என் ஆயுள் நீயே 51

 

என் ஆயுள் நீயே 51

தான் தன்னவளுக்காக வைத்திருந்த ஒன்று, தானாக அவளிடம் சேர்ந்ததில்… ஒருவித மெல்லிய முறுவலோடு கிளம்பிக் கொண்டிருந்தான் உதயன்.

அந்நேரம் தனுவிடமிருந்து உதயனுக்கு அழைப்பு வந்தது.

யோசனையோடு எடுத்து காதில் வைத்தான்.

“சொல்லுடா?”

“மாமா…” தனுவின் குரல் அழுகையில் தோய்ந்து ஒலித்தது.

“தனு… என்னடா? என்னாச்சு?” என்ற உதயன், “நான் வரட்டுமாடா அங்க?” எனக் கேட்டான்.

“என்னை வந்து கூட்டிட்டுப் போங்க மாமா. இன்னும் ஒரு மணியில யாரோ பொண்ணு பார்க்க வராங்களாம்” என்றாள்.

“அத்தை எதோ வீம்புக்கு பண்றாங்க நினைச்சேன்” என்ற உதயன், நெற்றியைத் தேய்த்தவனாக, “மாமா இல்லையா?” எனக் கேட்டான்.

“இருக்காங்க. நேத்து அங்க வீட்டு முன்ன நின்னு அம்மா அதிகம் பேசிட்டாங்கன்னு அப்பாக்கு கோபம். அங்கேயிருந்து வந்ததுல இருந்து அம்மாகிட்ட ஒரு வார்த்தை அப்பா பேசல” என்றாள்.

“சரி நீ அழாத. நான் பார்த்துக்கிறேன். யாரும் வீட்டுக்கு வரமாட்டாங்க” என்று அழைப்பை வைத்த உதயன் கீழே வர, அனைவரும் கூடத்தில் தான் இருந்தார்கள்.

“அப்பா அந்த தரகர் கேசவன் நெம்பர் உங்ககிட்ட இருக்கா?” என இளங்கோவனிடம் கேட்டவாறு, அவருக்கு எதிரில் கஜமுகனின் அருகில் அமர்ந்தான்.

“அவன் நெம்பர் எதுக்குங்க?” என்ற இளங்கோ, “இந்திராகிட்ட இருக்கு” என்றார்.

“அவருக்கு போன் போட்டு, அத்தை வீட்டுக்கு வர இருக்கவங்க நெம்பர் வாங்குங்க சித்தப்பா” என்றான்.

அதிலே அனைவருக்கும் எல்லாம் விளங்கியது.

“அவள் அடங்கவே மாட்டாளா?” லட்சுமி பாட்டி மகளைத் திட்டினார்.

“கொஞ்சம் சும்மா இருங்க பாட்டி” என்ற இன்பா, “நான் நேத்து சொன்னதுதாங்க… எனக்காக நீங்க யாரும் இறங்கிப் போகணும் அவசியமில்லை. அவங்க, அவங்க பொண்ணுக்கு என்ன பண்ணனுமோ பண்ணட்டும்” என்றான்.

“ரெண்டு தட்டு தட்டினேன் வை…” என்று இருக்கையை விட்டு எழுந்துவிட்ட உதயன், “நேசிக்கிறேன்னு சொன்ன புள்ளைகிட்ட உன் பதிலென்னன்னு வெளிப்படையா உடைச்சு சொல்லாம வருஷ கணக்கா தவிக்க விட்டுட்டு, இப்போ மொத்தமா விட பாக்குற. அவள் உன்மேல வச்ச அன்புக்கு மதிப்பில்லையா உன்கிட்ட?” எனக் கேட்டான். கோபமாக.

“அதுக்கு… அவங்க இல்லாத ஆட்டமெல்லாம் ஆடுவாங்க…”

“இன்பா…”

“மன்னிச்சிடுங்க” என்ற இன்பாவிடம், “பட்டு, பிரணவ் கல்யாணம் அன்னைக்கே உனக்கும் தனுவுக்கும் கல்யாணம். அடுத்த வாரம் நடக்குற நிச்சயத்தில் உனக்கும் நிச்சயம்” என்றான்.

உதயனின் பார்வை இதுதான் என் முடிவு எனும் விதமாக அனைவரையும் சுற்றி வந்தது.

பெரியவர்கள் அனைவரும் உதயனின் முடிவை ஏற்பது போல அமைதியாக இருக்க, இன்பா அதற்கும் குதித்தான்.

“உங்களை கஷ்டப்படுத்தவே அவங்க எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. அதுக்காகத்தான் அவங்க பொண்ணுக்கு அவங்க என்ன வேணா பண்ணட்டும் சொல்றேன். ஆனால் நீங்க உங்களுக்கு முன்ன எனக்கு கல்யாணம் பண்ணனும் சொல்றீங்க. என்னால முடியாது” என்றான்.

“நான் உன்கிட்ட பெர்மிஷன் கேட்கல. இது என்னோட முடிவுன்னு கட்டளையா சொல்றேன்” என்ற உதயன், “கஷ்டப்படுத்தாதீங்கண்ணா” என்ற இன்பாவின் கசங்கிய முகம் கண்டும் இலகாது, “நெம்பர் வாங்கிட்டீங்களா சித்தப்பா?” எனக் கேட்டான்.

கஜேந்திரன் தரகரிடமிருந்து வாங்கிய எண்ணுக்கு அழைப்பு விடுத்து அலைபேசியை உதயன் கையில் கொடுத்தார்.

“சாமி முடிவு பண்ணா அதுல எதும் அர்த்தமிருக்கும் கண்ணு. இடும்பு பண்ணாத” என்ற லட்சுமி பாட்டி இன்பாவின் கன்னம் பற்ற… அவரின் கையை தள்ளிவிட்டான் இன்பா.

“இப்போ எதுக்கு இன்பாண்ணா… இவ்வளவு கோபம் உங்களுக்கு. அத்தைக்கு இருக்க கோபத்துக்கான காரணம் தெரியும் தான உங்களுக்கு? அவங்க மனசு கொஞ்சமாவது சூழலை ஏத்துக்கணும் அப்படின்னா, அண்ணாக்கோ இல்லை தனுவுக்கோ கல்யாணம் நடந்திருக்கணும். அண்ணாக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இல்லை நம்ம பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இனியும் அவங்களோட நம்ம பொண்ணை சேர்த்து வச்சு பார்க்கிறதோ, நினைக்கிறதோ தப்புன்னு அப்போ தான் அத்தைக்கு புரியும். செல்வா அண்ணாக்கு உடனே பண்ண முடியாது. அஷ்மிக்காக நாம பார்த்தாகனும். அப்போ தனுவுக்கு தானே செய்தாகனும்” என்று உதயனின் முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை சரியாக விளக்கிக் கூறினாள் நனியிதழ்.

“அதுக்கு அண்ணா இருக்கும் போது எனக்கு எப்படிடா” என்ற இன்பா, அலைபேசியில் பேசி முடித்து வந்த உதயன் பார்த்தப் பார்வையில்,

“என்னவோ பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டான்.

“உங்களுக்கு எதுவும் சொல்லனுமா தாத்தா?” கஜமுகன் எதுவும் சொல்லாது அமைதியாக இருக்கவே அவரிடம் கேட்டான்.

“நடக்கிறது நல்லபடியா நடக்கணும் உதயா. அவ்ளோதான். பார்த்து செய்யுங்க” என்றார்.

“அதெல்லாம் எந்த குறையும் இல்லாம செய்திடலாம் ப்பா” என்ற இளங்கோ, “குமரியை மீறி எப்படிப்பா கல்யாணம் பண்ண முடியும்?” என மகனிடம் கேட்டார்.

“மாமா தான் அத்தையை சரிகட்டணும்” என்று உதயன் சொல்லிக் கொண்டிருக்க ஆவேசமாக வீட்டிற்குள் வந்தார் குமரி.

“அதான் உறவு வேண்டான்னு ஒதுங்கியாச்சுல. அப்புறம் என்னத்துக்கு நான் பார்த்து வைக்கிற சம்மந்தத்தை கலைச்சு விடுறீங்க” என ஆத்திரமாகக் கேட்டார்.

“பேசி வச்சதை மறந்து நீங்க வேற இடம் பார்த்தா நாங்க எப்படி சும்மா இருக்க முடியும்” என்ற உதயன், குமரிக்கு பின்னாலே, மனைவி மேலும் அதிகமாக பிரச்சினை செய்துவிடுவாளோ என்று வந்த ஜெயந்தனை பார்த்து,

“அடுத்தவாரம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைத்து நிச்சயம். ரெண்டு மாசத்துல கல்யாணம். பட்டுக்கு பார்த்த அதே முகூர்த்தம்” என்றான்.

ஜெயந்தன் குமரியைப் பார்க்க…

“அப்பாவா பொண்ணு மேல உங்களுக்கும் உரிமை இருக்கே மாமா” என்றான்.

“எனக்கு சம்மதம் மாப்பிள்ளை” என்ற ஜெயந்தன், முறைத்துக் கொண்டு பேச வந்த குமரியை கை காட்டி தடுத்தார்.

“எனக்கு என் பொண்ணு முக்கியம். அவளோட ஆசை முக்கியம். அதுக்கு யார் தடையா வந்தாலும் ஒதுக்கி வைக்க தயங்கமாட்டேன். எனக்கு கட்டுப்படுற அப்படின்னா, அமைதியா நடக்கிறதுல கலந்துக்க. இல்லையா என் பொண்ணுக்கு அப்பன் ஆசீர்வாதம் மட்டும் போதும்” என்று குமரியின் முகம் கூட பாராது சென்றுவிட்டார்.

குமரிக்கு அடுத்து பேச ஒரு வார்த்தை வரவில்லை. இனி அவரால் வரிந்து கட்டிக்கொண்டு பேசத்தான் முடியுமா? நெஞ்சில் பொறுமியவராக வெளியில் சென்றார்.

“இந்த அமைதியோடே அவள் இருந்திடணும்” என்ற லட்சுமி, “அடுத்தடுத்து ஆக வேண்டியத பாருங்க” என்றார்.

“பிரணவ் வீட்டுல பேசிடுங்க தாத்தா. அவங்களுக்கு அதே முகூர்த்தத்தில் ரெண்டு கல்யாணம் சம்மதமான்னு” என்ற உதயன் தன் தம்பியை தேடிச் சென்றான்.

காமாட்சி சிரித்துக் கொண்டார்.

“என்னட்டி சிரிக்கிற?” கங்கா காமாட்சி தோளில் இடிக்க…

“எதுக்கு கோபப்படனும். இப்போ சமாதானம் செய்ய தேடிப் போவணும்” என்ற காமாட்சி, “கடைசிவரை இதே பாசத்தோட இருந்திடனும் க்கா” என்றார்.

“உன் கண்ணே படும். போயி வேலையப் பார்ப்போம்” என்று கங்கா கமாட்சியை இழுத்துக் கொண்டு சென்றார்.

“நீ என்ன காலேஜ் போவாம கன்னத்தில் கையை வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க?” பாட்டி எழிலை அதட்டி வினவினார்.

“எப்படி போறது. என்னோட ட்ரைவர் ரெண்டு பேரும் என்னை மறந்துட்டாங்களே” என்று தன்னுடைய இரு அண்ணன்களையும் எழில் சொல்ல,

“இதுக்குதான் வண்டி ஓட்ட பழகுண்ணு சொன்னது” என்றார் பாட்டி.

“வந்தா பழகமாட்டோமா? என்னவோ வண்டியில் உட்கார்ந்தாலே ஆட்டோமேட்டிக்கா பாடி ஷேக் ஆகுது” என்ற எழிலின் தோளில் அடித்த நனியிதழ், “நான் ட்ராப் பண்றேன் வா” என கூட்டிச் சென்றாள்.

“இந்த அத்தை ஏன் நனிக்கா இப்படி மாறிட்டாங்க?” எழில் கேட்க, “அவங்க பக்க ஆசையோட அளவு அதிகம் போல எழிலு” என்று சொல்லிய நனியிதழ் சட்டென்று பிரேக்கினை அழுத்தியிருந்தாள்.

“யாரு? வந்தனாவா?”

நனியிதழ் திடீரென வண்டியை நிறுத்திய காரணம் அறியாது, முன்னால் யாரென்று பார்க்காது சரியாகக் கண்டுகொண்டிருந்தாள் எழில்.

“அவளே தான்.”

“அய்யோ இவங்களுக்கு பேச வேற இடமே கிடைக்காதா? எப்பவும் ஊர் எல்லையில வழி மறிச்சிக்கிட்டு” என்ற எழில், “நீங்க வளைச்சு போங்கக்கா. காலேஜ்க்கு ஏற்கனவே டைம் ஆச்சுது” என்றாள்.

“இரு எழில்… நாம தாண்டிக்கிட்டுப் போனாலும், வந்து மறிக்கத்தான் செய்வாங்க” என்ற நனியிதழ், “எதுக்கு இப்படி வழி மறிச்சிட்டே இருக்கீங்க?” என வந்தனாவிடம் வினவினாள்.

“இதே சீன் எத்தனை முறை தான் சமாளிக்கிறது” என்ற எழில், “உங்களை மாதிரி நாங்க வெட்டியா இல்லை. வழியை விடுங்க” என்றாள்.

“ஏய் என்ன திமிரா? அடங்கிப் பேசு” என்று எகிறிய வந்தனா, “பொண்ணு எந்த ஊரு?” என மிதப்பாகக் கேட்டாள்.

“உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்ற நனியிதழ், வண்டியை இயக்க முயல, எந்தப்பக்கமும் ஒடித்து ஓட்ட முடியாத அளவுக்கு முன் சக்கரத்தின் கீழ் தன்னுடைய பாதத்தை வைத்தவளாகா வந்து நின்றாள் வந்தனா.

“அப்படியே அந்த காலு மேல ஏத்துங்கக்கா… அப்போவாவது வூட்டுல ஒரு இடத்தில் உட்காரட்டும்” என்றாள் எழில்.

“சும்மா பிரச்சினை பண்ணாதீங்க. உங்ககிட்ட மல்லுக்கட்ட எங்களுக்கு நேரமில்லை” என்று நனியிதழ் சொல்ல…

“உன் லவ்வு, இன்பா லவ்வுலாம் சேர்த்து வைக்கணும் தெரியுற உன் அண்ணனுக்கு, என் லவ் ஏன் தெரியல?” எனக் கேட்டாள் வந்தனா.

“இவங்க பண்றதுக்கு பேரு லவ்வா?” என்று முனகிய எழில், “எங்க அண்ணா சாதாரணமா பார்க்கவும் ஒரு தகுதி வேணும். அது உங்ககிட்ட இல்லை” என்றாள்.

“ஏய்” என்று முறைத்த வந்தனா, “அதிகம் பேசுற நீ. உன்னை தனியா கவனிச்சிக்கிறேன்” என்று எச்சரிக்கை செய்ய…

“அய்யோ பயந்துட்டேன்” என்ற எழில், “இதெல்லாம் ஒரு ஆளு. நீ வண்டியை ஓட்டுக்கா” என்று ஆக்சிலேட்டரை பிடித்திருந்த நனியின் கை மீது தன் கை வைத்து எழில் முடுக்கிட, சக்கரம் வந்தனாவின் கால் மீது உராயும் முன் சுதாரித்து ஒடித்து திருப்பியிருந்தாள் நனியிதழ்.

அப்போதும் வந்தனா அசையாது நிற்க…

“என்னா பொண்ணுக்கா இவங்க” என்று உதடு சுளித்தாள் எழில்.

“இங்க பாருங்க… அண்ணாக்கு முடிவாகிப்போச்சு. இனியும் நீங்க இப்படி பண்றது நல்லதில்லை. பேசாம ஒதுங்கிடுங்க. உங்க நல்லதுக்கு சொல்றேன்” என்று நனியிதழ் வண்டியை இயக்கி சென்றிருந்தாள்.

வந்தனாவுக்குள் அவளது ஏமாற்றம் ஒருவித வெறியாக உருமாறியிருந்தது. அதில் உதயனை மணம் முடிக்க எதாவது ஒரு வழி கிட்டிடாதா என்று கண்கொத்திப் பாம்பாக அவ்வீட்டில் ஒவ்வொருத்தரையும் கண்காணித்து வந்தாள் வந்தனா.

உதயனுக்கு பார்த்திருக்கும் பெண் யாரென்று அறிந்து, அவளிடம் பேசி அந்த சம்மந்தத்தை முறிப்பது தான் வந்தனாவின் திட்டம். அதற்காகத்தான் அந்தப்பெண் யாரென்று கேட்டது அவள்.

இருவரும் அஷ்மி பற்றி சிறு வார்த்தையும் சொல்லாது சென்றிருந்தாலும், அடுத்த நாளே கண்டுபிடித்து அஷ்மிதாவின் முன் நின்றிருந்தாள் வந்தனா.

error: Content is protected !!
Scroll to Top