அன்று காலையில் முட்டை கொள்முதல் செய்ய வருவதாக வந்த தகவலின்படி, பரிதிவர்மன் விஷ்ணு பிரசாத்திடம் விஷயத்தை தெரிவித்து விட்டு, நேராக கோழிப் பண்ணைக்கு வந்து விட்டான். அங்கிருந்து கணக்கு வழக்குகளைப் பார்த்த பின்னர் அலுவலகத்திற்கு போகலாம் என்று நினைத்திருந்தான். வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, அவனும் ஒவ்வொன்றையும் சரி பார்த்தபடி இருந்தான்.
நந்தனா கணவன் வேலைக்குச் சென்று விட்டதால் மதியம் அல்லது மாலையில் வருவதால் மகளுடன் பேசியபடி இருந்தாள். அவள் ஓடியாடி விளையாடும் அழகை கண்டு ரசித்தாள். இப்போது தான் கதவு நிலைகள் புதியதாக பதிக்கப்பட்டு இருப்பதால் கனமாக கதவை அதில் இணைக்கவில்லை. அதனால் வீட்டிற்குள் இரண்டு அறைகளும் திறந்து கிடப்பதால் மகள் ஓடி சாட வசதியாக இருந்தது. வீட்டின் வெளிப்பகுதியில் மட்டும் ஒரு கனமில்லாத கதவைப் பாதுகாப்பு கருதி இணைத்து இருந்தனர். அப்படியே மகளுடன் அவள் பேசியபடி வீட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க, பேத்தியை வெளியே காணாமல் மனம் புழுங்கினார் நாகேஸ்வரி.
ஒன்று அவர் சென்று கதவைத் தட்டி அவளை வாங்க வேண்டும். அல்லது வேலையாட்கள் சென்று வாங்கி வருவர். மற்றபடி அந்தக் குட்டி வாண்டு, அப்பா வெளியேறியதும் அம்மாவை விட்டு அகலுவதில்லை. அவர் சலிப்புடன் திட்டிக் கொண்டே இருந்தார். அந்த நேரம் திருமணமாகி கணவன் வீட்டிற்கு வந்த பிறகு இதுவரை அக்கா எப்படி இருக்கிறார் என்று அறிந்திராத அகிலன், அவளுக்குத் தேவையான சாதனங்கள் மற்றும் மீதமுள்ள உடைகளை எடுத்துக் கொண்டு, ஆட்டோவில் வந்து வீட்டு முன்பு இறங்கினான்.
பணியாள் அவனைக் கண்டதும் மரியாதையுடன் அழைத்து வர, தம்பியைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்த நந்தனா, அவனை உள்ளே அழைத்துச் சென்று கதவைப் பூட்டினாள்.
அவனும் அக்காவிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருக்க, “உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது தெரியல அகி! நீ செய்தது சாதாரணமான உதவியில்லை. நான் இழந்து போனதாய் நினைத்துப் பல நாளாய் தொலைத்திருந்த என் வாழ்க்கையை… ரொம்ப நன்றிடா!” என்று நெகிழ்ந்து போய் கூறினாள்.
அவன் சிரித்த முகத்துடன், “இது என் கடமை அக்கா! எப்படியும் அந்தக் கல்யாணம் நடக்காதுன்னு எனக்கு முன்னமே தெரியும். பரிதி அத்தான் தான் வேறு யாருக்கும் தெரியாம ரகசியமா வச்சிருக்க சொன்னதால், நானும் அப்படியே இருந்தேன்” என்று பெரிய மனுஷ தோரணையுடன் கூறினான்.
அவள் தம்பியின் கையைப் பற்றியபடி, “உனக்கு ரொம்ப நல்ல மனசு அகி! அதைப் புரிஞ்சுக்காம நான்தான் தப்பா நினைச்சுட்டேன்” என்று கண் கலங்கினாள்.
“அக்கா! ஆரம்பத்துலயே உங்க மேல பாசம் இருந்தாலும் அம்மா தான் என்னை உங்க கிட்ட பேசக்கூடாதுன்னு கண்டிச்சு வச்சதால் அப்படி நடந்துக்கிட்டேன். ஆனால் நீங்க உங்களுக்கு முதல்ல நடக்க இருந்த கல்யாணம் நேரம் அப்பா உங்க கிட்ட பேசியதையும், நீங்க பரிதி அத்தானை ஏன் வேண்டாம்னு மறுத்ததையும் சொல்ல கேட்டு அம்மாவின் பிடிவாதத்தையும், அதனால் உங்க வாழ்க்கை திசைமாறி போனதையும் தெரிஞ்சுக்கிட்டேன். நீங்க பரிதி அத்தானை தான் விரும்புறீங்கன்னு தெரிஞ்சதும் நம்ம அப்பா முகத்தில் தெரிஞ்ச சந்தோஷமும், அவரைத் தான் நீங்க கல்யாணம் செய்துக்கணும்னு சத்தியம் வாங்கியதையும் பார்த்தேன். நம்ம அம்மா என்ன தான் வீம்பா நடந்தாலும் இந்த அளவுக்கு முரட்டுத்தனம் நிரம்பியவர்னு எனக்குத் தெரியாது. அப்பா வேண்டாம்னு சொல்லியும் கேட்காம சந்திரன் அத்தானுக்கு உங்களைக் கட்டி வைக்க அவ்வளவு மும்முரமா இருந்ததால், தன் உயிரைக் கொடுத்து அதை நிறுத்தினாங்க. அப்படியும் அம்மா திருந்தாம உங்களைக் கஷ்டப்படுத்தியதை என்னால தாங்க முடியல.
பரிதி அத்தானும் நிம்மதி இல்லாம கஷ்டப்பட்டு யார் கிட்டயும் அதிகம் பேசாம இருந்ததால், எப்படி அவரிடம் இது விஷயமா பேசுவதுன்னு தெரியாம இருந்தேன். ஆனால் மறுபடியும் அம்மா அதே தப்பை செய்ய வந்ததும் அவரைத் தேடி பண்ணைக்கு போய் நடந்தது எல்லாம் சொல்லிட்டேன். இப்போ நீங்களும் ஹேப்பி; அத்தானும் ஹேப்பி” என்றதும் தம்பியை அணைத்துக் கொண்டாள் நந்தனா.
எவ்வளவு பெரிய காரியம் செய்து இருக்கிறான் அகிலன். வயதுதான் குறைவே தவிர சிந்தித்து செயல்படுவதில் வல்லவனாக இருந்து இருக்கிறான்.
குழந்தை நிவேதா அவனைக் கண்டதும் சிரித்தாள். அவன் தூக்கி மடியில் வைத்ததும், “மாமா” என்று சொல்லிக் கொடுத்தாள் நந்தனா.
அவள் தலையாட்டியதும், தான் அக்காவுக்காக வாங்கி வந்திருந்தவற்றை எடுத்து அவளிடம் கொடுத்தான். பலகாரமும் அதிரசமும் அக்காவுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வரும்போது கடையில் வாங்கி வந்திருந்த அகிலன், கவரைப் பிரித்து அக்காவுக்கு ஊட்டி விட, அவளும் தம்பிக்கும் நிவேதாவுக்கும் ஊட்டி மகிழ்ந்தாள். பின்னர் வீட்டிற்கு முதல் முறையாக வந்திருக்கும் தம்பிக்கு உணவு பரிமாறுவதற்காக சமையல்கார பெண்மணியை காணச் சென்றாள்.
அகிலன் குழந்தை நிவேதாவை தூக்கி வைத்திருந்தான். அவ்வளவு நேரமாக கோபத்தை அடக்க முடியாமல் இருந்த நாகேஸ்வரி விரைந்து வந்து குழந்தையை அவனது கையில் இருந்து பிடுங்கி எடுத்து, அவனைப் பிடித்து வெளியே தள்ளினார். அவன் “அக்கா!!” என்று அலறியதும், நந்தனா ஓடிவந்து தம்பியை தூக்கி விட்டாள்.
அவர் அக்காவையும் தம்பியும் மரியாதை இல்லாமல் பேசினார். அவன் அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க, நந்தனாவால் எதுவும் சொல்ல முடியவில்லை.
“ஏண்டி! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என் பேத்தியை தூக்கி கண்டவரிடமும் கொடுத்திருப்பே? நீயே ஒரு தெண்டம்! இதுல உன்னைப் பார்க்க சீர் சினத்துடன் வந்திருக்கும் உன் தம்பிக்கு விருந்து படைக்க போறியா?” என்று அவமரியாதையுடன் பேசினார்.
நந்தனா இல்லை என்பதாக தலையசைக்க, “ஏலேய்… இவளோ இவளைச் சார்ந்த யாரும் இந்த மதில் சுவருக்குள்ள வரக்கூடாது, மரியாதையா வெளியே போங்க!” என்று கத்தினார்.
அகிலன் இன்னும் அதிர்ச்சி மாறாமல் இருப்பதைக் கண்டு, “அத்தம்மா! என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க. தம்பி பாவம்! அவன் ரொம்ப ரொம்ப நல்லவன்” என்றாள் நந்தனா.
“ரொம்ப நல்லவனாய் இருந்ததால தான், ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்த இன்னொருத்தியோட புருஷனுக்கு உன்ன கல்யாணம் பண்ணி வச்சிருக்கானா? எப்போ அவள் போவாள், இங்க வரலாம்னு திட்டம் போட்டுட்டு இருந்தீங்களா? அவனையும் கூப்பிட்டு இந்த வீட்டை விட்டு வெளியே போடி ஓடு காலி கழுதை” என்று பிடித்து தள்ளியதில் தம்பியோடு சேர்ந்து வெளியே வந்து விழுந்தாள்.
ஏற்கனவே நாகேஸ்வரியின் நடைமுறை அந்த வீட்டில் பணிபுரியும் யாருக்கும் பிடித்தமாக இல்லை. எதிர்த்துக் கேட்டால் பிரச்சனையாகும் என்று தான் பார்த்தார்கள். அதே நேரம், இந்த வீட்டிற்கு வாழ வந்திருக்கும் பெண்ணைத் தங்கள் முன் இத்தனைக் கொடுமைப்படுத்துவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல், வீட்டில் சென்று நடந்ததை சொல்ல, அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் கணவன்மார்கள் அவர்களைத் திட்டினார்கள்.
“உனக்கு ஒரு பொண்ணு இருந்து இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தா, நம்ம பரிதி அடுத்த நிமிஷம் வந்து என்னன்னு கேட்காம இருக்க மாட்டான். அவன் பொண்டாட்டி பிள்ளையை அவங்க அம்மா நித்தமும் கதற விடுறாங்க, நீங்க பாத்துட்டு சும்மா இருந்தீர்களா? இனிமேல் அந்த வீட்டுக்கு வேலைக்குப் போகக்கூடாது. இப்பவே நான் போய் பரிதிகிட்ட சொல்றேன்” என அந்தப் பெண்களின் கணவன்மார் பரிதிவர்மனின் மீதிருந்த பாசம் மற்றும் அவனது அப்பா தாணுலிங்கத்தின் மீதான மரியாதையில் கூறினர்.
அந்த வீட்டில் மட்டுமல்ல, பரிதிவர்மனின் வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண்களும் ஆண்களும் தங்கள் வீட்டில் இதையே பேசியதால், விசயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பரவியிருந்தது, ஆனாலும் பரிதிவர்மனிடம் சென்று செல்லும் தைரியம் யாருக்கும் இல்லை.
இன்றும் வீடு தேடி வந்த பையன் அகிலனை அவமதித்து, அவனோடு சேர்ந்து அவளையும் வெளியேற்றியதை கண்ட அந்தப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் கொதித்துக் கொண்டு வந்தது. இதற்கு மேலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது நன்றாக இருக்காது என்று நினைத்திருக்க, அந்த நேரம் தம்பியை தூக்கி அவனது கை காலை துடைத்துவிட்ட நந்தனா, “இங்கு நடந்த எதையும் வீட்டுல போய் சொல்லாத! நான் அத்தான் கூட சந்தோஷமா தான் இருக்கேன்” என்று கூறினாள்.
அவன் “அக்கா! அந்த வீட்டுல தான் அம்மா உங்களைக் கொடுமைப்படுத்தி நிம்மதி இல்லாம வச்சிருந்தா, இங்கேயும் அப்படித்தான் நடக்குதா?” என்று தழுதழுத்த குரலில் வினவினான்.
அவள் தம்பி தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காக இல்லை என்று தலையாட்ட, “நான் தான் நேரிலேயே பார்க்கறேனே அக்கா? வீட்டுக்குப் புதுசா வந்திருக்கும் என் முன்னேயே இப்படி நடந்துக்கிட்டா, வீட்டுல இருக்கறப்போ எப்படி இருந்திருப்பாங்க? ஏன் அக்கா நீங்க பரிதி அத்தான் கிட்ட சொல்லி கொடுக்காம இருந்தீங்க? நாளைக்கு ஒரு நாள் உங்களுக்கு ஏதாவது ஆனால் அத்தான் பாவம் இல்லையா?” என கேட்டான்.
அவள் பதில் சொல்ல முடியாமல் இருக்க, “எங்க அக்கா ரொம்பவும் நல்லவங்க அத்தை! அவங்க அத்தானையும் குழந்தையும் உங்களையும் நல்லா பாத்துக்குவாங்க. நிவேதாவின் அம்மா மாதிரி எங்க அக்கா கிடையாது” என்று சொன்ன அடுத்த நிமிடம் அந்தப் பையனை தரதரவென இழுத்துச் சென்று, மதில் சுவருக்கு அப்பால் தள்ளியவர், தனது மருமகளைப் பற்றி தவறாக அத்தனை பேருக்கு முன்பாகவும் பேசி விட்டானே! இவள் தான் அத்தனைக்கும் காரணம் என்ற ஆக்ரோஷத்தில், சுற்றும் முற்றும் பார்த்தவர், அங்கு கிடந்த வாசல் பெருக்கும் துடைப்பத்தை எடுத்து வந்து என்ன செய்கிறோம்? இதனால் ஏதாவது பின் விளைவுகள் ஏற்படுமா? என்று எதையும் பார்க்காமல் அவளை அடித்து வெளுக்க சாடினார்.
அதைக் கண்ட வேலைக்கார பெண்கள் ஓடிவந்து அவரை மறிக்க, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் மருமகளை பத்தி, தப்பு தப்பா உன் வீட்டுல சொல்லிக் கொடுத்திருப்பே? அவளை விட நீ நல்லவளா? உன்னை மாதிரியா அவள் இன்னொருத்தரின் புருஷனுக்கு ஆசைப்பட்டு வந்து இருக்கா?” என்று தாக்கி பேசினார்.
நந்தனாவை சுற்றியிருந்த பெண்கள் சிறு அடி கூட அவள் மீது படாமல் பாதுகாத்துக் கொள்ள, அவரோ வெறி பிடித்தவரை போல அங்கு நின்ற அனைவரையும் பார்த்துக் கத்தினார்.
அகிலன் அதற்கு மேலும் தாமதிக்காமல் நேராக அத்தானை காண ஓடினான். ஆனால், கோழிப் பண்ணையில் இருந்த பரிதிவர்மன், கணக்கு வழக்கு சரிபார்த்து விட்டு அப்படியே அலுவலகத்திற்கு சென்று விட நினைத்திருந்து, பீரோவில் முக்கியமான ஒரு சில டாக்குமெண்ட் இருப்பதால் அதை எடுத்து செல்ல வேறு வழியாக வந்து, அங்கு நடப்பதை கண்டு ஸ்தம்பித்துப் போய் இருந்தான்.
‘தனது அம்மாவா இது? அத்தனை பாசமுகம் காட்டிய நபரால் எப்படி இத்தகைய தீமையை தன் சொந்த மகனின் மனைவிக்கு செய்ய முடிந்தது? அவளை இத்தனை பேர் பார்க்க திட்டுகிறார், அடிக்க சாடுகிறார், அவமரியாதையுடன் நடந்துகிறார். அப்படி நந்தனா என்ன தவறு செய்து விட்டாள்? அவள் மீண்டும் தன் கையில் வந்து சேர்ந்த பிறகு அல்லவா, இழந்த வாழ்க்கை மறுபடியும் கிடைத்து விட்டதாக நினைத்து தான் நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறேன். இவரோ அதைப் பறித்து மறுபடியும் என்னை நிராதரவுடன் கடைசி வரை தனியாக அல்லவா விடப் பார்க்கிறார்!’ என்று உறுத்து விழித்தான்.
அந்தப் பெண்கள் நந்தனாவை மெல்ல தூக்கி வீட்டிற்குள் கொண்டு செல்ல முயல, நாகேஸ்வரி அனுமதிக்க மறுத்தார். “இந்த வீட்டு மருமகள் நாளைக்கோ மறுநாளோ வர்றப்ப, இவள் இங்கே இருக்க கூடாது. வெளியே போக சொல்லுங்க!” என்ற வார்த்தையில் அவனுக்குள் கோபம் பெருக்கெடுத்து ஓடியது. பைக்கை அங்கேயே வைத்து விட்டு அழுத்தமான காலடிகளுடன் உள்ளே வர, நந்தனா காலில் சூடு பட்டிருந்த இடத்தில் வலித்ததால் அதைப் பிடித்துக் கொண்டு அழுதாள். அவரோ கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் சென்று விட, அந்தப் பெண்கள் அவளது காலில் உள்ள காயத்தில் மருந்திட்டு, மறுபக்க வாசல் வழியாக அழைத்துச் சென்று அறையில் படுக்க வைத்தனர். நடந்த அனைத்தையும் கண்முன்னே பார்த்துக்கொண்டு வந்த பரிதிவர்மன், நேராக வீட்டிற்குள் சென்று சுவரில் இருந்த புகைப்படத்தை வெறித்த கண்களால் பார்த்தபடி நின்றான். அதற்கு மேலும் முடியாமல் அவனது திருமண புகைப்படத்தை கழற்றி ஓங்கி தரையில் அடித்தான்.
அந்தச் சத்தத்தில் ஓடி வந்த நாகேஸ்வரி, மகனின் சிவந்து இறுகி போயிருந்த முகத்தையும், வரவேற்பு அறை முழுவதும் சிதறி கிடக்கும் கண்ணாடி துண்டுகளையும் கண்டு அதிர்ந்து போனார். அவன் அம்மாவைப் பார்த்துக்கொண்டே உடைந்து கிடந்த துண்டுகளின் மீது நடந்து வர, ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பதற்கு ஏற்ப, திருமணம் ஆகி வந்த முதல் நந்தனாவைக் காண விடாமல் ஆக்கிய நாகேஸ்வரி, மகனைக் கண்டதும் அரண்டு போனார்.
அவனது கண்கள் இரண்டும் அசையாமல் தாயாரைப் பார்த்து இருந்தன. அவர் இப்படி மாட்டிக் கொள்வோம் என்று அறியாமல் திகைத்து நின்றார்.
அவன், தனது மனைவியை அடிப்பதற்காக எடுத்து வந்து, வாசலில் வீசி எறிந்திருந்த துடைப்பத்தை எடுத்து வந்தான்.
அதைப் பார்க்கும்போதே தெரிந்தது, மகன் இங்கு நடந்த அனைத்தையும் பார்த்து விட்டான் என்று! எப்படி பேசி அவனை சமாதானப்படுத்துவது என தெரியாமல் திருதிருவென விழித்தபடி அவர் இருக்க, மன வலியுடன் அதைத் தனது தாயின் கையில் கொடுத்தவன், “இப்ப போய் அடியுங்க” என்று கூறினான்.
அந்த வார்த்தையில் அவர் விதிர்விதிர்த்துப் போய் இருக்க, “போங்க! போய் உங்க ஆத்திரம் தீரும் வரை அவளை அடித்து நொறுக்குங்க.” என்று மறுபடியும் சொன்னான்.
அவர் கையில் இருந்ததைக் கீழே போட்டுவிட்டு மிரண்டு போய் அப்படியே நிற்க, “போங்கன்னு சொன்னேன்! உங்களுக்குத் தைரியம் இருந்தா இப்போ என் முன்னாடி போய் அவளை அடியுங்க!” என்று கர்ஜித்தான். வெளியே கேட்ட சத்தத்தில் பயந்தடித்து ஓடி வந்தாள் நந்தனா.
அவள் இருக்கும் தோற்றத்தைக் கண்டதும் அவனுக்கு உயிரே போய்விடும் போல் இருந்தது. ‘தன்னைத் திருமணம் செய்து வந்த முதல், தாய் அளித்த சித்திரவதைகளை அனுபவித்து, தன்னந் தனிமையில் துயருற்று, நித்தம் நித்தம் வேள்வித் தீயில் மூழ்கி தவித்து, அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாமல் ஒரு வித பயத்துடன் இத்தனை நாட்களும் வாழ்ந்து வந்திருக்கிறாள்’ என்று தெரிந்த முதல் உடைந்து போனான் பரிதிவர்மன்.
தனது தாய் இந்த அளவிற்கு கொடுமைக்காரியாக மாறி இருக்கக்கூடும் என்று அவன் ஒரு போதும் நினைக்கவில்லை. ஏதோ வெளிநாட்டில் வசிக்கும் மருமகள் மீதான பாசத்தில், அப்படி நடந்து கொள்வதாக நினைத்து இருந்தான். ஆனால் இப்படிப்பட்ட கொடிய ராட்சசியின் பிம்பமாக மாறி இருப்பார் என்பதை அவன் அவதானித்திருக்கவில்லை.
அவளது அப்பாவின் ஆத்மா சந்தோசமடையும், அவள் நிம்மதியுடன் இருப்பதாக நினைத்திருக்க, இங்கு நடப்பவை யாவும் அவனைத் துண்டு துண்டாக்கின.
மனைவியை நோக்கி, “என்னை மன்னிச்சிரு!” என்று இரு கைகளையும் கூப்பி யாசிக்க, அவள் இல்லை என்பதாய் ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
அப்போதுதான் அவளது காலில் பட்ட காயம் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவளை இறுக்கி அணைத்தவன், அந்தக் காலை தூக்கி மடியின் மீது வைத்து மென்மையாக வருடிவிட்டான். தன்னை விட்டு அவளைப் பிரித்து வைக்க தாய் எந்த அளவுக்கு துணிந்து விட்டார் என்று நினைத்ததும், அவர் மீது கோபம் கட்டுக் கடங்காமல் பெருகியது. இத்தனை நாட்களும் அவரிடம் கொஞ்சமாகத் தாழ்ந்து சென்றிருந்தவன், இன்று அவர் மீதான பாசத்தை மொத்தமாக தூக்கி எறிந்தான்.
மனைவியைத் தன் மார்பு கூட்டுக்குள் பொத்தி வைத்துக்கொண்டவன், “உங்க மகன் இந்த நிமிஷமே செத்துப் போயிட்டான். இனிமேல் அவனை இந்த ஜென்மத்தில் நீங்க பார்க்க முடியாது” என்ற வார்த்தை தாய் அவளைக் கொன்று போட்டது.
“என் வாழ்க்கையை அழிச்சு, எனக்கு கிடைக்க இருந்த சந்தோஷத்தை பறிச்சு, இன்னைக்கு கடவுளா பார்த்துக் கொடுத்த வாழ்க்கையையும் அழிக்க பார்க்கறீர்களே, நிஜமாவே நான் உங்க வயித்துல தான் பிறந்தேனா?” என்று சீறினான்.
அவர் தவிப்புடன் ஏதோ சொல்ல வர, “எப்போ அவளை எதிரியா கருதி இப்படி எல்லாம் நடந்து, அத்தனை பேருக்கும் முன்னே அவமதிச்சு, அவளின் உணர்வுகளை நசுக்கி, என் மனைவின்னு கூட பார்க்காம இல்லாம ஆக்கிட்டீங்களோ, இந்த நிமிஷத்துல இருந்து உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எதுவுமில்லை. என்னைக்கு நீங்க செய்த தப்பை உணர்ந்து, ஒரு பாவமும் செய்யாத அவ கிட்ட மன்னிப்புக் கேட்டு இந்த வீட்டு மருமகளா ஏத்துக்குறீங்களோ அது வரை நானும் பேசமாட்டேன். அதுக்காக இந்த வீட்டை விட்டுப் போயிடுவதா நினைக்க வேண்டாம். ஏன்னா இது என் அப்பாவின் உழைப்பு, அவரது சொந்த சம்பாத்தியத்தில் உருவாகியது.
இது எனக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கு மட்டுமே உரிமையானது. நந்தனா இதே வீட்டுல தான் இருப்பா, அவளை விரட்டவோ துரத்தி அடிக்கவோ யாருக்கும் உரிமையில்லை. மீறியும் செய்யுங்க அப்போ இந்தப் பரிதிவர்மன் யாருன்னு தெரிய வரும்!” என்று கூறியவன், அப்பாவின் கோபத்தைக் கண்டு பயந்து போய் வேலைக்காரியின் மடியில் தஞ்சம் புகுந்திருக்கும் மகளின் அருகில் சென்று தலையில் கை வைத்து மிருதுவாக வருடினான். பின்னர், மகளைத் தன் கையில் ஏந்திக் கொண்டு, “இது எங்க குழந்தை! இவளோட அப்பா நான்; அம்மா நந்தனா! எந்த இடத்திலும் உங்க மருமக வரமாட்டா… வரவும் நான் விடமாட்டேன்!” என்று உறுதியாக கூறினான்.
அவர் நம்ப மாட்டாமல் அவர்களைப் பார்த்தபடி நின்றார்.