என் ஆயுள் நீயே 54
உதயன் குமரியின் வீட்டிற்குள் செல்ல தயக்கம் கொள்ளவே இல்லை. அவன் பிறந்தது முதல் ஓடி ஆடி வளர்ந்த வீடு அது. இன்று ஒரு ஒரு கோபத்தில் எதோ பேசிவிட்டார் என்பதற்காக அவனின் உரிமை அங்கில்லை என்றாகிவிடுமா?
வாயில் படியில் உதயன் கால் வைக்க, ஜெயந்தன் அவனை கண்டுவிட்டு வரவேற்றார்.
“வாங்க” என்று ஜெயந்தன் அழைக்கும் ஒலி கேட்க, முற்றம் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த குமரி யாரென்று எட்டிப் பார்த்தார்.
உதயன் என்றதும், அவனை அழைத்து உபசரிக்க கை காலும் அத்தனை வேகம் கொண்டது. முயன்று அடக்கி, முகத்தை திருப்பிக் கொண்டார்.
“நாளைக்கு நிச்சயத்துக்கு துணி எடுக்க போலாம் முடிவு பண்ணியிருக்கு மாமா. அதான் சொல்லிட்டுப் போகலாம் வந்தேன்” என்ற உதயன் குமரியின் அருகில் சென்று அவருக்கு முன் தரையில் அமர்ந்தான்.
குமரி பதறிப்போனார்.
அவன் தரையில் அமர்ந்து அவர் கண்டதே இல்லை. அவன் அமரமாட்டானென்று இல்லை, வீட்டிலிருப்பவர்களின் மரியாதையில் இயல்பான பல விஷயங்கள் தானாகவே அவனிடமிருந்து ஒதுங்கி இருந்தது. அதில் ஒன்று இதுவும்.
“என்ன உதயா நீங்க… எழுந்திருங்க. அங்க சோஃபாவில் உட்காருங்க” என்று பதற்றமாகக் கூறினார்.
“இருக்கட்டும் அத்தை” என்ற உதயன், “உங்களுக்கு என்ன கோபம் அத்தை?” எனக் கேட்டான். அவரின் முகம் பார்த்து.
முகத்தை தாழ்த்திக் கொண்டார் குமரி. எதுவும் பதில் சொல்லவில்லை.
“உங்க கோபம் என் மேலவா? இல்லை, நம்ம குடும்பத்து மேலவா?” என்ற உதயன், “நீங்க என்னை உங்க மருமகனா ஆக்கிக்கணும் நினைக்கிறீங்க. ஆனால் கடைசிவரை மகனா இருக்கத்தான் பிராப்த்தம் போல” என்றான். அமைதியாய். மென் புன்னகையோடு.
அவனது வார்த்தையில் குமரியின் கண்கள் உடைப்பெடுக்க…
“அய்யா… உதயா” என்று அவனின் கரத்தை பிடித்துக் கொண்டார்.
“நீங்க வளர்த்தப் பிள்ளை உங்க மகன் இல்லையா அத்தை” என்று உதயன் கேட்க,
“நீங்க என் பிள்ளைப்பா. உங்க அம்மாவே அதுல என்கிட்ட போட்டிக்கு வர முடியாது” என்றார்.
“அப்புறம் எதுக்கு அத்தை இதெல்லாம்?”
உதயன் கேட்டிட மீண்டும் குமரி பதலற்றுப் போனார்.
“அஷ்மிதாவை உங்களுக்குப் பிடிக்கலையா?”
உதயன் அவ்வாறு கேட்ட விதமே, எனக்கு அவளை பிடிச்சிருக்கு என்று அவன் சொல்வதைப் போலிருந்தது.
“சொல்லுங்க அத்தை. நீங்க இல்லாம நம்ம குடும்பம் நிறையாது. எனக்கு என்ன நடந்தாலும் உங்க விருப்பமும், ஆசியும் இருக்கணும். இருக்குமா அத்தை?” எனக் கேட்டான்.
இதுவரை வாய் திறந்து அவனாக ஒன்றை கேட்டதே இல்லை. மற்றவர்கள் கேட்டு அவன் செய்தது தான் அதிகம். இன்று அவன் ஒன்றை கேட்க, அதுவும் யாசிப்பைப் போல கேட்டிட… குமரி தன்னுடைய அகங்காரத்திலிருந்து சறுக்கியிருந்தார்.
“நீங்க அஷ்மிதாவை தனு இடத்தில் வச்சு பாருங்க சொல்லல. நான் சொல்லவும் மாட்டேன். பேச்சுக்கு சொல்றது எப்பவும் உண்மையாகிடாது” என்ற உதயன், “என்னை பிடிக்கும் தானே உங்களுக்கு? நான் நல்லாயிருக்கணும் எண்ணம் உங்களுக்கு இருக்கு தானே?” என்று கேட்கவும்,
“அய்யோ கண்ணு” என்று அவனின் வாயை மூடினார்.
“கல்யாணம் ஆகிட்டா அஷ்மிதா என் மனைவி. அவளை என் மனைவியா பாருங்க. என்னுல பாதியா பாருங்க. என் பக்கமிருந்து பார்க்கும் போது அவள் உங்களுக்கு வேறையா தெரியமாட்டாள்” என்றான்.
குமரிக்கு தான் வளர்த்த பிள்ளை, கலங்கி நிற்க தானே காரணமாகி விட்டோமே என்று உணர்ந்த நொடி, உதயனின் முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை.
“இன்பாவை விட்டுக்கொடுக்க எப்படி அத்தை மனசு வந்துச்சு?”
உதயனை விலுக்கென நிமிர்ந்துப் பார்த்தார்.
குடும்பமே தன்னை ஒதுக்கி வைத்துவிட்டதாக நினைத்த குமரி, அனைவரும் தன்னைத் தேடி வரவைக்க வேண்டுமென்று வீம்புக்கு செய்தது அது. இப்போது நினைக்கையில் சிறுபிள்ளை விளையாட்டாக தெரிந்தது. தலையிறக்கமாகவும் தெரிய…
“தெரிஞ்சுதான் பண்ணேன். இப்போ நினைக்க எனக்கே ஒரு மாதிரி இருக்கு தம்பி” என்ற குமரி, “வீம்புக்கு பண்ணிட்டேன்” என்றார்.
“நம்ம வீட்டில் நடக்குற முதல் கல்யாணம், அதுவும் ரெண்டு கல்யாணம். நீங்க இல்லாம எப்படி? காலையில கடைக்கு போகணும். அம்மாவும், அப்பாவும் முறையா சொல்லுவாங்க… இப்போ சம்மந்தி வேற. அந்த முறுக்கை காமிங்க. சும்மா என் அத்தையா கெத்தா வாங்க. அதுதான் நல்லாயிருக்கும். இதுல இன்பா சந்தோஷம் மட்டுமில்லை… தனு, உங்க பொண்ணு வாழ்க்கையும் இருக்கு. நடந்தது எல்லாம் நடந்ததாவே இருக்கட்டும். கண்டுக்க வேண்டாம். மறந்திடுவோம். இனி ஆக வேண்டியதை ஒண்ணா சேர்ந்து நிறைவா செய்வோம்” என்றான்.
குமரி பரிவாய் உதயனின் கேசம் வருட, அவனிடம் இளம் முறுவல்.
“நீங்க நல்லாயிருப்பீங்க தம்பி” என்ற குமரி, “எல்லாம் நல்லபடியா நடக்கும். கூறுகெட்டு எதேதோ பேசிட்டேன். முடிஞ்சா மன்னிச்சிடுங்க” என்றார்.
மூறல்கள் மின்ன பளிச்சென்று சிரித்த உதயன், “இது எங்க குமரி இல்லையே. சும்மா எதிர இருக்கவங்களை வார்த்தையாலே தெறிக்க விடுற குமரி எங்கையோ காணுமாமே மாமா… கண்டுபிடிங்க” என்றான்.
அதுவரை அமைதியாக இருந்த ஜெயந்தன்,
“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு உதயா” என்றார்.
“விடுங்க மாமா” என்று எழுந்துகொண்ட உதயன், “நான் வரேன்” என்று இருவருக்கும் பொதுவாக சொல்லி வெளியேறினான்.
“உன்னைவிட வயசுல பல வருஷம் சின்னவங்க… அவங்ககிட்ட இருக்க பக்குவம் உன்கிட்ட இல்லாமப் போச்சே குமரி…” ஜெயந்தன் மிகவும் வருந்திக் கூற, “மன்னிச்சிடுங்க நம்ம பொண்ணுன்னு சுயநலமாக யோசிச்சிட்டேன். தனுவும் எங்களுக்குள்ள ஒருத்தின்னு காட்டிட்டாங்க” என்று வருந்திய குமரி, “நானே உதயன் கல்யாணம் அப்புறம் இன்பா, தனு கல்யாணம் வச்சுக்கலாம் சொல்றேன்” என்று நகர்ந்தார்.
குமரியின் கையை பிடித்து நிறுத்திய ஜெயந்தன்,
“உதயன் ஒத்துக்கமாட்டாங்க” என்றான்.
“இல்லைங்க நான் பேசுறேன்.”
“வேணாம் குமரி. நீ எப்போ எப்படி மாறுவ, என்ன வார்த்தையை வீசுவன்னு சுதாரிப்பாவே இருக்க முடியாது. இப்போ உதயன் பேசுனதுல நீ கொஞ்சம் இளகியிருக்கலாம். மொத்தமா மாறிட்டியான்னு என்னாலே நம்ப முடியல. அதனால் உன் ஆசை, உன் பொண்ணு கல்யாணம் சீக்கிரமே நடக்கட்டும்” என்று சென்றுவிட்டார்.
நிதானிக்காது, கோபத்தில் ஆத்திரம் கொண்டு செய்தது, தன்னுடைய குணத்தையே மாற்றிக் காட்டிவிட்டதே என்று குமரியால் வருந்த மட்டுமே முடிந்தது.
எப்போதும் படபடவென்று பேசுபவர் தான்… அதிலெல்லாம் இருக்கும் உரிமை, நியாயம் இரண்டு தினங்களாக அவர் பேசியதில் இல்லையே. அவருக்கே தன்னைக் குறித்து அவமானமாக இருந்தது.
குடும்பத்தின் அடுத்தடுத்த நிகழ்வு அனைத்தையும் மறந்து மாற்றுமென்று நம்பிக்கைக் கொண்டார்.
__________________________
அஷ்மிதாவுக்கு மூச்செடுக்கவே சிரமமாக இருந்தது.
அவளால் இன்னும் வந்தனாவை தான் அடித்ததை நம்ப முடியவில்லை. அவளால் எப்படி முடிந்தது இதென்ற சிந்தனை.
வந்தனா என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கட்டும், அவளை தான் அடித்திருக்கக் கூடாதென்று வருந்தினாள்.
உடன் அவள் மீது எல்லையற்ற கோபம் இப்போதும் மிட்சமிருந்தது.
“எவ்வளவு தைரியம்… என்கிட்டவே வந்து அப்படி சொல்ல… அவங்க என் உதய்” என்று வாய்விட்டு புலம்பிய அஷ்மிதா, தன் கோபம் மட்டுப்படும் வரை அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
அப்போது இன்பாவிடமிருந்து அழைப்பு வர,
“செம கோபத்துல இருக்கேன் இன்பா. எதையும் தூக்கிப் போட்டு உடைக்கணும் போலிருக்கு” என்றவள், இன்பாவை வாய் திறக்கவிடாது, நடந்த அனைத்தையும் ஒரு வார்த்தை விடாது, வந்தனா பேசியது, தான் பேசியதென்று எல்லாமே மூச்சுவிடாது சொல்லி முடித்தாள். உடன் வந்தனாவை நன்றாக வறுத்து தாளித்தாள். வார்த்தையால்.
“அஷ்மி ஓகே அப்புறம் பேசலாம். பொறுமையா. நிதானமாகு ஃபர்ஸ்ட்” என்ற இன்பாவின் வார்த்தையை எல்லாம் அவள் காதிலே வாங்கவில்லை.
தன்னைப்போல் பொரிந்து தள்ளினாள்.
“ஒரு மாதிரி பயங்கர கோபம் வந்திருச்சு இன்பா… என் உதய், என்கிட்டவே வந்து அவங்க, அவங்கன்னு அவ்ளோ உரிமையா பேசுறா. அதுக்கு மேலவும் பேசுவேன் சொல்றா. டாலரேட் பண்ணிக்கவே முடியல” என்றவள், “அடிக்க வேற செஞ்சிட்டேன். அதை மட்டும் அவாய்ட் பண்ணியிருக்கலாம்” என்று சொல்ல…
“இன்னும் ரெண்டு சேர்த்து கொடுத்திருக்கலாம். தப்பில்லை” என்று ஒலித்த குரலில் அஷ்மிதாவின் கண்கள் விரிய, மூச்சே நின்றுவிட்டிருந்தது.
“இன்பா… இப்போ பேசினது உதய் இல்லை தானே?”
“உதய்’யா இருந்தா இப்போ என்ன?”
“அய்யோ நானில்லை” என்று உதயன் அதட்டலில் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
தற்போது அஷ்மிதாவின் முகம் எப்படி இருக்குமென்று நினைத்து பார்த்த இன்பாவிடம் சிரிப்பு.
“எதுக்குடா சிரிக்கிற?” உதயன் அதட்டினான்.
“ஓவர் பொஸசிவ் தான்” என்றான் இன்பா.
“யாருக்கு?”
“அவங்க உதய்’யாமே நீங்க” என்று இன்பா கேலி செய்ய, உதயனின் மீசை புன்னகையில் சுருங்கியது.
“இதை இப்படியே விடக்கூடாது இன்பா” என்று உதயன் கீழே சென்றான்.
உதயன் சென்றதும் இன்பா மீண்டும் அஷ்மிதாவுக்கு அழைக்க,
எடுத்தவள், “ஹலோ” என்று சத்தமின்றி சொல்ல இன்பா சத்தமாக சிரித்தான்.
“சிரிக்காதடா… கோர்த்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிற. அவங்க பக்கத்தில் இருக்காங்கன்னு சிக்னல் கொடுத்திருக்கக் கூடாது” என்று அஷ்மிதா சொல்ல…
“என்னை எங்க பேசவிட்ட நீ” என்றான் இன்பா.
“ஓகே ஓகே… முழுசா கேட்டுட்டாங்களா?”
“கால் பண்ண சொன்னதே அண்ணாதான்” என்ற இன்பா, “இப்போதான் அண்ணா ஹார்பர் போயிட்டு வந்தாங்க. வந்தனா வந்திருக்கா சொன்ன நீ இவ்வளவு நேரமாகியும் கால் பண்ணல. அண்ணாகிட்ட சொல்லியிருப்ப நினைச்சு, அஷ்மி கால் பண்ணாளா கேட்டேன். ஏன் கேட்டாங்க… சொல்லிட்டேன். அப்புறம் அண்ணாவே உனக்கு கால் பண்ணி கேட்க சொன்னாங்க. பட் நீ பட்டாசா வெடிக்கவும் நான் தான் ஸ்பீக்கரில் போட்டேன்” என்றான்.
அஷ்மிதா அமைதியாக இருக்க…
“அண்ணாகிட்ட சொல்ல வேணாம் இருந்தியா?” எனக் கேட்டான் இன்பா.
“அப்படிலாம் இல்லை. பொறுமையா சொல்லியிருப்பேன். ஏற்கனவே வந்தனா பிரச்சினை பண்ணதா சொன்னியே! திரும்ப பிரச்சினை வேண்டாம் நினைச்சேன்” என்றாள்.
“வந்தனா போக்கு சரியில்லை அஷ்மி, ஆரம்பத்திலே சரி செய்யணும். எவ்ளோ தைரியமா உன்கிட்ட அப்படி வந்து சொல்லியிருக்கா… விட முடியாது. அண்ணா பார்த்துப்பாங்க. நீ வீட்டுக்கு கிளம்பு” என்று வைத்திட்ட இன்பா, கீழே வர உதயன் கோபத்தின் உச்சத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தான்.
“என்னாச்சு?” இன்பா, கைகளை பிசைந்துக் கொண்டு நின்றிருந்த நனியிதழிடம் கேட்டான்.
“மார்னிங் நானும் எழிலும் போகும் போது வந்தனா வழி மறிச்சு பேசினாள். அண்ணா கிட்ட இப்போ தான் சொன்னோம்” என்றாள் நனியிதழ்.
“அவ அடங்கவே மாட்டாளா?” என்ற இன்பா, “அஷ்மியைப் பார்க்க அவ ஆபிசுக்கே போயிருக்கா வந்தனா” என்று அவள் அஷ்மியிடம் பேசியதை எல்லாம் சொல்ல, குடும்பமே இப்படியும் ஒரு பெண்ணா என்று ஸ்தம்பித்துப் போயினர்.