மருமகளைச் சென்று பார்க்கக் கட்டளையிட, அவன் மறுப்பாகத் தலையசைத்தான். நாட்கள் உருண்டோடின. மகளிடம் பேசி விசயத்தை தெரிந்து கொண்ட வேல்முருகன், மருமகனை சமாதானப்படுத்தி இயல்பாக இருக்க வைத்தார்.

 சதாசிவத்தின் வீட்டில் நீலாம்பரியால் பிரச்சனை அதிகமானது. சந்திரகுமாருக்கும் நந்தனாவுக்கும் திருமண ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர். சதாசிவம் எவ்வளவு மறுத்தும் அவர்கள் கேட்காமல் பேசி முடித்து விட, மருமகன் தன்னிடம் ஒவ்வொரு விசயங்களையும் மறைக்காமல் கூறுவதிலிருந்து பலவற்றையும் தெரிந்து வைத்திருந்தவர், மகளை விடுதியிலிருந்து வர விடாமல் செய்தார்.

இந்நிலையில் மகளின் ஆசைப்படி எட்டாவது மாதம் ஊருக்கு அழைத்து வந்தார் வேல்முருகன். அவர்கள் வந்திருப்பதை அறிந்ததும் நாகேஸ்வரி துடிதுடிக்க, அவன் ஒரு வார்த்தை கூட மறுத்துப் பேசாமல் இருந்தான். இவரோ வளைகாப்பு நடத்த வேண்டும். அதற்கு முன் அவளை இங்கு அழைத்து வர வேண்டும் என்று ஆயிரம் கண்டிசன் போட்டார். அவன் தலையை தலையை மட்டுமே ஆட்ட, ரக்ஷனா வெளிநாட்டில் இருந்து வந்த மறுநாள் அதிகாலையில் வயிறு வலி தாளாமல் துடித்தாள். பின்னர், எட்டாவது மாதத்தில் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பத்து நிமிடத்தில் மகளைப் பெற்றெடுத்து வலியால் மயங்கி விட்டாள்.

பரிதிவர்மனும் அவன் அம்மாவும் விசயத்தை அறிந்து பார்க்க வந்தனர். குழந்தையைத் தூக்கி வைத்து அனைவரும் கொஞ்ச, மாமனாரும் மருமகனும் தனியாக சென்று பேசினார்கள். மயக்கம் கலைந்து உடல் வலியால் தளர்ந்து போயிருந்த ரக்ஷனா, மெல்ல கண் திறந்து பார்த்தாள். அவள் அம்மா ஆசை ஆசையாய் குழந்தையை எடுத்து வர, அதன் முகத்தைப் பார்த்தவள் அதிர்ந்து போய் அலறி விட்டாள்.

குழந்தையின் முகமும், சாயலும் அப்படியே உயிர் கொடுத்தவன் முகத்தைக் கொண்டு வர, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து முடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு கத்தினாள்; கதறினாள்; அங்கிருந்தவற்றை போட்டு உடைத்தாள். குழந்தையைத் தூக்க மறுத்து அடம்பிடித்தாள்; அதிகப்படியான மன அழுத்தத்தில் தலை கிறு கிறுக்க மறுபடியும் மயங்கி விட்டாள். மருத்துவ செவிலியர் விரைந்து வந்து அவளைப் பரிசோதிக்க, மறுபடியும் எழுந்தவள் பரிதிவர்மனும் அப்பாவும் அங்கே அமர்ந்து இருப்பதைக் கண்டு, அவன் முகத்தில் முழிக்க பிடிக்காமலும், அந்தக் குழந்தையை திரும்பவும் பார்க்க விரும்பாமலும் வெளியேறி விட்டாள்.

மகளின் நிலை உணர்ந்த வேல்முருகன், குழந்தையை அவனை நம்பி ஒப்படைத்து மகளுடன் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். அன்று முதல் அவன்தான் குழந்தையைப் பார்த்து வருகிறான்.

மகளைக் காண விடுதிக்கு வந்திருந்த சதாசிவம், மருமகன் வாழ்க்கையில் நடந்தவற்றை சொல்லி விட்டு, ஏன் அவனை வேண்டாம் என்று மறுத்தாய்? என்று கேட்டார். அப்போது தான் அவள் சித்தியின் மிரட்டல், பரிதிவர்மனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென்ற பயம், சந்திரனின் பேருந்து நிலைய வரவு, அடாவடித்தனம் நிரம்பிய பேச்சுக்களை சொல்லி அழுதாள்.

 அவர் தன்னிடம் முதலிலே சொல்லி இருந்தால், அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பேன் என சீறினார். அதோடு மருமகனை மணந்து அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அவளும் சம்மதம் தெரிவித்து, அன்று முதல் விடுதியை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டாள்.

அந்தக் குழந்தையை எடுத்துத் தானே வளர்க்கும் ஆசை இருந்தாலும், நாகேஸ்வரியை மீறி நடக்கும் தைரியம் அவளிடம் இல்லை. அதுபோல ஆரம்பத்தில் ரக்ஷனா அமெரிக்காவில் வசித்து வருவதால் வேறு யாரும் தவறாக நினைக்காவிட்டாலும், பச்சைக் குழந்தையை விட்டுச் சென்ற பிறகு அரசல் புரசலாக விசயம் கசிந்தது. அவனிடம் பலரும் விசாரிக்க, அவன் கடுமையாக நடந்து அவர்களை எட்ட நிறுத்தினான். யாரிடமும் அதிகமாகப் பேசுவதை தவிர்த்தான்.

நந்தனா வந்திருக்கும் நேரத்தில் திருமணத்தை முடிக்க நீலாம்பரி அவசரப்பட, சதாசிவத்தின் வார்த்தைகள் செவியேற மறுத்தன.

சதா பரிதிவர்மனைச் சொல்லிச் சொல்லிக் குத்திப் பேசினாள். இதற்கிடையில் ஒருநாள் அவன் நந்தனா வந்திருப்பதை அறிந்து பார்க்க வந்திருந்தான்; அவனை உள்ளே விடக்கூட இவள் அனுமதிக்கவில்லை. அவனும் என்ன செய்வான்? முன்பு என்றால் தைரியமாக எதிர்த்துச் சென்று கைப்பற்றித் தூக்கி வருவான். இப்போது ஒரு குழந்தையின் அப்பா, இன்னொருத்தியின் கணவன் என்பதால் பேசாமல் வெளியேறினான்.

நடந்த அனைத்தும் சதாசிவத்தை அழுத்தியது. எவ்வளவு சொன்னாலும் கேட்காமல், தன் வீட்டாருடன் சேர்ந்து கொண்டு மகளை வஞ்சிக்கும் திட்டம் நிறைவேறக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர், மகளிடம் மனம் திறந்து பேசினார். பின்னர் இப்போதே மகளை மணந்து கொள்ள சொல்லி மருமகனையும் வற்புறுத்த முடியாமல், திருமணத்தையும் நிறுத்த முடியாமல், தன் உயிரை மாய்த்துக் கொள்ள, தோட்டத்திற்கு வாங்கி வைத்திருந்த மருந்தை அருந்திவிட்டுத் துடியாகத் துடித்தார். மகள் கதறினாள்; நீலாம்பரி கல் போல நின்றாள். அவர் எவ்வளவு பேசியும் சொல்லியும், தனது இறுதி ஆசையை வெளிப்படுத்தியும் அசையாமல் இருக்க, நிராசையுடன் அவரது கண்கள் மூடிக்கொண்டன. அவர் இறந்த அடுத்த நிமிடம் ஓடிவந்த பரிதிவர்மன் அவரைக் கட்டிக்கொண்டு அழுதான்.

அவரது காரியங்கள் முடியும் வரை அங்கேயே இருந்தான். பின்னர் மனம் விட்டுப் பேசவும் பழகவும் தனக்கென இருந்த ஒரே ஒரு உள்ளமும் போய்விட, வாயை மூடி மௌனமாக இருந்தான். குழந்தை நிவேதாவின் சிரிப்பும் அழைப்பும் அவனைக் கொஞ்சமாக மாற்றினாலும், தாய் மீதான ஆத்திரத்தில் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டான்.

தனது அலுவலகம் மற்றும் பண்ணையைப் பார்வையிட நம்பிக்கையான நபரைத் தேர்ந்தெடுக்கும்போது ஹரிபிரசாத்தின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு நாட்கள் பறந்து சென்று, மறுபடியும் நந்தனாவின் திருமணத்தின் முன்பு அகிலன் மூலம் நடந்தது தெரியவும், அவளைக் கல்யாணம் செய்து அழைத்து வந்துவிட்டான்.

நாகேஸ்வரியின் மனம் மகன் சொன்ன விசயத்திலிருந்து மீள முடியாமல் தவித்தது; அவனது கோபம், அமைதிக்கான காரணம் புரிந்தது.

“இதோ உன் முன்பு நிற்கிறார்களே உன் அத்தை! அவருக்குப் பெற்ற பிள்ளை பெருசு இல்ல… உன் அம்மாவும் நீயும்தான் முக்கியம். என் வாழ்க்கையை அழிச்சதோடு, இதோ என்னை நம்பி வந்தவளையும் அடித்து, அவமதித்து, நெருப்பால் சுட்டுப் பொசுக்கி அத்தனை கொடுமைகளையும் செய்திருக்கிறார். இதுக்கு மேலும் நீ என்ன செய்யப் போற?” என்ற கேள்வியில் ரக்ஷனா இறுகிய முகத்துடன் அவனையே பார்த்து நின்றாள்.

“நிவேதா என் மகள்! அவள் என் கூடத்தான் இருப்பா. அவளுக்கு அம்மா அப்பாவா நாங்க இருக்கோம். நீ வந்த வேலை முடிஞ்சதுன்னா கிளம்பு” என்றான் பரிதிவர்மன்.

நாகேஸ்வரி தான் செய்த தவறுகளை நினைத்துக் கூனிக்குறுகிப் போனார்.

“என் மனசுல நந்தனாதான் இருக்கா… அவள்தான் என் மனைவி! அவளைத்தான் நான் மனசாரக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்; அவள்கூட மட்டும்தான் சந்தோஷமா இருந்து தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தேன். எனக்கு அவள் வேணும்! என்னைக்கு நீ என்னை விவாகரத்து செய்துட்டதா சொல்லித் தாலியைக் கழற்றி எறிஞ்சுட்டுப் போனியோ, அப்பவே நமக்குள் இருந்த உறவு முறிந்து போச்சு. இந்த வீட்டுக்கு நீ இப்போ வந்திருப்பதும், பேசுவதும் என் தாய்மாமனின் மகள்ங்ற உரிமையில் மட்டுமே!” என்றான்.

நந்தனா தன் தங்கையைப் பாவமாகப் பார்க்க, அவளோ அவன் சொன்ன எதுவும் தன்னைப் பாதிக்காதது போல நின்றிருந்தாள். குழந்தை நிவேதா, “அம்மா ஐயம்” என்று அவளைப் பார்த்துக் கைகாட்டியது. நாகேஸ்வரி உடைந்து போய் அழுதார்.

ரக்ஷனா மகளையே அசையாமல் பார்த்துவிட்டு மாடிக்குச் சென்று, அப்பாவிற்கு அழைப்பு விடுத்து அமெரிக்காவிற்குக் கிளம்ப ஆசைப்படுவதாகச் சொன்னாள்.

அவர் மகளிடம் பேசிவிட்டு மறுநாள் காலையில் தங்கையின் வீட்டிற்கு வந்தார். குழந்தை நிவேதா அம்மா அப்பாவை விட்டு அகல மறுக்க, பரிதிவர்மனும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தான்.

வீட்டில் சந்தோஷம் தொலைந்து, ஒருவர் மனதிலும்கூட நிம்மதி என்பது இல்லாமல் இருந்தது.

வேல்முருகனைக் கண்டதும் ஓடிச் சென்று காலில் விழுந்து கதறினார் நாகேஸ்வரி. அவர் தங்கையைத் தூக்கித் தட்டிக்கொடுக்க, “ரெண்டு நாளா முயற்சி செய்தும் நீ ஏன் அழைப்பை ஏற்கல?” என்று கேட்டாள் வனிதா.

அவளிடம் பேசப் பிடிக்காமல் அவர் முகத்தைத் திருப்பிக்கொள்ள, “எங்கே அவள்? என் மகள் வாழ வேண்டிய இடத்தில் வந்திருந்து அதிகாரம் செய்வது?” என்று கேட்டபடி, “நந்தனா! ஏய் நந்தனா, இங்கு வாடி!!” என்று அதிகாரமாக அழைத்தாள்.

நந்தனா மெல்ல தனது அறையிலிருந்து வெளியே வர, விரைந்து சென்று கூந்தலைக் கொத்தாகப் பற்றும் முன், அவள் முன்பு வந்து நின்று மறித்தாள் ரக்ஷனா!

“உன்கிட்ட எத்தனையோ முறை சொல்லியும் கேட்காம நீ செய்த தப்பு, இப்ப எங்க வந்து நிற்குது பார்த்தியா? அப்பவே நான் சொல்வதைக் கேட்டிருந்தா இப்படி ஒரு நிலை உனக்கு வந்திருக்குமா?” என்று புலம்பினாள்.

“என்னங்க பார்த்துட்டு நிற்கிறீங்க? அந்தக் கழுதையைப் பிடிச்சுப் போலீஸில் ஒப்படையுங்க. இதுக்கு மேலும் அவள் இங்கு இருக்கக் கூடாது. பரிதியை ஏமாற்றிச் சின்ன வயசுல இருந்து பணத்தையும் நகையும் புடுங்கியது போல, மொத்த சொத்தையும் அபகரித்துப் போக வந்திருக்கா…” என்று ஓலமிட்டாள்.

பரிதிவர்மன் மனைவியைத் தொடர்ந்து வந்து மாமாவின் அருகில் சென்று, “வாங்க மாமா, உட்காருங்க. வேலை எல்லாம் எப்படிப் போகுது?” என்று விசாரித்தான்.

அவரும் அவனிடம் பேசியவாறு இருக்க, வனிதாவால் இருப்பு கொள்ளவில்லை. ‘இங்கு என்ன நடக்கிறது? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டாமா?’ என்று கொதித்தாள்.

நந்தனாவையும் குழந்தை நிவேதாவையும் நிமிர்ந்து பார்த்தவர் புன்னகைக்க, நிவேதாவிடம், “பிள்ளைக்க தாத்தா, போ!” என்று சொன்னாள்.

அவள் மறுத்ததும் எழுந்து வந்தவர் குழந்தையை வாங்க, நந்தனா சித்தப்பாவின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றாள்.

“நீயும் என் பொண்ணுதான்டா, நல்லா இரு!” என்று ஆசீர்வதித்தார். பின்னர் அவளிடமும் குழந்தையிடமும் பேசியவாறு, “நீ ரொம்ப நல்லா சமையல் செய்வதா பரிதி அடிக்கடி சொல்லுவான். உன் கையால் ஏதாவது செய்து எடுத்துட்டு வாம்மா” என்றதும், அவள் முகமெல்லாம் பூரிக்க உடனே அங்கிருந்து அகன்றாள்.

ரக்ஷனா தன்னையே பார்த்திருப்பது கண்டு கண்மூடித் திறந்தவர், தன்னருகில் வருமாறு அழைத்தார். அவளும் அப்பாவின் அருகில் சென்று அமர, குழந்தை நிவேதா அவளைப் பார்த்ததும் தாத்தாவை ஒட்டியது. ரக்ஷனாவின் கைவிரல் தன்னை நோக்கி வருவது கண்டு தட்டிவிட்டது. தனது இதழ்களைப் பிதுக்கிக்கொண்டு, “தாத்தா!” என்று அவர் கன்னத்தைப் பற்றியவாறு, “அம்மா ஐயம்” என்றாள்.

அவரது மனதிற்குள் வலித்தது; ரக்ஷனா முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க முயன்றாள்.

“ஐயமா? என் பொண்ணு ஐயமா? அந்த அளவுக்கு என்ன செய்தா நிவேதா கண்ணு?”

அவர் சாதாரணமாகக் கேட்க நினைத்தாலும் குரல் உடைந்து போனது. அதை அருகில் இருப்பவர்கள் உணரவே செய்ய, “ஓ… ஓ… கத்திச்சு! அம்மா…” என்று வெளியே பார்த்துக் கைகாட்டிவிட்டு, அங்கிருந்த சாதனத்தைத் தூக்கிக் கீழே போட்டுக் காட்டினாள். பிறகு காலில் காயம் பட்டது போலவும் செய்தாள்.

“நண்டு பாவம்!” என்றதும் அவர் பேத்தியின் உச்சியை வருடினார். ‘நண்டு’ என்ற அவளது பேச்சைக் கேட்ட பரிதிவர்மன் சிரித்தான்.

அப்போது நந்தனா அனைவருக்கும் சூடாகக் காலை உணவை எடுத்து வர, “அதைத் தொடாதீர்கள்! அவள் அதுல ஏதாவது கலந்து கொண்டு வந்திருப்பா” என்று இடையில் புகுந்தாள் வனிதா.

வேல்முருகன் அவளைப் பார்க்க, “சொக்குப்பொடி போட்டு ஏற்கனவே நம்ம மருமகனை மயக்கிய மாதிரி மயக்கிடப் போறா…” என்றதும் அவர் கண்டிப்புடன் பார்த்தார்.

ரக்ஷனா, “அம்மா சொல்றது ஒண்ணும் தப்பில்லையே! அவங்களை மாதிரி போதை மாத்திரையும் மதுவும் கலந்து சுயநினைவு இல்லாம வாழச் செய்யும் அளவுக்கு, இவளுக்குத் திறமை பத்தாது” என்றாள்.

வனிதா அதிர்ந்து போக, “வெறும் சொக்குப்பொடி போட்டா கூட அடுத்தவங்க முன்னாடிதானே மயங்குவார்கள்! இது தனியறையில் யாரை யாரோடு இணைக்க வேணுமானாலும் பயன்படுத்தலாம். அதில் உங்க மனைவி எக்ஸ்பர்ட்… பார்த்து இருங்கப்பா, பிறகு உங்களுக்கும் அப்படியே ஆகிடப் போகுது” என்றாள்.

பரிதிவர்மன் புதிராக அவளைப் பார்க்க, “நந்தனா சாப்பாட்டைத்தான் நம்ம நிவி இவ்வளவு நாளும் சாப்பிட்டு இருக்கா; சொல்லப் போனால் அவள் வந்த பிறகுதான் சாப்பிடவே செய்றா. நானும் இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் நிம்மதியா சாப்பிட்டேன். மத்தவங்களை மாதிரி அதுல எதுவும் கலக்கல; நம்பிச் சாப்பிடலாம்” என உத்தரவாதம் தந்தாள்.

மகளின் செயல் தாயவளின் முகத்தில் அறைந்தது போலிருந்தது. அவளை உதாசினப்படுத்திவிட்டு அப்பாவை அழைத்துச் சென்று சாப்பாட்டு மேஜையின் முன்பு அமர, தகப்பனார் வருவார் என்பதால் அத்தனை நேரமும் சாப்பிடாமல் இருந்த ரக்ஷனா, தானும் ஒரு தட்டைத் தூக்கி முன்னே வைத்தாள்.

“அம்மா நிவிக்கும்…” என்று நிவேதாவும் சொல்ல, அவளது கன்னத்தைக் கிள்ளினாள் ரக்ஷனா.

இவள் முறைத்து அழகு காட்டினாள்; மறுபடியும் அதுபோலச் செய்ததும் அடித்துச் சத்தமிட்டாள்; “அம்மா…” என்று நந்தனாவிடம் புகார் வாசித்தாள்.

ரக்ஷனா சத்தமாகச் சிரித்ததும், “நண்டு, இந்த அம்மாவை அடி” என்றாள். இவள் வேண்டுமென்று வம்புக்கு இழுக்க, நிவேதா இவளை அடிப்பதற்காகத் துரத்திக்கொண்டு ஓடினாள். இருவரின் ஓட்டமும், சிரிப்புக் குரலும், கொலுசு ஒலியும் வீடு முழுவதும் எதிரொலித்தது. இறுதியில் ரக்ஷனா அவளைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க, “அப்பா! அடிப்பா…” என்று மகள் அலறினாள்.

கண்களில் நீர் வரும் அளவுக்கு ரக்ஷனா சிரித்தாள்.

மகளை அப்படி ஒரு நிலையில் பார்க்க முடியாமல் வேல்முருகனின் மனம் வலித்தது.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top