அத்தியாயம் : 19
காலை உணவை முடித்ததும், சோஃபாவில் சென்று அமர, அதற்காகவே காத்திருந்தது போல வனிதா வந்து நின்றாள். ‘பஜாரி மாதிரி வந்து நிற்கிறதைப் பாரு; கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க மாட்டேங்கிறா’ என்ற தாத்தாவின் வார்த்தையில், ஏற்கனவே நாகேஸ்வரி கூறியதைக் கேட்டிருந்த நிவேதா, “பஜாரி மாதிரி வந்திருக்கு பாரு” என்றாள்.
ரக்ஷனா வயிற்றைப் பிடித்துக்கொண்டு சோஃபாவில் சாய்ந்து குலுங்க, மற்றவர்களும் சிரித்து விட்டனர்.
அவள் குழந்தையைப் பார்த்து முறைத்துவிட்டு, “யாரைப் பார்த்துப் பஜாரின்னு சொல்றே?” என்று சிடுசிடுக்க, நிவேதா “பாட்டி பஜாரி” என நாகேஸ்வரியை முதலில் கைகாட்டிவிட்டுப் பின்னர் வனிதாவைப் பார்த்து, “நீயும் பஜாரி” என்றாள்.
வேல்முருகன் சத்தமாகச் சிரித்துவிட, குலுங்கி குலுங்கிச் சிரித்ததில் இருமல் வந்துவிட, ரக்ஷனா அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“பரவாயில்லையே! என் பேத்தி அவங்க தாத்தா மாதிரி புத்திசாலியா தான் இருக்கறா…” என்றார்.
நிவேதா சிறிய வடிவிலான வெண்ணிற பற்களைக் காட்டிக் கொண்டு, “எங்க தாத்தா மாதிரியே நிவி” என்று அவர் மீது சாய, “நான்தான் எங்க அப்பா மாதிரியே…” என்று மகளை வம்புக்கு இழுத்தாள் ரக்ஷனா.
அவள் அழகு காட்டியதும், மகளின் கன்னத்தைப் பற்றி முத்தமிட்டவள், “டேட்! இந்தப் பாப்பாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! நாம போகுறப்போ அவளையும் அழைச்சுட்டுப் போகலாமா?” என்றாள்.
நிவேதா உடனே மறுத்து, “நான் வர மாட்டேன்” என்றாள். அவள் நிமிர்ந்து பார்த்து, “ஏன்? இந்த அம்மா கூப்பிட்டா வர மாட்டியா?” என்றதும், அவள் எழுந்து சென்று நந்தனாவைக் கட்டிக்கொண்டாள்.
“நண்டுவை விட்டு நிவி வராது” என்றதும், அவள் ஏக்கமாகக் குழந்தையைப் பார்த்தாள். தங்கையின் நிலை சங்கடப்படுத்த, மகளைத் தூக்கி அணைத்தவள், “நிவிமா! அவங்களையும் நம்ம கூடவே இருக்கச் சொல்லு. எல்லாருமா சேர்ந்து இதே வீட்டுல இருக்கலாம்” என்றாள் நந்தனா.
அவளோ தலையாட்டியபடி இருக்க, “உனக்கு அந்தத் தாத்தாவைப் பிடிக்கலையா?” என்றதும், “தாத்தா பிடிக்கும், பாட்டி ஐயம்” என்றாள்.
தன்னை எல்லோருக்கும் முன்பு கேலி செய்யும் பேத்தியை முறைத்தவர், “சேர்க்கை அப்படி இருந்தா பேச்சும் அப்படித்தான் வரும்! இதுக்குத்தான் குழந்தையை நம்ம கூட வச்சுக்கலாம்னு சொன்னேன். இப்ப அவள் நம்மையே யாரோ போலப் பேசுறா. இதுக்கு மேலும் விட முடியாது” என்று சொல்லி குழந்தையைப் பற்றி இழுக்க, அவள் வர மறுத்து நந்தனாவைக் கட்டிக்கொண்டாள்.
வனிதா குழந்தையை அடிப்பதற்காகக் கை ஓங்க, நந்தனா குழந்தையைத் தனக்குள் வைத்து மறைத்துக்கொண்டாள். அந்தக் கோபத்தில் “நீ யாருடி? எனக்கும் என் பேத்திக்கும் இடையில் வருவது? முதலில் இந்த வீட்டை விட்டு வெளியே போடி!” என்று சீறினாள்.
நிவேதா பயத்தில் அழுதுவிட, “யாரைப் பார்த்து வெளியே போகச் சொல்றே? அவளுக்கும் இதே வீட்டில் உனக்குச் சரிசமமான உரிமை இருக்கு” என்றார் வேல்முருகன்.
“வேறு ஜாதிக்காரியை என்னோடு ஒப்பிட்டுப் பேசாதீங்க. அவளும் நானும் ஒண்ணா? நான் என்ன இவளை மாதிரியா அடுத்தவ புருஷனுக்காக அலையிறேன்” என்றாள்.
அடுத்த கணம், “அவளை மாதிரி இல்ல, அதைவிட மோசமான ஜென்மம்! கூடப் பிறந்த அக்காவைக் கல்யாணம் செய்ய போகும் மாப்பிள்ளை மீதான ஆசையில் அபாண்டமான பழி சுமத்தி, தானே கல்யாணம் செய்தவர். எங்கே அந்தப் பெரியம்மா மறுபடியும் இங்கு வந்தா இவங்களால் நினைச்ச மாதிரி இருக்க முடியாதுன்னு, தாத்தா பாட்டியிடம் தப்புத்தப்பா பேசி ஒரேடியா ஒதுங்கிப் போகச் செய்தவர், கூடப் பிறந்த அக்கா இறந்து அந்தத் குழந்தை அநாதையா தவித்தும் ஏன்னு கேட்காத சுயநலவாதி!” என்று மகள் ரக்ஷனா சொல்ல, பேயறைந்தார் போல ஆகினாள் வனிதா!
அந்த மாலை நேரம் பண்ணை வீட்டின் முன்புறம் பரபரப்பாக இயங்கியது. தாணுலிங்கத்தின் சமாதியின் முன்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சக்கரைப்பொங்கல் தயாராகிக் கொண்டிருந்தது. பெண்கள் அனைவரும் புடவையில் வந்திருக்க, ஆண்கள் இருவரும் வேட்டி சட்டையில் காட்சியளித்தனர்.
பரிதிவர்மன் லேசாக முறுக்கிவிட்ட மீசையுடன், தலை கொள்ளா கேசத்துடன், முகம் முழுவதும் பரவிய புன்னகையுடன் காணப்பட்டான். நந்தனா வாடாமல்லி நிறப் பட்டுப்புடவையில், மனம் நிரம்பிய மகிழ்ச்சியுடன் காட்சியளித்தாள்.
குழந்தை நிவேதா அங்கேயும் இங்கேயும் ஓடி, “அதென்ன! இது என்ன?” என்று கேட்டபடி இருந்தாள்.
ரக்ஷனா பச்சை நிறப் பட்டுப்புடவையில், சமாதியில் நடக்கப்போகும் பூஜைக்குத் தேவையானதை எடுத்துக்கொடுத்துக் கொண்டிருக்க, அனைத்தையும் பார்த்துக் கண்கலங்க நின்றார் நாகேஸ்வரி. இதே சந்தோஷம் எப்போதோ கிடைக்க வேண்டியது அல்லது இப்போது தான் கிடைக்க வேண்டும் என்பது விதியின் கணக்கோ?
அன்றே மகன் சொன்னது போல இரண்டு வருடம் தாமதித்துத் திருமணத்தைச் செய்து வைத்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்? கணவரின் ஆசைகள் தெரிந்தும் கூடத் தவறிழைத்துவிட்டோமே என்று மனதிற்குள் கதறினார். மகன் முகம் பார்த்துப் பேசி எத்தனை நாள் ஆகிறது? முன்பு போல உரிமையுடன் பேசி அருகில் அமர்ந்து விசாரித்து எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன! ஒரு தாயாகத் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டோம். மகனின் திருமண விசயத்தில் பெரும் பிழையைச் செய்து அவனைக் கலங்கவிட்டுவிட்டோம் என்று வேதனைப்பட்டார் நாகேஸ்வரி.
தங்கையின் மனதைப் புரிந்து கொண்டது போல வேல்முருகன் அவரை அழைத்து அருகில் அமர வைக்க, நந்தனா அனைவருக்கும் சூடான காஃபியை எடுத்து வந்தாள்.
பரிதிவர்மன் பார்த்த பார்வையும், உதடுகளுக்கு இடையில் மறைத்து வைத்திருந்த புன்னகையும் அவனது கள்ளத்தனத்தைத் தெரியப்படுத்த, இதழ்களைக் குவித்து அழகு காட்டினாள் நந்தனா. அவன் புருவத்தை உயர்த்தி, நாவைச் சுழற்றிக் காண்பிக்க, அவனை முறைத்துப் பார்த்தவள், “மாமா, வரவர இவங்களுக்கு ரொம்பவும் கொழுப்பு கூடிப் போயிருச்சு. என்னன்னு கேளுங்க மாமா!” என்று தாணுலிங்கத்தின் சமாதியைப் பார்த்துச் சொன்னாள்.
உடனே அவனும், “நீங்களே கேளுங்கப்பா! அன்னைக்கு அப்படி ஒரு வார்த்தை சொன்னதுக்கு என்மேல எவ்வளவு கோபப்பட்டீங்க… ஆனால், உங்க மருமகள் நான் கல்யாணம் செய்யச் சொல்லியும் கேட்காம மறுத்துப் போயிட்டாப்பா! இப்பவும் என் பக்கத்துல கூட வருவதில்லை, ஏன்னு கேட்பதும் இல்லை. கொஞ்சம் புத்திமதி சொல்லிக் கொடுங்கப்பா” என்றான்.
அவள் இடுப்பில் கை வைத்துக்கொண்டு, “பொய் சொல்றாங்க மாமா! எனக்கும் இவரை ரொம்பப் பிடிக்கும், ஆனால் எங்க சித்தியும் அந்தச் சந்திரனும் எதுவும் செய்துடக் கூடாதுன்னு பயந்துதான் விலகிப் போனேன்” என்று பதிலளித்தாள்.
“ஆமாம், ஆமாம்! அப்படியே தலையை எடுத்துடுவாங்க. இப்ப சீவிட்டாங்க இல்ல” என்று பரிதிவர்மன் கிண்டலாக சொல்ல, அவள், “வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கு இருக்கு” என்று முணுமுணுத்தாள்.
“ஏன், இங்கே இல்லையா? நான் ஆல்வேஸ் ரெடி பேபி” என்று கிறக்கத்துடன் சொல்ல, அருகில் கம்பு ஏதாவது கிடக்கிறதா என்று பார்த்து எடுத்தவள் அவனைத் துரத்தினாள். பரிதிவர்மன் வேண்டுமென்றே அவளது இடையில் கிள்ளிவிட்டு, கையில் அகப்படாமல் ஓடினான்.
அவள் துரத்த, இவன் ஓட, மகளும் கைதட்டியபடி இடையில் ஓடிவர, மூவரும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தனர். வேல்முருகன் வாய்விட்டுச் சிரிக்க, நந்தனாவும் கூடப் புன்சிரிப்புடன் பார்த்திருந்தாள்.
இறுதியில் அவனது செவியைப் பிடித்ததும், இடையோடு இழுத்து நிறுத்தியவன் சொன்னதைக் கேட்டு அவள் வெட்கினாள். மகள் கைதட்டி குதிக்க, அவளைத் தூக்கிப் போட்டு பிடித்தான். மூவரையும் ஒன்றாகப் பார்த்த நாகேஸ்வரி, கண்களில் துளிர்த்த நீர்த்துளியைத் துடைக்க, தன்னை மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு பேசி மகிழும் அவர்களை வெறித்தபடி இருந்தாள் வனிதா!
அவள் ஏதோ நினைத்து வந்திருக்க, இங்கு நடப்பவை யாவும் தலைகீழாக உள்ளன. அவளது ஒவ்வொரு கேள்விக்கும் மகள் அளிக்கும் பதில்கள் மூச்சுமுட்ட வைக்கின்றன. அன்றே அமெரிக்காவிலிருந்து நேராக பரிதிவர்மனைக் காண நினைத்திருக்க, ரக்ஷனா, “தான் மட்டும் போவதாக” அப்பாவிடம் சொல்லிவிட்டு விமான நிலையத்திலிருந்து வந்துவிட்டாள். கணவரின் அதட்டலும் முறைப்பும் அவளை அசைய விடாமல் செய்ய, அங்கு என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை.
இதில் இத்தனை நாளும் தோழி, தோழி என்று பாசத்தைக் கொட்டிய நாகேஸ்வரியும், அழைக்க அழைக்கக் கைப்பேசியின் அழைப்பை ஏற்கவே இல்லை. இங்கு வந்த பிறகும் ஒரு வார்த்தை பேசவில்லை; ஏன், அவள் அருகில் கூட வரவில்லை. மொத்த குடும்பமும் தனக்கு எதிராக மாறிவிட, செய்வதறியாமல் திகைத்து நின்றாள் வனிதா.
தனது திட்டங்கள் யாவும் தவிடுபொடியாகிவிடுமோ என்ற பயம் அவளைப் பிடித்து ஆட்டியது.
“அப்பா! அம்மாவையும் தூக்குப்பா” என்ற மகளின் கோரிக்கையை ஏற்று அவன் தூக்கப் போக, அவள் நாணிப்போய் பின்வாங்கினாள். அவன் ஒரே தூக்கில் மனைவியை தூக்கிவிட, மகளின் ஆர்ப்பரித்த குரல் அவனை மேலும் மகிழ்ச்சியடைய வைத்தது.
அப்படியே தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றவன் இருவரையும் படுக்கையில் போட்டுவிட்டு, “அச்சோ! அப்பா, குறுக்கு எலும்பு உடைந்து போச்சுடா சாமி! குண்டோதரி என்ன கனம்?” என்று நடித்தான்.
மகள் அவன் வயிற்றில் வந்து அமர்ந்துகொள்ள, அவர்கள் மூவருக்கும் இடையில் உள்ள பிணைப்பு பார்த்து நின்ற அத்தனை பேருக்கும் புரிந்தது.
வெளியே மணியோசை கேட்டதும் மூவரும் வெளியே வர, நந்தனாவின் முகம் சித்தப்பாவை எதிர்கொள்ள முடியாமல் நாணிச் சிவந்தது. அவர், “நல்லா இருமா!” என்றதோடு கைகூப்பி அத்தான் தாணுலிங்கத்தை வணங்கினார்.
பூஜைகள் யாவும் முடிந்தன. மருமகனையும் நந்தனாவையும் சமாதியைத் தொட்டு வணங்கச் சொன்னவர், “உங்க அப்பாவின் ஆத்மா இப்பதான் சாந்தியாகி இருக்கும்” என்றார்.
உடனே கெவுளிச் சத்தம் எதிரொலிக்க, அனைவருக்கும் புல்லரித்துப் போனது.
“உங்க அப்பாவின் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கு. கூடிய சீக்கிரம் அவரே உனக்கு வாரிசா பிறப்பெடுப்பார்” என்று மனதார வாழ்த்தினார் வேல்முருகன்.
அவன் தன் மனைவியுடன் சேர்ந்து அவரது காலைத் தொட்டு ஆசிபெற, அவனது அம்மா கண்ணீர்விட்டு அழுதுகொண்டே இருந்தார்.
அனைவரும் பூஜைகள் முடிந்ததும் சக்கரைப்பொங்கலை எடுத்து அங்கேயே அமர்ந்து உண்டனர். ரக்ஷனா குழந்தையின் வாயில் சூடான பொங்கலை ஊதி ஆற வைத்து ஊட்ட போக, “நிவி சாப்பிடும்” என்று அவள் மறுத்தாள்.
ரக்ஷனா வேண்டுமென்றே நந்தனாவின் தோளில் சாய்ந்து மடியில் படுத்துக்கொள்ள, “நிவிக்கு அம்மா… நீ போ” என்றாள் நந்தனா.
“எங்க அக்கா, நீ வேணா உங்க அப்பா கிட்ட போ” என்றாள் ரக்ஷனா.
அவள் மறுத்து, ரக்ஷனாவை அடித்தாள்; தள்ளிவிட்டாள்; அழகு காட்டினாள். அதைப் பார்த்த வேல்முருகன், “அப்படியே ரெண்டு பாட்டியும் உரித்து வச்சிருக்கு” என்றார்.
பரிதிவர்மன் சத்தமாகச் சிரித்தபடி, “எல்லாம் அவளை இதுவரை வளர்த்தவரின் சாயல்தான்” என்று அம்மாவை இழுத்துவிட்டான். அவரும் புரிந்து கொண்டு, “என் பேத்தி என்னை மாதிரி இருப்பதில் எனக்குச் சந்தோஷம்தான்!” என்றார்.
“இல்ல, நிவி அப்பா போல, நண்டு போல…” என்றதும், மறுபடியும் சிரிப்பொலி கேட்டது.
“எங்க அக்காவைப் போலவா?” என்று ரக்ஷனா வம்பு பேச, “இதோ அந்த தாத்தாவின் பெரிய மகள்தான் உங்க அம்மா, நான் அவரது தங்கை” என விளக்கினாள் நந்தனா.
“அப்ப எனக்கு இல்ல” என்று இரு கைகளையும் விரித்து ஆட்டியபடி கூற, “உங்க அப்பா கிட்ட போய் கேளு” என்று பரிதிவர்மனையும் தங்களது பேச்சில் இணைத்துக்கொண்டாள்.
அவன் புரிந்தது போல மனைவியின் அருகில் வந்து அமர, “அப்பா! நிவிக்கு இல்ல…” என்றதும், “அதுக்கு என்னடா கண்ணு? கூடிய சீக்கிரம் உனக்குத் தம்பி வரப் போறான். அவன் உன் கூடவே இருந்து பார்த்துப்பான்” என்றான்.
அவள் கைதட்டி குதூகலித்தபடி, “நிவிக்குத் தம்பி வரப் போகுது” என்று ரக்ஷனாவிடம் சொன்னாள்.
“ஓ! அப்ப தங்கை வர வேண்டாமா?” எனச் சூசகமாகக் கேட்க, “அது உங்க அம்மாவின் தங்கை பெத்து தருவாங்க, சொல்லு” என்றான் பரிதிவர்மன்.
பெண்கள் இருவரும் திடுக்கிட்டு விழிக்க, அவன் கண்ணைச் சிமிட்டி, “நீங்க ரெண்டு பேரும் ஓகேன்னா நானும் ரெடிதான்” என்றதும், பெண்கள் இருவரும் அவனைத் துரத்திச் சென்றனர். வேல்முருகனுக்குச் சிரித்துச் சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது.
அன்று இரவு பொழுதைப் பண்ணை வீட்டில் கழித்துவிட்டு மறுநாள் வீட்டிற்குச் சென்றனர். வனிதாவின் உள்ளம் குமுறிக் கொண்டு வெடிப்பதற்கான நேரத்தைப் பார்த்தபடி இருக்க, “அப்பா, இங்கிருந்து கிளம்பும் முன் அந்தக் கோழிப்பண்ணையும், அத்தானின் ஆபிஸையும் பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்டாள் ரக்ஷனா.
அவரும் அதுபோல மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட, “நீ என்ன நினைச்சுட்டு இருக்கே? என் மகள் வாழ்க்கை கண்முன் அழிந்து போவதைப் பார்த்தும் உன்னால் எப்படி அமைதியா இருக்க முடிஞ்சது? அந்த அநாதையை அடித்துத் துரத்தாம வீட்டுல வச்சு தினமும் சூடு சூடா சமையல் செய்யச் சொல்லித் தின்னுட்டு இருக்கறியா?” என்று கொதித்தாள் வனிதா.
நாகேஸ்வரி நின்று நிதானமாக தன் தோழியும், அண்ணன் மனைவியுமான வனிதாவை ஏறிட்டார்.
“என்ன, உங்க எல்லாருக்கும் என்னைப் பார்த்தா எப்படி இருக்கு? ஒழுங்கா அவளை வெளியே போகச் சொல்லு! இல்லையா, அவளின் கழுத்தை நெறித்து நானே கொன்னுடுவேன்” என்று சீறினாள்.
நந்தனா குழந்தையைக் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அங்கு வர, “ஏன்டி! உனக்கு இந்த ஊரில் வேறு யாரும் கிடைக்கலியா? என் பேத்தியையும் அபகரித்து மருமகனையும் பிடுங்கி, என் மகள் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கறியே… நீ நல்லா இருப்பியா? நாசமா போயிடுவே” என்று சபித்துவிட்டுக் குழந்தையைப் பிடித்து இழுக்கப் போனாள்.
“வேண்டாம் அண்ணி!” என்ற நாகேஸ்வரியின் அந்நிய அழைப்பு அவளை அதிரவிட, “அண்ணியா? நீ எப்பவும் வனிதான்னு பெயர் சொல்லிதானே கூப்பிடுவே! இது என்ன புதுசா?” என்றாள் வனிதா.
“ஆமாம் அண்ணி! இங்கு எல்லாமே புதுசாதான் நடக்குது. என் தோழி மீதிருந்த பாசம் கண்ணை மறைத்ததால் நான் செய்த தப்பு கூட எனக்குத் தெரியல; இதுக்கு மேலும் வேண்டாம்னு முடிவு பண்ணி ரொம்ப நாளாச்சு. நீங்களும் உங்களை மாத்திக்கோங்க” என்றார் நாகேஸ்வரி. இன்னும் வனிதாவால் நம்ப முடியவில்லை.
“நந்தனா இந்த வீட்டு மருமகள்! என் மகனின் மனைவி, அவளை இனிமேல் மரியாதை இல்லாமப் பேசும் வேலையை வச்சுக்க வேண்டாம்!” என்று எச்சரித்தார்.
அவள் விழிகள் விரிய நோக்கியவாறு, “என் மகளை உன் பொண்ணா பார்த்துக்கறதா சொன்னியே, அப்ப ரக்ஷனாவின் நிலைமை…” என்று கேட்க, “அதை முடிவு செய்ய வேண்டியது ரக்ஷனா! உங்க பேச்சுக்குக் கட்டுப்பட்டு நான் செய்த தவறுகள் போதும். இனிமேலும் என் மகனின் வாழ்க்கை அழிந்து போக நான் தயாராக இல்லை” என்று உறுதியாகச் சொன்னார் நாகேஸ்வரி.
வனிதாவிற்கு இருந்த ஒரே நம்பிக்கையும் பொய்த்துப் போக, தன்னிடம் பேசியது நாகேஸ்வரியா என ஸ்தம்பித்துப் போனாள்.
தொடர்ந்து தனது மருமகள் மற்றும் பேரக் குழந்தையின் அருகில் சென்றவர், நந்தனாவின் உச்சியில் கை வைத்துப் புன்னகைக்க, அவள் நெகிழ்ந்து போய் அத்தையைப் பார்த்தாள்.
“என்னை மன்னிச்சிடுன்னு கேட்கிற அளவுக்கான தப்பை நான் செய்யல; ஆனாலும் இனிமேல் நான் உன்னை என் மகளா பார்த்துப்பேன்” என்றதும், “அத்தம்மா!” என்றாள் நந்தனா.
“நீ இனிமேல் இப்படியே கூப்பிட்டா நான் சந்தோஷப்படுவேன்” என்ற நாகேஸ்வரி கண்களில் வடிந்த நீரைத் துடைத்துக்கொள்ள, அவள் உணர்ச்சிவசப்பட்டுப் பேச முடியாமல் நின்றாள்.
மதிய உணவு நேரம் அனைவரும் வர, சாப்பாட்டு மேஜை விதவிதமான உணவுகளால் நிரம்பியிருந்தது. அதன் வாசனை அவர்களைக் கட்டிப்போட, ஓடிச் சென்று ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தாள் நந்தனா.
நிவேதா, “நண்டு செய்தது” என்று சொல்ல, “ஓ நண்டா! அப்ப ஒரு கை பார்த்துடலாம்” என்றார் வேல்முருகன்.
“நான் தர மாட்டேன்” என்று நிவேதா கூறியதும், “உங்க நண்டை நான் போகுறப்போ தூக்கிட்டுப் போயிட்டா என்ன பண்ணுவே?” என்று வம்பு பேசினாள் ரக்ஷனா.
நிவேதா தலையாட்டியபடி, “நிவி! நண்டு தராது” என்றதும், அவள் சிரித்த முகத்துடன் மகளைத் தூக்கி மேஜையில் அமர வைத்தாள். அவர்கள் இருவரின் பேச்சுக்களையும் கேட்டபடி அங்கு வந்தார்கள் மற்ற அனைவரும்!
பின்னர் சாப்பாட்டு மேஜை கலகலப்பாக மாறியது. நிவேதாவிற்கு நந்தனா ஊட்டிவிட, பரிதிவர்மன், “நண்டு! இந்த நண்டு வறுவல் உன்னை விட சூப்பர்” என்று கண்ணடித்தான்.
“நண்டு வறுவல்! அம்மா வறுவல்!” என்ற நிவேதாவின் பேச்சில் அவன் முகம் மலரச் சிரித்தான்.
உணவை முடித்துவிட்டு கூடத்தில் காற்றாட அமர, குழந்தை தன் அப்பாவின் மடியில் படுத்து உறங்கியது. ரக்ஷனா எழுந்து சென்று மகளின் உறக்கம் கலையாதவாறு அவள் கன்னத்தில் கோடு வரைந்தபடி இருக்க, பரிதிவர்மன் மகளைத் தூக்கி அவளிடம் கொடுத்தான்.
அவள் உடனே தனது அறைக்குக்கொண்டு சென்றுவிட, என்னதான் திரை போட்டு மறைக்க முயன்றாலும் அவளது தாய்மைப்பாசம் வெளியே தெரியவே செய்தது.
வேல்முருகன் தன் மனதில் இருப்பதை வெளிக்காட்டாமல் இருக்க முயல, வனிதாவிற்கு கோபம் தலைக்கேறியது. ‘இதென்ன, அவளது மகளை இவர்கள் பிடுங்கி வைத்துக்கொண்டு யாரோ ஒருவரைப் போல அலைய விடுவது? இவர்களை சும்மா விடக்கூடாது’ என்று முடிவு செய்தாள்.
“நாங்க ரெண்டு நாளில் கிளம்புறோம். இனி என் மகளால் உன் வாழ்க்கையில் எந்த இடைஞ்சலும் வராது! சந்தோஷமா இருங்க” என்றார் வேல்முருகன்.
அவன் எதுவும் சொல்லாமல் இருக்க, வனிதா ஆவேசமாக வந்தாள். அவளை அவர் பார்வையால் அடக்க, “என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா? இது நம்ம மகளின் வாழ்க்கை. வேறு யாருக்கோ விட்டுக்கொடுத்து அவளைக் காலமெல்லாம் தனிமையில் இருக்க விடப் போறீங்களா?” என்று கொதித்தாள்.
“உன் மகள் ஏற்கனவே மூணு வருஷம் சும்மாத்தானே இருந்தா? உங்களுக்காக அவனும் தன் வாழ்க்கையை இழந்து தனிமரமா வாழணுமா? அன்னைக்கு நான் அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காம, என் தங்கையின் மனதையும் மாத்தி உன் சுயநலத்துக்குப் பலியாக்கினே!” என்று வேல்முருகன் கேட்க, “ஆமாம்! நான் சொன்னதில் எந்தத் தப்பும் இல்லை. வேணுமா உங்க தங்கையிடம் கேட்டுப் பாருங்களேன்” என்று சாட்சிக்கு நாகேஸ்வரியை இழுத்தாள் வனிதா.
“அவளை என்னடி கேட்கணும்? நீதானே அவள் மனசைக் கெடுத்து வச்சிருக்கே? உன்னாலதான், உன்னோட பிடிவாதத்தால்தான் இன்னைக்கு உன் மகள் தன் வாழ்க்கையை இழந்து நிற்கிறாள்” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினார் வேல்முருகன்.
“நான்… நான் என்ன செய்தேன்? ரக்ஷனாவுக்கு பரிதியைப் பிடிச்சிருந்தது. அவன் என் தோழியின் மகன், எனக்கு மருமகனாக வரணும்னு ஆசைப்பட்டேன். அதுபோல நடந்தது; இடையில் இவள் மட்டும் வராம இருந்தா இன்னைக்கு அவள் நல்லா இருந்திருப்பா” என்று நந்தனாவைப் பார்த்துக் கூறினாள் வனிதா.
கீழே கேட்ட சத்தத்தில் எழுந்து வந்த ரக்ஷனா, அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தபடி நிற்க,
“நம்ம மகளின் கல்யாணம் உங்க எல்லார் முன்பும் நடந்தது. நான் ஒண்ணும் மறைத்து நடத்தல; அவள்தான் பரிதியின் சட்டப்பூர்வமான மனைவி. இந்த வீட்டில் வாழ முழு உரிமையும் அவளுக்குத்தான் இருக்கு. இந்த வீடு, அலுவலகம், பண்ணை வீடு எல்லாம் நிவிக்குத்தான் சொந்தம். அதை யாரோ ஒருவருக்கு விட்டுத் தர முடியாது” என்றாள்.
“ஓ! என்ன செய்யப் போறே? பரிதிக்கு நந்தனாவைத்தான் பிடிச்சிருக்கு. அவளை அவன் முறைப்படி கல்யாணம் செய்திருக்கான். இனிமேல் உன்னால எதுவும் செய்ய முடியாது” என்றார் வேல்முருகன்.
“நீங்களும் ஒரு அப்பாவா? கண்ணு முன்னே பெத்த மகளின் வாழ்க்கை அழிந்து போவதைப் பார்த்தும் உங்களால் எப்படி வேறு பெண்ணுக்காகப் பேச முடியுது? அவள் சதாசிவத்துக்குத்தானே பிறந்தவள்?” என்று வனிதா கூற, மனைவியின் பேச்சு எல்லை மீறிப் போவதை உணர்ந்து ஓங்கி ஒன்று கொடுத்துவிட்டார் வேல்முருகன்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
