என் ஆயுள் நீயே 49
பிரணவ்வை வாங்க என்றழைத்த இளங்கோ,
“உதயாவை கூப்பிடு எழில்” என்று தன்னுடைய சிறிய மகளை அனுப்பி வைத்தார்.
குமரி தெருவில் நின்று இப்படி பேசுவாரென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஊருக்கே தலைமை எனும் நிலையில் வைத்து அவ்வூர் மக்கள் பார்க்கும் குடும்பம். இப்படி ஒரு சூழலில் அனைவரும் கூடி வேடிக்கைப் பார்க்க வைத்துவிட்டாரே எனும் ஆதங்கம்.
குமரியை உள்ளே அழைத்து பேசிட நினைத்துதான், அவரின் குரல் வெளி வாயிலில் கேட்கவும், வேகமாக வெளியில் வந்திருந்தான் உதயன். ஆனால் அவர் இப்படியெல்லாம் வார்த்தைகளை விடுவாரென்று யாரும் நினைக்கவில்லை.
அதற்கு மேலும் ஊராருக்கு தன்னுடைய குடும்ப விஷயம் விருந்தாக வேண்டாமென்று கனத்த மனதுடன் தான் ஜெயந்தனை தனுவை கூட்டிக்கொண்டு செல்லுமாறு கூறி உள்ளே சென்றிருந்தான்.
யாருக்கும் ஆதங்கம் இன்னும் தீர்ந்த பாடில்லை.
குமரி கோபத்தில் பேசுபவர் தான். ஆனால் அதிலெல்லாம் இந்த வீட்டில் எனக்கில்லாத உரிமையா எனும் உரிமைப்பேச்சு எனும் விதத்தில் தான் இருக்கும். ஆனால் அவர் இன்று பேசியது யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.
“எவ்வளவு ஆத்திரம் இருக்கணும் இந்த குமரிக்கு.” லட்சுமி பாட்டி தான், அமைதியாக இருக்க முடியாமல் புலம்பித் தீர்த்தார்.
“கொஞ்சநாள் போனா சரியாப்போவும். விடுங்கம்மா” என்று கஜேந்திரன் தான் லட்சுமியை தேற்றினார்.
அப்போது அறைக்குள் சென்ற உதயன் இன்னும் கீழிறங்கி வரவில்லை.
“குடும்பமே சேர்த்து துரத்திட்டு” எனும் குமரியின் வார்த்தை வெகுவாக காயப்படுத்தியிருந்தது.
இன்பா தான் உதயன் வருத்தம் கொள்வது தாங்காது, அவனது அறைக்குச் சென்று…
“அத்தை இப்படி பன்றதால என் கல்யாணம் என்னாகுமோன்னு யோசிச்சு, அவங்ககிட்ட நீங்க அடங்கி போகணும் அவசியமில்லைண்ணா. எவ்ளோ பேச்சு பேசுறாங்க. அவங்க பொண்ணுக்கு யார வேணாலும் கட்டி வைக்கட்டும். நீங்க இப்படி இருக்காதீங்க” என்று உதயன் முன் கலங்கி நின்றிருந்தான் இன்பா.
இன்பாவை அழுத்தமாகப் பார்த்த உதயன்,
“நீதான் வேணும்ன்னு நிக்கிற தனுவை என்ன பண்ணுவ? உனக்கு அவள் மேல விருப்பமில்லைன்னா ஓகே! விட்டுடலாம். ஆனா அவள் மேல அன்பை வச்சிக்கிட்டு இப்படி பேசுறது தப்பு. சொல்றது ஈஸி இன்பா. செயல்படுத்துறது கஷ்டம். இனி பேசுறதுக்கு முன்ன யோசிச்சுப் பேசு” என்று கண்டித்தான்.
“வேறென்ன பண்ணட்டும்? இப்படி பேசி அசிங்கப்படுத்தினவங்ககிட்ட உங்க பொண்ணை எனக்கு கொடுங்கன்னு கேட்கணுமா? முறையா பேச போனாலும் அவங்க வீட்டுக்குள்ள வான்னு சொல்லிடுவாங்களா?” எனக் கேட்ட இன்பாவிடம், தன்னால் தன்னை வைத்து தன்னுடைய குடும்பம் மருகுகிறதே எனும் வருத்தம்.
“நம்ம அத்தை தானே! இறங்கிப் போகலாம் தப்பில்லை” என்ற உதயன், “இந்த கோபத்தை தனுகிட்ட காட்டிடாத. நீதான் வேணும்ன்னு அடமா நிக்கிறா. அவள் மனசை கஷ்டப்படுத்திடாத. எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம்” என்று தம்பியின் தோள் தட்டினான் உதயன்.
அப்போது அங்கே வந்த எழில், பிரணவ் வந்திருப்பதை சொல்லி இருவரையும் கீழே அழைத்து வந்தாள்.
“வாங்க மச்சான்” என்று உதயன் மற்றும் இன்பா ஒரு சேர பிரணவ்வை அழைத்தனர்.
பிரணவ் புன்னகைக்க, அவனருகில் சென்று அமர்ந்தனர்.
“தாத்தா, பாட்டி?” உதயன் காங்காவை கேள்வியாக ஏறிட்டுப் பார்த்தான்.
“நேரமாச்சே. சுணங்கி உட்கார்ந்திருந்தவங்களை சாப்பிட வச்சு இப்போ தான் ரூமுக்கு அனுப்பி வெச்சோம்” என்று காமாட்சி சொல்ல, “எதுவும் பிரச்சினையா?” எனக் கேட்டான் பிரணவ்.
“ம்ம்… அத்தை சண்டையை கூட்டிட்டாங்க” என்று கோபமாகக் கூறிய இன்பாவை உதயன் முறைத்தான்.
உதயன் முறைப்பதற்கான காரணம் இன்பாவுக்கு விளங்கவில்லை.
நிச்சயம் பிரணவ்விடம் சொல்லியதற்காக இருக்காது.
பிரணவ் இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க…
“தனு கல்யாணம் லேட்டாகுதுன்னு அத்தைக்கு வருத்தம். அதுல கொஞ்சம் அதிகமா பேசிட்டாங்க” என்று சமாளித்த உதயனுக்கு பிரணவ்விடம் நடந்ததை அப்படியே சொல்ல எவ்வித தடையுமில்லை. இனி அவனும் அவர்களின் குடும்பத்தில் ஒருவன் தானே! அவனிடம் சொல்வதில் அவனுக்கென்ன தயக்கம்.
ஆரம்பம் உதயன் அஷ்மியின் காதலாயிற்றே. அஷ்மியை கொண்டல்லவா குமரியின் இந்த ஆட்டம். இதனைக் கூறினாள், பிரணவ் வீட்டாருக்கு தேவையில்லாத மனவருத்தமென்று எண்ணியே உண்மையை சொல்லாது தவிர்த்தான்.
சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருக்க…
“சாப்பிட்டு போலாம் மாப்பிள்ளை” என்று இளங்கோ உணவு உண்ண பிரணவ்வை அழைத்தார்.
“எல்லாரும் சாப்பிடலாம்” வாங்க என்று காமாட்சி பிரணவ்வை கொண்டு அழைத்தார். இருக்கும் வேதனையில் யாரும் அத்தனை எளிதாக உணவு உண்ண வரமாட்டார்கள் என்று, இப்படி அழைத்துவிட்டார்.
அதற்குள் எழில் மூலமாக நடந்ததை தெரிந்துகொண்ட நனியிதழ், உதயன் அருகில் வந்து நின்றாள்.
இன்பா பிரணவ்வை உணவு மேசைக்கு அழைத்துச் சென்றிருக்க, உதயன் அடுத்து என்ன எனும் யோசனையில் அப்படியே அமர்ந்திருந்தான்.
“சாப்பிடலாம் செல்வா. பசிக்குது.”
சொல்லிய தங்கையை நிமிர்ந்துப் பார்த்த உதயன்,
“ம்ம்” என்று எழுந்து கொண்டான்.
தினம் ஒன்றை சமாளிக்க வேண்டி உள்ளதே எனும் பெருமூச்சு அவனிடம். சட்டையை இழுத்துவிட்டவன், தங்கையுடன் உணவு கூடம் சென்றான்.
பிரணவ்வுக்கு அந்தப்பக்கம் இன்பா அமர்ந்திருக்க, மற்றைய பக்கம் உதயன், அவனுக்கு அருகில் எழில், எதிரில் நனியிதழ், அவளுக்கு அருகில் இளங்கோ, அடுத்து கஜேந்திரன் என அனைவரும் அமர்ந்தனர்.
பிரணவ் வந்ததுமே, கங்கா துரிதமாக வேறு சில பதார்த்தங்களும் காமட்சியுடன் இணைந்து சமைத்திருந்தார்.
உதயன் உணவை வாயில் வைக்காது அலைந்து கொண்டிருக்க…
“அண்ணா ஆ” என்று வாய் திறந்து காண்பித்தாள் நனியிதழ்.
தங்கையின் எண்ணம் அறிந்து, அவளுக்கு உணவை ஊட்டிய உதயன், அவள் நீட்டிய உணவை வாங்கிக்கொண்டான்.
“அண்ணா எனக்கு?” எழில் கேட்க, “பொறாமை புடிச்சவளே” என்று நனியிதழ் முணுமுணுக்க, உதயன் சிறு சிரிப்போடு எழிலுக்கும் உணவினை ஆ வைத்தான்.
நனியிதழ் கண் காட்டிட, எழில் புரிந்தது எனும் விதமாக தானும் உதயனுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டாள்.
“மச்சான் தள்ளுங்க” என்ற இன்பா, அவன் சற்று பின் சாய்ந்ததும், “நானும் இங்கிருக்கேன்” என்க, பிரணவ்வை தாண்டிக் கொண்டு தம்பியின் வாயில் உணவை அள்ளி வைத்தான் உதயன்.
பிரணவ்வுக்கு சூழல் முழுமையாக புரியவில்லை என்றாலும், உதயனை சகஜமாக்க அனைவரும் முயலுகின்றனர் என்பது வரை புரிந்தது.
அவர்களின் அதீத பாசத்தில் ஒருவித மகிழ்வு கூட அவனிடம். இனி இந்தக் குடும்பத்தில், தங்கள் குடும்பம் ஒன்றல்லவா எனும் மகிழ்வு. அவனது வீட்டிலும் ஒற்றுமைக்கு அளவில்லை. ஆனால் வேறொரு இடத்தில், தன் குடும்பத்திற்கு இணையான அன்பு, பாசத்தை பார்க்கும் போது தங்களைப்போல என்ற நெகிழ்வு.
“உன்னை மட்டும் ஏன் விடணும். வாய் திறடா” என்று உதயன் சொல்ல, பிரணவ் உணரும் முன்பு அவனது வாயில் உதயன், இன்பா, எழில் என்று மாற்றி மாற்றி உணவை வைத்திருந்தனர்.
“போதும்… போதும்… உங்க பாசத்தை இப்படித்தான் காட்டுவீங்களா?” என்று பிரணவ் அலறியேவிட்டான்.
இளங்கோ உணவை முடித்துக்கொண்டு சிறு புன்னகையோடு அங்கிருந்து சென்றிருக்க,
“மாப்பிள்ளை நானும்” என்று பிரணவ்வை அதிர வைத்தார் கஜேந்திரன்.
“ஆத்தி” என்று விழித்த போதும் கஜேந்திரன், பிரணவ்வுக்கு ஒரு வாய் உணவை கொடுத்த பின்னரே அங்கிருந்து சென்றிருந்தார்.
“குடும்பமே இப்படித்தானா?” பிரணவ் அரண்டபடி கேட்க, அங்கே அனைவரின் முகம் சிரிப்பில் முக்குளித்தது.
அதுவரையில் வீடு கொண்டிருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது.
பிரணவ் கிளம்பிட உதயன் அவனது கார் வரை வந்தான்.
உதயன் எதோ சொல்லத் தயங்கிட…
“என்கிட்ட எதுவும் சொல்லலன்னு நான் தப்பா எடுத்துக்கல மாமா” என்றான். உதயனை புரிந்து கொண்டவனாக.
“தனுவுக்கு…” என்ற உதயன், எப்படி சொல்வதென்று தடுமாறி, “நான் தனுவை வான்ட்டடா வேண்டாம் சொன்னதா கோபம்” என்றான்.
நொடியில் அனைத்தும் விளங்கிட,
“புரியுது மாமா” என்றான் பிரணவ்.
“அவங்களுக்கு இன்பா விருப்பமில்லையா?” பிரணவ் கேட்க,
“விருப்பமில்லாம இல்லை. நான் இல்லைங்கிற ஏமாற்றம்” என்றான் உதயன்.
“ஹோ…” பிரணவ்வுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை,
“சொல்லி உங்களையும் சங்கடப்படுத்த வேண்டான்னு தான், இன்பா டக்குன்னு சொல்லிட்டானேன்னு…” என்று உதயன் இழுத்து நிறுத்திட,
“சரியாகிடும் மாமா. பார்த்துக்கலாம் விடுங்க. தனுவுக்கு மேரேஜ் ஆகிட்டா, அவங்களே சரியாகிடுவாங்க” என்று தேறுதலாக பேசினான் பிரணவ்.
“ம்ம்” என்ற உதயனுக்கு தங்கள் இருவரையும் யாரோ உற்று நோக்கும் தோற்றம்.
பிரணவ்விடம் பேசிக்கொண்டே, வெளிப்புறத்தை பார்வையால் சுற்றி வந்தான் உதயன்.
அந்நேரம் அஷ்மிதா பிரணவ்வுக்கு அழைத்திட…
“வீட்டிலிருந்து கால் வந்தாச்சு மாமா” என்று எடுத்துப் பேசினான்.
“கிளம்பிட்டேன். வரேன்” என்று வைத்த பிரணவ், உதயன் எங்கேயென பார்க்க, அவன் வெளி வாயிலைக் கடந்து தெருவிற்கு சென்றிருந்தான்.
“என்னாச்சு மாமா?”
“ஒண்ணுமில்லை” என்ற உதயன், “ரொம்ப லேட் ஆகிடுச்சு. பார்த்து, பொறுமையா போ. போயிட்டு கால் பண்ணு” என்று பிரணவ்வை அனுப்பி வைத்த பின்னரும், மூன்றாவது நபரின் பார்வையை உணர்ந்தவனாக அங்கேயே நின்றுவிட்டான்.
“யாருன்னு தெரியல” என்று உதயன் உள்ளே செல்ல கேட்டில் கை வைத்தபடி திரும்ப, அங்கிருந்த மரத்திற்கு பின்னால் நின்று தன்னைப் பார்க்கும் உருவத்தை கண்டு கொண்டான் உதயன்.
அது யாரென்று அறிந்ததும், அப்படியொரு ஆத்திரம் அவனுக்குள். காட்டும் நேரம் இதுவல்லவே! வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.
உதயன் உள்ளே வர அனைவரும் உறங்கச் சென்றிருந்தனர். கங்கா மட்டும் அவனுக்காக நின்றிருந்தார்.
“எல்லாரும் போயாச்சா?” எனக் கேட்டுக்கொண்டே, கதவடைத்த உதயன், “அப்பா தூங்கியாச்சாம்மா?” எனக் கேட்டான்.
“இல்லைப்பா. கருப்பட்டி காபி கேட்டாருன்னு அடுப்பில் வச்சிருக்கேன்” என்ற கங்கா, சமயலறை செல்ல, உதயன் தந்தையைத் தேடிச் சென்றான்.
புத்தகம் படித்துக் கொண்டிருந்த இளங்கோ, உதயனின் “அப்பா” என்றழைப்புக்கு, “வாங்க” என்று புத்தகத்தை ஓரம் வைத்தார்.
“மாப்பிள்ளை கிளம்பியாச்சா?”
“ம்” என்ற உதயன் தந்தையின் எதிரே மெத்தையில் அமர்ந்தான்.
“என்னப்பா எதுவும் சொல்லணுமா?”
மகன் ஒரு நாளும் தன்னிடம் பேசிட இப்படி தயங்கிப் பார்த்தது இல்லையே என்று கேட்டார்.
“வந்தனாவை ஏன் அடிக்கப் போனீங்க?”
“அதெதுக்கு தம்பி… விடுங்க. அறிவில்லாம கண்டதையும் பேசுது” என்று இப்போதும் கோபம் கொண்டார்.
“இல்லை… நீங்க சொல்லுங்க” என்று உதயன் அழுத்தமாக வினவினான்.
மகனிடம் எப்படி சொல்வதென்று இளங்கோ பார்த்திருக்க,
“நம்ம வீட்டு வெளியில் தான் நின்னுட்டு இருக்காள். இன்னைக்கு முழுக்க நான் போற இடமெல்லாம் என்னை சுத்தி வந்துட்டே இருக்கா” என்று உதயன் சொல்ல, இளங்கோ பதறிவிட்டார்.
“என்னப்பா சொல்றீங்க?”
“ஆமாப்பா… இறால் பண்ணை, ஸ்டோரேஜ் அங்கெல்லாம் யாரோ என்னை நோட் பன்ற ஃபீல். நேத்து மாடியில் நின்னுட்டு இருந்தப்பவும். இப்போ பிரணவ் வழியனுப்ப வெளியில் போனப்பவும். யாருன்னு பார்த்தா வந்தனா. இதை இப்படியே விட முடியாதே” என்றான்.
இவர்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் தெருவில் வந்தனாவின் வீடு உள்ளது. அடுக்குமாடி கட்டிடங்கள் இல்லாத பகுதி என்பதால், அடுத்த தெருவென்றாலும், அங்கு மொட்டைமாடியில் நின்று பார்த்தால், இங்கு உதயன் வீட்டு மாடியில் நிற்பவர்கள் தெரியும். நேற்று தெரியாதது இன்று தெரிந்தது.
“என்ன பண்ணப்போறீங்க?”
“நீங்க முதலில் அவள் என்ன சொன்னா சொல்லுங்கப்பா” என்று கேட்ட உதயன், இளங்கோ சொல்லியதில் முகம் இறுகப் பார்த்தான்.