என் ஆயுள் நீயே 66
பிரணவ்வின் செய்கைகளை நினைத்து உதயன் சிரித்தபடி மெத்தையில் விழுந்தான்.
அந்நேரம் அவனின் அலைபேசி ஒலித்திட, யாரென்று பார்க்காமலே அழைத்தவரை கண்டு கொண்டவனின் இதழ் சிரிப்பில் முறுவல் கொண்டது.
அலைபேசியை எட்டி எடுத்து காதில் வைத்தான். ஹலோ என்று சொல்லாது அமைதியாக இருந்தான்.
அவனின் மௌனம் அவனவளை என்னவோ செய்தது.
“உதய்…” தவிப்பாய் காற்றாய் செவி நிறைத்த அழைப்பில், தொண்டை ஏறியிறங்க தடுமாற்றம் கொண்டவன், எழுந்து அமர்ந்தான்.
“எஸ்” என்றான்.
வழக்கமான அஷ்மிதாவை அவனின் குரலில் எதிர்பார்த்து, அவனிடமிருந்து ஒலிக்காமல் போக வாடினாள்.
“சாரி உதய்.”
“எதுக்காம்?”
“நான் போனதை கண்டுபிடிச்சிட்டிங்கல?” எனக் கேட்டாள்.
உதயனிடம் அமைதி.
“பிளீஸ் உதய்…”
“நான் ஃபைண்ட் பண்ணிட்டேன்னு இப்போ சொல்றீங்களா?”
முதல் நாளிலிருந்தே அத்தனை உரிமையாய் வார்த்தைக்கு வார்த்தை அஷ்மிதா என்று அழைப்பவன், இன்று மரியாதை பண்பில் எட்ட நிறுத்தும் உணர்வு.
“சொல்லாம போனது தப்பு தான். இனி பண்ணமாட்டேன். சாரி உதய்” என்றாள்.
“ம்ப்ச்…” என்ற உதய், “கோபம் முழுக்க உன்மேல தான். அவங்க கூப்பிட்டா போயிடுவியா நீ? பர்ஸ்ட் டே எவ்ளோ வயலன்ட்டா பிகேவ் பண்ணி, உன்னை அடிக்க…” என்று நிறுத்தியவன், “நான் இல்லாம தனியா போகக்கூடாது” என்று அழுத்தமாகக் கூறினான்.
“ம்ம்… ஓகே ஓகே டன். உங்களுக்கு கால் பண்ணியிருக்காங்க. நீங்க அட்டெண்ட் பண்ணலன்னு எனக்கு பண்ணாங்க. நம்ம பொறுப்பில் இருக்கும்போது எப்படி உதய் முடியாது சொல்றது. நீங்க அப்போ தான் அண்ணியோட வீட்டுக்கு போனீங்க. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நான் போனேன்.”
“எக்ஸ்ப்ளைன் பண்ணனும் அவசியமில்லை.” என்றான்.
“அப்போ புரிஞ்சும் கோபமா இருக்கீங்க.”
“கோபமில்லையே!”
“நிஜமாவா?”
“எஸ்.”
“அப்போ அஷ்மிதா சொல்லல.”
“தோணும்… சொல்வேன்.”
“ஹான்… ரொம்பத்தான்.”
“என்னடி இப்போ?” அழுத்தமின்றி கடிந்து வெளிவந்த டி யில், அவளின் இதழ்கள் குவிந்த புன்னகை கதுப்பில் விரிந்தது.
“ஒண்ணுமில்லையே” என்றவள், “வச்சிடவா?” எனக் கேட்டாள்.
“வைக்கணும்னா வைக்கலாம்” என்றான்.
“அஷ்மிதா சொல்லுங்க. வைக்கிறேன்.”
“எனக்கு தூக்கம் வருது.”
“உதய் பிளீஸ்.”
“ஹெவி டயர்ட். குட் நைட்.”
“நேரா வருவேன்.”
“முடிஞ்சா வா.”
“அப்போ கல்யாணம் நாளைக்கே வைங்க…” வேகமாக சொல்லியிருந்தாள்.
“அவசரம் போல…” சிரித்துக் கொண்டே கேட்டான்.
அவனது சிரிப்பில் மறைந்திருந்த தேடலை உணர்ந்தவளாக,
“உங்களுக்கு இல்லையா?” எனக் கேட்டாள்.
“இல்லையே!”
“பொய்.”
“இருக்கட்டும்.” அவளுக்கு சலைக்காது அவனும் பதில் கொடுத்தான்.
“நேம் சொல்லுங்க…”
“முடியாது. போடி…”
“அப்போ கால் கட் பண்ணுங்க.” கோபமாகக் கூறினாள்.
“நான் கால் பண்ணலையே!”
“அவ்வா… உங்களுக்குத் தெரியாம ஒன்னு பண்ணிட்டேன். அதுக்கு ரொம்ப பண்றீங்க நீங்க” என்றாள். ஆதங்கமாக.
“இனி எப்பவும் எதையும் என்கிட்ட மறைக்கக்கூடாதுல” என்றான்.
“சொல்லிருந்தா போக விட்டு இருப்பீங்களா?”
“விடமாட்டேன் தெரியிதுல. அப்புறம் ஏன் போகணும்?” அவனுக்கு உதவி செய்ய முயன்று அஷ்மிக்கு எதுவும் நேர்ந்திடுமோ எனும் கவலை. எல்லாம் அவனோடு என்றால் அவனுக்கு எவ்வித கவலையுமில்லை. ஆனால் அவளுக்கு ஒன்றென்றால் அவன் ஜீவன் நினைக்கவே துடித்து அடங்குகிறது.
“இப்போ நான் என்ன பண்ணா நார்மல் ஆவீங்க?” அவனிடம் சரண்டர் எனும் நிலைக்கு வந்துவிட்டாள்.
“என்னைத் தூங்கவிடு போதும்” என்றான். உதய்க்கு அவள் மீது கோபமென்பது கொஞ்சமும் இல்லை. சமாதானம் ஆகிவிட்டால் அவள் அழைப்பை வைத்துவிடுவாளே அதற்காகவே இல்லாத கோபம் காட்டி இழுத்துப் பிடிக்கின்றான்.
“எனக்கு தூக்கம் வரல” என்றவள் அழைப்பினை காணொளி அழைப்பாக மாற்ற…
ஏற்றிருந்தவனின் முகம் கண்டதும் கண்டுகொண்டாள்… இத்தனை தூரம் வேண்டுமென்று கோபம் போல் காட்டிக் கொண்டிருந்திருக்கிறான் என்று.
“உதய்… உங்களை” என்றவள், “நல்லா பயம் காட்டுறீங்க. பர்ஸ்ட் டைம் இப்படி ஆகுது. எப்படி உங்களை சமாதானம் செய்றதுன்னு தெரியாம… அஷ்மிதா சொல்ல மாட்டிங்களா?” எனக் கேட்டாள்.
“வீடியோ கால் பண்ண இவ்ளோ நேரமா அஷ்மிதா?” அப்பப்பா அந்த குரலும் பார்வையும் அவளை சுண்டி இழுத்தது. இந்த நொடியே அவனது கைகளில் புகுந்திட பேராவல் கிளர்ந்தது.
“கல்யாணம் சீக்கிரம் வசிருக்களாம்” என்றாள். அவனது கண்கள் மின்னும் முகம் பார்த்து, தன் இமைகள் சுருக்காது… தன்னைப்போல்.
“இது நல்லாயிருக்கே அஷ்மிதா. இந்த தவிப்பு, உனக்கான… எனக்கான ஏக்கம்… எல்லாம்… எல்லாம்” என்ற உதயன், “அஷ்மிதா உதயனை விரும்புறது ரொம்ப நல்லாயிருக்கு… பிடிச்சிருக்கு” என்றான்.
“வெட்டிங் முடிஞ்சாலும் பிடிக்கும். இதெல்லாம் அப்பவும் இருக்கும்” என்றாள். உடனடியாக.
“இந்த ஃபீல் வேற. அது வேற அஷ்மிதா” என்ற உதயன், “எழில் போன்லேர்ந்து பிக் ஷார் பண்ணா வானிஷ் பண்ணிட்டு கொடுக்கமாட்டியா நீ?” எனக் கேட்டான்.
“உங்க பிக் தானே? அதை ஏன் டெலிட் பண்ணனும்?” அவன் பார்க்கும் கோணம் அவளுக்கு புரியவில்லை.
“மொத்தம் என் பிக்” என்றான்.
“அச்சோ” என்று அஷ்மிதா தன் முகம் மூடி புன்னகைத்தாள்.
உதயனின் மீசை அவனது கீழ் பற்களுக்குள் சிக்கி துடித்தது.
“அன்னைக்கு ஷாப்ல நீங்க எழிலுக்கு கால் பண்ணப்போ, டயலர் பிக்கா வந்த உங்க ஸ்னாப் நல்லாயிருந்தது. டேரக்ட்டா எப்படி கேட்கிறது. அதான், அன்னைக்கு ரிசப்ஷன்ல எடுத்த பிக் செண்ட் பண்ணிக்கிறேன்னு மொபைல் வாங்கினேன்” என்ற அஷ்மிதாவுக்கு அப்போது தான், என்ன காரணம் சொல்லி வாங்கினமோ அதை செய்யாது, எழிலின் அலைபேசியில் இருக்கும் உதயனின் புகைப்படங்கள் மட்டுமே அனுப்பியிருந்தோம் என்பது புரிந்தது.
“எழில் என் கிட்ட அவள் மொபைல் செண்டிங் ஹிஸ்டரி காட்டி சிரிக்கிறாள்” என்றான்.
“நீங்க என்ன பண்ணீங்க?”
“என்ன பண்ணுவேன். அவள் மொபைல் வாங்கி உன் ஹிஸ்டரி டெலிட் பண்ணிட்டு கொடுத்தேன். அப்போ அவள் முகம் பார்க்கணுமே…”
“இப்போவே இப்படி… அப்படின்னு சொல்லிட்டுப் போனா” என்ற உதயனுக்கு, “என் மேல அவளுக்கு பொஸசிவ் அதிகம். பட்டுவே சம் டைம்ஸ் அமைதியாகிடுவா. ஆனால் அவள்” என்றதோடு அவன் நிறுத்த உதயன் சொல்ல வருவது புரிந்தது.
“உங்க அண்ணன் தங்கச்சி பாசத்துக்கு நடுவில் நான் வரலப்பா. எனக்கு அதுக்குள்ள ஓரமா சின்ன இடம் கொடுங்க போதும்” என்றாள்.
“மொத்த இடமும் உனக்குத்தான்டி” என்ற உதயன் வார்த்தையால் அவளை சுருட்டிக் கொண்டிருந்தான்.
அஷ்மிதா அவனில் ரசித்து தேங்கிட…
“இந்த குடும்பம் தான் எல்லாம். இனி நீயும்” என்றான்.
ஒவ்வொரு நொடியும் காதலை வார்த்தையால் வெளிப்படையாகக் காட்டி அவளை திக்குமுக்காட வைத்தான்.
அவர்களின் காதல் நாளுக்கு நாள் என்பதைவிட, நொடிக்கு நொடி வளரும் பிறையாய் வளர்ந்து தொய்வின்றி சீரான வெளிச்சமென ஆழகடல் ஊடுருவும் பூரண சந்திரனின் வெண் கதிராய் ஒளி வீசியது.
இரண்டு ஜோடிகளின் திருமணம் முடிந்ததுமே, அடுத்து உதயன் அஷ்மிதாவின் திருமணத்தைப் பற்றி பேசத் துவங்கிவிட்டனர்.
இன்னும் நான்கு மாதங்கள் உள்ளது என்ற அஷ்மிதாவின் ஏக்கங்கள் யாவற்றையும், இரவு நீளும் பேச்சில் மறையச் செய்திடுவான்.
மூக்குத்தி வழி பல தூதுக்கள் சென்று, அஷ்மிதாவின் பயணம் உதயனை காண எண்ணில் அடங்கா வகையில் அமைந்தது.
பிரணவ் நனியிதழ் அவர்களின் பந்தத்தில் அழகாய் பொருந்தி நிற்க, இன்பா தனுவுடன் நெஞ்சம் நிறையும் காதலோடு பொருந்திப் போனான்.
எல்லாம் அடுத்தடுத்தென்று நதியாய் நகர்ந்திட… உதயன் அஷ்மிதாவின் திருமண நாளும் நெருக்கத்தில் வந்திருந்தது.
உதயன் மற்றும் பிரணவ்வின் வீடு கொண்டாட்டத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமின்று ஆரவாரமாய் சந்தோஷத்தின் ஆர்ப்பட்டமாய் மின்னியது.
அன்று பத்திரிக்கை அடித்து வீடு வந்திருக்க… அனைவரும் ஒன்றாக அமர்ந்து மஞ்சள் வைத்துக் கொண்டிருந்தனர்.
“ஒருத்தரையும் விடக்கூடாது அண்ணா” என்ற கஜேந்திரன், “நம்ம ஜில்லாவே அசரணும்” என்றார்.
ஆரம்பத்திலேயே உதயன் ஆடம்பரம் வேண்டாமென்று சொல்லியிருக்க, கஜமுகன் முழுதாய் மறுத்துவிட்டார்.
“இது எங்க சாமி கல்யாணம். நீங்க மாப்பிள்ளையா மனையில வந்து உட்கார்ந்தா மட்டும் போதும்” என்றிருந்தார் ஜெயலட்சுமி பாட்டி.
தங்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் அண்ணனின் கல்யாண வேலைகள் அனைத்தையும் இன்பா முன்னின்று, பிரணவ் துணை கொண்டு சிறப்பாய் செய்தனர். பெரியவர்களின் வழி நடத்தலில்.
எல்லோரும் சிரித்து பேசியபடி, யாரையெல்லாம் அழைப்பதென்று பட்டியலிட்டுக் கொண்டிருக்க… எழில் பத்திரிக்கையில் முகவரி எழுதிக் கொண்டிருந்தாள்.
அவ்விடத்தில் தனு மட்டும் முகம் பொலிவின்றி அமர்ந்திருக்க,
“நீயும் எழில் கூட எழுது தனு. வேலை சீக்கிரம் முடியுமே” என்றார் காமாட்சி.
“தலைவலிக்குது அத்தை” என்று எழுந்து அங்கிருந்து தனு சென்றிட,
“அவளை எதுவும் சொன்னியா இன்பா?” எனக் கேட்டார் கங்கா.
“நான் என்ன சொல்லபோறேன் பெரியம்மா…” என்றான் இன்பா.
“அதானே… அண்ணா அண்ணியை எதுவும் சொல்லிட்டாலும்” என்ற எழில், “நம்ம வீட்டுல இப்படியெல்லாம் காதல் மன்னர்கள் உருவாவாங்க நான் நினைக்கவே இல்லை” என்று அப்போதுதான் அங்கு வந்த உதயனை பார்த்துக் கொண்டே கூறினாள்.
“வாய்” என்று தங்கையின் அருகில் அமர்ந்த உதயன், “மேடம் மட்டும் கம்மியா பன்றீங்களாக்கும்” என்றான். அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில்.
“என்ன பேசினாலும் ஆஃப் பண்ணிடுறீங்க அண்ணா” என்ற எழில், “இப்போலாம் சாருக்கு மூக்குத்தி வாங்கிக் கொடுக்கத்தான் நேரம். என் சாக்லேட் வரதே இல்லை” என்றாள்.
“பொஸசிவ் கில்லர் நீ” என்று தங்கையின் தோளில் கை போட்ட உதயன், அவளிடம் சாக்லேட்டை நீட்டினான்.
எழில் தேங்க்ஸ் சொல்லி வாங்கிட,
“எனக்கு என்னோட பொசசிவ் விட உங்க சந்தோஷம் முக்கியம். அண்ணி வந்தப்புறம் உங்க முகத்தில் எவ்ளோ ஹேப்பிநெஸ் தெரியுமா? நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும் அண்ணா” என்றாள். உளமார.
“பெரிய மனுஷி ஆசீர்வதிக்கிறா…” என்று இன்பா கிண்டல் செய்ய, எழில் சிணுங்கினாள்.
“தனுவை போய் பாருடா” என்று உதயன் அவனை விரட்டினான்.
காலை வீட்டிற்கு வந்த குமரி, தனுவை தனியாக அழைத்து சென்று பேசிட… பேசி முடித்து அவர் சென்ற பின் தனுவின் முகத்தில் பழைய ஒளி இல்லை. அதிலிருந்து தான் அவள் வாட்டமாக இருக்கிறாள். குமரி வந்து பேசிச் சென்றதை கவனித்திருந்த உதயனுக்கு குமரி மீண்டும் எதுவும் பிரச்சினையை ஆரம்பிக்கிறாரோ எனும் கணிப்பு.
இன்பா அறைக்குள் வர, தனு சுருண்டு படுத்திருந்தாள்.
“என்ன தனு படுத்திட்ட. தலை ரொம்ப வலிக்குதா?” என்று அவளருகில் அமர்ந்த இன்பா, “தைலம் தேய்ச்சு விடவா?” எனக் கேட்டான்.
வேண்டாமென தலையசைத்த தனு, தன் தலையை அவனது மடிக்கு மாற்றி, அவனைச் சுற்றி கையிட்டு அணைத்துக் கொண்டாள்.
“என்னம்மா?” இன்பா அவளின் தலை வருட…
“நமக்கு குழந்தை பிறக்காதா மாமா?” என கண்ணீரோடு கேட்டிருந்தாள்.