என் ஆயுள் நீயே 53
இன்பாவிடம் பேசி முடித்த அஷ்மிதா, இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் மூச்சினை இழுத்து வெளியேற்றி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
வந்தனா தன்னைத் தேடி வந்திருப்பதற்கான காரணம், ஓரளவுக்கு யூகிக்க முடிந்திருக்க…
‘அவங்க என்ன பேசினாலும், கண்ட்ரோல் யூர் செல்ஃப் அஷ்மி.’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாக, மேசை மீதிருந்த தண்ணீரை எடுத்து பருகிவிட்டு நிமிர்ந்த நடையுடன் காத்திருப்போருக்கான அறை நோக்கிச் சென்றாள்.
கண்ணாடி கதவு வழியே தன்னை நோக்கி வரும் அஷ்மிதாவை கண்டுகொண்ட வந்தனாவின் பார்வை அங்குல அங்குலமாக அஷ்மிதாவை அளவிட்டது.
சிலிம் ஃபிட் என சொல்லப்படும் வகையிலான இளஞ்சிவப்பு வர்ண முழுக்கைச்சட்டையும், கணுக்கால் வரையிலான காலோடு இறுக்கி பிடித்த பென்சில் வகை கரு நிற பேண்ட்டும், அதற்கு ஏற்ப கருப்பு கட் ஷூஷ் மற்றும் வலது கையில் இரு மணிகள் தொங்க மெல்லிய சங்கிலி, கழுத்தில் பொட்டு அளவிலான இதயம் மட்டும் ஒட்ட வைத்தது போல கண்ணுக்குத் தெரியாத வகை சங்கிலியும் அணிந்திருக்க, தோள் வழியாக முன்பக்கம் படர விட்டிருக்கும் குதிரைவால் குழல் கீழே மட்டும் சுருள் சுருளாக சுருண்டு, மார்பு தாண்டி வயிற்றைத் தொட்டிருந்தது. எட்டி வைக்கும் நடையில் நிதானமான வேகம். நேர்கொண்ட பார்வை. ஒரு கணம் வந்தனா உறைந்து பார்த்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகு. அதில் தெரியும் மிடுக்கு. மொத்தத்தில் வந்தனாவை அஷ்மிதா தோற்றத்தால் அசரடித்தாள்.
வந்தனாவும் கொள்ளை கொள்ளும் அழகு தான். ஆனால் அவளையும் அஷ்மிதா தன்னுடைய நிமிர்வால் வியந்து பார்க்க வைத்திட்டாள்.
கதவினை திறந்து கொண்டு உள் வந்த அஷ்மிதா…
“வந்தனா?” என இதழில் இளமுறுவல் தேக்கி கேட்க, ஒரு நொடி பதில் சொல்ல மறந்திருந்தாள் வந்தனா.
“ஹலோ…” வந்தனாவின் கண்களுக்கு முன் அஷ்மிதா கை அசைக்க,
“ஆங்” என உறை நிலையிலிருந்து மீண்டு பார்த்தாள் வந்தனா.
“ஹாய்… அம் அஷ்மிதா” என்று வந்தனாவின் முன்பு கரம் நீட்ட,
“வெளிய போய் பேசலாம்” என்று வந்தனா அஷ்மியை தாண்டிக் கொண்டு அடி வைத்திட,
“அட” என்று நீட்டிய தன் கையை மடக்கி, தோள்களை குலுக்கிய அஷ்மிதா… சொடக்கிட்டு வந்தனாவை நிறுத்தியிருந்தாள்.
கதவினை திறந்துவிட்ட வந்தனா, அஷ்மியின் சொடக்கு ஒலியில் திரும்பிப் பார்க்க…
“யார் நீங்க?” என்ற அஷ்மிதா, “பேசிக் மேனர்ஸ் என்னன்னு தெரியாதா?” எனக் கேட்டாள்.
உதட்டை ஒரு பக்கமாக விரித்து சுருக்கி அலட்சிய பாவனை காண்பித்தாள் வந்தனா.
“ஹான்” என்று தலையை இரு பக்கமும் அசைத்த அஷ்மிதா, “டோர் ஓபன் பண்ணிவிட்டதுக்கு தேங்க்ஸ்” என்று சொல்லிக் கொண்டே அவ்வறையிலிருந்து வெளியேறி நடக்கத் தொடங்கியிருந்தாள்.
‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா?’ எனும் பாவனை அஷ்மிதாவிடம்.
அறிமுகம் நிமித்தமாக அஷ்மி கை குலுக்க நீட்டிய போது வந்தனாவும் கரம் பற்றியிருந்தால் அஷ்மி இப்படி நடந்துக் கொண்டிருக்கமாட்டாள். வந்தனா காண்பித்த திமிரான செயல், அஷ்மிதாவை திருப்பிக் கொடுக்க வைத்தது.
அஷ்மிதாவை அதிர வைக்க நினைத்து, தற்போது வந்தனா தான் அதிர்ந்து நின்றாள்.
அஷ்மிதா வந்தனாவின் பார்வையிலிருந்தே சென்றுவிட்டிருந்தாள்.
“ச்சை… நாம ஆட்டிட்யூட் காட்டலாம் பார்த்தா… அவ காட்டிட்டுப்போறா. ரொம்பதான் ராங்கியா இருப்பா போல” என்று வாய்விட்டே முனகிய வந்தனா, மீண்டும் வரவேற்பு பெண்ணிடம் சென்று அஷ்மிதாவை பார்க்க இருப்பதாக சொல்ல,
“நாட் இன்ட்ரெஸ்ட்டட். அவங்களை போக சொல்லிடுங்க” என்றிருந்தாள் அஷ்மிதா.
“நான் பார்க்காம போகமாட்டேன் சொல்லுங்க” என்று வந்தனா முறைத்துக் கொண்டு சொல்ல, வர்வேற்பாளினியும் அஷ்மிதாவுக்கு அழைத்துக் கூற, “வேஸ்ட் ஆஃப் டைம்” என்றாள் அஷ்மிதா.
“எவ்ளோ நேரமானாலும் பார்க்காம இங்கிருந்து போகமாட்டேன்” என்ற வந்தனா மீண்டும் காத்திருப்போருக்கான அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளுக்கு பின்னால் ஓடி வந்த வரவேற்பு பெண்… “இப்படி அனுமதி இல்லாம இங்க உட்கார்ந்திருக்க முடியாது மேம். பிளீஸ் நீங்க கிளம்புங்க” என்று பொறுமையாக எடுத்துக்கூற, வந்தனா அசையவில்லை.
“செக்யூரிட்டி கூப்பிட வேண்டியதா இருக்கும் மேம்” என்ற அப்பெண், வந்தனா பார்த்த பார்வையில் வெளியில் வந்துவிட்டாள்.
மீண்டும் அஷ்மிதாவை அழைத்தவள், “வெயிட்டிங் ஹாலில் உட்கார்ந்திட்டு போகமாட்டேன்னு அடமண்ட்டா பிஹேவ் பன்றாங்க மேம். செக்யூரிட்டி கூப்பிட்டு வெளியில் அனுப்பவா மேம்?” என்றாள்.
“நோ நீட். கண்டுக்காதீங்க. வெயிட் பண்ணிட்டு அவங்களே போயிடுவாங்க” என்ற அஷ்மி வேலையில் வந்தனாவை மறந்தேவிட்டாள்.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கடந்திருக்க, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இடையேயான கலந்தாய்வு கூட்டம் முடிந்து வெளியில் வந்த பிரணவ் மற்றும் ரீமா தத்தம் அறைக்குச் சென்றனர். மாலை ஆறு மணிக்கு மேலாகியிருக்க, ஊழியர்கள் ஒவ்வொருவராக விடைபெறத் தொடங்கினர்.
“நாலு மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து செம டயர்ட் பிரணவ். வீட்டுக்குப் போறேன்” என்று ரீமா கிளம்ப, “மார்னிங் நான்தானே பிக் பண்ணேன். இப்போ எப்படி போவ. நானும் வரேன் வா” என்று அவனும் கிளம்பிவிட்டான்.
செல்லும் போது அஷ்மியின் அறையை எட்டிப் பார்க்க,
“நீங்க போங்க… நெக்ஸ்ட் ஷிஃப்ட் சைன் ஆனதும் வரேன்” என்க, இருவரும் புறப்பட்டிருந்தினர்.
அலுவலக பகுதியிலிருந்து வெளியில் வர, நேராக உள்ளது காத்திருப்போர் அறை. கண்ணாடி கதவு என்பதால் உள்ளே அமர்ந்திருந்த வந்தனாவை முதலில் பார்த்துவிட்டு,
“யாருடா அந்தப்பொண்ணு?” என்றாள் ரீமா.
பிரணவ் வரவேற்பாளினியை ஏறிட,
“இவங்க இன்னும் போகலையா?” என்று அதிர்ந்தாள் அவள்.
“வாட் யூ மீன் மிஸ் நர்மதா?” என்ற பிரணவ், “யாரை மீட் பண்ண வந்தாங்க?” எனக் கேட்டான்.
“அஷ்மி மேம்மை சார்” என்ற பெண், “மேம் பார்க்க முடியாது சொல்லிட்டாங்க. அப்பவும் பிடிவாதமா உட்கார்ந்திருக்காங்க. நானும் வேலையில் மறந்துட்டேன்” என்று நடந்ததைக் கூறினாள்.
“அஷ்மி இப்படி பண்ணமாட்டாளே” என்று ரீமா யோசனையாக இழுக்க…
“யாருன்னு பார்ப்போம் வா” என்று வந்தானாவிடம் சென்றான் பிரணவ். உடன் ரீமா.
“யார் நீங்க? இங்க ஏன் வெயிட் பண்றீங்க?”
கேட்ட பிரணவ்வை யாரென்று பார்த்த வந்தனாவின் முகத்தில் அதீத கோபம்.
“கோபமா இருக்காங்கடா. பேசாம அஷ்மியை கூப்பிட்டு பேச சொல்லுவோம்” என்று பிரணவ்விடம் மெல்லிய ஒலியில் ரீமா கூற, பிரணவ் வந்தனாவை பார்வையால் ஆராய்ந்தான்.
“அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” பிரணவ் அழுத்தமாகக் கேட்க,
“அஷ்மிதாவை பார்க்கணும்” என்றாள் வந்தனா.
“எதுக்கு?” ரீமா கேட்க,
வந்தனா சொல்லிய பதிலில்,
“எதே?!” ரீமா அதிர, பிரணவ் நிர்மலமான முகத்துடன் நின்றிருந்தான்.
“அஷ்மிதாகிட்ட உண்மையை சொல்லணும்” என்ற வந்தனாவிடம்,
“என்னன்னு சொல்வீங்க?” எனக் கேட்டான் பிரணவ்.
“பிரணவ், இந்தப் பொண்ணு பொய் சொல்றாடா. முதலில் வெளியில் அனுப்பு” என்ற ரீமா, “இந்தாம்மா நீ கிளம்பு” என்றாள், வந்தனாவிடம்.
“அமைதியா இரு ரீமா” என்ற பிரணவ், “என்னன்னு சொல்வீங்க?” என மீண்டும் அதையே கேட்டான்.
“உதயன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, உங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க சொல்வேன்” என்றாள் வந்தனா.
“அவ்ளோதானே” என்று வெகு சாதாரணமாகக் கேட்ட பிரணவ், வந்தனா முன்பே அஷ்மிதாவுக்கு அழைத்து, “வந்தனா உன்கிட்ட பேசணுமாம். நீயே வந்து பேசி அனுப்பி வை அஷ்மி” என்றான்.
தான் பெயர் சொல்லாமலே அவன் சொல்லியதில் தன்னைப் பற்றி தெரிந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டாள் வந்தனா. அப்போதும் தான் சொல்லியதை மாற்றிகொள்ளவில்லை அவள்.
“ஓ… ஷிட். இன்னும் போகலையா?” என்ற அஷ்மிதா பேசிக் கொண்டே நடந்து வந்தாள்.
“உன்கிட்ட பேசாம போக முடியாதாம்” என்று பிரணவ் கூற, “நான் பார்த்துக்கிறேன் அண்ணா” என்று கதவினை திறந்திருந்தாள் அஷ்மிதா.
“அஷ்மி இந்தப் பொண்ணு என்னவோ…”
“ரீமா…”
சொல்ல வந்த ரீமாவின் கையை பிடித்து தடுத்த பிரணவ்,
“வெயிட் பண்ணவா?” என தங்கையிடம் கேட்டான்.
“வேண்டாம். நீங்க கிளம்புங்க” என்ற அஷ்மிதா, ரீமா மற்றும் பிரணவ் சென்ற பின்னரே வந்தனா பக்கம் திரும்பினாள்.
இம்முறை வந்தனா நேரடியாக தான் சொல்ல வேண்டியதை சொல்லியிருந்தாள்.
“ஹோ… ஓகே!” அவ்வளவுதான் அஷ்மியின் எதிர்வினை.
“எனக்கும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு சொல்றேன் அவ்ளோதானான்னு நிக்கிற?” என்ற வந்தனா, “இங்கப் பாரு… ஒழுங்கா நீயே அவங்களை வேண்டாம் சொல்லிட்டு கல்யாணத்தை நிறுத்திடு. அதுதான் உனக்கு நல்லது” என்றாள்.
“அப்புறம்?”
“உன் வாழ்க்கையை காப்பாத்த சொல்றேன். அவங்க என் புரு…” வந்தனா முடிக்கும் முன்பு, அவள் கண்களில் பூச்சி பறந்தது.
அஷ்மிதா அடித்ததில் வந்தனாவின் கன்னம் சிவந்து எரிந்தது. வலியில் அவளின் கண்களில் நீர் கட்டிவிட்டது.
“ஏய்?” என்று வந்தனா கையை ஓங்க, ஓங்கிய கையை பிடித்து முறுக்கி வளைத்த அஷ்மிதா, “என்ன பார்த்தா நீ சொல்றதெல்லாம் கேட்டுட்டு தலையை ஆட்டிட்டுப்போற சின்ன பாப்பா மாதிரி தெரியுதா?” எனக் கேட்டாள்.
வந்தனாவுக்கு அஷ்மிதாவின் பிடி வலியை கொடுத்தது. வெளிக்காட்டது இருந்தாலும், அவள் பற்களை கடிப்பதில் கண்டுகொண்ட அஷ்மிதா…
“ச்சை” என்று விலக்கி நிறுத்தினாள் வந்தனாவை.
“உன்னையெல்லாம் திட்டக் கூட வார்த்தை வரல” என்ற அஷ்மிதாவை தீயாய் முறைத்த வந்தனா,
“இப்பவும் சொல்றேன் அவங்க எனக்குத்தான். மரியாதையா உன்னை தள்ளி வைக்கலாம் நினைச்சேன். ஆனால் என்னையே நீ அடிச்சிட்டல… உன் கல்யாணம் அவங்களோட எப்படி நடக்குது பார்க்கிறேன்” என்றாள் வந்தனா. அத்தனை ஆத்திரம் அவளிடம்.
“எப்படி?” என்ற அஷ்மிதா, “இப்போ சொன்னியே… நடக்கவே இல்லாத ஒன்னை நடந்த மாதிரி, அதுபோல வேறென்ன சொல்லுவ” என்று வந்தனாவின் வயிற்றில் பார்வையை தொட்டு முகம் பார்த்தாள். ஒருவித அருவருப்பைக் காட்டி.
“நான் நினைச்சது நடக்க அதுக்கு மேலவும் சொல்லுவேன்” என்ற வந்தனா, “கல்யாண மேடை வரை நீ போனாலும், அவங்க தாலி கட்டுறது எனக்கு தான்” என்றாள். ஆங்காரமாக.
“உன் வாயிலிருந்து அவங்க அவங்கன்னு நீ உதய்யை சொல்றதே உன்னை இன்னும் ரெண்டு அறை அறைஞ்சா என்னன்னு தோண வைக்குது. கல்யாணத்தை நிறுத்துறேன்னு உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காத. அப்புறம் வருத்தப்பட்டு நிக்கிறது நீயாதான் இருப்ப” என்ற அஷ்மிதா, “இப்படியெல்லாம் பொய் சொல்ல எப்படி வருது?” என்றாள்.
“நான் பொய் சொல்லல… அவங்க மேல உயிரே வச்…”
“ம்ப்ச்… உன்கிட்ட பேசுறது வேஸ்ட். என்ன பண்ணனும் நினைக்கிறியோ பண்ணிக்கோ. அதுக்கு முன்ன இங்கிருந்து கிளம்பு. கேட் க்ளோஸ் பண்ணனும்” என்ற அஷ்மிதா, வந்தனா சொல்ல வந்ததை முழுதாக முடிக்க விடாது அங்கிருந்து சென்றுவிட்டாள்.
தான் சொல்லியதும் அதிர்ந்து கண்ணீர் விடுவாள், வாழ்க்கையே போய்விட்டதென்று புலம்பி மருகுவாள் என்று வந்தனா நினைத்ததற்கு மாறாக அஷ்மிதா நடந்து கொண்டதில் அதீத ஆத்திரத்தில் அங்கிருந்து புறப்பட்ட வந்தனா, வீட்டிற்கு சென்ற நேரம் மருதன் ருத்ர மூர்த்தியாக அவள் முன் நின்றிருந்தார்.