என் ஆயுள் நீயே 55

என் ஆயுள் நீயே 55

அஷ்மிதாவிடம் பேசியதில் வந்தனாவின் எண்ணம் இன்னும் வலுப்பெற்றது. உதயனை விட்டுவிடக் கூடாதெனும் வெறி அவளுள் ஆழப்பெற்றது.

அதிலும் அஷ்மிதா அடித்ததை, அவள் பேசிய நியாயமான வார்த்தைகள் யாவற்றையும் அவளால் ஏற்க முடியவில்லை.

மனதில் ஒருவித வன்மம் எழ, அதனை எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

அவளுக்காக வாயிலிலே மருதன் மற்றும் சகுந்தலா காத்திருந்தனர்.

இருவரையும் பார்த்த வந்தனா என்ன ஏதென்று கேட்காது உள்ளே செல்ல…

“எங்க போயிட்டு வர?” எனக் கேட்டு நிறுத்தினார் மருதன்.

“ஃபிரண்ட் வீட்டுக்கு. அம்மாகிட்ட சொல்லிட்டு தான் போனேன்” என்று வந்தனா சொல்லி முடிக்க, மருதன் பளாரென்று அறைந்திருந்தார்.

வந்தனாவிடம் அப்படியொரு அதிர்வு.

மருதன் தன்னை அடிப்பாரென்று சில நொடிகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் கூட வந்தனா நம்பியிருக்கமாட்டாள்.

ஆனால் அடி வாங்கிய கன்னம் தீயாய் எரிய, கை வைத்து உறைந்து நின்றிருந்தாள்.

“அப்பா!” காற்றாய் அதிர்வின் உச்சம் தொட்டு அவளின் குரல் வெளிவர,

“நான் பெத்த பொண்ணுதானா நீ?” என்ற மருதனின் முகத்தில் மிதமிஞ்சிய வேதனை. ஆற்றாமை.

“ஒரே பொண்ணுன்னு உன் விருப்பத்துக்கு வளர்த்து முச்சந்தியில் மூக்கு அறுபட்டு நிக்கிறேன். நீ மருந்து குடிச்ச அப்போவே உன் கை கால முறிச்சு வீட்டில் மூலையில் உட்கார வச்சிருந்தா, இன்னைக்கு ஊர் தாண்டி போய் என் மானத்தை கப்பல் ஏத்தியிருக்கமாட்ட நீ” என்றவர், “உன் மேல எனக்கும் உன் அம்மாவுக்கும் இருக்க பாசத்தை பகடையா நினைச்சிட்டல நீ” என்றார்.

“அப்பா…” வந்தனா கண்ணீர் வழிய தன் தந்தையின் கை பற்ற முயல,

“பெத்ததுக்காக கல்யாணம் கட்டி கொடுக்குற வரை இந்த வீட்டில் இரு. அதுக்கு அப்புறமும் ஒரு அப்பனா என்ன செய்யணுமோ எல்லாம் செய்வேன். ஆனால் உன் முகத்தை நான் பார்க்கிறது இன்னைக்குதான் கடைசியா இருக்கணும்” என்றவர் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

மருதன் மகளின் செயலால் மொத்தமாக உடைந்திருந்தார்.

அவரால் மகளின் செயலை, அவளின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை.

விஷம் குடித்த நேரம், அப்பாவாக அவள் ஆசையை நிறைவேற்றி வைப்போம். அதன் பிறகு அது அவளின் வாழ்வு என்று நினைத்து தான், உதயன் வீட்டில் தன் பகையை மறந்து சென்று பேசினார்.

அன்று உதயன் பேசிய வார்த்தைகளில் கோபம் உண்டாகியிருந்தாலும், தனித்து அமைதியாக யோசிக்கையில் அவரின் தவறும் புரியவே, தொழில் நிலையங்களுக்கும் செல்லாது வீட்டிலே வருந்திக் கொண்டிருந்தார்.

தன் பாசம் தவறிய தந்தையின் வருத்தம் அது.

“ஒத்து வராது. உன்னோட விருப்பம் மாதிரி, அவங்களுக்கு ஒரு விருப்பம் இருக்குமே. வாழ்க்கையில நமக்கு பிடிக்காதவங்களை கூட கட்டிக்கலாம். ஆனால் நம்மள பிடுக்காதவங்களை கட்டிகிட்டா ரெண்டு பேரோட வாழ்வும் நரகமாகிடும்” என்று மகளுக்கு எடுத்து சொல்லியவர், “கொஞ்சம் கொஞ்சமா மறக்க முயற்சி பண்ணு. மத்த அப்பா மாதிரி பொண்ணு தப்பு பண்ணிட்டான்னதும் அவசரமா எவன் கையிலோ பிடிச்சுக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. புரிஞ்சு நடந்துக்க” என்று அன்று தனமையாகவே சொல்லியிருந்தார்.

ஆனால் இன்று, ‘தான் அவ்வளவு எடுத்து சொல்லியும் இப்படி ஒன்றை செய்திருக்கிறாள்’ எனும் வருத்தம் வெகுவாக அவரை பாதித்திருந்தது.

சற்று நேரத்திற்கு முன்புதான் கஜமுகன் வந்திருந்தார்.

அவரின் வரவை மருதன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பிரச்சினைக்கு முன்பு வரை பெரியவரிடம் மருதனுக்கு அப்படியொரு மரியாதை. அவர் தொழில் கற்றுக் கொண்டதே அவரிடம் தான். அந்த மரியாதை மனதின் ஓரம் இப்பவும் இருக்கத்தான் செய்தது.

அதுவுமில்லாமல் வீடு தேடி வந்தவரை யாரோபோல் பார்த்து மருதனால் ஒதுங்கி நிற்க முடியவில்லை.

எதுவும் காரணமில்லாமல் வந்திருக்க மாட்டாரென்று நினைத்த மருதன் உள்ளே அழைக்க, திண்ணையில் அமர்ந்து கொண்டார் கஜமுகன்.

“இருக்கட்டும் மருதா” என்ற பெரியவர், “கொஞ்சம் பேசுவோம் ப்பா. மனசுல எதையும் வச்சிக்காம பக்குவமா கேளு” என்று தன்மையாக ஆரம்பித்தார்.

நனியிதழ், எழிலை மறித்து பேசியது முதல், இளங்கோவிடம் சொல்லிய வார்த்தைகள், இன்று அஷ்மிதாவை நேரிலே பார்த்து பேசியது வரை அனைத்தையும் கூறினார்.

கஜமுகன் சொல்ல சொல்ல மருதன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக தாழ்ந்தது.

அவரை அந்நிலையில் காண பெரியவருக்கே மனது கேட்கவில்லை. மருதனின் கையில் மென்மையாகத் தட்டிக் கொடுத்தார்.

“ஆத்திரப்பட்டு கத்துற விஷயமில்லை மருதா இது. பொறுமையா எடுத்து சொல்லு. பொண்ணுங்கிறதுக்காகவே இல்லாததை நூறா சொல்லுற உலகம் இது. இருக்குன்னு தெரிஞ்சா நம்ம பிள்ளைக்கு தான் அசிங்கம்” என்றவர் வரேன் என்றுகூட சொல்லாது சென்றுவிட்டார்.

விஷயமறிந்து ஒருவழி செய்துவிடுகிறேன் என குதித்த கஜேந்திரனை கட்டுப்படுத்தி, கஜமுகன் மட்டும் சென்று பேசுவதே சரியென அந்நேரத்திலும் நிதானமாக முடிவெடுத்து பெரியவரை அங்கு அனுப்பி வைத்தது உதயன் தான்.

உதயனின் இந்த யோசனை பல அனுபவங்கள் வாய்ந்த கஜமுகனுக்கே தோன்றவில்லை. இன்பா சொல்லியதும் அவரும் கோபத்தில் மருதனை திட்ட வேண்டுமென்று தான் நினைத்தார். அவரையும் நிதானிக்க வைத்தது உதயனின் பொறுமை தான்.

“எல்லாரும் போய் நின்னு ஊருக்கே காட்டிக் கொடுக்கணுமா? நம்ம வீட்டு பொண்ணு இப்படி பண்ணா, என்ன பண்ணுவோமோ அப்படி பேசிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்திருந்தான்.

மருதன் வருத்தம் முகிழ்ந்த முகம் கண்ட பின்னர் தான், வந்து கத்தி சண்டை போட்டிருந்தால் கூட இவ்வளவுக்கு வருந்தியிருக்க மாட்டாரென்று கஜமுகன் நினைத்தார்.

உண்மையில் செல்லும் கஜமுகனையே பார்த்திருந்த மருதனுக்கும் அப்படித்தான் தோன்றியது.

“என்னய்யா பொண்ணு வளர்த்து வச்சிருக்கன்னு சண்டை போட்டிருக்கலாம்” என்று மனைவியிடம் கூறி கவலை கொண்டார்.

மருதனுக்கு மகள் மீது வைத்த பாசத்தில் மனமே விண்டுபோனது.

தளர்ந்த நடையுடன் வீட்டிற்குள் செல்பவரை பார்க்கையில் வந்தனாவுக்கு தன் செயலின் வீரியம் புரிந்தது.

அருகில் சகுந்தலா அழுது கொண்டு நின்றிருக்க…

“அம்மா” என்று தழுதழுத்தாள்.

“ஒரு பொண்ணு இப்படியுமா இருப்பா?” எனக் கேட்டவர், அழுதுகொண்டே உள்ளே சென்றிட, வாயிலிலே அமர்ந்து வெடித்துக் கதறினாள் வந்தனா.
___________________________

அஷ்மிதா வீட்டிற்கு வந்ததும், அறைக்கு கூட செல்லாது கூடத்து இருக்கையிலே அமர்ந்துவிட்டாள்.

“என்னாச்சு அஷ்மி? ஃபிரஷ்ஷப் ஆகலையா?” என்ற விமலா, “நாளைக்கு நீயும் வரதானே?” எனக் கேட்டார்.

“எங்க மாம்?” தெரியாது வினவினாள்.

“என்ன தெரியாத மாதிரி கேட்கிற… ட்ரெஸ் எடுக்க போகணுமே” என்றார்.

“ஹோ…” சுரத்தே இல்லாமல் அவள் மொழிய, “என்ன இப்படியிருக்க நீ?” என்றார்.

“இப்போ என்ன மாம் பண்ணனும்?” அவள் சோர்வாகக் கேட்க…

“வீட்டுக்கு போயிட்டியா?” என உதயனிடமிருந்து தகவல் வந்தது.

இன்பாவிடம் அவள் பேசும்போதே இரவு ஒன்பது மணிக்கு மேலாகியிருந்தது. அப்போது அவள் அலுவலகத்தில் இருந்தாள் என்பதாலேயே நேர தாமதமானதால் கேட்டிருந்தான்.

பார்த்துவிட்டவளுக்கு பதில் அனுப்பத் தோன்றவில்லை. பதில் அனுப்பினால் அடுத்த நிமிடம் அழைத்து விடுவான். இருக்கும் மனநிலையில் அவனுடன் இதமாக பேசிட முடியுமென்று அவளுக்கே நம்பிக்கையில்லை. ஆதலால் கண்களை மூடி இருக்கையில் பின் சாய்ந்தாள்.

அதன் பின்னர் விமலா பல கேள்விகள் கேட்டும் அவளிடம் பதிலில்லை.

“என்னாச்சு அஷ்மி?” விமலா கேட்க, அப்போதுதான் மாடியிலிருந்து வந்த பிரணவ், “மாம் நான் பேசிக்கிறேன். நீங்க சாப்பாடு எடுத்து வைங்க” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு, தங்கையின் அருகில் அமர்ந்தான்.

அவனின் அரவம் உணர்ந்ததும் அவனது தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“என்னவாம்? ஒரு மாதிரி இருக்க?” தங்கையின் தலையை வருடியவாறு வினவினான்.

“வந்தனாவை அடிச்சிட்டேன்.”

அஷ்மிதா சொல்லவும், வந்தனா எத்தனை தூரம் பேசியிருப்பாளென்று பிரணவ் யூகித்திருந்தான்.

“கில்ட்டா ஃபீல் பன்றியா?” எனக் கேட்டான்.

“அப்படி நான் ஃபீல் பண்ணா, அவள் பேசினதெல்லாம் நானே சரிங்கிற மாதிரி ஆகிடுமே” என்ற அஷ்மிதா, “இது என்னோட காரக்டர் இல்லையே அண்ணா” என்றாள்.

“எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாதுடா” என்ற பிரணவ், “மாமாவை உனக்கு எவ்ளோ பிடிக்கும் அப்படிங்கிறது நீ அடிச்சதுல தெரியுது” என்றான்.

“ம்ம் ரொம்பப் பிடிக்கும். இப்போ இன்னும் அதிகத்துக்கும் பிடிக்குது” என்று பிரணவ்வை இடையோடு கட்டிக்கொண்டு அவன் தோளில் நன்றாக சாய்ந்த அஷ்மிதா, “ஹீ லவ்ஸ் மீ மோர்” என்றாள்.

“அப்புறம் ஏன் மாமாக்கு ரிப்ளை பண்ணல?”

அவனிலிருந்து பிரிந்து முறைத்தாள்.

“அதுக்குள்ள உனக்கு கால் பண்ணிட்டாங்களா?” என்ற அஷ்மிதா, “வந்தனா பேசினது ஒரு மாதிரி உள்ள ஓடிட்டே இருக்குடா. அவங்கிட்ட சரியா பேச முடியும் தோணல. நான் ஃபீல் பண்றேன் என் வாய்ஸ் வச்சே கண்டுபிடிச்சிடுவாங்க. அப்புறம் அவங்க ஃபீல் பண்ணுவாங்க. நார்மல் ஆகிட்டு பேசலாம் இருந்தேன்” என்றாள்.

அவள் பேசியதெல்லாம் பிரணவ்வின் அலைபேசி வழி கேட்டுக் கொண்டிருந்த உதயன் சிறு சிரிப்புடன் அவளின் மனம் புரிந்தவனாக அழைப்பை துண்டித்திருந்தான்.

அஷ்மிதா தகவலை பார்த்தும் பதில் அனுப்பாததால், தற்போது அவள் தன்னிடம் பேச விருப்பப்படவில்லை என்பது புரிந்து, அவளை தொந்தரவு செய்யாது அஷ்மிதா வீட்டிற்கு வந்துவிட்டதை அறிந்து கொள்வதற்காக பிரணவ்வுக்கு அழைத்தான்.

அவளின் மனதை அவளது வார்த்தைகள் மூலமாகவே கேட்ட உதயனுக்கு தன் கவலை வரை அவள் யோசிப்பது அத்தனை காதலை கூட்டியது அவனுள்.

“மாமா லைனில் தான் இருந்தார்” என்று பிரணவ் சொல்ல,

“முழுசா கேட்டுட்டாரா?” என்ற அஷ்மிதா, “அவங்ககிட்ட என்னை கோர்த்துவிடன்னே எல்லாம் வேலை பாக்குறீங்க. கவனிச்சிக்கிறேன் இருங்க” என்று சினுங்கியவளாக உதயனுக்கு அழைத்தபடி எழுந்து சென்றாள்.

அந்நேரம் பிரணவ்வுக்கு நனியிடமிருந்து அழைப்பு வந்தது.

“அஷ்மி ஓகேவா?” எடுத்ததும் அவள் இவ்வாறு கேட்க, பிரணவ் வந்தனா விஷயம் அங்குவரை சென்றுவிட்டதை அறிந்து, அஷ்மிதா ஏன் உதயனும் வருந்துவான் என்று சொன்னதை புரிந்து கொண்டான்.

“ரொம்ப பிரச்சினை ஆகிடுச்சா இதழ்?”

“சித்தப்பா தாத்தாலாம் பயங்கர கோபம். அண்ணா தான் சமாளிச்சு தாத்தாவை மட்டும் மருதன் மாமாகிட்ட பேச அனுப்பி வச்சாங்க. தாத்தா இப்போ தான் வந்தாங்க” என்று சுருக்கமாக அனைத்தையும் கூறினாள்.

அமைதியாகக் கேட்டுக்கொண்ட பிரணவ், எதுவும் பேசாது அமைதியாக இருக்க…

“என்னாச்சுப்பா” எனக் கேட்டாள்.

“அந்தப் பொண்ணு டக்குன்னு மாறிடும் தோணல” என்றான்.

“அதுதான் அவங்க அப்பாகிட்டவே பேசியாச்சே. இனிமே இது மாதிரி பண்ண கொஞ்சமாவது யோசிப்பாங்க” என்ற நனியிதழுக்கு அடுத்த நாள் தன்னை வழி மறித்த வந்தனாவை கண்டதும், பிரணவ் சொல்லியது எத்தனை உண்மை என்று தான் தோன்றியது.

error: Content is protected !!
Scroll to Top