என் ஆயுள் நீயே 50

என் ஆயுள் நீயே 50

உதயன் முகம் இறுக அமர்ந்திருந்தான்.

என்ன மாதிரியான வார்த்தைகள் இது. சட்டென்று அதனை உதறி வெளியில் வர முடியவில்லை. உதயனை இப்படி பார்த்ததுமில்லை.

“அவ கிடக்கறா உதயா. கண்டுக்காத. உன் கல்யாண முடிஞ்சிட்டாலே சரியாகிடுவா” என்று இளங்கோவன் மகனின் கரத்தின் மீது கரம் வைத்து பற்றாகப் பேசினார்.

“மாறுற ஆளா தெரியலப்பா. மருதன் மாமாவை பார்த்து பேசிடுங்க. தாத்தா, சித்தப்பா, மாமாவை கூட்டிட்டுப் போங்க” என்றான்.

“பொம்பளை பிள்ளை விஷயம் உதயா. ஒண்ணா போய் பேசினோம் தெரிஞ்சாலே மணலை திறிச்சி கயிராக்கிடும் ஊர் சனம்” என்றார் இளங்கோ.

“அதுக்காக இப்படியே விட சொல்றீங்களா நீங்க? என்ன வார்த்தை இதெல்லாம். சொல்லுக்கும் வலிமை உண்டு உங்களுக்குத் தெரியாதா?” தந்தையிடமே அத்தனை கோபம் காட்டினான்.

“பொறுமையா இருங்க தம்பி.”

மகனின் தோளில் கை வைத்து அழுத்தினார்.

“எப்படிப்பா… உங்க மகன் என்னைக் கட்டிக்கலன்னா, அவங்களை நினைச்சு, அவங்க இல்லவே இல்லைன்னு வெள்ளை புடவை கட்டிப்பேன் சொல்றதெல்லாம் சின்னதா?” என கொதித்தான்.

“சின்ன விஷயமில்லைன்னு புரியுதுங்க. அதுக்காக கோபப்பட்டா ஆச்சா? காலம் தானா எல்லாத்தையும் சரி செய்யும் சொல்லுவாங்க. வந்தனா மனசையும் மாத்தும் நம்புவோம். நமக்கு கல்யாண வேலை ஆயிரத்தெட்டு இருக்கே. அதை பாருங்க” என்று ஏதேதோ பேசி மகனின் முகத்தில் அமைதியை கொண்டு வந்த பின்னரே அனுப்பி வைத்தார்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, இருவருக்குமான பானத்தோடு வந்த கங்கா, வந்தனாவின் பேச்சினை அறிந்து அதிர்ந்துவிட்டார்.

“ஒரு பொண்ணு இப்படியும் பேசுவாளா?” என கங்கா ஆற்றமாட்டமல் கேட்க,

“அதான் பேசியிருக்காதானே உங்க அண்ணன் மகள்” என்ற உதயன், ஒரே மூச்சில் காபியை வாய்க்குள் சரித்து அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

“இப்போதான் மலையிறக்கினேன். இப்போ நீ ஏத்தி விட்டுட்ட” என்ற இளங்கோ, “வீட்டில் யாருக்கும் தெரிய வேணாம். அப்புறம் இதுக்கு ஒருபாடு ஆளாளுக்கு புலம்புவாங்க” என்று மனையிடம் கூறினார்.

“வெளியில் சொல்ற விஷயமா இது. வந்தனாவுக்கு கொஞ்சமும் கூறு கிடையாது” என்று தன் மனம் ஆறும் மட்டும் புலம்பியபடி படுத்துக் கொண்டார்.

அறைக்குள் வந்த உதயனின் மனம் சமன்பட மறுத்தது.

வேறொரு பெண்ணின் மனதில், தனக்கு விருப்பமற்று தானிருக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒப்பாது இருந்தது. தனக்கு திருமணமாகி விட்டால் நிச்சயம் வந்தனா தன்னுடைய நினைப்பை உதறிவிடுவாள் என்று நினைத்திருக்க, அவள் எப்போதும் மாறப் போவதில்லை என்பது, அவள் சொல்லியதிலும், கடந்த இரு நாட்களாக தன்னை விடாது பின்தொடர்வதிலும் கண்டு கொண்டவனுக்கு எப்படி சரி செய்வதென்று மலைப்பாக வந்தது.

ஒருவரின் மனதில் அன்பாய், பாசமாய், நட்பாய், உறவாய் நாம் படிந்திருக்கிறோம் என்றால் வேறு… அதுவே வந்தனா சொல்லியதன் அர்த்தம். இப்படியொரு நினைப்பில் தான் இருக்கிறோம் என்பதே உதயனுக்கு அருவறுப்பாக இருந்தது.

மனம் சமன்படாது உறக்கமும் வராது என்று நினைத்தவன் நேரத்தைப் பார்க்க, அதுவோ நள்ளிரவைத் தொட்டுக் கொண்டிருந்தது.

“இந்நேரத்தில் எப்படி?” என யோசித்த உதயன், அடுத்த நொடி தயக்கத்தை உடைத்து தன்னவளுக்கு அழைத்திருந்தான்.

“என்னாச்சுப்பா… இந்நேரத்தில?” அழைப்பு முடியும் தருவாயில் ஏற்றிருந்த அஷ்மிதாவின் குரலில் ஏகத்துக்கும் பதற்றம்.

“உதய் ஆர் யூ ஓகே?”

அஷ்மிதாவின் குரலை கண்கள் மூடி ஒரு கணம் ஆழ்ந்து அகம் சேர்பித்து,

“பேசணும் தோணுச்சு அஷ்மிதா” என்றான். அவனின் அஷ்மிதா எனும் உச்சரிப்பில் அத்தனை காதல் மீதூறியது.

“ஷ்ஷ்…” அவளின் மூச்சுக்காற்றில் அவளது ஆசுவாசத்தை உதயனால் உணர முடிந்தது.

“அஷ்மிதா இப்போ ஓகேவா?” கட்டிலில் சாய்ந்து, கால் நீட்டி அமர்ந்தான்.

“ம்ம்… வன் செக்” என்ற அஷ்மிதா, எழுந்து அமர்வது அவளின் அரவத்தில் கண்டுகொண்டான்.

“பேசுங்க…” அஷ்மிதா சொல்ல, காணொளி அழைப்பாக மாற்றியிருந்தான் உதயன்.

“வீடியோ காலா?”

“அக்செப்ட் இட் அஷ்மிதா.” அவனின் அந்த குரலில் கட்டுண்டவளாக, காணொளி அழைப்பை ஏற்றிருந்தாள்.

அலைபேசியை ஏதுவாக பொருத்திவிட்டு, மின் விளக்கை உயிர்ப்பித்தாள்.

அவளின் உருவம் நன்கு தெரியுமாறு மெத்தையில் அமர்ந்தாள்.

கேசம் படர்ந்து விரிந்திருக்க, இரு கைகளையும் உயர்த்தி மொத்த குழலையும் சேர்த்து கொண்டையிட, உதயன் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவனாக இதழ் குவித்து ஊதினான்.

“என்னாச்சு?”, அஷ்மிதா.

“மூச்சு முட்டுது.” உதயன் சொல்லிட அவளுக்கு விளங்கவில்லை.

“ஏன்? உடம்பு சரியில்லையா?” என்ற அஷ்மிதா, அவனது கண்ணோர சுருக்கத்தில் எதோ வில்லங்கமா நினைச்சிருக்கான் என்பது புரிந்து தன் அதரம் கடித்து விடுத்தாள்.

“சொல்லணுமா அஷ்மிதா?”

“அச்சோ… நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்” என்ற உதயன், அவள் முகம் காட்டும் தவிப்புகளை மிட்சமின்றி தன் பார்வை வழி உயிர் நிரப்பினான்.

“தூங்கலையா நீங்க?” என்றாள் அஷ்மிதா.

“தூங்கணும்.” சுரத்தின்றி சொல்லிய உதயன், “நீ எப்போ பக்கத்தில் வருவன்னு இருக்கு” என்றான். இரு கைகளாலும் தன் முகத்தை அழுந்த தேய்த்து.

“கல்யாணம் ஆறு மாசம் தள்ளிப் போட முன்ன இப்படி இல்லையா?”

அவளின் கேள்வியில் சத்தமாக சிரித்தான் உதயன்.

தன்னிடம் வர அவளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது, அவளின் வார்த்தைகளில் அப்பட்டமாக தெரிகிறதே. மனம் முழுக்க இதம் சூழ்ந்துவிட்டது.

“உனக்காக நான் பண்ணா… மேடம் என்னையே அதட்டுறீங்க” என்று உதயன் கேலியாக சொல்ல…

“உரிமை இருக்கே… எல்லாத்துக்கும்” என்றாள்.

“எல்லாத்துக்குமா அஷ்மிதா?” உதயன் கேட்ட விதத்தில்…

“அச்சோவ்… உதய்” என்று ஒற்றை உள்ளங்கையால் முகத்தை மூடியவள், விரல் இடுக்கில் அவன் முகம் பார்த்தாள்.

“ஹேய் அஷ்மிதா… என்ன பன்ற என்னை” என்றவன், இரு கைகளையும் முன்னோக்கி நீட்டி விரல்களை கோர்த்து, தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்தினான்.

வார்த்தைகளற்று உணர்வுகள் மொழி கண்களில் விளங்கிட, ஒருவரின் முகம் பார்த்து ஒருவர் ஓர் பார்வையாகக் கட்டுண்டிருந்தனர்.

“தூங்கு அஷ்மிதா.” உதயன் தான் மௌனத்தை களைத்தான்.

“நீங்க?”

“பார்த்திட்டு இருக்கேன்.”

உதயன் அசராது சொல்லியதில், அவளின் கருவிழிகள் தெறித்தன.

“எல்லாம் பழகனும் தானே?” உதயன் கேட்டதில், “அவ்வா…” வாயில் கை வைத்தாள்.

“எதுவோ உங்களை அழுத்துது. அதை மறைக்க என்னை வம்பு பண்ணிட்டு இருக்கீங்க.. கரெக்ட்?” என்றாள்.

“எதே… வம்பு பன்றனா?”

“ஆமா… இல்லையா?”

“அடேய்… அஷ்மிதா” என்று சிரித்த உதயன், “மைண்ட் டைவர்ட் பண்ணதான் உன்னை கூப்பிட்டேன். இப்போ மொத்தம் அஷ்மிதாவா ஆகியாச்சு” என்றான்.

“ச்சூ… நான் இல்லை. இது ஆவறதுக்கில்லை… வைங்க நீங்க. பேசியே மயக்குறீங்க” என்றவள் அழைப்பை வேகமாகத் துண்டித்து கவிழ்ந்தடித்து படுத்தவளின் முகம் சிவந்திருக்க, தலையணையில் முகம் புதைத்து மறைத்தாள்.

எட்ட நின்று தவிக்க வைத்த காதல், நொடிக்கு நொடி இன்பத்தை கொடுக்குமென்று எதிர்பார்க்கவில்லை. அவனுள் மொத்தமாக விழ வைக்கின்றான். சிறு பேச்சில் கொள்ளையிட்டு விடுகிறான். இவள் தான் தவித்து திண்டாடிப் போகிறாள்.

அலைபேசி சத்தமிட எடுத்துப் பார்த்தாள்.

“குட் நைட் அஷ்மிதா♥️” என அனுப்பியிருந்தான்.

உதயன் காதல் வார்த்தைகள் பிதற்ற வேண்டுமென்று இல்லை, சின்ன சின்ன வார்த்தையில், நொடி நேரப் பார்வையில் கொட்டி கொடுத்துவிடுகிறான்.

உதயனின் அஷ்மிதா என்ற பெயர் விளிப்பு போதும். அவனின் அளவற்ற காதலை உணர முடிந்திடும்.

அவனின் ஒற்றை பார்வைக்கு காத்திருந்தவள், இன்று அவனில் மொத்தமாக நிறைந்திருக்க, அவன் கை சேர, தோள் சாய்ந்திட நாட்களை எதிர்பார்ப்போடு நகர்த்திக் கொண்டிருக்கிறாள்.

அதுவரை இருந்த அழுத்தமெல்லாம் விலகிய உணர்வு.

“திண்டாட விடுற அஷ்மிதா” என்று படுக்கையில் சரிந்த உதயன், அவளின் புலனம் முகப்பு படத்தை திறந்து பார்த்து, விரல் வைத்து பெரிது செய்தவனாக, அவளின் நாசியில் ஒட்டியிருந்த முக்குத்தியை மென்மையாய் வருடினான். அவனே அவளுள் தொலைந்துப் போகும் மாயம்.

“உதய்…” என்று அஷ்மி போல தன்னுடைய பெயரை சொல்லிப் பார்த்தவன், சட்டென்று நினைவு வந்தவனாக, எழுந்து குளியலறை பக்கம் சென்று, அன்று பிரணவ் வீட்டிற்கு சென்றிருந்த போது அணிந்திருந்த சட்டையை அழுக்கு துணிகள் போடும் கூடையில் தேடினான்.

அந்த சட்டை அதில் இல்லாமல் இருக்க, வேகமாக அறையின் கதவை திறந்தவன் நேரத்தை உணர்ந்து, அமைதியாக படுத்துக் கொண்டான்.

வழமையான நேரத்தில் எழுந்து கொண்ட உதயன், நேராக கீழே வந்து தன் அன்னையர்கள் முன்பு நின்றான்.

“என்னப்பா?” காலை நேர தேநீர் போட்டுக் கொண்டிருந்த காமாட்சி அவன் வந்து நின்ற தோற்றம் கண்டு வேகமாக வினவினார்.

“நேத்து வாஷூக்கு போட்ட என் ட்ரெஸ்?” என்றான்.

“அயர்ன் பண்ணிட்டு தானே எப்பவும் ரூமில் வைக்கிறது கண்ணா. இன்னைக்கு வச்சிடுவாங்க” என்றார் கங்கா.

“ட்ரெஸ் யார் எடுத்தா? என் ரூமிலிருந்து…”

“எப்பவும் போல சுந்தரிதான், ரூமை சுத்தம் பண்ணிட்டு கொண்டு வந்திருப்பாள்” என்ற காமாட்சி, “சுந்தரி இனி தான் வேலைக்கு வருவா. நேத்து துவைச்சதில் எதும் சட்டை வேணுமா தம்பி” எனக் கேட்டார்.

“இல்லை” என்ற உதயன், “என் சட்டையில் எதும் இருந்ததா சுந்தரி அக்கா எதுவும் கொடுத்தாங்களா?” எனக் கேட்டான்.

“இல்லையே உதயா” என்ற கங்கா, “முக்கியமான பொருளா?” என்றார்.

அதை எப்படி அவர்களிடம் சொல்வான்.

“அது… அம்மா…” என்று நிறுத்தியவன், “ம்ப்ச்… விடுங்க” என்று நகர்ந்தான். நொடியில் மீண்டும் வந்து, “சுந்தரி அக்காகிட்ட எதும் இருந்ததா கேட்காதீங்க. சந்தேகப்படுற மாதிரி ஆகிடக் கூடாது” என்றான்.

“எங்களுக்குத் தெரியாதா தம்பி. சின்ன துரும்புனாலும் கொடுத்திடுவா” என்றார் காமாட்சி.

அதில் உதயனுக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை.

“அப்போ எங்க விட்டேன்…” சிந்தித்தவனாக, அறைக்குள் வந்து யோசனையோடே குளித்து கிளம்பி கண்ணாடி முன் நின்றவனுக்கு, எங்கே விட்டோமென்று நினைவு வந்தது.

மென்மையாய் சிரித்துக் கொண்டான்.

“பார்த்திருப்பாளா?” தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

‘நிச்சயம் பார்த்திருப்பாள்.’ உதயன் மனம் அடித்துக் கூறியது. அவள் கண்பட வைத்து விட்டு வந்திருக்கிறான். அவள் பார்த்திருக்கவே சாத்தியக்கூறுகள் அதிகம்.

முதல் சந்திப்பில் அஷ்மிதாவுக்காக எதுவும் கொடுக்க வேண்டுமென நினைத்து, மிகவும் ஆசையாக வாங்கிச்சென்ற ஒன்று. கொடுக்க முடியாது போனது. அவன் கேட்டு அவள் சொல்லிய பதிலில்.

அதனை அவளது குளியலறைக்குள் முகம் கழுவச் சென்ற உதயன், சட்டை பையிலிருந்ததை குழாய் மேடையில் எடுத்து வைத்திருந்தான். வெளியில் வரும் போது எடுக்க மறந்திருந்தான்.

“என்கிட்ட ஒன்னுமே கேட்கல…” உதயனிடம் இளம் முறுவல். தன்னவளின் மனம் அறிந்தவனாக.

அந்த இதத்தோடு கீழே வந்த உதயன், இன்பா விஷயத்தில் தானெடுத்திருக்கும் முடிவைக் கூற, விஷயமறிந்த அடுத்த நிமிடம் குமரி உதயன் முன்பு நின்றிருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top