வேள்வி : 7

கலையரசியின் திருமணம் முடிந்த கையோடு, அவளுக்குரிய சீர்சாதனங்கள் அனைத்தையும் கணவனின் வீட்டில் கொண்டு வந்து கொடுத்தார் தாணுலிங்கம். அவரது சித்தப்பா, சித்தியிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர்கள் வேறு ஜாதியைச் சார்ந்தவர் சதாசிவம் என்பதால், மனதார அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

அப்போது அவர்களிடம், “பெத்த பிள்ளையை விட ஜாதி முக்கியமா? நாம ஜாதியோட வாழப் போறோமா? புள்ளைங்களோட வாழப் போறோமா? ஜாதி ஒரு அடையாளம் தானே தவிர, அதுவே வாழ்க்கையில்லை. நண்பராக பேசுறோம். உறவினரா அவங்க வீட்டு நல்லது கெட்டதில் பங்கேற்கிறோம், ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுக்கிறோம்… பிறகும் என்ன சித்தப்பா? ஏன் இப்படி ஒரு பழமைவாதியைப் போல நீங்களும் நடந்துக்கணும்? நம்ம கலை மேல எந்த தப்பும் இல்லை, அவளால் அப்படி ஒரு தப்பை செய்யவும் முடியாது. பிறகும் ஏன் அடம்பிடிக்கிறீங்க?” என்றார் தாணுலிங்கம்.

 “அவதான் எந்தத் தப்பும் செய்யலயே! பிறகும் எதுக்கு இந்தக் கல்யாணம்? நாம வேறு நல்ல மாப்பிள்ளையை பார்க்கலாம்” அவளது அம்மா அவசரமாகக் குறுக்கிட்டதும், “சித்தி! சதாசிவமும் ரொம்ப நல்லவர் தான். என் மொத்த சொத்துக்களையும் நிர்வகிக்க உதவுபவர். நல்ல பண்பட்ட மனிதர். நாணயம் மிகுந்தவர், சொந்தமாக வீடும் நில புலனும் இருக்கு…

கலை ரொம்ப நல்லவ! அவளை வெளிநாட்டுல கல்யாணம் பண்ணிக் கொடுத்தாலும் எப்படிப் பார்க்காம இருக்கறதுன்னு கவலையோடிருந்தேன்; இப்பதான் எனக்கும் நிம்மதியா இருக்கு. நினைச்ச நேரம் பார்க்கலாம், கூப்பிட்டதும் ஓடிப் போகலாம்; சதாசிவம் நம்ம கலையை நல்ல விதமாய் பாத்துக்குவார்” என்று அவர்களுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொன்னார்.

கலையரசியின் அம்மாவுக்கு, மகளுக்குப் பெரிய இடத்தில் வரன் பார்த்தும் நடக்காமல் இப்படியாகிவிட்டதே என்ற வருத்தம் இருந்தது. அவளது அப்பாவுக்கோ அதைவிட ஜாதிதான் பெரிதாகப் போய்விட்டது. எல்லோரையும் எப்படியெல்லாமோ பேசி சமாதானப்படுத்தி, ஒன்று சேர்த்து வைத்துவிடப் பலவாறு முயற்சி செய்தார்.

அவருக்காக மட்டுமே திருமணத்திற்கு வந்தவர்கள், முகூர்த்தம் முடிந்ததும் திரும்பிப் பார்க்காமலேயே சென்றுவிட்டனர். கலையரசி கண்ணீர் விட்டு அழுததைக் கண்டு, “உனக்கு நான் இருக்கேன், கவலைப்படாம இரு” என்றார் தாணுலிங்கம். சதாசிவத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

திருமண நிச்சயம் விஷயமாக ஒரு சில சாதனங்களை வீட்டில் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லியிருந்தார் தாணுலிங்கம். அதோடு ஒரே ஊர், அவரது தங்கை, பார்த்தால் மரியாதையாகப் பேசும் குணமுடையவள் என்பதால் அவளைக் காணும்போதெல்லாம் பேசுவார். அவளும் அண்ணனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர் எனும் மரியாதையில் பேசி பதிலளிப்பாள். இதைத் தவிர தவறாக அவரிடம் பேசியது இல்லை.

தன் அண்ணன் தாணுலிங்கம் தன்னிடம் காட்டும் பாசமும் அக்கறையும் கலையரசிக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர் காட்டிய மாப்பிள்ளை யாராக இருந்தாலும் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவளது ஆசையாக இருந்தது. வேல்முருகனைக் காட்டியபோது சரி என்றுதான் சொல்லியிருந்தாள்; ஆனால், உடன் பிறந்த சகோதரியால் செய்யாத தவறுக்கு அப்படி ஒரு பழியைச் சுமக்க நேரிட்டதும், “தன்னை யாரும் நம்பவில்லையே!” என்று அவள் கண்ணீர் விட்டு அழுதாள்.

ஆனால், அத்தனை வருடங்களாக அவளிடம் பேசிப் பழகியதில் தங்கையின் குணம் நன்றாகத் தெரிந்திருந்ததால், அந்த இடத்தில் அவளைக் குற்றவாளியைப் போல நடத்த விரும்பாமல் சென்றுவிட்டார் தாணுலிங்கம். சதாசிவத்திடம் சென்று விசாரித்தபோது, அவர் கைகூப்பிக் கும்பிட்டுக் காலில் விழுந்துவிட்டார்.

ரெண்டு பேருமே தப்பு செய்யவில்லை. ஆனாலும் பிறர் பார்வையில் அப்படி நடந்துவிட்டதாகத் தெரிகிறது. என்ன செய்வது என்று அறியாமல் வீட்டிற்கு வந்தவர், தனது மனைவிக்கு இது விஷயமாக ஏதாவது தெரியுமா அல்லது வேல்முருகனிடம் விபரத்தை தெரியப்படுத்தி, பின்னர் திருமண ஏற்பாடு செய்யலாமா? என்று யோசித்தபடி இருந்தார்.

நாகேஸ்வரி கணவரின் முகத்தைப் பார்த்து விட்டு என்னவென்று  விசாரிக்க, அவரும் மேலோட்டமாக பேசி, அவள் மனதில் இருப்பதை அறிய முயன்றார்.

அப்போது தான் பெண்கள் இருவருக்கும் இடையிலான நட்பு முதல் அனைத்தும் தெரிய வந்து, தான் சந்தேகப்பட்டது மிகவும் சரி என்று எண்ண வைத்தது. இளைய தங்கை வேல்முருகனை திருமணம் செய்ய ஆசைப்படுவதை அறிந்த பின் மறுபடியும் சென்று மூத்தவளுக்கு பேச மனம் வரவில்லை. அதே நேரம் கலையரசியின் மீது விழுந்த பழியை எப்படித் துடைப்பது என சிந்தனை வயப்பட்டார். அதோடு திருமண நிச்சய தேதி ஊர் முழுவதும் சொல்லிவிட்டதால் அதற்கும் என்ன செய்வது என்று அவர் தயங்க, நாகேஸ்வரி அவளது பெற்றோரிடம் பேசி அதற்குச் சுமூகமான தீர்வு கண்டாள்.

ஆனாலும் ஊர் முழுவதும் விஷயம் கசிந்தது. கலையரசி சதா அழுதுகொண்டு நிம்மதியில்லாமல் காணப்பட்டாள். தங்கையை இப்படியே விட்டு வைப்பது சரியல்ல, நாளைக்கு ஏதாவது தப்பாக நடந்துவிடக் கூடாது என்பதால், அவளைச் சந்தித்துப் பேசினார் தாணுலிங்கம். அப்போது கலையரசி, “எனக்கு வேறு எந்த மாப்பிள்ளையும் பார்க்க வேண்டாம் அண்ணா! வனிதாவுக்கு முதலில் முடியுங்க” என்றாள்.

தங்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டவர், “உன் தங்கை தான் விரும்பியவனை கல்யாணம் செய்ய ஒரு பொய் சொல்லிட்டா; இதனால் உன் வாழ்க்கை பாதிக்கப்படும்னு உணரத் தவறிட்டா… அதுக்காக வீட்டுக்கு மூத்த பெண்ணான உன்னை அப்படியே விட்டுட முடியாது. சொல்லுமா! நான் செய்த தப்புக்குப் பிராயசித்தம் தேட ஒரு வாய்ப்புக் கொடு” என்று கேட்டார்.

அவள் பதறிப்போய் அண்ணனின் கையைப் பற்றிக்கொண்டு, “இப்படி எல்லாம் பேசாதீங்க அண்ணா! நான் உங்களை எப்பவுமே வேறு நபரா நினைச்சதில்லை. என் உடன் பிறந்தவராகத்தான் பார்க்கறேன். நீங்க என்னை யாருக்குக் கல்யாணம் செய்து வச்சாலும் எனக்குச் சம்மதம் தான்” என்று உடனடியாக சொன்னாள்.

தங்கையின் உச்சியில் கை வைத்தவர், “உன் நல்ல மனசுக்கு நீ நூறு வருஷத்துக்கு தீர்க்க ஆயுசுடன் கணவன் குழந்தைகள் சகிதம் இருக்கணும்” என்று வாழ்த்தியதும், “அண்ணா, நான் ஒண்ணு சொன்னா நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது” என்று தயக்கத்துடன் நிறுத்தினாள் கலையரசி.

அவர் “சொல்லும்மா!” என்றதும், “உங்களுக்குச் சரியா தோணினா, அவருக்கே என்னைைக் கல்யாணம் செய்து தர முடியுமா?” என்று கேட்டாள்.

“யாரம்மா சொல்றே? புரியலையே…”

“அதான்னா! உங்க கூடவே சதா நேரமும் இருப்பாரே, அவர்தான். வனிதா சொன்ன என் காதலர். நீங்க யாரையோ பார்த்து எப்படி பேசி கல்யாணம் செய்து வச்சாலும், இதை என்னால் சாகும் வரை மறக்க முடியாது. அதுவும் இல்லாம நம்ம ஊர் முழுக்க பரவிடுச்சு… சொந்தக்காரங்க, ஊர்காரங்கன்னு தெரிஞ்சுட்டதால், புதுசா பார்த்து வைக்கும் மாப்பிள்ளையின் காதுக்கு இந்த விஷயம் போக ரொம்ப நேரம் ஆகாது. எந்த நேரம் என்ன நடக்குமோன்னு பயத்தில் நானும் வாழ வேண்டாம். அதைவிட இவரைக் கட்டிக்கிட்டா, நிம்மதியா சந்தோஷமா இருந்துட்டு போலாம். நீங்க முதல்ல அவரிடம் பேசிட்டு, பிறகு அவர் சம்மதம் சொன்னா மட்டும் அப்பா அம்மாவிடம் பேசுங்க” என்றாள்.

தங்கையின் சமயோஜிதமான புத்தி அவரை ஈர்த்தது. புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறி சதாசிவத்தைக் கண்டு இது விஷயமாகப் பேசினார். அவருக்கும் கலையரசியை நினைத்துக் கலக்கமாக இருந்ததால், தானே அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகச் சொல்லிவிட்டார். இருவரின் மனதும் தெரிந்ததால், அடுத்ததாக சித்தி சித்தப்பாவிடம் பேசி அவர்களின் திருமணத்தையும் முடித்திருந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் வனிதாவிடம் அதிகமாகப் பேசுவதும் இல்லை, அந்த வீட்டிற்குப் போவதுமில்லை. தன் மனைவியையும் கண்டித்து வைத்திருந்தார். அவளோ தனது அண்ணன் வேல்முருகனை அடுத்த மாதம் திருமணம் செய்யப் போகிறவள் வனிதா எனும்போது, அப்படியே விட்டு விடுவாளா? அவருக்குப் பிடிக்காவிட்டாலும் இருவரும் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். எதுவும் ஒரு எல்லையுடன் இருப்பது நல்லது என்பதால், கலையரசிக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்தவர், அடுத்த மாதம் நடக்க இருந்த வனிதாவின் திருமணத்தையும் முன்னின்று நடத்திவிட்டு வந்தார்.

திருமணமான அடுத்த மாதம் வனிதா வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டாள். இனிமேல் அவளால் பிரச்சனை வராது என்று நினைத்து அவர் தனது சொந்த விஷயங்களிலும், கலையரசியின் குடும்பத்தின் மீதும், மகன் பரிதிவர்மன் படிப்பு மற்றும் வாழ்க்கையின் மேல் கவனத்தைச் செலுத்தினார்.

தங்கை கலையரசி கர்ப்பமாக இருப்பதை சதாசிவத்தின் வாயிலாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். அவளுக்குப் பிடித்தமான அனைத்தும் வாங்கிக் கொடுத்தார். ஒன்பதாவது மாதம் வளைகாப்பு நடத்தி அவளைச் சித்தப்பா வீட்டில் கொண்டு விடுவதற்காக ஏற்பாடு செய்தார். இதை அறிந்த வனிதா, தனது ஏழாவது மாதமே தாய் வீட்டிற்குப் பிரசவத்திற்கு வந்துவிட்டாள். இரண்டு பெண்களையும் ஒரே நேரம் பார்ப்பது சிரமம், அதிலும் வனிதா வெளிநாட்டுக்குச் சென்ற பிறகு முன்பை விட அலட்டல் பேச்சு அதிகமாகி விட்டது தெரிந்ததால், கலையரசியை எப்படி அங்கு விடுவது என்று தயங்கியவர், தங்கையை தன் வீட்டிற்கு அழைத்தார். சதாசிவத்தின் அம்மா அவரது மனதைப் புரிந்தது போல, தாங்களே அவளது பிரசவத்தை பார்ப்பதாகக் கூறிவிட்டார்.

அவர்களும் முழு மனதுடன் சம்மதிக்க, குழந்தை நந்தனா பிறந்ததும் தாய்மாமனாக முன்னின்று அத்தனையும் செய்து கொடுத்தார். ஆனால் திடீரென வந்த தீராத வயிற்றுவலியாலும் காய்ச்சலாலும் அவதிப்பட்ட கலையரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவளது தாயும் தகப்பனும் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதனர். அதே ஊரில் இருந்த வனிதா, தமக்கை இறந்து போனதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாமல் கடமைக்கு வந்து விட்டுப் போனாள். அவளுக்குப் பத்தாவது மாதம் பெண் குழந்தை பிறந்தது. உடனே தனது தோழியும் அண்ணன் மனைவியுமான நாகேஸ்வரியிடம், “நம்ம பரிதிக்கு இவள்தான் மனைவி! நம்முடைய பிள்ளைகளுக்கு வேறு எங்கேயும் பார்க்கக் கூடாது” என்று கூறிவிட்டாள்.

இந்த விஷயத்தை நாகேஸ்வரி மகிழ்ச்சியுடன் கணவரிடம் சொன்னபோது, அவர் ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

குழந்தை நந்தனா தாயைத் தேடியும் பசியிலும் அழுது கதறுவதைப் பார்க்க முடியாமல் சில நாள் வனிதாவிடம் பாலூட்டச் சொல்ல கேட்டும், அவள் ஒரே வார்த்தையில் முடியாது என்று விட,

பச்சைக் குழந்தையின் அழுகுரலைப் பார்க்க முடியாமல் தன்னுடைய வீட்டிற்கு கொண்டு வரப் பார்க்க, சதாசிவம் தானே தனது மகளை வளர்ப்பதாகச் சொல்லிவிட்டார். அன்று முதல் குழந்தையைப் பார்ப்பதற்கு ஒரு வேலைக்கார பெண்மணியை ஏற்பாடு செய்து கொடுத்து, அவளுக்கு உண்பதற்குத் தேவையான பால் மற்றும் மாவு டப்பாக்களை இவரே வாங்கிக் கொடுத்தார். பின்னர், அவளது மூன்றாவது வயதில் வேறு ஒரு பெண்ணைப் பார்த்து, அவரது விருப்பத்தையும் மீறித் திருமணம் செய்து வைத்தார்.

வனிதா குழந்தை பிறந்த சில மாதத்தில் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டாள். அப்படிப் போகும்போது, “எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்தக் குழந்தையை வீட்டுல அனுமதிக்காதே! ஏற்கனவே உன் பேச்சைக் கேட்காம நடக்கும் எங்க அண்ணா, பிறகு ஒரேடியா கைமீறிப் போயிடுவார். மகனையும் அவங்க வீட்டுக்குப் போக விடாம பத்திரமா பாத்துக்கோ. வேணுமா அவனை எங்களோடு வெளிநாட்டுக்கு அனுப்பி வை. அவனுக்கு நல்ல படிப்பும் தொழில் செய்ய தேவையானதும் நாங்க செய்து தரோம்.” என்று நாகேஸ்வரியின் மனதில் நஞ்சை விதைத்துவிட்டுச் சென்றாள்.

கணவரிடம் இந்த வார்த்தையைச் சொல்ல முடியாது; ஏனெனில், அவரது குணத்தை நாகேஸ்வரி நன்றாக அறிந்து வைத்து இருக்கிறாள். அதனால் மகனைக் கைக்குள் கொண்டு வரப் பார்த்து, கொஞ்ச நாள் போகட்டும் என்று அமைதியாக இருந்தாள்.

ஆரம்பத்தில் நன்றாக இருந்த நீலாம்பரி, தனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு கொஞ்சமாக மாறினாள். பின்னர் ஒரு மகளும் பிறந்துவிட, அப்படியே மாறிவிட்டாள். சதாசிவம் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அந்தச் சின்னக் குழந்தையிடம் அவள் காட்டும் கடுமையை அவரும் தாணுலிங்கமும் அறிந்ததால் அவளிடம் பேசப் போக, “இது எங்க வீட்டு விஷயம், நீங்க தலையிடும் அவசியமில்லை” என்று முகத்தில் அடித்தது போலச் சொல்லிவிட்டாள்.

அதன் பிறகு அந்த வீட்டிற்குப் போவதை தாணுலிங்கம் குறைத்துக்கொள்ள, இரண்டாவது மனைவி மீது வைத்திருந்த பாசம் ஒரேடியாக இல்லாமல் போய்விட்டது சதாசிவத்திற்கு! இரண்டு குழந்தைகள், அவரது அப்பா அம்மா, மனைவி, மகள் நந்தனா மற்றும் அவர் என்று குடும்பம் பெரிதாகிவிட்டதால், அத்தனை பேருக்கும் செலவு செய்ய சதாசிவத்தின் சம்பாத்தியம் போதாது. எனவே, நந்தனாவுக்கான அத்தனையும் தாணுலிங்கம் ஒரு தாய்மாமனாக முன் வந்து தானே செய்தார்.

வருடங்கள் ஓடின. பரிதிவர்மன் வளர்ந்து கல்லூரிப் பருவத்தை அடைந்தான். நந்தனாவும் தனது பதினைந்தாவது வயதில் பெரிய பெண்ணானாள்.

உடனே சதாசிவம் மைத்துனருக்குத் தகவல் தெரிவிக்க, அவரும் வந்து முறை செய்துவிட்டுப் போனார். பின்னர் அவளது பூப்புனித நீராட்டு விழாவின்போது, நீலாம்பரியின் குடும்பம் தாங்கள்தான் தாய்மாமன் இடத்தில் இருந்து சீர் செய்வோம் என்று கூறியது. நீலாம்பரியும் அதற்கு ஒத்து ஊத, “தாணுலிங்கமும், அவர் மகனும் இருக்கும் வரை அவர்கள்தான் செய்வார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தா வாருங்க, இல்லையா வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் சதாசிவம்.

அன்று ஒரு நாள் தாணுலிங்கத்தை முகத்தில் அடித்தது போல் பேசிய நீலாம்பரியின் செயல்கள் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்க, இன்று தனது மகள் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டினார் சதாசிவம்! அதனால் பூப்புனித நீராட்டு விழாவிற்கு அவளது குடும்பம் தாமதமாக வந்து எதிலும் ஒட்டுதல் இல்லாமல் கலந்து கொண்டது. அதைப் பெரிதுபடுத்தாமல் மற்ற காரியங்களில் ஈடுபட, இருபத்திரண்டு வயது வாலிபனான பரிதிவர்மன், தனது அப்பா தொழில் விஷயமாக வெளியூருக்குப் போய் இருப்பதால், அவர் சார்பாக நடைபெறவிருக்கும் பூப்புனித விழாவிற்குப் பட்டுப்புடவை, நகை, பூ மற்றும் இதர சாதனங்களுடன் அவர்களின் வீட்டிற்கு வந்தான்.

வெளுவெளுவென தூய பால் போன்ற நிறம், நெடுநெடுவெனக் கதவை நின்று கொண்டே எட்டி விடும் அளவிலான உயரம், அளவாக வெட்டி விடப்பட்ட அரும்பு மீசை, பளபளவென சவரம் செய்யப்பட்ட கன்னங்கள், ரோஸ் நிறத்தில் உள்ள உதட்டில் படிந்த புன்னகையுடன், விலை உயர்ந்த பேண்ட் சட்டையில் டக்கின் செய்துகொண்டு, புதிய கருப்பு நிற ஷூவில், வெளிநாட்டு கடிகாரத்தை கையில் அணிந்து கொண்டு காண்பவர் கண்களைக் கொள்ளை கொள்ளும் விதமாக வந்திருந்தான் பரிதிவர்மன்!

அவனை வரவேற்று வீட்டிற்குள் அழைத்து வந்த சதாசிவம், மகள் நந்தனாவின் அறைக்குள் அழைத்துச் சென்றார். ஆனால் அவளை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்த நீலாம்பரி, “அங்கிருந்து யார் வந்தாலும் பேசக் கூடாது; கேட்ட கேள்விக்குப் மட்டும் தலை அசைத்து விலகிப் போயிடணும். இல்லை, அவர்கள் போனதும் தொலைச்சுடுவேன்” என்று மிரட்டியிருந்தாள். அதனால் அவள் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்க, கையில் இருந்த தாம்பளத் தட்டை அவளை நோக்கி நீட்டியபோதும், “ஹாய் நந்தனா! எப்படி இருக்கே?” என்று கேட்டபோதும் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.

“அதான் பரிதி கேட்கிறான் இல்ல, பதில் சொல்லு தாயி” என்றதும் அவள் தலையை ஆட்டினாள். “தட்டை அங்கே வச்சிட்டு, உங்க அத்தானிடம் ஆசீர்வாதம் வாங்குடா” என்றார் சதாசிவம். அவள் அதுபோல செய்யவும், “பிளஸ்ஸிங் எல்லாம் பெரியவர்கள் செய்ய வேண்டியது. நான் அந்த அளவுக்கு இன்னும் வளரல, எங்க ஆசியும் வாழ்த்தும் எப்பவும் அவளுக்கு உண்டு” என்றான் பரிதிவர்மன்.

அவனது பெருந்தன்மையான மனதையும், அப்பா தாணுலிங்கத்தை போன்ற உயர்ந்த குணத்தையும் கண்டு, பெருமிதமாக எண்ணினார் சதாசிவம்.

பின்னர், மகள் பேசாமல் இருப்பதைக் கண்டவர், அவளிடம் அவனைப் பற்றி சொல்லி விட்டு, “உன்னைப் பார்க்கக் கூச்சப்படுறா போலிருக்கு” என்றார்.

அவனும் தலையசைக்க, மகளை உடைமாற்றி மேடைக்கு அழைத்து வருமுன் பரிதிவர்மன் கொண்டு வந்த பட்டுப்புடவை, நகைகளால் அலங்காரம் செய்து அழைத்து வந்து அமர வைத்தனர்.

அவளது வதனம் இன்னும் நிமிராமல் இருப்பதைக் கண்டு அவன் சிரிக்க, ஐயர் மந்திரங்களை உச்சரித்த பின்னர், தாய்மாமன் இடத்தில் இருந்து சீர் செய்ய வந்திருக்கும் அவன் சென்று, ஐந்து சவரன் மதிப்பிலான புதிய தங்கச் சங்கிலியை அவளது கழுத்தில் எப்படி அணிவித்து விடுவது என்று தயங்கி கையில் கொடுத்தான்.

அப்போது “அதை அவள் கழுத்துல போட்டு உன்கூடவே கூட்டிட்டுப் போ” என்ற நெருங்கிய உறவினரின் குரலில் அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.

 

அவனோ, “என்னை நிமிர்ந்து பார்க்கவே ஏழு மாசம் ஆகும் போலிருக்கு; இதுல கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டுப் போனா அம்புட்டுதான்…” என்று சொல்ல, அருகில் நின்றவர்கள் கலகலத்துச் சிரித்தனர்.

நந்தனாவின் முகம் சிவந்துபோனது. எப்படித் தன்னைக் கிண்டல் செய்கிறான் என்று இன்னும் தரைக்குள் புதைந்துவிடுவது போல முகத்தை வைத்துக் கொண்டாள். “நானும் தான் கல்யாணம் செய்து வந்தேன்; என் பொண்டாட்டி மணமேடையில் கூட இப்படி உட்கார்ந்து நான் பார்த்தது இல்லையே! நீ கொடுத்து வச்சவன் தான்” என்றார் இன்னும் ஒருவர்.

அவரது ஏக்கமான குரலில் இவன் சட்டென சிரித்துவிட, நந்தனாவுக்குள்ளும் ஒரு குறுகுறுப்பு எழுந்தது. சதாசிவம் சந்தனத்தையும் குங்குமத்தையும் எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிடச் சொல்ல, மறுக்காமல் சந்தனத்தை கையில் எடுத்த பரிதிவர்மன், தன்னை நிமிர்ந்து பார்க்காமல் இருப்பவளைக் கண்டு சிரித்தபடியே, வேண்டுமென்றே நெற்றியில் பூசிவிடுவது போல கன்னத்தில் லேசாகக் கிள்ளிவிட்டான். அவள் அப்போதும் நிமிராமல் இருக்கவும், மறு கன்னத்திலும் அதேபோல செய்தான். அவள் மெல்ல நிமிர்ந்து பார்த்து முறைத்ததும் கண் சிமிட்டிச் சிரித்தான். அவனது சிரித்த முகமும், கம்பீரமாக நின்றிருந்த தோற்றமும், கண்களை சிமிட்டிய விதமும் அவளுக்குள் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

“பார்த்தியா, இம்புட்டு நேரம் நம்ம எல்லாரும் தொண்டை தண்ணீர் வத்தும் அளவுக்கு கிண்டல் பண்ணினோம்; அப்ப எல்லாம் அசையாம இருந்துட்டு, இப்ப எப்படிப் பார்க்கறா பார்! அதான் மச்சான் மகிமை” என்ற குரல் கேட்க, அவளது இதழ்களிலும் லேசாகப் புன்னகை மலர்ந்தது. அதேநேரம், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சித்தியைக் கண்டதும் படக்கென விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள் நந்தனா.

அவன் அங்கிருந்து அகன்றதும், ஒவ்வொருவராக வந்து பரிசுக் பொருளைக் கொடுத்துவிட்டு, நெற்றியில் சந்தனமும் குங்குமமும் வைத்துச் சென்றனர்.

அவன் உணவை முடித்துவிட்டு மாமாவிடம் விடைபெற்று அவளையும் காண வந்தான். நந்தனா தன் இரண்டு கன்னங்களையும் கைகளால் மூடிக்கொண்டாள். அவன் சத்தமாகச் சிரித்தவாறு, “அப்படியே மெழுகுப் பாவை போல் இருக்க! இனிமேல் என்னைப் பார்த்ததும் பேசாம போனாலும், தெரியாத மாதிரி நடந்துகிட்டாலும், நிமிர்ந்து பார்க்காம போனாலும், இப்படித்தான் நான் வந்து செய்வேன்” என்று குறும்பாகப் பேசினான்.

அவள் அழகு காட்டியதும், மறுபடியும் அருகில் செல்ல, அவள் ஓடிச் சென்று அப்பாவின் பின்னே மறைந்துகொண்டாள். சதாசிவம் என்னவென்று கேட்க, “காலையில் பள்ளிக்கூடத்துக்குப் போகுறப்பவும், வெளியே எங்கேயாவது பார்த்தாலும் இவள் என்கிட்ட பேசுவதில்லை. நானா கூப்பிட்டாலும் பதில் தரவே மாட்டேன்றா… அதுக்குத்தான் மிரட்டினேன்” என்றான்.

அவரும் நகைத்தபடி, “என்னம்மா நந்து, ஏன் நம்ம பரிதியைப் பார்த்தும் பேசாம இருக்க? அவன் ஒருத்தன் மட்டும்தானே உங்க அம்மாவின் உறவு முறையில் பாசமா வந்து பேசுவது?” என்று கேட்க, “என்ன மாமா சொன்னீங்க, நண்டா? குளத்து நண்டா, கடல் நண்டா? நண்டுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் மாமா!” என இடையில் புகுந்து பரிகசித்தான் பரிதிவர்மன்.

சதாசிவம் வாய்விட்டுச் சிரித்ததும், அப்பாவின் கை இடுக்கு வழியாக அவனைப் பார்த்து முறைத்தாள் நந்தனா. அவன் வேண்டுமென்றே மறுபடியும் கண் சிமிட்டியதும் பயந்துபோய் முகத்தைப் பின்னே மறைத்துக்கொண்டாள். “நம்ம பரிதி ரொம்பவும் நல்லவன்! உங்க தாய்மாமனின் பையன் தான். உனக்கு இல்லாத உரிமை யாருக்கும் இல்லை; தாராளமாகப் பேசு, பயப்பட வேண்டாம்!” என்று சதாசிவம் சொன்னதும் அவள் தலையசைத்தாள்.

அவன் அங்கிருந்து செல்லும் வரை விருப்பமில்லாமலும் வறட்டு கௌரவத்துடனும் இருந்த சித்தியின் குடும்பம், அவன் போன அடுத்த நிமிடம் அங்கு வந்து அந்தப் புடவையை அகற்றச் சொல்லிவிட்டு, தாங்கள் வாங்கியிருந்ததை அணிவித்தனர். சந்திரகுமார் வாங்கி வந்திருந்த நெக்லஸை கழுத்தில் அணிவித்துவிட்டு, அவர்கள் வீடு போல் அங்கே கிடந்து கொட்டம் அடித்தனர்.

error: Content is protected !!
Scroll to Top