காலை நேரம் எழுந்ததும் அவன் தயாராகி கீழே வந்தான். சமையல்காரப் பெண்மணியின் அருகில் சென்று, தனது மனைவிக்குத் தேவையானதைச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டான். அவரும் சரி என்று சொன்னதும், மனைவி மகளிடம் விடைபெற்றுத் தனது பைக்கில் ஏறி அமர்ந்தான்.
அந்த ஊரிலேயே பெரும் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்த பரிதிவர்மன், எம்சிஏ பட்டப் படிப்பை முடிக்கும் முன்பே அப்பாவின் ஆதரவுடன் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருவதோடு, அங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் நூற்றுக்கணக்கான முட்டைகளைச் சேமித்து மொத்தமாக விற்பனை செய்து வருகிறான். நாட்டுக் கோழிகளும், லெக்கோர்ன் கோழிகளும் அவனது பண்ணையில் நிறைய உள்ளன.
அவற்றைப் பார்த்துக்கொள்ளவும் பராமரிக்கவும் ஒரு தொகையை மாதாமாதம் செலவு செய்கிறான். அதேபோல, அங்கிருந்து கிடைக்கும் பணத்தைச் சேகரித்து மற்ற வேலைகளையும் பார்த்து வருகிறான். அவனது அப்பா இறந்த பிறகு மொத்தப் பொறுப்பும் அவன் தலையில் விழுந்துவிட, தென்னைத் தோப்பு, வயல்வெளிகள், வீட்டு நிர்வாகம், பணியாளர்களுக்கான ஊதியம் என ஒவ்வொன்றையும் பார்க்கும் பொறுப்பு அவனிடம் இருந்ததால், பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தும் கூட சொந்த ஊரை விட்டுவிட்டுப் போக விரும்பவில்லை. அதில் மிக முக்கியமானது நந்தனாவின் வரவும் பேச்சும்…
ஆரம்ப நாளில் அப்பாவுக்கு உதவிய சதாசிவம் மற்றும் அப்பாவின் ஆசியுடன் கோழிப்பண்ணையை ஆரம்பித்திருந்த பரிதிவர்மன், அப்பாவின் கோரிக்கையை ஏற்று மிகவும் நம்பிக்கையான நபரான சதாசிவத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தான். அவனும் கல்லூரி நேரம் போக மீத நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான். ஆனால், தவிர்க்க முடியாத அவனது அப்பாவின் இறப்பும், தனது மகளை அவனுக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்று நினைத்திருந்த அத்தையின் எண்ணமும், ‘எம்சிஏ படிப்பை முடிச்சுட்டு கோழி மேய்க்கிறானா? அவனை இங்கே அனுப்பி விடுங்க, நாங்க பார்த்துக்கிறோம்’ என்ற நச்சரிப்பும் தாளாமல், நாகேஸ்வரி மகனை வெளிநாட்டுக்குச் சென்று அவர்களது அலுவலகத்தில் பணிபுரியக் கூறினார்.
ஆனால் அவனோ தனது கடைசி வருட படிப்பின்போது அயல் நாட்டு நிறுவனம் ஒன்று நடத்திய நேர்காணலில் பங்கேற்று வென்றாலும், தன்னால் அங்கு வந்து பணிபுரிய முடியாது சொந்தமாக அலுவலகம் அமைத்து இங்கேயே அப்பாவின் ஆசைப்படி பணிபுரிய விரும்புவதாக சொன்னான். அவனது தன்னம்பிக்கையான பேச்சு, படிப்பில் முதலிடம் பிடித்த திறமை, தந்தையின் பொருளாதாரப் பின்னணி மற்றும் அலுவலகத்தை நிர்வகிப்பதற்கான தகுதி ஆகியவை குறித்து ஆராய்ந்தவர்கள், அவனது பின்புலத்தை முழுவதும் தெரிந்து கொண்டதால், அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரச் சம்மதித்தனர். அதன் பிறகு அப்பாவின் ஆசியுடன் அலுவலகம் அமைத்து, நன்றாகப் படித்த திறமைசாலியான ஐம்பது பேரைத் தேர்வு செய்து தனக்குக் கீழே வழிநடத்தி வருகிறான்
காலையில் அலுவலகத்திற்கு சென்றால் மாலை நேரம் பண்ணையை பார்வையிட போவான். அங்கேயும் பத்துக்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரிகின்றனர். விடுமுறை நாட்களிலும் முட்டை கொள்முதல் நேரத்திலும் பண்ணையிலேயே காணப்படுவான் அவன் அல்லாத நேரங்களில் அங்கிருந்து பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவனுக்கு அடுத்த இடத்திலிருக்கும் பிஏவை சார்ந்தது.
இப்போதும் தனது அலுவலகத்திற்குள் நுழைந்ததும் அங்கு பணிபுரியும் விஷ்ணு பிரசாத் உடனே வந்து அவன் அன்று செய்ய வேண்டியது பற்றிப் பேசினான். சரியாகப் பத்து மணி ஆவதற்கு முன்பு அங்கு பணிபுரியும் அனைவரும் வந்து சேர்ந்தனர்.
சில நாளாக அப்பா விட்டுச்சென்ற வேலைகள் மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவன், இன்று முன்பு போலக் கம்பீரமாகக் காட்சியளித்தான்.
“ஆமாங்க சார்! உங்க வாழ்க்கை அழியாம காப்பாற்றப்பட்டதில் எனக்கும் மகிழ்ச்சிதான்…” என்று அவன் கூறியதும், “கவலைப்படாதீங்க பிரசாத்! உங்க வாழ்க்கையும் விரைவில் ஒளிமயமாய் மாறும். அப்புறம், நீங்க நம்ம கம்பெனியில் வேலை பார்த்து இங்கேயே வசித்து வருவது உங்களுக்கு ஒண்ணும் கஷ்டமா இல்லையே!” என்று வினவியவாறு அவனது பதிலை பெற்றுக் கொண்டவன், மேஜையின் மீது பையை வைத்தபடி, சுவரில் இருந்த அப்பா தாணுலிங்கத்தின் புகைப்படத்தை வணங்கினான்.
அவர் மகனைப் பார்த்துப் புன்னகைக்க, “உங்க ஆசைப்படியே என் வாழ்க்கை நல்லவிதமா அமையும். கவலைப்படாம இருங்க அப்பா” என்றவன், அவரைத் தொட்டு கும்பிட்ட பின்னர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
அதன் பிறகு வேலை அவனை இழுத்துக்கொள்ள, இருவரும் அன்றைய வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர். நேரம் பறந்துபோனது…
வீட்டில், கணவன் வேலைக்குச் சென்றதும் மகளைப் பால்கனி பகுதியில் அமர்ந்து விளையாடச் சொல்லிவிட்டு, தனது உடைகள் அடங்கிய ப்ரீஃப்கேஷைத் திறந்து கப்போர்டில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் நந்தனா.
அந்த நேரம் மகன் வெளியேறிச் சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்த நாகேஸ்வரி, அடுத்த கணம் கிடுகிடுவென மாடிப்பகுதிக்கு வந்து அறைக்கதவைத் தட்டினார்.
அவள் நேற்றுக் போலக் குழந்தையை வாங்கிச் செல்ல யாராவது வந்திருப்பார்களாக இருக்கும் என்று நினைத்தபடி கதவைத் திறக்க, அங்கு காளி தேவியின் மறு அம்சமாக நின்றார் நாகேஸ்வரி.
அவரைக் கண்டதும் தன்னிச்சையாக இரண்டு அடி அவள் பின்னே வைக்க, ஆவேசமாக உள்ளே நுழைந்தவர், பால்கனியில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி வேலைக்காரப் பெண்ணிடம் கொடுத்து, கீழே கொண்டுபோகச் சொன்னார். குழந்தை நிவேதா எதுவும் தெரியாமல் சென்றுவிட, நந்தனாவின் கூந்தலைக் கொத்தாகப் பற்றி இழுத்து, மாடியில் இருந்து வீட்டுக்கு வெளியே கொண்டுவந்து வேகமாகத் தள்ளிவிட்டார். அதில் சென்று பொத்தென விழுந்தவள், முட்டியில் அடிபட்ட வலியை அடக்க முடியாமல் இருந்தாள்.
“உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா, என் மகனை வளைச்சுப்போட்டு என் மருமகள் இருக்க வேண்டிய இடத்துல வந்து இருப்பே! அவள் தகுதி என்ன? உன் தகுதி என்ன? எப்படியாவது அவனை மயக்கி இந்த சொத்துக்களை அபகரிக்கணும்னு திட்டம் போட்டும் முடியாம, இப்ப பொண்டாட்டியா வேஷம் போட்டு வந்திருக்கியாடி? வெளியே போ! என் பேச்சை மீறியும் இங்கு வந்தா உன் கழுத்தை அறுத்து நாய்க்குப் போட்டுடுவேன்” என்று ருத்ரகாளியாக நின்றார்.
அவள் பயந்துபோய் வேண்டாம் என்று தலையசைக்க, வலது காலை தூக்கிக்கொண்டு அவளை மிதித்துவிடுவது போலச் சென்றவர், “போயிடுன்னு சொன்னேன்! இல்லை, போக மாட்டேன் இதே வீட்டுல தான் இருப்பேன்னு அடம்பிடிச்சா, அப்புறம் நான் பேச மாட்டேன். என் வீட்டுத் துடைப்பக்கட்டுதான் உனக்குப் பதில் சொல்லும்” என்று சினந்தார்.
“இன்னும் ரெண்டு நாளில் என் மருமகள் வந்துடுவா; அவளால் இதையெல்லாம் அறிஞ்சா தாங்க முடியாது. ஏற்கனவே உன்னாலதான் அவள் இந்த வீட்டுக்கு வராம இருக்கா; அது தெரிஞ்சும் அவன் வீம்புக்கு உன்னைக் கூப்பிட்டு வந்து குடித்தனம் நடத்தப் பார்த்தா, என்னால அதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது” என்று கத்தினார்.
“உங்க அப்பாவுக்காகப் பாவம் பார்த்து நடந்தது, இன்னைக்கு என் மகன் வாழ்க்கையில் வந்து நிக்குது. அப்பவே உன்னைக் குழி தோண்டி புதைச்சிருந்தா இப்படி வந்து நிற்பியா?” என்று சீற்றமாகக் கூறியவர், அங்கு நின்ற வேலையாட்களைப் பார்த்து, “இங்கு நடப்பதை என் மகன்கிட்ட யாராவது சொன்னா, உங்களுக்கும் இதுதான் நிலைமை” என்று மிரட்டிவிட்டு, வாசல் கதவைப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.
அவரை எதிர்த்துப் பேசத் தைரியமில்லாத மற்றவர்கள், எங்கே பரிதிவர்மனிடம் சொன்னால் தங்களையும் ஏதாவது செய்துவிடுவாரோ அல்லது வீட்டை விட்டுத் துரத்தி வேலையில்லாமல் ஆக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் வாயை மூடிக்கொண்டு சென்றுவிட, நந்தனாவிற்காக பரிதாபப்பட்ட ஒருசிலராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
ஆனால், வேகமாக இழுத்து வந்து கீழே தள்ளியதில் அடிபட்டு எழ முடியாமல் தடுமாறி, கெந்திக் கெந்தி பாதத்தை தூக்கி வைத்த நந்தனா, உடல் நடுக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, மெல்ல மெல்ல நடந்து சென்று மாமரத்தின் அடியில் சாய்ந்த நிலையில் அமர்ந்தாள்.
கண்களில் இருந்து கண்ணீராக வடிந்தது. மாமியார் இப்படிப் பேசிவிட்டார் என்பதற்காக அவள் கோபம் கொள்ளவோ, வீட்டை விட்டு வெளியேறிச் செல்லவோ நினைக்கவில்லை. மாறாக, கணவன் நேற்று பேசிய வார்த்தைகள்தான் செவியில் வந்து மோதியது. அவனை அடைவதற்காக, அவனது மனைவியாக வாழ்வதற்காக எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கலாம் என்று எண்ணிக்கொண்டாள்.
நேரம் சென்று கொண்டே இருந்தது. உடல் தளர்ச்சியும், பழைய நினைவுகளின் தாக்கம், அவனோடு பேசி மகிழ்ந்த தருணங்கள், கையருகில் இருந்த வாழ்க்கையைத் தவறவிட்ட சந்தர்ப்பங்கள், சித்தியின் தகாத வார்த்தைகள், சந்திரகுமாரின் கடுமை என்று நினைத்துக்கொண்டே இருந்தவள், அப்படியே மயங்கி விழுந்து விட, நாகேஸ்வரி இல்லாத நேரமாக வந்த இரண்டு பணியாட்கள் அவளைத் தூக்கிச் சென்று, மாடியில் உள்ள அறையில் விட்டு விட்டுச் சென்றனர்.
மதிய நேரம் வெளியே வந்து பார்க்கும்போது, அவளை எங்கேயும் காணாததும் வீட்டை விட்டுப் போய்விட்டதாக நாகேஸ்வரி நினைத்திருக்க, உணவு நேரம் தனக்கு முன்பு இருந்த உணவைக் கண்ட பரிதிவர்மனுக்கு மனைவியின் ஞாபகம் எழுந்தது. நேற்று இரண்டு நேரமும் அவள் கையால் உண்டதும், அவளது அழுத கண்களும், புன்னகைத்த விழிகளும் உடனே அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விதைத்தது.
இப்போது போனால் சரியாக இரண்டு மணிக்குள் வந்துவிடலாம் என்று நினைத்தவன், கேன்டீனில் இன்னும் ஒரு பார்சல் சாப்பாடு வாங்கிவரச் சொல்லி உடனே கிளம்பிவிட்டான். யாரையும் எதிர்பாராமல் நேராகத் தனது அறைக்குச் சென்று படுக்கையில் துயில் கொள்ளும் மனைவியைக் கண்டு புன்னகைத்தான்.
கையில் இருந்தவற்றை மேஜையின் மீது வைத்தவன், சட்டையை மாற்றியவாறு முகத்தைச் சுத்தம் செய்துவிட்டு வந்து, அப்போதும் அசையாமல் உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் தோளின் மீது கைவைத்து மெல்லமாய் அசைத்தான்.
அவள் இன்னும் மரத்தடி நினைவில் இருந்து விடுபடாமல், அவனைக் கண்டதும் ‘அச்சச்சோ! எங்கே கண்டுவிட்டானோ, இதனால் பிரச்சனை முளைவிட்டுவிடுமோ!’ எனப் பயந்தாள்.
அவள் அருகில் அமர்ந்தவன், “என்ன நந்து, இதுவரை என்னைப் பார்க்காதது போல புதுசா பாத்துட்டு இருக்கே? சாப்டியா?” என்று கேட்டான்.
அதன் பிறகு சுற்றிலும் பார்த்தவள், அவன் தான் தன்னைத் தூக்கி வந்துவிட்டானோ, இப்போது கேட்டால் என்ன செய்வது என்று பயந்தபடி எழுந்து அமர்ந்தாள்.
அவளது வாடிய முகம், பதில் கூறாமல் இருக்கும் விதம், குழந்தை நிவேதாவும் இல்லாமல் இருப்பதால் அம்மாத்தான் அவளை ஏதோ சொல்லி இருப்பதாக நினைத்தான்.
அவள் குளியலறைக்குச் சென்று முகத்தையும் கை காலையும் சுத்தம் செய்துவிட்டு வந்ததும், தன்னருகில் அமரவைத்து உண்ணச் செய்தான்.
“நிவி சாப்பிட்டாளா?”
அவள் தெரியாது என்பது போலத் தலையாட்ட, “அம்மா வந்து எடுத்துட்டுப் போயிட்டாங்களா?” என்று கேட்டு, அவளது தலையசைப்பைக் கண்டதும் சிரித்தான்.
இருவரும் உணவை முடித்ததும், அவன் கைகளைச் சுத்தம் செய்துவிட்டு வந்து பேசியபடி இருக்க, அவள் அவன் சொல்வதைக் கேட்டவாறு இருந்தாள்.
அவள் தலையைக் குனிந்துகொள்ளவும், அவளுக்கு மிகவும் பிடித்தமான பால்கோவாவைத் தந்துவிட்டு, “நல்லா தூங்கி ரெஸ்ட் எடு! நான் ஈவினிங் வர்றேன்” என்று சொல்லிப் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
பேத்தியை வெளியே விடாமல் தனது அறையில் வைத்திருந்த நாகேஸ்வரி, மகன் வீட்டிற்கு வந்து உண்டுவிட்டுப் போனதையோ, மருமகள் அவளது அறையில் இருப்பதையோ அறியவில்லை. ஆனால், நாத்தனாரின் அறிவுரையின்படி அவளை இந்த வீட்டுப் பக்கமே வர விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார்.
மாலை நேரம் நேற்று முழுவதும் கூடவே இருந்த அம்மாவைத் தேடி நிவேதா அழ, “உங்க அம்மா இந்தா இருக்கறா” என்று சுவரில் உள்ள புகைப்படத்தைக் காட்டினார்.
அவள் மாடிப்பகுதியைப் பார்த்துக் கைகாட்ட, “அவள் அம்மா இல்லை. இனிமேல் அப்படி கூப்பிடக் கூடாது” என்று அதட்டினார்.
அவள் ஓவென்று வீடே அதிரும் வரை பாட்டிக்குப் போட்டியாகச் சத்தமிட, “நல்லா இருந்த பிள்ளையை கெடுத்து வச்சிருக்கா பாரு! அவளை நாலு சாத்து சாத்தியிருக்கணும்” என்று வாய்க்குள் வசைபாடினார்.
இருள் சூழும் நேரம் வீட்டிற்கு முன்புறம் வந்த பைக் சத்தத்தைக் கேட்டதும், “அப்பா!!” என்று வீறிட்டு அழுதாள் மகள்.
அவனும் விரைந்து வந்து, “என்னடா! நான்தான் உன்னை அழக்கூடாது என்றேனே! அம்மா எங்க?” என்று கேட்டவாறு மகளை வாங்கினான்.
அவன் அம்மா மகனை முறைத்தபடி இருக்க, “அம்மா இல்ல…” என்றபடி மகள் தொடர்ந்து அழுதாள். அவன் அம்மாவைப் பார்த்த பார்வையில் அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றார்.
“ஏம்மா இந்த மாதிரி நடந்துக்கறீங்க? பச்சைப் பிள்ளை என்ன தப்பு செஞ்சது? அதை இப்படியா அடைத்து வைப்பது?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவினான்.
அவரோ “அவள் என் பேத்தி! என் கூடத்தான் இருப்பா” என்று வீராப்புடன் சொன்னார்.
“அவள் உங்க பேத்திதான், இல்லைனு யாரும் சொல்லலை. அதுக்காக எப்பவும் உங்க கூடவே வச்சுக்க முடியுமா? பிறகும் ஏன் தினமும் அவள் என்னைத் தேடி அழுறா?” என்ற கேள்வியில் அவர் விக்கினார்.
“நந்தனா தான் பெத்த பிள்ளையைப் போல நிவியைப் பார்த்துப்பா; இந்த மாதிரி நடந்துக்கிற வேலையை வச்சுக்காதீங்க” என்றவன் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட, “என் பேத்தியைப் பார்த்துக்க அவள் அம்மா இன்னும் உயிரோடு தான் இருக்கா; யாரோ ஒருத்தரைக் கூப்பிட்டு வரணும்னு அவசியம் இல்லை” என்றார் நாகேஸ்வரி.
இவரிடம் பேசுவது வீண் என்று நினைத்துக் கொண்டே, மாடியில் உள்ள தனது அறைக்கு வந்து கதவைத் தட்டினான் பரிதிவர்மன். கணவனின் குரலில் அவள் விரைந்து வந்து கதவைத் திறந்தாள்.
மகள் அம்மாவைக் கண்டதும் தாவிச் செல்ல, நந்தனா அவளை அணைத்து முத்தமிட்டாள்.
அதைப் பார்த்துக்கொண்டே, “உன்னால எப்படி இதை எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியுது? இப்படி ஒரு சிறை வாழ்க்கை வாழணும்னு அவசியமா?” என்றான் பரிதிவர்மன்.
அவள் முகத்தில் இருந்த கவலையைக் காட்டாமல் சிரித்தபடி, “நான் அப்படி நினைக்கல… நீங்களும் நினைக்க வேண்டாம்” என்றாள்.
“எத்தனை நாளுக்கு இப்படி அறைக்குள்ளேயே முழு நேரமும் அடங்கி இருக்கப் போறன்னு எனக்குத் தெரியல” என்றவன், “ஏன் நந்தனா, என்னைப் பார்த்துச் சொல்லு! நெஜமாவே இந்த ரூமுக்குள்ள இருக்கறது உனக்குக் கஷ்டமா இல்லையா? நாளையிலிருந்து நீயும் என் கூடவே வர்றியா? நம்ம பண்ணை வீட்டில் உன் விருப்பம் போல இருக்கலாம்” என்றான் பரிதிவர்மன்.
அவள் மகளைத் தூக்கி மடியில் சாய்த்து நெற்றியோடு நெற்றியை வைத்து முட்டினாள். இதே போல நிவேதாவும் செய்ய, இருவரும் சிரித்தார்கள்.
தனது கேள்விக்கான பதிலை அவள் இங்ஙனம் தரவும், மறுபேச்சின்றி குளியலறைக்குள் புகுந்தான். பின்னர் மனைவி மகளிடம் பேசியபடி இருக்க, அறையிலிருந்து கீழே வந்த மூவரையும் கண்டு திகைத்து விழித்தார் நாகேஸ்வரி.
‘இவள் எப்படி வீட்டிற்குள் வந்தாள்? எங்கேயோ சென்று தொலைந்துவிட்டதாக நினைத்தேனே! அப்படியானால் எங்கும் போகாமல் வீட்டிற்குள்தான் சென்று மறைந்துகொண்டாளா? எத்தனை பெரிய ஜாலக்காரியாக இருக்கிறாள்? இருக்கட்டும், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்…’ என்று மனதிற்குள் நினைத்தபடி அவளை முறைத்தவாறு இருந்தார்.
அவன் சமையல்கார பெண்மணியை அழைத்து மூவருக்கும் உணவு எடுத்து வரக் கூறினான். அவர் அதுபோலச் செய்ததும், மகள் மனைவியுடன் இணைந்து உணவை முடித்து சற்று நேரம் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்தான்.
நாகேஸ்வரிக்கு கோபம் கோபமாக வந்தது. ‘பெற்ற தாய் என்ற பாசம் கடுகளவும் இல்லாமல் இருக்கிறானே இவன் எல்லாம் ஒரு பிள்ளையா! இவனுக்காகத்தானே நான் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறேன். இவன் என்னவென்றால் யாரோவாக நினைத்து நடந்து கொள்கிறானே! எல்லாவற்றிற்கும் அவள்தான் காரணம்’ என்று மனதுக்குள் பொறுமித் தீர்த்தார்.
நேற்று இரவைப் போல இன்று இரவும் தரையில் போர்வையை விரித்து அவள் படுத்துவிட, “நந்து, என்கிட்ட எதையாவது மறைக்கிறியா?” என்றான் பரிதிவர்மன்.
அவள் பதில் பேசாமல் இருந்ததும், “வாய் திறந்து பேசத் தெரியாதா? முன்னெல்லாம் திறந்தா நிறுத்த மாட்ட! இப்ப திறக்கக் கூடாதுன்னு இருக்கறியா?” என்று கேட்டான்.
அவள் லேசாக இதழ்களை விரித்ததும், “தரையில படுக்க கஷ்டமா இருக்கும். நீயும் வந்து மெத்தையில் படுக்கலாமே!” என்று சொன்னான்.
அவள் மறுப்பாகத் தலையசைத்தபடி, “எனக்கு நீங்க கிடைச்சதையே இன்னும் நம்ப முடியல… இதுல கூட சேர்ந்து படுப்பது, வாழ்வது எல்லாம் நினைச்சு கூடப் பார்க்க முடியாது…” என்று கண்ணீரைக் கட்டுப்படுத்தியவாறு சொன்னாள்.
“நீ மட்டும் சரின்னு சொல்லியிருந்தா இதெல்லாம் எப்பவோ உனக்கு கிடைச்சிருக்கும்.”
அவன் எதை மனதில் வைத்துக் கூறுகிறான் என்று தெரிந்ததால் அவள் அமைதிகாத்தாள்.
“அன்னைக்கு ஏன் அப்படி சொன்னேன்னு நான் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்திருக்கணும். சின்ன பொண்ணு படிக்கணும்னு ஆசைப்படுறா; என்னை விடவும் ஏழு வயது இளையவள், பார்க்கவும் பழகவும் நிறைய இருக்குன்னு அமைதிகாத்தது இந்த அளவுக்கு கொண்டு வரும்னு எதிர்பார்க்கல. ‘இரண்டு வருஷம் ஆகட்டும்; இப்ப நான் செய்துக்க மாட்டேன். எனக்கு ஒண்ணும் அப்படி வயசாகிடல, தொழிலில் சாதிக்க நிறைய இருக்கு’னு எவ்வளவு சொல்லியும், எங்க அம்மா கேட்காம அத்தையுடன் சேர்ந்து கட்டாயப்படுத்தி இன்னைக்கு என்னை இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலைக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க” என்று கசந்த மனதுடன் கூறினான்.
அவள் எழுந்து அமர்ந்து, “எனக்கு இது போதும்” என்று அவன் கட்டிய திருமாங்கல்யத்தை எடுத்துக் காட்டினாள். தொடர்ந்து, “இதோடவே நான் நிம்மதியா வாழ்ந்துடுவேன்” என்றாள் நந்தனா.
அவன் அவள் முகத்தையே பார்த்தபடி இருக்க, “அம்மா இறந்து, அப்பாவின் பாசத்தில் வளர்ந்த எனக்கு, அவருக்கு அடுத்ததா உண்மையான அன்பைக் கொட்டிப் பார்த்துக்கிட்டது நீங்கதான். உங்க பக்கத்தில் இருந்தாலே பாதுகாப்பாய் மனம் உணரும். உங்களைப் பார்க்கணும், பேசணும், உங்களுக்குப் பிடித்த விதமாய் இருக்கணும்னு ஒவ்வொண்ணும் பார்த்துதான் செய்வேன். என்னைக் கேட்டா, அதே வாழ்க்கை திரும்ப வராதான்னு ஏக்கமா இருக்கு” என்றாள்.
அவனாலும் முன்பு நடந்ததை மறக்க முடியவில்லை. இவளுக்கு மட்டும் வயது அதிகமாகி திருமண வயதை அடைந்திருந்தால் நிச்சயம் அப்படி ஒரு எண்ணம் அவன் மனதிலும் வந்திருக்கலாம். ஆனால், தன்னை விட வயது குறைவான சின்ன பெண்ணிடம், தனது அப்பாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், அவரது ஒன்று விட்டத் தங்கையின் கணவர், தனது பண்ணையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்பவராகிய சதாசிவத்தின் மகளிடம், வீட்டில் நடக்கும் விஷயங்களை அறிந்து அவளுக்காக வருத்தப்படுபவனால் வேறு விதமான எண்ணத்தில் அப்போது பார்க்க முடியவில்லை. பார்க்கலாம் என்று ஒருசில சமயம் நினைத்தபோது, இவளது வார்த்தைகள் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டன. இப்போது பார்த்தால், அவள் மனம் முழுவதும் அவன்தான் நிரம்பியிருக்கிறான்; விதி அவர்கள் இருவரையும் சதி செய்து பிரித்துவிட்டது என்றுதான் தெரிகிறது.