என் ஆயுள் நீயே 67
பிரணவ் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.
“என்னடா சீக்கிரம் கிளம்பிட்ட?”
“மேரேஜ் ஹால் போயிட்டு, டெக்கரேஷன் தீம் செலக்ட் பண்ணிட்டு அப்படியே ஆபீஸ் போகணும் இதழ்” என்று அவளருகில் சென்ற பிரணவ், அவளின் கன்னம் தாங்கி நெற்றியில் இதழ் பதித்து…
“போயிட்டு வரேன்” என்றான்.
“இந்த வொர்க் இன்னைக்கே பார்க்கணுமாடா?”
“ஆமா… இன்னும் ஃபைவ் டேஸ் தான் இருக்கு இதழ். அவங்களும் அரெஞ் பண்ணனுமே! முன்ன காட்டிய தீம் எதுவும் எனக்கு பிடிக்கல. இன்னைக்கு புதுசா டூ, த்ரீ தீம் டிசைன் பண்ணியிருக்கோம் சொன்னாங்க. அதான் பார்த்திட்டு செலக்ட் பண்ணனும்” என்று நின்று பதில் சொல்லியவன், அவளின் முகம் பார்த்து, “என்னவோ இருக்கு” என்று அவள் முன் வந்து நின்றான்.
“என்ன சொல்லு” என்று ஒரு கால் குத்திட்டு மண்டியிட்டான்.
“இன்னைக்கு நான் ஆபீஸ் வரல” என்றாள்.
திருமணத்திற்கு பின் பிரணவ்வுடன் அவனது அலுவலகம் செல்ல பழகியிருந்தாள் நனியிதழ்.
“ஏன்… உடம்பு எதும் முடியலையா?” அக்கறையுடன் அவளின் நெற்றி, கன்னம் என கை வைத்து பார்த்தான்.
“நான் நல்லாயிருக்கேன். எனக்குள்ள இருக்க ஆளு நல்லாயிருக்கான்னு பார்க்க ஹாஸ்பிடல் போகணும்” என்ற நனியிதழ், எதிர்பார்ப்போடு பிரணவ் முகம் பார்க்க…
“உனக்குள்ள நான் தான் இருக்கேன். நான் உன் கண்ணு முன்ன நல்லாத்தானே இருக்கேன்” என்று பிரணவ் சொல்லி, நனியிதழ் காட்டிய பாவனையில் கண்டு கொண்டவனாக, “இதழ்” என்ற கூவலோடு அவளை அணைத்திருந்தான்.
“பிரணவ்… போதும்” என்ற நனியின் சந்தோஷ புன்னகை அவனது இதழ்களுக்குள் மறைந்து போனது.
“நிஜமாவா இதழ்” என்ற பிரணவ்வின் முகத்தில் பொங்கும் கடலுக்கு இணையான மகிழ்வு.
“அதுக்கு தான் ஹாஸ்பிடல் போகணும்? சிம்டம்ஸ்லாம் அப்படித்தான் தோணுது” என்றாள்.
“கெஸ்ல சொல்றியா?” சட்டென்று தோன்றிய ஏமாற்றத்துடன் கேட்டான்.
“எனக்கும் பர்ஸ்ட் தானடா. எப்படித் தெரியும்? அம்மாகிட்ட கேட்டு அப்படி எதுவும் இல்லைன்னா ஃபீல் பண்ணுவாங்க. நாம ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு, கன்பார்ம் அப்படின்னா எல்லாருக்கும் சொல்லலாம்” என்றாள்.
“ம்ம்…” என்ற பிரணவ், நனியிதழை அழைத்துக் கொண்டு கீழே வர,
“கார்ட்ஸ் சூப்பரா இருக்குடா அண்ணா. நான் என் பிரண்ட்ஸ் சர்க்கில் கொடுக்க ஸ்டார்ட் பண்ணிடவா?” எனக் கேட்டாள் அஷ்மிதா.
“ரிலேட்டிவ்ஸ் முடிஞ்சுது. நீ கொடுத்திடு” என்ற பிரணவ், “அப்பாவை கூட்டிட்டு ஹால் வரை போயிட்டு வா. நியூ தீம் இருக்கு சொன்னாங்க. நீயே எதுன்னு செலக்ட் பண்ணிடு” என்றான்.
“ஏன் நீ பாக்கலையா?” அஷ்மிதா கேட்க, “இதழ்க்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்” என்றான்.
“என்னாச்சு அண்ணி” என்று நனியிதழ் அருகில் வந்த அஷ்மிதா, “அம்மா இப்போதான் கோவில் போனாங்க. வெட்டிங் அன்னைக்கு பூஜைக்கு சொல்லணும் அப்படின்னு. நான் வர சொல்லவா?” எனக் கேட்டாள்.
“ஹேய் அஷ்மி அதெல்லாம் இல்லை. போயிட்டு வந்திடுறோம்” என்றாள்.
அப்போது அங்கு விஜயன் வர,
“அஷ்மியை கூட்டிட்டு ஹால் வரை போயிட்டு வந்திடுங்கப்பா. மாம்ஸ் அவுட் ஆஃப் சிட்டி. அவராலும் வந்து பார்க்க முடியாது” என்றான்.
விஜயன் சரியென்க இருவரும் மருத்துவமனை கிளம்பியிருந்தனர்.
_____________________
“என்னதான் பிரச்சினை உனக்கு தனு. கொஞ்ச நாளா நானும் பாக்குறேன். எப்போ பாரு எதையோ நினைச்சு வருந்திட்டே இருக்க” அடுப்பில் இருந்து காயை வதக்கிக்கொண்டே கேட்டார் கங்கா.
“எல்லாரும் கல்யாணம்ன்னு எப்படி சந்தோஷமா இருக்கோம். நீ மட்டும் சோகமா நிக்கிறது நல்லாவா இருக்கு?” எனக் கேட்டார் காமாட்சி.
தனு எதுவும் சொல்லாது அழுதிட…
“தங்கப்புள்ள என்னடா… என்னாச்சு” என்று தன் தோளில் சாய்த்துக் கொண்டார் கங்கா.
“குமரி எதுவும் திட்டினாங்களா?” காமாட்சி கேட்க, அவள் பார்த்த பார்வையிலே அதுதான் உண்மை என்று புரிந்தது.
“அண்ணி நல்லாதானே இருக்காங்க தனு. நடுவுல எதோ மனசு வேதனையில் அப்படி நடந்துக்கிட்டாங்க… இப்போ என்ன?” என்றார் கங்கா.
அவர்களிடம் எப்படி அவள் சொல்வாள் குமரியின் பேச்சை. அந்தப் பேச்சால் குடும்பம் குலைய வாய்ப்புள்ளதே. எப்படி சொல்வாள்.
“அப்படியெல்லாம் எதுவுமில்லை அத்தை” என்ற தனு, எழுந்து சென்றிட…
“ரொம்ப பெரிய விஷயமா இருக்கும் போலக்கா” என்றார் காமாட்சி.
“எப்படியும் தெரிய வரும். அதுக்குள்ள புள்ளையை ஒருவழி பண்ணிடுவாங்க குமரி அண்ணி” என்றார் கங்கா.
“இன்பாவை என்ன ஏதுன்னு பேச சொல்லுவோம்க்கா” என்று காமாட்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“அண்ணா வந்தாச்சு. சாப்பாடு கொண்டு வாங்க” என்று அங்கு வந்தான் இன்பா.
“சீக்கிரம் வந்தாச்சு” என்ற காமாட்சி உதயனை கவனிக்க எழுந்து செல்ல,
“என்னடா பிரச்சினை?” எனக் கேட்டார் கங்கா.
“எதுவுமில்லையே பெரியம்மா. நம்ம தொழில் சங்கத் தலைவருக்கு பத்திரிகை வைக்கப் போனோம். வந்துட்டோம். அவ்ளோதான்” என்றான் தண்ணீர் குடிக்க…
“நான் அதை கேட்கல. தனுவுக்கு என்ன பிரச்சினை கேட்டேன்” என்றார் கங்கா.
சொம்பினை உயர்த்திப் பிடித்திருந்த இன்பாவின் கை அப்படியே அசைவற்று நின்றது.
“அப்போ என்னவோ இருக்கு அப்படித்தானே?”
“அத்தை வந்து போனாங்களா?” எனக் கேட்டான்.
“செத்த முன்ன?” என்றார் கங்கா.
“அவங்க அடங்கவே மாட்டாங்களா?” என்று ஆயாசமாக நெற்றியை தேய்த்துக்கொண்ட இன்பா, “எங்களுக்கு கல்யாணமாகி எத்தனை மாசமாச்சு பெரியம்மா? அதுக்குள்ள குழந்தை உண்டாகலையான்னு கேட்டு அவளை படுத்தி வைக்கிறாங்க. முதல் மாசத்துல இருந்தே அவளை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பத்திரிக்கை வீட்டுக்கு வந்த அன்னைக்கு, நமக்கு குழந்தை பிறக்காதா கேட்டு அவ்ளோ அழறா? என்ன சொன்னாலும் புரிஞ்சிக்காம எந்த நேரமும் அதை நினைச்சு வருந்திக்கிட்டே இருக்கா பெரியம்மா” என்றான்.
“அதெல்லாம் வர நேரம் சரியா வரும் கண்ணா. அவளை போய் ஆறுதல் படுத்து” என்றார் கங்கா.
“அவங்களுக்கு தனுவுக்கு பிறக்கும் குழந்தை தான் இந்த வீட்டு மூத்த வாரிசா இருக்கணுமாம்.” இன்பா சொல்ல இதென்ன இப்படியொரு எண்ணமென்று கங்கா நெஞ்சில் கைவைத்திட்டார்.
முன்ன, பின்ன என எப்போ பிறந்தாலும் குழந்தை இந்த வீட்டு வாரிசு தானே. குமரிக்கு ஏன் இந்த எண்ணமில்லை என்று இன்பாவை வருந்திப் பார்த்தார்.
“ஏன் இன்பா உன் அண்ணன் மேல இருக்கும் பாசத்தில், அண்ணனுக்கு தான் முதல்ல குழந்தை பிறக்கணும் அப்படின்னு நீயெதும் தள்ளி வச்சிருக்கியா?” என கங்கா கேட்க,
“அச்சோ பெரியம்மா என்ன நீங்க? இப்படி நான் பண்ணா அண்ணா என்னை மன்னிக்கவே மாட்டாங்க. அப்படியெல்லாம் இல்லை” என்ற இன்பா, “அவங்களுக்கு நம்ம வீட்டில் மூத்தப்பிள்ளைக்கு தான் மதிப்பும் மரியாதையும்ன்னு நினைக்கிறாங்க. அதான் நனிக்கு முன்ன குழந்தை உண்டாகனும் பாக்குறாங்க. அதையும்விட இன்னும் நாலு நாள்ல அஷ்மி வந்துட்டா” என்று அதற்கு மேல் சொல்ல முடியாது அவன் நிறுத்திக்கொள்ள அவன் சொல்லாது விட்டது அவருக்கு புரிந்தது.
“குமரியா இப்படி? இன்னும் அஷ்மி வீட்டுக்கே வரலடா. அதுக்குள்ள இப்படி நினைக்கலாமா?” என ஆதங்மாக அவர் கேட்க,
“அதுக்குத்தான் இந்த அத்தை உறவே வேண்டாம் சொல்றேன்” என்று இன்பா சொல்ல…
“விடக்கூடிய சொந்தமில்லை அவங்க” என்றிருந்தான் உதயன்.
“அண்ணா…” இன்பா அதிர்வை காட்டிட…
“உன் அத்தை அவங்க” என்றான் உதயன்.
“ஏன் உங்களுக்கு அத்தை இல்லையா அவங்க?”
“இப்போ அதிக உரிமைப்பட்டவன் நீதான்” என்ற உதயன், “உறவை விடனும் என்னைக்கும் நினைக்காத. இழுத்துப்பிடிக்கப் பாரு” என்றிருந்தான்.
“அவங்க எண்ணம் சரியில்லை அண்ணா.”
“சோ, வேண்டாம் ஒதுக்கிடுவியா?”
“அண்ணா…”
“என்னடா அண்ணா” என்ற இன்பா, “அவங்க எப்படி வேணாலும் இருக்கட்டும். நாம நம்ம குணம் மாறி பேசிட்றதா?” என்றான்.
“இப்போ நான் என்ன பண்ணனும்?” இன்பா கேட்க,
“உனக்குதான் தெரியணும்” என்ற உதயன், “அப்பாக்களுக்கு தெரிய வேண்டாம். நீங்க அத்தைகிட்ட பேசுங்க” என்று கங்காவிடம் சொல்லிவிட்டு உதயன் கூடம் வர, பிரணவ் நனியிதழ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
“ஹாய் மாம்ஸ்…”
“ஹாய்டா” என்ற உதயன், “பட்டு” என தங்கையை தோளோடு அணைத்து விடுக்க…
“வீட்டுல யாரும் இல்லையா?” எனக் கேட்டான் பிரணவ்.
“அப்போ என்னை பார்க்க வரலையா நீ?” என்ற உதயன், “எல்லாரும் அவங்கவங்க ரூமில்” என்றான்.
“பார்க்க வந்ததே உங்களைத்தான். உங்ககிட்ட தான் பர்ஸ்ட் சொல்லணும் கூட்டிட்டு வந்தாச்சு. என்னன்னு உங்க பாசமலர் கிட்ட கேளுங்க… எனக்கு ஒரே ஷை ஷையா கம்மிங்” என்றான் பிரணவ்.
“அப்படியென்ன வேலை பார்த்த நீ?” என்று உதயன் புரியாது கேட்க, “அச்சோ மாம்ஸ் என்ன நீங்க?” என்று பிரணவ் உதயனின் தோளில் முகம் அழுத்தி அவனை தோளோடு அணைத்திருந்தான்.
பிரணவ்வின் வெட்கமும், தங்கையின் மலர்ந்த முகமும் உதயனுக்கு ஒரு கணிப்பைக் கொடுக்க…
“பட்டு” என்று அதீத மகிழ்வை வெளிப்படுத்த…
“நீங்க எல்லாரையும் உங்க கட்டுப்பாட்டில் வச்சிருக்கீங்கல. உங்களை அடக்கவும் ஆள் வந்தாச்சு” என்றான் பிரணவ்.
“டேய் மச்சான்” என்று உதயன் பிரணவ்வை அழுத்தமாக அணைத்து விடுத்து, தங்கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.
“செல்வா…” அவள் நெகிழ்வாய் அழைக்க… “ஒரு மாதிரி… சொல்லத் தெரியலடா. ஹேப்பி. ரொம்ப” என்ற உதயன் தங்கையின் நெற்றியில் இதழ் ஒற்றினான்.
“ஹார்ட் வொர்க் பண்ணது நான். க்ரடிட் உங்க தங்கச்சிக்கா?” என்ற பிரணவ், “நான் யாரோ தானே. நான் போறேன்” என்று நடிக்க, “அடேய்… படுத்தாததடா. நான் அவள் அண்ணாடா” என்றான்.
“இருந்துட்டுப் போங்க. அவளுக்கு மட்டுமில்ல… எனக்கும் நீங்கன்னா ரொம்ப பிடிக்குதே” என்றான் பிரணவ்.
அதில் நெஞ்சம் நிறைய அவனை மீண்டும் அணைத்து விடுத்தான் உதயன்.
தங்களின் காதலுக்காக உதயன் கொண்ட மெனக்கெடல்கள் யாவும் அவன் மீது மரியாதைக் கொடுத்திருக்க, பக்கமிருந்து உணரும் அவனின் குணமும், உறவுகளிடம் அவன் காட்டும் பாசமும் மதிப்பும், தானாக அதீத அன்பை உண்டாக்கியிருந்தது பிரணவ்வுக்கு. அன்பை காட்டுவதில் அவர்கள் என்றும் வெளிப்படை தான்.
அந்த அன்பின் பகிர்தல் தானே அவர்களின் அசைக்க முடியாத ஆணிவேர்.
இவர்களின் பேச்சுக் குரலில் அனைவரும் அங்கு கூடிட… விஷயம் பகிரப்பட, உதயனின் திருமணம் என கொண்டிருந்த மகிழ்வு இரட்டிப்பாகியது.
தனு கூட தன் வருத்தம் மறைந்து நனியிதழைக் கட்டிக்கொண்டு வாழ்த்து சொல்லி மகிழ்ந்தாள்.
குமரியின் வார்த்தைகளில் அவளுக்கு உடன்பாடில்லை என்றாலும், தன்னுடைய அம்மாவுக்கு அதுவும் அன்பை மட்டுமே முதன்மையாகக் கருதும் குடும்பத்தில் இருந்துகொண்டு இதென்ன இப்படியிருக்கிறார் என்பதே அவளின் வருத்தத்திற்கு காரணம். அதனால் அவளால் மகிழ்வு கொண்டு புதிய வரவை ஏற்க முடிந்தது.
ஆனால் விஷயம் தெரிந்த குமரி…
அனைவரின் முன்பு பேசி வைக்க இன்பா ருத்ர தாண்டவம் ஆடிவிட்டான்.