இருள் நிழலாய் நானே 5

இருள் நிழலாய் நானே 5

நாட்கள் அழகிலும் அழகாய் இரு நெஞ்சம் கொண்ட காதலால் நேசம் வீசி கமழ்ந்தது.

ஒவ்வொரு நொடியும் காதலை காதலாகக் கொண்டாடினர். வாழ்வின் இன்பங்கள் யாவும் அவர்களின் கரங்களில் தவழ்ந்தது.

சமரின் லட்டு என்ற குரல் அத்தனை நிறைவாக அவ்வீட்டின் ஒவ்வொரு இடமும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

முன்பே சமரின் நிலை அறிந்து செயல்படும் மகி, தற்போது அவனது மனைவியாய் ஒவ்வொன்றும் அவனுக்காக என்றே பார்த்து பார்த்து நடந்து கொண்டாள்.

“இப்படி வெளிப்படையா இருக்காத மகி. கண்ணுப்படும்” என்று ரேவதி வாரத்தில் இருமுறையாவது இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி கழிப்பார்.

தம் மக்களின் நிறைவான வாழ்வில் ரேவதி, சுந்தர் கொண்ட மகிழ்வு அளப்பரியது.

அன்று சமர் வேகமாக தயாராகிக் கொண்டிருக்க… மகி உம்மென்று அமர்ந்திருந்தாள்.

“லட்டுக்கு என்னவாம்?”

கண்ணாடியில் தலையை சரி செய்தபடி வினவினான்.

“இப்படியே நான் எப்படிடா ஆபீஸ் போறது. பாரு நல்லா கடிச்சு வச்சிருக்க” என்று காயம்பட்டிருந்த தன்னுடைய கீழ் அதரத்தை இழுத்து காண்பித்தாள்.

“நான் என்ன பண்ணட்டும்… என் லட்டு பொண்டாட்டி மேல நாளுக்கு நாள் ஆசை கூடிட்டே போகுது. கண்ட்ரோல் பண்ணவும் முடியல” என்று மகியின் அருகில் சென்று இறுக்கி அணைத்திருந்தான்.

மகியும் அவனை இடையோடு கட்டிக்கொண்டு… “லவ் யூ அத்து” என்றாள்.

“இன்னைக்கு அந்தப்பொண்ணு கேஸ் ஹியரிங் மகி. நீ கோர்ட் வரியா?” எனக் கேட்டான். அணைப்பில் இருந்தபடியே!

“இல்லை அத்து… எங்க ஆபிசுக்கு மொட்டையா ஒரு லெட்டர் வந்திருக்கு. ஆபீஸில் ஹாட் டாபிக் அதுதான். யார் அனுப்பினா தெரியல… பட் இன்ட்ரஸ்டிங்” என்றாள்.

இருவரும் தங்களின் வழக்குகளை மேலோட்டமாக மட்டுமே பகிர்ந்துகொள்வர். தொழில் விடயத்தில் யாரின் விதிமுறையிலும் மற்றவர் தலையிடுவதில்லை. அதனால் சமரும் அதற்கு மேல் விவரம் கேட்டுக்கொள்வில்லை.

சமர் கேட்டிருக்க வேண்டுமோ?

“எதுவா இருந்தாலும் கவனம் மகி” என்று முடித்துக் கொண்டான்.

இருவரும் தத்தம் அலுவலகம் புறப்பட்டனர்.

வழக்கம்போல் சமரை காவல் நிலையத்தில் விட்ட மகி தனது பத்திரிக்கை அலுவலகம் செல்ல மிகுந்த பரபரப்பாக இருந்தது.

“என்ன தினேஷ்… எல்லாரும் மும்முரமா வேலை பார்க்கிற மாதிரி தெரியுது?” என்ற மகி தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கணினியை உயிர்பிக்க… அவள் முன் வேகமாக மூச்சு வாங்க வந்து நின்றான் ராகுல்.

“என்னடா… ஹெட் உன் வேலையை தூக்கிட்டாரா?” சிரித்துக்கொண்டே வினவினாள்.

“ஹேய் லூசு பக்கி… இன்னொரு லெட்டர் வந்திருக்கு” என்ற ராகுல், “உண்மைகள் ஆயிரம் தலைப்புக்கு வந்திருக்கு” என்றான்.

“இல்ல… புரியல?”

“அச்சோ மகி… உண்மைகள் ஆயிரம் தலைப்பில் பல மர்மமான வழக்குகளை கண்டறிந்து உண்மை செய்தியை வெளியிடும் பிரிவுக்கு, இதையும் கண்டுபிடித்து எங்களுக்கு உண்மையை சொல்லுங்கன்னு அந்த லெட்டரில் எழுதியிருக்கு” என்றான் விளக்கமாக.

“அப்போ… அந்த லெட்டர் என் பெயருக்கு வந்திருக்கா?” எனக் கேட்டாள்.

“எஸ்… உனக்கு தான் எழுதியிருக்காங்க” என்ற ராகுல், “ஹெட் கூப்பிட்டார் வா” என அவளை அழைத்துக் கொண்டு விவாதம் செய்யும் அறைக்குச் சென்றான்.

“வாங்க மகிழா” என்று வரவேற்று, அவள் அமர இருக்கையை கை காண்பித்த தலைமை செய்தியாளர், அந்த கடிதத்தை மகியிடம் நீட்டினார்.

மகி தயங்கிட…

“வாங்கி படிங்க மகி” என்றார் எடிட்டர் வினைதீர்த்தான்.

அரசியல் பின் புலன்களுக்காக மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்படும் பல மர்மமான வழக்குகளை புலனாய்வு இதழியல் பிரிவில் இருக்கும் மகி, தன் குழுவின் நண்பர்களான தினேஷ், ராகுல், வர்ஷா ஆகியோருடன் அந்த வகை வழக்குகளை ஆராய்ந்து உண்மைகள் ஆயிரம் எனும் தலைப்பில் செய்திகள் வெளியிட்டு உண்மை தன்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது. நாளடைவில் மக்கள் தங்கள் பகுதிகளில் இதுபோன்று உள்ள நிகழ்வுகளை குறிப்பிட்டு உண்மையை கண்டுபிடித்து தருமாறு மின்னஞ்சல், கடிதங்கள் அனுப்பிட… அவற்றில் முக்கியமானவற்றை இதுபோல் கண்டறிந்து தீர்வு வழங்கியிருக்கின்றனர்.

அதுபோலத்தான்… போன வாரம் வந்த கடிதம் ஒன்றில்…

“நான் ***** மலைகிராமத்தை சேர்ந்த பெண். மலையடிவாரத்தில் உள்ள சிறு கிராமம். எங்களின் வாழ்வாதாரம் அந்த மலை தான். எங்கள் முன்னோர்கள் அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக அவர்கள் காலத்தில் நம்பிய மூட பழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. பகலில் மலையில் சென்று வேட்டையாடுவது, தேன் எடுப்பது, சுள்ளிகள் பொறுக்குவது, மூலிகைகள் பறிப்பது, கிழங்கு எடுப்பது இப்படி எங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற ஒன்றை செய்து கொண்டு வருகிறோம். முன்பென்றால் சாயங்காலத்திற்கு மேல் போனால் தான் பயம் என்றிருந்த நிலை… இப்போது சில மாதங்களாக, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பகலில் செல்லவே அச்சம் எனும் நிலையில் வந்து நிற்கிறது. அப்படி செல்லும் நபர்கள் பிணமாக காட்டுக்கு வெளியில் கிடக்கின்றனர். மலையில் உலவும் பேய் தான் கொன்று விடுகிறது என என் மக்கள் போலதான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இது பேயாக இருக்காது என்று சில உள்ளுணர்வு எனக்குள். இரவில் வித்தியாசமான சத்தங்கள், காக்கைகள் இரையும் இரைச்சல், பல காலடி நடமாட்டம் எல்லாம் கேட்கிறது. உண்மையில் மலையில் பேய் தான் உலா வருதா… இல்லை வேறு காரணமா? எங்கள் கிராமத்தைச் சுற்றியிருந்த பல கிராமங்கள் மலைக்கு செல்ல பயந்து சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்துவிட்டனர். எங்களால் அப்படி போக முடியாது. எங்களின் வாழ்வாதாரம் அம்மலை தான். எங்கள் கிராமம் கட்டுபாட்டில் வரும் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. நீங்களாவது உண்மையை கண்டுபிடித்து எங்களை வாழ வையுங்கள்.”

இதுதான் அந்த கடிதத்தின் சாராம்சம்.

இதே கடிதம் இன்று மீண்டும் வந்திருக்கிறது.

அதில் இந்த வாரம் மட்டும் நான்கு பேர் இறந்து கிடந்ததாக வந்திருந்தது.

“என்ன பண்ணலாம்?” வினைத்தீர்த்தான் கேட்க, மகி தன் குழுவின் மற்ற நபர்கள் நால்வரையும் ஏறிட்டாள்.

“ரொம்பவே சீரியஸான விஷயம் போலதான் இருக்கு. ஆனால் இதை எந்த வகையில் நம்புவது?” என்ற தினேஷ்,

“அந்த கிராமத்துக்கு போக வழியே கிடையாது. வெறும் புதர் அடர்ந்த காட்டுக்குள் போய் தான் போகணும். அப்படி அங்கிருந்து ஒரு பெண் டவுனுக்கு வந்து லெட்டர் போட்டிருக்கா அப்படிங்கிறதெல்லாம் சாத்தியமே இல்லை. இது பொய்யாக் கூட இருக்கலாம்” என்றான்.

“சப்போஸ் உண்மையா இருந்தா?” மகி வினவிட, “உண்மைன்னு தெரியும் போது உதவி கேட்டும் நம்பாம விட்டதுக்கு நிச்சயம் குற்றவுணர்விலே நானெல்லாம் செத்திடுவேன்” என்றாள் வர்ஷா.

“ஒருமுறை நேரில் போயிட்டு வாங்க.” வினைத்தீர்த்தான் சொல்லிட மகிக்கும் அதுதான் சரியெனப்பட்டது.

“அப்போ மகி எப்போ கிளம்புற?” தினேஷ் நக்கலாகக் கேட்டான்.

“என்னால் அத்துவை விட்டு அவ்ளோ தூரம் போக முடியாது தினேஷ்.”

“இது உனக்கு எப்பவும் ஒரு சாக்கு. அந்த பயந்தவனை கட்டிக்கிட்டு நீயெப்படி நைட்டில்…”

“ஜஸ்ட் ஷட் அப் தினேஷ்…”

தினேஷ் முடிக்கும் முன் மேசையில் வேகமாகத் தட்டிக்கொண்டு எழுந்து நின்ற மகி கத்தியதில், அத்தனை ஆக்ரோஷம்.

“அத்து உன்னை மாதிரி ரவுடி, கொலைகாரன், பேய், பிசாசுக்கு பயந்த தொடை நடுங்கி கிடையாது. பத்து பேர் முன்ன நின்னாலும் கண்ணுல கொஞ்சம் கூட பயமில்லாம நெஞ்சை நிமிர்த்தி நிப்பான். உன்னால் முடியுமா?” என்று மகி கேட்கும் முன்,

“எங்க போன கேஸில், துப்பாக்கியை பார்த்து காய்ச்சல் வந்து கிடந்தவன் தானே நீ” என வர்ஷா கேலி செய்தாள்.

“வர்ஷா…” தினேஷ் விரல் நீட்ட…

“இல்லைன்னு சொல்லுவியா நீ?” எனக் கேட்டு சிரித்தாள் வர்ஷா.

தினேஷ் முறைத்திட,

ராகுல் தான் வர்ஷாவை அடக்கினான்.

“மேட்டர் ரொம்பவே சீரியஸ். உதவின்னு கேட்டு செய்ய முடியலன்னா நாம இன்வெஸ்டிகேஷன் ஜோனர்லிஸ்டா இருந்து என்ன பிரயோஜனம்? உங்களுக்குள்ளே சண்டை போட்டுக்காம, யாரு போவது முடிவு பண்ணுங்க” என்று வினைதீர்த்தான் கடிந்து கொண்டார்.

“போன கேஸ் ஃபீல்டு வொர்க் நான் தான் பார்த்தேன். இந்த முறை என்னால் முடியாது” என வழக்கின் ஆபத்தை உணர்ந்து தினேஷ் நகர்ந்துகொண்டான்.

“அப்போ நான் போறேன்…” வர்ஷா முன்வர,

“ரொம்பவே டேஞ்சர் பிலேஸ்ன்னு தோணுது. நீ வேண்டாம். நான் போறேன்” என்று வர்ஷாவை தடுத்தான் ராகுல்.

“உன்னை மட்டும் எப்படிடா தனியா விடுறது” என்ற மகி, “நான் அத்துவோட, அப்பா இருக்க முடியுமான்னு கேட்டு பார்க்கிறேன். அவர் ஓகே சொல்லிட்டா, நானும் உன்னோட வரேன்” என்றாள்.

“ஹேய் மகி… நீ தினேஷ் என்னவோ சொன்னான்னு யோசிக்காதே” என்ற ராகுல், “அந்த இடம் பத்தி முழுசா தெரியாம எல்லாரும் எப்படி போறது?” என்றான்.

“சமர் அண்ணாக்கு உன்கிட்ட இருக்க கம்ஃபோர்ட் வேற யார்கிட்டவும் இருக்காது மகி. நீ இரு, ராகுலுக்கு துணையா நானும் போறேன்” என்றாள் வர்ஷா.

“ஓகே ஃபைன்” என்று அவர்களின் பேச்சினை கவனித்து, இருக்கையிலிருந்து எழுந்த தலைமை செய்தியாளர், “வர்ஷா அண்ட் ராகுல் போகட்டும். ஃபர்ஸ்ட் வந்திருக்கும் லெட்டர் உண்மை தானா தெரிஞ்சுப்போம். மத்ததை பிறகு பார்ப்போம்” என்று சென்றார்.
_____________________

சில வாரங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கு இன்று தீர்ப்பிற்கு வருகிறது.

அதில் சமரால் கைது செய்யப்பட்ட நால்வரும் வெளியில் வர முடியாத அளவிற்கு வலுவான ஆதாரங்களை சமர் சமர்பித்திருந்தான்.

அன்று மேம்பாலத்தில் இருந்த கண்காணிப்பு காணொளி காட்சிகளை வைத்து, பாலத்தின் மீது வைத்திருக்கும் டிவைடர் பிளாக்கினை நகர்த்தி கீழ் வராது மேலிருந்தே திரும்பிச்சென்ற வாகனங்களை கண்டறிந்து குற்றவாளிகளை சமர் பிடித்திருந்தான்.

அதற்கு முந்தைய கொலைகளில் அவர்களுக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் முதல் விசாரணையிலே முடிவுக்கு வந்தது.

அந்த பெண் தங்களின் தாக்குதலில் இறந்திருக்க…

நால்வருக்கும் அவளை கடத்தும்போது, துன்புறுத்தும் போது, வன்கொடுமை செய்யும் போது தோன்றாத பயம், இறந்ததும் தோன்றியிருந்தது.

தாங்கள் மாட்டிக்கொள்ளாது தப்பிக்கவே, நகரத்தில் தற்போது யாரோ கொலை செய்து உடலை கோனியில் கட்டி பாலத்திற்கு கீழ் போட்டுவிட்டு செல்வதைப்போல் அப்பெண்ணையும் போட்டுவிட்டு சென்றிருக்கின்றனர்.

உண்மை தெரிந்த நொடி சமர் நால்வரையும் அடித்து நொறுக்கி விட்டான்.

“அவனுங்களுக்கு எதாவதுன்னா… நாம தான் சார் பதில் சொல்லனும்” என்று சீனு தடுத்த பின்னரே சமர் அடிப்பதை நிறுத்தியிருந்தான்.

“இப்போ சொன்னதை கோர்ட்டில் மாத்தி சொல்ல டிரை பண்ணாதீங்க… பாலத்தில் நின்னு மூட்டையை தூக்கிப்போட்டதில் உங்க நாலு பேரு முகரையும் நல்லத் தெளிவா காமிராவில் பதிவாகியிருக்கு. அந்த ஆதாரம் ஒன்னு போதும் உங்களை ஜெயிலில் வைக்க” என்ற சமர், “அமைதியா கோர்ட்டில் நீங்களே உண்மையை ஒத்துகிட்டால் குறைந்த தண்டனை கிடைக்கும். பொய் சொல்லி தப்பிக்க நினைச்சீங்க என்கவுண்டரில் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்” என்று வெளியேறினான்.

சமர் அமைதியாக காண்பித்த நரகத்திலே பயந்திருந்த நால்வரும், அவனது அடியில் தெம்பின்றி துவண்டிருக்க, சுயமாக சிந்திக்கும் திறன் இழந்திருந்தனர்.

சமரின் வார்த்தைகள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

சமர் செய்த நல்ல காரியம், பெரிய பெரிய ஆட்கள் கூறியும் நால்வரையும் பார்க்க யாரையும் அவன் அனுமதிக்கவில்லை. அதனால் நால்வருக்கு ஆதரவாக வாதாட இருந்த வக்கீல், நீதிமன்றத்தில் சமரால் ஒப்படைக்கப்பட்ட ஆதாரத்தில் எதிர்த்து வாதாட முடியாது தடுமாறினார்.

அவரின் தடுமாற்றம் நால்வருக்கும் அச்சத்தை அதிகரிக்கச் செய்யவே, சமர் சொல்லியது போன்று உண்மையை ஒப்புக்கொண்டால் குறைந்த தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கு என்று நம்பி நீதிபதியிடமே பெண்ணை கடத்தியது முதல், பாலத்தின் கீழ் போட்டதுவரை உண்மையை சொல்லிவிட்டனர்.

நால்வருக்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பாகியது.

“அவனுங்களையே உண்மையை ஒப்புக்க வச்சிட்டிங்களே சார்” என்று மணி சொல்ல…

“பெரிய இடம் சார். நாம வலுவான ஆதாரம் கொடுத்தாலும் ஈசியா வெளியில் வந்திடுவானுங்க. அதான் அவனுங்களே சொல்ற மாதிரி பண்ணேன்” என்ற சமர், “மூன்று கொலைகளுக்கு அடுத்து ஒன்னும் நடக்கலன்னு அமைதியா இருக்கக்கூடாது சீனு. அமைதியா இருக்கான் அப்படின்னா வேறெதோ பெருசா பண்ணப்போறான் அர்த்தம். அதுக்குள்ள கண்டுபிடிக்கனும்” என சமர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருந்தான்.

காவல்துறை பணி இதுதான். ஒன்று முடிந்து விட்டதென்று ஆசுவாசம் கொள்ள முடியாது. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

சமரின் இந்த ஓட்டம் அவனது மகிக்காகவும் அமையுமென்று நினைத்திருக்கமாட்டான்.

அன்று மாலை சமரை அழைத்துச்செல்ல காவல் நிலையம் வந்த மகியின் முகம் வாட்டமாகவே இருந்தது.

கடிதத்தில் வந்திருந்த தகவல் குறித்து. அதிலிருந்து அவளால் வெளியில் வர முடியவில்லை.

“என்ன மகி உடம்பு சரியில்லையா?”

சமர் அவளின் கன்னம், நெற்றி என கை வைத்து பார்க்க…

“நத்திங் அத்து” என்றவள், “கங்கிராட்ஸ் டா… சீக்கிரமாவே அந்த கேஸ் முடிச்சிட்ட” என்றாள்.

“ம்க்கும்… அதுக்கு முன்ன நடந்த கொலையெல்லாம் அப்படியே இருக்கே” என்ற சமர், “அதில் சின்ன லீட் கூட கிடைக்கல. அதுதான் பெரும் சிக்கல்” என்றான்.

“எனக்கும் அப்படி ஒரு சிக்கல் வந்திருக்கு.”

இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்திருந்தனர்.

மகி சிக்கல் என்றதும் சமர் வேகமாக, “என்ன சிக்கல்?” என்று வினவினான்.

சமரின் பதற்றத்தில், ‘இவன்கிட்ட உளறிட்டோமே’ என தன்னையே திட்டிக்கொண்ட மகி, ஏதேதோ சொல்லி சிரித்து அவனை சமாளித்தாள்.

இருவருமே ஒரே புள்ளியை நோக்கி இருவேறு பாதையில் பயணிக்கத் துவங்கினர்.

error: Content is protected !!
Scroll to Top