என் ஆயுள் நீயே 52

என் ஆயுள் நீயே 52

இன்பா முகம் இறுக மெத்தையின் விளிம்பை அழுந்தப் பற்றி அமர்ந்திருந்தான்.

உதயன் உள்ளே வர, இன்பா எழுந்து சன்னல் பக்கம் நின்றுகொண்டான்.

“இப்போ என்னடா உனக்கு? நான் சொன்னா கேட்கமாட்டியா நீ?” உதயன் சற்று அதட்டலாகத்தான் கேட்டான். இல்லையென்றால் இன்பா இன்னும் உயர சென்றிடுவான்.

வேகமாகத் திரும்பி தனக்கு பின்னால் நின்றிருந்த உதயனை கட்டிக்கொண்ட இன்பா, எதுவும் சொல்லாது சில கணங்கள் அப்படியே நின்றிருக்க, உதயனின் கரம் உயர்ந்து தம்பியின் முதுகை வருடியது.

“இந்த சிட்டுவேஷன்க்கு இதுதான் சரி இன்பா. சின்னப் பையன் மாதிரி பிகேவ் பண்ணக்கூடாது” என்றான் உதயன்.

“உங்களுக்கு நான் சின்னப் பையன் தானே?” என்ற இன்பா, “இப்போ என்னடா… நீதான் என் பர்ஸ்ட் பேபி. போதுமா?” என்ற உதயன் முகம் சிரிப்பால் நிறைந்திருந்தது.

“அது எனக்கே தெரியும். என்னவோ மனசு ஒப்ப மாட்டேங்குது அண்ணா. நிச்சயம் வேணும்னா செய்து வைப்போம்.மேரேஜ் உங்களுக்கு அப்புறம் பண்ணலாமே” என்றான்.

“இல்லை இன்பா… அத்தையை அமைதியாக்க இதுதான் வழி” என்ற உதயன் “உனக்கு முடிஞ்ச நாலு மாசத்துல எனக்கு நடக்கப்போகுது. இதுக்கெதுக்கு ரொம்ப யோசிக்கிற நீ” என்றான்.

“அண்ணா…”

“ஒதை படுவ ராஸ்கல். ஒழுங்கா கல்யாணத்துக்கு ரெடியாகுற வழியைப் பாரு” என்று மீண்டும் விளையாட்டாய் அதட்ட, உண்மையில் இன்பாவின் முகம் சுருங்கிப் போனது.

அவனின் கன்னத்தை தட்டிய உதயன்,

“புரிஞ்சிக்கடா… இருக்கிற நிலைமையில் நீயும்” என்று முடிக்கும் முன்பு,

“நானும் உங்க பேச்சைக் கேட்காம கஷ்டப்படுத்துறேன்ல” என்றான் இன்பா.

“அப்படியும் வச்சிக்கலாம்” என்று உதயன் சிறு சிரிப்போடு சொல்ல…

“உங்க பேச்சை எப்போ மீறியிருக்கேன். இந்த விஷயம் என்னவோ ஏத்துக்க முடியல. நீங்க ஆக வேண்டியதை பாருங்க. நான் ஓகே ஆகிடுவேன்” என்றான் இன்பா.

“தனு மாடியில் இருக்கா. போய் பேசு. ரெண்டு நாளா அவகிட்ட எதுக்கு உன் கோபத்தைக் காட்டுற?” என்ற உதயன், “அமைதியா பேசு” என சொல்லிவிட்டுச் சென்றான்.

அந்நேரம் தனுவே அவனுக்கு அழைக்க, அலைபேசியை எடுத்து துண்டித்து சட்டைப் பையில் போட்டவன் மொட்டை மாடிக்குச் சென்றான்.

இரண்டு வீடும் பக்கத்து பக்கத்தில் என்பதால், தாண்டிக் கொள்ளும் இடைவெளி தான்.

ஜெயந்தன் பேசியதில், தன் கணவரும் தன் பக்கமில்லையா என்று குமரி அதிர்வில் அமைதியாகப் போனார். வீட்டிற்கு வந்தவர் ஓர் மூலையில் அமர்ந்துவிட்டார்.

தற்போது அவரிடம் விளக்கம் கொடுக்க எண்ணி பேசினாலும் மீண்டும் உச்சியில் ஏறிக்கொள்வார் என்று ஜெயந்தன் அப்படியே விட்டுவிட்டார்.

மூன்று நாட்களாக தனு இன்பாவிடம் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்… அவனோ குமரியின் மீதான கோபத்தை அவளிடம் காட்டிக் கொண்டிருக்கிறான்.

அவனிடம் பேசிட பலமுறை அழைத்தும், இன்பா அழைப்பை ஏற்காததால், உதயனுக்கு அழைத்து சொல்ல… தற்போது அவளிருக்கும் வருத்தத்திற்கு இன்பாவிடம் பேசினால் கொஞ்சம் சகஜம் ஆவாளென்று உதயன்தான் மாடிக்கு வர சொல்லியிருந்தான்.

இன்பா முறைத்துக் கொண்டு சென்று நின்றான்.

“எதுக்குடி கால் பண்ணிட்டே இருக்க? அதுவும் அண்ணாகிட்ட சொல்லி அனுப்புற… அறிவிருக்கா உனக்கு?” எடுத்ததும் காய்ந்தான்.

குமரியின் மீதான கோபத்தையெல்லாம் அவளிடம் காட்டினான்.

“உனக்கு நான் வேணாமா மாமா?” தனு தழுதழுப்பாய், கண்களிலிருந்து கொட்டிவிடத் துடிக்கும் நீருடன் அவன் முகம் பார்த்துக் கேட்க…

சட்டென்று அவனின் கோபமெல்லம் வடிந்திருந்தது. இரண்டு நாட்களாக குமரி படுத்தும் பாட்டில் அதிகம் அல்லாடியது அவள் தானே!

நெற்றியை தேய்த்துக் கொண்டே…

“பிளீஸ் டி… இருக்க நிலையில நீயும் டென்ஷன் பண்ணாத” என்றான்.

தனு மாடி சுற்றுச் சுவரின் மீது ஏறிட, எதுவும் விபரீதமாக முடிவு செய்துவிட்டாளோ என்று இன்பா பயந்துவிட்டான்.

இன்பா பதறி, “ஹேய் தனு” என்பதற்குள் அவன் பக்கம் தாண்டி குதித்திருந்தாள்.

“பைத்தியமாடி உனக்கு?” என்று தனுவின் தலையில் கொட்டிய இன்பா, “இனி இந்த மாதிரி பண்ணாத. ஹைட் பார்த்தியா? கொஞ்சம் மிஸ் ஆனாலும் போய் சேர்ந்திருப்ப… நான் தாடி வளர்த்திட்டு சுத்தியிருப்பேன்” என்றான். இடையில் கைக்குற்றி.

“நீதான் அம்மா யாருக்கோ கட்டிக்கொடுத்தா கொடுக்கட்டும் சொன்னியாமே! அப்புறம் எனக்கு என்னமோ ஆனா உனக்கென்ன மாமா?” எனக் கேட்டாள்.

“வேறென்ன பண்ண சொல்ற. அண்ணா வந்து கெஞ்சிக் கேட்கணுமா? உனக்காகவே அப்படின்னாலும் அண்ணா அப்படி வரது உன்னால ஏத்துக்க முடியுமா?” என்றான்.

அவன் பக்கம் புரிகிறது. இருந்தும் தன்னை வேண்டாமென்று எப்படி அவன் சொல்லலாம் எனும் வருத்தம் அவளுள் மலையளவு.

“உன்னை விட்டுக் கொடுக்கணும் நினைக்கலடி. ஆனால் எனக்கு சொல்லத் தெரியல…” என்ற இன்பா, அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்திருந்தான்.

“நீ கூடவே இருக்கிறதால அதிகம் நெருங்காம விட்டுட்டேன். அதுக்காக உன்மேல லவ் இல்லன்னு இல்லை. ரொம்பவே பிடிக்கும். எனக்கு வெளிப்படையா காட்ட வரல. அவ்ளோதான். இதுக்குமேல எப்படி சொல்லண்ணும் தெரியல. நீயே சமாதானம் ஆகிக்கோடி” என்றான்.

வெளிப்படையாக சொல்ல வரவில்லை என்று தன்னுடைய மனதில் அவளுக்கான இடத்தை அழகாக சொல்லிவிட்டான். இதைவிட அவளுக்கு வேறென்ன வேண்டுமாம். அவன் சொல்லியது கூட குமரியின் பேச்சினால் உண்டான கோபத்தால் தான் என்பதால், முந்தைய நிகழ்வுகள் யாவற்றையும் தனு மனதில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவளுக்கு இன்பா மட்டும் போதும்.

“அப்படியே கட்டிக்கவா மாமா?”

அப்போதுதான் தன்னைப்போல் என்ன காரியம் செய்து வைத்திருக்கிறேன் என்று சுற்றுப்புறத்தை பார்வையால் அலசியபடி தனுவை வேகமாக தன்னிலிருந்து பிரித்து தள்ளி நிறுத்தினான்.

“எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். இப்போ நீ போ” என்றான்.

“ம்க்கும் ரொம்பத்தான். தாலி கட்டு. அப்புறம் உன்னை பார்த்துக்கிறேன் மாமோய்” என்றவள் இன்பா உணரும் முன்பு அவனது கன்னத்தில் முத்தம் வைத்து வந்தவழியே தாண்டி குதித்து மறைந்திருந்தாள்.

‘இவள அமைதின்னு நினைச்சோமே! கொஞ்சம் சேட்டை தான்.’ அவளின் இதழின் ஈரம் கை வைத்து ஸ்பரிசித்தான். பின்னந்தலை கோதி, நாணம் மீதூற, உதட்டை அழுந்த கடித்து மென் முறுவல் சிந்தினான்.

“இந்த ஃபீல் கூட நல்லாத்தான் இருக்கு” என்றவனாக நின்ற இடத்திலிருந்து ஒரு சுற்று சுற்றி, ஒரு அடி எம்பி என அவள் முத்தமிட்ட இனிமையை மனதோடு ரசித்தான்.

“உன்னை இப்படி பார்க்கவும் நல்லா இருக்கு மாமா” என்று படி இறங்கும் சுவற்றை பிடித்துக் கொண்டு, முகம் மட்டும் காட்டி, தனு கூற, போய்விட்டவளின் குரலில் வேகமாக திரும்பிப் பார்த்த இன்பா,

“இன்னும் நீ போகலையா?” எனக் கேட்டான்.

“பேக்கிரவுண்டில் காதல் ஆசை யாரை விட்டதோ… பாட்டு போடட்டுமா மாமா” என்று தனு சிரித்தபடி வினவ,

“அடிங்… ஓடு நீ” என்றான்.

“லவ் யூ மாமா” என்று பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பி வைத்தவள் சிட்டாக ஓடியிருந்தாள்.

“மொத்தமா மனசையே லேசாக்கிட்டா… லவ் இப்படித்தான் இருக்குமோ?” என்றவன், முகம் விகசிக்க… கீழே வந்தான்.

“இப்போ பார்க்க எப்படி இருக்கு? அதைவிட்டு உர்ருன்னு நல்லாவாடா இருக்கு?” என்று பாட்டி, அவனின் குமட்டில் இடிக்க…

“மொட்டைமாடியில் வைத்தியம் நடந்திருக்கு அத்தை” என்று சிரித்தார் கங்கா.

“பெரியம்மா…” என்று சிணுங்கிய இன்பா, அவரின் பின்னிருந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு, “நீங்க அண்ணாகிட்ட பேசலாம்ல?” எனக் கேட்டான்.

“இன்னும் நீ சமாதானம் ஆகலையா?” என்ற கங்கா, “பெரிய மாமாவே சரின்னு இருக்கார். இதுல நான் என்ன பேசறது. உதயா இப்போ உன் ரூமில் வந்து பேசினப்போ சரின்னு ஒத்துக்கிட்டு இருந்திருப்பியே அவங்கக்கிட்ட. அப்புறம் என்ன?” என்றார்.

“அண்ணா சொல்லி மீற முடியாதே பெரியம்மா” என்று இன்பா சொல்ல… “அதே தான் எங்களுக்கும்” என்று இடைப்புகுந்துக் கூறினார் காமாட்சி.

“இன்பா…” உதயன் குரல் கேட்கவே,

“கேட்ருச்சோ” என்று வேகமாக உதயன் அருகில் சென்றான்.

“நீ சொன்னதுக்காகதான் அத்தை வீட்டுக்கு போகமா இருக்கேன். ஆனால் இப்போ போகணும். எல்லாரும் அவங்களை தனியா விட்டதா நினைப்பாங்க. அவங்க இல்லாம இங்க முழுமையடையாது” என்றான் உதயன்.

“அத்தைக்கிட்ட பேசப் போறேன் சொல்றீங்க… நான் அத்தையை அப்படியே விடணும் நினைக்கல. ஆனால் அவங்க டக்குன்னு இப்படி மாறிட்டாங்களே…” என இன்பா இழுக்க…

“சரியாகிடும். எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாது. நான் அத்தையை பார்த்திட்டு வரேன்” என்று உதயன் வெளியில் சென்றான்.

அலைபேசி ஒலித்தது.

“வொர்க்ல இருக்கீங்களா உதய்?”

“அத்தை வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் அஷ்மிதா. கொஞ்சம் இங்க பிரச்சினை ஆகிடுச்சு” என்ற உதயன், “என்னன்னு சொல்லுடா?” என்றான்.

அதற்குள் அவன் பேசிக்கொண்டே குமரியின் வீட்டிற்கு வந்திருக்க,

“வாங்க மாப்பிள்ளை” என்று ஜெயந்தன் உதயனை அழைப்பது கேட்க, “சும்மா தான் கால் பண்ணேன். நீங்க பாருங்க” என்று வைத்துவிட்ட அஷ்மிதா அடுத்து இன்பாவுக்கு அழைத்தாள்.

“சொல்லுங்க மேடம். லவ் ஓகே ஆனதும், ஃப்ரெண்ட்டை மறந்தாச்சு.” இன்பா கேலியாக சொல்ல…

“அடி வாங்குவ” என்றாள் அஷ்மிதா.

“உண்மை தானே?”

“என்னடா உண்மை” என்ற அஷ்மிதா, “வந்தனான்னு ஒரு பொண்ணு என்னை மீட் பண்ண வந்திருக்கா இன்பா” என்றாள்.

“எங்க உன் ஆபீசுக்கா?”

“ஆமா. ரிஷப்ஷனிஸ்ட் வந்து சொன்னாங்க… இன்னும் நான் போகல. நேம் கேட்டதும் உன் மாமா பொண்ணு வந்தனா தான் ஸ்ட்ரைக் ஆனாங்க” என்ற அஷ்மிதா, “உனக்கு பிக் அனுப்பியிருக்கேன். அவங்களான்னு சொல்லு” என்றாள்.

காத்திருப்போர் அறையில் இருக்கையில் அமர்ந்திருந்த வந்தனாவின் முகத்தின் கடுமை புகைப்படத்திலும் நன்கு தெரிந்தது.

“இவ எதுக்கு அங்க வந்திருக்கா அஷ்மி?” என்று யோசனையாக, நெற்றிச் சுருங்கக் கேட்டான்.

“அப்போ ஷீ இஸ் வந்தனா?” என்றாள் அஷ்மிதா.

“ஆமா… இரு நான் அண்ணாகிட்ட சொல்றேன்” என்று இன்பா சொல்ல,

“அவங்களுக்கு கால் பண்ணிட்டு தான் உனக்கு பண்ணேன் இன்பா. அங்க ஏதோ பிரச்சினை தனு வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் சொன்னாங்க. அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்று இன்பாவை மறுத்தாள் அஷ்மிதா.

“ஆபீஸில் பிரணவ் இல்லையா?”

“அண்ணா மீட்டிங்கில் இருக்காங்க” என்ற அஷ்மிதா, “வந்தனா எதுக்கு வந்திருப்பான்னு ஓரளவு யூகிக்க முடியுது” என்றாள்.

“என்னது?”

“உங்க அண்ணாவை விட்டுக் கொடுக்கச்சொல்லி…”

“ஹான்… கன்னத்துல நாலு கொடுத்திட்டு வா” என்று சினந்த இன்பா, “அவ பேச்சே சரியில்லை அஷ்மி” என்று, அன்று பெண் பார்க்க சென்ற போது வழிமறித்த நிகழ்வைக் கூறி, “பெரியப்பாவே அடிக்க கை ஓங்கிட்டார். எதோ வெவகாரமா சொல்லியிருப்பா போல” என்றான்.

“பார்த்துக்கலாம் விடுடா” என்ற அஷ்மிதா, “பேசிட்டு வரேன்” என அவனின் இணைப்பைத் துண்டித்தாள்.

error: Content is protected !!
Scroll to Top